பனம்பால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 52 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மந்திர நகரில் மேற்கு நோக்கி நடந்தேன். நகருக்கு மேற்கே கூட்டப்பனைகள். அதன் பக்கமுள்ள ஒற்றையடிப் பாதையில் நாலைந்து பெண்கள் பதநீர் விற்றுக்கொண்டிருந்தனர். 

‘ஐயா, இங்க வாங்க, நல்ல பதனீர்’ என்று போட்டி போட்டு என்னைக் கூவி அழைத்தனர். 

வாய்நிறைய வெற்றிலைக் காவியுடன் மஞ்சள் முகத்தோடு என் கையில் ஓலைப்பட்டையைத் திணித்துக் கெஞ்சி வேண்டின ஓர்அம்மாவிடம் பதநீர் குடிக்க நின்றேன். 

தோளில் முறுக்குத்தடியும், இடுப்பில் அரிவாள் பெட்டியுமாக அங்கு வந்த திருகு மீசைக்காரர் ‘ஐயாவிற்குக் குடிக்கு மட்டும் கொடு’ என்றார் மிக இனிப்பாக. அவர்தாம் அவளுடைய கணவர் காளிமுத்து. 

‘பதநீர் குடிக்கும்போது ஈ, எறும்புகளை அரிப்பதற்காகத்தான் நான் அரிப்பு மீசை வைத்திருக்கிறேன்’ என்று கூறி தம் பெரிய மீசையை மிடுக்குடன் ஆட்டினார். 

கால்படி பதநீரில் மூன்று நுங்கு போட்டுக் குடித்தேன். வாயும் வயிறும் பூரண திருப்தி, உடல் குளிர்ந்து மனம் மகிழ்ந்தது. 

கற்பக விருட்சங்கள் எனக்கு தேவதாரு மரங்கள் போல் தோன்றின. பனைமரத்தொழிலாளிகள் தேவாமிர்தத்தைக் கொண்டு தரும் தேவ தூதர்களைப் போன்று காட்சியளித்தார்கள். 

நன்றி கூறிவிட்டு நடந்தேன். 

‘ஜீவாமிர்தம் போன்ற பனம்பால் கடின உழைப்பில் சுரக்கும் கற்பகக்கனிரசம் – இவ்வளவு மலிவாய், காப்பி டீயிலும் விலை குறைவாய் இருக்கக் காரணம் என்ன? மக்கள் உண்மையான சத்துணவை உணராததினால் தானே? அல்லது உண்மை உழைப்பிற்கு உயர்வு கொடுக்காததினால் தானோ? பல்லைச் சொத்தையாக்கும் ஐஸ் பானத்திற்கு இருக்கும் மதிப்புக்கூட பதனீருக்கு இல்லையே’ என்று எண்ணியவாறு உள்ளம் வெந்து நொந்து வீடு நோக்கிச் சென்றேன். 

மாலைப் போதில் என் கால்கள் மீண்டும் பனங்காட்டையே நோக்கி நடந்தன. 

காலையில் மலர்ந்த முகத்துடன் பதநீர் விற்ற அந்த அம்மாள் இப்பொழுது மஞ்சள் அழிந்து குங்குமம் சிதைந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக்கொண்டே மாலைப் பதநீர் விற்றாள். கூந்தல் அவிழ்ந்து கண்கள் வீங்கி இருந்தன. அந்த அம்மாளிடம் பேசினேன். 

‘ஏம்மா அழுகிறீர்கள்?’ 

‘வயிற்றில் மண்ணை போட்டுட்டாங்கையா?’ 

‘என்னம்மா சொல்றீங்க?’ 

‘எங்க வீட்டுக்காரரை போலீஸ்காரங்க புடிச்சிட்டுப் போராங்கையா, கடவுளுக்கு ஏற்காத பெருத்த அநியாயம் ஐயா…’ ஒப்பாரி வைத்து அழுதாள். 

காளிமுத்து பனை ஏறுவதில் பெரிய கில்லாடி. அவர் பனை ஏறும்போது பனஞ்சிறாய்கள் அவரைக் கண்டு நடுங்கும். பச்சை மட்டைகள் அவரைக்கண்டு அச்சமுடன் பணியும். பனை மண்டையில் பம்பரமாடுவார். ஏழு பிள்ளைகள். கணவன், மனைவி மாமி ஆகப்பத்து ஜீவன்கள். தினமும் ஐம்பது பனைகளாவது ஏறினால் தான் வாழ்க்கை நடத்த முடியும். 

பனை ஏற்றுத் தொழிலும், பனைகளும் அருகிக் குறைந்து வருவதால் தம் மூத்த மகனைக் கல் உடைக்க அனுப்பி விட்டார். அடுத்த பெண்பிள்ளை பீடி சுற்றச் செல்கிறது. அவர் மனைவியும் கூட கருப்புக்கட்டி காய்க்காமல் பதநீரை விற்று விட்டு மாலையில் பீடிதான் சுற்றுகிறாள். 

ஐம்பது ஏற்றுப் பனைகளிலும் நாள் ஒன்றுக்கு இருமுறை வீதம் இருநூறு முறைகள் ஏறி இறங்க வேண்டும். இக்கடின உழைப்பிற்கு டானிக் அவரே தயாரிக்கும் கள்ளுப் பதநீர்தான். அதில் ஒரு கலையம் சாப்பிட்டால் தான் உடல் உலையாமல், உறுதி குலையாமல் பனை ஏறுவார். வெறி தரும் 

வேறு எந்த மது வகை பற்றியும் அவருக்குத் தெரியாது. அவரது குடியினால் சமூகத்திற்கு இலாபமே தவிர நஷ்டமில்லை. குடித்துத் தடம் புரளும் ஏடே அவரது அகராதியில் கிடையாது. அவர் குடிப்பது சுண்ணாம்பு தடவாத சுத்தமான பனம்பால். 

ஆக்க வேலைக்குப் பயன்படும் அணுசக்தியைச் சில வல்லரசுகள் அழிவு வேலைக்குப் பயன் படுத்தியது போன்று சுண்ணாம்பு தடவாத சுத்தமான வெள்ளைப் பதநீரை சிலர் வெறிதரும் பானமாக மட்டும் பயன் டுத்தினர். பலர் அளவுக்கு மீறிக் குடித்துக் குடும்பத்தை நட்டாற்றில் விட்டனர். 

எனவே, அரசாங்கம் மதுவைத் தடை செய்தது. 

சமீபத்தில்தான் இரட்சா பெருமானை ஏற்றுக்கொண்டு புதிய ஜீவியத்தில் காலடி எடுத்து வைத்திருப்பவர் காளிமுத்து. அரசு ஆணைக்குக் கீழ்ப்படியும் அவர் கள்ளை மறப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். கள்ளை மட்டுமன்று, பொடி, பீடி, புகையிலை யாவையும் அடியோடு நிறுத்தி விட்டார். அவைகளை வெறுக்கவும் ஆரம்பித்தார். 

காளிமுத்து காப்பி குடித்துப் பழகினார். காது அடைத்துக் கால்கள் தளர்ந்தன. கடின வேலைக்குக் காப்பி கட்டுப்படியாக வில்லை. பத்துப் பனைக்கு மேல் ஏற முடியவில்லை. கள்ளுக்கு நிகரான பானம் அவருக்குக் கிடைக்கவில்லை. பத்துப் பனை ஏறினாலே போதும் என்ற வாழ்க்கை உத்தரவாதமும் இல்லை. காப்பியை நிறுத்தி சுண்ணாம்புப் பதநீரையே குடித்துப் பழகி, பழையபடி பனை ஏற ஆரம்பித்தார். 

கடந்த இரு தினங்களாகக் காளிக்கும் அவர் தம் மகளுக்கும் ஒரே காய்ச்சல். சாரல் மழை வேறு தூறிக்கொண்டே இருந்தது. எனவே அன்றையப் பதநீர் விற்கவில்லை. காய்க்கவும் காணாது. குடித்தது போக ஒரு கலயத்தில் அரைக்கலையம் பதநீர் மீதி இருந்தது. அதை மறந்து அப்படியே வைத்து விட்டார்கள். 

இரண்டு நாட்கள் விரைந்து ஓடின. 

இலவசப் பதநீர் குடிக்க வந்த ஒரு போலீஸ்காரரை காளிமுத்துவின் மனைவி கடிந்து பதனீர் விட மறுத்து விட்டாள். கள்ளம், கபடமின்றிப் பிழைக்கும் அவர்கள் ஏன் போலீசுக்குப் பயப்படவேண்டும்? 

ஆத்திரம் கொண்ட போலீஸ்காரர் கண்ணில் அந்தக் கலையம் பட்டு விட்டது. இருநாட்களுக்கு முன்புள்ள பதநீர் புளித்துப் போயிருந்தது. கள் என்பதற்குக் கையுமெய்யுமான சாட்சி கிடைத்து விட்டதென்று குதித்து ஆடினார். 

சளித்துப் புளித்துக் கள் மணம் தட்டிய கலையத்தையும், காளிமுத்து வையும் கைது செய்து காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார். காளியைக் கம்பி எண்ண வைக்க வேறு சாட்சியங்கள் தேவையில்லை. 

பதநீர் சொட்டுகள் பாழாயின. பனை ஏறுவதற்கு ஆள் கிடைக்க வில்லை. பனை சொந்தக்காரர் பனைகளை வெட்டி விட்டுப் பீடிக்கம்பெனி நடத்தத் தீர்மானித்தார். 

பனை செத்து பீடி பிழைத்தது. பனம்பாலாம் பதநீர் குடிபோய் சாராய குடியும், பீடி சிகரெட், கஞ்சாக் குடிகளும் வலுத்தன. 

குறிப்பு : மதுவிலக்கு அமுலில் இருந்த காலத்தில் (1949) எழுதிய நிகழ்ச்சிச் சித்திரமாகும் இக்கதை. 

– 14.4.1998 – ஜனசக்தி சித்திரை மலர்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *