மீசான்
கதையாசிரியர்: சு.அப்துல் கரீம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 85

தெரு முனையிலிருந்த பிஸ்மி தேநீர் கடையில் காலை கூட்டம் அடர்ந்திருந்தது. கொதிக்கும் தேயிலை வாசம் காற்றில் மிதந்தது. கண்ணாடிக் குவளைகளில் தேநீர் ஊற்றிக் கொண்டிருந்த காசிம் திடீரென்று தெருவின் நுனியை நோக்கிப் பார்த்தான். கையை நெற்றி வரை எடுத்துக் கொண்டு சற்றே தலை குனிந்தான்.
“ஹாஜி வராரு.”
அவன் மெதுவாகச் சொன்ன அந்த இரண்டு சொற்கள் கடைக்குள் இருந்தவர்களிடையே மெதுவாகச் சுற்றின.
அதே நேரத்தில் அருகிலிருந்த மளிகைக் கடையில் கணக்குப் புத்தகத்தின் மீது வளைந்து இருந்த அப்துல் ரஹ்மான் பேனாவை நிறுத்தி தலையை உயர்த்திப் பார்த்தான்.
“டிவி நியூஸ்ல பார்த்தியா?” என்று அவன் கேட்டான்.
கடைக்குள் இருந்தவர்கள் அவனை நோக்கித் திரும்பினர்.
“நேத்தி ஒத்தக்கடை மாநாட்டுல… மினிஸ்டர் புகழ்வண்ணன் பக்கத்திலே உக்காந்திருந்தாரு.”
“யாரு… நம்ம ஹாஜியாரா?”
அந்தச் சொல்லுக்குப் பிறகு கடைக்குள் சத்தம் சற்று தணிந்தது.
மளிகைக் கடையின் மூலையில் ஒரு தராசு அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் பள்ளிவாசல் வாசல் திறந்து உஸ்மான் ஹாஜி வெளியே வந்தார். வெள்ளைத் தொப்பி. நன்றாக இஸ்திரி செய்யப்பட்ட குர்தா. ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி. காலடிகள் மெதுவாக — ஒரே அளவில்.
அவர் தெருவில் நடந்துவரும்போது அங்கே நின்றிருந்தவர்கள் சற்றே நகர்ந்தார்கள். இரண்டு அடி இடைவெளி தானாக உருவானது.
அந்த இடைவெளி வழியாக அவர் நடந்தார்.
தெருவின் மறுமுனையிலிருந்த தன் வீட்டை நோக்கி மெதுவாகச் சென்றார்.
அவருக்கு முன்னால் ஒரு சொல் நடந்தது.
“ஹாஜி.”
அவரது வீட்டின் மைய அறைக்குள் நுழைந்தவுடன் முதலில் கண்களில் பட்டது ஒரு மேசை. அது சாதாரண வரவேற்பறை மேசை அல்ல. கண்ணாடி மேற்பரப்பின் கீழ் பழைய ரசீதுகள் ஒன்றோடொன்று மடிந்து கிடந்தன.
மேசையின் பின்னால் ஒருவர் அமரக்கூடிய இளஞ்சிவப்பு நிற சோஃபா. பக்கவாட்டில் அதே நிறத்தில் இருவர் அமரக்கூடிய இன்னொரு சோஃபா. எதிரே இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகள். அவை சுவரை நோக்கி சற்றே இழுத்து வைக்கப்பட்டிருந்தன — யாராவது வந்து அமர்வதற்காக எப்போதும் இடம் காலியாக இருக்கிறது போல.
சுவரில் கஃபாவின் படம் தொங்கியது. அதன் கீழே பச்சை துணியில் மடிக்கப்பட்ட ஒரு பெரிய குர்ஆன். அதற்குக் கீழே, மேசையின் ஓரத்தில், கருப்பு நிற குறிப்புப் புத்தகம் ஒன்று கிடந்தது.
அது பெரும்பாலும் மூடியே இருக்கும். திறக்கும் போது சில பெயர்கள் தெரியும். அருகில் எண்கள்.
அறையில் ஒரு வாசனை இருந்தது. கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்ட மணம். மூடியைத் திறந்தவுடன் வெளியில் வரும் அந்தத் துருவிய வாசனை காற்றில் மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் கதவின் அருகே ஒரு சிறிய அசைவு.
ஒரு துணிப்பை தரையில் வைக்கப்பட்டது.
அதன் வாயிலிருந்து மாம்பழத்தின் மணம் வெளியேறியது.
ஜும்மா தொழுகையை முடித்து, ஒரு குட்டித் தூக்கத்தையும் முடித்துவிட்டு தன் ஊரிலிருந்து புறப்பட்ட அப்துல் ரஹ்மான் மாமா, உஸ்மான் ஹாஜி வீட்டின் வாசலில் நின்று மெயின் கேட்டை மெதுவாகத் திறந்தார்.
அவரது கையில் இரண்டு துணிப்பைகள். ஒரு பையின் வாயிலிருந்து மஞ்சள் நிற மாம்பழத்தின் தோல் சிறிது வெளியில் தெரிந்தது.
மற்றொரு பையை அவர் விரலால் மெதுவாகத் தொட்டுப் பார்த்தார். அதிலும் மாம்பழங்களே. அது வீட்டுக்காக இல்லை. ஸதக்காவுக்காக.
அவர் உள்ளே நுழைந்தார்.
“அஸ்ஸலாமு அலைக்கும்.”
அறையின் உள்ளே மெத்தை இருக்கையில் உஸ்மான் ஹாஜி சாய்ந்திருந்தார். அவரது கையில் ஒளிரும் கைப்பேசி. திரையின் மீது விரல் மெதுவாகச் சரிந்தது.
ஒரு கணம் மட்டும் தலையை உயர்த்தினார்.
“வஅலைக்கும் சலாம்.”
பார்வை மீண்டும் அந்தச் சிறிய ஒளிரும் திரைக்கே திரும்பியது.
மாமா இன்னும் நின்றபடியே இருந்தார். அவரது கையில் இருந்த இரண்டு துணிப்பைகளும் மெதுவாக ஆடின.
அறையின் மறுபுறத்தில் இருந்த குளிர்பதனக் கருவியின் மெல்லிய ஓசை மட்டும் கேட்டது.
மாமா சுற்றிப் பார்த்தார். அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை மெதுவாக இழுத்தார். அதன் கால்கள் பளிங்குத் தரையில் உரசியது. அந்தச் சத்தம் ஒரு கணம் அறையின் நடுவே நின்றது போல இருந்தது.
அதற்குப் பிறகே அவர் உட்கார்ந்தார்.
அவரது காலருகில் இரண்டு துணிப்பைகளும் வைக்கப்பட்டன.
அவற்றுள் இருந்த மாம்பழங்களின் மணம் மெதுவாக அறையின் காற்றோடு கலந்தது.
“எப்படி இருக்கீங்க மாமு?” என்று உஸ்மான் ஹாஜி கேட்டார்.
“அல்ஹம்துலில்லாஹ்… நல்லா இருக்கேன்,” என்று மாமா மெதுவாகத் தலை ஆட்டினார். இரண்டு துணிப்பைகளின் வாயையும் அவர் இன்னும் விரல்களால் பிடித்தபடியே இருந்தார்.
“இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
மாமா சற்றே நேராக உட்கார்ந்தார்.
“வேலையிலிருந்து ஓய்வு எடுத்தாச்சு… பக்கத்து பிள்ளைகளுக்கு குர்ஆன் சொல்லிக்கொடுப்பேன்.”
உஸ்மான் ஹாஜி தலையசைத்தார்.
“அதுலே ஏதாவது வருதா?”
மாமா சிரித்தார். உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய அசைவு மட்டும்.
“அல்ஹம்துலில்லாஹ்.”
அறையின் மறுபுறத்தில் இருந்த குளிர்பதனக் கருவியின் ஓசை தெளிவாகக் கேட்டது.
சில நொடிகள் கழித்து ஹாஜி மீண்டும் கேட்டார்.
“வீடு புதுசா கட்டியாச்சா?”
மாமா தலையை சற்றே குனிந்தார்.
“இன்னும் அதே பழைய வீடுதான்.”
அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை.
அந்த நேரத்தில் உள்ளறை கதவு சற்றே திறந்தது. அங்கிருந்து ஸலீமா வெளியே வந்தார். தலையில் சரிந்திருந்த துப்பட்டாவைச் சீர்செய்து, மாமாவை பார்த்தவுடன் சிரித்தார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் சாச்சா.”
“வஅலைக்கும் சலாம்,” என்று மாமா மெதுவாகத் தலை ஆட்டினார்.
“வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“அல்ஹம்துலில்லாஹ்,” என்றார் அவர். குரல் மெதுவாக இறங்கியது.
ஸலீமா தலையசைத்தார். பிறகு சமையலறை நோக்கித் திரும்பி, “சாச்சாவுக்கு டீ கொண்டு வா,” என்று வேலைக்காரியிடம் சொன்னார்.
சில நொடிகளில் ஒரு ஸ்டீல் டம்ளர் மேசையில் வைக்கப்பட்டது.
மாமா அதை நோக்கிப் பார்த்தார்.
அவரது பார்வை ஒரு கணம் அந்த டம்ளரின் விளிம்பில் நின்றது. பிறகு அறையின் மறுபுறம் இருந்த சமையலறை வாசலை நோக்கிச் சென்றது.
அங்கே ஒரு காலத்தில் ஸலீமா நின்றிருப்பார்.
இரண்டு கைகளாலும் டம்ளரைப் பிடித்து, “சூடா இருக்கு… கவனமா பிடிங்க சாச்சா,” என்று சொல்லுவார்.
இப்போது டம்ளர் அமைதியாக மேசையில் இருந்தது.
மாமா அதை மெதுவாக எடுத்தார்.
அறையின் காற்றில் மாம்பழத்தின் மணமும் டீயின் சூடும் ஒன்றாக கலந்திருந்தன.
சமையலறை வாசலில் நின்றபடி ஸலீமா கேட்டார்.
“சர்க்கரை சரியா இருக்கா?”
மாமா தலையசைத்தார்.
டம்ளரின் விளிம்பில் விரலைச் சற்றே சுற்றியபடி அவர் ஒரு குடி எடுத்தார்.
அறையில் யாரும் வேறு எதையும் பேசவில்லை.
மாமா காலருகில் இருந்த பைகளை நோக்கிப் பார்த்தார். மஞ்சள் நிறப் பழங்கள் ஒன்றோடொன்று சாய்ந்தபடி இருந்தன.
அந்த மணம் அவரை வேறொரு காலத்துக்குக் கொண்டு சென்றது.
முப்பது வருடங்களுக்கு முன்.
மழை நின்று காய்ந்திருந்த மண். மாமாவின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குழி தோண்டப்பட்டிருந்தது. அதன் அருகில் இளம் உஸ்மான் நின்றிருந்தான். கையில் மண் படிந்த ஒரு சிறிய கன்று.
அவனுக்கு திருமணமான புதிது. சட்டையின் கைகளை மடித்தபடி மண்ணை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்.
“இதைப் பாருங்க மாமு…” என்று அவன் சிரித்தான். “இன்ஷா அல்லாஹ்… இது ஒருநாள் பெரிய மரம் ஆகும்.”
அவன் கையில் இருந்த அந்தச் சிறிய கன்றின் இலை காற்றில் மெதுவாக அசைந்தது.
ஆண்டுகள் கடந்தன.
அதே இடத்தில் ஒரு மரம் நின்றது. கோடைகாலம் வந்தாலே அதன் கிளைகளில் மஞ்சள் நிறப் பழங்கள் தொங்கின.
மாமா அவற்றைத் தேர்ந்து பறித்து துணிப்பைகளில் அடைப்பார். அந்தப் பைகளில் சில ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தெருவை நோக்கி வந்தன. உஸ்மான் வீட்டின் வாசலில் வைக்கப்படும்.
ஒரு வருடம்.
பிறகு இன்னொரு வருடம்.
அந்தப் பைகள் வராமல் போனது.
மரம் மட்டும் பழம் கொடுத்துக்கொண்டே இருந்தது.
இன்று பல வருடங்களுக்குப் பிறகு, அந்த மரத்தின் பழங்கள் மீண்டும் இந்த வீட்டின் தரையில், அவரது காலருகில் அமைதியாகக் கிடந்தன.
மாமா ஒரு கணம் ஹாஜியை நோக்கிப் பார்த்தார். பிறகு பார்வை மீண்டும் அந்தப் பைகளில் தங்கி நின்றது.
அந்த நேரத்தில் வாசல் கதவு திடீரென்று திறந்தது.
முதலில் காலணியின் சத்தம் கேட்டது. பளிங்குத் தரையில் விலை உயர்ந்த காலணிகள் எழுப்பிய உறுதியான ஒலி.
அதற்குப் பிறகே முருகேசன் உள்ளே வந்தார்.
வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தது. தெருவின் மூலையில் அவரது மனிதர்கள் இருவர் நின்றிருந்தார்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும், ஹாஜி சார்.”
அந்தக் குரல் கேட்டவுடன் உஸ்மான் ஹாஜி சாய்ந்திருந்த இடத்திலிருந்து நேராக உட்கார்ந்தார். பிறகு எழுந்தார்.
“வாங்க முருகேசன்.”
அவர் அருகில் இருந்த நாற்காலியை சற்றே அப்புறப்படுத்தினார். சோஃபாவில் ஒரு இடம் உருவானது.
முருகேசன் சோஃபாவில் உட்கார்ந்தார்.
அவரது பார்வை ஒரு கணம் சுவரில் தொங்கிய கஃபாவின் படத்தில் தங்கியது. பிறகு மேசையில் இருந்த கருப்பு குறிப்புப் புத்தகத்தில்.
நெற்றியில் திருநீறு இன்னும் அடர்த்தியாக இருந்தது. சட்டையின் கழுத்து பட்டனை அவர் ஒரு கை விரலால் சற்றே தளர்த்தினார் — உள்ளே கோர்க்கப்பட்ட ருத்ராட்சமாலை ஒரு கணம் தெரிந்து மறைந்தது.
முருகேசன் ஒரு கணம் மாமாவை பார்த்தார்.
“வணக்கம் ஐயா… எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று தலையசைத்தார்.
“வியாபாரம் எப்படி போகுது முருகேசன்?” என்று இடைமறித்தார் ஹாஜி.
முருகேசன் சிரித்தபடி தனது கைமணியில் இருந்த பெரிய கடிகாரத்தை நேராகச் சீர்செய்தார்.
“நல்லா போகுது ஹாஜி சார்… இப்போ ரெண்டு சைட்ல ப்ராஜெக்ட் போயிட்ருக்கு,” என்றார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு சேர்த்தார்: “எலெக்க்ஷனுக்கும் தயார் ஆகணும்.”
உஸ்மான் ஹாஜி சிரித்தார்.
பிறகு ஒரு கையை உயர்த்தி இரண்டு விரல்கள் காட்டினார்.
சில நொடிகளில் இரண்டு காபி குவளைகள் மேசையில் வைக்கப்பட்டன.
அதே மேசையில் ஒரு ஸ்டீல் டம்ளர் இருந்தது. அதிலிருந்த டீ இப்போது குளிர்ந்திருந்தது.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“இங்க இன்னும் ரோடு வரப் போகுது…”
“அப்போ விலை இரட்டிப்பு ஆகிடும்…”
“நம்ம அமைச்சர்தான் அடுத்த தடவையும்…”
எண்கள் மாறி மாறிப் பேசப்பட்டன.
அந்த நேரத்தில் பக்கத்து அறையிலிருந்து ஒரு வறட்டு இருமல் வெடித்தது.
முதலில் மெதுவாக.
“உஸ்மான்…”
சிறிது இடைவெளி.
பிறகு மீண்டும் ஒரு நீண்ட இருமல்.
ஹாஜியின் முன்னால் இருந்த கண்ணாடி மேசையின் கீழ் பதிக்கப்பட்ட பழைய ரசீதுகள் அந்த அதிர்வில் சற்றே இடம்பெயர்ந்தன.
“டேய் உஸ்மான்… நெஞ்சு ஒரு மாதிரி அடைக்குது…”
அந்தக் குரல் அறையின் நடுவே வந்து நின்றது.
முருகேசன் தன் கையில் இருந்த கார் சாவியை மெதுவாக மேசை கண்ணாடியில் வைத்தார்.
உஸ்மான் ஹாஜியின் முகம் ஒரு கணம் இறுகியது.
அவர் பக்கத்தில் நின்ற வேலைக்காரியைப் பார்த்தார்.
“போய் அம்மாவைப் பாரு.”
வேலைக்காரி உள்ளறை நோக்கி விரைந்தாள்.
உள்ளே யாரோ மெதுவாகப் பேசும் சத்தம் கேட்டது.
வேலைக்காரி உள்ளே சென்ற பிறகு, மாமா உள்ளறை நோக்கி ஒரு கணம் பார்த்தார்.
நீண்ட நாட்களுக்கு முன் அந்தக் குரல் வேறு மாதிரி ஒலித்திருந்தது.
“ரஹ்மான் மாமா வந்திருக்காரு… பிரியாணி ரெடி பண்ணு…”
இப்போது அந்தக் குரல் இருமலில் தேய்ந்திருந்தது.
இருமல் இன்னும் கேட்டது.
“அந்த சைட்ல இன்னும் ரெண்டு ஏக்கர் கிடைச்சா…” முருகேசன் காற்றில் கோடுகள் வரையத் தொடங்கினார்.
மீண்டும் இருமல்.
“அப்போ சதுர அடிக்கு…”
சில நொடிகள் அந்த இருமல், எண்களை விட பெரிதாகக் கேட்டது.
சில நிமிடங்களுக்கு பிறகு அறையில் மீண்டும் அமைதி திரும்பியது.
மாமா தன் காலருகில் இருந்த துணிப்பைகளில் ஒன்றை எடுத்தார். உஸ்மான் ஹாஜிக்காக கொண்டு வந்தது. அதை மேசை நோக்கி மெதுவாக நீட்டினார்.
“மாம்பழம்… வீட்டுத் தோட்டத்தில.”
பையின் வாயிலிருந்து மஞ்சள் நிறப் பழங்கள் ஒளிந்தபடி வெளியே பார்த்தன.
“நேத்து இராத்திரி காத்து கொஞ்சம் பலமா அடிச்சது… காலைல பார்த்தப்போ… மரம் தரையில கெடந்துச்சு.”
மாமாவின் குரல் சற்றே தள்ளாடியது.
சிறிது அமைதி.
“எந்த மரம்?” உஸ்மான் ஹாஜியின் பார்வை இன்னும் மொபைல் திரையிலேயே இருந்தது.
“நீ… நீங்க… நட்டு வெச்ச அந்த மரம்தான். உங்களுக்கு கல்யாணமான புதுசுல…”
அப்போதுதான் ஹாஜியின் கண்கள் திரையிலிருந்து விலகின. மேசையில் இருந்த பையை நோக்கின.
“அந்த மரம்…”
ஒரு கணம் நின்றார்.
“இன்னும் இருக்கா?”
மாமா மெதுவாகத் தலை குனிந்தார்.
உஸ்மான் ஹாஜி பையில் இருந்த ஒரு மாம்பழத்தை எடுத்தார். கையில் சற்றே திருப்பிப் பார்த்தார். தோலில் சூரியன் பட்ட மங்கலான புள்ளிகள்.
ஒரு கணம் அதைப் பார்த்தார்.
“இதுல… எவ்வளவு கிலோ இருக்கும்?” என்று கேட்டார்.
அந்தச் சொல் அங்கேயே நின்றது போலிருந்தது.
மாமா கையில் இருந்த ஸதக்காவுக்கான இன்னொரு துணிப்பையின் வாயை மெதுவாகச் சுருட்டினார்.
சமையலறை வாசலில் நின்றிருந்த ஸலீமா ஒரு கணம் அவரைப் பார்த்தாள். பிறகு பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
சமையலறைக்குள் சென்று, ஏற்கனவே கழுவப்பட்டிருந்த ஒரு கிண்ணத்தை மீண்டும் கழுவத் தொடங்கினாள்.
உஸ்மான் ஹாஜி முருகேசனை நோக்கிப் பார்த்தார்.
“மார்கெட்ல இப்போ கிலோ என்ன விலை விக்குது?”
முருகேசன் எண்ணைச் சொன்னார்.
உஸ்மான் ஹாஜி பழத்தை மீண்டும் மேசையில் வைத்தார். அது சற்றே உருண்டு நின்றது.
அவர் கையை பின்னே நீட்டி மொபைல் போனை எடுத்தார். திரை ஒளிர்ந்தது. அவரது விரல் அதின் மீது மீண்டும் நகரத் தொடங்கியது.
மாமா அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மேசையின் மீது ஒரு மாம்பழம்.
அறையின் காற்றில் அதன் மணம் மட்டும் மெதுவாகத் தங்கியிருந்தது.
மாமா மெதுவாக எழுந்தார்.
உஸ்மான் ஹாஜிக்காக கொண்டு வந்த துணிப்பையை பிளாஸ்டிக் நாற்காலியின் கீழே வைத்துவிட்டு, ஸலீமாவை நோக்கி, “இத எடுத்துக்கங்கம்மா…” என்றார்.
“சாச்சா… இன்னும் கொஞ்சம் நேரம் உட்காரலாமே…” என்றாள் ஸலீமா.
“இருக்கட்டும்மா… அஸருக்கு நேரமாச்சு… வரேன்…”
என்று சொல்லிவிட்டு அவர் திரும்பினார்.
வாசல் நோக்கி நடந்தபோது அவர் கையில் ஸதக்காவுக்கான மாம்பழப்பை மட்டும் இருந்தது.
வீட்டின் வாசலைத் தாண்டி தெருவில் வந்தார்.
மாலைநேர வெயில் பழைய வீடுகளின் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தது.
தெரு மூலையில் ஒரு மனிதன் தரையில் உட்கார்ந்திருந்தான். அவனருகில் ஒரு பழைய அலுமினியக் கிண்ணம். அதில் சில நாணயங்கள்.
மாமா கையில் இருந்த துணிப்பையை அவனிடம் நீட்டினார்.
அவன் அதை தடுமாற்றத்துடன் வாங்கினான்.
உள்ளே இருந்த மஞ்சள் நிறப் பழங்கள் ஒரு கணம் வெளிச்சத்தைப் பார்த்தன.
அவன் ஒரு மாம்பழத்தை எடுத்தான். கண்களுக்கு அருகே கொண்டு வந்தான்.
பிறகு மெதுவாக மூக்கருகே கொண்டு வந்து மணம் பார்த்தான்.
“மாம்பழமா…”
அவன் கண்கள் முழுவதும் திறக்கவில்லை. வெளிச்சம் அவனுக்குப் மங்கலாகத் தெரிந்தது போல.
அவன் துணிப்பையை ஒரு கையால் உயர்த்திப் பார்த்தான்.
“இது எவ்வளவு கிலோ இருக்கும்?”
மாமா எதுவும் சொல்லவில்லை.
அவன் மீண்டும் கேட்டான்.
“இது நல்ல பழம்தானே சாமி?”
“சாப்பிட்டு பாரு… நல்லா ருசியா இருக்கும்,” என்றார் மாமா.
அவன் பையை கால்களுக்கிடையில் வைத்தபடி தலையைச் சொரிந்தான்.
“ஒரு பத்து ரூபா இருந்தா கொடு சாமி… டீ குடிக்க…”
மாமா ஒரு கணம் திரும்பிப் பார்த்தார்.
தெருவின் முடிவில் உஸ்மான் ஹாஜியின் வீடு தெரிந்தது. வெள்ளைச் சுவர் வெயிலில் மின்னியது.
அவர் மீண்டும் முன்னே திரும்பினார்.
மெதுவாக பள்ளிவாசல் நோக்கி நடந்தார்.
பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, வெளியே கிடந்த வெக்கை மறைந்து ஒரு நிசப்தமான குளிர்ச்சி மாமாவைத் தழுவியது. உழு செய்யும் குளத்தின் நீரை அவர் கைகளில் அள்ளியபோது, சில சிறிய மீன்கள் அவர் விரலிடுக்கில் நழுவிச் சென்றன.
அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சற்று முன் இருந்த எல்லா சத்தங்களையும் அது சில நொடிகள் கழுவி எடுத்தது போல இருந்தது.
அவர் உள்ளே சென்றார்.
நான்கு ரக்அத் சுன்னத் தொழுதார்.
பிறகு மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கினர். மாமா முன்னே சென்று முதல் சஃபில் ஒரு ஓரத்தில் நின்றார்.
சில நொடிகளில் அந்த வரிசை நிரம்பிவிட்டது. பின்னால் இன்னொரு வரிசை உருவானது.
அதில், அவருக்குச் சரியாக நேர் பின்னால், உஸ்மான் ஹாஜி அவசரமாக உழுவிட்டு, தண்ணீர் சொட்டிச் சென்று நின்றார். விலையுயர்ந்த அத்தரின் மணம் காற்றில் கனத்தது.
இமாமின் குரல் ஒலித்தது.
“அல்லாஹு அக்பர்.”
அனைவரும் கைகளை உயர்த்தினர்.
தொழுகை தொடங்கியது.
ருகூஃ.
அமைதி.
பிறகு சஜ்தா.
ஒரே அலை போல வரிசைகள் முன் குனிந்தன.
மாமா தன் முழங்கால்களைத் தரையில் ஊன்றி, நெற்றியை அந்தப் பழைய விரிப்பில் பதித்தார். அவர் தலை குனிந்த அதே வினாடியில், அவருக்குப் பின்னால் இருந்த உஸ்மான் ஹாஜியும் சஜ்தாவிற்குப் போனார்.
ஒவ்வொரு முறையும் சஜ்தாவிற்குப் போகும்போது, உஸ்மான் ஹாஜியின் வெள்ளைத் தொப்பி முன்னால் இருந்த மாமாவின் வெடிப்புற்ற குதிங்காலில் மெதுவாக உரசியது.
விலை உயர்ந்த அத்தரின் நறுமணம் அந்தச் சிறிய இடைவெளியில் கனத்து நின்றாலும், மாமாவின் பாதங்களில் படிந்திருந்த காய்ந்த மண்ணின் வாசம் ஹாஜியின் நாசியை விடாமல் தீண்டியது.
இன்னும் ஒரு அங்குலம்… இன்னும் ஒரு அங்குலம் முன்னே சென்றிருந்தால்— உஸ்மான் ஹாஜியின் நெற்றி மாமாவின் பாதத்தைத் தொட்டிருக்கும்.
யாரும் அதை கவனிக்கவில்லை.
மின்விசிறிகள் சுழன்றன. வரிசைகள் ஒன்றாகக் குனிந்தன. ஒரே விரிப்பில் எல்லா நெற்றிகளும் தரையைத் தொட்டன.
தொழுகை முடிந்தது. மக்கள் கலைந்தனர். மாமா அமைதியாக எழுந்து வெளிப்பக்கத் திண்ணைக்கு வந்தார். உஸ்மான் ஹாஜி தன் கைப்பேசியை தேய்த்தபடி அவசரமாகக் கடந்து சென்றார்.
மாமா தன் காலியான உள்ளங்கைகளைப் பார்த்தார். விரல்கள் மெதுவாக மூடியும் திறந்தும் பார்த்தார். இப்போது அந்த உள்ளங்கைகளில் எந்தப் பையும் இல்லை, ஆனால் ஒரு மரத்தின் பாரம் குறைந்திருந்தது
அந்தப் பழைய தெருவின் வெயிலில், தன் நிழலைத் தானே பின்தொடர்ந்து அவர் நடக்கத் தொடங்கியபோது, காற்றில் மாம்பழத்தின் மணம் ஒரு கணம் நின்று மறைந்தது.
பள்ளிவாசல் மினாரத்தின் நிழல் மெதுவாக தெருவின் மீது நீண்டு கொண்டிருந்தது.
![]() |
சு.அப்துல் கரீம் (மே 1979) மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கணிதம் படித்து, பின்னர் கணினி பயன்பாடுகளில் முதுநிலை பெற்றார். தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் மென்பொருள் நிபுணராகப் பணியாற்றி வருகிறார். தொழில், வாசிப்பு, எழுத்து என அனைத்தையும் ஒருங்கே இணைத்து மதுரையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு, அந்த வாசிப்பு தமிழின் மீதான காதலாகவும், பின்னர் எழுத்தின் மீதான…மேலும் படிக்க... |
