கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 210 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

வீட்டிலிருப்பானா..?! இருக்க மாட்டான் ! வயல்வெளிகளில் எங்காவது ஆட்களை மேய்த்துக் கொண்டு, வரப்பில் குடை பிடித்துக் கொண்டிருப்பான். அப்பா மிராசு. கிராமத்தில் விவசாயத்தை விட்டால் வேறு வேலை…?

மேட்டூர் அணை திறந்து… ஆடி மாதம் ஆற்றில் தண்ணீர் வந்துவிட்டால் ஆறு மாதங்கள் வேலை. வருடத்தில் மீதி மாதங்கள் இருப்பதை வைத்துக் கொண்டு பிழைப்பு. இருப்பது தீர்ந்துவிட்டால்.. தென்னை, புளிய மரங்களெல்லாம் சோறு போடும். என்பது அந்தக் காலம். இப்போது போர்செட் உபயத்தில் முப்போகம்.

வருகிறேன்..! என்று ஒரு வரி கடிதம் எழுதி போட்டிருந்தால் தம்பி இந்நேரம் வண்டி பூட்டிக்கொண்டு வந்து ரயில் நிலைய வாசலில் நின்றிருப்பான். இல்லை… காலையிலேயே வந்து காத்துக்கிடப்பான்.

அவனுக்கு இவன் மீது அதீத பாசம். வண்டியில் ஏற்றி இந்நேரம் கொண்டு வந்து இறக்கி இருப்பான். ஆனால் இந்த சுகானுபவத்தை அனுபவித்திருக்க முடியாது.

முதுகில் தொங்கி வந்த பை கனத்தது.

“மல்லிப்பூ.! கனகாம்பரம், கதம்பம்…” என்று மயிலாடுதுறை ஜங்சனில் ரயிலை ஒட்டி கூவி வந்த பூக்காரியிடம் வாங்கியது குண்டு மல்லிகை. ஒரு முழு பந்து.

அது இந்த வெயிலுக்கும், உள்ளே புழுங்கிக் கிடைப்பதற்கும்…வாடி, வதங்கிப் போய் இருக்கும். காற்றோட்டமாக எடுத்து வர வழி இல்லை. என்ன ஆகி இருக்குமோ…? கவலை வந்தது.

‘இருக்கட்டும்…!! இன்னும் சிறிது தொலைவு..! ‘ மனதுக்குள் சமாதானம் சொல்லி நடந்தான்.

புகைப்படத்தில் தம்பி சேகரின் மனைவி அழகாக இருக்கிறாள். மார்பளவு படம். உட்கார்ந்து எடுத்தார்களோ, நின்று எடுத்தார்களோ..!! ஜோடிப் பொருத்தம் அருமை.

இவனுக்குத்தான் தம்பியின் திருமணத்திற்கு வரமுடியவில்லை. பணமும், வாழ்த்தும் அனுப்பி வைத்தான். பதிலுக்குத் திருமண போட்டோ ஒன்று வந்தது. கூடவே… அண்ணன் வராததற்கு தம்பி வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தான்.

எதிர் பார்த்து, எதிர் பார்த்து ஏமாந்தேன் ! என்று உருக்கமான எழுதி இருந்தான். வேலை அப்படி. எல்லையில் பதற்றம். நினைத்த நேரமெல்லாம் துப்பாக்கிச் சூடு. !! அதற்கடுத்து அப்பா எழுதி இருந்தார். தம்பியை விட அவன் மனைவி மருமகளைப் பற்றித் தூக்கலாக எழுதி இருந்தார்.

‘ரொம்ப தங்கமான பொண்ணு. ஆனா… பாவம்… அஞ்சு வருசமாகியும் இன்னும் குழந்தை குட்டி இல்லே. நிறைய மருத்துவ சோதனை, மருந்து மாத்திரைகள்… யாருக்கு என்ன குறையோ..! புலம்பி இருந்தார். வயதாகி விடவில்லை. மெதுவாகப் பெற்றுக் கொள்ளட்டும் ! என்று வேறு மன சமாதான வரிகள்.

அந்த கடிதமும்.. மற்ற எல்லா கடிதங்களுடன் பத்திரமாக இருக்கிறது.’

அப்பாவின் கடிதங்களை பத்திரம் செய்து வைக்க இவனுக்கு மனமில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டார் போல.

இவன் மறக்கவில்லை. வாழ்வின் திசையை மாற்றிய அதை எப்படி மறக்க முடியும்..? இருந்தாலும்…. பத்தோடு பதினொன்றாக இருக்கட்டுமே என்று போட்டு வைத்திருக்கிறான்.

கிராமத்தில் திருமணமான மறாவது வருடமே தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். வீட்டில் தொட்டிலாட வேண்டும். அது நடக்கவில்லை என்றால்…மாமியார் மருமகளைச் சந்தேகமாகப் பார்ப்பாள். மாமனார் மருமகனைப் பார்ப்பார்.

அப்பாவும் மருமகளை அப்படித்தான் பார்க்கின்றாரா..?! இல்லை வயதான காலத்தில் சட்டு புட்டென்று பேரன் பேத்திகளைப் பார்க்க, தூக்க ஆசையோ..?!

ரகுநாதன் வேகமாக நடந்தான். எவனோ ஒருவன் எதிரே சைக்கிளில் வந்தான். இவன் அவனுக்கு வழி விட்டு ஒதுங்கி மீண்டும் நடந்தான்.

அப்பா இப்போது மாறிப் போயிருப்பாரா..?! பழசை மறந்திருப்பாரா.. ! மறந்திருப்பர். மறந்திருக்க வேண்டும்.!!

தான் வீட்டை விட்டு வெளியேறிய வேதனை. அதுவே அவருக்குப் பெரிய தண்டனை. மாற்றி இருக்கும். !!

ஊரை நெருங்க.. நெருங்க… ரகுநாதனுக்குத் தம்பியின் நினைவை விட.. அப்பாவின் ஞாபகமே அதிகம் வந்தது.

புறப்பட்டதிலிருந்து சேகர் ஞாபகம். அவனைப் பார்க்க ஆவல்.

வீட்டை நெருங்க நெருங்க அப்பா! எப்படி..?…ஆயிரம்தானென்றாலும் அப்பா என்பதினாலா..?

அப்பா மறந்திருப்பார். மறக்காவிட்டால் அவர் பாசமாகக் கடிதம் எழுதி இருக்க முடியுமா..?

‘சேகர் திருமண வயசைத் தொட்டு விட்டான். 28. திருமணம் முடிக்கனும். அவனை விட நீ மூத்தவன் உனக்கு மொதல்ல முடிக்கலாம்ன்னு விருப்பம். என்ன சொல்றே..?’ இப்படி அக்கறையாய் எழுதி இருக்க முடியுமா..?

‘எனக்கு இப்போது திருமணம் வேண்டாம். சேகருக்கு ஏற்பாடு செய்து முடியுங்கள். எனக்கு வருத்தமில்லை. வாழ்த்துக்கள்!’ என்று இவன் பதில் எழுதி இருந்தான்.

உண்மையில் இவனுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. திட்டம் வேறு!

பதினெட்டு வயதில் ராணுவ வேலைக்கு வந்தோம். முப்பத்து மூன்றில் பதினைந்து வருட வேலை நிறைவை நிறைவு செய்து முடித்து திருமணம் செய்தால்…மனைவி பயம் இல்லாமல் இருப்பாள். அப்புறம்…தமிழ்நாடு அரசு… ராணுவ வீரர் என்கிற கூடுதல் தகுதியில்…எங்காவது ஒரு இடத்தில் அரசு வேலை கிடைக்கும். 58 வயது வரை நிம்மதியாய் வாழலாம் எண்ணம்!

இவன் இப்படி எழுதியதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

வீட்டில் அம்மா இல்லை. சமைக்க பெண்ணில்லை. தம்பிக்கு ஐந்து வயதாகும்போது போய்ச் சேர்ந்து விட்டாள். எத்தனை வருடங்களுக்குத்தான் வேலைக்காரியை வைத்துக் கொண்டு ஒப்பேற்றுவது..?

சேகர் அதிகம் படிக்கவில்லை. தான் வீட்டை வீட்டுக் கிளம்பும்போது எட்டாம் வகுப்பு படித்ததோடு சரி . அதன் பிறகு அப்பா அவனைப் படிக்க விடவில்லை. உதவிக்கு வைத்துக் கொண்டாரென்று வருத்தப் பட்டு எழுதி இருந்தான்.

அதுவும் கூட சரிதான். அத்தனை நிலபுலன்களை அவர் ஒருவரே கட்டிக் காப்பதென்பது முடியாதக் காரியம். என்று இவன் நினைத்தாலும்…

அதிகம் படித்து… தன்னைப் போல் எதிர்த்துப் பேசி விடுவானோ… எகிறி விடுவானோ என்கிற பயம், உள்ளுணர்வு காரணமாகவும் அவன் படிப்பை நிறுத்தி இருக்கலாம் ! – நினைத்தான். அப்பாவிற்கு அப்படியான குறுக்குப் புத்திகள் எல்லாம் அதிகம்.

தான் வீட்டிலிருந்திருந்தால் தம்பி நிச்சயமாக அதிகம் படித்து பெரிய வேலைக்குச் சென்றிருப்பான். தன்னைவிட நல்ல படிப்பாளி. சூடப்புத்தி.. பாவம் தன் வெளியேற்றம்…அவனை கழனிகளுக்குப் பலியாக்கி விட்டது. இப்படி நினைக்கும்போதெல்லாம் தம்பியை நினைக்க நினைக்க அவனுக்குப் பாவமாக
இருக்கும்.

எவரெவருக்கு என்ன தலைஎழுத்தோ…?! இப்படி மாறிதான் மனதை சமாதானம் செய்து கொள்வான்.

ஓடி வரவேண்டுமென்றா நினைத்தோம். விதி..அப்படி செய்து விட்டது. எவருக்கும் நினைத்தது போல வாழ்க்கை அமைந்து விட்டால் தெய்வமேது..?

அன்னவள்ளி கிராமத்தில் நுழைந்து… தன் தெரு திரும்பினான் ரகுநாதன்.

வரிசையாய்… குச்சு, ஒட்டு வீடுகள். தெரு திரும்பி, முக்கம் திரும்பினால் கடைசியில் இவன் வீடு.

தெரு வீட்டுத் திண்ணைகளில், வாசல்களில் அமர்ந்திருக்கும் சிறிசு, பெரிசு, பெண்டு, பிள்ளைகள் அனைத்தும்…

“யார் அது…?” என்பதை போல் பார்த்தார்கள்.

கிராமங்களில்…

‘அன்னிய ஆடவன் கண்ணில் படக்கூடாது!’ வயசுக்கு வந்து தாவணிப் போட்ட இளசுகள் பொசுக்கென்று எழுந்து உள்ளே சென்றார்கள். கிராமத்து வயசுப் பெண்களிடம் இது ஒரு கெட்டப் பழக்கம்.. ஆணைக் கண்டால் பயந்து மிரண்டு உள்ளே சென்றுவிடுவார்கள்.

அவர்கள் அப்படி போகாமல் நின்றாலும் பெரிசுகளுக்குப் பொறுக்காது..!?

“அங்கென்ன பார்வை..? போடி உள்ளாற…” துரத்துவார்கள்.

ஆண் பெண்ணை சிறை எடுத்து விடுவான் என்கிற நினைப்பு. எல்லாருக்கும் ராவணன் மிரட்சி.

“அட…! இந்தப் புள்ளையா…?! ” எதோ ஒரு பெரிசு வாயைப் பிளந்தது.

“அடடே..! தணிகாசலத்து மவனா நீ…?”

“ஓடிப்போவனா..?”

“பெரியப் புள்ளைதானே..?!”

“இத்தினி வருஷம் கழிச்சி இப்பத்தான் வர்றீயா..? “

“நீ ஓடிப்போற அளவுக்கு உன் அப்பன் உனக்கு என்ன குறை வச்சான்..? என்ன கொடுமை செய்தான்…?”

“அப்பன் புள்ளைக்குள்ள ஆயிரம் சண்டை சச்சரவு இருந்தாலும்… நீ அப்படி தவிக்க விட்டுட்டு ஓடிப்போயிருக்கக்கூடாது.. மனுஷன் எவ்வளவு துடிச்சி போனார் தெரியுமா…?”

“உசுரை வெறுத்து ஓடிப்போய் ராணுவத்திலேயா சேர்ந்தே.?!” இன்னும் இப்படி நிறைய கேள்விகள் கேட்பார்கள்.

இதனால் தெருவை நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தான்.

“வாயேன்.! வேகாத வெயில்ல வர்றே. ஒரு வாய் மோர் குடிச்சிட்டுப் போயேன்..!” இன்னும் சில வாஞ்சை மனிதர்கள் கையைப் பிடித்து இழுப்பார்கள்!

எவர் கண்ணிலும் படக்கூடாது! என்று வேண்டிக்கொண்டு நடந்தான்.

இரண்டு மாத விடுப்பில்தான் இவர்கள் கவனிப்பு. தற்போதைய முதல் மாத காரியம்…தன் குடும்பத்தாரை அசத்த வேண்டும்.

“நம்பவே முடியல..?!!!…” என்று ஆச்சரியப்பட வைக்க வேண்டும்.

முடுக்குத் திரும்பினான் ரகுநாதன்.

வீதி என்னவோ… ‘வெறிச்’ சென்று இருப்பதாகப் பட்டது. எதுவோ ஒன்று தெருவில் குறைவதாகத் தோன்றியது.

‘என்ன தெரியவில்லை…!’

கடைசியில் இவர்களது பிரமாண்டமான வீடு தெரி… மனசுக்குள் குப்பென்று ஒரு சந்தோசம். நெருங்க நெருங்க… பரபரப்பு.

அந்தக் காலத்து மாடி வீடு. ஒட்டு வீடு வாசலில் யாருமில்லை.

வருகிறேனென்று தகவல் தெரிவித்திருந்தால்தானே வாசலில் வரவேற்க ஆளிருக்கும்..?

படி ஏறினான்.

வாசல் கதவு முழுசாய் சாத்தி இல்லாமல்… முக்காலுக்கும் அதிகமாய் சாத்தி கொஞ்சமாய்த் திறந்திருந்தது.

அம்மா இருக்கும்போது வாசல் கதவு முழுக்க பரக்கத் திறந்து கிடக்கும்.

“ஏன்ம்மா இப்படி..? ” என்று கேட்டால்…

“கூலி ஆட்கள் வர்றது, போறது தெரியாது!” பதில் சொல்வாள்.

ஆள் அரவமில்லை.

ரகுநாதன் ஒரு கையால் மெல்ல கதவைத் திறந்தான்.

வெறிச்!

அப்பா தூங்குகின்றாரா…? அடிமேல் அடி வைத்தான்.

“ச்ச்சூ..! யாரோ வர்றாங்க எழுந்திரிங்க..” பக்கத்து அறையில் பெண்ணின் கஷ்டமான, கண்டிப்பான கிசுகிசுப்பு. அதை அடுத்து…அவசர அவசரமாக எழுந்திரிக்கும் பரபரப்பு.

ரகுநாதன் துணுக்குற்று நின்றான்.

‘தம்பி… தம்பி மனைவி.. இளசுகள் இருப்பது தெரியாமல்..’ நினைத்து சங்கடமாக நின்றான்.

சில நொடிகளில்… வியர்வை வெள்ளத்தில் அள்ளிச் சொருகிய அவசரக் கோலத்தில் இளம் பெண் அறையை விட்டு வெளியே வந்தாள்.

சிந்தாமணி! தம்பி மனைவி!

அடுத்தாக வந்த ஆள்… அதிர்ச்சி!

இவன் அப்பா தணிகாசலம்!

அத்தியாயம் – 5

நிலை தடுமாறிப்போனான் ரகுநாதன்.

‘இவர்களா..? இவர்களா உள்ளே இருந்தது..? தப்புக் காரியம் செய்தது.??!’ நினைத்துப் பார்க்கவே கசப்பு!

நெஞ்சு கூசியது. மனசுக்குள் அருவருப்பும் அவமானமும் அலைக்கழித்தது.

அவரின் முக வெளிறலும், வியர்வையும் நினைத்தது சரி என்று தோன்ற… மனசுக்குள் நெருப்புப் பற்றி எரிந்தது.

தணிகாசலமும் இவனைப் பார்த்ததும் ஒருகணம் ஆடித்தான் போனார். மனமும் நடுங்கத்தான் செய்தது. அத்தனையும் ஒரே ஒரு கணம்தான்!

அடுத்த வினாடி சுதாரித்துக் கொண்டார்.

வந்து நிற்பவன் யாரென்று அவருக்கு விளங்கி விட்டது.

உடனே முகம் மாறி…

“அடடே.. ! யாரு ரகுவா… வா..வா.. ” என்று கை நீட்டி ஓடிவந்தார். பாசத்துடன் வந்து அவன் தோளைத் தொட்டார்.

அவர் தொட்ட இடம் ரகுநாதனுக்கு ‘திகு..திகு..’ வென்று எரிந்தது. வெறுப்புடன் முகம் சுளித்தான். கஷ்டத்துடன் உள்மனதை அடக்கினான்.

தணிகாசத்திற்கு விளங்கி விட்டது.

“ஏனய்யா… இப்படி மலைச்சிப் போய் நிக்கிறே..? அறையில எலித்தொல்லை. நானும் உன் தம்பி சம்சாரமும் வெளியில விடாம கதவைச் சாத்தி, அடிச்சிக் கொல்றோம்.!” சமாளித்தார்.

ரகுநாதன் நம்பத் தயாராயில்லை. அவன் முகமே அவருக்கு அதை எடுத்துக் காட்டியது.

“என்னய்யா அப்படிப்பார்க்குறே.? நிஜம்தான்!” பொய்யை மெய்யாக்க அதை இன்னொரு தரம் சொல்லி அவன் கையை இறுக்கிப் பிடித்தார்.

இது பாசமா, வேசமா, உண்மையா, பொய்யா..? – ரகுநாதன் அவரைக் கலவரமாகப் பார்த்தான்.

“அட வாய்யா! வந்து உட்காரு. வெயில்ல வந்து அப்படியே மரம் மாதிரி நிக்கிறே..? மூஞ்சி முகமெல்லாம் வெயில்ல எப்படி சிவந்து வேர்த்திருக்குப் பாரு.” தோளில் கிடந்த துண்டை எடுத்து இவன் முகம் துடைத்தார்.

நெஞ்சில் குப்பென்று பூசுமஞ்சள் வாசம். கூடவே மார்பின் மையத்தில் குங்கும ஒட்டல். வியர்வைப் பட்டு இரத்தக் கோடாய்… ரகுநாதன் அதையே வெறித்தான்.

கையும் மெய்யுமான அடையாளம். தணிகாசலத்திற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

”அட ! இது ஒண்ணுமில்ல ரகு. காலையில கோயிலுக்குப் போய் நெஞ்சுல குங்குமம் இட்டது.” சொல்லி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூடத்து பெஞ்சில் அமர வைத்தார்.

ரகுநாதன் முதுகு சுமை இறக்கி, கை பெட்டிகள் வைத்து பேசாமல் அமர்ந்தான். தணிகாசலம் அருகில் அமர்ந்து…

“என்னய்யா இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கிறே…? என்னைக்குக் கிளம்பினே..? எப்போ வந்தே..? எப்படி வந்தே.?” தணிகாசலம் அவனை அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு விசாரித்தார்.

ரகுநாதன் பதிலே சொல்லவில்லை.

உள்ளே எரிமலை… வெடித்து, சிதறி, குமுறி, கொதிக்கும்போது எப்படி பேச்சு வரும்..?!

“சிந்தாமணி! பத்து வருசம் கழிச்சி என் பெரிய புள்ள வந்திருக்கு பாரு. குடிக்க மொதல்ல மோர் கொண்டு வா. அப்படியே குடிக்க தண்ணியும் கொண்டு வா.” உள்ளே குரல் கொடுத்தார்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் சிந்தாமணி… தழைய தழைய வேறு புடவைக் கட்டி, சுத்தமாக ஆடை திருத்தி, மஞ்சள் முகம், குங்குமப் பொட்டு… கையில் செம்புடன் மருகி, மருகி நடந்து வந்தாள்.

கைகளின் நடுக்கமும், கால்களின் பின்னலும், முகத்தில் பயம் கலந்த மிரட்சியாக வந்தாள்.

ஓடிய வேகத்தில் கொல்லைக்குச் சென்று கிணற்றில் நீரெடுத்து சோப்பு போட்டு முகம் கழுவி, மஞ்சள் தேய்த்து தலை வாரி. பொட்டிட்டு..

ரகுநாதன் பூட்டையும், சாக்சையும் கழற்றி எழுந்தான்.

“ரகு எங்கே போறே..?”- தணிகாசலம்.

“முகம், கை கால் கழுவிட்டு வர்றேன்” சொல்லி விட்டு கொல்லைக்குச் சென்றான்.

இவன் யூகம் சரியாய் இருந்தது. கிணற்றடி ஈரமாக இருந்தது. அப்போதுதான் உபயோகிக்கப்பட்ட பாதி வாளி நீர் அப்படியே இருந்தது. துணி துவைக்கும் கல்லில் ஈர சோப்புப் பெட்டி. மஞ்சள் தேய்த்து கழுவி விட்ட அடையாளம்.

‘எல்லாம் சரி.. ஆக… நினைத்துப் பார்க்க முடியாத தவறு நடக்கிறது!’ முகம், கை கால், கழுவி உள்ளே வந்தான். பெஞ்சில் டம்ளர் மோர், சொம்பில் நீர் இருந்தது.

தணிகாசலம் குனிந்த தலை நிமிராமல் யோசனையுடன் இருந்தார்.

இவன் வந்து அமர்ந்ததும்தான் நிமிர்ந்தார். அவரை அறியாமலேயே முகத்தில் வாட்டம்.

ரகுநாதனுக்கு மோரைத் தொடப் பிடிக்கவில்லை.

துரோகி கை பட்டது!

ஆனாலும் தொடாமலும் இருக்க முடியவில்லை.

‘கண்டுவிட்டதாய் கண்டு கொள்ளக் கூடாது!’ மெல்ல எடுத்துக் குடித்தான்.

தணிகாசலத்திற்கு இப்போதுதான் முகம் கொஞ்சம் மலர்ந்தது.

‘ரகு! உன் தம்பி மனைவி சேகர் சம்சாரத்தை உனக்கு நான் அறிமுகப்படுத்தலையே.. ‘ என்று கூறி….

“சிந்தாமணி…!” குரல் கொடுத்தார்.

மீண்டும் அவள் பவ்வியமாய் குனிந்த தலை நிமிராமல் பத்தினியைவிடப் பக்குவமாய் வெளியே வந்தாள்.

“இதுதான் என் பெரிய புள்ள. ரகுநாதன்.” சொன்னார்.

அவள் இரு கை கூப்பி ‘வணக்கம்’ தெரிவித்தாள்.

‘அடக்கம், ஒடுக்கம், பதிவிசு, சற்று நேரத்திற்கு முன் இவளா அந்த துரோகத்தைச் செய்தாள்..?!’ சத்தியம் செய்தாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

சேகரை விட இவள் அழகு. இவள் எப்படி மாமனாரிடம் மயங்கினாள்…?!

உண்மையிலேயே இவர்கள் எலிதான் அடித்தார்களா..? நாம்தான் தவறாக நினைத்து விட்டோமா..? ஏனிப்படி ஊனக்கண்ணோட்டம்… மனசு பழசை மறக்கவில்லை. அதன் பாதிப்பு. இப்படி பார்க்கச் சொல்லிவிட்டதா..? முதலிருந்த பயம், மிரட்சி, கலவரம், துளி இவர்களிடம் இல்லை. அதற்குள் மறைந்து விட்டதா..?

“நீ போ சிந்தாமணி. உன் கொழுந்தனாருக்குச் சாப்பாடு எடுத்து வை” தணிகாசலம் உத்தரவிட்டார்.

அவள் நகர்ந்தாள்.

ரகுநாதன் தலை குனிந்தான். நெஞ்சில் நிறைய யோசனைகள்.

“ரகு! சாப்பாடு வைக்கச் சொல்லிட்டேனே..! குளிச்சிட்டு சாப்புடுறீயா..? குளிக்காம சாப்புடுறீயா..?” தணிகாசலம் அக்கறையாய்க் கேட்டார்.

பயணக் களைப்பும், வியர்வைக் கசகசப்பும் இருக்கத்தான் செய்தது.

”குளிச்சிட்டே சாப்பிடுறேன்..!” எழுந்தான்.

‘பெட்டி, பைகளை எங்கே வைப்பது..?’ ஒரு நிமிட யோசனை, தடுமாற்றம்.

அந்த வீட்டில ஆறு அறைகள். அவன் போகும்போது அப்பாவிற்கு ஒரு அறையும். அண்ணன் – தம்பிகளுக்கு ஒரு அறையும் மட்டும் பழக்கத்திலிருந்தது.

மற்ற அறைகளில்.. தட்டுமுட்டு சாமான்கள். நெல், களப்பை, மண்வெட்டி சமாச்சாரங்கள்.

இவன் தடுமாற்றத்தைக் கவனித்த தணிகாசலம்…

“சிந்தாமணி ! தம்பி புழங்க… உங்க அறைக்கும் அடுத்த அறை வெறுசா தானே இருக்கு. அதை ஒழிச்சுக் கொடு..” என்றார்..

“சாப்பாடு…?” – அவள்.

“அப்புறம் சாப்பிடுறானாம்..”

அவள் விளக்குமாறு கையுமாக அந்த அறைக்குள் புகுந்தாள்.

“சேகர் இல்லையாப்பா..?”

“அவன் களத்து மேட்டுக்குப் போயிருக்கான். இன்னைக்கு நம்ம மோரங்கட்டளை நிலம் அறுவடை.”

‘ஆளை அப்புறப்படுத்திவிட்டுதான் காரியம் செய்திருக்கிறார்கள்..?!’ இருப்பது மூன்று பேர். அவன் அந்தண்டை சென்றுவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம்.

“தம்பி வருவானா..?”

“வரமாட்டான். நான் போய் அனுப்பறேன். “

களத்தில் கட்டு அடிப்பார்கள். இவர் சென்றால்தான் அவன் இங்கே வரமுடியும்.

“சுத்தம் பண்ணியாச்சு மாமா..” – சிந்தாமணி இவன் காதுகளுக்குக் கேட்குமாறு மாமனாருக்குக் குரல் கொடுத்தாள்.

ரகுநாதன் தன் பை, பெட்டிகளுடன் அந்த அறைக்குச் சென்றான். அறை கூட்டி சுத்தமாக இருந்தது.

பெண்ணின் வேலையே தனி. அதன் நேர்த்தியே அழகு.!! இவன் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான்.

பேண்ட், சட்டையிலிருந்து லுங்கிக்கு மாறி வெளியே வந்தான். கிணற்றடிக்குச் சென்றான். இப்போதுதான் கவனித்தான் அது இன்னும் மாறாமலிருந்தது. வாழையும், தென்னையுமான தோப்பும் துப்புரவாக இருந்தது.

தான் இங்கிருக்க… அவர்கள் உள்ளே பேசிக்கொள்வார்களா..?

ஆள் கண்டுபிடிச்சிட்டான். எச்சரிக்கை! ஒருத்தருக்கொருதர் சொல்லிக் கொள்வார்களா..?

ச்சே…! புத்தி அதையே நினைக்கிறது.. தப்பாகவே நினைக்கிறது. தவறாகவே யோசிக்கிறது. ஏன்.. முதல் கோணல் முற்றும் கோணலா..?

எலி அடித்தல் ஏன் உண்மையாக இருக்கக்கூடாது..?

“ச்ச்சூ ! யாரோ வர்றாங்க எழுந்திரிங்க..” எலி அடிக்கும் போது எப்படி இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்..? – ரகுநாதனுக்கு உள்ளே கொதித்தது.

வாளி வாளியாக நீரை இறைத்து தலையில் கொட்டிக்கொண்டான்.

குளித்துவிட்டு உள்ளே வரும்போது சாப்பாடு தயாராக இருந்தது.

சாப்பிட்டுவிட்டு கை கழுவி கூடத்திற்கு வந்தான்.

“அப்போ.. நான் போய் சேகரை வர சொல்றேன்..!” தணிகாசலம் குடையுடன் புறப்பட்டார்,

ரகுநாதனுக்கு பூ ஞாபகம் வந்தது.

“சிந்தாமணி! பெட்டியில் உங்களுக்குப் பூ, புடவை, வேட்டி துணிமணியெல்லாம் இருக்கு..” சொல்லி அறையிலிருந்து ஒரு பெட்டியை வெளிய எடுத்து வைத்து விட்டு உள்ளே சாய்ந்தான்.

பயணக்களைப்பு கண்களைச் சொருகியது.

சிந்தாமணி… வெளியில் இருந்த பெட்டியைத் திறக்க.. பல வண்ணங்களில் புடவைகள். அப்புறம் வேட்டி, சட்டை, துண்டுகள்.. என்று துணிக்கடையில் பாதி வந்திருந்தது.

ரகுநாதன் அரைமணி நேரம் தூங்கி இருக்க மாட்டான். அதற்குள் யாரோ வந்து உலுக்கினார்கள்.

அத்தியாயம் – 6

ரகுநாதன் கண் விழித்துப் பார்த்தான்.

சேகர்! அவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் மின்சாரம்.

அண்ணன் எழுந்து உட்கார அவகாசமில்லை. சேகர் அவனை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டு விசும்பினான்.

பிரிந்தவர்கள் கூடினால்..? அதுவும் பத்தாண்டுகள் கழித்து..! சேர்த்து வைத்திருந்த பாச நேசமெல்லாம் அப்படியே உருகி கண்ணீராய் மாறி…

ரகுநாதனுக்குச் சங்கடமாக இருந்தது.

“ஏய் சேகர் ! அதான் நான் வந்துட்டேன்ல்லே. ஏன் அழறே..?” ரகுநாதன் அவன் முதுகை ஆதரவாய்த் தட்டி சமாதானப்படுத்தினான்.

ஆனாலும் அவனிடம் அழுகை நிற்கவில்லை.

அடக்கினால் அகலாது. தானாக நின்றால்தான் சரியாக இருக்கும்..! ரகுநாதனுக்குப் புரிய… அதற்கு மேல் பேசாமல்… தம்பி முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.

“அப்பா வந்து சொன்னதும் என்னால நம்ப முடியல. ஓட்டமா ஓடி வந்தேன். இன்னும் எனக்கு நம்பிக்கை இல்லே. கனவா, நனவா குழப்பமா இருக்கு..”

“கனவில்லே. நிஜம்!” அழுத்திச் சொல்லி தம்பி கண்களைத் துடைத்துவிட்டான். துடைத்த கைகளைச் சேகர் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

அந்த இறுக்கலில் தம்பியின் பாசம் புரிந்தது.

“சேகர்! உனக்காகத்தான்டா வந்தேன். உன் கவலைதான் எனக்கு. அதனாலதான் பழசை மறந்தேன். உறவைப் புதுப்பிச்சேன். கடிதம் போட்டேன்!” – ரகுநாதன் வாய் விட்டு சொல்லவில்லை. மனசுக்குள் சொன்னான்.

சிறிது நேரத்தில்….அண்ணன் தம்பிகள் விலகி நிறைய பேசினார்கள். சேகர்தான் அதிகம் பேசினான். கேள்விகள் கேட்டான். பேச்சின் இடையே சொல்லாமல் வந்ததற்காகவும், ரயில் நிலையத்திலிருந்து நடந்து வந்ததற்காகவும் நிறைய வருத்தப்பட்டான் . கடைசியில்…

“அப்போ… நான் கிளம்பறேன்..!” என்று எழுந்திரிக்கும்போதுதான்…

“எங்கே போறே..?” ரகுநாதன் கேட்டான்.

“களத்துக்கு..! “

“அதான் அப்பா போயிருக்காரே..!”

“அவரை விட்டா அவ்வளவுதான். குண்டுமணி நெல் வீட்டுக்கு வராது!”

“ஏன்…?”

“எல்லாம் தாட்பூட் செலவுதான். வண்ணான், பரியாறி, தச்சன், கொல்லன் என்கிற ஊர் தொழிலாளிகள் மட்டுமில்லாம ஊர்ல உள்ள கிழம் கட்டைகளெல்லாம் வந்துடுவாங்க. ஆள் முகத்தைப் பார்த்து அள்ளி வீசுவாரு.” சொன்னான்.

கிராமத்தில் ஊருக்கு ஒரு வண்ணான், பரியாறி, தச்சன், கொல்லன், வெட்டியானென்று தொழிலாளிகள் பொதுப்படையாக இருப்பார்கள். இவர்களெல்லாம் பண்ணை, மிராசு மனைகளில் குடி இருப்பார்கள். பண்ணை மிராசுகளுக்கு மட்டுமில்லாமல் ஊர் மக்களுக்கே காசு வாங்காமல் சில்லறை வேலைகள் செய்து கொடுப்பார்கள். கூலிகளை நெல்களாக களங்களிலும், வீடுகளிலும் பெறுவார்கள்.

இப்படி களத்திற்கு நிற்கையில் ஊரிலுள்ள வயதானவர்களும் வந்து நிற்பார்.

“நீ அப்படியெல்லாம் செலவு செய்ய மாட்டீயா சேகர்..?”

“செலவு செய்வேன். அளவா செய்வேன். கஷ்டப்படுறவங்களுக்குக் கொடுப்பேன். வெட்டியா வந்து நின்னு வருமானம் பார்க்கிறவங்களுக்குக் கொடுக்க மாட்டேன். உழுதவன் கணக்குப் பார்த்தா.. உழக்கு மிஞ்சாது மிஞ்சாது ரகு. அதனால்தான் அனாவசியங்களை ஒதுக்கிடுவேன். இது என் யோசனை இல்லே. சிந்தாமணி யோசனை. அவ சொல்லிக் கொடுத்தது..” மனைவியைப் பற்றிப் பெருமையாகச் சொன்னான்.

‘அவளா இப்படி எல்லாம் சொல்லிக்கொடுத்தாள்..?!!′ – ரகுநாதனுக்குள் வியப்பு வந்தது.

கெட்டவர்களிடம் எப்படி இந்த நல்ல புத்தி…?! கட்டிக் காக்க வேண்டுமென்கிற நல்ல எண்ணம். சொத்தாசையா…? இதனால்தான் மாமனாரை வளைத்துப் போட்டிருக்கிறாளா..? என்ன திட்டம்..?

ரகுநாதனுக்குள் அவனை அறியாமலேயே வார்த்தைகள் ஓடியது.

“என்ன ரகு கம்முன்னு இருக்கே..?”

“ஒன்னுமில்லே..”

“நான் களம் முடிச்சிட்டு வரும்வரை இங்கேயே இரு. ஓய்வெடு”. கிளம்பிவிட்டான்.

ரகுநாதனுக்கும் அசதியாக இருந்தது.

படுத்தான். தூக்கம் வரவில்லை.

புரண்டு புரண்டு படுத்தான். சுத்தமாகத் தூக்கம் வரவில்லை.

எழுந்து பெட்டியைத் திறந்து அதன் அடியில் பத்திரப்படுத்தி வைத்திருந்த தம்பியின் திருமணப் படத்தை எடுத்தான்.

அதையே வினாடி நேரம் உற்றுப் பார்த்தான்.

சேகர் விகல்பமில்லா முகத்துடன் கள்ளமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான். ஒட்டி பரம சாதுவாக சிந்தாமணி.

‘தம்பி ! உனக்குத் துரோகம் நடக்குதுடா…!’ வாய் விட்டு கதறி அழவேண்டும் போல் மனசு துடித்தது ரகுநாதனுக்கு. அப்படி முடியாமல் கண்களில் நீர் கோர்த்தது.

அதற்கு மேல் அந்தப் படத்தைப் பார்க்க விருப்பமில்லாமல் திரும்ப பெட்டியில் வைத்து விட்டு படுத்தான்.

பெற்ற மகனுக்குக் கட்டியவளை, வீட்டிற்கு மாட்டுப் பெண்ணாய், மருமகளாய் வந்தவளை, மாற்று மகள் மருமகள்…அப்பா ! அப்பா! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது. நீங்கள் எப்படி…? அப்பா அவளை எப்படி ஆட்கொண்டார். அவளெப்படி சம்மதித்தாள்..? வாலிபத்திற்கும் வயோதிகத்திற்கும் எப்படி முடிச்சு..?

அப்பா வயோதிகமா..?!

நிச்சயமாக ஐம்பதைத் தாண்டும். ஆனால்… உடல், முகத்தில் முதுமை தெரியவில்லை. வர அச்சப்பட்டு நிற்பது தோற்றம்.பத்து வயது குறைத்துக் காட்டுகிறது. பத்து வருடங்களுக்கு முன் அப்பா எப்படி இருந்தாரோ.. அப்படியே இப்போதும் இருக்கிறார். எந்த விதத்திலும் மாற்றமில்லை. மயக்கி விட்டாளா..? மயக்கி விட்டாரா..? இது யார் விரித்த வலை. முதலில் யார் போட்ட சுழி.

அப்பாவா…? இருக்கும்! இருக்குமா…? என்னதான் மோகினியானாலும் வீட்டிற்கு வந்த மருமகளிடம் இப்படி நடக்க எப்படி மனசு துணியும்..?

சரி. அவர்தான் அறிவு கெட்டு பிள்ளையார் சுழி போட்டாரென்றால் சிந்தாமணிக்கு எங்கே போயிற்று புத்தி..?

கணவனுக்குத் துரோகம்! என்று உறுத்தவில்லையா..? மனசு வருத்தவில்லையா. கொண்டவனைத் தவிர கண்டவன் கண் பட்டாலே கூசிப்போகும் தமிழ்நாட்டுப் பெண்களிடம்… இவளெப்படி மாறுபாடு..?

அப்பா மிரட்டினாரா..?! பலவந்தப்படுத்தினாரா..? என்னதான் கட்டிப்போட்டு அடித்தாலும், உதைத்தாலும் எப்படி உடன் படுவது..? கை பட்ட அடுத்த வினாடி உயிர் போயிருக்காதா..?

சரி. அவர் சுழி போடவில்லை. இவள் போட்டாள். ஏன்…? என்ன காரணம்..? எதைச் சாதிக்கப்போகிறாள்..?

அவள் போட்டாலும் ஒரு நல்ல தகப்பன், மாமனார்.. என்ன செய்திருக்க வேண்டும்..? ஓங்கி அறை விட்டு கண்டித்திருக்க வேண்டும்.

இவர்கள் எதையும் நினைக்காத மிருகங்களாகிவிட்டார்கள்

இப்படி என்னென்னவோ நினைத்து… எப்போது தூங்கினானோ… ரகுநாதன்…கண் விழிக்கும்போது.

மணி மாலை 5.00.

இவன் விழிப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல்..சிந்தாமணி ….

“டிபன் ரெடியா இருக்கு. சாப்பிடுறீங்களா..?” அறைவாசலில் ஒட்டிக்கொண்டு கேட்டாள்.

இவன் தலையை மட்டும் ஆட்டி கொல்லைக்குச் சென்றான்.

முகம், கை கால், கழுவி முடித்து வரும்போது…. கூடத்து மேசையில் வெங்காய அடையும், வாழைக்காய் பஜ்ஜியும் மணத்தது.

அப்பா! இப்படி வீட்டுப் பலகாரங்களைச் சாப்பிட்டு எத்தனை வருடங்களாகிறது..?

அவனையுமறியாமலேயே நாக்கில் எச்சில் ஊறியது.

எந்தவித சுவையும் இல்லாத ராணுவ… சாப்பாடு. வெறும் உடல் வலிமையையும், வயிற்றையும் மட்டுமே நிரப்பும்.

நாற்காலியில் அமர்ந்து தின்றான்.

சிந்தாமணி..அடுப்பங்கரை கதவிடுக்கு வழியே பார்த்தாள்.

எந்தப் பேச்சும் பேசாமல் எப்படி வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்திருப்பது…? ஒரு மரியாதை நிமித்தமாவது இரண்டு வார்த்தைகள் பேசவேண்டும்…! – நினைத்து…

“சேகர் வரலையா..?” கேட்டான்.

“வரல. களம் முடிச்சி வர நாழியாகும்”

“அப்பா….?”

”மாமாவும் தான்!”

அதற்கு மேல் பேசாமல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ….உடன் காபி வந்து மணத்தது.

மரியாதை, விருந்தோம்பல் கச்சிதம். இந்தப் பூனையா பால் குடித்தது..? திருட்டுத்தனம் செய்தது..? – ரகுநாதன் நினைத்தான்.

அடுத்து என்ன செய்ய…?

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. தொல்லைக் கொடுக்கும் ஏதாவது ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். இந்த வீட்டில் அதன் வாசமே இல்லாமல் வெறுமனே முடங்கிக் கிடக்கிறது. ஏன்..? யாரும் பார்க்க மாட்டார்களா..? தலைக்கு மேல் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும்போது தொட எப்படி துணிவு வரும்…? இவனும் பார்க்க மாட்டான். பிடிக்காது.

மௌனமாக அமர்ந்து புத்தகம் படிக்கலாமா..? சிந்தாமணி மரியாதை நிமித்தம் இப்படி அப்படி அகலவில்லை,. தன் முகத்திற்கு எதிரே தலை காட்டாமல் உள்ளுக்குள்ளேயே உழலுகிறாள். நாமும் ஒரு பேச்சு மூச்சின்றி வெறுமனே புத்தகத்தை விரித்துக் கொண்டு அமர்ந்தால்… நன்றாக இருக்குமா..? இழுத்து வைத்து எதை பேசுவது..? இத்தனை நாள் ஒட்டு உறவு ஏதுமில்லாமல் எப்படி திடீரென்று பேசுவது…?

இரண்டு வார்த்தைகள் பேசியதே அதிகம். அதற்கும் அவள் பதில் சொல்லி விட்டாள்.

இனி பேச என்ன இருக்கிறது..?

செம்பட்டையனை வரச் சொன்னோமே..? ஏன் வரவில்லை…?

ரகுநாதன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *