கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 1, 2026
பார்வையிட்டோர்: 2,562 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(இக்கதையை படிப்பதற்கு முன் எனது முந்தைய கதையான ஆதித்யாவும் அவனது தேநீர் விருந்தும் கதையை படித்துவிட்டு இதனைப் படித்தால் புரிதல் எளிது.)

ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் துணியால் கட்டியிருந்த அவர்களின் கண்ணை அவிழ்த்துவிட்டான் ஆதித்யா.

கண்ணை அவிழ்க்கப்பட்டவர்களின் கண்கள் இப்போது ஆச்சரியத்தால் நிறைந்திருந்தது.

அப்படி அவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்கள் கண்டது என்னவெனில்…

சலசலப்பு சத்தத்துடன் ஓடும் பெரிய ஆற்றைக்கண்டு தான் அவர்களது கண்கள் ஆச்சரியத்தால் நிறைந்துப்போயிருந்தது.

அந்த ஆற்றில் பல சிறுவர் சிறுமியர் குளித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆற்றில் விளையாடுவதைக் கண்டு ஜெஃபினா ஆதித்யாவிடம்.

“ஹே!நாம் எல்லோரும் இதில் குளிப்போமா?”

என்று கேட்டாள் அதற்கு ஆதித்யாவோ

“குளிப்போம்,ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ரெய்டு போயிட்டு வந்துரலாமா?”

என்று கேட்டான்,அதற்கு ஜெஃபினாவோ

“ரெய்டா?புரியலையே?”

என்று கூறியவளுக்கு ஆதித்யா ஆற்றில் இருந்த படகை காண்பித்து

“அதோ இருக்கே!படகு அதில் நாம எல்லோரும் ஒரு ரெய்டு போவோம்”

என்று கூற அவர்களின் அனைவரது முகத்திலும் சந்தோஷ ரேகையானது படரந்தது.

சூர்யாவோ சந்தேகம் வந்தவனாக,

“சரி ரெய்டு போறோம் ஓகே!ஆனா யாரு படகை ஓட்டுவா?”

என்று கேட்டான்,அதற்கு ஆதித்யாவோ

“அதான் நான் இருக்கேனே!நான் இருக்க பயமேன்!”

என்றதும் அவனது நண்பர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினர்.

“உனக்கு படகெல்லாம் ஓட்ட தெரியுமா?”

என்று கேள்வியெழுப்பினாள் நிஷா.

“ம்ம்!நான் நல்லாவே ஓட்டுவேன்”

“அப்போ எதுக்கு இன்னும் வெய்ட் பண்ணிக்கிட்டு வாங்க படகில் ஏறுவோம்!”

என்று சொல்லி குடுகுடுவென்று ஓடி அங்கிருந்த படகில் ஏறி அமர்ந்துக்கொண்டான் சூர்யா.

“டேய்!நல்லா ஓட்டுவதானே?ஓட்டத் தெரியாம ஓட்டி எங்களை தள்ளி விட்டுராதடா?”

என்று ஜெஃபினா தனது பயத்தை வெளிப்படுத்தினாள்.

“நீ பயப்படவே வேணாம்,நான் உங்களை சேஃபா கூட்டிக்கிட்டு போய்,சேஃபா கூட்டிக்கிட்டு வந்துருவேன்”

என்று கூறவும் ஜெஃபினாவிற்கு தனது பயம் நீங்கியது.

“சரி!சரி! நீங்க எல்லோரும் படகில் போய் உட்காருங்க நான் இதோ வந்துட்றேன்”

என்று சொல்லிவிட்டு தன்னுடன் ரஹீமை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குள் நுழைந்தான்.

இவர்களோ அவனுக்காக படகில் காத்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் வெளியே வந்தனர்,அவர்களிருவரின் கையிலும் ஒரு பை இருந்தது.

படகின் அருகில் வந்தவுடன் நிஷா,

“என்னடா இது பை?”

“ஆமா!நம்ம எப்படியும் படகில் அங்க,இங்கன்னு போறதுக்கு டைம் ஆகும்,அதான் நம்ம சாப்பிடுறதுக்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் அண்ட் ப்ரூட்ஸ்னு முன்னாடியே எடுத்து ரெடியா வெச்சிருந்தேன் அதை பேக் பண்ணி எடுத்துட்டு வரத்தான் நாங்க ரெண்டு பேரும் போனோம்”

என்று கூறினான்,அதைக் கேட்டதும் ஜெஃபினா

“ஓ!அப்படியா,அப்போ சூப்பர்!ஜாலிதான்!”

என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

பிறகு தாங்கள் கொண்டு வந்திருந்த பையை படகில் போட்டுவிட்டு ரஹீமும்,ஆதித்யாவும் படகில் ஏறினார்கள்.

ஆதித்யா படகின் ஓரத்தில் கிடந்த துடுப்பை எடுத்து படகை ஓட்ட ஆரம்பித்தான்.

அவனது நண்பர்களோ அந்த ஆற்றில் தென்பட்ட வண்ண வண்ண மீன்களைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஆற்றின் இருபுறங்களிலும் வந்த விசித்திர பறவைகளின் ஒலியைக் கேட்டு அதிசயித்தனர்.

அப்படி அவர்கள் இயற்கையை இரசித்தபடி சென்றுக்கொண்டிருக்கையில்,ஒரு இடத்தைப் பார்த்து ஜெஃபினா

“ஐயோ பாம்பு!பாம்பு!”

என்று கத்தினாள்,அவள் பாம்பு என்று கூறியதுமே மற்றவர்களுக்கெல்லாம் பயம் வர ஆரம்பித்துவிட்டது.

அவர்கள் பயத்துடன் “எங்கே?எங்கே?” என்று அவளிடம் கேக்க,அவளோ சற்றுத்தொலைவில் உள்ள ஒரு இடத்தைக் கைக்காட்டினாள்.

அவள் கைக்காட்டிய இடத்தை அனைவரும் பார்த்தனர்,பார்த்தவர்கள் அதிர்ந்தார்கள்!

ஏனெனில் ஜெஃபினா சொன்னதுப்போலவே அவர்களுக்கு சற்றுத் தொலைவில் ஒரு பாம்பு ஒன்று தனது உடல் முழுவதும் நீரில் மறைத்தபடி,தனது தலைப்பகுதி மட்டும் தெரியும்படி இவர்கள் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தது.

அதனைப் பார்த்து இவர்கள் அனைவரின் மனதிலும் பயப்பந்து ஒன்று உருவானது.

அதனால் ஆதித்யாவிடம் படகை திருப்பச் சொன்னார்கள்,இவர்கள் பயத்துடன் அவனிடம் சொல்லிக்கொண்டிருக்க ஆதித்யாவோ குலுங்க குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தான்.

என்னடா நாம் பயத்துடன் இவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!இவன் என்னடா என்றால் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டிருக்கிறான் என்று குழம்பிப்போய் நின்றுக்கொண்டிருந்தனர் ஆதித்யாவின் நண்பர்கள்.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் இப்படி சிரித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து மாதேஷ்க்கு கோபம் தான் வந்தது.

“என்னடா?நாங்க இவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டிருக்கோம் நீ என்னடானா கக்கபுக்க கக்கபுக்கன்னு சிரிச்சிக்கிட்டிருக்க?”

என்று அவன் கோபமாக பேசவும்,ஆதித்யா மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.

“கோபப்படாத மாதேஷ்,நீங்க பயப்படுற மாதிரி அது ஒன்னும் பாம்பு கிடையாது.
அது ஒருவிதமான பறவை!”

என்று சொல்ல,அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை!

“பறவையா?புரியலையே?”

“ஆமாம்!அது oriental darter என்று சொல்லப்படக்கூடிய ஒரு விசித்திர பறவை.இதை நிறையப் பேர் பாம்பு பறவைன்னு கூட சொல்வாங்க.இதனுடைய முக்கியமான ஸ்பெஷாலிட்டியே இது பாக்குறதுக்கு அப்படியே பாம்பு மாதிரி இருக்கும்,நிறையப்பேர் இதை தூரத்துல இருக்குறதை பாத்துட்டு பாம்புன்னு பயந்து தெறிச்சு ஓடிருவாய்ங்க,இந்தா இப்போ பயந்தீங்களே?அந்த மாதிரி!”

“ஆனா,நீ சொல்றதைப் பாத்தா நம்புற மாதிரியே இல்லையே!”

என்று சூர்யா சந்தேகத்துடன் சொல்லவும்,அதற்கு ஆதித்யாவோ “அப்படின்னா அங்கே பார்!” என்று அங்கு இருந்த அந்தப் பறவையைக் கைக்காட்டினான்.

அப்போதும் அந்தப் பறவை பார்ப்பதற்கு பாம்பு போல்தான் இருந்தது,சரியாக இரண்டு நிமிடம் கழித்து அது மெதுவாக தண்ணீரில் இருந்தபடியே எந்திரித்து தனது முழு உருவத்தையும் காட்டியது.

அப்போதுதான் அவர்கள் அது ஆதித்யா சொன்னதுப்போல் பறவைதான் என்று நம்பினார்கள்.

“ஹேய்!ஆமாடா!அது உண்மையிலேயே ஒரு பறவைதான்,உடல் முழுவதையும் மறைச்சு கழுத்து மட்டும் வெளியே தெரியுற மாதிரி இருந்ததுனாலேதான் பாக்குறதுக்கு பாம்பு மாதிரியே இருந்துருக்கு,சரி இது எப்போவும் இதே பொஸிஷன்லதான் இருக்குமா?”

என்று அவர்கள் கேள்வியெழுப்ப,அதற்கு ஆதித்யா பதில் கூற ஆரம்பித்தான்.

“எஸ்!இது தன்னுடைய உடல் முழுவதையும் தண்ணீரில் மறைத்தபடி அசையாமல் இருக்கும்,தன்னுடைய இரைகளான மீன்கள் அருகில் வந்ததும் அதனுடைய அலகால் அந்த மீனை குத்தி வேட்டையாடும்,சில சமயம் தனது அலகாலேயே குத்தி மேலே தூக்கிப்போட்டு தனது உணவை சாப்பிடுற ஸ்டைலும் இதுக்கு உண்டு”

“அதாவது கொக்கு மாதிரி பொறுமையாக இருந்து தனது இரையை வேட்டையாடும் அப்படித்தானே ஆதித்யா?”

என்று கேட்ட ரஹீமுக்கு,

“எக்ஸாக்ட்லி!”

என்று பதிலளித்தான் ஆதித்யா.

“அதுமட்டுமல்ல,இதனுடைய கழுத்து ஒரு ஸ்பிரிங் போல் வேலை செய்யும்,அதைவெச்சுத்தான் தனது இரையை கண்ணிமைக்கிற நேரத்துல வேட்டையாடுது”

“சரி!இது மனுஷங்களை ஏதேனும் பண்ணுமா?”

“ம்ஹூம்!பாக்குறதுக்கு பாம்பு மாதிரி இருக்குறதுனால மனுஷங்க இதை கண்டாலே ஓடிருவாங்க,ஆனா இதுல என்ன ஒரு வேடிக்கை அப்படீன்னா மனுஷங்களான நம்மளைப் பாத்ததும் இதுதான் எங்கேயோப் போய் ஒளிஞ்சுக்கும்”

“அப்போ மனுஷங்களை ஒன்னும் பண்ணாது?”

“ஆமா!,அதோடு இந்த பறவையின் எழும்பின் வடிவமைப்பும் வித்தியாசமா இருக்கும்?”

“வித்தியாசமா இருக்கும்னா?”

என கேள்வியோடு மாதேஷ் ஆதித்யாவை நோக்க,அவன்

“மற்ற பறவைகளுக்கெல்லாம் எலும்புகளானது உள்ளே காலியா இருக்கும்?”

“என்னது?பறவைங்களுக்கு எலும்பு உள்ளே காலியா இருக்கும்னா?அதுக்கு எலும்புகள் கிடையாதா?”

என்று ஆச்சரியத்தோடும்,குழப்பத்தோடும் அவர்கள் வினவினர்.

“எலும்புகள் எல்லாம் உண்டு,ஆனா ரொம்ப லைட்டா இருக்கும்,அதாவது காற்று நிரப்பிய மாதிரி இருக்கும்.பட் ஓரியன்டல் டார்டர் பறவையைப் பொறுத்த வரையில் இதனுடைய எலும்பின் எடை சற்று கனமாகவே இருக்கும்,அதனால் இது மிகவும் சுலபமாகவே நீரில் நீந்த முடிகிறது.அதோடு இதனுடைய கண்ணில் நிக்டியேட்டிங் மெம்ப்ரேன் (NICTIATING MEMBRANE)என்று சொல்லப்படக்கூடிய மூன்றாவது கண்மடலான டிரான்ஸ்பரென்ட் ஐலிட் ஒன்று இருக்கும்,இது நீரில் டைவ் அடிக்கும்போது கண்களை பாதுகாக்க ஹெல்ப்ஃபுல்லா இருக்கு.அதுமட்டுமில்லாம இதனுடைய கண்கள் அதிக வெளிச்சத்திலும் சரி,குறைந்த வெளிச்சத்திலும் சரி பார்வை திறன் அதிகமாக இருக்கும் ஸோ இதனால் இரவு நேரங்களிலுமே சுலபமா வேட்டையாட முடியும்”

என்று சொல்லி முடிக்க,இவ்வளவு தகவலையும் கேட்ட ஆதித்யாவின் நண்பர்கள் அனைவரும் மலைத்துப்போய் நின்றிருந்தனர்.

“எங்களுக்கெல்லாம் இப்படி ஒரு பறவை இருக்குறதே இவ்வளவு நாளா தெரியாது?பரவால்லயே உனக்கு இந்த பறவையைப் பத்தி இவ்ளோ தெரிஞ்சிருக்கு”

“எனக்கு இந்த இடம் பழக்கம்ங்குறதால எனக்கு இதைப் பத்தி தெரியுது,அவ்ளோதான்!
ஓகே!நாம் இதுலேயே பாதி நேரத்தை செலவழிச்சிட்டோம்,இன்னும் நாம பாக்க வேண்டியது நிறையவே இருக்கு”

என்று சொல்லி தங்களது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார்கள்.

அவர்களது பயணத்தின் இடையில் தாங்கள் கொண்டு வந்த ஸ்நாக்ஸ்களையும்,பழங்களையும் அங்குள்ள இயற்கையை ரசித்தப்படியே சாப்பிட்டார்கள்.

ஓரியன்டல் டார்டர் போல் இன்னும் பல விசித்திரமான,கேள்விப்படாத பறவைகளை எல்லாம் கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.

பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் தனது படகை திருப்பி வேறு ஒரு திசை வழியாக சென்றான்.

“அவ்ளோதான் பிரெண்ட்ஸ்!நம்ம ரைடானது முடிந்தது”

என்றதும்,அவர்களின் முகத்தில் சிறிது வருத்தம் படர்ந்தது.

“அவ்ளோதானா!இன்னும் கொஞ்சம் போகலாம்தானே?”

என்று ஏக்கத்துடன் கேட்டான் சூர்யா.

“போகலாம்தான்!ஆனால் இதுக்கப்புறம் ஆற்றினுடைய வேகமானது அதிகரிக்க ஆரம்பிச்சிடும்,பிறகு அது நமக்கே பாதமாகவும் வாய்ப்பிருக்கு,ஸோ இத்தோட நிறுத்திக்கிடுறதுதான் நல்லது!”

என்று கூற,தங்களுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறான் என்று தெரிந்துக்கொண்டு தங்களைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

ஒருவழியாக அவர்கள் ஆறு பேரும் ஆதித்யாவின் வீட்டை வந்தடைந்தனர்.

வீட்டை வந்தடைந்ததும் அவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் வெளியே ‘டமடம’வென இடிஇடிக்கும் சத்தம் கேட்டது.

ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்த ஆதித்யா மழை அடித்து வெளுக்கப்போகிறது என்பதை அறிந்துக்கொண்டான்.

ஜெஃபினாவோ “போச்சு!மழை நல்லா பெய்யப்போகுது!,என்னால இன்னிக்கு அந்த ஆற்றில் குளிக்க முடியாதா?”

என்று ஏக்கத்துடன் வினவினாள்.

“அதுக்கு வாய்ப்பே இல்ல!”

என்று ஆதித்யா கூறினான்,அப்போது சூர்யா ஏதோ யோசனை வந்தவனாக

“நம்மால் ஆற்றில் குளிக்க முடியாட்டி என்ன?மழையில் நனைவோம்!”

என்று சூர்யா சொன்னதும்,அங்கிருந்த அனைவருக்கும் ஒரே குஷி.

அடுத்த நிமிடமே அவர்கள் அனைவரும் மழையில் நனைவதற்கு வெளியே சென்றார்கள்.

கொட்டும் மழையில் நடனமாடிக் கொண்டும்,பாடிக்கொண்டும் இருந்தார்கள்.

சூர்யாவும்,மாதேஷூம் மழையில் பல்ட்டியெல்லாம் அடித்து சாகசம் செய்தார்கள்.

அப்போ நான் மட்டும் என்ன சும்மாவா?என்று ரஹீம் ரேம்ப்வால்க்கெல்லாம் செய்து நடனமாடினான்.

மைக்கில் ஜாக்சனின் (ஆன்டி லீன் கிராவிட்டி) மூவ்மென்ட்டை முயற்சி செய்கின்ற பெயரில் இறுதியில் பல்ப் வாங்கிக்கொண்டான் ரஹீம்.

இப்படி இவர்கள் சந்தோஷமாக நடனமாடிக்கொண்டிருக்கும்போது காற்றுடன் கூடிய கனமழையாக பெய்ய ஆரம்பித்தது.

இதற்கு மேல் போதும் என்று முடிவு செய்துக்கொண்டு அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்.

மழையில் ஈரமான உடையை மின்விசிறியின் மூலம் காயவைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஏற்கெனவே மழையில் நனைந்திருந்ததால் மின்விசிறியின் காற்று அவர்களை மேலும் குளிரச் செய்தது.

அவர்கள் குளிரினால் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆதித்யா அலமாரியினுள் வைத்திருந்த கம்பளிப் போர்வையினை ஆளுக்கு ஒன்றாக கொடுத்ததோடு தானும் போர்த்திக் கொண்டான்.

அந்தக் குளிருக்கு கம்பளிப் போர்வையை போர்த்தியிருந்தது இதமாக இருந்தது.

பிறகு ஆதித்யா ஒரு அறையினுள் இருந்து லூடோ போர்டையும் அதனுடன் செஸ் போர்டையும் எடுத்து வந்தான்.

ஆதித்யா,மாதேஷ்,ரஹீம்,நிஷா ஆகிய நால்வரும் லூடோ கேமை விளையாண்டனர்.

சூர்யாவும்,ஜெஃபினாவும் செஸ் விளையாட ஆரம்பித்தனர்.

இவர்கள் சுவாரசியமாக விளையாடிக்கொண்டிருக்கையில் வெளியே தூரத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.

முதலில் அவர்கள் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை,பிறகு அந்த சத்தம் மிக அருகில் கேட்டது.

அதுவும் அந்த சத்தமானது ஒரு குழந்தையின் அழுகுரல் போலிருந்தது.

இந்த கொட்டும் மழையில் குழந்தையின் அழுகுரல் கேட்கின்றதே?என்று பதறியடித்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே சென்று பார்த்தார்கள்.

பார்த்தவர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றிருந்தனர்.

அப்படி அவர்கள் அதிர்ச்சியடைகின்ற அளவிற்கு அவர்கள் என்ன கண்டார்கள்?
என்று அவர்களுடன் சேர்ந்து நாமும் அடுத்த கதையில் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *