நொண்டி ஆட்டுத் திரடு
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன் வரலாறு
ஊர்களின் வரலாற்றுக் கதைகளை எழுதுவதில் எனக்கோர் தனி இன்பம். அதன் சுவையே அலாதி. சில ஊர்களின் பெயர்களிலிருக்கும் பின்னணிக் கதைகளையும் நினைத்து நினைத்து மகிழ்வேன். அதன் சுக அனுபவமே வேறு.
குறிப்பிட்ட ஊர்களுக்கு நேரில் சென்று வயது முதிர்ந்த பெரியவர்களிடம் ஊர் வரலாறு பற்றி வினவியும், துழாவியும் கேட்டு எழுதினேன்.
முதலில் நூறு ஊர்களையும், அடுத்து நூறு ஊர்களைப் பற்றிய செய்திகளையும் திரட்டி ‘ஊரும் பேரும்’ என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக இரு நூற்கள் வெளியிட்டேன்.
அதனால் நாட்டார் வழக்காற்றியல்களும், நாடோடிக் கதைகளும் நிறையக் கிடைத்தன. மேலாதிக்கவாதிகளின் கொடுமை தாங்க முடியாமல் கிறிஸ்தவம் தழுவிய பல ஊர்களின் வரலாறுகளும் கிடைத்தன.
ஊரும் பேரும் மூன்றாவது தொகுதிக்காக ‘மானூர்’ என்ற ஊர் பற்றி எழுத விழைந்தேன்.
மானூர், வட திருநெல்வேலியில் சங்கரன்கோவில் செல்லும் பெரும்பாதையில் நெல்லையிலிருந்து வடக்கே பத்துக்கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஊர்.
மானூருக்குச் சென்று முதியோர் சிலரைச் சந்தித்து உரையாடி மானூர் பேர்காரணம் பற்றி அறிந்து கொண்டேன்.
அதன் பிறகு – நூறு ஆண்டுகளுக்கு முன்பு மானூர் குளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் செழிப்பு பற்றிச் சொல்ல வந்த நபர் ஒரு சுவையான செய்தியைச் சென்னார். அது இனிக்கும் கதை போன்றிருப்பதினால் அதனை இங்கு எழுதுகிறேன்.
பின் வரலாறு
மானூர் குளம் மிகப்பெரியது. குளத்தின் மத்தியில் தீவு போன்று ஒரு பெரிய திரடு உள்ளது. அந்த மேட்டுத் திரட்டில் புற்களும், செடிகளும் இலை தளைகளும் செழித்திருக்கும்.
அந்தக்கால கூலி விவசாயிகளில் சிலர் இப்படிச் சொல்வார்களாம்:
‘மானூர் குளமிருக்கு, மாவிடி பண்ணையார் இருக்கார், எங்களுக் கென்ன கவலை’ என்பார்களாம். வயித்துக் கஞ்சி கிடைத்தால் போதும் என்கிற பிற்போக்காளார்கள் இன்னும் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்.
அந்த வருடம் குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்தது. – ஒரு நல்ல உள்ளூர் மேய்ப்பன் நூற்றுக்கும் அதிகமான தன் ஆடுகளை மேட்டுத் திரட்டில் அமர்த்தி மேய்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இடிமின்னல்களுடன் கூடிய பெருமழை பிடித்தது.
ஆடுகளை விரைவாகக் கூட்டிச் சேர்க்கக் குரல்கொடுத்தான். ஆடுகள் மேய்ப்பன் குரலுக்குக் கீழ்ப்படிந்தன. ஆனால் இடியின் அதிர்ச்சியில் ஆடுகள் மிரண்டன. மின்னல் கண்களைப் பறித்தன. பேய் மழை கொட்டியது.
ஒரு நொண்டி ஆடு சினையாக இருந்தது. அதற்காக மேய்ப்பன் பரிதாபப்பட்டான். அதே வேளையில் இன்றுதான் பிறந்த மூன்று ஆட்டுக்குட்டிகள் நடக்கத் திராணியற்று விழுந்து கிடந்தன.
இருட்ட ஆரம்பித்தது. குளத்தில் தண்ணீர் கிடுகிடுவென ஏறினது. மேய்ப்பன் மூன்று இளமரிகளையும் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டான். பிறிதொரு சினை ஆட்டை இரு கைகளிலும் மார்போடு அணைத்துக் கொண்டான்.
மழைக்குள் ஆடுகளை ஓட்டிச்சென்று பாதுகாப்பாகப் பட்டியில் அடைத்தான். நொண்டி ஆடுமட்டும் இல்லை.
மேய்ப்பன் மிகவும் களைப்பாக இருந்தான். இரு கால்களிலும் மூன்று முட்கள் குத்தி ஒடிந்திருந்தன. ஆடுகளை பத்திரமாகக் கொண்டு சேர்த்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தாலும் நொண்டி ஆடு தப்பி விட்டதே என்று வருந்தினான். அந்தி மழை அழுதாலும் விடாது என்றபடி விடிய விடிய மழை கொட்டியது.
குளம் நிறைந்து மறுகால் ஓடியது. ஆயினும் மேட்டுத்திரடு மட்டும் நீரில் மூழ்கவில்லை.
விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், நெற்பயிர் அறுத்தல் என்று காலங்கள் மாறி மாறி வருடங்கள் உருண்டோடின.
மேய்ப்பனின் ஆடுகள் பெருமந்தையாகப் பலுகிப்பெருகின. நாடுசெழித்துக் கொழித்தாலும் நாட்டாமை ஆதிக்கமும், பண்ணைக் கொத்தடிமைத் தனங்களும் காட்டு முள்மரங்கள் போல்மலிந்து கிடந்தன.
“காடு விளைஞ்சென்ன மச்சான் – நமக்கு
காலும் கையும்தான மிச்சம்”
என்று பட்டுக்கோட்டையார் எழுதிய வரிகளை, சினிமாவில் பாடிய மாதிரி விளைஞ்சாலும் வறுமைதான் மிஞ்சி இருக்கு.
மேய்ப்பன் அவ்வப்போது ‘நொண்டி ஆடு அநாதையாகச் செத்திருக்கும்’ என்று நினைத்து அழுவான்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குளம் சிறிது வற்றியது. மேய்ப்பன் கழுத்தளவு தண்ணீரில் நொண்டி ஆட்டை நினைத்து நீந்திச் சென்றான்.
திரட்டு மேட்டில் அவன்கண்ட காட்சி அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நொண்டி ஆட்டின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளுமாக ஐம்பத்தொரு ஆடுகள், நொண்டி ஆட்டைச்சுற்றிச் சூழ்ந்து மேய்ந்து கொண்டிருந்தன.
தன் மேய்ப்பனைக் கண்ட நொண்டி ஆடு ஆனந்தக் கண்ணீர் சிந்தியது. மேய்ப்பனை நக்கி, வருடி தன் அன்பைக் காட்டியது. மேய்ப்பனும் ஆட்டை அணைத்துக் கொண்டு, ‘நான் உன்னை அநாதையாக விட்டுச் சென்றேன். நீயோ ஒரு மந்தையாகப் பெருகி வாழ்ந்து காட்டி விட்டாய்’ என்று கூறி குதூகலத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதான். இப்பகுதியில் ‘நொண்டி ஆட்டுத் திரடு’ என்பது இன்றும் பெருவழக்காக உள்ளது.
பெரியவர் சொன்ன சுவையான செய்தி கேட்டு இன்பப் பெருமூச்சு விட்டேன்.
குறிப்பு : மானூர் சென்று கள ஆய்வு செய்த நாள் : 26.2.2005
தகவல் தந்த பெரியார் – சொள்ளமாடன், வயது 77.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 55
