மாசில்லா வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2026
பார்வையிட்டோர்: 87 

ஆம். அந்த நிகழ்ச்சி இன்றும் என் மனக்கண் முன் நிழலாடுகின்றது. 1970களில் நான் திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில், உள் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி இறுதி நாளில் நடந்த நிகழ்வுதான் அது. மறக்க முயன்றேன் முடியவில்லை. அப்போது 11வது வகுப்பு இறுதி தேர்வு எழுதி பள்ளியை விட்டு வெளியே செல்வதற்கு முன் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் 11வது வகுப்பு மாணவர்களுக்கும் பிரியா விடை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்கள் எதிரும் புதிருமான நின்றார்கள். 11ம் வகுப்பு மாணவன் கையில் மெழுகுத்திரி ஏற்றி அமைதியாக நின்று, அதை 10ம் வகுப்பு மாணவனுக்குக் கொடுக்க வேண்டும். பசுமை நிறைந்த நிளைவுகளே என்ற பாடல் இசைத் தட்டு மூலம் ஒலிபரப்பாகும்.

தலைமை ஆசிரியர் சிறிய பொற்பொழிவு நிகழ்த்துவார். பின்னர் மெழுகுத் திரிகள் அணைக்கப்பட்டு அனைவரும் கை கொடுத்துக் கொள்வார்கள். அல்லது ஒருவரை ஒருவர் தழுவி, மார்போடு அணைத்துக் கொள்வார்கள். பெரும்பாலானோர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இந்த நிகழ்வு உங்கள் பள்ளி வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். உங்களுக்கும் இந்த நினைவு நீங்காத நினைவாக மனதில் பதிந்திருக்கலாம்.

அப்படிதான் 40 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கானப் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்தவுடன் இணைபிரியாத நான்கு நண்பர்கள் ஒன்று கூடி, வழக்கமாகச் செல்லும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று அமர்ந்து சிற்றுண்டி உண்டு மகிழ்ந்து கொண்டே பேசிக் களித்தனர்.

“இன்றிலிருந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அனைவரும் மே மாதம் ஒன்றாம் தேதி இங்கு வந்து கூடுவோம். என்ன சம்மதமா” என்று கமல் கேட்க அனைவரும் ஆமாம் அதுதான் சரி என்று முடிவெடுத்து பின்னர் கலைந்து சென்றனர். காலங்கள் உருண்டோடின. 40வது ஆண்டும் வந்து சேர்ந்தது. அன்று 40வது ஆண்டு மே ஒன்றாம் தேதி.

ஓவ்வொருவராக அந்த இடத்திற்கு வந்தனர். அந்த சிறிய சிற்றுண்டிச்சாலை பெரிய ஓட்டலாக உருபெற்றிருந்தது. காலம் செய்த மாற்றம் அது. மூன்று பேர் வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களது பணி, வாழ்க்கை முறைகளைப் பற்றி மகிழ்ச்சியாகக் கலந்துரையாடினர். காலம் கடந்து கொண்டேயிருந்ததால் சிற்றுண்டிக்கு ஆர்டர் சொல்லி காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு கூடிப் போசலாம் என்று முன் மொழிந்த கமல் ஏனோ வந்தபாடில்லை. அவன் வருவானா? என்று அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்பு கொள்ள அலைபேசி எண்களும் இல்லை. சரி அவ்வளவுதான் அவன் வரமாட்டான் என்று முடிவு செய்து சாப்பிட்டு முடித்தச் சிற்றுண்டிக்கான தொகையினைக் கொடுப்பதற்காக கணக்காளரிடம் சென்ற போது அவர், ஐயா உங்களுக்கான தொகை ஏற்கனவே ஒருவரால் செலுத்தப்பட்டு விட்டது. நீங்கள் போகலாம் என்று கூறவே, யார் கொடுத்தார்கள் எப்போது கொடுக்கப்பட்டது என அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டனர்.

அந்த நேரத்தில் வாசலில் வந்த காரிலிருந்து ஒரு வாலிபன் இறங்கி ஓட்டல் உள்ளே வந்து அவர்கள் அருகில் வந்து நின்றான். அவர்களிடம் நான்தான் கமலின் மகன் என்றும், அப்பா பல சிரமங்களுக்கு மத்தியில் என்னை மாவட்ட ஆட்சியருக்குப் படிக்க வைத்ததாகவும், தானும் சிறப்பாகப் படித்து தற்போது இந்த நகரின் கலெக்டராக இருப்பதாகவும் கூறினான். அதைக்கேட்டு அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அவகுக்குக் கை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

மேலும் அப்பா கொரோனாவால் பீடிக்கப்பட்டு இறந்து போனதாகவும், இறப்பதற்கு முன்னால் உங்களைப் பற்றியும் உங்களது மே மாதக் கூடுகை பற்றியும் விளக்கமாகக் கூறி, உங்களை கவனித்துக் கொள்ளுமாறும் கூறினார். நானும் இந்த நாளுக்காக காத்திருந்தேன் என்றான்.

எனவே நேற்றே ஓட்டலுக்கு வந்து முதலாளியிடம் உங்கள் வருகைப் பற்றிச் சொல்லி ஓட்டல் பில்லிற்கானப் பணத்தையும் செலுத்தி விட்டேன். இங்கு வருவதற்குக் கிளம்புகின்ற நேரத்தில், தேர்தல் பணி அவசரத்தினால் என்னால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. சிறிது தாமதம் ஆகிவிட்டது. தாமதத்திற்கு மன்னிக்கவும் என்று கூறினான். அதைக் கேட்டு அனைவரும் கண் கலங்கினர். கமல் ஆத்மா சாந்தியடைய சிறிது நேரம் மௌன அஞ்சலி வெலுத்தினர்.

பிறகு பேசி ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். அதாவது யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நாம் அனைவரும் ஒவ்வொருவர் வீடாக மாறி மாறிச் சென்று பார்த்து பேசி சிரித்து மகிழ்வோம். அவரவரது பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வோம். அதைவிட மேலாக வாட்ஸ்அப் மூலம் தினமும் காலை மாலை வணக்கம் கூறி, குறுஞ்செய்தி அனுப்பி நாம் உயிரோடு இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொள்வோம் என்ற முடிவிற்கு வந்தனர்.

ஆம். யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாமலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நேற்றிருந்தார் இன்றில்லை என்ற நிலையில்லா உலக வாழ்க்கைதான் நிலையாக உள்ளது. என்ன கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல என்றால் ஒன்றுமில்லை என்பதுதான் நிரந்தர பதிலாக உள்ளது. குடும்ப உறவுகள் மற்றும் பள்ளி நண்பர்களுக்கு இடையே உறவுக்குக் கை கொடுத்துப் பாசத்;தை வளர்த்துக் கொள்வோம்.

உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம் என்ற கவிஞனின் உண்மை வரிகளுக்கேற்ப, நிலையில்லாத உலகினை எப்போதும், கண்முன் கொண்டு வருவோம்.

அன்பு, நீதி, நேர்மை, ஒற்றுமை, உண்மை போன்ற அணிகலன்களை அணிந்து கொள்வோம். தர்மம், சமத்துவம், மனிதாபிமானம் போன்ற ஆடைகளை உடுத்திக் கொள்வோம். நம்மிடம் இருப்பதை இல்லாதவனோடுப் பகிர்ந்து கொள்வோம். மனிதனாக, மாசில்லாமல், மகத்தாக, மகிழ்ச்சியோடு மண்ணிலே வாழ்வோம்.

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *