பெரியவளும் சின்னவளும்




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வீட்டில் இரண்டு பெண்கள். பெரியவள் பெயர் லக்ஷ்மி. அவளுக்குப் பதினைந்து வயது இருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போய் வந்து கொண்டிருந்தாள். நல்ல குணங்கள் நிரம்பப் பெற்றவள். அடக்க ஒடுக்கமான பெண்.
அவள் தங்கையான சரோஜா அக்காளுக்கு நேர் மாறான குணங்களையுடைய சிறுமி. அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயது தான் இருக்கும். அமைதியாக இராள். ஆடி பாடிக் குதியாட்டம் போட்டுக் கொண்டிருப்பாள். துறு துறுத்த சுபாவம். குறும்புக் குணம் அதிகம்.
தங்கச்சியின் போக்கு அக்காளுக்குப் பிடிக்காது. அதிலும், சின்னவள் ‘அது என்ன? இது என்ன? அது ஏன் அப்படி இருக்கிறது? இது ஏன் இப்படி இல்லை?’ என்ற தன்மையில் தூண்டித் துளைக்கும் கேள்விகளை எறியும் போது, பெரியவளுக்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்காது.
சரோஜா கேட்கிற கேள்விகளுக்குத் தன்னால் பதில் சொல்ல முடியாது என்ற உணர்வு தூண்டி விடும் ஆத்திர மாகவும் இருக்கலாம். என்ன சொன்னாலும் சரி, இந்தச் சின்னக் குரங்கு ஏற்றுக் கொள்ளாது. அதுக்குத் திருப்தியே ஏற்படாது’ என்ற எண்ணத்தின் விளைவாகவும் இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், சின்னவள் வாயைத் திறந்து விட்டால், பெரியவளுக்கு எரிச்சலும் கோபமும் தான் பொங்கி வரும்.
சதா வாயடி அடிக்கிற சின்னவளை ஒரு சமயமாவது வாய் மூடச் செய்து, திகைப்பில் ஆழ்த்தி விட வேண்டும் என்ற எண்ணம் அக்காளுக்கு. அதற்கு ஒரு சந்தர்ப் பத்தை எதிர் நோக்கி இருந்தாள் லக்ஷ்மி.
புதிதாக ஒரு க தயைப் படித்ததும், சின்னவளு குப் புத்தி கற்பிக்க து உதவும் என்ற மகிழ்ச்சி பிறந் தது பெரியவளுக்கு. உடனேயே உற்சாகமாகக் கத்தி னாள் ‘சரோஜா… எட்டி, ஏ சரோஜா!’ என்று.
சரோஜா ஏதோ விளையாட்டில் ஈடுபட்டிருந்தாள். சும்மா உட்கார்ந்து கனவுதான் கண்டு கொண்டிருக்கட்டு மே! பிறர் கூப்பிட்ட உடனேயே துள்ளிக் குதித்து ஓடி வரும் வழக்கம் அவளிடம் கிடையாது. இப்பொழுதும், இயல்புப் பிரகாரம் ‘என்னோய்!’ என்று குரல் மட்டும் கொடுத்தாள் அவள்.
‘அடியே, இங்கே சித்தெ வாயேன்!’ என்று கூவினாள் அக்காள். தங்கச்சி சினுங்கினாள் ‘ஏனாம்?’ என்று.
அக்காளுக்கு எரிச்சல் பிறந்தது. கூப்பிட்டதுமே அந்தச் ‘சின்னமூதி’ எழுந்து வரவில்லையே என்றுதான். எந்தப் பெரியவருக்கும் எழக்கூடிய எண்ணமும் உணர்ச்சியும் தான் இது.
‘ஏ மொட்டைக் கடா! அங்கே என்ன தான் செஞ்சுக்கிட்டு இருக்கிறே? கூப்பிட்டால் எழுந்து வர முடியலியோ?’ என்று கத்தினாள் லக்ஷ்மி.
சரோஜா முழு மொட்டை அல்ல. ‘கிராப்பு’ மாதிரி வெட்டி விடப்பட்டிருந்தது தலைமுடி. அழகுக்காகத் தான். இருந்தாலும் பெரியவர்கள் அவளை ‘மொட்டை- மொட்டை’ என்று குறிப்பிடுவதே வழக்கமாகி விட்டது.
அக்காளுக்கோ ஒரே ஏகத்தாளம் தான்! ‘மொட்டை மொட்டை மிளக்கு ஸார்! கம்பளி மொட்டை டேக்கு ஸார்!’ என்றும், ‘பம்பை – பரட்டை – பாணாக்குடிச் சிரட்டை! தும்பை – துளசி – தூக்கிப் போட்டால் மம்பட்டி!’ (மண் வெட்டி) என்றும் பாடிக் கெக்கலி கொட்டுவாள்.
இது மாதிரிக் கூவல்களுக்கு அர்த்தம் இருக்கும், ருக்க வேண்டும் என்று சிறுவர் சிறுமிகள் எதிர்பார்ப் பதில்லை. கத்துவதற்கு உற்சாகமாக இருக்கிறதல்லவா? அதுதான் முக்கியம். கும்மாளியோடு கத்தினால், பாதிக்கப் படுகிறவர்கள் சீறவோ சினுங்கவோ தொடங்கு கிறார்களா? அப்பொழுது பிரமாதமான வெற்றி என்று தான் அர்த்தம்.
லக்ஷ்மியும் சின்னவளாக இருந்து பெரியவள் ஆனவள் தானே! சின்ன வயசிலே கற்றுக் கொண்டவை மறந்தா போகும்? தங்கச்சிக்குக் கோபம் எழுப்ப ஆசைப் படுகிற போதெல்லாம் அக்காள் இப்படித் தான் கத்துவாள். “மொட்டைக் கடா!’ என்று தான் கூவுவாள்.
அக்காள் அவ்விதம் கூப்பிட்டதும் சரோஜா தாண்டை கிழிந்து விடுவது போல் கத்தினாள். ‘இப்ப எதுக்காகக் கூப்பிடுதியாம்?’
‘இவளுக்கு வேறே வேலை இல்லை. எப்பப் பார்த்தாலும் ஏட்டி, ஏட்டி என்று கத்திக் கொண்டு!’ என் தானாகவே சினுங்கிக் கொண்டாள் அவள்.
சரோஜா என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்பதற்காக அந்த இடத்திற்கு வந்த பெரியவளின் காதுகளில் தங்கச்சியின் முணுமுணுப்பு விழுந்தது. ‘என்னடி முண முணங்கிறே? சொல்றதைச் சத்தம் போட்டுச் சொல்லேன்!’ என்று சிரித்தபடி கூறினாள்.
‘ஆமா சொன்னேன் சுரக்காய்க் கூட்டுக்கு உப்புப் போதாது யின்னு நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக் கிட்டுப் போறது தானே!…. படிச்சுப் பாஸ் பண்ணி கலெக்டரு பொண்டாட்டியாகப் போற பெரிய மனுஷி!’ என்றாள். கலகலவென நகைத்தாள்.
அம்மாவோ அத்தையோ இப்படி வக்கணை கொழித்திருப்பது இயல்பு பெரியவர்களிட மிருந்து சிறு பிள்ளைகள் கற்றுக் கொண்டு, பிறகு அவற்றை மறுபடி ஒப்பு விப்பதும் இயல்பு தானே?
‘ஏ தடிக் கழுதை! உன் தலையை நறுக்கிருவேன்!’ என்று கத்தினாள் அக்காள்.
‘கசாப்புக் கடைக்கு வேலைக்குப் போயேன்! அங்கே தலையை நறுக்க ஆள் இல்லையாம்!’ என்றாள் சரோஜா.
அவளுக்கு எப்பவுமே வாய் அதிகம் தான்!
லக்ஷ்மிக்கு ஆத்திரம்தான். ‘அப்படியே மொட்டைத் தலையில் நறுக்குனு குட்டினேனோ, உன் கழுத்தே உள்ளே போயிடும். அப்புறம்,புதுசாகப் பண்ணக் கொடுத்திருக்கிற நகையை நீ போட்டு அழகு பார்க்கவே முடியாது’ என்றாள்.
அன்றாட வாழ்வில் ‘உயர்வு நவிற்சி’ அதிகமாகிவிட் டது. சின்னவர்களை மிரட்ட விரும்புகிற பெரியவர்கள் எல்லையில்லாமலே அளக்கிறார்கள். அந்தப் பண்பு லக்ஷ்மியிடமும் காணப்பட்டதில் வியப்பு ஏது?
சரோஜா சந்தேகிக்கிறவள் போல் அக்காளை நோக்கினாள். கழுத்தைத் தடவிப் பார்த்தாள். ‘பொய்யி! என்று கூச்சலிட்டாள்.
‘எது பொய்? புது நகை செய்யக் கொடுக்கலே என்கிறியா?’
தங்கச்சி உறுதிக் குரலில் கத்தினாள். ‘பொய்! கழுத்து உள்ளே போகாது. உன்னாலே அப்படிச் செய்ய முடியாது….’
‘அது கிடக்கு, சரோ! நான் புதுசா ஒரு கதை படிச்சேன். ஜோரான கதை. அதை உன் கிட்டேச் சொல்லலாமின்னு தான் கூப்பிட்டேன்’ என்றாள் லக்ஷ்மி.
சரோஜாவுக்குச் சந்தேகந்தான். ‘சும்மா சொல்லு தே! ஏமாற்றிப் போடுவே நீ. உனக்கு ஏதாவது வேலை ஆகவேண்டியிருக்கும்’ என்றாள்.
‘இல்லேடி. நிஜம்மா அப்படியில்லை. கதை சொல்லத் தான் கூப்பிட்டேன்.’
‘பின்னே சொல்லேன்!’ என்று உத்திரவிட்டாள் சிறுமி.
‘அந்த அறைக்கு வா!’
‘பார்த்தியா, உனக்கு எதோ வேலை ஆகவேண்டி யிருக்குது. அதுதான்….’
‘இல்லேன்னா இல்லைடீ. அங்கே நீ நாற்காலியிலே சாய்ந்துக்கிடுவியாம். நான் கட்டிலிலே சாய்ந்தபடி கதை சொல்ல முடியும். அதுக்காகத்தான்’ என்றாள் லக்ஷ்மி.
‘ம்ம்’ என்ற தங்கச்சி, விளையாட்டையும் விளையாட்டுச் சாமான்களையும் அப்படி அப்படியே போட்டு விட்டு, அக்காளைப் பின் தொடர்ந்து அவள் அறைக்குப் போனாள்.
அக்காள் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
‘ஒரு ஊரிலே ஒரு பாட்டி இருந்தாள்….’
சரோஜா குறுக்கிட்டாள். நீ ஆரம்பிக்கிற கதை எல்லாமே இப்படித்தான் – ஒரு ஊரிலே, ஒரு ஊரிலே யின்னு. அந்த ஊருக்கு ஏன் ஒரு பேரு இருக்கப் படாது?’
‘ஏட்டி, நான் இப்பவே சொல்லிவிடுகிறேன். நீ மாதிரி எல்லாம் வீண் கேள்வி கேட்கப்படாது. கேட்டால்….’
‘இது வீண் கேள்வியா அம்மா? ஊர்னு இருந்தால் பேரு இருக்காதோ? இல்லே கேட்கிறேன்.’
‘இந்த ஊருக்குப் பேரு கிடையாது. அவ்வளவு தான்’
‘சரி. ஒரு பாட்டி இருந்தா. அப்புறம்?’
‘அவளுக்கு ஒரு பேத்தி உண்டு’
‘பாட்டி இன்னியே, அவ எப்படி இருந்தா? உயரமா, தடியா, தலை நரைச்சுப் போய் இருந்தாளா? எலும்பும் தாலுமா, மொட்டைத் தலைப்பாட்டியாக இருந்தாளா? அவ யார் வீட்டிலே இருந்தா?’
‘பாட்டி தனியாகத்தான் இருந்தாள்….சரோஜா, நான் கதையைத் தொடர்ந்து சொல்றதுக் குள்ளேயே அவசரப்பட்டு விடுகிறே, அது தப்பு…’
‘சந்தேகம் வந்தால் கேள்வி கேட்கப்படாதோம்மா? இது என்ன நியாயம்?’ எனச் சினுங்கினாள் தங்கை.
‘பாட்டிக்குச் சொத்து இருந்தது. தனி பங்களா இருந்தது. அதிலே அவள் தனியாகத்தான் இருந்தாள். அவள் பேத்தியின் வீடு ஒரு மைல் தூரம் தள்ளி இருந் தது. பாட்டிக்கு ஏதோ வியாதி; அதனாலே தான் அவள் தன் பங்களாவை ஊருக்கு வெளியே உள்ள இடத்தில் கட்டியிருந்தாள். அங்கு காற்றோட்டம் அதிகம். சுத்தமான காற்று உடம்புக்கு நல்லது….’
தான் படித்ததைப் படித்த மாதிரியிலேயே சொல்லிக் கொண்டு போனாள் அக்காள். வேகமாகச் சொன்னாள். தயங்கித் தயங்கிப் பேசினால், தங்கச்சி வாய் திறக்க இடமளித்தது போல் ஆகிவிடும் என்ற பயம் அவளுக்கு.
‘பேத்தி….’
‘அவ பேரு என்ன?’ என்று கேட்டாள் சரோஜா.
‘வள்ளி’ என்றாள் அக்கா.
‘வேறே அழகான பெயராக இருந்திருக்கலாம்’ என்று அபிப்பிராயப்பட்டாள் சின்னவள்.
“சரோஜா என்று இருக்கலாமா? அவளும் உன்னைப் போல் தான் இருந்தாள் துஷ்டப் பிள்ளையாக!’
‘பொய்!’ என்று கத்தினாள் சரோஜா. ‘நான் அப்படியில்லை. எங்க டீச்சர் அம்மா கூடச் சொல்லிக் கொடுத்தாங்களே-
அம்மா அம்மா வாரும்;
என்னை நன்றாய் பாரும்!
துஷ்டப் பிள்ளை நானோ?
சும்மா சொல்லுவேனா?
அக்காளுக்கு ‘ஏன் தான் கதை சொல்ல ஆரம்பித்தோம்’ என்றாகி விட்டது. ‘சரி சரி, உனக்குக் கதை வணுமா வேண்டாமா?’ என்று கேட்டாள்.
‘நீ தான் சரியாகவே சொல்ல மாட்டேன்கியே!’
‘நானா சொல்லலே?…. சரி கேளு!’
‘ம்ம். சொல்லு!’
‘வள்ளி அவளோட அம்மா கூட இருந்தா….’
‘அந்த அம்மா ஏன் பாட்டி கூட இருந்திருக்கப் படாது?’ என்று கேட்டாள் சரோஜா.
‘ஏனோ எனக்குத் தெரியாது. கதையிலே அப்படித் தான் வருது.?’
‘ம், சரி!’
‘வள்ளி ஒரு வாயாடி. எல்லாம் தனக்குத் தெரியும்; எதையும் தன்னாலே செய்துவிட முடியும் என்கிற அகம் பாவம் உன்னை மா திரி இருந்தாள்னு வச்சுக்கியேன்..’
‘உன்னை நான் ஏசுவேன். கண்டபடி திட்டுவேன்!’ என்றாள் தங்கச்சி.
அக்காள் சிரித்தாள். கதை சொன்னாள்.
‘வள்ளி வீட்டிலே சொல்லாமல் பாட்டி வீட்டுக்குப் போய்விடுவாள். தனியாக நடந்தே போய்விடுவாள்….’
‘உன்னை மாதிரி, அடுத்த தெருவுக்குப் போக ரிக்ஷா கேட்கலே பாரு. அதனாலேதான் வள்ளியை உனக்குப் பிடிக்கலே’ என்று சொல்லிப் பழி தீர்த்துக் கொண்டாள் சரோ.
லக்ஷ்க்ஷ்மி லேசாகச் சிரித்தாளே தவிர சீறவில்லை. தொடர்ந்தாள்:
‘அப்படி அவள் போவதையும் வருவதையும் ஒரு ஓநாய் பார்த்துக் கொண்டே இருந்தது.’
‘ஓநாயின்னா?’
‘அது ஒரு மிருகம்.’
‘நாய் மாதிரித்தான் இருக்குமா?’
‘நாயை விடப் பெரிசா இருக்கும். தடிப்பண்ணியாட்டம் வளர்த்திருக்கும்.’
‘அப்ப அது பண்ணியா?’
‘இல்லேடி, ஓநாய்; கொடிய மிருகம். ஆடு மாடுகளை அடித்துக் கொன்று தின்னுபோடும். குழந்தை குட்டி களைத் தூக்கிட்டுப் போய் திங்கும். சில சமயம் பெரிய ஆட்களையே தின்னுவிடும். கன்னுகுட்டி மாதிரி…’
‘கன்னுக்குட்டி ஆளுகளைத் திங்குமோ அம்மா? பேசுதியே…’
‘அவ்வளவு பெரிசா, உயரமா வளர்ந்திருக்கு மின்னு தானேடி சொன்னேன்?’
“முதல்லே பண்ணி மாதியின்னியே பின்னே! பண்ணிக்கும் கன்னுக் குட்டிக்கும் எவ்வளவு வித்தியாச மிருக்கு!’
‘போடி, உன் கூட யாருடி பேசுவா? உனக்கு ஒரு எழவுமே தெரியாது. உதாரணத்துக்குச் சொன்னால்… இப்படிச் சொல்லாமே, எப்படிடீ புரிய வைக்கிறதாம்?’
‘ம்!’
‘ஓநாய் ஓநாய் மாதிரித்தான் இருக்குமின்னு சொல்லணும்!’
‘அப்படிச் சொன்னால் புரிஞ்சிரும் பாரு, நீயும் உன் மோறையும்!’
‘உன் முகறக் கட்டை வெறும் கொழுக்கட்டை! சரி, கதையைச் சொல்லு’
‘கதையும் சொல்ல முடியாது; ஒண்ணும் சொல்ல முடியாது, போடி! எழுந்து போ’ என்று எரிந்து விழுந்தாள் பெரியவள்.
‘நீ தானே கூப்பிட்டே! உனக்கு பாக்கி கதை மறந்து போச்சு போலிருக்கு. அதுதான் இப்படிப் பேசறே!’ என்றாள் சரோஜா.
‘கண்டிப்பாச் சொல்றேன். நீ இன்னொரு தடவை இதுமாதிரி வம்பு செய்தியோ கதை சொல்ல மாட்டேன்.’
‘இல்லை….சொல்லு’ என்று வாக்களித்தாள் தங்கச்சி.
‘ஓநாய் வள்ளியைப் பிடித்துத் தின்ன வேண்டும் என்று எண்ணியது’.
‘லபக்குனு பாய்ந்து பிடிக்கிறது தானே!’
‘வள்ளியை ஏமாற்றி அவளைச் சாப்பிடத் திட்டம் போட்டது. ஒருநாள் பாட்டி வீட்டிற்குள்ளே போய் பாட்டியைக் கொன்று, அவள் ரத்தத்தைக் குடிச்சுப் போட்டு, பாட்டி மாதிரி போர்த்திக்கிட்டுக் கட்டிலிலே படுத்துக் கிடந்தது. எது? அந்த ஓநாயி!’
“ஏ, முட்டா மூதேவி!’ என்று கனைத்தாள் சரோ.
‘ஏண்டி அப்படிச் சொல்றே?’
‘வள்ளியை லேசாப் பிடித்துவிட முடியுமே. அதை விட்டுப் போட்டு, இவ்வளவு பெரிய காரியம் எல்லாம் பண்ணுவானேன்? இதிலிருந்தே அந்த மூதேவிக்கு மூளையில்லை என்று தெரியுதே!’
அக்காளுக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை. ‘கதையைக் கேளுடி!’ என்று எச்சரித்தாள்.
‘நான் கேட்காமல் என்ன செய்றேனாம்? சொல்லு; சொல்லு.’
‘வள்ளி வீட்டிலே சொல்லிக் கொள்ளாமல் பாட்டி வீட்டுக்கு வந்தாள். அப்போ சாயங்கால நேரம். பாட்டி வீட்டுக்குள்ளே இருட்டாக இருந்தது. பாட்டி, பாட்டி, ளக்கு ஏற்றவில்லையா என்று கத்தினாள். ஓநாய் தொண்டையை ஒரு மா திரி ஆக்கிக்கொண்டு, இங்கே வாடி கண்ணே; எனக்கு ரொம்ப அசதியாக இருக்குது என்றது. வள்ளி கட்டில் அருகே போய் பார்த்தாள். உன் முகம் என்னமோ மாதிரி ஆகிவிட்டதே பாட்டி என்றாள். எனக்கு வியாதி முற்றிவிட்டதடி என்றது ஓநாய் பாட்டி. கையை நீட்டி, இங்கே பக்கத்தில் வாயேன் என்றது. கைகூட எப்படியோ இருப்பதைப் பார்த்த வள்ளி பயந்து போனாள். ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாளிட்டுவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஊர்ப் பக்கம் வந்தாள். எல்லோரும் என்ன, ஏது என்று விசா ரித்தார்கள். பாட்டியைக் கா காணோம்; படுக்கையிலே ஓநாய் மாதிரி என்னமோ… என்று அழுதாள். எல்லோரும் தடி, கம்பு, அரிவாள்னு எடுத்துகிட்டு போயி,ஜாக் கிரதையாகக் கதவைத் திறந்து, ஓநாயை அடி அடி என்று அடித்துக் கொன்றுவிட்டார்கள். வள்ளியை எல்லோ ரும் கண்டித்தார்கள். தனியாகப் போனதினால் தானே இப்படி ஆச்சு; உன்னையும் ஓநாய் கடித்திருந்தால் என்ன ஆகிறது? சின்னப் பிள்ளைகள் சின்னப் பிள்ளைகளாக இருக்க வேண்டுமே தவிர, பெரியதனமாகக் காரியங்கள் பண்ணப்படாது என்றார்கள். புரியுதா, உனக்கும் சேர்த்துத் தான் இந்தப் பாடம். இந்தக் கதையிலே யிருந்து என்ன தெரியுது…?’
‘ஓநாய்க்கு மூளை கிடையாது. பெரியவர்கள் சின்னப் பிள்ளையை சரியாகப் பாராட்டுவதில்லை என்று தெரியுது!’ என்றாள் சரோஜா.
‘என்னடி உளறுகிறே?’
‘பின்னே என்னவாம்? ஓநாய்க்கு என்ன தந்திரம் வேண்டிக் கிடக்கு? நேரடியாகப் பிடிக்கிறதை விட்டுப் போட்டு! அது போகட்டும் … வள்ளி ஓடிப்போகலேன்னு சொன்னா, ஓநாய் பிடிபட்டிருக்குமா? வள்ளி தைரியமாய் தப்பலேன்னு சொன்னா, ஓநாய் உயிரோடுதானே திரிஞ்சிருக்கும்? அது ஆபத்துதானே’ என்றாள் சின்னவள்.
பெருமூச்செரிந்தாள் பெரியவள்.
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.