கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 140 
 
 

நெடுஞ்சாலை ஓரம் இருந்த அந்தச் சிறிய ஓலைக் கூரைக் கடைக்குள் அடைமழைச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே கருப்பு நிறச் சொகுசு கார் ஒன்று உயிரற்று நின்றிருந்தது, அதன் சக்கரங்களுக்குக் கீழே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடைக்காரர் சில்வர் டம்ளரில் பாதியளவு இருந்த சூடான இலைக் கஞ்சியை மேசை மேல் வைத்தார். “இதுதான் குடிக்க இருக்கு,” என்று சொல்லிவிட்டு இருட்டில் மறைந்தார்.

அந்த மேசையின் ஒரு பக்கம் முத்து, 60 வயதான ஆட்டோ ஓட்டுநர். கசங்கிய துண்டு தோளில் கிடக்க, மழையில் நனைந்த குளிரில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தார். மறுபக்கம், அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத பெண். கலைந்த தலைமுடி, விலை உயர்ந்த சுடிதார். அவளது கர்ப்பிணி வயிறு மேசைக்கும் அவளுக்கும் இடையே இணைப்பைப் போல இருந்தது.

“நீ குடிம்மா,” என்றார் முத்து. அவரது குரலில் ஒரு முதியவருக்கே உரிய அதிகாரமும் கனிவும் கலந்திருந்தது.

அந்தப் பெண் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். அவளது கண்கள் அந்த டம்ளரையும் முத்துவின் நரம்பு புடைத்த கைகளையும் பார்த்தன. “இல்ல ஐயா, உங்களுக்குத் தான் உடம்பு தாங்காது. நீங்க குடிங்க,” என்றாள் மெல்லிய குரலில்.

“எனக்கு எதுக்குமா? நான் எத்தனையோ மழையைப் பார்த்தவன். உள்ள இருக்கிற புள்ளைக்காகவாது இதைக் குடி,” என்றார் முத்து.

அவள் தயக்கத்துடன் அந்த டம்ளரை எடுத்து கொஞ்சமாய் குடித்தாள். அந்தச் சூடான கஞ்சியின் புளிப்புச் சுவை அவளது தொண்டையை நனைத்தது. அவளுக்குப் பசி அதிகமாக இருந்தது, ஆனால் டம்ளரை அவர் பக்கம் மேசையில் வைத்து தள்ளினாள்.

“பாதி மிச்சம் இருக்கு ஐயா. நீங்க குடிங்க..”

முத்து அவளை உற்றுப் பார்த்தார். பிறகு டம்ளரை எடுத்து ஒரே ஒரு வாய் மட்டும் குடித்தார். அந்த ஒரு வாய் அவரது வயிற்றின் எரிச்சலைச் சற்றே குறைத்தது.

மழை மெல்லத் தூறலாக மாறியது. முத்து எழுந்து வெளியே நின்ற தன் ஆட்டோவை காய்ந்த துணியால் துடைக்க ஆரம்பித்தார். அப்போது, சாலையின் இருட்டில் ஒரு உருவம் நனைந்தபடி நடந்து வருவது தெரிந்தது.

ஒருத்தர் கையில் ஒரு பெட்ரோல் கேனுடன், தலை முதல் கால் வரை நனைந்து, மூச்சிரைக்க நடந்து வந்தான். அவன் முகத்தில் ஒருவித பதற்றம் இருந்தது. கடைக்குள் இருந்த பெண்ணை பார்த்ததும் அவன் கண்கள் பெட்ரோல் கேனைச் சரிபார்த்துவிட்டு, “போலாமா?” என்பது போல ஒரு சைகை.

பெண் மெதுவாக எழுந்தாள். அவள் எதையும் பேசவில்லை. தன் கைப்பைக்குள் இருந்து ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் உட்கார்ந்திருந்த அந்த மர மேசையின் மீது வைத்தாள்.

முத்து ஆட்டோவை துடைத்துக் கொண்டே அவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவர் எதையும் பேசவில்லை.

அவள் அந்தச் சொகுசு காரை நோக்கி நடந்தாள். கார் ஸ்டார்ட் ஆகி மெதுவாக அந்த மழையில் நகரத் தொடங்கியது. அதன் சிவப்பு நிறப் பின்விளக்குகள் இருட்டில் மறையும் வரை முத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் மழை வலுக்கத் தொடங்கியது. கடைக்குள் இப்போது யாரும் இல்லை. அந்த ஓட்டை விழுந்த மர மேசையின் மேல், ஒரு காலியான சில்வர் டம்ளரும், அதற்குப் பக்கத்தில் மழைக் காற்றில் பறக்கத் துடிக்கும் அந்த ஐந்நூறு ரூபாய் தாளும், அவர்கள் உட்கார்ந்திருந்த அந்த இரண்டு மர நாற்காலிகளும் ஒன்றுக்கொன்று முகம் பார்த்தபடி வெறுமையாய் நின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *