மல்லிகை




(இந்திய விடுதலைப் போராட்டக் காலப் பின்னணியில் பின்னப்பட்ட, வெப் சீரீஸ் பரிசீலனைக்காக கொடுக்கப்பட்ட கதையின் சுருக்கம்)

1930 ஆம் ஆண்டு.
சேலம் அருகில் அயோத்யா பட்டினம் . முக்கிய இருப்பிடப் பகுதியில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் – சிறிதளவு நிலபுலன்கள் கொண்ட பொருளாதார ரீதியாக ஓரளவு வசதியானவர்கள் கிருஷ்ணசாமி முதலியார் , தியாகராஜ சாஸ்திரி. வாடகை வீட்டில் தான் இருக்கிறார்கள். . இவர்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சொந்தக்காரர் – பிரிட்டிஷ் சர்க்கார் ஜெயில் அதிகாரி – இவர்களுடைய நெருங்கிய நணபர் – ரங்கசாமி பிள்ளை.
கிருஷ்ணசாமியும் தியாகராஜனும் பேசிக் கொள்ளும் போது பேச்சு சண்டையில் முடியும் . ஆனால் மறு நாள் அன்புடன் பேசிக் கொள்வார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை . மாலை நேரத்தில் ராகு கால வேளையில் ஏதோ வம்பு பேச ஆரம்பித்தனர் நண்பர்கள் . சண்டை ஆகி இருவரும் அவரவர் வீட்டிற்குள் செல்கிறார்கள் . இருவரின் மனைவிகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள் .
அன்றிரவு லாந்தர் விளக்குடன் கிருஷ்ணசாமி , தியாகராஜன் வீட்டு கதவைத் தட்டுகிறார். பதற்றத்தில் இருக்கிறார். உடன் வரும்படி மன்றாடுகிறார். அவரது மனைவியையும் அழைத்து வரும்படி வேண்டுகிறார். மூவரும் கிருஷ்ணசாமியின் வீட்டு தோட்ட பகுதிக்குச் செல்கிறார்கள். அங்கே அந்த கொல்லைப்புறப் பகுதியில் ஒரு அழகான சிவந்த நிறம் கொண்ட இளம் பெண் நிறை மாத கர்ப்பிணி . யாரோ துரத்தியதால் பிரசவ நிலையில் இங்கு அடைக்கலம் தேடி வந்திருக்கிறாள். துடிக்கிறாள். கிருஷ்ணசாமியின் மனைவி , மகன் , மருமகள் அந்தப் பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை . அதனால் , நண்பரையும் அவர் மனைவியையும் உதவிக்கு கூட்டி வந்தார்.
தியாகராஜனின் மனைவி கங்கா கூறிய யோசனையின் பேரில் , நண்பர்கள் இருவரும் பிரசவம் பார்ப்பதில் கை தேர்ந்த தங்கம் என்கிற கிழவியை அழைத்து வருகிறார்கள்
ஆண்களை வெளியே அனுப்பி விட்டு , தங்கம் , இளம் பெண்மணிக்கு பிரசவம் பார்க்கிறாள். பெண் குழந்தையைப் பெற்று எடுக்கிறாள் அந்தப் பெண்மணி . தங்கம் , பெரிய உயிர் இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது என்று கூறுகிறாள். அந்தப் பெண்ணுக்கு உறுதுணையாக அந்த தோட்டத்தில் இருக்கிறாள். ஈன ஸ்வரத்தில் கூட அந்த இளம் பெண்மணி , தன்னைப் பற்றிய விவரங்ளை கூறவில்லை.
நண்பர்கள் இருவரும் ரங்கசாமி பிள்ளை யிடமும் அந்த பகுதி தாசில்தார் வேலுசாமி நாயுடுவிடமும் தகவல் தெரிவிக்கின்றனர். ரங்கசாமி வந்து பார்க்கிறார்.
அந்த இளம் பெண்மணி யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த தோட்டத்தில் உயிரை விடுகிறாள் அந்த இளம்பெண்.
கூடி இருந்த தெரு ஜனங்கள் துணையுடன் ரங்கசாமி, அந்த இளம்பெண்ணின் இறுதி சடங்குகளை நடத்துகிறார். அவரே அந்தப் பெண்ணுக்கு எரி யூட்டுகிறார். கிழவி தங்கத்தின் கைகளில் இருக்கும் பச்சிளம் குழந்தையைப் பற்றி நண்பர்கள் , ரங்கசாமியிடம் கேட்கிறார்கள் . ரங்கசாமி , குழந்தையைத் தாமே வளர்ப்பதாக கூறி வாங்கிக் கொள்கிறார். அருகில் இருந்த ரங்கசாமியின் மனைவி லட்சுமியும் சம்மதித்து குழந்தையை அரவணைத்து ஏற்றுக் கொள்கிறார்.
அந்தப் பெண் குழந்தை , ரங்கசாமியின் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வளர்கிறாள். அவளை அவர்கள் தங்கையாக ஏற்றுக் கொள்கிறார்கள். மல்லிகா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தை , வளர்ப்பு மகள் என்று அவள் அறியாதபடி பாசத்துடன் சீராடி வளர்க்கப்படுகிறாள்.
ரங்கசாமியின் தங்கை பூமாதேவியின் மகன் முத்துகிருஷ்ணனை (அத்தை மகனை ) நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து நின்ற மல்லிகா விரும்புகிறாள்.
காலம் உருண்டோட , 1948 ஆம் ஆண்டு – தை மாத முகூர்த்த நாள் ஒன்றில் தமது மூன்றாவது மகளுக்குத் திருமணம் நடத்திய ரங்கசாமி , மாலை வேளையில் சாய்வு நாற்காலியில் களைப்புடன் அமர்ந்திருந்த போது அவருடைய இரண்டாவது மகன் கண்ணன் அழைத்தான். அனந்தபுரம் ஜமீன்தார், பார்க்க வந்திருப்பதாக கூறினான்.
மனைவி உடன் வந்திருந்த வயதான ஜமீன்தார் பூபதியை வரவேற்ற ரங்கசாமி , அவர்களுக்கு உபசாரங்கள் செய்து பானமும் பழமும் தமது கைகளலேயே கொடுத்தார். அனந்தபுரம் ஜமீன்தார், ரங்கசாமியின் இல்லத்திற்கு வந்திருப்பதால் அவரது பழைய , புதிய சம்பந்திகள் , ரங்கசாமியை மிகுந்த மரியாதையுடன் பார்த்தனர். ஜமீன்தார் உடன் வந்திருந்த அவரது காரியஸ்தர் சமூகம் முக்கிய விஷயம் பேச வந்திருப்பதாக யாருக்கும் கேட்காமல் ரங்கசாமியின் காது அருகே முணுமுணுத்தார்.
ரங்கசாமி அவர்களை கல்யாணத்திற்காக தரும்படி கேட்டு வாங்கியிருந்த, அதே தெருவில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டில் ஜமீன்தாரையும் அவரது மனைவியையும் தங்க வைத்தார்.
மறு நாள் . உறவினர்கள் , சம்பந்திகள் , பெண் மாப்பிள்ளை எல்லோரும் விடை பெற்றுச் சென்ற பின்னர் , ரங்கசாமி , தமது மனைவியார் உடன் ஜமீன்தாரை சந்தித்தார்.
ஜமீன்தார், தமது மகன் ராஜசேகரனின் காதலியாக இருந்த உஷா என்ற பெண் தான் மல்லிகாவின் தாய் என்றும் தமக்கு தெரியாமல், தமது மைத்துனர் அவளுக்கு இன்னல் கொடுத்து விரட்டி விட்டது அவள் இந்த பகுதியில் குழந்தை பெற்று இறந்து விட்டது எல்லாம் சமீபத்தில் விபத்தில் காலமான அந்த மைத்துனர், மரணத் தறுவாயில் சொல்லிச் சென்றதையும் அவரது மகன் ராஜசேகரனும் அவனது மனைவி இன்பவல்லியும் அல்பாயுசில் இறந்து விட்டதையும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பதையும் ரங்கசாமியிடம் கூறினார். உஷா பெற்றெடுத்த தமது பேத்தி மல்லிகாவை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கனத்த இதயத்துடன் மனைவியோடு வீடு திரும்பிய ரங்கசாமி , மல்லிகாவிடம் அவளைப் பற்றிய உண்மை கதவைத் தட்டி நிற்பதை பக்குவமாக எடுத்துச் சொல்கிறார்.
தன்னை ஈன்ற அம்மாவை இன்னல்களுக்கு உள்ளாக்கி நட்டாற்றில் விட்டவரின் பெற்றோர் தானே இவர்கள். எப்படி ஏற்க முடியும் என்று மல்லிகா கேட்க யாரிடமும் அதற்கு பதில் இல்லை . அவளுடைய சகோதர சகோதரிகள் , வசதி , ராஜ வாழ்க்கை இதை எல்லாம் எடுத்துச் சொல்லி காத்திருக்கும் ஜமீன்தார் தாத்தா பாட்டி உடன் செல்ல வேண்டும் என்று அவள் மனதைக் கரைக்கிறார்கள் .
மல்லிகா , அடுத்த மாதம் நடக்க உள்ள ரங்கசாமியின் அறுபதாவது விழாவைப் பார்த்து விட்டுச் செல்வதாக உடன்படுகிறாள்.
ஜமீன்தார் தம்பதி அது வரை காத்திருக்க சம்மதம் தெரிவிக்கின்றனர். ஆனால் , மல்லிகா அவர்கள் இருந்த இடத்திற்கு போகவில்லை. ரங்கசாமி குடும்பத்தாரும் அவளிடம் தாத்தா பாட்டியைப் பார்க்கும்படி வற்புறுத்தவில்லை.
சஷ்டியப்த பூர்த்தி மணி விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக , அதிக அளவில் உறவினர்கள் வராத நிலையிலும் கூட , வருபவர்களுக்கு உணவு தாராளமாக இருக்க வேண்டும் தடபுடலாக இருக்க வேண்டும் என்று சமையல்காரர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது எப்படி ஏற்பட்டது என்று தெரியாத, திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் , வீட்டில் இருந்த ரங்கசாமியின் குடும்பத்தினர் அனைவரும் மாண்டு போய் விட்டனர். தோட்டத்திற்குப் போய்
மாலை தொடுக்க மலர்கள் பறித்து விட்டு வந்த மல்லிகா , இந்த கோரக் காட்சியைப் பார்க்கிறாள். அலறுகிறாள். கண்ணீர் உகுக்கிறாள். கொல்லைப்புறத்தில் சமைத்துக் கொண்டிருந்தவர்கள், அக்கம்பக்கத்தவர் , விரைந்து வந்து தீயைத் தணித்து ஆட்களை மீட்க முடியுமா என்று முயற்சிகளில் உடனே இறங்கினர். ஆனால் அதற்குள் ரங்கசாமியின் குடும்பத்தினர் மாண்டு விட்டனர்.
மல்லிகாவின் காதலன் முத்துகிருஷ்ணன் தீக்காயங்கள் உடன் , படாத பட்டு பற்றி எரியும் வீட்டிலிருந்து வெளியே வந்து , ரங்கசாமியின் முதல் பையனின் மகனை ( பேரக்குழந்தையை ) அவளது கைகளில் கொடுத்து விட்டு , மாமாவின் வாரிசையாவது காப்பாற்று என்று கூறி உயிரை விடுகிறான்.
வெளியூரிலிருந்து ரங்கசாமியின் உறவினர்கள் வந்து சேர்ந்தனர். இறுதி் காரியங்களை அவர்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டு, நல்லது சடங்கு நாள் வரை அங்கேயே இருந்தாள் மல்லிகா .
ஜமீன்தாரின் உதவியாளர் வந்து அழைத்த போதும் சடங்கு நடக்கும் இடத்திலிருந்து நகராமல் குழந்தையுடன் அங்கேயே இருந்தாள் மல்லிகா .
ரங்கசாமியின் நிலபுலன்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு சேலம் நகரை நோக்கி நடந்தாள் மல்லிகா .
தன்னை பாசம் காட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கியவரின் பேரனை தனி ஆளாக இருந்து ஆளாக்க வேண்டும் என்று முடிவு எடுத்த மல்லிகா திட மனத்துடன் நடை போட்டாள் . ஜமீன்தார் தங்கியிருந்த வீட்டுப் பக்கம் அவள் போகவில்லை .
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |