மணிமொழி, நீ என்னை மறந்துவிடு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 12, 2024
பார்வையிட்டோர்: 8,941 
 
 

(2009ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. நினைப்பது நடந்தால், நீ பேறு பெற்றவள்!

மணிமொழி கட்டிலை விட்டு எழுந்து மீண்டும் ஒரு முறை அறையெல்லாம் தேடினாள். எல்லாப் பொருள்களும் இருந்தன. அந்த நான்கு பெட்டிகளை மட்டும் காணோம்!

மனம் தளர்ந்து கட்டிலில் உட்கார்ந்தாள் மணிமொழி. அவள் மனம் மீண்டும் எண்ணியது… ‘நான் நினைத்தபடி தங்கதுரை எடுத்துச் சென்றிராமல், வேறு எவராவது எடுத்துச் சென்றிருந்தால்? மாமனாருக்கும் மாமியாருக்கும் இது பற்றித் தெரியாது. பாவை நல்லவள். இளையவர் என் இதயத்திலிருப்பவர். சிவகாமி? சிவகாமி எடுத்துச் சென்றிருப்பாளா? தங்கதுரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்; அல்லது சிவகாமி சிவகாமி எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இந்த இருவரைத் தவிர வேறு எவரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாவை ஒருத்தி,

எப்போது பார்த்தாலும் சமையல் கட்டிலேயே அடைப்பட்டுக் கிடக்கிறாள்! வந்தது யார், போனது யார் என்று எங்கே பார்க்கிறாள்?

மணிமொழி தவித்துக்கொண்டு இருந்தபோது, மாமனாரும் மாமியாரும் வந்துவிட்ட அரவம் கேட்டது.

மணிமொழி, அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே கூடத்திற்கு வந்தாள். மாமியார், தன் தோளில் கிடந்த இளங்கோவை மணிமொழியிடம் கொடுத்துக் கொண்டே, “குழந்தை தூங்கிப் போய்விட்டான். கொண்டு போய் விசிறிக்கடியில் போட்டு வேர்வையைத் துடை. எழுந்ததும் பால் கொடு! இப்போது எழுப்பிப் பால் கொடுக்காதே!” என்றாள்.

“சரி அத்தை” என்று சொல்லி விட்டு இளங்கோவைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள் மணிமொழி.

இரவு எந்நேரமானாலும் சரி, முத்தழகு வராமல் எவரும் அந்த வீட்டில் சாப்பிடுவதில்லை. முத்தழகுதான் முதலில் சாப்பிடவேண்டும். பிறகுதான் மற்றவர்கள் சாப்பிடுவார்கள். ஆனால் அன்று வெகுநேர மாகியும் முத்தழகு வரவில்லை.

கூடத்தில் மாமியார், மாமனாரைப் பார்த்து, ‘இன்னும் தம்பியைக் காணோமே! பாவைக்கு எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுப் பழக்கம் உண்டு. ஆனால், மணி மொழிக்கு இதெல்லாம் புதிதாக இருந்தாலும் இருக்கும்! அவளை முதலில் சாப்பிடச் சொல்லிவிடலாமே!” என்றாள்.

“நானும் அதைப் பற்றித்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அந்தப் பெண்ணைச் சாப்பிடச் சொல்லு. அவன் வரட்டும்; அப்புறம் நாம் சாப்பிடுவோம்” என்றார் மாமனார்.

“மணிமொழி, மணிமொழி” என்று ஓசையிட்டாள் மாமியார்.

“வருகிறேன் அத்தை” என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு வந்து முன்னால் நின்ற மணிமொழியின் முகத்தைப் பார்த்ததும், “மணிமொழி, நீ அழுதாயா என்ன? உன் கண்களெல்லாம் சிவந்திருக்கின்றனவே?” என்று கேட்டாள் மாமியார்.

“இல்லை அத்தை” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மணிமொழி.

“உனக்கு அவன் நினைவு வந்து விட்டது; அதுதான் அழுகிறாய்! அரசுவை நினைத்தால் அழத்தான் தோன்றும். அரசு…. அரசு…” என்று சொல்லிக்கொண்டே மாமியாரும் அழத் தொடங்கி விட்டாள்.

தன் மகனை நினைத்து அழுத தாயைக் கண்டதும், தந்தையும் தாங்கமுடியாத துக்கத்தால் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

மணிமொழி! மனத்தைத் திறந்து உள்ளதைச் சொல்லிவிட்டு ஓடி விடம்மா! உன் துக்கம் வேறு; அவர்கள் துக்கம் வேறு! உன் அப்பாவை நினைத்து நீ அழும்போதெல்லாம், அரசுவை நினைத்து நீ அழுவதாக எண்ணி, அவர்கள் வேறு அழுகிறார்கள். ஆதரவு இல்லாத வீட்டில் கூட இருக்கலாம், அழுகிற வீட்டில் இருக்கக்கூடாதம்மா!

விடிந்தது. முத்தழகு பத்திரிகையுடன் மாடியில் உட்கார்ந்திருந்தான்.

மாடியில் எப்போதும் முத்தழகு தனியாகத்தான் இருப்பது வழக்கம். காரணம், அவன் அப்பா, அம்மா இருவரும் வயதானவர்கள். அவர்களால் மாடிப்படிகளில் ஏற முடியாது. பாவை காபி மட்டும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போய்விடுவாள். சாப்பிடக் கீழே போய்விடுவான் முத்தழகு. மற்றபடி முத்தழகு எப்போதும் மாடியில் தனியாகத்தான் இருப்பான்.

பத்திரிகையை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த முத்தழகு, மாடிப் படிகளில் எவரோ ஏறிவரும் ஓசை கேட்டுத் தன் பார்வையைத் திருப்பாமல் பத்திரிகையையே படித்துக் கொண்டிருந்தான்.

காரணம், பாவை காபி கொண்டு வருவாள் என்பது பழகிப்போன ஒன்று!

படிகளில் ஏறி மாடிக்கு வந்தவள், நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த முத்தழகிடம் காபிக் கோப்பையை நீட்டினாள். பத்திரிகையைப் படித்துக் கொண்டே, காபிக் கோப்பையை எடுத்து, அதிலிருந்த காபியைக் குடித்துவிட்டு காலி கோப்பையைத் தட்டில் வைத்துவிட்டு, ‘பாவை, அண்ணியைப் பற்றி நான் சொன்னது நினைவில் இருக்கட்டும்” என்றான். அப்போதும் அவன் பார்வை பத்திரிகையிலேயேதான் இருந்தது.

“நான் பாவை இல்லை!” என்றாள் பக்கத்திலே நின்றுகொண்டு இருந்த மணிமொழி.

முத்தழகின் கையிலிருந்த பத்திரிகை கீழே விழுந்தது. அவன் நிமிர்ந்து பார்த்தான். எதிரே காலி கோப்பையுடன் நின்று கொண்டிருந்தாள் மணிமொழி.

திடுக்கிட்டு, பின்பு வியப்புற்று எழுந்த முத்தழகு, “அண்ணி! நீங்களா?” என்றான்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணி, எப்பொழுதும் பாவை தான் காபி கொண்டு வருவாள். அவள்தானாக்கும் என்று நினைத்துச் சொல்லிவிட்டேன். பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றாள்.

“நான் பொறுத்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு நீங்கள் பிழை ஏதும் செய்யவில்லையே!”

“நீங்கள் வந்தது தெரியாமல் உங்களைப் பாவை என்று நினைத்து விட்டேனே!”

“அதனாலென்ன? நான் வருகிறேன் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“ஓடி வந்து மாடிப் படியிலேயே உங்களிடமிருந்து காபியை வாங்கிக் கொண்டு உங்களை அனுப்பியிருப்பேன்!”

“ஏன், நான் இந்த மாடிக்கு வரக்கூடாதா?”

“வரக் கூடாது என்பது இல்லை. தேவை இல்லாத தொல்லை தானே?” “பெண்களுக்குரிய வேலையைச் செய்வது, பெண்களுக்கு என்றுமே தொல்லையாக இருக்காது!”

“அது சரி அண்ணி, பாவைக்கு என்ன வந்தது, உங்களிடம் காபியை அனுப்பிவிட்டு அவள் என்ன செய்கிறாள்?”

“அவள் அனுப்பவில்லை; நான் தான் வந்தேன்!”

“நீங்களே வந்தீர்களா?”

“ஆமாம்!?”

“நான் உங்களுக்காக என்ன அண்ணி செய்யவேண்டும்? சொல்லுங்கள், எதுவானாலும் செய்யக் காத்திருக்கிறேன்.”

“நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் சொல்கிறேன்!”

“இதுவரை ஏதும் நீங்கள் தவறு செய்யவில்லை. இனிச் செய்யவும் மாட்டீர்கள். நானும் எதையும் தவறாக எடுத்துக்கொள்ளவும் மாட்டேன். எதுவானாலும் மனம் திறந்து சொல்லுங்கள்.”

“பத்திரிகை வந்தால் அதை என் கண்களுக்குப் படாமல் நீங்கள் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறீர்களே, ஏன்? நான் தினசரி பத்திரிகை படிக்கும் பழக்கம் உள்ளவள். தினப் பத்திரிகை படிக்காவிட்டால் எனக்கு எதுவுமே ஓடாது!” என்றாள் மணிமொழி.

“அதுவா அண்ணி, தினப் பத்திரிகையில் கணவனை இழந்த பெண்களைப் பற்றி அடிக்கடி செய்தி வருகிறது. அந்தச் செய்திகளை நீங்கள் படித்தால் உங்கள் மனம் புண்படுமே என்பதற்காகத்தான், பத்திரிகை உங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் முத்தழகு. இதைச் சொல்லும்போது அவனுக்குக் குரல் அடைத்தது.

ஆனால், மணிமொழிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், வெளியே முகத்தை துக்கப்படுபவளைப்போல் உம்மென்று வைத்துக்கொண்டாள். சோகக் குரலில், “அதற்காகப் பத்திரிகை படிக்காமல் இருக்க முடியுமா?” என்றாள்.

“சரி அண்ணி, இனிமேல் நீங்கள் பத்திரிகை படித்த பிறகே நான் படிக்கிறேன். அடுத்தது?”

“என்னைப் பற்றிப் பாவையிடம் ஏதோ சொன்னதாகச் சொன்னீர்களே, அது என்ன?”

“அது…”

“சும்மா சொல்லுங்கள்?”

“வேண்டாம் அண்ணி!”

“சரி, வேண்டாம்! நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?”

“அண்ணி, நீங்கள் துணிவுள்ளவர் என்பதை இந்தக் கேள்வியிலிருந்து நான் தெரிந்துகொண்டேன்.!”

“என் துணிவை உங்களிடம் காட்டுவதற்காக நான் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை! கேடு ஒன்றைத் தவிர்ப்பதற்காகவே கேட்கிறேன்.” “அப்படியா? நான் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது அண்ணி!”

“சரி, எப்போது என்பது போகட்டும், எவரை என்பதற்காவது பதில் சொல்ல முடியுமா?”

“பொறுத்துக் கொள்ளுங்கள் அண்ணி, கொள்ளுங்கள் அண்ணி, எந்தப் பெண்ணையும் நான் இதுவரையில் என் மனதில் நினைத்ததே இல்லை!”

“நீங்களும் என்னைப் பொறுத்துக் கொள்ளவேன்டும். நான் இப்போது தான் வந்தவள் என்றாலும், பெண் ஒருத்தி இதைச் சொல்லக்கூடாது என்றாலும், உங்களுக்காக நான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது!”

“சொல்லுங்கள் அண்ணி!”

“சிவகாமியை நீங்கள் திருமணம் செய்துகொள்வதாயிருந்தால், தங்கதுரையோடு அவள் பழகுவதை நிறுத்தவேண்டும்!”

“அண்ணி, அவளை என் மனத்தில் நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. அவளை நான் திருமணம் செய்துகொள்வதென்பது என்றுமே நடக்கமுடியாத ஒன்று! அண்ணி, என்னை மணந்துகொள்ளப் போகிறவள் எங்கே இருக்கிறாளோ!” என்றான் முத்தழகு.

இதைக் கேட்டதும் மணிமொழி தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு மவுனமாக நின்றாள்.

மணிமொழி, உன் மனக் கதவைத் திறந்து பார்க்கிறாயா? உடலாலும் உள்ளத்தாலும் கற்புடையவளே! கணவன் உனக்கு யார் என்பதை எண்ணிப் பார்க்கிறாயா? நினைப்பது நடந்தால் நீ பேறு பெற்றவள்! ஆனால், நடக்காவிட்டால் நரகம்தான் உனக்கு!

11. மருதநம்பி தப்பி ஓடிவிட்டார்!

மறுநாள் காலை. மணிமொழி எழுந்தாள். கதவைத் திறந்தாள். அவள் காலடியிலே…

பத்திரிகை கிடந்தது!

எடுத்தாள்; படித்தாள்; முதற் பக்கத்தில் அவள் எதிர்பார்த்த செய்தி இல்லை. இரண்டாம் பக்கம் பார்த்தாள். இல்லை. மூன்றாம் பக்கமும் இல்லை. அவள் எதிர்பார்த்த செய்தி நாலாம் பக்கத்தில் இருந்தது.

கேசவதாஸ் கொலை வழக்கு!

பம்பாய் மலபார் ஹில்ஸில் கேசவதாஸ் என்பவர், அவரது பங்களாவில் சுடப்பட்டுக் கிடந்த செய்தி ஏற்கெனவே வந்த செய்தியாகும். இந்தக் கொலை வழக்குச் சம்பந்தமாக போலீசார் துலக்கிய துப்பில், வாடகைக் காரோட்டி ஒருவரும், மருதநம்பி என்ற வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மருதநம்பி நேற்றிரவு தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக இருக்கும் அவரைப் போலீசார் இரவு பகலாகத் தேடி வருகிறார்கள். காரோட்டி காவலிலேயே இருக்கிறான். மருதநம்பி கிடைத்தால்தான், மர்மம் விளங்கும் என்று போலீசாரால் கருதப்படுகிறது. ‘எப்படியும் மருதநம்பியைப் பிடித்து விடுவோம்’ என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் செய்தியைப் படித்ததும் மணிமொழிக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. கதவைத் தாழிட்டுவிட்டுக் கட்டிலில் படுத்துக் குமுறிக் குமுறி அழுதாள்.

மருதநம்பி எப்படிக் கைது செய்யப்பட்டார்? கேசவதாஸ் சுடப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தவள் மணிமொழி. அதை வந்து அப்பாவிடம் சொன்னவள் அவள்தான். அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவர் வீட்டில்தான் இருந்தார். அப்படி இருக்கும்போது அவர் எப்படிக் கேசவதாஸைச் சுட்டுக் கொன்றிருக்க முடியும்?

ஒருவேளை, மணிமொழி வீட்டை விட்டுப் புறப்பட்டதும், அவரும் வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் போய் கேசவதாஸைச் சுட்டுக்கொன்றுவிட்டு, மணிமொழிக்கு முன்னால் வீடு திரும்பி விட்டாரா?

மருதநம்பி ஒரு நாளும் இந்தச் செயலைச் செய்திருக்க முடியாது! அப்படியானால் மருதநம்பி காவலிலேயே இருக்கலாமே? ஏன் தப்பி ஓடுகிறார்?

மணிமொழி, துக்கத்தை அடக்கிக் துக்கத்தை அடக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள். பத்திரிகை அவள் போட்ட இடத்தில் அப்படியே கிடந்தது.

மணிமொழி. நேராகச் சமையல் அறைக்குச் சென்றாள். அங்கே பாவை இல்லை. கூடத்திற்கு வந்தாள். அங்கே மாமியார் இல்லை. வெளியே வந்தாள். அங்கே மாமனார் இல்லை. மாடிக்குப் போனாள். அங்கே முத்தழகு இல்லை. எல்லோரும் எங்கே?

மணிமொழி, மாடியை விட்டுக் கீழே இறங்கி வந்ததும் எதிரே இருந்த அறை, மாமனாரின் அறை. அங்கே எல்லோரும் இருந்தார்கள்! மாமனார் படுக்கையில் பேச்சு மூச்சு இல்லாமல் விறைத்தபடி கிடந்தார். அவர்…

மணிமொழியின் மாமனார்தான், தன் நினைவை இழந்து மயக்கமடைந்து படுக்கையில் கிடந்தார்.

மணிமொழி அவர் அருகில் சென்று பார்த்தாள். டாக்டர் எழுந்து நின்று, மணிமொழியின் மாமியாரிடம், “ரத்தக் கொதிப்பு! நல்ல ஓய்வு வேண்டும். நல்ல உணவு வேண்டும். அவர் மனம் மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நான் போய் மருந்து அனுப்புகிறேன்” என்றார். மாமியார் அழுதுகொண்டே தலையை அசைத்தார்.

டாக்டர் புறப்பட்டார். முத்தழகு டாக்டரின் பையைக் கையில் எடுத்துக்கொண்டு பின்னால் சென்றான். வெளியே கார் புறப்படும் ஓசை கேட்டது.

மணிமொழி மெல்ல நடந்து, வெளியே தோட்டத்திற்கு வந்து, மரத்தடியில் புல் தரையில் உட்கார்ந்து, அண்ணாந்து பார்த்தாள்.

ஒரு பறவை வானத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது. மணிமொழியைப் போல அதற்கும் எங்கே போவது, என்ன செய்வது என்று தெரிய வில்லையா?

பறவை, வானத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டதைப் போல, மணிமொழியின் மனமும் இரண்டு பேரைச் சுற்றி வட்டமிட்டது. அவர்கள்…

அப்பா; முத்தழகு.

‘அப்பாவைப் பிரிந்து வந்தது போல முத்தழகையும் பிரிந்து நாம் எங்காவது சென்று விடுவதுதான் நல்லது. அவர் அண்ணி, அண்ணி என்றழைக்கும்போதெல்லாம் இதயமே பிளந்து விடுவதுபோல இருக்கிறது. ஒரு நாளைக்கு உண்மை தெரிந்த பிறகு, நாம் எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிப்பது? எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் இந்த வீட்டில் தங்கியிருக்க முடியாது. இன்றைக்கே இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் என்ன? இன்றைக்கேவா? மாமனார் மனம் மறந்து கிடக்கிற இந்த நேரத்தில் நாம் வெளியேறலாமா?’

இப்படிக் கண்டதையெல்லாம் நினைத்து மணிமொழியின் மனம் கலங்கி நின்றது.

வெயில் மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. மணிமொழி எழுந்து குளிக்கச் சென்றாள்.

மணிமொழி, உடலைக் கழுவத் தண்ணீர் இருக்கிறது. உள்ளத்தைக் கழுவக் கண்ணீர் இருக்கிறது. அப்பாவை நினைக்கும்போதெல்லாம் அழும் நீ, முத்தழகை நினைக்கும்போதெல்லாம் ஆனந்தப்படுகிறாயே! நீ எங்கே சென்றாலும், எங்கே ஓடி ஒளிந்து கொண்டாலும், உன் அப்பாவும் முத்தழகும் உன் மனத்தை விட்டுப் போக மாட்டார்கள்!

12. சொல்லிவிட்டு ஓடிவிடலாம்!

ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு நாள்… இருட்டிவிட்ட வேளை. மாமனாரையும் மணிமொழியையும் தவிர, வேறு எவரும் வீட்டில் இல்லை. மாமனார் நலம் பெறுவதற்காகக் கோயிலுக்குப் போய் வழிபாடு செய்யக் குழந்தை இளங்கோவோடு போய்விட்டார் மாமியார். துணைக்குப் பாவையும் போயிருந்தாள். முத்தழகு மருந்து வாங்கக் கடைக்குப் போயிருந்தான். தோட்டக்காரன் வீட்டிற்குப் போய்விட்டான்.

‘மாமனார் அவர் அறையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கும் உடல் நன்றாகக் குணம் பெற்றுவிட்டது. அவர் மட்டும் தனியாக இருக்கும் இந்த நேரத்தில், அவரிடம் சொல்லிவிட்டு எல்லாரும் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் என்ன? நல்லதொரு வாய்ப்பு இது!’ என்று மணிமொழியின் மனம் திடீரென முடிவு செய்தது.

படுத்துக் கிடந்த மணிமொழி உடனே எழுந்து சேலையைச் சரிப்படுத்திக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

இருட்டு! சமையலறைக்குப் போனாள். இருட்டு! மாமனார் படுத்துக் கிடந்த அறைக்குப் போனாள். இருட்டு!

ஐயம் கொண்ட மணிமொழி, தனக்குப் பக்கத்தில் சுவரில் இருந்த சுவிட்சைப் போட்டுப் பார்த்தாள். விளக்கு எரியவில்லை.

‘மின்சாரமே இல்லை, அதனால்தான் வீடு முழுவதும் இருண்டு கிடக்கிறது! மின்சாரம் பழுதுபட்டிருக்கும். கொஞ்ச நேரமானால் மின்சாரம் வந்துவிடும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டே மணிமொழி, மாமனார் படுத்துக் கிடந்த அறைக் கதவை இன்னும் கொஞ்சம் நன்றாகத் திறந்து பார்த்தாள்.

மாமனார், அந்தப் பக்கம் சன்னலைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பது, சன்னல் வழியாக வந்த நிலவின் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.

மாமனார் சும்மா படுத்துக் கிடக்கிறாரா, தூங்கிக் கொண்டு இருக்கிறாரா, தெரியவில்லை!

‘மாமனாருக்குப் பக்கத்தில் போய்ப் பார்த்து, மாமா என்று அழைப்போமே’ என்று எண்ணிய மணிமொழி, ஒரு காலை எடுத்து முன்னால் வைத்தாள். அப்போது, டங் என்று அடுத்த அறையில் ஓசை கேட்டது!

மணிமொழி அப்படியே நின்று விட்டாள்!

எப்போதும் பூட்டிக் கிடக்கும் அடுத்த அறையில் ஓசையா?

எப்படி வரும்?

அடுத்த அறை, மாமனாரின் அறை. அந்த அறையில்தான் பெட்டகம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் குடும்பத்தின் பல சொத்துக்கள் அந்த அறையில் இருக்கின்றன. அந்த அறையில் ஓசையா? வீட்டில் வெளிச்சம் இல்லாத இந்த நேரத்தில் – மணிமொழி பரபரப்புடன் அடுத்த அறைக்கு ஓடினாள்.

எப்பொழுதும் பூட்டிக் கிடக்கும் அந்த அறையின் கதவிலே பூட்டைக் காணோம். ஒரு கதவு கொஞ்சம் திறந்திருந்தது!

மணிமொழி மனம் படபடக்க அந்தக் கதவைக் கொஞ்சம் திறந்து பார்த்தாள். இருட்டு!

மணிமொழி, சுவரில் தடவிச் சுவிட்சு இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து சுவிட்சைப் போட்டாள். விளக்கு எரியவில்லை!

மணிமொழி திரும்பினாள். தன் அறைக்கு ஓடிப்போய் பாட் டரி லைட்டை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளுக்குப் பெருமூச்சு வாங்கியது. முகமெல்லாம் வியர்த்துவிட்டது!

அவள் அந்த அறைக்கதவைத் திறந்து பாட்டரி லைட்டை நேராகப் பிடித்துக்கொண்டு, சுவிட்சை அழுத்தப் போனாள். அப்போது… அவளுக்கருகில் அவளுக்குத் தெரியாமல் கதவோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவன், பளிச்சென்று அவள் கையிலிருந்த பாட்டரி லைட்டைப் பறித்துக் கொண்டு, அவளை பிடித்து உள்ளே தள்ளினான். அடுத்த விநாடி கதவைச் சாத்திவிட்டு வெளியே ஓடிவிட்டான்!

கீழே தரையில் விழுந்த மணி மொழிக்குக் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு எழுந்து வெளியே ஓடி வந்தாள்.

வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. வெளி விளக்குகளெல்லாம் நன்றாக எரிந்துகொண்டு இருந்தன. வீட்டிலுள்ள விளக்குகள் மட்டும் எரியாததற்குக் காரணம் என்ன? மணிமொழிக்கு விளங்கிவிட்டது!

மணிமொழி, தெருவில் இறங்கி விரைந்து நடந்தாள். தெரு மூலைக்கு வந்ததும், அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு வாடகைக் காரில் ஏறிக் கொண்டாள். கார் பறந்தது!

மணிமொழி, தன்னந்தனியாகப் போகிறாயே! பாதுகாப்பிற்கு கையில் ஒரு துப்பாக்கிகூட இல்லாமல் போகிறாயே, அம்மா! நீ போகுமிடம் துணையோடோ, அல்லது துப்பாக்கியோடோ போகவேண்டிய இடமாயிற்றே!

– தொடரும்…

– மணிமொழி, நீ என்னை மறந்துவிடு! (தொடர்கதை), ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *