கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 334 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னிரவு ஏழு மணியாகியிருந்தது. அன்றைய வரவு செலவுக் கணக்குகளை சரிபார்த்து முடித்துவிட்டு நிமிர்ந்தாள் வித்யா. எதிரே வரவேற்பு கவுண்டரில் அமர்ந்திருந்த கெளதம் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் இலேசாக ஒரு திடுக்கம் பரவினாற் போலிருந்தது. மேலே கொங்க்ரீட் கூரையில் மாட்டப்பட்டிருந்த மின்விசிறிகள் வேகமாக சுழன்று கொண்டிருந்தன. ஆயினும், ஏதோ ஒருவகை வெப்பத்தை உணர்ந்தாள் அவள். 

தற்செயலாகத் திரும்புவதுபோல் நேர்முன்னால் சாந்தமே உருவாக வீற்றிருந்த வெண்ணிற புத்தர் சிலையின் மீது பார்வையை ஓடவிட்டாள். வீட்டுத் தோட்டத்திலிருந்து சற்று முன்னர் அவள் கொண்டு வந்து வைத்த ஊசிமல்லிகை மலர்கள் சிலையின் பீடத்தின்மீது பரவிக் கிடந்தன. அதன் கீழே செம்மஞ்சள் நிற விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. 

இந்நேரம் கணவரும், பிள்ளைகளும் திசாவெவக்குச் சென்று திரும்பிக் கொண்டிருப்பார்கள். இரவுச் சாப்பாட்டிற்கு ஓட்டலில் இருந்து ஸ்பெஷல் இடியப்ப பிரியாணி வாங்கி வருவதாக கணவர் கூறியிருந்தார். ஆகவே, தாமதமாகப் போனாலும் பிரச்னையில்லை. 

எத்தனை வேலைக்காரிகள் இருந்தபோதிலும் கணவருக்கும், கட்டிளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டி ருக்கும் தனது இரு பெண் குழந்தைகளுக்கும் தானே உணவு தயாரிப்பதிலும், அதனைப் பரிமாறுவதிலும் விஷேட கவனம் செலுத்துவாள் வித்யா. சமையற்கலை, வீட்டுப் பராமரிப்பு இவற்றில் ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு ஈடுபாடு அதிகம். அதுமட்டுமல்ல, கணக்கு வழக்குகளை நிர்வகிப்பதிலும், சரிபார்ப்பதிலும்கூட அவள் கெட்டிக்காரி. எனவேதான், நகரில் ஏறக்குறைய பத்து எனும் எண்ணிக்கையைத் தொட்டுவிட்ட வித்யா தனியார் மருத்துவ மனை, வித்யா ஃபார்மஸி, வித்யா புத்தகசாலை, வித்யா ஜுவலரி, வித்யா ஹார்ட்வெயார் முதலிய நிறுவனங்களை அடிக்கடி சென்று மேற்பார்வையிடும் பணியையும் அவள் விரும்பியே மேற்கொண்டிருந்தாள். அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை அவளது கணவரது தனி 

கணவரது தனி உழைப்பினால் உருவானவை. எனினும், அவை யாவும் அவள் பெயரில், அவளது பணிப்புரையின் கீழே இயங்கின. 

வித்யா தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி விஜயம் செய்வது அவள் வழக்கம். மற்றெல்லா நிறுவனங்களை விடவும், மிக அதிகமாக மனிதர்களுடன் பழகுவதற்கு சந்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையமாக இம்மருத்துவ மனை திகழ்வது அதற்குக் காரணமாக இருக்கலாம். 

பக்கவாட்டு மாடிப் படிகளிலிருந்து தள்ளாடித் தள்ளாடி இறங்கி வந்துகொண்டிருந்த அந்த இளம் பெண்ணின்மீது அவள் பார்வை பதிந்தது. சீக்கிரமே இரண்டாம், மூன்றாம் மாடிகளுக்கு லிஃப்ட் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துவிட வேண்டும் என்று வழக்கம்போல வித்யா நினைத்துக் கொண்டாள். அவ்விளம் பெண்ணின் பொதிகளைத் தாங்கியபடி அவளது கணவனும், பின்னால் பச்சிளம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி ஒரு நடுத்தர வயது மாதும் வந்து கொண்டிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்கென இம்மருத்துவமனைக்கு அனுமதி பெற்று வந்து, சுகப் பிரசவமாகி வீடுசெல்கிறாள் அப்பெண். அவர்களது கணக்கு இருபத்தையாயிரத்தைத் தொட்டிருந்ததை சற்றுமுன்னர் வித்யா சரிபார்த்திருந்தாள். பெரிய தொகைப் பணம் செலவழிந்தாலுமே திருப்தியான சேவை கிடைத்தது எனுமாப் போன்று அந்தக்கணவன் புன்னகைத்தான். அவளுக்கு நிறைவாக இருந்தது. 

அவர்கள் வாகனத்தில் ஏறிச்செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தவள் எதிரே திரும்பியபோது மீண்டும் கௌதம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அது சாதாரண பார்வை யல்ல. பெண்மையின் உறுதியை நிலைகுலைய வைக்கும் பார்வை. ஏறத்தாழ நாற்பத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டி ருந்தாலுமென்ன, அவளும் பெண்தானே. 

கொஞ்ச நாளாகவே கௌதம் இப்படித்தானிருக்கிறான். எதையோ பறிகொடுத்தாற்போல்… வெறித்து வெறித்துப் பார்க்கிறான். இயல்பில் நல்லவன். வாட்ட சாட்டமான இருபத்தெட்டு வயது இளைஞன். அந்த வாட்ட சாட்டத்தில் இலேசான முரட்டுத்தனம்கூட தென்படும். எனினும், வரவேற்பாளராக நியமிக்கப்பட்டிருந்த இந்த இரண்டரை வருட காலத்துக்குள் அவனைப் பற்றிய எந்த விதமான முறைப்பாடுகளும் அவளிடம் வந்து சேரவில்லை. தனக்குக் கீழேயுள்ள பணியாளர்களோடு ஒரு மேலதிகாரி யாகவன்றி ஆலோசகராகவே அவள் இயங்குவதுண்டு. அப்படியிருந்தும்கூட அவனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இதுவரை அவளுக்குக் கிட்டவில்லை. 

உடம்போடு கௌவிய டீ-சேர்ட்டையும், இறுக்கமான குட்டைப் பாவாடையையும் இழுத்துவிட்டுக்கொண்டு அவனருகே சென்றாள் வித்யா. 

“கௌதம், எப்போது உங்க ட்யூட்டி முடியும்?”

“இதோ இப்ப ஆச்சு மெடம்.” 

“எப்படி வீட்டுக்குப் போவீங்க?”

“பஸ்ஸில்தான் மெடம்.” 

”உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டில் என்னுடன்வரலாம். கார்ல ட்ரொப் பண்றேன்…” 

அவன் மறுப்பின்றி எழுந்துகொண்டான். பக்கத்தில் அமர்ந்திருந்த தாதியிடம் ஏதோ கூறி விடை பெற்றுக்கொண்டு ஒப்பமிட்டுவிட்டு எழுந்தான். 

ஏறக்குறைய வைத்திய ஆலோசனைச் சேவைகள் நிறைவு பெற்றிருந்தன. இனி படிப்படியாக அந்த மருத்துவமனை அமைதியடைந்துவிடும். உள்நோயாளிகளின் பிரச்சினைகளும், தாதிகளின் ஓட்ட நடைகளும், விடுதி வைத்தியரின் பேச்சுக் குரலும் மட்டுமே அங்கு எதிரொலிக்கும். 

காரை இயக்குமுன் அவனைத் தன் பக்கத்து சீட்டுக்கு முறுவலுடன் அழைத்தாள் வித்யா. அவனும் ஏற்றுக்கொண்டான். 

நெடுஞ்சாலையில் மெல்ல வழுக்கிச் கெல்லும் காரின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி பேச்சைத் தொடங்கினாள். 

”உங்களுக்கு ஏதும் பிரச்சினையா கௌதம்?’ 

அக்கேள்வியை எதிர்பாராதவனாகத் திடுக்கிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான். 

”எனக்கொண்ணும் இல்லையே. நல்லாத்தானே இருக்கேன்” 

“அப்பசரி, சும்மாதான் கேட்டேன்…” 

சிறிதுநேர மௌனத்திற்குப்பின் மீண்டும் கேட்டாள். 

“உங்க மனைவி என்ன செய்கிறாள்?” 

“சாதாரண ஹவுஸ் வைஃப். இரண்டு சின்னப் பிள்ளைகள். மூத்தவர் இந்த வருஷம் ஸ்கூல் போகிறார்…” 

அனுராதபுரம் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஜயந்தி மாவத்தைக்குச் செல்லும் வீதியில் கார் ஓடிற்று. அவன் வழிகாட்டியபடி வந்துகொண்எருந்தான். வீட்டை நெருங்கியதும், “மெடம், அடுத்த வாரம் எனது சின்னக் குழந்தையின் பேர்த்டே பார்ட்டி வருகிறது. உங்களுக்குத் தான் முதல் அழைப்பு. கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்” என்றபடி இறங்கினான். 

“ஓ.கே…பை… 

காரை தனது வீட்டை நோக்கித் திருப்பினாள். எப்படியோ கௌதமை நெருங்கிவிட்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருந்தது. இனி அவனது பிரச்சினை என்னவென்று அறிந்துவிடலாம். ஏன், அடுத்த வாரமேகூட அறிந்துவிடலாம். 

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு வித்யாவால் கௌதமைப் பற்றி நினைக்க முடியவில்லை. பல வேலைகள், பிரச்சினைகள், கணவரின் மருத்துவப் பரிசோதனை என்று அவளது நாட்கள் கரைந்து கொண்டிருந்தன. மருத்துவமனை பக்கமும் செல்ல முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு கௌதம் வீடு தேடி வந்தான். 

“மெடம், நீங்கள் குடும்ப சமேதராக கட்டாயம் பேர்த்டே பார்ட்டிக்கு வரவேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் போஷணம் எங்கள் வீட்டில்.” 

“கட்டாயமாக வருவேன்” 

சிரித்துக்கொண்டே அவள் கூற, அவளது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவனது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. பட்டாம் பூச்சிகள்போல கண்கள் துடித்து அங்குமிங்கும் அலைந்தன. ஒருகணம்தான். பின்னர் சட்டென தலையைக் கவிழ்த்துக் கொண்டான். திடீரென மௌனத்தில் ஆழ்ந்தான். 

அதற்குள் அவளது கணவர் ஊனமுற்ற தனது இடதுகாலை இலேசாக இழுத்தபடி அவ்விடத்துக்கு வந்துசேர, அவள் தனது வேலைகளைப் பார்ப்பதற்காக அப்பால் நகர்ந்தாள். மனதுக்குள் பழைய கேள்வி மறுபடி சுரண்டத் தொடங்கிற்று. 

“மெடம், நான் போறேன். பொஸ், நீங்களும் கண்டிப்பா வரணும்…” 

அவரது கரங்களைப் பற்றி அன்புடன் கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான். 

ஞாயிற்றுக்கிழமை பகல் சொன்னபடியே கௌதமின் வீட்டுக்கு வித்யா குடும்ப சகிதம் சென்றிருந்தாள். கௌதம் முகம் மலர்ந்து நின்றான். தனது சின்னஞ்சிறிய வீட்டின் முன்னே தோட்டத்தில் பூத்துநின்ற அழகிய மலர்ச்செடியின் கொத்து ஒன்றைச் சட்டெனப் பறித்து அவளது குழந்தை களுக்குக் கொடுத்து வரவேற்றான். மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களது வீடுகளுக்கு வரும்போது மட்டும் இயல்பாக, கைத்தடி ஊன்றாது வருகின்ற வித்யாவின் கணவர் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்தான். 

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் உற்சாகமாக இருப்பதைக் காண அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. வாசலில் அவனது குழந்தைகள் அழகாக உடுத்தியபடி நின்றிருந்தன. தான் கொண்டுவந்த விலையுயர்ந்த பரிசுகளை அவற்றின் கைகளில் கொடுத்தாள் வித்யா. 

நாலுபேர் உட்கார்ந்து பேசினால்கூட தாங்காது போலிருந்த ஒடுக்கமான ஹோல். அதன் இரு மூலைகளிலும் பளிச்செனத் துலங்கிய இரண்டு பெரிய குத்துவிளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. வாசலுக்கு நேரே சுவரில் வெண்கல புத்தர் சிலை. அதற்கு நேர் கீழே வித்யாவின் அழகிய புகைப்படம் ஒன்று ஃபிரேம் பண்ணப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. ‘My Madam’ என்ற ஸ்டிக்கர் அதன் கண்ணாடிமீது கீழே ஒட்டப்பட்டிருந்தது. படத்துக்கு மேலே புத்தம் புதிய ரோஜாப்பூ ஒன்று செருகப்பட்டிருந்தது. ஹோலை ஒட்டிய வரவேற்பறையில் மேசைமீது சாப்பாடு தயாராக இருந்ததை இங்கிருந்தே காணமுடிந்தது. வாசனை மூக்கைத் துளைத்தது. 

அவர்கள் உள்ளே வந்து அமர்ந்து கொண்டதும் தண்ணீர்க் குவளையைத் தட்டிலேந்தி அவன் நீட்ட, எல்லோரும் ஒருசேர அதைத்தொட்டு தமது அங்கீகாரத்தை சம்பிரதாயபூர்வமாக தெரிவித்துக்கொண்டனர். உள்ளே சென்று குளிர்பானம் எடுத்து வந்தான் கௌதம். 

“உங்கள் மனைவி எங்கே?” 

“பக்கத்து வீட்டுக்குப் போயிருக்கிறாள். வெளிநாட்டி லிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது தங்கை தொலை பேசியில் கதைக்கப் போகிறாள். அவளுடன் இவள் சரியான பாசம். பேசிவிட்டு இப்போ வந்துவிடுவாள்…” 

“இங்கே பார் வித்யா. இந்தப் புகைப்படம் நமது வைத்தியசாலையில்கூட இல்லையே…” 

வித்யாவின் கணவர் அவளது புகைப்படத்தை சுட்டிக் காட்ட, அவள் புன்னகைத்தாள். கௌதம் அதைச் சிலாகித்து, ”ஆமாம் பொஸ். இதுபோல ஒரு புகைப்படம் நமது ஹொஸ் பிட்டல் கவுன்ட்டர் சுவர்மேலே கட்டாயம் மாட்ட வேண்டும்” என்றான். 

“எங்கே வேறு யாரையும் காணோம்?” 

”உங்களுக்கு மட்டும்தான் இந்த பார்ட்டி…” 

அவனது குழந்தைகளும், அவளது பிள்ளைகளும் தாமாகவே அறிமுகம் செய்துகொண்டு “ஹெப்பி பேர்த்டே” பாடத் தொடங்கின. 

நேரம் நழுவிச் சென்று கொண்டிருந்தது. எப்போதும் நேரத்தின் பெறுமதியறிந்து செயலாற்றும் அவளை 
கௌரவிப்பது போல அவன் சாப்பிட அழைத்தான். அவர்கள் சாப்பாட்டு மேஜைக்குச் சென்றனர். 

சாப்பாடு சுவையாக இருந்தது. பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டிருந்த உணவை குழந்தைகள் ருசித்து உண்டன. அவன் அருகிருந்து பரிமாறினான். தான் வேறு யாரையும் விருந்துக்கு அழைக்கவில்லை யென்பதையும், அவர்களை மிக எதிர்பார்த்திருந்ததையும் பற்றி அவன் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டான். 

சாப்பிட்டு முடிந்தபின்னர் அனைவரும் மீண்டும் ஹோலில் சென்று அமர்ந்து கொண்டனர். குழந்தைகள் தோட்டத்தில் விளையாடத் தொடங்கின. 

“நீங்கள் சாப்பிடல்லையா கௌதம்?” 

“அவளும் வரட்டும். பாவம் உங்களுக்கு விருந்து வைக்க அவள் ரொம்ப சிரமம் எடுத்துக்கொண்டாள்…” 

சட்டென பக்கவாட்டிலிருந்து ஓடிவந்து, மூச்சுவாங்க வாசலில் நின்றாள் கெளதமின் மனைவி. முன்புற நுழை வாயில் வழியாக அவள் வரவில்லை என்பதை நேரே அமர்ந்திருந்த வித்யா அவதானித்தாள். பக்கத்து வீட்டுத் தோட்டத்திலிருந்து குறுக்கு வழியில் வந்திருக்கக்கூடும். சிவப்பு பூப்போட்ட அழகிய வெள்ளை நிற கவுன் அணிந்திருந்தாள். அந்தக் கவுன் அவள்மீது ஆணியடித்துக் கொழுவி விட்டதுபோன்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அத்தனை ஒடிசலான, எலும்புக்கூடு போன்ற, கூனிய, சதைப்பற்றற்ற உடம்பு. 

தனது கைகளின் முழுவனப்பும் தெரியும்படியாக கையற்ற, இறுக்கமான, கடும்பச்சைநிற சல்வாரி அணிந்து, தங்க பொம்மைபோன்று முன்னால் அமர்ந்திருந்த வித்யாவை கண்கொட்டாமல் சிறிதுநேரம் பார்த்தாள். பிறகு சுதாரித்துக்கொண்டு கைகூப்பி வணக்கம் கூறினாள். சிரித்தபடி, “நான் தாமதித்து விட்டேன். மன்னியுங்கள்” என்று அவள் சொன்னபோது, வலிந்து அலங்கரிக்கப்பட்டிருந்த மாநிறமான, அவளது ஒட்டிய கன்னங்கள் இலேசாகத் திரண்டன. அந்தத் திரட்சியிலும் ஒரு கரும்புள்ளியாக, கடை வாயில் இரண்டு பற்கள் விழுந்துவிட்ட பெரிய இடைவெளி தெரிந்தது.வித்யா தன்னையறியாமலே கௌதமைத் திரும்பிப் பார்த்தாள். 

அந்தப் பார்வையில் தாய்மையின் பரிவு தெரிந்தது. 

– மல்லிகை, நவம்பர் 2005. 

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *