புள்ளி
கதையாசிரியர்: ஆழ்வாநேரி சாலமன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 7,131
வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது போன்ற உணர்வுடன் நடந்து கொண்டிருந்தார் அகவை ஐம்பதைக் கடந்த பரமேஸ்வரன்.

நண்பர்கள் எல்லாம் “நல்லா இருக்கு’ என்று பாராட்டியது அவரை வித்தியாசமாக சிந்திக்க வைத்தது.
‘துணை இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை’ என தனக்குள் பேசிக் கொள்வார். தரகர் நல்லமுத்துவிடம் இலைமறை காயாக தனது எண்ணத்தை வெளிப் படுத்தியிருந்தார்.
“சரி. ஒரு இடம் இருக்கு பார்த்துச் சொல்லுதேன்’ என்று சொல்லி இருந்தார் தரகர்.
அன்று இரவு ஒரு போன் அழைப்பு… அவராகத்தான் இருக்கும் என்று ரிஸீவரை எடுத்து காதோடு பொருத்தியபோது எதிர் முனையில் இருந்து ஒலித்தது அந்தப் பெண் குரல்.
“பரமேஸ்வரன் சார் தானே, எப்படி இருக்கீங்க?”
குரலைக் கேட்டவர் நடுங்கிப் போனார், வழக்கமாக “தாத்தா நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரிக்கும் பேத்தி ஹேமா இன்று சார் போட்டு அழைக்கிறாளே.
விஷயம் மும்பை வரை எட்டி விட்டதா? இரண்டாம் கல்யாணம் செய்யும் எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமேஸ்வரன்.
– 2012