பனிரெண்டு மணி நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 276 
 
 

“துபாய் கரன்சிக்கு என்ன பெயர்”

“திர்ஹாம்”

“இந்திய பணத்தில் எவ்வளவு இருக்கும்”

“இருபத்தைந்து  ரூபாய் சுமாராய்”

“ஒரு காபி சாப்பிட அங்கு பத்து  துபாய் ரூபாய் என்றால்  இந்தியப் பணம் எவ்வளவு ஆகும்”

“இருநூற்றைம்பது ரூபாய்”

“இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து  காபி சாப்பிட மனம் வருமா”

“இந்தியப் பணத்தில் கணக்கு போட்டால் சாப்பிட முடியாது. ,மனம் வராது. திர்ஹாம் நோட்டை  சாப்பிடவா முடியும். ஆனால் சம்பளமும் அப்படித்தானே வரும். அதையும் கணக்குப் போட்டுக்கொள் நிலா”

“சரிதான். அங்கு என்னவெல்லாம் இருக்கிறது பார்க்க”

“நிறைய இருக்கும். பாலைவனம் எங்குமாயிருக்கும். மூவாயிரம் அடி உயரம் கொண்ட புர்ஜ்கலிபா கட்டிடம்…பாம்ஜிமேரா”

“அதென்ன..”

“மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு…பனை மரம் போல்….பனை உருவத்தில் கட்டிடங்கள். தீவு அது.l  அப்புறம் துபாய் மெரினா”

“மெட்ராஸ் மெரினா ஒரு முறை பார்த்தது. இன்னொரு முறை அங்கே போகணும் அல்லி”

“போலாம் நிலா. துபாயிலிருந்து வந்த பின் போகலாம்”

“சினிமாக்களில் காட்டப்படும் பாய்மரக்கப்பலை ஒத்த ஹோட்டல்..”

“அதுவும் இருக்கும். இப்போதைக்கு ஒரு ஹோட்டல் நம் பசியைத் தீர்க்க தேவை நிலா”

இரவு நேர மின்னொளியில்,ஜொலித்துக்கொண்டிருந்தது கோவை மாநகரம். போக்குவரத்துகள் நிறைந்த அவினாசி சாலையில்  தனக்கு முன்னால் சென்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து போய் கொண்டிருந்தது அந்த பல்சர் பைக்.

பைக் ஒரு உயர்தர ஓட்டல் முன்பு நிற்க,பைக்கில் இருந்து இறங்குகிறான் அல்லிராஜ். நிலாவும் இறங்குகிறாள் அவளது பின்புறம் பார்ப்பதற்கு எடுப்பாக கவர்ச்சியாக இருந்தது. அது சிலரின் பார்வைக்குப் படுகிறது. அல்லிராஜ் தனது ஹெல்மெட்டை கழற்றிவிட்டு, நிலாவை பார்க்கிறான்…பின்புறம் கண்ணாடியில் தெரிந்த அளவு அழகாக அவளது முகத்தில் பொலிவு தெரியவில்லை. அவளது முகம் சுமாரான அழகில் தான் இருந்தது. சுமார் முஞ்சி என்று அவளே அவ்வப்போது சொல்லிக் கொள்வாள்.

“வா நிலா” என அழைத்தபடி ஹோட்டல் உள்ளே நுழைகிறான் அல்லிராஜ்.அவனை தொடர்ந்து நிலாவும் உள்ளே நுழைகிறாள். இருவரும் பேமிலி ரூம் என எழுதியிருந்த அறையின் கதவை திறந்து,உள்ளே சென்று, ஒதுக்குப்புறமான மேஜையில் போய் அமர்கிறார்கள்.

“நிலா என்ன சாப்பிடுறே”

“நீங்க விரும்புறதெ சொல்லுங்க” என சொல்ல, அங்கு வரும் பேரரிடம்,”இரண்டு மசால் தோசை. ஒரு காளான் கிரேவி. அப்புறம் என்ன வேணும் நிலா?” என கேட்க, “இது போதும்” என சொல்ல, பேரரை நோக்கி, “இதக் கொண்டு வாங்க” என சொல்ல,”ஓ.கே சார்” என்றபடி பேரர் செல்வது.

“என்ன நிலா.எதுவும் பேசமா மௌனமா இருக்கெ? நாளைக்கு இந்நேரம் நான் துபாயில இருப்பேன்.”

அல்லிராஜ் சொல்ல,நிலா மேஜை மீது இருந்த அவனது கைகளை தனது கைகளால் தழுவது.முகம் வாடி வருந்துவது.கண்களில் நீர் துளிகள் கசிந்தது.

“நீங்க என்னெ திருமணம் செய்தது என்னோட பாக்கியம்.ஆனா, இன்னைக்கு என்னெ பிரிஞ்சு வெகுதூரம் கடல் கடந்து போகுறதெ நினைச்சா,மனசு வலிக்குதுங்க.”, 

“அழாதெ நிலா.இரண்டு வருஷம் தானே.கண்மூடி திறக்கும் முன் உன் கண்முன்னே இருப்பேன்.கண்ணெ தொட” என்று நிலாவுக்கு ஆறுதல் சொல்ல,பேரர் ஆர்டர் செய்த உணவுகளுடன் வருவது.

அல்லிராஜ் தனது கைகளால் நிலாவின் இடுப்பை சுற்றி வளைத்தபடி அவளை நெருக்கினான்.

“நாம காதலிச்ச காலத்துல, நாம இதுமாதிரி எத்தனமுறை ஹோட்டல்ல வந்து சாப்பிட்டிப்போம்”

“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா,நாம ரெண்டு பேரும் ஒருநாள் ராத்திரி மழையில நனைஞ்சு, ஒதுங்க இடமில்லாம யாரும் இல்லாத பழைய கட்டிடத்தில ஒதுங்கி,அந்த மழையில் நனஞ்ச உன் உடம்பை பார்த்து, நான் உன்னை கட்டிபிடிக்க, நீ என்னெ கட்டி பிடிக்க,அன்னைக்கு நமக்கு நடந்தது மட்டும் தான் ஞாபகம் வருது”

அவர்களின் நினைவுகள் அவர்களின் முகங்களின் போக்கை மாற்றி விட்டது. முன்னால் இருந்த உணவுத்தட்டுகளைப் பார்த்தார்கள்.

2 

அல்லிராஜ், நிலாவின் முகத்திலிருந்து, முத்தமிட்டபடியிருக்க, நிலா உணர்ச்சி பிழம்பாய் மாறி அல்லிராஜை இறுக கட்டி அணைத்தாள்.. அல்லிராஜ் இனி இரண்டு வருடங்கள் நிலாவை தொட முடியாது என்பதனை உணர்ந்தவனாக ஆக்ரோஷத்துடன் இருந்தான், அவளும் அந்த முரட்டுதனத்தை விரும்பியவளாக அல்லிராஜீக்கு ஈடுகொடுக்கிறாள்.

அல்லிராஜ் மிகுந்த களைப்புடன், படுக்கையில் படுக்கிறான். நிலாவும் பெருமூச்சு விட்டபடி,எழுந்து தண்ணீர் குடிக்கிறாள்.

“நிலா, உன்னெ ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா”

“இது கஷ்டமில்லைங்க. சுகம். இந்த சுகத்துக்காக எவ்வளவு வேணுமின்னாலும், கஷ்டப்படலாம்” என சொல்ல, அல்லிராஜ் கடிகாரத்தை பார்க்க, இரவு மூன்று .மணி. 

“நிலா, அஞ்சு மணிக்கு ஏர்போர்ட் போகனும். சீக்கிரம் ரெடியாகனும்” என்றபடி எழுந்து குளிக்க செல்வது.

“என்னங்க தினமும் எனக்கு போன் பண்ணணும்.மறந்திடக்கூடாது.நான் உங்க போனுக்காக காத்திட்டு இருப்பேன்”.

 “வேல முடிஞ்சதும் அடுத்த வேலெ, என் நிலாவுக்கு போன் செய்யுறதுதான்.எனக்கு இருக்குற ஒரே கவலை அந்த அமாவாசை தான்.”

“அமாவாசை வந்தா உங்களுக்கு என்ன?”,

“அன்னைக்கு நிலா வானத்துல தெரியாது.” என்றபடி நிலாவை முத்தமிட, அதை கண்ணாடியில் பார்த்தான், டாக்ஸி டிரைவர்,

“சார்.மேடத்தோட பேரு நிலாவா?”.

“எப்படி கண்டுபிடிச்சே”

“நீங்க பேசுன டயலாக்கை வெச்ச தெரிஞ்சுக்கிட்டேன்.”

“கில்லாடி தான்யா நீ”, வண்டி,கோவை ஏர்ப்போர்ட் வாசலில் நின்றது.. 

 நிலா காரில் அமர்ந்தபடி கண்களை மூடி ஏதோ யோசனையில் இருக்கிறாள்,

“மேடம், சார் என்ன வேலைக்கு துபாய் போறார்”

“டெக்ஸ்டைல்ஸ் ஓர்க்தா…நம்ம பனியன் கம்பெனி வேலையை துபாய்ல செய்யப் போறாரு.”,

 “சரி மேடம். ஆனா நல்ல சம்பளம் கெடைக்கும். கொஞ்சம் மிச்சம் பண்ணலாம்”

“ஆமா.. திர்ஹாம்லே மிச்சம் பண்ணனும். “

“திர்ஹாம்ன்னா”

“துபாய் பணத்துப் பேரு..”

3

அன்றைக்கு அவனின் துபாய் பயணம் முழுமையாகவில்லை. தடைபட்டது.

ஒர்க் பர்மிட் சரியாக இல்லையென்று அங்கு சென்ற பிறகு  தடுக்கப்பட்டான். திரும்ப வேண்டியதானது.

அதற்குப் பிறகு அவன் முயற்சி செய்யவில்லை மறுபடியும் துபாய் பயணத்திற்கு.

முந்தின பயணத்திற்காக அவன் வாங்கியிருந்த கடனை அடைக்க அவன் நீண்ட நாட்கள் பனியன் கம்பனியில் வேலை செய்ய வேண்டியிருந்தது.. ஓவர் டைம் செய்து கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தான். அப்போதே அவனின் வேலை நேரம் பத்து மணி நேரமாக இருந்தது.

அதன் பின்னால் பனிரெண்டு மணி நேர வேலை என்பது அமுலுக்கு வந்தபோது கடனை அடைக்கிற வகையில் பல திட்டங்கள் பற்றி யோசித்தான். அவற்றை அமல் படுத்தும் போது  மனைவியை வேலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

அவள் வேலைக்குப் போன பனியன் கம்பனி டீ சர்ட்டுகளில்  அவள் அச்சான திர்ஹாம் நோட்டுகளைக் கண்டாள்.

அதை மெசின் எம்ப்ராய்டரி செய்யும் வேலை அவளுக்கு கச்சிதமாக அமைந்து விட்டது. பனிரண்டு மணி நேரமும் திர்ஹாம் நோட்டுகள் அவள் கண்களிலேயே இருந்தது.

subrabharathimanian சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றவர். சிறுகதை , நாவல் , கட்டுரைகள், கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த பதினைந்து வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி.பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். நவீன வாழ்க்கையின் பிரச்சனைகளையும், சிதைவுகளையும் பற்றிய நுட்பமான பார்வை இவருக்கு உண்டு. அது இவரது எழுத்துக்களில் விரவி இருக்கும்.156 கதைகளைக் கொண்ட என் தொகுப்பு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *