பூவும் பழமும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2024
பார்வையிட்டோர்: 5,117 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இவ்வளவு இடம் வீணாகப் போகிறதே. ஒரு தோட்டம் போட்டால் என்ன? ஆட்கள் இருக்கிறார்கள். பார்த்துக் கொள்கிறார்கள். நமக்கும் நல்ல பொழுதுபோக்கு, நல்ல அழகான பூந்தோட்டம் போட எனக்கு மிகுந்த ஆசை” என்றாள் ஸப்-கலெக்டர் வாசுவின் மனைவி அம்மு.

“உன் பூச்சூட்டலுக்கு இந்த ஊர்ப் பூக்கடைத் தெருவையே விலைக்கு வாங்கி விடுகிறேன். போதுமா? நாம் எதற்குத் தோட்டம் போட்டுக் கஷ்டப்பட வேண்டும்? பக்கத்து பங்களாவைப் பார். ஒரு மாசமாகப் பூட்டிக் கிடக்கிறது. தோட்டம் காடாக மண்டி விட்டது. பயிர்பச்சை வீட்டைச் சுற்றி இருந்தால் பூச்சி பொட்டு அண்டும். இப்படி ஒரே ஓடலாக இருப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொன்னார் கலெக்டர் வாசு.

“ஹும். ரசனையே இல்லாத மனுஷர்” என்று நினைத்துக் கொண்ட அம்மு யோசனையில் ஆழ்ந்து விட்டாள். வாசு உள்ளே போய் விட்டார்.


வேஷ்டியை இழுத்துக் கட்டிக் கொண்டு மண்வெட்டியும் கையுமாகத்தானே பாத்திகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தான் வாசு. “ஏண்டா, முனியா! அந்த மஞ்சள் ரோஜாப் பாத்தியைச் சருகில்லாமல் சுத்தம் பண்ணியாச்சா? அந்தச் சம்பங்கிக்கு நிறையவே ஜலம் கட்டு” என்று முனியனை விரட்டுவதும், “அம்மா! மரகதப் பச்சையின் நடுவே முத்துப் பதித்தாற்போல் பூத்துக் குலுங்கும் இந்த மல்லிகைச் செடியின் அழகுக்கு வேறு எதுவுமே இல்லை அம்மா. இந்தக் கரிசந்தமம் சட்டியை மேவண்டைப்புறம் வைத்தால் அழகா யிராது?” என்று அம்மாவை யோசனை கேட்பதுமாகப் பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தான்.

வாசுவுக்குப் பூச்செடிகள் என்றால் உயிர். ஒவ்வொரு செடியின் பிறப்பு வளர்ப்பும், ஒவ்வொரு கதை சொல்லும் அவனுக்கு. பூத்துக் குலுங்கும் தோட்டத்தைக் கண்டு பூரித்துப் போய் விடுவான் வாசு. நண்பர்களை அழைத்துப் பெருமையாகக் காட்டுவான், தன்னுடைய அருமைக் குழந்தையைக் காட்டி மகிழும் தாய் போல.

நண்பர்கள் கூறுவதற்கு முன் அவனுக்கு அந்த எண்ணமே எழுந்ததில்லை. ‘நகரசபை யார் நடத்தும் பூங்காவனப் போட்டியில் நீயும் கலந்து கொள், பரிசு கிடைக்கும்’ என்றதும் வாசு, “பரிசு எதற்கு? பரிசுக்காகவா உழைக்கிறேன்? செடிகளுக்காகப் பாடுபடுகிறேன். அதை மனப் பூர்வமாக ஏற்று மகிழும் செடிகள் பிரித்து மலர்ந்து தம் நன்றியைக் காட்டி விடுகின்றன அல்லவா? அதை விடவா மற்றப் பரிசுகள் உயர்வு?” என்று வாதித்து வந்தான்.

“அப்படியில்லை, வாசு, இந்த வருஷம் உன் பூத்தோட்டத்துக்குத்தான் முதற்பரிசு கிடைக்கப் போகிறது. நீ கண்டிப்பாகப் போட்டியில் கலந்து கொள்ளத்தான் வேண்டும்” என்று அனைவரும் ஒரு முகமாக அடித்துக் கூறியதும், வாசுவுக்கும் சபலம் தட்டிற்று.

ஒரு வாரமாக வாசு தோட்டத்திலேயே குடியிருந்தான், பாத்திகளைச் சீராக்குவதும், செடி கொடிகளை ஒழுங்குபடுத்துவதுமாக. ‘முதற் பரிசு,’ ‘முதற் பரிசு’ என்று அவன் மனம் இடையறாமல் ஜபித்துக் கொண்டிருந்தது. மறுநாள் காலையில் அதிகாரிகள் தோட்டத்தைப் பார்வையிட வர இருந்தனர்.

“போதும் வாசு! உள்ளே வந்து காப்பியைக் குடி. எப்பொழுது பார்த்தாலும் மண்ணை அளைந்து கொண்டிருந்தால் வேறு வேலை இல்லையா?” என்று அலுப்புடன் அதட்டினாள் அவன் அம்மா. பிள்ளை சதா சர்வதா புஸ்தகமும் கையுமாக இல்லையே என்ற குறை அவளுக்கு!

“கொஞ்சம் இரு, அம்மா,பத்து, பதிறென்று…ம்…இங்கே ஒண்ணு-பன்னிரண்டு, இதோ ஒளிஞ்சிண்டிருக்கே ஒண்ணு, பதியணு, பதினாலு. அம்மா! அம்மா!! இங்கே வந்து பாரேன். இந்தத் துளிபூண்டு செடியிலே பதினாலு மொட்டுகள் அம்மா! நாளைக்குக் காலையில் இந்தப் பதினாலு ரோஜாவும் மலத்து விரித்தால் எத்தனை அழகாக இருக்கும்! பார்வையாளர்கள் அப்படியே சொக்கிப் போய் விடுவார்கள்.” வாசு மண்ணை உதறிக்கொண்டே உள்ளே சென்றான். அம்மாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.


“‘ஒண்ணே ஒண்ணு, ஒண்ணே ஒண்ணு’ என்று சொல்வியே எட்டுத் தோசை போட்டாச்சு அம்மா, எனக்கு வயிறா, வண்ணான் சாலா? ஊஹூம், ஒரு விள்ளல் கூட வேண்டாம்” என்று பிடிவாதமாக மறுத்து விட்டு எழுந்தான் வாசு, ஈரக் கையைத் துடைத்துக் கொண்டே வாசலுக்குப் போன வாசு, “அம்மா! அம்மா!! டே முனியா! டே ஜடாமுனி!!” என்று அலறுவதைக் கேட்டு, ‘என்னவோ, ஏதோ’ என்று பயந்து போய் ஓடிவந்தாள் அவன் அம்மா.

“கூப்பிட்டீங்களா எசமான்?” என்று நிதானமாகக் கொல்லைப்புறத்திலிருந்து வத்த முனியன் வாசுவைக் கண்டதும் பயத்து நடுங்கி விட்டான்.

”என்ன அக்கிரமம்! உள்ளே போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் – அரைமணி நேரம் கூட இல்லை. அத்தனை பூவையும் காணோமே !..ஏண்டா கழுதை! நீ இங்கே எதற்கு இருக்கிறாய்? யார் வந்து பறித்தார்கள்? திருட்டுக்கு நீயும் உடைந்தையா?” வாசுவின் துக்கம் முழுவதும் முனியன் மீது கோபமாகத் திரும்பியது.

“ஐயோ சாமி! நான் பின்னாலே சண்பக மரத்தடியில் இல்லே இருந்தேன்? நீங்கள் தான் முன் பக்கம் இருக்கிங்களேன்று சிறிது கண்ணயர்ந்துட்டேன். அதற்குள் யார் வந்திருப்பாங்க?” என்று முனியன் மென்று விழுங்கினான்.

“போனால் போகிறது. இதற்காகக் குடியே முழுகிவிட்டது மாதிரி வருத்தப்படுவார்களா? ‘கேட்’டைப் பூட்டாமல் வந்தது நம் பிசகு.”

அம்மா வாசுவைச் சமாதானப்படுத்துவதற்கு ஆரம்பித்தாள்,

“என்னம்மா? போட்டிக்குப் பெயரைக் கொடுத்து விட்டு, நாளைக்குப் பார்வையாளர்களெல்லாம் வந்து பார்த்தால் எத்தனை அவமானம்!” – வாசுவுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

“சாமி, சாமி, அதோ ஒரு பொண்ணு, சுவரோரமாகப் பதுங்கிப் பதுங்கி ஓடுதுங்க. அது மடியில் பூத்தானுங்க. அச்சச்சோ! ரோட்டுக்குப் பூட்டுதுங்களே” – முனியன் பலமாகக் கத்தினான்.

வாசு குதித்து எழுத்து ஓடினான். பூவை எடுத்துக்கொண்டு ஓடும், பச்சைப் பாவாடை கட்டிய சிறுமியை அவன் கண்கள் இனம் கண்டு கொண்டுவிட்டன. சிறுமி ஓடிச் சென்று மறைந்த வீட்டைக் கவனித்த பின் தான், அவன் ஓடுவதை விட்டு நடக்க ஆரம்பித்தான்.

சிறுமி நுழைந்த வீட்டினுள் சூறாவளி போல் புகுந்த வாசு ரேழியிலேயே நின்று விட்டான்.

“டீச்சர்! டீச்சர்!! அங்கே நிறையப் பூத்துக்கிடக்கு. உங்களுக்குப் பூன்னா ரொம்பப் பிடிக்குமோல்லியோ டீச்சர்? அங்கே யாருமே இல்லை டீச்சர், எவ்வளவு வேணுமானாலும் பறிச்சுக்கலாம்.”

“அப்பா! எத்தனை பெரிய ரோஜா மொட்டு! ஏன் கண்ணம்மா, இப்படி அரும்பும் காயுமாகவா பறிப்பது? நாளைக்கு மலர்ந்த பின் கொண்டு வந்தாலும், வெள்ளிக்கிழமை, அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணலாம்.”

“ஊம். யாரோ ஒருவர் பாடுபட்டுப் பயிர் செய்தால் பூவைத் திருடிக் கொண்டு வந்து அம்பாளுக்கு அர்ச்சனை மட்டுமா பண்ணலாம்? டீச்சரம்மா அலங்காரம் கூடச் செய்து கொள்ளலாம்…” கோபக் கனலை வார்த்தைகளாகக் கக்கிக் கொண்டு, எரிமலை போல் வந்து நிற்கும் வாலிபனைக் கண்டதும் திகைத்துப்போய் நினறாள் ‘டீச்சர்’.

“திருட்டு வெளியாகிவிட்டதே என்று வெட்கமாக இருக்கோ? முதலிலேயே அந்தப் புத்தி எங்கே போச்சு? ஊரார் வீட்டுக் குழந்தைகளைத் திருட அனுப்பினால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்! எதிர்கால இந்தியப் பிரஜைகளை உருவாக்கும் நவயுகச் சிற்பி! உங்களிடம் சிக்கிய மாணவிகள் நன்றாக உருப்படுவார்கள்!” என்று வாசு பொரிந்து கொட்டினான் வார்த்தைகளை.

அந்தப் பெண்ணுக்கும் கோபம் வத்து விட்டது. “நாக்கை அடக்கிப் பேசுங்கள், மிஸ்டர். எந்தக் குபேரப் பட்டணம் கொள்ளை போய் விட்டதென்று குதிக்கிறீர்கள்? நான் உங்களை முன்பின் பார்த்தது கூட இல்லை” என்று படபடத்தாள்.

“ரொம்பப் பேச வேண்டாம். கையும் களவுமாகப் பார்த்தபின் தான் ஓடி வந்திருக்கிறேன். இந்தப் பூவெல்லாம் என் தோட்டத்தில் பூத்தவை. இந்தத் திருட்டுக் கழுதை திருடிக்கொண்டு வந்திருக்கிறது. உண்டா, இல்லையா? அவளையே கேளுங்கள்,” பயந்து நடுங்கிச் சுவர் ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த சிறுமியின் கையைப் பிடித்துக் கரகரவென்று இழுத்து முன்னால் தள்ளினான் வாசு.

“மிஸ்டர்! ஊரார் வீட்டுக் குழந்தையை வீணாக அடித்துத் துன்புறுத்த வேண்டாம். விடுங்கள். நானே விசாரிக்கிறேன்” என்று, தேம்பும் சிறுமியை அணைத்துக் கொண்டாள்.

சிறுமியின் கண்ணீரைத் துடைத்தபடியே, “ஏன் கண்ணம்மா, ஒருத்தரையும் கேட்காமல் பூ கொண்டு வரலாமா?” என்றாள்.

“இதில் பொய் வேறு ! கேட்பாரே இல்லை யாம்” என்று வாசு குறுக்கிட்டான்.

“நீங்கள் சும்மா இருங்களேன், கொஞ்சம்! கண்ணம்மா! பொய் சொன்னால் டீச்சருக்குப் பிடிக்காது என்று உனக்குத் தெரியாதா?”

“இல்லை டீச்சர், உங்களுக்குப் பூன்னா ரொம்பப் பிடிக்குமேன்னு நான் கொண்டு வந்தேன். இனிமேல் இப்படிச் செய்யமாட் டேன் டீச்சர்” என்று விகம்பிய கண்ணம்மா, டீச்சரின் மார்பில் முகத்தைப் புதைத்தும் கொண்டு ‘ஓ’வென்று பலமாக அழுவதற்கு ஆரம்பித்து விட்டாள்.

“ஸார்! குழந்தை தெரியாத்தனமாகச் செய்து விட்டாள், மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் இந்த மாதிரி நடக்க விட மாட்டேன்….” அவள் அத்துடன் நில்லாமல் தொடர்ந்து, “இந்தாருங்கள். பூவை எடுத்துக் கொண்டு போங்கள். தயவு செய்து மன்னித்து விடுங்கள்” என்று கூறியதும் வாசுவுக்கு ஆத்திரம் பீறிக் கொண்டு வந்தது.

“பறித்த பூவைக் கொண்டுபோய்ச் செடியில் ஓட்டினால் ஒட்டுமா? மன்னிப்புக் கேட்டு விட்டால் செய்த தவறு நேராகிவிடுமா?” வெறிபிடித்தவன் போலக் கத்தினான் வாசு.

“கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகளைக் கூட மீட்க முடியாது ஸார். போனால் போகிறதென்று பார்த்தால் ஓடஓட விரட்டுகிறீர்களே, பெண் பிள்ளை ஒருத்தி தனியாக இருக்கும் வீட்டில் நுழைந்து கூச்சல் போட்டுக் கலாட்டா செய்வது மட்டும் ரொம்ப ஒழுங்கோ?” என்றாள் அவள்.

கழுத்தில் கை வைத்துத் தள்ளாத குறையாக ஒளிக்கும் அவள் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் வெளியேறினான் வாசு.

ஏமாற்றமும், அவமானமும். சோர்வும் அவனைப் படுக்கையில் கிடத்திவிட்டன. எமன் வாயிலுக்கே சென்று மீண்ட வாசு எவ்விதத்திலும் புதுப் பிறவி எடுத்தவனாக இருந்தான்.


புதுப் பிறவி எடுத்துவிட்ட வாசு பள்ளிப் படிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்கினான். ஒவ்வொரு வகுப்பிலும் அவன் முதல் மாணவனாக விளங்கினான். பள்ளிக் கூட ஆண்டு விழாக்களிலும் கல்லூரி ஆண்டு விழாக்களிலும் எல்லாப் பரிசுகளும் அவனே தட்டிக் கொண்டு போனான்.

தோட்டக் கலையில் அவன் செலுத்திய கவனமெல்லாம், கல்லூரிப் படிப்பில் செலுத்தியதால் இவ்விதம் நல்ல பலன் கிடைத்தது. அவனுடைய தாயாருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி; தன்னுடைய அருமை மகன் கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தி உலகம் ஒப்பும் பிள்ளையாகி விட்டான் என்று.

வாசு சர்வகலாசாலைப் பரீட்சையில் முதல் மாணவனாகத் தேறினான். அது அவனுக்குக் கலெக்டர் பரீட்சைக்கு உட்காரும் நல்லதோர் வாய்ப்பைத் தேடித் தந்தது.

உற்றாரும் உறவினரும் வியக்கும் வண்ணம் கலெக்டர் பரீட்சையிலும் தேறி அவன் கலெக்டர் ஆகி விட்டான். அப்பொழுதும் அவனுக்குப் படிப்பின் மீது கவனம் குறைய வில்லை. எந்த நேரமும் படிப்பு: படிப்பு! படிப்பைத் தவிர வேறு சிந்தனை இல்லை; பொழுது போக்கு இல்லை. இப்படிப் பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. கலெக்டர் வாசுவுக்குப் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்க முன்வந்தனர்.

கடைசியில் அம்மு வாசுவின் வாழ்க்கைத் துணைவியாக வந்து சேர்ந்தாள். அம்முவும் வாசுவும் மிக இன்பமயமான இல்லற வாழ்க்கையை நடத்தி மகிழ்ந்தனர்.

இந்த இன்பக் காட்சிகளை யெல்லாம் பார்த்து மகிழ வாசுவின் தாயார் இல்லை. இது வாசுவுக்குப் பெரும் குறையாகத்தான் இருந்தது. ஆனால் காலத்தை யாரால் வெற்றி கொள்ள முடியும்? எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. என்றாலும் செடிகொடிகளின் மீது அவன் கொண்ட ஆசை பட்ட மரமாகத்தான் நின்றது; அது தளீர்க்கவே இல்லை.

ஒரு நாள் அம்மு, தன் வீட்டுக் கொல்லையில் உல்லாசமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது “இங்கே வாங்களேன்!” என்று குரல் கொடுத்தாள்.


அம்மு கூவுவதைக் கேட்டு வெளியே விரைந்து வந்தார் வாசு.

“ப்யூன் சிங்காரம் இந்த ஊரில் முந்திரிப் பழமே கிடைக்காது என்று சொன்னானே. அத்தனையும் பொய் ! இங்கே பாருங்களேன், பக்கத்துப் பங்களாவில் முத்திரி மரத்தை, அதோ அந்தக் கிளையில் இரட்டைப் பழங்கள் பழுத்துக் குலுங்கும் அழகைப் பாருங்கள்” என்றள் அம்மு ஆதுரத்துடன் அவள் கண் பார்வையில் மிளிரும் ஆவலை மட்டும் உணரும் சக்தி அந்தப் பழங்களுக்கு இருந்திருந்தால், அவை அந்தக் கணமே அவள் கையில் வந்து விழுந்திருக்காதா?

வாசு கூட ஜடமா, என்ன, அம்மூவின் ஆவலை உணர்ந்தும், நிறைவேற்றாமலிருக்க? ஜன்னல் கட்டைமீது ஒரு காயை வைத்துக் காம்பவுண்டுச் சுவர்மீது ஏறப் போனார்.

“என்ன நீங்களா சுவர்மீது ஏறப்போகிறீர்கள்? சிங்காரம் கடையிலிருந்து வரட்டுமே. வேண்டாம். இறங்கி விடுங்கள்” என்று கத்தினாள் அம்மு.

“பரவாயில்லை தேவி, ‘காதற் பெண்களின் கடைக்கண் பணியிலே காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று மார்தட்டி யிருக்கிறாரே கவிஞர்! அவர் வாக்கை செய்ப்பிக்க, உனக்காக இந்தச் சுவரேறி முந்திரிப் பழம் கூடப் பறிக்கக் கூடாதா?”

‘லபக்’கென்று சுவருக்குத் தாவிவிட்ட வாசுவின் கால்பட்டு உப்புப் பொரிந்து காறை உதிர்ந்திருந்த சுவரிலிருந்து செங்கல் துண்டு ஒன்று கீழே நழுவிற்று. ‘ஆ அப்பா!’ என்ற வேதனைக் குரலைக் கேட்டுக் குனிந்த வாசுவின் கால்கள் நடுங்கின, கல்லடி பட்டுத் தலையைத் தடவிக் கொண்ட பெண்மணி, கனியும் கையுமாக நிற்கும் அவரைக் கண்டு என்ன நினைப்பாள்? ‘ஐயோ! மானக் கேடு! எம்.ஏ. பட்டம் பெற்றவர்! ஒரு கலெக்டர்! கௌரவமான உத்தியோகஸ்தர். திருடுவதா? அதுவும், கேவலம் ஒரு முந்திரிப் பழத்தை? நாலுபேர்கள் காதில் பட்டால், ஐயோ! அவர் உயிர் ஏன் இன்னும் போகவில்லை?” தலை சுற்றிச் தடுமாறிய வாசு கீழே விழுந்து விட்டார்.

“ஐயையோ! சிங்காரம்! ஓடி வாயேன் ” என்றாள் அம்மு அலறிப் புடைத்துக் கொண்டு.

வாசு கண்ணை விழித்த பொழுது, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் அம்முயைத் தேற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி.

‘யார் இவள்? இவள் இங்கே எப்படி வந்தாள்?’

“அடி ரொம்பப் பலமாகப் பட்டுவிட்டதா? இல்லையே. நான் ஒரு நிமிஷம் துடித்துப் போய் விட்டேன். ஏதாவது எக்கச்சக்கமாகி யிருந்தால் இந்தப் பெண்ணின் கதி? மரம் ஏறப் பழக்கம் வேண்டாமா சார்?”-கலகல வென்று பேசினாள் அந்தப் பெண்மணி.

வாசு மெள்ள எழுந்து உட்கார்ந்தார்; “நீங்கள்?…நீங்கள்…” வாசு பேச முடியாமல் தடுமாறினார்.

“நான், நானே தான். டீச்சர் உத்தியோகத்தை விட்டு ஐந்தாறு வருஷங்கள் ஆயிற்று. நாம் சந்தித்துப் பத்து வருஷங்களுக்கு மேல் இருக்கும். இல்லையா? அதுதான் உங்களுக்குச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. பழங்களைச் சாப்பிடுங்கள். இவை என் கணவர் தம் கையாலேயே நட்டுப் பயிரிட்ட மரங்களின் பழங்கள். நீயும் சாப்பிடு அம்மு!” என்று பழங்கள் நிறைந்த கூடையை அவர்கள் எதிரே நகர்த்தினாள்.

தன் எதிரே அமர்ந்திருக்கும் பெண் தெய்வத்தைக் குடலை குடலையாகப் பூ எடுத்துப் பூஜிக்க விரும்பிற்று வாசுவின் உள்ளம். ஆனால் அவருடைய பூவில் ஒட்டிய தூசைக்கூட ஏற்கமாட்டாள் என்பதை அவளுடைய பாழ் நெற்றியும், வெறுமையான கழுத்தும் பறை சாற்றின. உடல் வலியை விட, உள்ளத்தில் பட்ட அடியின் வலிமையைத் தாளாத வாசு படுக்கையில் ‘தொப்’பென்று விழுந்தார்.

– 1957-06-23, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *