புது அநுபவம்




(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸிமாயாவுக்கு இது புது அநுபவம். புகை வண்டியின் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டாள். புகை யிரதம் டகடக என்று சத்தத்தை தாளமிட்ட வண்ணம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. வெளியில் இருந்து வந்த குளிர்க்காற்று உடலை இதமாகத் தொட்டது. குளிர்மையான இன்பத்தை அனுபவித்தாள். மேடு பள்ளங்களில் நிதானமாக சென்று வயல் கொண்டிருந்தது வண்டி வெளிகள், தென்னந்தோட்டங்கள், இன்னும் எழில் தரக்கூடிய இயற்கை காட்சிகளைத் தாண்டி வண்டி செல்லும்போது அவள் உள்ளம் எல்லாம் ஒரே பூரிப்பால் துள்ளிக் குதித்து விளையாடின. பத்து வயதுச் சிறுமியான ஸிமாயாவுக்குத் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய திருப்தி. வெகு நாட்களுக்குப் பின் கண்டிக்குப் போவதனால் அது மட்டுமா? புகையிரதத்தில் போவது என்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம். நீண்ட நாட்களாய் வீட்டில் ஒண்டிக் கிடந்த அவளுக்கு ஒரே குதூகலம் வண்டியின் இரு புற ஜன்னலாலும் கண்களை விரித்து அங்கும் இங்குமாக பார்வையை செலுத்துகிறாள். தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அருகில் அமர்ந்திருக்கும் தாயையும். தந்தையையும் நோக்குகிறாள். அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். அவள் முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது. அவள் மனமோ இவ்வாறு நினைத்தது. வீட்டில் தான் வாப்பாவுடன் சிறிதாவது கதைக்க முடிவதில்லை. காலை ஆறு மணிக்கு ஆபிஸ் போனால். இரவு ஒன்பதரை மணிக்கு வீடு வருவார், அந்நேரத்தில் நான் உறங்கி விடுவேன். எப்படி அவருடன் கொஞ்சமாவது பேச முடியும். உம்மா வேலை வேலை என்று ஒன்று முடிய ஒன்று செய்வதேயொழிய என்னுடன் அன்பாக சிறிது கதைக்கிறார்களா? இல்லை. லீவு நாட்களில்லாவது வாப்பாவிடம் பேசி தெரியாததைத் தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால், தெரிந்தவர்களைச் சந்திக்க வெளியில் கிளம்பி விடுவார்.
இப்பவாவது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியல்ல. என் பிஞ்சு மனதின் ஆழத்தை, ஆழமான ஆசைகளை இவர்களால் உணர முடியாதா? என் மனம் பல விடயங்களை தெரிந்து கொள்ளத் துடிக்கின்றதை இவர்களால் புரிந்து கொள்ள முடியாதா? உலகில் உள்ள அற்புதங்களைப் புரிய வைத்து தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இவர்களிடம் இல்லையா? சிறுமியான நான் தெரிந்து வைக்க நினைக்கும் பல அம்சங்களை இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதா? எனக்குத் தெரியாத அம்சங்களைச் சொல்லித் தராவிட்டால். யார் சொல்லித் தரு வார்கள் என்று பலவாறு நினைத்தவளை ஸிமாயா இறங்கு என்ற தந்தையின் குரல் நிமிர வைத்தது. கண்டிக்கு வந்துவிட்ட பூரிப்பால் அவசரமாய் முந்திக் கொண்டு இறங்கப் பொனவள், புகையிரதத்தின் படியில் இருந்து கால் தவறி புகையிரத நிலையத்தின் பிளட்போமில் விழப்போனாள். நல்லவேளை அவ்வழியே வந்த ஒரு மனிதர் பிடித்து பிடித்து நிறுத்தினார். அவருக்கு நன்றி கூறிய அவளது பெற்றார் இவளிடம், “பார்த்து இறங்கத் தெரியல்ல, எங்க பார்த்து இறங்கினாய்?” என்று கூறியபடி நடக்கலாயினர். அவர்களின் பின்னால் அமைதியாய் அவளும் நடந்தாள்.
பகல் சாப்பாட்டை முடித்தவர்கள் பூந்தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாயினர். ஸிமாயாவுக்கு பூந்தோட்டத்தில் கவனம் பதியவில்லை. தூரத்தில் தாய், தந்தையுடன் இவளது வயதையொத்த ஒரு சிறுமி அவளது தாய், தந்தையுடன் மகிழ்ச்சியால் கொஞ்சிக் குதூகலித்தவாறு குலாவிக் கொண்டிருந்தாள். அவளது ஒரு கையில் ஐஸ்கோனும், மறு கையில் விளையாட்டுச் சாமானும் இருந்தன. ஸிமாயாவின் பார்வை அவர்கள் மீது பதிந்து ஏங்கித் தவித்தது. தாயும், தந்தையும் தன்னோடு இவ்வாறு நடப்பதில்லையெ என்று கண்ணீரை கண்கள் கலங்கி உதிர்த்தன. அப்போது அவளது மென்மையான தோலைத் தொட்டு “ஸிமாயா ‘இன்ன சாப்பிடுமா’ என்று ஐஸ்கோனை அவளிடம் நீட்டிய தந்தை மறுகையில் அழகிய பொம்மையொன்றை அவள் கையில் வைத்தார். அவளுக்கு கண்டிப் பயணம் வந்ததைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி தாண்டவமாடியது. நெகிழ்ச்சியுடன் பெற்றார்களை நோக்கி ஜஸாக்கல்லாஹு ஹைரா என்றாள். இனிய குரலில் புன்னகை சிந்தியவாறு.
(யாவும் கற்பனை)
– மனிதன்-5, Dec 2002 – Jan 2003