மரண நாள் வாழ்த்துகள்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2025
பார்வையிட்டோர்: 7,203 
 
 

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நரேனின் மரண நேரம் பிற்பகல் ஒன்று முப்பதுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கின்றது என்பதால் முன்னதாகவே வீட்டுக்கு சென்று விடலாமென அவன் நினைத்தான். அங்கு தனக்காக காத்திருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து மகிழவும், இறுதியாக அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிடவும் போதுமான அவகாசம் இருக்கிறது என்ற நிம்மதியுண்டானது.

இப்படியான இக்கட்டான சமயத்தில் அவன் இன்று அலுவலகம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் சம்மந்தப்பட்ட அனைத்து பணிகளையும் நேற்றே முடித்து வைத்திருந்த போதிலும் மேலாளர் வராத காரணத்தால் இன்றைக்கு வந்து அவற்றை அவரிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது அலுவலகத்திலிருந்த சக ஊழியர்களான நண்பர்கள் அனைவரும் இன்றைக்கு அவனது வீட்டுக்கே வந்து மரண நாள் வாழ்த்து சொல்வதாக இருந்தது. அதற்காக அவர்கள் ஏற்கனவே சில மணி நேர அனுமதியையும் பெற்றிருந்தார்கள். ஆனால் அவன் இன்றைக்கு அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இங்கேயே சிறிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அவனை திக்குமுக்காட செய்து விட்டார்கள்.

இதில் நந்தினி நடந்து கொண்ட விதம் அவனை பெரிதும் பாதித்தது. உதவி மேலாளராக இருந்த அவள் ஆண்களுடன் அதிகம் பழகக்கூடியவளல்ல. பணி நிமிர்த்தமாக பேசுகிற ஒரு சில வார்த்தைகளோடு சரி. மற்றபடி தன்னுடைய வேலையில் தீவிரமாக இருக்கக்கூடியவள். ஆயினும் இன்று காலை முதல் அவளுடைய முகம் விவரிக்க இயலாத உணர்ச்சிகளால் சூழப்பட்டிருப்பதை அலுவலகத்தில் இருப்பவர்கள் கவனித்திருக்கக் கூடும். நரேன் அவளது கேபின் முன்னே வந்து நின்றதும் சட்டென்று எழுந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் இப்படி செய்வாளென்று கொஞ்சமும் எதிர்பார்க்காத நரேன் திணறிப்போனான். அணைப்பிலிருந்து விலகியதும் அவளின் கண்களை ஆழ்ந்து கவனித்தான். அவற்றில் பலகாலமாய் அவன்மீது கொண்டிருந்த அதீத காதலை கண்டறிய முடிந்தது. ”ஐ மிஸ் யூ” என்று மட்டும் சொல்லி விட்டு தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள்.

அலவலகத்தைவிட்டுக் கிளம்பிவர அவனுக்கு மனமே இல்லை. இன்னும் கொஞ்ச நேரம் எல்லோருடனும் உரையாடிக்கொண்டிருக்கலாம் என நினைத்தான். அதிலும் குறிப்பாக நந்தினியிடம் மனம் விட்டுப் பேசயிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. இப்படி நினைத்ததும் அவனுக்கு சங்கீதாவின் ஞாபகம்வரத் தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டான்.

நகரத்தை விட்டுத் தள்ளி வந்திருந்ததால் சுத்தமான காற்றைச்சுவாசித்த உற்சாகத்தோடு வண்டியை ஓட்டியவன் சாலையோரத்தில் இருக்கிற சின்ன சின்ன கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் வார மாத இதழ்களைக் கண்டதும் சற்று யோசனையோடு தன் வேகத்தைக் குறைத்தான். திருவிழா பத்திரிக்கையின் புதிய பிரதி கடையில் தென்படுவதைப் பார்த்ததும் அதில் அவனது ஆதர்சன எழுத்தாளர் எழுதி வரும் தொடர் குறித்தான சிந்தனை உதிர்த்தது. அத்தொடரை ஆரம்பம் முதலாகப் படித்து வருகிறான். அவ்வெழுத்தாளரின் ஏனைய படைப்புகள் போலவே இதுவும் அவனை வெகுவாக கவர்ந்திழுக்கக் கூடியதாகவே அமைந்திருந்தது. மரணத்தைச்சந்திக்கப்போகும் இந்த கடைசி நேரத்தில் அவருடைய புத்தம் புதிய எழுத்தை வாசித்துவிட்டுக் கடந்து போவது நிறைவான அனுபவமாகவே இருக்குமென எண்ணினான். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு ஒரு கடைக்குச்சென்று பத்திரிக்கையை வாங்கி பைக்கின் மீது சாய்ந்து நின்றவாறு அக்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான். படிக்கப் படிக்க சென்ற வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இடம் நினைவுக்கு வந்து இவை அதன் தொடர்ச்சியாக மனதுக்குள் ஓடி விறுவிறுப்பாக ஐந்து பக்கங்களையும் படித்து முடித்ததும் மனநிறைவு உண்டானது.

புத்தகத்தை மூடி டேங்க் கவருக்குள் வைத்துவிட்டுப் புறப்பட யத்தனித்தபோது அக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் கடைக்காரர் பேசும் ஏதோவெரு விசயம் அவனை ஈர்க்கவே, சற்று உன்னிப்பாக அவர்களின் உரையாடலைக் கவனித்தான். பரிதாபத்துக்குரிய மனிதனாகவே தென்பட்ட அந்த ஒல்லியான வாடிக்கையாளன் ஏற்கனவே தரவேண்டிய பாக்கியைத் தராமல் மறுபடியும் வந்து கடன் கேட்பதைக் கண்டிக்கும் விதமாகக் கடைக்காரர் சத்தம் போடுகிறார் எனப் புரிந்தது. அது சமயம் கடையினருகே நின்று கொண்டிருந்த இன்னொரு மனிதர் அவனுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்புமாறு சொல்லிவிட்டு, பாவம் அவன் அடுத்த வாரம் மரணநாள் விழா கொண்டாடப்போகிறான் என்ற செய்தியையும் சொன்னார். கடைக்காரரின் முகம் இரக்கவுணர்ச்சிக்கு மாறியது. அவன் கேட்டதைவிட அதிகமான பலகாரங்களைப் பேப்பரில் கட்டிக்கொடுத்து அனுப்பினார்.

உற்சாகத்தோடு வாங்கிப்போகிற அந்த ஒல்லி மனிதனை நரேன் பார்த்தவாறு இருந்தான். இன்று, தான் விடைபெறுவதுபோல அதுத்த வாரம் அவன் விடைபெற போகிறான் என்று நினைத்தபோது இத்தகைய மரணநாள் கொண்டாட்டம் குறித்து அவனுடைய ஆதர்சன எழுத்தாளர் எப்பொழுதோ எழுதியிருந்த கட்டுரையொன்றின் ஞாபகம் வந்தது. அக்கட்டுரையின் சாரம் அவனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் நெற்றியில் அது மரணிக்கும் நாளும் நேரமும் சிகப்பு நிறத்தில் பச்சைக் குத்தியது போன்று பதிந்திருக்கும் என்றும் அது இருபத்தி நான்கு மணி நேரம் அதன் நெற்றியில் அப்படியே இருந்து, பிறகு தானே மறைந்துவிடும் என்னும் அடிப்படை உண்மையிலிருந்து கட்டுரை ஆரம்பிக்கும். இந்நேர கணக்கை வைத்தே ஒருவனது வாழ்நாள் பலங்களை ஜோதிடர்கள் கணிப்பார்கள். குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு இறுதியில் மயானத்தில் காரியம் நடத்துவது வரையில் அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த இறக்கும் நாள் குறிப்புகளையே பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது போன்ற நிறைய விசயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கும்.

மேலும் மரணமடையும் நாளும் நேரமும் தெரியுமே தவிர மரணம் எப்படி சம்பவிக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாது என்ற உண்மையைச்சொல்லி வயோதிகம், நோய், விபத்து, கொலை, தற்கொலை என்று எப்படி வேண்டுமானாலும் நேரலாமென விளக்குகிற எழுத்தாளர் இறுதியில் ஒரு விசயத்துக்காக ஆதங்கப்படவே செய்கிறார். தன்னுடைய மரண நாளைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிற மனிதர்களும் இவ்வுலகில் இருக்கவே செய்கிறார்கள், என்பதே அவருடைய ஆதங்கமாகும். அவர்கள் மனப்பிறழ்வடைந்தவர்களும் அனாதைகளுமே என்று சொல்லி கட்டுரையை நிறைவு செய்திருப்பார்.

நரேன் கை கடிகாரத்தைக் கவனித்துவிட்டு வழக்கமாகச்செல்கிற பாதையை விடுத்துக் குறுக்கு வழியொன்றில் வண்டியைச்செலுத்தினான். பெட்டிக்கடையில் நிறுத்தி புத்தம் வாங்கியதில் சற்றுத் தாமதமானதே தவிர அப்படியொன்றும் அதிக நேரமாகிவிடவில்லை. இருப்பினும் வீட்டில் காத்திருப்போர் கவலையுறுவார்களே என்ற நினைப்போடு வண்டியைச்சற்று விரைவாக ஓட்டவும் செய்தான். தூரம் செல்ல செல்ல வெறிச்சோடிக் கிடந்த அச்சாலை சட்டென்று பரபரப்புக்கு உள்ளாவதை அவனால் அவதானித்திட முடிந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் கட்சிக் கொடிகள் தோரணமாகக் கட்டப்பட்டிருக்க இடையிடையே கும்பிடும் தோற்றத்தில் இருக்கிற ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஊன்றிக் கவனித்ததும் அவர் நாளை மரண நாள் கொண்டாட இருப்பதால் இன்றைக்கு மக்களைச்சந்திக்கும் பிரிவு உபசார விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் என அறிய முடிந்தது.

இன்னும் கொஞ்சம் தொலைவு சென்றதும் கரைவேட்டி மனிதர்களை அதிகம் காணமுடிந்தது. அதைவிட அதிகமாக போலீஸ்காரர்கள் கண்ணில் பட்டார்கள். ஒலிபெருக்கிகளில் பிரச்சாரப் பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன. பக்கவாட்டில் சொற்ப தூரத்தில் போடப்பட்டிருந்த அலங்கார மேடையை அவன் பார்த்தான். இரண்டு போலீஸ்காரர்கள் அவனது வண்டியைத் தடுத்து நிறுத்தி ரோடு பிளாக் செய்யப்பட்டிருப்பதால் மாற்றுபாதையில் போக வேண்டுமெனச்சொன்னார்கள். அவனுக்கு சலிப்பாக இருந்தது. வழக்கமான பாதையில் போகாமல் விரைவாகச்சென்றிட வேண்டும் என்பதற்காக இவ்வழியே வந்த தன்னுடைய அவசரப் புத்தியை நொந்தபடியே வண்டியைத் திருப்பினான்.

ஒலிப்பெருக்கிகளின் ஓசை கேட்காத தொலைவுக்கு வந்த பிறகே அவனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்தது. வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வாட்டர் கேனை எடுத்துத் தண்ணீர்க் குடித்தான். பிறகு புறப்பட முற்பட்டபோது அலைபேசி அலறியது. எடுத்து யாரெனப் பார்க்க அதில் சங்கீதவின் உருவத்தைக் கண்டதும் முகம் பூரித்தான். அவன் ஹலோ சொல்லி முடிப்பதற்குள் அவள் படபடவென்று பொரிந்து தள்ளினாள். வீட்டில் அவனுக்காக எல்லோரும் காத்திருக்கையில் அவன் ஏன் இன்னும் வரவில்லை என்றும், அவள் அவனுடைய வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பூங்காவில் காத்திருப்பதாகவும், உலகிலேயே காத்திருத்தல் போன்று கொடுமையான காரியம் வேறொன்றுமில்லை எனவும் சொல்லிப்போனவள் பின் விசும்பத் தொடங்கிவிட்டாள். அவளைச்சமாதானப்படுத்தியவன், உடனே வருவதாகச்சொல்லி போனை வைத்தான்.

சங்கீதா அவனது அலுவலகத்துக்கு அருகேயிருக்கும் நூலகத்தில்தான் முதன் முதலாக அறிமுகமானாள். மஞ்சள் நிறமேனிக்கு அழகு சேர்ப்பதுபோல அவள் உடுத்தியிருந்த சிகப்பு நிற சுடிதாரில் அன்று ஒரு தேவதையாகக் காட்சியளித்தாள். புத்தகங்களைத் தேர்வு செய்வதில் அவனுடைய விருப்பமும் அவளுடைய விருப்பமும் ஒத்துப்போனதால் இருவருக்குள்ளும் மிக எளிதாக நட்பு மலர்ந்தது. அவர்கள் இலக்கியம் குறித்து நிறைய பேசினார்கள். காவேரி ஆற்றுப் பாலமும், மத்திய பேருந்து நிலையத்துக்குப் பக்கமாக இருக்கும் பூங்காவும் அவர்களது காதலை வளர்த்தன. ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திடவே முடியாது என்ற நிலை உருவான பொழுதில்தான் மரண நாள் பற்றிய நினைப்பே அவனுக்கு வந்தது. சங்கீதா துடித்துப் போனாள். கதறியழுதாள். இவனாலும் வேதனையைத் தாளமுடியவில்லை.

சிந்தனைகள் தீவிரமாகச்சுழன்று கொண்டிருக்கும் அவ்வேளையில் அந்த விபரீதம் நிகழ்ந்தது. சாலையைக் கடக்க முயன்ற பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தித் திடீரென்று அவனது வண்டிக்கு எதிராக வந்து தடுமாறினாள். சூழ்நிலையின் பயங்கரத்தைத் துரிதமாய் உணர்ந்த நரேன் தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து பிரேக்கை ழுத்தியதும் வண்டி டயர் தேய ஓடி பின் சரிந்து விழ அவன் இரண்டு மூன்று முறை உருண்டு தள்ளிப்போய் விழுந்தான்.

குப்பென்று நெஞ்சையடைக்க கரிய நிழல் கண்ணை மறைத்ததும் சரி நமது கதை முடிந்தது என்றே அவன் நினைத்தான். ஒரு மணி நேரம் முன்னதாகவே மரணம் வந்திருக்கிறது என்னும்போது ஒருவேளை தன்னுடைய மரண குறிப்பில் ஏதேனும் பிழை நேர்ந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசனையோடியது. ஆயினும் அப்படியேதும் அங்கே நடந்துவிடவில்லை. தூசியைத் தட்டிவிட்டு எழுந்து நின்று பார்த்ததும் சின்ன சின்ன சிராய்ப்புகள் மட்டுமே அவனுடலில் ஏற்பட்டிருக்க. லேசாகக் குருதி கசிந்து கொண்டிருந்தது.

சில மனிதர்கள் ஓடிவந்து அவனுக்கு உதவினார்கள். சிலர் வண்டியைத் தூக்கி நிறுத்தி ஓரமாகக் கொண்டு போனார்கள். அவனுடைய கண்கள் அந்த சிறுமியைத் தேட அவள் சாலையோரமாக நின்றிருந்தாள். பயத்தோடு ஓடிவந்திருந்த அவளுடைய தாயார் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க நரேன் அங்கு சென்று அடியேதும் பட்டுவிட்டதாவெனக் கேட்க, அவர்கள் இல்லையென்றதும்தான் அவனுக்கு உயிரே வந்தது. நரேன் அச்சிறுமியிடம் அவளுடைய மரண நாள் எப்பொழுது என்றான். அதற்கு அவள் இன்னும் எழுபது வருடம் சென்று வரக்கூடிய ஓர் ஆண்டைச்சொன்னாள். தன் மகளுக்கு எண்பது வயது வரை ஆயுள் இருக்கின்றபோதிலும் விபத்தில் அடிபட்டு ஏதாவது ஊனமாகிவிட்டால் பெண் பிள்ளையைக் கரைசேர்ப்பது கஷ்டமாகிவிடும் என்றும், நல்ல வேளையாகக் காப்பாற்றிவிட்டதாகச்சொல்லி அச்சிறுமியின் அம்மா நன்றி தெரிவித்தாள். அத்தோடு அவன் நீண்ட காலம் நன்றாக இருக்கணும் என்று வாழ்த்தவும் செய்தாள்.

நரேன் மெலிதாய் புன்னகைத்தான். இன்றோடு தன் வாழ்க்கை முடியப்போகிறதை அவன் சுட்டிக்காட்டியதும் அத்தாயின் முகம் மாறியது. ஆனாலும் அவனுக்கு வாழ்த்து சொன்னாள். அச்சிறுமியும் வாழ்த்தினாள். அங்கிருக்கும் மற்றவர்களும் அவனுக்கு மரண நாள் வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஒருவன் வண்டிக்கு ஏதும் ஆகவில்லை, நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்ல, நரேன் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் வீட்டை நெருங்கியபோது பிற்பகல் ஒன்று ஐந்து ஆகியிருந்தது. சங்கீதா சொன்ன மாதிரியே அவனது வீட்டுக்கு சமீபத்திலிருக்கும் பூங்காவில் காத்திருந்தாள். அவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதற்குள் ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவ்விடமிருக்கிற ஒருசில மனிதர்களைப் பற்றி அவள் கவலையேதும் கொள்ளவில்லை. இதுவரை ஒவ்வொரு சந்திப்பின் போதும் அவர்கள் எவ்வளவோ பேசியிருக்கிறார்கள். இரைச்சல் மிகுந்த இடங்களில் கூட தாழ்வான குரலில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறார்கள். ஆனால் இன்று வார்த்தைகள் ஏதும் கிடைக்காமல் தடுமாறும் நிலையே ஏற்பட்டது. அவசரமாக கண்ணீர் துளிகள் மட்டுமே கீழிறங்கிக்கொண்டிருந்தன. போகட்டுமாவென அவன் கேட்டான். அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிற திராணி தனக்குக் கிடையாது என்பதால் அவள் பதிலேதும் சொல்லாமல் அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தவாறு இருந்தாள். அவளை விட்டு விலகி இரண்டடி நகர்ந்த நரேன் மறுபடியும் நெருங்கி வந்து அவளுடைய உதடுகளை ஆவேசத்துடன் கவ்விக் கொண்டான். மிக அழுத்தமாகக் கொடுக்கப்பட்ட அந்த முத்தத்தின் காரணமாக இரண்டி பேரின் சுவாசமும் மேலும் கீழுமாக ஆட்டம் கண்டது.

தான் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அவள் தன்னுடைய வீட்டுக்கு வந்து தன் மரண நாள் விழாவில் கலந்துகொள்ளமுடியாது என்று அடம் பிடிப்பது அவனுக்குச்சற்று வருத்தத்தைக் கொடுத்தாலும், தன்னுடைய மரணத்தை நேரில் காணும் மனதிடம் இல்லாத காரணத்தினாலே அவ்வாறு நடந்து கொள்கிறாள் எனத் தெரிந்ததால், கட்டாயப்படுத்தி அழைத்துத் துன்புறுத்த வேண்டாமென்ற நினைப்போடு அவன் அங்கிருந்து கிளம்பினான்.

தன் அலைபேசியில் தெரியும் ஏகப்பட்ட தவறிய அழைப்புகளைப் பார்த்தவாறே நரேன் வீட்டுக்குள் நுழைந்ததும் அவனது அப்பா விரைந்து வந்து இப்படித் தாமதப்படுத்திவிட்டாயே எனக் கவலைக்கொண்டார். சகோதரி ஓடிவந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். சின்ன விசயத்துக்கெல்லாம் உணர்ச்சி வசப்படும் அம்மாவை சமாளிப்பதுதான் அவனுக்கு சிரமமாக இருந்தது. தளதளத்த குரலோடு கண்ணீர் சிந்த அவள் அவனை இறுகத் தழுவிக்கொண்டாள். கூட்டத்தின் மத்தியில் பெரிய அளவிலான கேக் வைக்கப்பட்டு, சுற்றிலும் உறவினர்களும் நண்பர்களும் நின்று குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார்கள். நேரம் நெருங்கிவிட்டதால் சீக்கிரமாக கேக்கை வெட்டுமாறு அவன் பணிக்கப்பட்டான். கேக்கை வெட்டி முதல் துண்டை அம்மாவுக்கும் பிறகு அப்பாவுக்கும் தங்கைக்கும் கொடுத்தவனுக்கு அம்மா ஊட்டி விட்டாள். எல்லோரும் கூட்டாகச்சேர்ந்து மரணநாள் வாழ்த்துப் பாடினார்கள். நரேன் அம்மாவையும் அப்பாவையும் ஒருசேர நிற்க வைத்துக் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

மணி ஒன்று இருபது. இன்னும் பத்து நிமிடங்களே இருக்க மரணம் எந்த விதத்தில் அணுகப்போகிறது என்ற வியப்பும் தவிப்பும் எல்லோரிடமும் நிறைந்திருந்தது. நரேனுக்குள் இதுவரை இல்லாத ஏதோவொரு வகை பயம் மெல்ல மெல்லப் பரவியது. உடலே லேசாகிக் காற்றில் மிதப்பது போன்ற பிரமை உண்டாது. சுற்றி நிற்கும் மனிதர்களை சரிவரப் பார்த்திட முடியாமல் கண்ணீர் திரையிட்டு மறைத்தது. அதே நேரம் அவனது அலைபேசி சிணுங்கவே எடுத்துப்பார்த்தான். அமெரிக்காவிலிருக்கும் அவனது நெருங்கிய நண்பன் அருணின் அழைப்பு என்றதும் குதூகலமடைந்தான்.

அலைபேசியில் நண்பனது குரல் தெளிவாகக் கேட்காததால் வீட்டை விட்டு வெளியே வந்தவாறு பேசப்பேச குரல் துல்லியமானது. அருண் மரணநாள் வாழ்த்துச்சொன்னான். அதற்கு அவன் நன்றி சொல்லிக்கொண்டிருக்கையில் சாலையில் இங்குமங்குமாகத் தறிக்கெட்டு ஓடிவந்த சரக்கு லாரி ஒன்று அவனிருக்குமிடத்தை நெருங்கி விட்டதைத் தலைதூக்கிப் பார்த்து அதிர்ந்தான்.

அதே நேரம். சங்கீதா மிக உயரமான மேம்பாலம் ஒன்றின் கட்டை சுவரின் மீது ஏறி நின்றாள். ஒரு கணம் கீழே குனிந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களையும் மனிதர்களையும் கவனித்தாள். பிறகு கண்களை இறுக மூடிக்கொண்டு அங்கிருந்து குதித்துவிட்டாள். காற்றில் மிதந்து சென்று சாலையில் விழுந்து ரத்த சகதியானாள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, இவ்வளவு நாளும் கோமாவில் கிடந்த சங்கீதாவுக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்பியது. துயரத்தைத் தூக்கிச்சுமக்கும் ஒவ்வொரு காட்சிகளும் அவளது ஞாபகத்திரையில் தோன்றி மறைந்தன. மருத்துவரொருவர் அவளிடம் நெருங்கி வந்து அவளின் மரணநாள் எப்பொழுதுவெனக் கேட்டார். சங்கீதா தனக்குள் சிதைந்து போனாள். அவளிடமிருந்து பீறிட்டுக்கொண்டு இவ்வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

எனக்குத் தெரியாது.

இதயா ஏசுராஜ் முகவரிஇதயா ஏசுராஜ்,பூக்கடை, வன்னியர் தெரு,கல்லக்குடி அஞ்சல்,லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்,அ.கு.எண்; 621 652அலை பேசி- 9715041385Idhayayesuraj@gmail.com தன் நிலை விபரங்கள்பெயர் ; ஐ. ஏசுராஜ்புனைப்பெயர் ; இதயா ஏசுராஜ்பிறந்த ஊர் ; கல்லக்குடி, திருச்சி மாவட்டம்கல்வித்தகுதி ; ப்ளஸ் 2 புத்தக ஆக்கங்கள் 1. இல்லம் சொர்க்கமாக [கட்டுரை ] -20082. மனிதனின் தேடலும் மகத்தான வெற்றியும் -20093. உலக மாமேதை அண்ணல் அம்பேத்கார் -20104. மேஜிக் செய்வது எப்படி…மேலும் படிக்க...

4 thoughts on “மரண நாள் வாழ்த்துகள்

  1. வித்தியாசமான கதைக் கரு அருமை அழகான எழுத்து நடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *