பாடம் படித்தார்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2025
பார்வையிட்டோர்: 338
(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தங்கப்பல் டேனியலுக்குப் பணம் சேர்ந்தவுடனே குணம் கெட ஆரம்பித்தது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொழும்பு சென்று வந்த போது மேல் தாடையிலுள்ள முன் பல்லுக்குத் தங்க முலாம் பூசி இருந்தார். அப்போதெல்லாம் அவர் பல்லுக்குக் கடும் கிராக்கி. தங்கப்பல் டேனியல் நாடார் என்றால் நல்ல பேர் இருந்தது. பெரிய இடத்துப் பெண்ணும் கிடைத்தது.
கொழும்பை முடித்து தமிழ்நாடு வந்த பிறகு ஒரு லாரி வாங்கி விட்டார். அது உப்பு முதல் குப்பை வரை அனைத்தையும் அள்ளிச் சுமந்தது. பணம் சேர்ந்தது. ஒரு வேன் வாங்கி வாடகைக்கு அடித்தார்.
அரசாங்கப் பொதுத்தேர்தலில் நிற்கிற அளவுக்கு கோடி சேர்த்து விடத் துடித்தார். இப்பொழுதுள்ள இலட்சங்களை வைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியுமா? என்று தமக்குத் தாமே அலட்டிக் கொண்டார்.
அன்று ஆலய ஆராதனைக்குச் சென்றபோது, அவர் காதில் விழுந்த செய்தி அவருக்கு இனிப்பாக இருந்தது.
“திருச்சபைத் தேர்தல் வருகிறது”.
தேர்தல் என்ற வார்த்தை அவர் வாயில் தேன் சொட்டுவது போலிருந்தது. அரைகுறைப்படிப்பான அவர், ரிட்டயர்ட் வாத்தியார் பிரின்சை பைக்குள் போட்டுக் கொண்டார். வாத்தியார் கொஞ்சம் விவரமான ஆள்.
ஊரில் இரு கட்சிகள் உருவாயின. ஒன்று தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் ஒன்று எதிர்க்கட்சி. தங்கப்பல் டேனியல் எதிர்கட்சித்தலைவர்.
‘வே, காலங்கெடக்கிற கிடையில நீர் வாயைத்திறந்து தூங்கினா எவனும் தங்கப்பல்லை தட்டிக்கொண்டு போயிடுவான், வாயை மூடும், பணத்தை வெளியே எடும்’ என்று வாத்தியார் நன்கு கிண்டலாகப் பேசுவார். ‘ஞாயிறு நாளில் ஒரு மணி நேரத்தை கோயிலில் செலவிட்டு காணிக்கை போட்டு வந்தால் அதுவே பெரும் புண்ணியம்’ என்றுதான் பெரும்பாலான பொது ஜனம் எண்ணியது. அதனால் அவர்கள் தேர்தல் பற்றி அக்கறையே கொள்ளவில்லை.
தங்கப்பல் கட்சி தேர்தலில் வென்றது, அவர் முக்கிய புள்ளி ஆனார். தென்இந்தியத்திருச்சபையின் சினாட் உறுப்பினர் தேர்தலிலும் வென்றார்.
திருச்சபை நிர்வாகத்தைத் தலைகுப்புற மாற்றி சீர்திருத்தம் செய்வேன் என்று சொல்லித்தான் ஓட்டு வேட்டையாடி இருந்தார்.
குரு சேகரத்தின் புதுக்கமிற்றி கூடியது. முன்பு காப்பியும் வடையும் என்றால் இப்பொழுது டீயும், பஜ்ஜியுமாக மாற்றினார்கள். காணிக்கை எண்ணுகிறவர்களுக்கு முன்பு ஓதுவார்க்கடை மெதுவடையும், நர்சூஸ் காப்பியும் என்றிருந்ததை ஆபிரகாம் கடை ஆமைவடையும் போன்விட்டாவும் என்று அப்புர குப்புற மாற்றினர்.
காப்பியில் கிளர்ச்சியும், வடையில் புரட்சியும் செய்தார்கள்.
மனிதனை மனிதனாக மதிக்கும் உன்னத சமுதாயத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும் புரட்சிகரமான சபைத்திட்டங்கள், சமுதாய மாற்றங்கள் பற்றி அவர்கள் சிறிதும் சிந்திக்கவேயில்லை. வன்முறைகள், பெருகி வரும் இந்நாட்களில் ஆதித்திருச்சபை போன்று ஒருவருக்கும் ஒன்றும் குறைவில்லாத நிறைவான மனித மாண்பை வளர்ப்பது குறித்து அவர்கள் நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. இட்லிக்குப் பதில் தோசையும், சட்னிக்குப்பதில் சாம்பாருமாகப் புழுதிப்போர் செய்தார்கள்.
பொதுஜனம் வேடிக்கை பார்த்தது.
பக்தர்களின் பரவசத்திற்கு ‘சூடு’ பிடித்தது.
ஆலய ஆராதனயில் வேதவசனங்களை பழைய ஏற்பாட்டிலிருந்தும் புதிய ஏற்பாட்டிலிருந்தும் இரு பாடங்களாக வாசிப்பார்கள். வழக்கமாக முதல் பாடம் வாசிக்கும் நபர் தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்குப் பதில் தங்கப்பல்லார் வாசிப்பதென தீர்மானமாயிற்று.
அன்று ஞாயிற்றுக்கிழமை
‘எங்க வீட்டையா கோயிலில் பாடம் வாசிக்கப்போறாங்க என்று மிஸஸ் தங்கப்பல் தெருமுழுதும் தம்பட்டம் அடித்திருந்தது. அவர் பிள்ளைகள் மைனர் பட்டாளங்களிடம் பறைசாற்றி இருந்தார்கள்.
ஆலையவாசிகள் புதுக்குரலைக் கேட்க ஆர்வத்தோடிருந்தார்கள்.
மஞ்சள் நிறப்பட்டு வேட்டி, சந்தனக்கலர் சில்க்சேட் மினுங்கும் மைனர்செயின் பளபளக்கும் நிக்கல் பெல்ட் இத்யாதி… பழைய சிலோன் சிங்கள பாணியில் கோயிலுக்குப் புறப்பட்டார் தங்கப்பல் டேவிட்.
‘வேதாகமப்பகுதியை முன்னதாகப் பார்த்துக்குங்க, சத்தமாய் தெளிவாய் வாசியுங்க’ என்று அறிவுரை கூறின மனைவியிடம், பைபிளில் பாடம் வாசிப்பதென்ன பெரிய மலையா? அதைத்தான் இரண்டாம் வகுப்புப்பயல் படிப்பானே என்று மமதையோடு சொல்லி வீராப்போடு நடந்தார்.
அவருக்குக் குறிக்கப்பட்ட வேதபாகம்:
இரண்டு நாளாகமம் 17ஆம் அதிகாரம் என்பதாகும்.
வேதவாசிப்புப்பீடத்தின் முன் செல்லுமுன் அவரின் வேட்டி வேர்வையால் நனைந்தது. நாளாகம புத்தகத்தைத் தேடியதில் சட்டை உடலோடு ஒட்டிக்கொண்டது.
விவிலிய நூல் அறுபத்தாறு புத்தகங்களைக் கொண்ட ஒரு நூல் நிலையம். அவைகளில் ஒன்றான நாளாகமம் அவருக்கு வேதனையான ஆகமம் ஆனது.
தாள் தாளாகத் துளாவினார். மக்களுக்கு அலுப்புத் தட்டியது. பைபிள் பகுதியை சொன்ன மாத்திரத்தில் எடுக்கும் வேதாகம சமர்த்தர்கள் பலர் அங்கிருந்தார்கள்.
எப்படியோ படிக்க வேண்டிய பகுதியைத் தேடி எடுத்துக்கொண்டார்.
பதினொரு நாளாகமம் பதினேழு அதிகாரம் என்றார்.
கோயில் சிரிப்பொலியால் சிந்தியது
இரண்டு (II) என்ற ரோமன் இலக்கத்தை புரியாதவராகப் பதினொன்று என்றார். இரண்டுக்கு மேல் நாளாகமப் புத்தகம் கிடையாது என்ற உண்மையும் அவருக்குத்தெரியாது. பதினேழாம் அதிகாரம் என்று சொல்வதற்குப் பதில் பைபிளில் எழுதி இருக்கிறபடி 17 அதிகாரம் என்றார்.
தினப்பத்திரிகைகளான கசங்கிய காலைத்தாள், மாலைத்தாள்களின் தலைப்பை மட்டும் படித்து தரை மட்ட அரசியல் பேசும் அனுபவம்தான் அவருக்கிருந்தது.
தட்டுத்தடுமாறி மூன்றாம் வசனத்திற்கு வரும் போது ‘கர்த்தர் யோசேப்போடே இருந்தார்’ என்று படித்தார். மீண்டும் கேலிச்சிரிப்பொலி கோயில் கோபுரத்தை முட்டியது.
கர்த்தர் யோசேப்போடே இருந்தார் என்ற ஆதியாகம வசனம்தான் அவர்கேள்விப்பட்ட செய்தி. ஆனால் இங்கே வரும். ‘கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்’ என்ற வசனத்தை அவர் பிறந்த நாள் தொட்டு கேள்விப்பட்டதே இல்லை. எனவேதான் யோசபாத்தை தவறுதலாக யோசேப்பு என்று படித்து விட்டார்.
குருவானவர் மேசையில் ஓங்கி அடித்து சபையை அமைதிப்படுத்தினார்.
தங்கப்பல்லார் எட்டாம் வசனத்திற்கு வரும்போது அவர் கண்கள் நீர் நிறைந்து எழுத்துக்களை மறைத்தன. எழுத்துக் கூட்டிப் படிக்கப் படிக்க அது கிரந்த எழுத்துக்கள் போன்றிருந்தன; திணறினார், திக்குமுக்காடினார்.
பரிகாசமாகச் சிரித்துக் கொண்டிருந்த மக்களில் சிலருக்கு அவர் மீது இரக்கம் பிறந்தது.
ஓர் இளம்பெண் அந்த எட்டாம் வசனத்தை கணீரென்ற குரலில்,
“இவர்களோடே கூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடே கூட ஆசிரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்” என்று எவ்வித நிரடலுமின்றி அழகாக வாசித்து முடித்தாள்.
செறுக்குடன் சென்றவர் வெட்கத்துடன் தலை தாழ்த்தி வந்தார். அவருக்கு இது முதல் பாடமாக இருந்தது.
– பெப்ருவரி 1994, விடிவெள்ளி.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
