மருதாணி விரலெங்கே? அழகெங்கே?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 1,454 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமு தீக்ஷதரும் இன்னும் இரண்டு பேருமாக ஸ்தல யாத்திரை செய்துகொண்டு, முந்தாநாள் கும்பகோணத் திற்கு வந்தார்கள். பொழுது போக்க காவிரிக்கரையில் வந்து உட்கார்ந்தார்கள். தீக்ஷதர் வகையரா உட்கார்ந் திருந்த இடத்திற்கும் பத்தடி தள்ளி ஒருவர் சுவரில் தலையை வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தார். அவர் தலையெல்லாம் சடை. கண்களில் பேய் ஒளி. ஆனால் முகத்தின் முழுத்தோற்றம் சாத்வீகத்தையும் கருணை யையும் குறித்தது. இவர்களைப் பார்த்தவுடன் ஒரு பெரிய பித்தளைச் சங்கிலியை சமீபத்தில் நகர்த்திவைத் துக்கொண்டு எழுந்திருந்து உட்கார்ந்தார். 

ராமு தீக்ஷதர் தன் நண்பர் ஒருவரைப் பார்த்து ‘இந்த ஊரிலே, ஒரு வீட்டில் பில்லி சூன்யம் வைத்திருந்தாளாமே–அது என்ன ஆச்சு தெரியுமா ?’ என்று கேட்டார். 

அதற்கவர், ‘அந்த எழவெல்லாம் நான் காதில் போட்டுக்கொள்வதே கிடையாது. பேய், சூன்யம், ஏவல் இதைத் தவிர உமக்கொன்றும் ரசிப்பதில்லை. எனக்கோ இம்மாதிரிப் பேச்சுகளென்றால் எங்கே யாவது லண்டனுக்குப் போய்விட்டால் தேவலைபோ லாகி விடுகிறது. பிசாசாவது பயத்தங்காயாவது?’ என்று பதில் சொன்னார். 

அடுத்தாற்போலிருந்த மற்றவர் சங்கிலியை கிலு கிலுவென்று சப்தப்படுத்திக்கொண்டு சமீபத்தில் நெருங் கிப்போய் உட்கார்ந்துகொண்டார். 

‘சுவாமிகளே! நான்தான் சங்கிலிச்சாமி; தொழில் மாந்திரீகம்; நீங்கள் சொன்னவார்த்தை பொறுக்கவில்லை. சீமையிலே-நீங்கள் போகவேண்டுமென்று சொன்ன லண்டனிலே-பேய், பிசாசுகள் வாஸ்தவமென்று ஒப்புக் கொண்டிருக்க, இந்தியாவிலே–அதுவும் கும்பகோணத் திலே–அவைகளைப் பொய்யென்று ஆக்ஷேபித்தால், சுண்ணாம்புக் காளவாய்தான் தண்டனை. பேய்களின் புகைப் படமே இருக்குதே – பார்த்ததில்லையா? என்றார். 

பிறகு ராமு தீக்ஷதரைப் பார்த்து, தணிந்த குரலில் நீங்கள் கேட்டீர்களே, அந்த வீட்டு சமாசாரம்–அதை நான் தான் பார்த்துவருகிறேன். போன அமாவாசை முதல் பதினைந்து நாட்களாயிற்று. ஒன்றும் வழிக்கு வந்தபாடில்லை. என் பெயரே கெட்டுப்போகும்போலிருக் கிறது. உங்களுடைய நண்பர் ஏதோ பயந்தவன்… என்று சொல்லி கடைசி வார்த்தையை முடிக்கவில்லை. 

அதற்குள் யாரோ ஒருபெண்;இருபது வயதிருக்கும்; விருவிரென்று வந்து சங்கிலிச்சாமியார் முன்பு அமர்ந்து கொண்டாள். முகமெல்லாம் பிழிந்துவிட்டதுபோலிருந் தது. ஆனால் ஒரு காலத்தில் அழகியாய் இருந்திருப் பாள். தலைமயிர் எண்ணெய் காணாமல், கோரைபோல் தோள்மீது புரண்டது. கீழேகிடந்த சங்கிலியைத் திடீரென்று பாம்புபோல் கழுத்தில் போட்டுக்கொண்டு, தீப்பொறி பறக்க ஆரம்பித்தாள். 

‘ஏ சங்கிலிச்சாமி! 1757ம் வருஷம் மே மாதம் 19ம தேதி 11-25க்கு வெட்டுப்பட்டு இறந்துபோன சுபேதார் படுவெட்சிங்கின் ஆவி நான்.நான் உடலுடன் கூடி வசித்துவந்த காலத்தில் வீதி சுற்றி வரும்போது, ஒரு கோஷாப்பெண் வாசற் கதவைக் கொஞ்சம் திறந்து கொண்டு தெருவாசல் கூட்டினாள். பெண்ணினுடைய கால் விரல் சிகப்பு கண்ணில் பட்டது. விரலின் அழ கைத் தூக்கி அடித்தது மருதாணி அழகு. கால் விரலே இப்படியென்றால், பெண்ணைப் பற்றி விவரிப்பானேன் ? ஆசைப்பைத்தியம் விழுங்கிவிட்டது. இரண்டு தருதலைத் தேவடியாளிடம் தலா இருபது வெள்ளி கொடுத்து, அடையாளம் சொல்லி, எப்படியாவது பெண்ணை வசப்படுத்தி வரும்படி உத்திரவிட்டேன். அவர்க ளும் அப்பெண்ணுக்கு அநேக ருசிகரமான தின்பண் டங்கள் வரிசையாய்க் கொண்டுபோய்க் கொடுத்து, விஷயத்தைத் தெரிவித்தார்கள். முதல் நாள் பதிலே கிடைக்கவில்லையாம். மறுநாள் முதல் முப்பது நாளும் ஏராளமான பட்டுகளும் கண்ணைப்பறிக்கும் நகைகளும், தங்கக் கிளிகளும், ஓயாமல் கொடுத்தனுப்பிவந்தேன். அந்தப் பெண் வெறும் அசடு. இல்லை ; கல் நெஞ்சு, ஒன்றுக்கும் அசையவில்லை. 

இப்படியிருக்கும்பொழுது, அப்பெண்ணின் கணவன் எனக்குக் கட்டுப்பட்ட சிப்பாய் மானோஜி ராவ் என்று தெரிந்தது. அவனுக்குப் பாரா முதலியது போடுவதில் லேசாக இருந்தால் ஒருவேளை காரியம் கைகூடுமென முத லில் நினைத்து, வெகு நாள் லேசாகவே பாரா போட்டு வந்தேன். ஒருவித லாபமும் கிடைக்கவில்லை. வரவர எனக்கு அதிருப்தி அதிகரித்தது. கடைசியாக ஒரு தீர் மானம் செய்தேன். சிப்பாய்களுக்குப் பாரா குறிக்கும் நாள் வந்தது. 

‘மானோஜி ராவ்! நீர் அடுத்த வாரம் தொடங்கி ஐந்து நாள் சந்தாக்காட்டில் பாராயிருக்கவேண்டியது’ என்று உத்திரவு போட்டேன். 

மானோஜி ராவுக்கு முகம் தொங்கிவிட்டது. 

வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தான். உணவு செல்ல வில்லை. உறக்கம் வரவில்லை. சீக்குப் புறாவைப்போல் சுணக்கமாய் உட்கார்ந்திருந்தான். அழகுப் பெண் குர லுக்கு-அவள் அழகுப் பெயர் தெரியுமா? காமலதா அழகுப்பெண் குரலுக்கு ஆனந்தப்படவில்லை. அவர்கள் பேசிக்கொண்டார்கள். 

‘என்ன சுணக்கம், சுவாமி?’ 

‘ஒன்றுமில்லை. அடுத்த வாரம் சந்தாக்காட்டுப் பாரா, உன்னைப் பிரிய நேருதே–அதற்கு மனமில்லை. அதுதான் காரணம்.’ 

‘சரி; அதற்காக வருத்தப்படுவானேன்? நானும் வந்துவிடுகிறேன்.’ 

‘நீ பாராவுக்கு வரக்கூடாது ; சட்டவிரோதம்.’ 

‘சட்ட விரோதமா? அப்படியென்றால் உங்கள் கை வாளால் என்னைக் கொன்றுபோடுங்கள்.’ 

‘என்ன? என்ன சொல்லுகிறாய்? புரியவில்லையே உன் பேச்சு!…பைத்தியம் கியித்தியமா?’ 

‘இல்லை, இல்லை. உடம்பு சரியாகத்தானிருக்கிறது. உங்கள் சுபேதார் மேஜர் படுவெட்சிங் மூன்று மாதமாக என்பேரில் வலைவீசி வருகிறான்.ஒவ்வொரு நாளும் இங்கே வரும் சேலைகளுக்கும், தின்பண்டங்களுக்கும் அளவே கிடையாது. இதுவரையில் சுபேதார் மேஜருக்கு கட்டுப் படவில்லை. என்னை உத்தேசித்துத்தான் முந்தி உங்க ளுக்கு லேசான பாராவும், இப்பொழுது சந்தாக்காட்டுப் பாராவும் போட்டிருக்கிறானென நினைக்கிறேன். ஆகவே, நீங்கள் மட்டும் சந்தாக்காட்டுக்குப் போனால், என் கற் புக்கு பாக்கு வைத்தாகிவிடும். ஒன்று கற்புப் பிச்சை கொடுத்து சந்தாக்காட்டிற்கு அழைத்துப்போங்கள். இல்லையென்றால் கற்புக்கு பலியென்று இங்கேயே முடித்துவிடுங்கள். என்ன சொல்லுகிறீர்கள்?’ 

‘பெண்ணே! அழாதே. நீ தெய்வப் பிறப்பு. பயம் வேண்டாம். நான் சொல்லும் யுக்தியைக் கேள். நீ இங்கேயே இரு. நான் பாராவுக்குப் போகிறேன். அன் றைய இரவே ஒருக்கால் சுபேதார் உன்னிடம் வருவான். அடுத்த மூன்றாவது நாள், வியாழக்கிழமை ராத்திரி பதி னோரு மணிக்கு வரும்படி சொல்லிவிடு நான் அப்பொழுது வந்து ஜவாப் சொல்லிக்கொள்ளுகிறேன். ஞாபகமாக மட்டும் வாசற் கதவைத் தாளிடாமல் வைத்திரு. நமது குலதெய்வம் பவானி சக்தி காப்பாற்றும்..’ 

இந்தப் பேச்செல்லாம் நடந்ததற்கு ஒரு வாரம் கழித்து, என் உத்திரவுப்படி மானோஜி சந்தாக்காட்டுப் பாராவுக்குப் போய்விட்டான். அன்றிரவே காமலதா வீட்டுக்குப் போனேன். என்னைப் பார்த்தவுடன் பெண் என்றுமில்லாமல், அபூர்வமான பரிவுடன், ‘சுபேதாரே! வரவேணும். இந்த ஏழைமேல் மோகம் கொண்டீரே- அதற்கு ரொம்ப சந்தோஷம். எல்லாவற்றிற்கும் காலம் கூடினால் தானே? இதுவரையில் காலம் ஒத்துக்கொள்ள வில்லை, தயவுசெய்து தாங்கள் நாளை வியாழக்கிழமை இரவு பதினோரு மணிக்கு வந்தால், மனதைக் குளிரவைக்கிறேன்’ என்றாள். 

என் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தையுண்டோ, சங்கிலி ! 

வியாழக்கிழமை இரவும் வந்தது. 

வீட்டு ரேழியில் காமலதா என்னை வரவேற்றாள். என்ன ஜாலக்காரியடா – தங்கக்கத்தியை வெல்வெட் உறையில் மறைத்ததுபோல்! ஆனால்,அதெல்லாம் பிறகு தானே தெரிந்தது? ‘பைடோஜி என்று சொல்லி விட்டுப் பெண் உள்ளே போய்விட்டாள். 

மெத்தையில்போய் உட்கார்ந்துகொண்டு, வேலை யில்லாமல் ஒருதரம் வெற்றிலை போட்டுக்கொண்டேன். காமலதா உள்ளுக்கும் கூடத்திற்குமாக உலாவிக்கொண் டிருந்தாள். ‘ஏன் உலாவவேண்டும்? உட்காரக்கூடா தா?” இல்லை, உள்ளே பால் காய்கிறது. இறக்கிவைத்து விட்டு வருகிறேன்’ என்று பதில் சொன்னாள். 

இந்த நிலைமையில், கொடிமின்னல் தரையில் தயை யோடு தவழ்வது போன்ற அவளுடைய உடலழகைப் பார்த்ததில் அடைந்த மயக்கத்தோடு வெற்றிலைபாக்கு வெறியும் சேர்ந்து நான் தூங்கிவிட்டேன்போலும். பிறகு நடந்த விஷயங்களில் பல எனக்கு நேரில் தெரி யாது. ஆவியாய்ப் போன பிறகு, அக்கரையில் அவை களை விசாரித்துத் தெரிந்துகொண்டேன். 

இப்படியிருக்க, சந்தாக்காட்டுப் பாராவில் மானோஜி ராவ் இருப்புக்கொள்ளாமல் எழுந்திருப்பதும், உட்காரு வதும், அர்த்தமில்லாமல் சீட்டியடிப்பதுமாயிருந்தான். அவனை மற்றொரு பாராக்காரன் கவனித்தான். ‘என்ன தம்பி, மானோஜி! உடம்பு என்ன பண்றான்` என்றான். 

‘ஏதோ தூக்கம் வருது. தலை கிர்ரென்குது. என் நம்பரை வைத்துக்கொண்டு பாராக் குடு சின்ன தூக்கம் போட்டுட்டு வருகிறேன்’ என்றான் மானோஜி 898 நம்பர் சம்மதி கொடுத்தான். 

மானோஜி சந்தாக்காட்டைவிட்டு ரஸ்தாவுக்கு வந்து, தன்னுடைய வெள்ளைக் குதிரையில் ஏறிக் குதி ரைக்குச் சிமிட்டாக் கொடுத்தான். ஏழு மைலையும் இரு பது நிமிஷத்தில் விழுங்கிவிட்டு, வீடு வந்து சேர்ந்தான். தாளிடாமல் இருந்த கதவின் வழியாய் உள்ளே வந் தான். நான் வெல்வெட் ரஜாயின்பேரில் தூங்குவதைப் பார்த்தான். கோபவெறியேறிக் கத்தியின் வீச்சினால் என்னை ஐந்து பாகமாக்கிவிட்டான், ஒரு சுபேதார் ஐந்து பேரானார். நான் வெட்டுப்பட்டதென்னவோ மானோஜி வீட்டில்தான். ஆவி பிரிந்ததுமட்டும் சந்தாக் காட்டில். எப்படி சமாசாரம்? என்னை வெட்டின துண் டங்களை மூட்டைகட்டிக்கொண்டு, திரும்ப குதிரையில் சந்தாக்காட்டிற்கு வந்தான். ‘உடல் சுபேதாரே! குளத் தின்கீழ் தூங்கும். தலை சுபேதாரே! தாழங்காட்டில் வாசனை பாரும். கை சுபேதாரே! புல்தரையைத் தட விப்பாரும். இப்படியெல்லாம் விஷமமாகச் சொல்லி விட்டு, முண்டங்களை மூலைக்கொன்றாய் எறிந்தான். இதெல்லாம் முடிந்ததும் கைகால் சுத்திசெய்துகொண்டு, பிறகு பாராவுக்கு உஷார் கொடுக்கப் போய்விட்டான். 898 ம் நம்பர் மானோஜியின் அரை மணி தூக்கத்தைப் பார்த்து அதிசயித்தான். 

அடுத்தநாள் பொழுது விடிந்தது.ராஜாவை எழுப்ப சுபேதார் ஆஜரில்லை. ராஜா எழுந்திருந்த பிறகு தான் குண்டுபோடவேண்டிய வழக்கமானபடியால், குண்டும் போடப்படவில்லை. காலை மணி பத்தாயிற்று. ராஜாவும் பாய்சாப்பும் எழுந்திருந்தார்கள். ‘சுபேதார் எங்கே காணோம்? மோசமாய்ப் போச்சுதே!’ என்றார். 

ஊரில் சுபேதார் மேஜரைத் தேடச்சொன்னார். ஒரு புலனும் தெரியவில்லை. ராஜாவின் பாய்சாப்புமட்டும் நான் கண்டுபிடிக்கிறேனென்று சபதம் கூறினாள். 

இரண்டு மாதம் கழித்து ஒருநாள் மூடு பல்லாக்கில் காற்று வாங்கச் சந்தாக்காட்டுப்பக்கம் எதேச்சையாய் வந்தாள் ராணி பாய்சாப்பு. ரொம்ப தைரியசாலி; கூர்மையான மூக்கு; சந்தாக்காட்டில் ஒரு நாற்றம் மெது வாய் அடித்ததைக் கவனித்தாள். நான் காற்று ஸ்வரூப மாய் அங்கே வசித்ததால், ‘ஹே ராஜேஸ்வரி! மானோஜியை உஷாராயிருக்கச் சொல்லுங்கள்’ என்று கத்தினேன். 

பாய்சாப்பு திடுக்கிட்டாளே ஒழியப் பயப்பட வில்லை. பல்லக்கைக் கீழே வைக்கச்சொல்லிவிட்டு, ஆள் களைத் தாழங்காட்டில் தேடச்சொன்னாள். தலை, கை இவைகளின் பாக்கியும், என்னுடைய பேர்போன பச் சைத் தலைப்பாகையின் கந்தலும் அகப்பட்டன. அவை களைப் பத்திரப்படுத்தினாள் ராணி. 

மறுநாள் இரவில் ரகசியமாய் மானோஜியின் சம்சா ரத்தை அழைத்துக்கொண்டு வரச்சொன்னாள். காமலதா அரண்மனைக்கு வந்தாள் 

‘பெண்ணே! உங்கள் வீட்டு குட்டு வெளிப்பட்டு விட்டது. சுபேதார் எங்கே? உண்மையைச் சொல்லு கிறாயா இல்லையா? என்று ராணி கேட்டாள். 

•மகாராணி! என் கருகமணிக்கு அபாயமில்லை யென்று வாக்களித்தால், ஏதாவது பதில் வரும்.இல்லா விட்டால்…’ 

‘ஆகட்டும். உன் கருகமணியும் என் கருகமணியும் ஒன்று: இது சத்தியம்; உண்மையைச் சொல்லு.’ 

‘மகாராணி! எங்கள் வீட்டிற்கு இரண்டுபேரை அனுப்பி, பரணியிலிருக்கும் பானைகளை எடுத்துவரச் சொல்லுங்கள். பிறகு சொல்லுகிறேன்.’ 

அந்தப்படியே ராணியின் ஆட்கள் போய் பானை களைக் கொண்டுவந்தார்கள். மானோஜியின் மனைவி பானையிலிருந்த பட்டுக்களையும் நகைகளையும் எடுத்து, கீழே பரப்பி வைத்துவிட்டுச் சொல்லியதாவது : ‘நம் சுபேதார் மேஜர் ஒரு மாத காலமாக இந்த எழவெல் லாம் கொடுத்து என்னை மயக்கப் பார்த்தார். அம்மா! பெண்களுக்கு ஐவேஜி கற்பு. அதை காப்பாற்றிவிட் டேன். கடைசியாக சுபேதார் முயற்சியைப்பற்றி என் புருஷனிடம் சொன்னேன். அவர் மேஜரைக் கத் திக்கு இரையாக்கிச் சந்தாக்காட்டுத் தாழைக் கிடங்கில் எறிந்துவிட்டார். இதுதான் கதை’ என்று நமஸ்காரம் செய்து காமலதா நிறுத்தினாள்… 

மறுநாள் ராஜா தர்பாரிலிருந்தார். மந்திரி முதலி யோர் சூழ்ந்து நின்றார்கள். எல்லோருடைய முன்னிலை யிலும் மானோஜிராவுக்கு ராஜா இழைப்பு வேலை மிகுந்த ஒரு புது தங்கக் கத்தியை இனாம் கொடுத்து, சுபேதார் மேஜர் வேலைக்கு உயர்த்தினதுமல்லாமல் சந்தாக் காட்டையும் தத்தம்செய்தார். மானோஜியின் சந்தோ ஷம் பூரித்தது. 

அப்பொழுது ‘மானோஜி! உன் ஆட்டம், பாட்டு, சிலுப்பல்- இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு?’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். 

கொஞ்சநாளுக்குள், சந்தாக்காட்டில் இன்பக்கனவு போல் – பெரிய சிறகு விரித்த நாரைபோல்-ஒரு புதிய திவ்ய கட்டிடத்தை உண்டாக்கினான் மானோஜி. காம லதாவுடன் நல்லநாளில் கிரஹப்பிரவேசம் செய்தான். இதற்குப் பெயர்தான் பழம் நழுவிப் பாலில் விழுவது- தெரியுதா? 

அருங்கோடை ஆரம்பித்த பிறகு ஒருநாள் என் அழ குப்பெண் – அப்படிக் கூப்பிட்டால்தான் எனக் திருப்தி – குளக்கரையில் வந்து, ஒரு சண்பக மரத்தடி யில் ஒரு மைனாக்குருவியுடன் பேசி விளையாடிக்கொண் டிருந்தாள். பெண்ணைக் குளக்கரையில் பார்த்ததுதான் தாமதம். புயல் காற்றுப்போல் பழய காதல் ஞாபக மும் வந்துவிட்டது. காற்றுடன் அருகில் சென்று, ‘அழ குப் பெண்ணே! மருதாணி விரலெங்கே?’ என்றேன். ‘யார்?’ என்று வினவினாள். சுற்றுமுற்றும் பார்த்தாள் திகைப்புடன். 

‘காதல் பித்தன் சுபேதார் படுவெட்சிங்கின் ஆவி’ என்று அழுத்தமாய்ச் சொன்னேன். அவ்வளவுதான். மரத்திலிருந்து கீழே விழும் அணில்போல், தொப் பென்று கீழே விழுந்து மூர்ச்சையானாள். 

அன்று மத்யானம் தன் விடுதிக்குத் திரும்பி வந்த மானோஜி, மனைவியைக் காணாமல் மலைப்புற்று அங்குமிங் கும் தேடினான். குளத்தினருகில் கிடப்பதைக் கேள்விப் பட்டு வந்து பார்த்தான். பாவம் ! என்ன செய்வான்? 

ஆனால் என்னைப் பார்த்தாலும்தான் இரக்கம் வரவேண்டும்! வெறும் அழகுக்குத்தானே நானும் ஆசைப்பட்டேன் ? மானோஜி என்னைக் கொன்றது நியாயமா- நீ சொல்லு?… 

பிறகு காமலதாவின் முகத்தில் ஜலம் வாரி அடித் தான். அவள், ‘மருதாணி விரலெங்கே? அழகெங்கே?’ என்று கேட்டுக்கொண்டே எழுந்திருந்தாள். மானோஜி ராவுக்குத் தூக்கிவாரிப்போட்டது.கண்களில் நீர் தாரை யாய்ப் பெருகிற்று. நல்ல சமயம் வாய்த்ததென்று அசரீரி வாக்கில் ‘டேய் மானோஜி! இவ்வளவு நாள் காம லதா உன் மனைவி. இனி அவள் என் அழகுப்பெண். அவள் உள்ளத் தாமரையில் சுபேதார் படுவெட்சிங்கின் ஆவியாகிய நானே தேனீபோல் ரீங்காரம் செய்வேன். அம்முரளியின் தேன் கோப்பையைச் சூரையிட்டுக் கள் ளுண்டு தள்ளாடுவேன்.பணம் கிணம் இனி நீ செலவழிக் காதே. இவ்வளவுதான் உன் பொசிப்பு’ என்று சுட்டது போல் சொன்னேன். மானோஜி என்னவோ ஆகாசத் தைப் பார்த்துவிட்டு, ஏதோ முணுமுணுத்துக்கொண்டே பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விட்டான். 

மானோஜி மூடன் ; அஞ்ஞானி ; சொன்ன பேச்சைப் பொருட்படுத்தினால்தானே? ஊரிலிருக்கிற சித்த வைத் தியர், அரண்மனை வைத்தியர், ஆரிய வைத்தியர் எல் லோரையும் அழைத்து வைத்தியம் செய்தான். வியாதி யிருந்தாலல்லவா போகும்? பிறகு மந்திரவாதிகளின் கூட்டம். பாவம்! அழகுப்பெண்ணுக்கு எத்தனை அடி. உதை, பச்சை ஜலம் அபிஷேகம்! இதற்கெல்லாமா மசி வேன்? சூரியன் மேற்கே உதிக்கலாம்; மலைகள் சிறகு விரித்துப் பறக்கலாம் ; இந்த ஆவி மட்டும் அழகுப் பெண் சாகும் வரையில், அவள் ஆவியோடு ஆவியாய், ஒளியோடு ஒளியாய், கலந்திருப்பதைக் கலைத்துவிட யாருக்கும் எப்பொழுதும் முடியாது. நான் கிளி. அவள் கூண்டு. அவள் இறந்த பிறகும்கூட அநேக ஜன்மங் களாய், பகல் இரவைக் கட்டி அணையத் தேடி ஓடுவது போல், அவளையே தொடர்ந்து போகிறேன். அவளுக்குக் கணவனாகும் பாக்கியம் கிடைக்கவில்லை; வேறுவித நட்பும் ஏற்படவில்லை. 

இப்பொழுதும் அப்படித்தான்; சங்கிலி ! இதோ உனக்கு முன் நின்று பேசிக்கொண்டிருக்கிறாளே-இந்தச் சரீரம்தான் அழகுப்பெண்ணின் ஏழாவது ஜன்மம். அவளை மனைவியாய் அடையும் மட்டில் விடமாட்டேன். என்னை என்னவோ விரட்டி அடிக்கலாமென்று உன் கை வரிசையைக் காட்டாதே சங்கிலி! இந்த இடத்தில் பலிக் காது. இவள் என் அழகுப்பெண்!மருதாணி விரலெங்கே? அழகெங்கே?’…… 

இப்படிச் சொல்லி முடித்தாள் அந்தப் பெண்.பிறகு தன் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த பித்தளைச் சங்கிலியைக் கழற்றித் தடாரென்று எறிந்துவிட்டு, அப்படியே ஓடிவிட்டாள். ராமு தீக்ஷதர் முகத்தில் எமதரிசனம் கிடைத்தால் எவ்வளவு திகிலுண்டோ அவ்வளவும் எழுதியிருந்தது. 

‘ஹும்’ என்று சங்கிலிச்சாமியார் பெருமூச்சுவிட் டார். ராமு தீக்ஷதரைப் பார்த்து ‘இவள் தானய்யா நாம் பேசிக்கொண்டிருந்த பெண்!’ என்று பித்தளைச் சங்கிலியை மூன்று தரம் குலுக்கிவிட்டு எழுந்திருந்து போய் விட்டார். 

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *