மண்ணில் தெரியுதொரு தோற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2026
பார்வையிட்டோர்: 3,529 
 
 

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம் – 11

யாழ்ப்பாணம் வந்து இரண்டு நாட்களாகியும் ஜானகி முகத்தில் மகிழ்ச்சி இல்லை. தனியாக ஏதோ சிந்தனை யிலாழ்ந்திருப்பதும், அரவங் கேட்டால் ‘திடுக்’ கிட்டு எழுந்து கொள்வதுமாக இருந்தாள். அவள் திருக்கோலமே மாறிவிட்டது. பேச்சுக் கொடுத்தால் இரண்டு வார்த்தை சுருக்கமாக முடித்துக் கொள்வாள். பின்பு மௌனம்.

அவள் போக்கைக் கவனித்த பொன்னையரின் உள்ளம் பதகளித்தது. ‘ஜானகிக்கு அப்படி என்ன நேர்ந்து விட்டது என்று தனக்குள் கறுவிக் கொண்டார்.

‘ஒருவேளை அவன் பொன்ராசாவின் பித்து இவளுக்குப் பிடித்து விட்டதோ?’

அவர் மனசில் பல் தொடர்பான நினைவுகள் கிளர்ந்து அவரை ஆட்கொண்டன.

ஒரு தடவை கனவு கண்டு அடித்துப் புரண்டு குழறி எழுந்தவளை அவர் தேற்றியபோது அவள் கூறிய வார்த்தைகள்…

அவள் படுக்கையருகே சென்ற அவர், அவள் முகத்தைத் தாபத்தோடு பார்த்து, “பிள்ளை ஜானகி, உன் மனசுக்குள் ஏதோ இருக்கு என்ன வந்தாலும் காரியமில்லை; மனந்திறந்து துணிந்து சொல்லு” என்று கேட்டிருந்தார்.

ஜானகி, ‘அப்படி ஒன்றுமில்லை’ என்று கூறுவது. போல் தலையசைத்தாள்.

“அப்போ,ஏன் பிள்ளை அழுதனி?”

“காலையில் வந்துதே செய்தி, அதுதான்”

‘பொன்ராசாவைக் கைது செய்ய, பொலிஸ் தேடி அலைகின்றது’ என்று அன்று காலைப் பத்திரிகையில் வந்த செய்தி அவருக்குத் தெரியும். அவர் சிரித்துக்கொண்டே, ”அந்தச் செய்தி பொன்ராசாவைப் பற்றியது, உனது கணவரைப் பற்றியல்லவே” என்றார்.

அதற்கு அவன் கூறிய பதில் தான் அவரை ‘மலைக்க’ வைத்தது.

“நான் அவரைப்பற்றி யோசிக்கவில்லை; பாவம், பொன்ராசாவை நினைக்கத்தான். வருத்தமாயிருக்கிறது”

‘இது, திருமணம் செய்த ஒருபெண் வாயில் வரக் கூடிய வார்த்தையா? இப்பவும் அவன் சிந்தனையில் தான் இவள் மூழ்கியிருக்கிறாளோ?’

“ஜானகி, கண்டிக்குச் சென்று வந்தபின் உனக்கு என்ன பயித்தியமா பிடித்திருக்கிறது?”

சற்றுக் ‘கடுகடு’ த்துக் கேட்டார் பொன்னையர்.

”எனக்குப் பயித்தியமில்லை. கியித்தியமுமில்லை. என்னை வீணாக அலட்டி உபத்திரப்படுத்த வேண்டாம்”

ஜானகி சினந்தாள். பொன்னையர் வாயடைத்து நின்றார். அவர் மனசு வேகமாக அடித்துக் கொண்டது.

‘இவள் ஓர் ஆண்பிள்ளையாகப் பிறந்திருந்தால் இந்தத் தவிப்பு எனக்கு வந்திருக்காதே’

அவர் நெஞ்சு அவருள் குதறியது. ஆயினும், தந்தை ஸ்தானத்திலும், தாய்ப்பாசத்திலும் அவளை அரவணைக்கின்ற பொறுப்பை உணர்ந்தார்.

‘இவள் தாய் மட்டும் இன்று உயிரோடு இருப்பாளே யானால்…’

மனைவியின் நினைவு சூறையாக எழுந்து அவர் நெஞ்சைத் துருத்திற்று: கண்கள் கலங்கின; மனம் கரைந்து விம்மியது. ‘என் உயிரோவியத் திலகமணி’ என் தேகங் குதற அழுதே விட்டார்.

“பிள்ளை ஜானகி, நீ கண்ணீர் விட வென்று உன் அம்மா எனக்குச் சொல்லவில்லை; அவள் உன் சந்தோஷ வாழ்வுக்கு என்னை அடைக்கலம் வைத்து விட்டுப் போனவள். அப்படிப்பட்ட என்னை இப்போ கண்கலங்க வைக்கிறியே? அம்மா உயிரோடு இருந்தால் நீ என்னை இப்படி யெல்லாம் சித்திரவதை செய்வாயா?”

அப்படிக் கேட்கும் போதே அவர் கண்களிலிருந்து பொலு பொலு’த்துக் கண்ணீர் கொட்டியது.

தந்தையின் தவிப்பையும் தாயின் ஆசைக்கனவுகளையும் நினைத்த மாத்திரத்தில், தன்னுள்ளடங்காத திமிற லோடு, “ஆ என்ர அம்மா!” என்று பெருங் குரல் வைத்து அழுதாள், ஜானகி.

ஒருவருக்கொருவர் தேறுதலின்றித் தவித்துக் கொண்டு தந்தையும் புதல்வியும் அழுது தீர ஒரு நிமிஷம் எடுத்தது.

தனது மனசுள் அலைபாயும் நினைவுகளைச் சுதந்திரமாக வெளியிட்டுச் சுமையாற்றத் தன்னைப்பெற்ற அன்னை இப்பொழுது இல்லையே என்ற விசனதாபம் ஜானகி நெஞ்சை அப்போது ஊனித்துக் கொண்டது.

‘உலகத்தின் சகல ஜீவாற்றுமக்களையும் பிரசவித்துப் பேணியவள் தாய். தாயின் நெஞ்சுக்குள்ளிருப்பது இதயமல்ல; அன்புத்தேனின் இரக்கவூற்றுச் சுரங்கம். இதில் சங்கமித்தவர்களே பாக்கியவாளர்; நானோ அந்தப் பாக்கியம் இல்லாத கருமக்காறி…”

”அம்மா இருந்தால் எனக்கும் இவ்வளவு துன்பம் நேர்ந்திரூக்காது”

புத்திரியின் வார்த்தைகள் அவரின் இதயத்தை வலுவாக ஊடுருவிக் குத்தின.

“அப்படியானால், நான் ஓர் இரக்கமில்லாத கொடுவினைக்காரனென்றா நினைத்தாய்?”

கேட்கும் போதே அவர் தொண்டை ‘கரகர’த்தது. நெஞ்சினுள் குமுறி எழுந்த பெருமூச்சு, பம்மி வெளியேறிற்று.

“நான் அப்படிச் சொல்லவில்லை. அம்மா போல் பாசம் வைத்தளவிற்கு, என் மனசை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே?”

இதற்குமேல் அவள் பேசவில்லை. அன்பு சுரந்த ஒரு தந்தையின் மனசைப் புண்படுத்தக் கூடாது என்ற பரிவோடு அவரை நோக்கினாள்.

“நீ வாய் திறந்து எதையும் சொன்னால்தானே புரிந்து கொள்ளலாம். சரி, உன் மனசுக்குள்ளே அப்படி என்னதான் இருக்கிறது, சொல்லு?” என்று சிறு குழந்தைபோல் மகளிடம் கேட்டார்.

அவள் அப்பவும் தடுமாறினாள். ‘அளவுக்கு மீறிய பாசமே ச கல். துன்பங்களுக்கும் காரணம்’ என்று நினைத்த ஜானகி “நீங்கள் மட்டும் எனக்காக இப்படித் தவிக்காமலிருந்தால், நான் எப்பவோ என் குடும்ப வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டிருப்பேன்” என்றாள்.

ஜானகியின் புதிரான வார்த்தைகளுக்கு அவர் மனசு அர்த்தம் தேட, அவர் இதயம் தானாக இடித்துக் கொண்டது. முகத்தில் சலிப்பு.

இதற்கு மேல் அவளிடம் எதையும் ‘துருவி’ க் கேட்க அவர் விரும்பவில்லை. என்னவோ விசாரிக்க எதையெல்லாமோ அர்த்தப் படுத்திப் புலம்பும் பெண்ணிடம் ஒன்றையும் தெரிந்து விடமுடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தார். ஆனால், அவர் மனசில் எழுந்த கேள்விகள் அவரை அமைதி கொள்ளவிடாமல் குடைந்து கொண்டிருந்தன.

முன்பு கண்டிக்குப் போய் வந்தால் எவ்வளவோ குதூகலமாயிருப்பாள். அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மலைநாட்டுப் பிரதேசத்தின் இயற்கைக் காட்சிகளையெல்லாம் வர்ணித்து மணிக் கணக்காகக் கதை சொல்வாள். இன்று? இன்ஸ்பெக்டரும் ஒரு வார்த்தை பேசாமல் ‘டியூட்டி’ க்குப் போய்விட்டாரே?

விரிவுரையாளர் சொன்ன வார்த்தைகளை அப்போது பொன்னையர் நினைத்துப்பார்த்தார்:

“ஜானகிக்கு நாங்கள் ‘சடங்கு’ செய்து வைத்தோம். ஆனால், அவளோ இன்னும் ‘திருமணம்’ புரியவில்லை?”

“என்னது, ஒன்றும் விளங்கவில்லையே?”

“ஜானகி சடங்கு செய்தது ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரை, அவள் மனசுக்கு உவப்பான ஒருவரையல்ல”

“அப்படியென்றால்?”

“நாங்கள் அவள் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டோம்”

“ஏன், எப்படி?”

“பொன்ராசாவையே அவளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கவேண்டும்”

விரிவுரையாளர் அன்று சொன்னதையும் ஜானகி இன்று சஞ்சலிப்பதையும் வைத்து பொன்னையர் தராசு பிடித்தார்.

‘சடுதி’யாக நாய் ‘அவுக்’ கென்று குரைத்தது.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் ஒரு ‘குட்கேஸ்’ சகிதம் அவசரமாக வந்து கொண்டிருந்தார். வாசற்படி கடந்து போகும் போது அவர் கடைக்கண்கள் ஜானகியை மேய்ந்தன.

அவள் கன்னம் உப்பிப் போயிருந்தது. ஒன்றும் பேசாமல் மெதுவாகக் குசினிக்குள் சென்றாள்.

ஜானகி சாப்பாடு தயாரித்துக் கொள்ளும்வரை அவர் உன்னிப்பாகப் பார்த்துவிட்டு, சாப்பாட்டு அறையின் மேசையண்டை அவள் வரும்போது சிரித்தபடி சொன்னார்.

“எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம்”

“ஏன்?”

“உள்ளே அந்தச் சூட்கேஸைத்திறந்து ஒரு போத்தல் எடுத்துக் கொண்டு வா”

“இன்று சம்பள நாளில்லையே?”

அவர் ‘கடகட’ வென்று சிரித்தார்.

“சிலவேளை நாம் சம்பளத்தையே எதிர்பார்ப்பதில்லை. அது தானாகவே ‘கிம்பளமாக’ வந்து விடுகிறது. ஒரு பொலிஸ் டிப்பாட்மெண்டில் அதிகாரியாக இருக்கிறவரின் வீட்டுக்கு – உனக்கு இது கூடத் தெரியாதா? ஒ, நீதான் இப்போ வீட்டுப்பெண்ணாக இருப்பதில்லையே”

‘வீட்டுப் பெண்ணாக இருப்பதில்லை’

இந்தக் குத்தல் ஜானகியை வலுவாகத் தாக்கியும், அவர் அந்த வார்த்தையை என்ன கருத்தோடு பிரயோகித்தார் என்பதிலேயே அவள் சிந்தனை மூழ்கிற்று.

‘நான் வீட்டுப் பெண்ணாக இல்லாமல் உங்கள் கண்களுக்கு எப்படித்தெரிகிறேன்?’ என்று விடுத்துக் கேட்க, அதற்கு அவர், ‘நீ எனக்கல்ல, பொன்ராசனுக்குத்தான் வீட்டுக்காரி’ என்று எடுத்த எடுப்பில் பதிலளிப்பாராயின். அதுவே பெரும் பூகம்பத்தில் கொண்டு போய் விடும் என்று யூகித்தாள். என்றாலும், அவர் மனநிலையை அவர் வாயால் கேட்பதே உசிதம் என்ற ஓர் விபரீத நினைவு அவளைக் குடைந்தது.

“நான் உங்கள் வீட்டுப் பெண்ணாகயில்லாமல். வேறு எப்படி இருக்கிறேன்?”

ஓர் அசட்டுத் துணிவோடுதான் கேட்டாள்.

‘நீ, உலக விவகாரக்காரி, வீட்டுக்காரியல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நீ அவன் பொன்ராசனுக்குத் தான் தோது’ என்று சொல்ல உடனே அவர் வாய் உன்னியது. எடுத்த வாக்கில் அப்படி உதறி எடுத்துப் புட் டுக் காட்டினால், அந்தக் காட்டுதலே அவள் இதயத்தில் நீங்காது பதிந்து, அவளுக்கு ஒரு ‘பிடி’யாகிவிடும் என்ற ஒருவித தடுமாற்றத்தில் சடுதி நேரம் தன்னுள்ளுழன்ற வர், அந்தக்கருத்தினையே வேறு வார்த்தையில் பிரயோகித்தார்.

‘கௌரவமாக ஒதுங்கி ‘றெஸ்பெக்ற்’றாக வாழ முடியாத சில பயித்தியங்கள். வெறும் ஊதாரிகளையும் குழப்பக்காறரையும் புகழ்வதில்தான் இன்பங்காண்கின்றார்கள்.

சந்தேகமேயில்லை. அவர் பொன்ராசாவையே குறி வைத்துத் தாக்கினார் என்பதை ஜானகி துல்லியமாய்த்
தெரிந்து கொண்டாள். அவருக்கு இளக்காரம் காட்ட அவள் விரும்பாமல் முகத்திலறைந்தாற் போல் சொன்னாள்:

“ஒரு சிலர் தங்களிடம் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பதால் தான் பெரும்பாலோர் ஊதாரியானார்கள். தத்தாரிகளும், சுரண்டல் பசாசுகளும் உள்ளவரை ‘ஊதாரி’களும் ‘குழப்ப’க்காரரும் இருப்பார்கள்”

ஜானகி தன் நிலையிழந்தே உணர்ச்சி கொப்பளித்துப் பேசிய சத்தம் அறை முழுதும் கீச்சிட்டுக் கேட்டது.

இன்ஸ்பெக்டருக்கோ கோபம் வந்து விட்டது. மௌனமாக இருந்து முறைத்து ஒரு தடவை ஜானகியை ‘நெருடி’ப் பார்த்தார்.

புருஷன் மனைவிக்குள் எழுந்த பிணக்கும், பீறுகின்ற பேச்சும் பொன்னையரைச் சிப்பிலியாட்டின. ‘இந்த வாதங்கள் எங்கு கொண்டு போய் விடுமோ?’ என்று பயந்த அவர்; இருவருக்குமிடையில் பேச்சைத் திசை திருப்பும் நோக்கில் அறைக்குள்ளே மெல்ல வந்து, “ஜானகி, இன்றைக்கு என்னவோ தடல்புடலாகச் சமைத்துக் கொண்டிருந்தாயே, விசேஷமாக என்ன குழம்பு வைத்தாய்?” என்று கேட்டார்; சற்று முன்னே நகர்ந்து, ”அவர் சாப்பிட்டுவிட்டாரா” என வினவியபின், இன்ஸ்பெக்டரை மருவி நோக்கி. ”தம்பி இன்னும் சாப்பாடு ஆகவில்லை
யாக்கும்?’ என்று தானாகவே மழுப்பினார்.

“இல்லை. சாப்பிடுவோம்” என்றார் இன்ஸ்பெக்டர்.

ஜானகி கண்களைச் சிமிட்டித் தந்தையை வெளியே நிற்குமாறு சைகை காட்டினாள். பொன்னையர் மெல்ல வெளியாகினார். அவர் வெளியானதும், இன்ஸ்பெக்டர் சாராயப் போத்தலைத் தாவி எடுத்துத் திறந்தார்.

ஜானகி ஒன்றும் பேசாமல் அவரின் கிருத்தியங்களைக் கவனித்தபடி நின்றாள்.

‘இது ஒருநாளும் இல்லாத திருக்கூத்து’

தனக்குள் அவர் முணுமுணுத்த போதும், அவர் செய்கைக்கு அவள் துக்கித்ததாகவே தெரியவில்லை.

சொற்பவேலையில் சாராயம் சுமாராக வேலை செய்யத் தொடங்கியது. அவரின் சிந்தனைகளும் அத்தோடு அலைபாயத் தொடங்கின. ஜானகியைப் பார்த்தார்.. அவர் முகத்தில் அருவருப்புத் தட்டிற்று.

‘எப்ப பார்த்தாலும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூதேவி’ யாட்டம் நிற்கிறாளே?’

மனசுக்குள் புகைந்தார். அவளில் உண்டான மாற்றம் அவர் கோபத்தை அவ்வேளை கிளறிற்று. முன்பெல்லாம் அவர் ‘டியூட்டி’ முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் எப்படியெல்லாம் தடல்புடலாக வரவேற்பாள். இன்று?

யோசிக்க யோசிக்க ஈற்றில் விரிவுரையாளரில் தான் ஆத்திரம் எழுந்தது.

‘பொன்ராசனும் அவன் சார்ந்த தொழிலாளர் இயக்கமும் நாட்டிலே செய்துவரும் கலாட்டாக்களுக்கு அளவே இல்லை. அப்படியிருந்தும் அவனுக்காக இந்த விரிவுரையாளரும் ஜானகியும் ‘அப்புக்காத்துவேலை’ பார்ப்பதன் நோக்கம் என்ன?’

கோபம் கொப்பளித்தது. ஜானகிக்குச் சவுக்கால் அடிக்கவேண்டும் போலிருந்தது. கையிலிருந்த ‘சிகரெற் அடித்துண்டுவரை கருகி அவர் விரல்களில் சுட்டபோது தான், அந்த உக்கிரமான சிந்தனையிலிருந்து விடுபட்டார். மன அழுந்தல் கெம்பிக்கொண்டிருந்தது.

குசினிப் பக்கம் எட்டிப் பார்த்து உரத்த குரலில் அழைத்தார்.

“ஏ ஜானகி இப்படி வா”

ஜானகி உடனே வருவதான அசுமாற்றம் இல்லை.

“ஏ ஜானகி என்ன, காது மந்தமா?”

“அது அழைப்பல்ல; யமராஜ ஆர்ப்பாட்டம்”

ஜானகி இப்படி அர்த்தங் கற்பித்துக் கொண்டு அவர் அருகே வந்து காலாறவில்லை, ‘உறுக்கி’ப் பார்த்தபடி

“உனது விரிவுரையாளர் தந்தி கொடுத்து அழைத்தாரே; அது எதற்காகவென்று இப்பொழுது தான் தெரிகிறது. ஆனால் நீ எல்லாவற்றையும் மறைத்துவிட்டாய், இல்லையா?” என்று அதிரும் தொனியில் மிரட்டினார்.

ஜானகியின் தேகம் ஒரு பாட்டம் நடுங்கியது.நெஞ்சுப் பூணாரங்கள் கொலுக் கழன்றன. சற்று மனசைத் தைரியப்படுத்திக் கொண்டு சாவதானமாகக் கேட்டாள்:

“நான் எதை மறைத்தேன்?”

“எனக்கெதிராகச் செய்த ‘சதி’யை!”

“ஆ, ஐயையோ, இதென்ன பேச்சு?”

ஏங்கி அழுகின்ற பாவனையில் கேரினாள் ஜானகி.

“என்ன பாசாங்கா காட்டுகிறாய்? உண்மையைச் சொல்: பொன்ராசன் இயக்கத்தையும் அவன் நடத்தும் போராட்டங்களையும் நீ ஆதரிக்கவில்லையா?”

ஜானகி எதிர்பாராத கேள்வி. மின்னலடித்த மாதிரி நெஞ்சு ‘திடுக்’ கிட அவள் அப்படியே மலாரடித்துப்போய் நின்றாள். வாய் திறந்து ஒரு வாக்குச் சொல்ல நாக்கு எழவில்லை. கண்கள் பேந்தப் பேந்த முழிசினாள்.

“என்னடி முழியைப் பிதுக்கிறாய். வாய் திறந்து சொல்லடி, அப்படித்தானே?”

“என்ன ‘டி ‘-சொல்ல ‘டி’ என்று ‘டி’ வைத்து அழுத்தி வந்த வாக்கிய உச்சாடனங்கள் அவள் மேனியை ஈனித்துக் குதறி எடுத்தன. அவரின் அழுங்குப் பிடிக் கேள்விகளோ அவளை நெட்டுருவிக் கொண்டிருந்தன.”

‘மனச்சாட்சிக்கு விரோதமாக அதை மறுத்து உத்தாரம் சொல்வது எப்படி?’

ஜானகி தவித்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கவனித்த பொன்னையர் பதகளித்துக் கொண்டு எதையோ தேடுவது போல் மீண்டும் உள்ளே வந்து, “பிள்ளை ஜானகி. என்ன இம்மட்டு நேரமாகியும் சாப்பிட வில்லையா” என்று கேட்டவர். பின்பு அவசரமாக

“அந்தக் கணக்குக் கொப்பியை எங்கே வைத்தாய்?’ என்று கேட்டவண்ணம் இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தையே நைந்து பார்த்துச் சிரித்தார்.

அந்தப் பார்வையில், ‘என் ஜானகி தாயில்லாப் பெண். என் உயிரே அவள்தான். அவளை மன்னித்து விடுங்கள்’ என்று இரந்து கேட்பது போலிருந்தது.

பொன்னையர் பரிதாபத்தைப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மனசு சற்று அடங்கிற்று.

தந்தையின் சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட ஜானகி தனக்குள் பிரலாபிக்கலானாள்:

‘நான் கண்ணீர் விட்டு வாழ வேண்டுமென்று ஆகி விட்டது. என்னைப் பெற்று வளர்த்த குற்றத்திற்காக என் அப்பாவும் என்னோடு கண்கலங்க வேண்டியிருக்கே?’

இன்ஸ்பெக்டர் பொன்னையரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, ஜானகி மெதுவாகத் திரும்பி வெளியே வந்தாள்.

அப்போது அவள் கண்கள் கரைந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

என்ற போதும் உள்ளத்தினுள்ளே ஒருவித உற்சாகம் மேலிட, வெறித்தனமாக நடந்தாள் ஜானகி.

அவள் மனசில் எழுந்த சிந்தனை அலைகள் அவளுள் தெளிந்தன. நெஞ்சினில் ஏதோ ஓர் உறுதி வஜ்ஜிரித்துக் கொண்டது.

‘நான் இனி இவரோடு வாழ்வதில் ஒருவித அர்த்தமுமில்லை; யாருக்கும் பிரயோனமும் இல்லை’

அவள் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு எதிரேயுள்ள வயற்பரப்பைப் பார்த்தாள்.

அப்போது அவள் நெஞ்சு கமறிக் கொண்டிருந்தது.

அத்தியாயம் – 12

பொலிஸ் கைது செய்து கொண்டு சென்ற பின் பொன்ராசாவுக்கு என்ன நேர்ந்தது. காயப்பட்ட தொழி லாளர் நிலை எப்படி என்ற தகவல் தெரியாமல் ஜானகி துடித்துக் கொண்டிருந்தாள்.

“யானை தன் கையால் மண்ணை வாரிப் போட்ட மாதிரி, இவள் தானே தன் குடும்பத்தை நாசப்படுத்து கின்றாளே?” என்ற துயரில் ஆழ்ந்து கிடந்தார் பொன்னையர்.

தானுண்டு தன் குடும்பச் சோலியுண்டென்று இருக்க விடாது அவளைத் தடுத்த இலட்சியப் பித்தின் விசித் திரத்தை ஒருகணம் நினைத்தார். அவரிடம் பரிதாபம்,ஆத் திரம், வெறுப்பு ஆகிய உணர்வுகள் விரவி ஏகமாய்த் தலை காட்டின.

கண்டறியாத இலட்சியமும் மண்ணாங்கட்டியும்’

அவர் வாய்க்குள் பொரிந்து ‘புறுபுறு’த்தார்.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் இப்பொழுது முன் போலில்லை. அவரின் ‘கடுகடு’ப்பையும் கண்டிப்பையும் கவனித்தபோது பொன்னையருக்கு ஜானகியின் எதிர்கால நம்பிக்கையே தளர்ந்துவிட்டது.

ஆண்டாண்டு காலமாக நாட்டில் வறுமை, வேலையில் லாத் திண்டாட்டம், அடக்குமுறை மக்களைச் சித்திரவதைக் குள்ளாக்கியிருப்பதை எண்ணற்ற நிகழ்ச்சிகள் மூலம் அவரும் அறிந்து கொண்டவர். இருந்தும், அவருக்கு இவற்றின் உண்மையான தாற்பரியத்தை அறிவதில் அக்கறை இருந்ததில்லை. ஆதலால், ஜானகி அவர் பேச்சையும் அதிகம் காதில் போடுவதில்லை.

ஆனால், இவற்றை எதிர்த்து நிகழும் போராட்டங்களுக்கு பொன்ராசா தலைமை தாங்கி நடத்தும் அரசியல் கிளர்ச்சிகளும், இப்போது நாட்டையே போர்க்களமாக மாற்றிவிட்டன. இதை நினைக்க பொன்னையருக்கு நடுக்க மெடுத்தது.

ஊர்ப்போராட்டம் ஒரு பக்கமும், அதன் எழுச்சிப் போர் வீட்டிலேயும் பிரதிபலிக்கின்ற கோலம் அவர் மன சில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. இது ஓர் பூகம்பம் போல் முழு நாடுமே கொந்தளித்துக் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. இந்தப் போராட்டமும் அதன் வடிவமும் உச்ச நிலையடைந்து, அதன் உபாயங்கள் புதிய வார்ப்புப்பெற்று வீறு கொண்டு திகழ்வதை அவர் உணர்ந்தார். அந்தக் கொந்தளிப்பின் பிரதிபலிப்பு மனி தர்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படி ஊடுருவுகின்றது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘இப்போது அமைதியாகச் சும்மா இருக்க முடிய வில்லையே?’

அவருக்கு பொன்ராசன் மேல் அனல் பற்றிய கோபம் கனன்றது.

‘எங்கள் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சொன்ன மாதிரி பொன்ராசனைப் பிடித்து உள்ளே தள்ளிக் கம்பி எண்ண வைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்’.

சற்று நேரங் கழித்து இந்த வார்த்தையை அவர் தமது மனசுள்ளே உச்சரித்தபோது, அதன் விளைவு எவ்வளவு பயங்கரமானது என்பதை அடுத்த கணம் உணர்ந்தார்.

‘அவனை கூட்டுக்குள்ளே தள்ளிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?’

இப்படி ஓர் கேள்வி மனசைக் கிள்ளிய போதுதான் அவர் மனசில் அந்தச் சம்பவம் நிழலாடிற்று.

யாழ்ப்பாணம்-மாவிட்டபுரக் கந்தசாமி கோயில் திருவிழாவுக்கு ஜானகியை அழைத்துப் போயிருந்தார் பொன்னையர்.

ஜனங்கள் அன்று சிறுசிறு கூட்டங்களாக நின்று கலவரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் உணர்ச்சியும் ஆவேசமும் கொப்பளித்துக் கொண்டிருந் தன. பக்திப் பிரவாகத்தைக் காணவில்லை.

உள்ளும் புறமுமாகக் கோயிலைச் சுற்றிப் பொலிஸ் படை குண்டாந்தடிகள் சகிதம் ‘காவல்’ புரிந்து கொண் டிருந்தது.கோயிலின் வெளி வாசல் கதவு சிக்காராய்ப் பூட்டப்பட்டுக் கிடந்தது.

சிறைக் கைதிகளைக் காவல் புரியும் ‘காடர்’கள் போல் பொலிஸ் கோயிலைச் சிறைக் கூடமாக்கி முருகன் சிலைக்குக் காவல் போட்ட விறுத்தத்தை ஜானகி அன்று தான் கண்டாள்.

முகப்பு வீதியைச் சுற்றி முட்கம்பிகளால் போட்ட நீளமான வேலிக்குள் கோயில் சிறைப்பட்டுக் கிடந்தது.

ஜானகி திகைத்து நின்று இந்தப் ‘புதுமை’களைக் கவ னித்து விட்டு, தந்தையிடமே கேட்டாள்.

“இந்தச் சனங்கள் ஏன் வெளியே நிற்குது?”

“அந்தாக்கள் ‘தாழ்த்தப்பட்ட’ சனம்”

பொன்னையர் பாடம் ஒப்புவிப்பது போல் கூறினார்.

“தாழ்த்தப்பட்டதென்றால்?”

“அவை, குறைஞ்ச சாதி”

“என்னத்தால் குறைஞ்சவை”

பொன்னையர் முழுசினார். அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

அப்போது அந்தத் ‘தாழ்த்தப்பட்ட’ வர்களுக்குள் பொன்ராசாவின் தலைக்கறுப்புத் தெரிந்தது.

“அப்படியானால், அங்கே அவர்களோடு பொன்ராசா நிற்கிறது தெரிகிறதே?”

அவர் கூற்றை மறுக்கும் தோறணையில் சற்றுக் கிண்டலாகக் கேட்டாள் ஜானகி.

பொன்னையர் தர்மசங்கடத்திற்குள்ளானார். ஆனாலும், சமாளிக்கத் தொடங்கினார்.

“அவன் அவங்களுக்காக வாதாடி உயர்ந்த சாதி மான்களுக்கும் ‘கெட்ட பெயர்’ வாங்கிக் கொடுக்க வெளிக்கிட்ட வப்பி; ‘பெரியவர்’களோடு மோதிக் கொள்ள வந்த மொக்கன்”

‘யார் பொன்ராசாவா வப்பி: அவன மொக்கன்?’ என்று கேட்க அவள் வாயுன்னியது, வெளியே நின்ற கும் பலிலிருந்து ஒரு வாலிபன் ஓடி வந்து முட்கம்பி வேலியில் கைபோட்டு இழுத்தான்.

அதைக் கண்ட பொலிஸ் படை விரைந்து கூடி முறைத்துக் கொண்டு பார்த்தது.

“டேய் பண்டி, ஏண்டா வேலியை இழுத்தாய்?”

அட்டகாசித்துத் திடும்பாகக் கேட்டது ஒரு பொலிஸ்

“இது வேலியல்ல; குறுக்கே போட்ட முள்ளுக்கம்பி”

அழுத்தமாகச் சொன்னான் அந்த வாலிபன்.

“ஏன் அதை இழுத்தனி?”

புதுசாக வெருட்டினான் இன்னொரு பொலிஸ்.

“நான் இழுக்கவில்லை; அகற்றிக்கொண்டிருக்கின்றேன்”

பொலிஸுக்கும் இளைஞனுக்குமிடையில் வாக்குவாதம் முற்றவே ஜனங்கள் கூச்சலிட்டுக் கெம்பிவிட்டார்கள்.

தூரத்தே நின்று கவனித்துக் கொண்டிருந்த பொன் ராசா துடித்துப் பாய்ந்து வந்து அங்கே குதித்தான்.

அவன் பாய்ச்சலைக் கண்ட பொலிஸ், அவனை ஏற இறங்கப் பார்த்து, “ஏய், உனக்கு இங்கே என்ன வேலை?” என்று உரக்கக் கனைத்தது.

“இதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்; பொலிஸுக்கு இங்கே என்ன வேலை?”

“முள்ளுக்கம் பிபோட்டிருக்கிறதே, தெரியவில்லையா?”

”நன்றாகத் தெரியும். முன்பு ஊருக்குள்ளே வேலி போட்டுத் தோற்ற பிரிவினைவாதிகள் இப்போது கோயிலுக்கு வேலி போட்டு நாட்டையே கூறுபோடப் பார்க்கிறார்கள். ஆனால், இந்தத் துரும்பை நீண்ட காலம் போட்டு ஏமாற்ற முடியாது”

“டே பண்டி. ‘டாம்பூள் றாஸ்கல்’ என்ன. அதிகமாக வாய் போடுகிறாய்?”

அருகே நின்ற பொலிஸ் துள்ளிக் குதித்தார்.

அந்தக் க்ஷணத்தில் பொலிஸ் பட்டாளம் ‘பெற்றன்’ பொல்லுகளைத் தயார் படுத்துவதைக் கண்ட பொன்ராசா, உரத்துக் கத்தினான்.

“நாங்கள் நிராயுதபாணிகளான சமாதான வாதிகள். எங்களில் பலாத்காரம் பாவித்தால் பின்பு, மக்கள் பொங்கி எழுந்து பலாத்காரர்களாக மாறுவார்கள்!”

கனைத்த பொலிஸ் சவால் விடுவதுபோல் கேட்டான்.

“அதாவது, ‘வலோற்காரம்’; அப்படியா? எங்கே முடிந்தால் அதைச் செய்து காட்டு பார்க்கலாம்?”

பொன்ராசா அமைதியாக, உறுதியாக நின்று ஒரு தடவை வெளியே நின்ற ஜனத்திரளைப் பார்த்தான்.

“அடக்கப்பட்டவர்கள் சகல கொடுமைகளைச் சகித்து மரத்துப் போனவர்கள். அவர்கள் கெம்பிவிட்டால் எந்த ஆயுதங்களாலும் அடக்க முடியாது. அவர்களிடம் இருப்பது விடுதலை உணர்வு மட்டும்தான். அதோ சாட்சி…”

வீதியை அவன் சுட்டிக் காட்டினான்.

ஜன நெரிசல் அப்போது திமிலோகப்பட்டது.

இதற்குள் அந்த முள்ளுக்கம்பி வேலி எப்படிச் சின்னா பின்னமாயிற்று என்பதை எவரும் கவனிக்கவில்லை. பொன்ராசா சுட்டிக் காட்டிய பின்தான் பொலிஸ் ‘திடுக்’ கிட்டது.

கோயில் வீதி ஏக வெளியாகிவிட்டது. சகல கட்டுக் கோப்புகளையும் உடைத்துக் கொண்டு எழுந்த பலாத்கார. நிகழ்ச்சிகளும், பொன்ராசா கர்ஜித்த குரலும், பொன்னை யர் காதுகளில் இப்பவும் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

‘அடக்கு முறைகளால் எதையும் சாதிக்க முடியாது’

ஓர் புதிய ஞானம் பொன்னையருக்கு இப்போது உதித்தது.

அவர் கண்கள் ஜானகியைத் தேடின.

அவளை அறைக்குள் காணவில்லை. குசினிப் பக்கம் எட் டிப் பார்த்தார். அங்கேயும் இல்லை. எல்லா அறைகளையும் திறந்து பார்த்தார். ஏமாற்றம்தான். வீடும் வெறிச் சோடிக் கிடந்தது. விபரீத நினைவுகள் அவரிடம் தலை தூக்கின.

‘இந்தக் காலத்துப் பெண்கள் புத்தியிழந்து உணர்ச் சிக்கு அடிமையான பொம்மைகள். சிறு தாக்கத்தையே சகிக்காமல் தங்களையே அளித்துக் கொள்பவர்கள்…’

இதற்கு மேல் அவர் கற்பனை ஓட மறுத்தது; அவரில் ஓடிய நினைவும் அறுந்தது.

‘புருஷன் பெண்சாதிக்குள் நேற்று நடந்த தகராறு தான் வினையாக வந்து விட்டதோ?’

‘காக்கி அணிந்தபின் சில வேளை மனிதன் மிருகமாகி றான்’ என்று விரிவுரையாளர் இராமசாமி சொல்லியிருந்தாரே, அது எவ்வளவு உண்மை என்பதை இப்போது தான் பொன்னையர் நேரில் கண்டார். இல்லாவிடில், தாயில்லாப் பெண் ஜானகியை இவர் இதமாக நடத்தா மல் எந்த நேரமும் முறைத்துக் கொள்வாரா?’

அவர் இதயம் ஒரு தாயின் பாசத்தோடு பதறியது: உடல் முழுவதும் அழல் எடுத்தது. வாய் திறந்து ஒரு பாட்டம் குரல் வைத்து அழவேண்டும் போல் தோன்றி யது. அவரால் அழமுடியவில்லை; அழாமலிருக்கவும் முடிய வில்லை;கொப்பளம் போல் நெஞ்சு கொதித்தது.

‘பெண்ணாய்ப் பிறப்பது பாவம்; பெண்ணோடு கூடிப் பிறப்பதும் பாவம். பெண்ணைப் பெறுவதோ மகா பாவம்’

விசனம் அவரை ஆட்கொண்டது. அந்தப்பாவத்தைப் புரிந்த குற்றத்திற்காக இந்தப் புண்ணியவதியைத் தேடி அலைந்தது அவர் நெஞ்சம்.

‘கக்கூஸ் பக்கம் போயிருப்பாளோ?’

வீட்டின் பின்புறமாகச் சென்று மலசலகூடக் கதவைப் பார்த்தார். அது மூடிக் கிடந்தது. கதவோரமாக நின்று ஒரு பாட்டம் செருமினார். ஒரு சந்தடியும் இல்லை. இரண்டு தடவை காறித் துப்பினார். அப்பவும் அசுமாற்றத்தைக் காணவில்லை. கடைசியாக மெல்லிய குரலில் அழைத்தார்.

“பிள்ளை ஜானகி?”

மறுமொழி இல்லை.

அவர் நெஞ்சு ‘பக்’கென்று குமைந்தது.

‘ஐயோ நான் என்ன செய்ய?’

மனம் பதகளிக்க, முன்னொருநாள் தேடியது போல் கிணற்றுப் பக்கம் விரைந்து சென்று எட்டிப் பார்த்தார். தண்ணீர் சலனமின்றி அமைதியாகத் தெரிந்தது.

‘தற்கொலை செய்திருக்கமாட்டாள். அதை அவள் கோழைத்தனமாக எண்ணுபவள்’

தனக்குள் உறுதி பூண்டவராய், திரும்பி வந்து வீட் டைப் பூட்டிச் சாவிவை இடுப்பில் செருகினார். சால்வையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

‘பொலிஸ் ஸ்ரேஷனுக்குப் போய்ப் பார்த்து வருவோம்’

‘கேற்’றைத் திறந்து கொழுக்கி மாட்டத் திரும்பிய போது, சுவரில் ஏகமாய்க் கிறுக்கி எழுதிய வாசகங்கள் அவர் கண்ணில் பட்டன.

‘பொலிஸ் அட்டூழியம் ஒழிக’

‘தோழர் பொன்ராசாவை விடுதலை செய்!’

‘முதலாளித்துவக் கோட்டையை நொறுக்குவோம்!’

‘தோழர் பொன்ராசா வாழ்க!’

ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பிற்று.

“வம்பில பிறந்த எளிய காவாலியள். சுவரெல்லாம் கண்டபடி கிறுக்கிப் போட்டுதுகள்”

ஒரு பாட்டம் புறு புறுத்துக் கொண்டு, ஒரு கந்தல் துணியை எடுத்து வந்து சுலோகங்களை அழிக்கலானார்.

“மாஸ்கோவில் மழையென்றால் கம்யூனிஸ்டுகள் கொழும்பிலே குடை பிடிப்பார்கள். இல்லாவிட்டால் தோட்டக்காட்டாரோடு சேர்ந்து கிளர்ச்சி பண்ணின பொன்ராசனை அங்கே பொலிஸ் பிடிக்க, இங்கே யாழ்ப் பாணத்துப் பொடியன்கள் எங்கள் இன்ஸ்பெக்டர் வீட்டுச் சுவரெல்லாம் கிறுக்கித் தள்ளுவான்களா?”

நிமிர்ந்தபோது அவர் பக்கத்தே ஓர் ஆளரவமும், தொடர்ந்து ஒரு பெண் குரலும் கேட்டன.

“அந்த எழுத்துக்களை அழிக்க வேண்டாம்”

நெஞ்சு கமாரிட, ஜானகியைப் போல் குரல் வைத்த அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தார்.

அவள், அவரின் செல்வக் குமாரத்தி ஜானகியேதான்.

ஆனந்தம் தாங்க முடியவில்லை. அவளைக்கண்ட திருப்தியோடு திரும்பி வீட்டுக்குச் சென்றார்.

விறாந்தைப் படியில் ஏறியதும், “பிள்ளை, நீ ஏன் அப்படிச் சொன்னாம்? சுவர் ஏகலும் அசிங்கமாயிருக்கிறதே, இன்ஸ்பெக்டர் கண்டால் நெருப்புக் கக்குவாரல்லவா’ என்றார் பொன்னையர்.

“இன்று ஒன்றை அழித்தால் நாளைக்கு ஒன்பது சுலோகம் எழுதப்படும். இது வெறும் கிறுக்கலல்ல, பொங்கி எழுந்த மக்களின் கொந்தளிப்பு” என்றாள் ஜானகி.

“அதுக்கு வேறு இடம் இல்லையா ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டுச் சுவரிலா எழுதுவது?”

இதற்கு அவள் பதில் சொல்லவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை “இது தான் அப்படி எழுதுவதற்குப் பொருத்தமான இடம்” என்று கூறுவது போலிருந்தது.

பொன்னையருக்கு வள்ளீசாக ‘விஷயம்’ புரிந்து விட்டது. ஆத்திரம் தலை தூக்கிற்று.

“ஜானகி, நீ உன் மனசுக்குள்ளே என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்; இதெல்லாம் என்ன கூத்து?”

“இது கூத்தல்ல; கொம்மாளமுமல்ல, வாழ்க்கைப் பிரச்சினை”

“உனக்கு வாழ்க்கையிலே என்ன குறை?”

“இந்த வாழ்க்கையே எனக்குக் குறைதான். இந்த நரக வேதனை இனி எனக்கு வேண்டாம்!”

‘அவள் கடைசியாகத் தூக்கியெறிந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?’ என்று அவர் மூளை அப்போது அகராதி தேடியலைந்தது.

‘ஒரு வேளை இவளுக்கும் பொன்ராசனுக்கும்…?’

அவர் மனசு இதற்குமேல் கற்பனை பண்ணவே கூசியது.

‘இவளால் இனி என் மானமே போய்விடும் போலிருக்கிறதே’

அவள் வாய் திறந்து கூறாததைத் தானே துணிந்து வெட்டொன்று துண்டு இரண்டாகக் கேட்டால் என்ன என்ற ஓர் விபரீத நினைவு தலையெடுத்தது. நெஞ்சு பொறுக்கச் செருமிக் கொண்டு அவளைப் பார்த்தார்.

“ஜானகி, உள்ளத்தைச் சொல்லு. உனக்கு இன்ஸ்பெக்டரிலே இப்போ வெறுப்பாகவிருக்கிறது, அப்படித் தானே?”

“ஓம். இப்பவல்ல, எப்பவும்தான்!”

“நீ பொன்ராசாவை…?”

இப்படி அவர் வாயுன்னும் போதே, தனது சுய நினைவிழந்து, ‘சளார் சளார்’ என்று அவள் கன்னத்திலே நாலைந்து தடவை மூசி மூசி அறைந்தார். அறைந்துவிட்டு, ‘மான கட்ட நாயே’ என்று உரக்கக் கத்தியே விட்டார்.

ஜானகி அழவில்லை: அசையவுமில்லை. கன்னங்களைப் பொத்திப் பிடித்துக் கொண்டு சுவரோடு சாய்ந்து நின்றாள்.

அவள் இதயம் மண்ணில் தோன்றிய போராட்டங் களில் அப்போது சங்கமித்துக் கொண்டிருந்தது.

பொன்னையர் அவளைத் தின்று சுக்குவதுபோல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இருந்தும், அவர் உடம்பு அரவத் தீண்டியவன் போல் பதகளிக்கத் தொடங்கியது; அவர் மனசும் அவருள் கருவியது.

‘மானங்கெட்ட நாயே, என்முன் நில்லாதே போ!’

– தொடரும்…

– மண்ணில் தெரியுதொரு தோற்றம் (நாவல்), முதல் பதிப்பு: பெப்ரவரி 1978, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *