பறவை ரோசம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 139 
 
 

காலை ஒன்பது மணி இருக்கும், சின்னவனின் அலைபேசிக்கு ஒரு குறுஞ் செய்தி வந்தது. ஆவலோடு எடுத்து பார்த்தவன் ‘அம்மா!’- என அலறிவிட்டான்.அவள், அவன் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்து என்னடா விசயம் என கேட்டாள் ரோசம்மா. செய்தியை சொன்னவுடன் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள். அவள் கண்களில் சிறிதும்கூட கண்ணீர் வரவில்லை. ஆனால் நிதானமாக செயல்பட வேண்டும் என நினைத்தாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பெரியவனின் அலுவலக ஊழியரும், காவல்துறை அதிகாரியும் ஆங்கிலத்தில் மாற்றி மாற்றி பேசினார்கள்.அம்மாவிற்கு தமிழில் விளக்கினான் சின்னவன்.

பெரியவன் கத்தார் நாட்டில் வேலை செய்கிறான். அவனுக்கு ஐந்து லகரத்தில் சம்பளம். அவன் கம்பெனி அவனுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருந்தது. வேலை பளு மட்டும் அதிகம். புதியதாக கடலுக்கடியில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் குழாய்களை வடிவமைக்கும் நிபுணன் அவன். அவன் கணினியில்தான் வேலை செய்து கொடுக்கிறான். அவன் அம்மா பலமுறை அவனிடம் வேண்டிக் கொண்டாள். குறைந்த ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை உள்ளூரிலேயே வேலையை செய் என்று அவனை வற்புறுத்தினாள். ஐந்து வருடங்கள் மட்டும் வேலை செய்துவிட்டு வந்துவிடுவதாக சொன்னான். ஆனால், குறைந்த வயதிலேயே மரணம் நேரிட்டுவிட்டது.

நேற்று இரவுதான் அலைபேசியில் அம்மாவுடன் பேசினான். லேசாக நெஞ்சு வலி இருப்பதாக சொன்ன போது, பூண்டை தட்டி சாப்பிடு பெரியவனே.காலையில் வேலைக்கு போகாதே. நேரா மருத்துவமனை போய் செக்கப் செய் என்று ஆலோசனை சொன்னாள் ரோசம்மா.

ஆனால், காலை ஒன்பது மணிவரை வீடு உள்பக்கம் பூட்டி இருந்ததால் காவல் துறை உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவன் இறந்துவிட்டிருந்தது தெரியவந்தது.கதவை உடைத்து பிணத்தை மீட்டதால் பிரேத பரிசோதனையும் நீதிமன்ற விசாரணையும் இருக்கும் என அதிகாரிகள் சொல்லி இருந்தார்கள். பின்பு அந்த நிறுவனம் விமான டிக்கெட் போட்டுக் கொடுத்து சின்னவனை அங்கே அழைத்தது. அண்ணனின் உடலை வாங்க அன்றே கத்தாருக்கு புறப்பட்டான்  சின்னவன்.

சின்னவனுக்கும் பெரியவனுக்கும் ஏழு வயது வித்தியாசம். பொறியியல் படிப்பில்  நான்காம் ஆண்டு படிக்கிறான். வீட்டுச் செலவுகளும் சின்னவனின் படிப்புச்  செலவுகளும் பெரியவனின் வரும்படியில்தான் நடந்து கொண்டிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தந்தை அகால மரணமடைந்திருந்தார். அவர்களுக்கு கிராமத்தில் இரண்டு அறைகளும் ஒரு சமையலறையும் கொண்ட ஓட்டு வீடுதான் தந்தையின் பூர்வீக சொத்து. கொல்லைப்புறத்தில் கல்வைத்து கட்டிய பழைய கிணறும், நிறைய மரங்களும் இருக்கும். எப்போதும் பறவைகளின் கீச்சொலி கேட்டுக் கொண்டே இருக்கும். ரோசம்மா பறவையியல் பட்டம் பெறவில்லை. பறவைகளைப் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெறவில்லை. ஆனால், அவைகளின் மீது அதீத பற்றும் நேசமும் கொண்டவள். பறவைகளின் மொழி அறிந்தவள். அவள் குரலுக்கு பறவைகள் பதில் கொடுக்கும்.

அவள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில்தான் மார்க்க சகாய ஈசுவரர் கோயில் உள்ளது. அந்த கோயில் கோபுரத்தில் வாசம் செய்யும் புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க இவர்கள் வீட்டு தபோ வனத்திற்குதான் வரும். கோயிலின் மடப்பள்ளியில் தானியங்களை சேகரித்துக் கொண்டு ஆணும்-,பெண்ணுமாக வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிட்டுச் செல்லும். அந்த தபோவனத்தில் பறவைகளுக்கென்று சிறு செயற்கை குளம் நீர் நிறைந்து இருக்கும். அந்த குளத்தில் செட்டைகள் அடித்து பறவைகள் குளிக்கும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும். எந்தெந்த பறவைக்கு என்ன உணவு வைக்க வேண்டும் என்பதை அறிந்து மரங்களில் மண் கலயத்தை கட்டி அதில் தானியங்களை போட்டு வைப்பாள் ரோசம்மா. திருமணமாகி வந்தது முதல் இன்றுவரை பறவைகளுக்காகவே மரங்களை பாதுகாக்கிறாள். அவள் வசிக்கும் தெருவில் உள்ளவர்கள் அனைவரும் அவளுக்கு உறவினர்கள்தான். பறவை ரோசம்மா என்றால் ஊரில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு மாத காலத்திற்கு குஞ்சுகள் இறக்கை முளைத்து பறக்க தயாராகும் வரை தாயும்-தந்தையுமாக வந்து உணவுதரும்.பின்பு ,பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் பறந்துவிட்டிருக்கும் ஆளான குஞ்சுகள். பெற்ற பறவைகள் இரண்டு மூன்று முறை வந்து பார்த்துவிட்டு கூடு காலியாக உள்ளதை உணர்ந்த பின் அதுவும் வராது.பறக்க மட்டுமே கற்றிருந்த ஆளான குஞ்சுகள் கோயில் கோபுரத்தில் பறவைகளோடு பறவையாக சங்கமித்திருக்கும். ஒரு போதும் தன் குஞ்சியை குசலம் விசாரித்து புளக்காங்கிதம் அடைவதில்லை தாய் பறவை. எந்த பலனும் எதிர்பாராமல் அது தன் கடமைகளை மட்டுமே செய்கிறது. பறவைகளுக்கு உயரங்கள் ஒரு பொருட்டல்ல. பாதாளமும் சிகரமும் அவைகளுக்கு ஒன்றுதான்.யாதும் ஊரை யாவரும் கேளீர் என்பது பறவைகளுக்கு பொருந்தும். செட்டை விரித்தால் உலகமே அதற்க்குள் அடங்கும். பறவைகளுக்கென்று எந்த மரக்கிளைகளிலும் மருத்துவமனை கிடையாது.பறவைகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. பறவைகளுக்கு மன அழுத்தமும் அகால மரணமும் ஏற்படுவதில்லை. உணவுக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது. கூட்டமாகவும் அதனால் வாழ முடிகிறது, தனித்தும் வாழ்ந்துவிடுகிறது. பூமிப் பந்தில் மனிதர்களின் சக ஜீவனான பறவைகளைப் பார்த்துதான் விமானத்தை கண்டுபிடித்தவன், பறவைகளைப் போல வாழ தவறிவிட்டான்.பறவைகள் தன் இணையிடம் மட்டுமே அலகு போடும்.நில அதிர்வுகளை முன்கூட்டியே அறிந்து உணர்த்தும் திறனைப் போல் தன் இணையையும் கவனமாகவே தேர்வு செய்யும். ஒரு போதும் ஒழுங்கற்ற உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. பரிசுத்த ஆன்மாவின் அடையாளமாக பறவையே இருக்கிறது.சமாதானத்தின் அறிவிப்பாகவும் பறவைகளே வானில் பறக்கிறது.

பெரியவனின் இறப்பை அறிந்து அவர்கள் தெருவில் உள்ள உறவினர்கள் துக்கம் விசாரித்து சென்றனர். அப்போதும்கூட ரோசம்மாவின் கண்களில் நீர் சுரக்கவில்லை. ஏதோ ஒரு செயலினால் மனம் கல்லாகிவிட்டிருந்தது. ஆம்! கடந்த முறை விடுப்பில் வந்த பெரியவன் கொல்லைப்புறத்தில் இருந்த மரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிவிட்டான். அதில் மூன்று அடுக்குமாடி வீடு கட்ட அடித்தளமும் போட்டுவிட்டு சென்றான். முப்பது வருடங்களாக பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் நாகரீக வீடு வேண்டி வெட்டப்பட்டது முதல் ரோசம்மா மிகவும் கவலை அடைந்திருந்தாள். வீட்டை கட்டி முடித்த பின்தான் கல்யாண பேச்சை பேச வேண்டும் என அம்மாவுக்கு கட்டளை போட்டிருந்தான் பெரியவன். 

ஒரே வீட்டில் ஒரே தாய் தந்தைக்கு மகன்களாக பிறந்தவர்கள்தான் பெரியவனும்-சின்னவனும். அதிக வயது வித்தியாசம் என்பதால் அதிகம் பேசிக் கொள்வதில்லை அவர்கள். ஒரு நாளெல்லாம் புத்தகம் படித்து மாலையில் சமோசா சாப்பிட அம்மாவிடம் முப்பது ரூபாய் கேட்பான் தம்பி. மறுத்துவிடுவாள் ரோசம்மா. ஒரு நாளெல்லாம் அலுவலக பணியில் இருந்துவிட்டு மாலையில் 499₹ க்கு பீட்சா வாங்கி வருவான் அண்ணன். அம்மா அதிசயிப்பாள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடி திருத்த 99₹ கேட்டு அடம்பிடிப்பான் தம்பி. அண்ணனோ, 970₹ க்கு முடிதிருத்தம் செய்துவிட்டு வருவான். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் இருந்தும் மரணம் என வந்தவுடன் ‘ ஐயோ!’-என கதறினான் தம்பி.

அண்ணனின் அறையை பார்வையிட்டான்.அம்மா சொன்ன ஆலோசனைப்படி பூண்டை தட்டி உண்டதற்கான தடயங்கள் இருந்தது. பகல் என்றால் மருத்துவமனை சென்றிருப்பான். இரவு மரணத்தை தந்துவிட்டது.

‘அம்மா, இன்று இரவு ஏழரை மணிக்கு இடை நில்லா விமானத்தில் புறப்பட்டு நாளை அதிகாலை இரண்டரை மணிக்கு திருவனந்தபுரம் வந்துவிடுவேன்.பின்பு அங்கிருந்து மூன்றரை மணிக்கெல்லாம் ஆம்புலன்சில் புறப்பட்டு காலை ஆறரை மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்.அண்ணனின் பூத உடலை அன்றே நல்லடக்கம் செய்துவிட வேண்டும். ஆயத்தமாக இரு. விமான செலவுகளை எல்லாம் அவன் பணியாற்றிய நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது’-என்று குரல் வழிச் செய்தியை ரோசம்மாவுக்கு அனுப்பி இருந்தான் சின்னவன்.

கத்தார், தோஹா விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் முன் இறந்த வாலிபனின் பூத உடலும் அதில் பயணிப்பதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அத்தனைபேர் கண்களிலும் மனித நேயம் மின்னியது.சின்னவன் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டான். 

‘மினிஸ்ட்ரி ஆப் பப்ளிக் ஹெல்த் சென்ட்ரல் ஸ்டேடிக்கல் ஆர்கனைசேஷன்’, தந்த இறப்புக்கான சான்றிதழில் ‘அக்குயிட் ஹார்ட் பெயிலியர் டியு  டு  ஹைப்பர் டென்ஷன்  அண்டு  இட்ஸ்  காம்ளிகேசன்  நேசரல் டெத்’-என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கத்தார் நீதிமன்றமும் விடுவிப்பு சான்றிதழ் வழங்கியிருந்தது. எந்தவித அலைக்கழிப்பும்மின்றி அண்ணனின் உடலை பெற்றுக் கொண்டு தாயகம் திரும்பினான் சின்னவன்.

அன்று அந்த கிராமமே துக்கத்தை அனுஷ்டித்து, பெரியவனின் பூத உடலை சுமந்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார்கள்.அழுகையையே மறந்துவிட்டிருந்தாள் அம்மா.

மறு நாள் காலை பாலூற்றவும் கலவை சாதம் படைத்து வரவும் உறவினர்கள் கல்லறைக்கு சென்றனர். கல்லறை முன் கால் பகுதியில் சாதத்தை இலையில் வைத்துவிட்டு எல்லோரும் விழுந்து வணங்கினர், பின்பு, அம்மாசி தாத்தாதான் சொன்னார், “காகம் வருதானு பாருங்க”- என்று. காகங்கள் பறந்து கொண்டே இருந்தது ஒன்றுகூட இறங்கி வரவில்லை. மீண்டும் எல்லோரும் விழுந்து வணங்கும்படி வேண்டினார் தாத்தா. அது போல் ஆனது. ஆனால், ஒரு காகம்கூட இறங்கி வரவில்லை. மிகவும் மன வருத்தத்தோடு நின்ற அம்மாசி தாத்தா சிறிது யோசிப்புக்கு பின் வேறு வழியின்றி இடுகாட்டிற்கு ரோசம்மாவை அழைத்துவர சொன்னார். ரோசம்மாவை அழைத்துவர வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. வாகனம் வரும் வரையில் எல்லோரும் இடுகாட்டில் நிழல் தாங்கலாக அமர்ந்திருந்தனர். காகம் வராதது கெட்ட சகுணம் என்று பேசிக் கொண்டார்கள். சிலர் இதுவும் தற்கொலைக்கு சமம்தான் என்று ஹாய்சியம் பேசினர். வாகனத்தின் சப்தம் கேட்டதும் எல்லோரும் திரும்பி பார்த்தனர். இடுகாட்டில் ரோசம்மாவின் பாதம் பட்டவுடன் மளமள வென்று காகங்கள் இறங்கி வந்து கலவை சாதத்தை கொத்தித் தின்றது. ரோசம்மாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

எல்லோரும் ஆச்சரியமாக ரோசம்மாவை பார்த்தார்கள்!

– அக்டோபர் 2025 சிறுகதை காலாண்டிதழில் பிரசுரமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *