மாய எழுச்சி
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1996 இன் நடுப்பகுதி; ஒரு மாலை வேளை நெல்லியடிச் சந்தியை நோக்கி வடக்குத் தெற்காகக் கிடக்கும் வீதியின் வழியே என் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தேன்.
“இப்ப காலம் வேறை எண்டதை நினைவிலை வைச்சுக்கொண்டு பொழுது பட முன்னம் வீட்டை வரப்பார், தம்பி” என நான் சைக்கிளை வெளியே எடுத்துவந்தபோது அம்மா எச்சரித்தமை என் நினைவில் நின்று கொண்டிருந்தது.
நெல்லியடிச் சந்தியில் மிதந்து, சைக்கிளை யாழ் வீதிக்கு திருப்பியவேளை கதிரவனின் ஒளி பளிச் என்று முகத்தில் பாய்ந்தது. கண்களைச் சற்றுக் கூசியவாறே சைக்கிளை மிதித்தேன். மாலை வெய்யில் பொன் திரவம் போல் சூழல் எங்கும் வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாள்களாகக் காய்ச்சலினால் படுக்கையில் வீழ்ந்து கிடந்த களைப்பு சைக்கிளை மிதிக்கும் போது தெரிந்தது. உடல் இளைப்பாக விருந்தது; மூச்சு வாங்கியது.
பிரதான வீதியில் மக்கள் நடமாட்டம் ஓரளவிற்குக் காணப்பட்டது. கடை வரிசைக் கட்டடங்களின் நீள் நிழல் வீதியில் பாதியை நிரப்பியிருந்தமையால் இடது பக்கமாகச் செல்லும் எனக்கு அவை நிழலளித்துக் கொண்டிருந்தன. சற்று ஆறுதலாகவிருந்தது.
என் நண்பன் சிவதாசனைச் சந்திக்க வேண்டி நாவலர் மடத்திலிருக்கும் அவனது வீட்டை நோக்கியே சென்று கொண்டிருந்தேன். நாம் இருவரும் அடுத்த ஆண்டு க.பொ.த உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றவிருந்தோம். அதற்கப்பால் நாம் பால்ய கால நண்பர்கள். எப்போதும் ஒன்றாகவே இருப்போம்.
நான் காய்ச்சல் காரணமாக பாட சாலைக்கோ ரீயூசனுக்கோ சமூகமளித்திருக் காமையால் அங்கு கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிய வேண்டியிருந்தது. சிவதாசனிட மிருந்து பயிற்சிக் கொப்பிகளை வாங்கிச் சென்று இரவோடு இரவாக எழுதி முடித்து விட்டால் நாளை முதல் வழமையான எனது கற்றல் செயற் பாடுகளில் ஈடுபட முடியும் எனத் தீர்மானித்த வாறே வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தேன்.
பிரதான வீதியிலிருக்கும் சிவதாசனின் வீட்டுப் படலையை அண்மித்தேன் சைக்கிளை நிறுத்தி விட்டுப் படலையூடு எட்டிப் பார்த்தேன். அவனது அம்மம்மா வீட்டு முகப்பில் காலை நீட்டியவாறு அமர்ந்திருந்து பாக்கு உரலை இடித்துக்கொண்டிருந்தார்.
“அம்மம்மா! தாசன் எங்கை?” என்று கேட்டேன்
அவர் படலையைக் கூர்ந்து பார்த்த வாறே “தம்பி நீயே… நான் தனியத்தான் வீட்டுக்குக் காவலாக இருக்கிறன். மற்றவர்கள் எல்லாம் ஏதோ பாட்டுக்கோஸ்டி பாக்க போறம் எண்டிட்டு உதில மூத்த விநாயகர் கோயிலுக்குப் போட்டினம்” என்றார்.
“சரி அம்மம்மா, நான் அங்க போய்ச் சந்திக்கிறன்” என்றுவிட்டு மூத்தவிநாயகர் கோயிலை நோக்கி மீண்டும் சைக்கிளை மிதித்தேன்.
கோயிலுக்கு அருகமைவாக முச்சந்தியில் நின்ற பெரிய ஆலமரம் தொலைவிலேயே என் கண்களுக்குப் புலப்பட்டது. ஒலிப்பெட்டிகளிருந்து “கும்கும்” என்ற இடியொலி காற்றில் கலந்த வந்து கொண்டிருந்தது.
அந்த ஆலமரம் என்னுள் அந்த நினைவைக் கிளறிவிட்டது.
1996 இன் முற்பகுதி…
யாழ் நகரை அரச படை சென்ற ஆண்டின் இறுதியில் கைப்பற்றியதோடு குடாநாட்டின் மூன்றி லொரு பகுதி, அதாவது முந்நூறு சதுர கிலோ மீற்றர்கள் அரசின் வசமாகியிருந்தது. வலிகாமத்தில் வாழ்ந்து வந்த ஐந்தரை லட்சம் மக்களும் அங்கிருந்து முற்றாக இடம்பெயர்ந்து தென்மராட்சி வடமராட்சி வன்னி ஆகிய பிரதேசங்களில் சிதறி வாழ நேரிட்டது.
வலிகாமம் முற்றாக இழக்கப்பட்டிருந்த நிலையில் இயக்கத்தினர் தமது ஆளணிகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் மும்முரமாக ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். போர்க்காலக் கருத்தரங்கு களை நடாத்துதல், போராட்டம் சார்ந்து திரைப்படங் களையும், ஒளி வீச்சுக்களையும் பொதுவிடங்களில் காட்சிப்படுத்துதல், வீதி நாடகங்களை அரங்கேற்றுதல் போன்ற வழிமுறைகளைக் கைக்கொண்டு இரவு பகலாக இடையறாது பரப்புரைகளைச் செய்து வந்தனர்.
அக்காலப் பகுதியில் தென்னிந்திய சினிமாத் திரைப்படங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தன. சினிமாப்பாடல்களை சத்தமாக ஒலிக்க விடுதல்; இசைக் குழுக்களில் மேடையேறிப் பாடுதல் போன்றவையும் இயக்கத்தினரால் தடைசெய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் போராட்டம் சார்ந்த திரைப்படங்கள் என்றாலும் மக்கள் திரண்டு சென்று பார்வையிட்டனர். திரைப்படங்களை எவ்வாறேனும் பார்க்கவேண்டும் என்ற தவிப்பையே அது காட்டியது. ஏனெனில் அதை ஒரு பொழுது போக்காகவே மக்கள் பார்த்தனர். அத் திரைப்படங்களைப் பார்த்தவர்கள் மீண்டும் தத்தம் வீடுகளுக்குத்திரும்பினரே ஒழிய போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.
பின்னர் மேலும் ஒருபடி சென்று தனி மனித பரப்புரைகளைச் செய்யத் தொடங்கினர். வீதியில் சைக்கிள்களில் பயணிக்கும் இளைஞர்களை வழி மறித்து இயக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கோரினர்; கெஞ்சியும் பார்த்தனர். கிடைத்த பயன் என்னவென்பது அவர்களுக்கே வெளிச்சம். எனக்குத் தெரிந்த மட்டில் மூவர் மாத்திரமே இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.
இவ்வாறான ஒரு சூழலில் தான் ஒரு நாள் சிவதாசனும் நானும் எம் ரியூசன் வகுப்பை முடித்துக் கொண்டு கரணவாயிலிருந்து புறப்பட்டு மூத்த விநாயகர் கோயில் ஆலமர முச்சந்தியில் ஏறி நெல்லி யடிப் பக்கமாகத் திரும்பிய போது அந்த ஆலமரத்தின் கீழ் நின்றிருந்த இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞன் எங்களின் சைக்கிள்களின் முன்பாகக் கையை நீட்டி மறித்தான். நாம் இருவரும் அவனைக் கவனித் தோம். கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் பருத்தித் துணியிலான பச்சை நிற மேலாடையும் அணிந்திருந் தான் கழுத்தில் கறுப்பு நூல் ஒன்று தொங்குவது தெரிந்தது. கைக்கடிகாரத்தினை உள்ளங்கைப் பக்கமாகக் கட்டியிருந்தான். சாதாரண பாதணிகளையே (slippers) அணிந்தும் இருந்தான். அவன் ஓர் இயக்க உறுப்பினனாக இருக்கக் கூடுமென எண்ணினோம்.
“வணக்கம்! தம்பியவை உங்களோட கொஞ்சம் கதைக்கலாமோ?” என்று கேட்டான். அவன் கேட்ட தொனியும் மொழிக்கையாட்சியும் எங்கள் சந்தேகத்தைப் போக்கின. நாங்கள் சைக்கிள்களோடு வீதியோரமாக நின்று கொண்டோம். அவன் எங்களின் சைக்கிள் கரியரில் கிடந்த பயிற்சிக் கொப்பிகளைக் கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டே ஒவ்வொரு கேள்வியாக எங்களிடம் கேட்கத் தொடங்கினான்.
“எங்கை போட்டு வாறியள்?” என்று கேட்டான்.
“ரீயூசன் முடிஞ்சு வீட்டை திரும்பப்போறம்” என்றேன்.
“எத்தனையாம் வகுப்பு?”
“அடுத்த வருசம் ஏ.எல் எடுக்கப்போறம்”
“என்ன பாடம்?”
“கணிதம்”
அவனது கேள்விகளுக்கு நானே பதில் கூறிக்கொண்டிருந்தேன். சிவதாசனோ நானே அவனது பிரதிநிதி என்றாற்போல அமைதியாக நின்றிருந்தான்.
“கணிதம் படிக்கிறதால நீங்கள் கெட்டிக்காறராத்தான் இருப்பீங்கள்” என்று இலேசான சிரிப்போடு கூறி விட்டு, “ஏ.எல் சோதினைக்கு முன்னம் ஆமி இஞ்சை வந்திடுவான் போல தெரியுது” என்றான்.
அதற்கு எங்களின் பதில் மௌனம்.
“தம்பியவை பதிலைச் சொல்லுங்கோவன்” என்றான் அழுத்தமான குரலில்.
சிவதாசனும் நானும் ஆளையாள் பார்த்துக்கொண்டோம்.
அவன் மீண்டும் “எதிரி பாட்டோடையும் கூத்தோடையும் வந்து உங்கட வாசற் கதவைத் தட்டுவான் அப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள்?” என்று கேட்டான்.
எமது பதில் மௌனமே.
அவன் தொடர்ந்தான்: “தம்பியவை வலிகாமத்தைப் பிடிச்ச ஆமிக்கு வடமராட்சியையும் தென்மராட்சியையும் பிடிக்கிறது பெரிய வேலை யில்லை. இயக்கம் அடிக்கும் எண்டிட்டு நீங்கள் சும்மா இருக்கேலாது. இயக்கத்திட்ட ஆயதம் இருக்க அதை ஏந்துற கரங்கள் தான் இல்லை. உங்களைப்போன்ற ஆற்றல் பொருந்திய இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முன்வர வேணும் என்ன சொல்லுறியள்?”
அவன் நேரடியாகவே விடயத்திற்கு வந்தான்.
“நாங்கள் படிக்க விரும்புறம்” என்றேன்.
“தம்பி கல்வி கற்கிறதுக்கு உரிய சூழல் முதலில் உருவாக வேணும். நீங்கள் வந்து போராடுங்கோ. உங்கட அடுத்த தலைமுறை சுதந்திர நாட்டில படிக்குங்கள். தம்பி! எங்கட மக்களைப்பற்றியும் நீங்கள் கொஞ்சம் யோசிக்க வேணும் சமூகத்தைப் பற்றி முதலில் யோசிக்க வேணும். உங்களைப்பற்றிப் பிறகு யோசிக்கலாம். வலிகாமத்துச் சனம் எல்லாம் இடம்பெயர்ந்து சரியாகக் கஸ்ரப்படுகுதுகள். நாங்கள் தான் அவையளின்ர இடத்தை மீட்கவேணும்”
சிவதாசன் இப்போது மௌனத்தைக் கலைத்தான்.
“அண்ணா வலிகாமத்துச் சனம் இடம் பெயர்ந்து இஞ்சையும் வந்திருக்கினம். அவையள் பின்னேரம் கடற்கரைக்குப் போய் காற்று வாங்கி யினம். பொய் எண்டால் பருத்தித்துறைத் துறைமுகத் துக்குப் போய்ப்பாருங்கோ. எத்தனைப்பேர் பின்னேரம் கப்பல் பாக்க வருகினம் எண்டு தெரியும். அவை சந்தோசமாகத்தான் இருக்கினம்”
“தம்பி சிலபேர் அப்படித்தான் இருப்பினம்”
“இல்லை பல பேர் அப்படித்தான்” சிவதாசன் மறுத்துரைத்தான்.
“அந்தப் பலபேரில நீங்களும் ஓராளாக இருக்கப்போறியளோ? நீங்கள் முதலில் வாங்கோ. அவையள் உங்களைப் பின்தொடர்ந்து வருவினம்”க அவன் ஏதோவொரு நம்பிக்கையில் பேசினான்.
“நாங்கள் உழைச்சுக் குடும்பத்தைப் பாக்க வேணும்” என்றான் சிவதாசன் கதையை மாற்றும் பொருட்டு.
அவன் சிரித்தபடி “எனக்கும் குடும்பம் இருக்குத்தான். உங்களைப்போல தான் நானும்; ஒரு தமிழ்த் தாயின் வயிற்றில் பிரசவிக்கப்பட்ட குழந்தை. எனக்கு இருக்கிற பொறுப்பு ஏன் உங்களுக்கு இல்லை எண்டு நினைக்கிறியள்?” என்று கேட்டான்.
“நாங்கள் சண்டைக்குப் போனால் ஆமி எங்களைச்சுட்டுக் கொல்லுவான் செத்தாப்பிறகு என்ன வாழ்க்கை கிடக்கு” என்று சிவதாசன் கூறியதும் அவன் புன்னகை மாறாத முகத்தோடு “அது பிரச்சனையில்லை நீங்கள் இயக்கத்துக்கு வந்து இப்ப நான் செய்யிற அரசியல் பணியைச் செய்யுங்கோ நான் சண்டைக்குப் போறன்” என்றான்.
சிவதாசன் பதில் கூறவில்லை.
அவன் மீண்டும் “தம்பிக்கு இயக்கத்துக்கு வர விருப்பம். ஆனா பயம், என்ன?” என்று கூறிச் சிரித்தான்.
பிறகு அவன் என்னையும் பார்த்து “தம்பிக்கும் பயமோ?” என்று கேட்டான்.
எனக்குச் சிவதாசன் மீதே கோபம் வந்தது. சும்மா வாயை வைத்திராது பேசுகின்றானே என்றெண்ணி எரிச்சலுற்றேன்.
“பதிலைச் சொல்லுங்கோவன்” அவன் தூண்டினான்.
நான் அமைதியைக் கடைப்பிடிக்கவே விரும்பினேன். அவன் பேசுவதைப்பேசி முடிக்கட்டும் எப்படியாவது மத்தியானச் சாப்பாடுக்கு அவன் எங்களை விட்டு விடத்தானே வேண்டும் என்ற நம்பிக்கை என் மனதிலிருந்தது சிவதாசனும் என்னையே பின் பற்றி நடந்து கொண்டான்.
அவனோ சற்றேனும் மனந்தளராது பேசிக் கொண்டிருந்தான். மக்கள் படும் அவலங்களை மிகவும் சோகமாக விவரித்தான். இடையிடையே உணர்ச்சி வசப்பட்டுங் கொண்டான். இருமணி நேரமாகத் தொடர்ந்து எங்களோடு பேசித்தான் பார்த்தான். எங்களுடைய மனங்களை அவனால் கரைக்கவே முடிய வில்லை.
இறுதியாக அவன் “இப்ப என்ன சொல்லுறியள்” என்று கேட்டான்.
நாங்கள் அவனைப் பார்த்துச் சிரித்தோம்.
“சரி, நீங்கள் இண்டைக்குப் போங்கோ வீட்டை போயிருந்து நான் சொன்னதைப்பற்றி ஆழமாக யோசியுங்கோ. வேறையொரு நாள் சந்திப்போம்” என்று கூறி எங்களைச் செல்ல அனுமதித்தான்.
நாங்கள் சைக்கிள்களில் ஏறி மிதித்தோம். இடை வழியில் சிவதாசன் என்னிடம் கூறினான்.
“மச்சான்! பாலாவியில இருக்கிற பொம்பிளைப் பிள்ளையளின்ர பயிற்சி முகாம் சாமானுகள் எல்லாத்தையும் வாகனத்தில் ஏத்துகினம். சீற்றூகள், தகரங்கள், மரந்தடி எண்டு எல்லாத்தையும் ஏத்துகினம். வன்னிக்குக் கொண்டு போறதாகக் கேள்விப்பட்டேன்.”
“அப்படியெண்டால் ஆமி வடமராட்சிக்கு வந்திடும் எண்டு இயக்கமும் நம்புது போல” நான் அவனின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியோடு கேட்டேன்.
“ஆமி வந்தால் கரைச்சல் இல்லை போல” என்று சிவதாசன் வாயைச் சுழித்தவாறே கூறினான்.
“என்னடா சொல்லுறாய்!?” நான் வியப்போடு கேட்டேன்.
“பின்ன என்னடா? முதலில் சினிமாப் படத்தைத் தணிக்கை செய்தாங்கள். பிறகு அதை முற்றாகத் தடைசெய்தாங்கள் பொதுவிடயங்களில் சினிமாப்பாட்டு ஒலிபரப்புறதை நிப்பாட்டினாங்கள். இசைக் குழுக்களில சினிமாப்பாட்டு பாடத் தடை போட்டாங்கள். இப்ப படிப்பையும் நிப்பாட்டப் போறாங்கள் போல தெரியுது” அவனின் குரலில் சினம் வெளிப்பட்டது.
“சினிமாப் படத்தால என்ன பயன்? சின்ன ஜமீனில் தக்காளிப்பழம் உறுட்டுறதையும் ஜென்ரில் மேனில முள்ளுப்பாக்கிறதையும் பாக்க விடாதது தான் இப்ப உனக்குப் பிரச்சினை போல” என்றேன் சற்று எரிச்சலோடு.
“அப்படியெண்டில்லை, இயக்கம் இஞ்சை இருக்கும் வரையில் பொருளாதாரத் தடை இருக்கும் அரசாங்கம் ஒருக்காலும் அதை எடுக்காது. கறண்ட் இல்லை; சீமேந்து இல்லை; பெற்றோல் இல்லை; அங்கு வவுனியா, திருகோணமலைப்பக்கம் சனங்கள் ஆமியோடு தானே இருக்குதுகள் சகலதையும் அனுபவிச்சுக் கொண்டு சந்தோசமாகத்தானே இருக்குதுகள்…” இவ்வாறு சிவதாசன் நலன்கள் குறித்தே பேசி கொண்டு வந்தான். நான் பதிலேதும் கூறாது மெளனமாகக்கேட்டுக்கொண்டு வந்தேன்.
தொடர்ந்து வந்த நாள்களில் இயக்கத்தினரின் பரப்புரை தீவிரப்படுத்தப்பட்டது. பொதுவாக நீளக்காற்சட்டை அணிந்து வீதி வழியே உலாவும் இளைஞர்களே இலக்கு வைக்கப்பட்டனர். அதே வயதுடைய இளைஞர்கள் சறம் உடுத்தபடி சைக்கிள் களில் சென்றால் அவ்விளைஞர்களை இயக்கங்கள் தத்தம் வேலை நிமித்தம் செல்பவர்களாகவோ அல்லது குடும்பத்தைத் தாங்குபவர்களாகவோ கருதப்பட்டனர். நாம் இந்த ஓட்டையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினோம். நாமும் சறத்தோடு ஒரு பின்னல் பையை சைக்கிள் கை பிடியில் தொங்க விட்டபடி வீதியில் நடமாடத் தொடங்கினோம். அப்பின்னல் பையிலேயே எம் புத்தகங்கள் இருந்தன. எம்மை யாரும் வீதியில் மறிப்பது கிடையாது. எங்களால் அவர்களை இலகுவாக உச்ச முடிந்தது.
இவ்வாறிருக்க அரச படை வலிகாமத்திலிருந்து தென்மராட்சி நோக்கி முன்னேறியது இயக்கத்தினர் எதிர்ப்பு ஏதும் காட்டவில்லை. மாறாக மக்களைத் தம்மோடு வன்னிப்பெருநிலப்பரப்பிற்கு வருமாறு அழைத்தனர். பெரும்பான்மையான மக்கள் வன்னிக்குச் சென்று இடர்பட விரும்பவில்லை. அரச கட்டுப் பாட்டுப் பிரதேசத்திற்கு செல்லவே விரும்பினர்.
ஈற்றில் வலிகாம மக்கள் அரச படையினர் பகுதியை நோக்கி நகரத் தொடங்கினர். இயக்கத்தவரும் அதைத் தடுக்கவில்லை. அவர்கள் வன்னிக்குப் பின்னகர்ந்தனர். மே மாதம் அளவில் அரச படை எவ்வித இழப்புமின்றி தென்மராட்சியையும் வடமராட்சியையும் கைப்பற்றி யாழ் குடா நாட்டைப் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
“குடா நாட்டின் மீதான பொருளாதாரத் தடை அரசினால் நீக்கப்பட்டது. கப்பல் மூலம் பொருட்கள் கொண்டு வரப்பட்டமையால் விலைகள் உயர்வாகவே காணப்பட்டன. திரையரங்குகளில் தென்னிந்திய சினிமாப்படங்கள் தணிக்கைகள் எதுவுமின்றிக் காண்பிக் கப்பட்டன. மக்களிடம் திரைப்படம் பார்க்கும் ஆசை அதிகமாகக் காணப்பட்டமையால் மினி சினிமாக்கள் முளைத்தன. (மினி) சினிமா- சிறிய தகர/ கிடுகுக் கொட்டகைகளில் தொலைக்காட்சி மூலம் திரைப்படம் காண்பிக்கப்படும் இடம்.) இசைக்குழுக்களில் சினிமாப்பாடல்கள் பாடப்பட்டன. மூன்று மாத இடைவெளியில் குடாநாட்டின் நிலைமை இவ்வாறு மாறியிருந்தது. “அப்பன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்” என்றாற் போல் இருந்தது.
என் பழைய நினைவிலிருந்து நான் மீண்ட போது என் சைக்கிள் அந்த ஆலமரத்தடியை அடைந் திருந்தது. ஆனால் அந்த அவன் இப்போது இல்லை. மாறாக இருபடைச்சிப்பாய்கள் அவ்விடத்தில் நின்றிருந்தனர். ஒரு சிப்பாய் கையைக் குறுக்காக நீட்டி என்னை மறித்தான். நான் சைக்கிளிலிருந்து இறங்கிப் பவ்வியமாக நின்றேன்.
“மல்லி! ஐடி காட்டுறது” என்றான்.
நான் தேசிய அடையாள அட்டையையும் பிறிகேட்பாஸையும் (Brigade pass) அவனிடம் காட்டி நான் இப்பிரதேச வாசி என உறுதிப்படுத்தினேன்.
“எங்கை போறது?” என்று கேட்டான் “கோயிலுக்கு ” நான் கோயிலிருக்கும் திசை நோக்கிக் கையை காட்டிக் கூறினேன்.
“நல்லம்… நல்லம்… பாட்டுக் கேக்கிறது; என்ஜோய் பண்ணுறது” என்று சிரித்தபடி கூறி என்னைக் கடந்து செல்ல அனுமதித்தான்.
ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த மேடை யில் இசைக்குழுவினர் இன்னிசை மழை பொழிந்து கொண்டிருந்தனர். தேர்முட்டியை அண்மித்தாற் போல வடக்கு நோக்கிச் செல்லும் பாடசாலை வீதியில் சைக்கிளை உருட்டியபடி சென்றேன். தேர்முட்டிக்கு அருகே வீதியோரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு அதனருகே நின்று கொண்டேன். என்னருகே இன்னொரு வயதான நபரும் நின்றிருந்தார். அப்போது பாடல் நிறைவு பெற்று, அடுத்த பாடலுக்கான அறிவிப்பைச் செய்யத் தொகுப்பாளர் மேடைக்கு வந்தார். அந்நேரத்தில் கோப்ரல் தர அதிகாரி ஒருவன் என்னருகே வந்து, “பாட்டு நல்லமா?” என்று கேட்டான்.
நான் இலேசாகச் சிரித்தபடி மேலுங்கீழுமாகத் தலையை அசைத்தேன்.
பிறகு அவன் சிங்களத்தில் ஏதோ கேட்டான். எனக்கு எதுவும் புரியவில்லை. என்னருகே நின்றிருந்த பெயரிவர் என்னிடம் “அவர் என்ன சொல்லுறார் எண்டால், எல்.ரீ.ரீ. இஞ்ச இருந்தால் இந்த மாதிரிப் பாட்டுக் கேக்க முடியுமோ? இப்ப நீங்கள் எல்லாரும் சந்தோசமாத்தானே இருக்கிறியள்” என்றார்.
அக்கோப்ரல் மீண்டும் என்னிடம் தன் மொழியில் ஏதோ கூறினான். நான் மீண்டும் என்னருகே நின்றவரையே பார்த்தேன். “சந்திரிக்கா அம்மணி தான் இந்த வரப்பிரசாதத்தைத் தந்தவா. அவ செய்ததை நீங்கள் ஒருநாளும் மறக்கக் கூடாது. நீங்கள் அவவை மதிக்க வேணும்” என்று அவர் மொழி பெயர்த்துக் கூறினார்.
அக் கோப்ரல் மீண்டும் என்னிடம், “தம்பி! ஆமி நல்லமா? எல்.ரீ.ரீ. நல்லமா?” என்று கேட்டான் நானோ வாயைச் சற்றுக் கோணியவாறு நாணிச் சிரித்தேன்.
அப்போது மேடையில் ஒரு பாடகர், “ஐ லவ் யூ லவ்யூ லவ்யூ லவ்யூ சொன்னாளே… உள்ளத்தை அள்ளியள்ளித் தந்தாளே…” என்று தொடங்கிப் பாடினார். இரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இருபதுவரையான சிப்பாய்கள் ஆலயத்தைச் சூழ நின்றிருந்தனர். பாடசாலை வீதியில் ஓரிரு சிப்பாய்கள் இலேசாக நடனம் ஆடிக் கொண்டிருந் தனர். ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் இரு சிப்பாய்கள் புகைத்துக் கொண்டிருந்தனர். சிப்பாய்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருந்தனர். ஆயினும் ஒரு சிலரே ஆலயத் துக்கு முதுகு காட்டியவாறு, T56 2 றைபிள்களை கைகளில் ஏந்தி உசார் நிலையிலிருந்தனர். ஏனையோர் (றைபிள்களைத்) தோளில் தொங்க விட்டிருந்தனர்.
கோயிலில் பக்தர்களில் பெரும்பான்மையினர் இரசிகர்களாக மாறியிருந்தனர். அந்த இரசிகர்கள் மத்தியில் சிவதாசனைக் கண்களால் தேடிக் கண்டு கொண்டேன். அவன் தனது ஊர் நண்பர்களோடு தரையில் அமர்ந்தபடியே பாடலை உற்சாகமாக இரசித்துக் கொண்டிருந்தான். நான் வேட்டி அணியாது நின்றமையால் கோயில் வீதிக்குள் நுழைய விரும்பவில்லை. அருகிலிருந்தவரிடம், “எப்ப இது முடியும்?” என்று கேட்டேன்.
“எப்பிடியும் ஐஞ்சு மணிக்கு முன்னம் முடியத்தானே வேணும். இது யாழ்ப்பாணத்து இசைக்குழு. ஊரடங்குச் சட்டத்துக்கு முன்னம் திரும்பிப் போக வேணும் தானே. இந்த ஊரடங்குச் சட்டத்தால தானே இப்ப நடக்குது. இல்லாட்டி கோஷ்ரி இரவு தானே நடந்திருக்கும்” அவர் ஒரு சிறுவிளக்கம் தந்து என் சந்தேகத்தைப் போக்கினார். பிறகு, “ஏன் தம்பி நேரத்தோட வரேல்லை? இப்ப முடியிற நேரமா வந்திருக்கிறியள்” என்றார். நான் சிறந்த இசையைத் தவற விட்டு விட்டேன் என்று கவலையடைவது போல் தெரிந்தது. நான் பதில் கூறாது சிரித்தேன். நிகழ்ச்சி நிறைவடையும் வரை காத்திருக்க முடிவு செய்தேன்.
மேலும் இரு பாடல்கள் நிறைவடைந்த பின்னர் அந்த அறிவிப்பாளர் மேடைக்கு வந்து பேசினார். “இரசிகப் பெருமக்களே! உங்கள் உற்சாகத்தைக் காணும் போது இன்னும் இன்னும் இசை மழை பொழிய வேண்டும் போல் தோன்றுகிறது. ஆயினும் நாட்டின் சூழ்நிலை குறுக்கிடுகிறதே. ஆகையால் நாம் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டிய தருணத்தில் உள்ளோம். உங்கள் செவிகளுக்கு மட்டுமல்லாது, உங்கள் மன உணர்வுகளுக்கும் விருந்தாக இதோ இறுதிப் பாடல் வருகிறது. “அச்சம் என்பது மடமையடா இதோ அந்தப் பாடல் உங்களுக்காக. பாடலைத் தர வருகிறார் உங்கள் அலெக்ஸ்”
என் அருகில் நின்றவர், “தம்பி! அலெக்ஸ் ரீ.எம்.எஸ். இன்ர பாட்டை அவர் மாதிரியே பாடுவான்”. என்று அலெக்ஸிற்குப் புகழ் மாலை சூடினார்.
அலெக்ஸ் மேடைக்கு வந்து பாடத் தொடங்கினார்.
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா…” என்று தொடர்ந்தது. அலெக்ஸின் குரல் ரீ.எம். சௌந்தரராஜன் ஐயாவின் குரலை அசப்பில் ஒத்திருந்தது. இரசிகர்கள் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அலெக்ஸ் அப்பாடலை முடிக்கும் போது,
“ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஈழம் காப்பது கடமையடா; தமிழ்
ஈழம் மீட்பது உறுதியடா!” என்று சபையை நோக்கி ஒலி வாங்கியைப் பிடித்திராத மறுகையை உயர்த்திக் காட்டி பாடினார்.
இரசிகர்களின் கரவொலி, சீழ்க்கையொலி எழுந்து வானைப் பிளந்து கொண்டிருந்தன. படைச் சிப்பாய்களிற் சிலர் இரசிகர்களை மேலும் உற்சாக மூட்டும் பொருட்டு கரவோலி எழுப்பினர். நான் கூட்டத்திலிருந்த சிவதாசனை அப்போது பார்த்தேன். அவன் கூக்குரல் இட்டு, அவ்வப்போது படைச் சிப்பாய் களையும் பார்த்தவாறு மூர்க்கத்தனமாக கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தான்.
அப்போது என் மனதில் தோன்றிய உணர்விற்கு என்ன பெயரென்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
– மாசி 2019, ஜீவநதி, 12ஆவது ஆண்டு மலர்.
![]() |
சிவ.ஆரூரன்: Facebook சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி - December 21, 2020 அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார். சாகித்திய விருது பெற்ற நாவல் , ஆங்கில நாவல் உட்பட நாவல்களை எழுதியுள்ளார். தற்போது துரியோதனன் துயரம் எனும் நாவலை எழுதி முடித்துள்ளார். ஆரூரன் , வடமராட்சியை சேர்ந்த…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 736
