பூண்டு பயம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
அமானுஷம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 9,686
நல்லசாமிக்கு நல்லது கெட்டதை பிரித்துப்பார்க்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே இருந்தது. இது நல்லது, அது கெட்டது என கண்ணில் பார்த்தாலே கூறி விடுவான்.நீங்கள் மனித செயல்களில் நல்லது, கெட்டதை பிரித்துப்பார்ப்பவன் என நினைத்திருப்பீர்கள். கண்ணுக்குத்தெரியாத அமானுஷ்ய சக்திகளில் நல்லது, கெட்டதை பிரித்துப்பார்ப்பவன். எனது நண்பன் என்பதால் தான் அவன், இவன் என்கிறேன்.
சுழல் காற்று அடித்தால் கூட ‘அங்க பாரு நல்லது போகுது, இங்க பாரு கெட்டது போகுது…’ எனக்கூறி உடனிருப்பவர்களை எச்சரிப்பான்.
எனக்கும் நல்லசாமிக்கும் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் ஒன்றாகப்படித்ததால் நல்ல பழக்கம் உண்டு. அவனது பாடப்புத்தகப்பையில் எப்பொழுதும் வெள்ளைப்பூண்டு வைத்திருப்பான்.
“என்னடா பழக்கம் இது?” என ஒரு நாள் கேட்டேன்.
“டேய், வெள்ளைச்சாமி…. நீ ஊருக்குள்ள வாழறவன். எதப்பத்தியும் பயப்பட வேண்டியது இல்லை. நான் அப்புடி இல்லை. தோட்டத்துல இருந்து நாலு மைல் ஸ்கூலுக்கு நடந்து வரோணும். வார வழில சுடுகாட்டத்தாண்டி வரோணும். காத்து, கருப்பு அண்டாம இருக்கோணும்னா வெள்ள வெங்காயத்த வாயில போட்டுட்டா கிட்ட வராது, காத்து, கருப்பு அண்டாது. பூண்டக்கண்டா பேயி, பெசாசுக்கு பயம்னு என்ற அப்பாரு அடிக்கொருக்கா என்ற குட்ட சொல்லுவாரு, அதனாலதான்….” என அவன் கூறும்போது எனக்கும் மனதில் லேசான பயம் இருந்தாலும் ‘மூட நம்பிக்கை’ என விட்டு விடுவேன்.
ஒரு நாள் ஸ்கூல் விட்ட பின் கிரவுண்டில் நானும் நல்லசாமியும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு சுழல் காற்று வந்த போது ஓடி வந்து எனது கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு அருகிலிருந்த வேப்பமரத்துக்கு அடியில் போய் மூச்சு வாங்க நின்றான்.
“என்னடா….? என்ன ஆச்சு? என்னை என்னத்துக்கு இங்க இழுத்துட்டு வந்தே….? உனக்கென்ன பைத்தியமா?” எனக்கேட்டேன்.
“பைத்தியம் எனக்கு இல்லே. இடது பக்கமா சுத்திட்டு வந்துச்சு பாரு அந்த ஆவிக்குத்தான்”
“ஆவியா….?” என்றேன்.
“ஆமாண்டா. நம்ம கிட்ட வந்தது ஆவிதான். வேப்பமரத்து பக்கம் மட்டும் வராது. புளிய மத்தடில பகல்ல இருந்தீன்னா அப்படியே உனக்குள்ள வந்து புடிச்சுக்கும்…. ஆயுசு முடியாம தற்கொலை பண்ணி சாகறவங்க உண்மையான சாகற காலம் வார வரைக்கும் ஆவியா சுத்துவாங்களாமா…” அவன் நம்பிக்கையுடன் சொன்னது என்னையும் நம்ப வைத்து விட்டது.
“வலமா சுத்துனா நல்ல சக்தி. கருப்பராயனோ, கன்னிமாரோ, விநாயகரோ, முருகனோ, சிவனோ, பராசக்தியோ மனுசங்கள காக்கற சக்தி. எடமா சுத்துனா பேயி, பெசாசு, குட்டிச்சாத்தானு மனுசங்கள அழிக்கப்பாக்கிற சக்தி. காக்கற சக்திக்கு வேப்ப மரம் ஆயுதம். தீய சக்திக்கு புளிய மரம் ஆயுதம்” இப்படியெல்லாம் மெத்த அனுபவமுள்ள வயதானவர்களைப்போல பேசினான்.
ஒரு முறை என்னுடைய அம்மா உள்ளூர் சோதிடரைப்பார்க்க சென்றிருந்த போது என்னையும் கூட்டிக்கொண்டு போனார்கள். நண்பன் நல்லசாமியின் பேச்சில் எனக்கிருந்த சந்தேகங்களை அவரிடம் கேட்டேன்.
“உன்ற சினேகிதன் சொன்னது உண்மை தான் தம்பி. ஒம்பது கிரகங்கள்ல ஏழு கிரகங்கள் வலமா சுத்தும். ரெண்டு கிரகங்கள் எடமா சுத்தும். வலமா சுத்தர கிரகங்கள் கண்ணுக்குத்தெரியும். எடமா சுத்தர கிரகங்கள் கண்ணுக்குத்தெரியாது. அது தான் ராகு,கேது. அந்த கிரகங்களை தீய சக்திகளுக்கு உதவற கிரகங்கள்னும், எதிர்மறை சக்திகளை இயக்கற கிரகங்கள்னும் சொல்லுவாங்க. அதனால தான் பேய், பிசாசு, குட்டிச்சாத்தான் எடமா சுத்தீட்டு கண்ணுக்குத்தெரியாம போகும், வரும். சில நேரங்கள்ல சுழல் காத்தா சில பேருக்கு தெரியும். எடச்சுத்து காத்து அடிக்கடி ஊட்டுப்பக்கம் இருந்துச்சுன்னா ஊட்ல இருக்கறவங்களுக்கு மனக்குழப்பம், சித்தப்பிரம்மை இருக்கும். ஊட்டு வாசல்ல வேப்பமரம் இருந்தாலும், வேப்ப எலைய ஊட்டுக்கு முன்னால சொருகி உட்டாலும் உள்ள வராது” என சோதிடர் சொன்ன போது தான் அப்பத்தா என்னுடைய சைக்கிளில் வேப்பந்தலையை கட்டி விட்டது எதற்கு என்பது புரிந்தது.
அம்மாவிடம் கேட்ட போது “வயிறு உப்பசமா இருந்தாலோ, நெஞ்சு கரிக்கறமாதர இருந்தாலோ பூண்டு சுட்டு சாப்பிடுவோம். உனக்குங்குடுப்பனில்ல. சித்தங்கூரத்துல ஏப்பத்துல மொத்தமா தேவையில்லாம ஒடம்புக்குள இருக்கற காத்த வெளியெடுத்துப்போடும். அப்ப பூண்டக்கண்டா காத்து பயந்துக்குங்கிறது நெசந்தானே….? ” அம்மா சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
பூண்டு உடலில் இருக்கிற காற்ற எடுக்குது, வெளில இருக்கிற காற்ற தடுக்குது என்று அவரவர் அனுபவத்தில் சொன்னாலும் பூண்டு சாப்பிடுவது ஏதாவதொரு வகையில் நன்மைதான் செய்கிறது என்பது மட்டும் எனக்கு நன்றாகப்புரிந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
