நேற்றைய நேயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 654 
 
 

வாசலில் வாழை மரங்கள் நாட்டப்பட்டு மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் கலைஞர்,ரசிகர்களால் நிரம்பிவழிந்ததது .காரணம் அங்கே பழமை வாய்ந்த வானொலி ஒன்றின் நூற்றாண்டு விழா மிகக் கோலாகலமாய் நடத்தப்படுகிறது. அந்த வானொலிக்காக ஆரம்பக் காலங்களில் செயல்பட்ட கலைஞர்கள், தொழிநுட்பவியலாளர்கள், அனுசரணையாளர்கள், நேயர்கள் நலன்விரும்பிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் என நினைவில் இருக்கும் அனைவரும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

மேடையில் நூற்றாண்டு விழாவுக்காக வானொலி நடத்திய இயல் இசை நாடகப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இடையிடையே வானொலியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அறிவிப்பாளர்களை மேடைக்கு அழைத்து அவர்களின் மிக பிரசித்தமான அறிவித்தல்களை அறிவிக்க வைத்து சபையை பிரமிப்பில் ஆழ்த்தினார்கள்.

தன்னுடைய தாத்தா உயிரொலி உமாபதியுடன் மண்டபத்தில் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்த அமிர்தவர்ஷினிக்கு வயது இருபதைத் தாண்டியிருந்தது. சுமாரான அழகு. சாதாரணமாக சல்வார் கமீஸ் அணியும் அமிர்தவர்ஷினி விழா என்பதால் சேலையில் சோலையாகி யிருந்தாள், சேலை மிகவும் எடுப்பாக இருந்தது அவளுக்கு இது புது அனுபவமாக இருந்தது. அறிந்த தெரிந்த யாரும் இருக்கிறார்களா என்று கண்களை மண்டபத்தினுள் அலையவிட்டதில் ஏமாற்றம் மிச்சமாக இருந்தது, யாரும் அவர்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

வரவேற்புக் கூடத்தில் அழைப்பிதழைக் காண்பித்தபோது உள்ளே சென்று அமரும்படி கூறினார்கள். உட்கார்ந்து அரை மணிநேரம் கடந்தும் யாரும் அவர்களை கண்டு கொள்ளாததால் என்னவோ போலிருந்தது அவளுக்கு. யாரிடமாவது சென்று கேட்கலாம் என்றாலும் எல்லோரும் தெரியாத முகங்களாகவே இருந்தார்கள். இருந்தும் ஒரு தைரியத்தில் மேடை அருகே நின்றுகொண்டிருத்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் சென்று விபரத்தைக் கூறியபோது அவரின் முகம் மலர்ந்ததில் சற்று நிம்மதி அடைந்தாள்.

“நான் உங்கள் வருகையைத்தான் எதிபார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்க வந்தால் என்னிடம் கூட்டிவரும்படி ஒருத்தரை வாசலில் வைத்திருந்தேன். அவர் உங்களைக் கவனிக்கவில்லை போலும்’’ தவறுக்கு வருந்தியவராக ‘’சரி சரி எங்கே அவர்?” தாத்தாவை விசாரித்தார். “அதோ அங்கே இருக்கிறார்.’’ கையை காட்டிய அமிர்தவர்ஷினியை ‘’நீங்க உட்கார்ந்திருங்க” என்றவாறு மேடையில் ஏறிய அவரே விழா ஒருங்கிணைப்பாளர்.

வானொலியின் அருமை பெருமைகளை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு பேச்சாளரின் பேச்சு முடிவுக்கு வரும்வரைக் காத்திருந்தவர் ஒலிவாங்கியை கையில் எடுத்துப் பேச ஆரம்பித்தார். “அன்பர்களே.. நூற்றாண்டு காணும் நமது வானொலியின் தூண்களாக விளங்கும் நேயர்களே.. என்னதான் பூக்கள் பூத்து சுகந்தம் கமழ்ந்தாலும் வண்டுகளின் வருகை நந்தவனத்துக்கு இல்லை என்றால் பூக்களுக்கு புவனத்தில் பெருமை ஒன்றும் இல்லை என்பது போல நேயர்கள் நீங்கள் இல்லை என்றால் வானொலிக்கு வசந்தம் இல்லை.” இப்போது மண்டபம் நிறைந்த கரகோஷம்.

கரகோஷ மழையின் நடுவே அவர் ‘’அந்த வகையில் எமது வானொலியின் மிக நீண்டநாள் அபிமானி ஒருவரை இப்போது நாம் மேடைக்கு அழைக்கிறோம். அவர் வேறு யாருமல்ல இதுவரை முகம் காட்டாமல் தன்னுடைய படைப்புக்களால் அகம் காட்டி எம்மையெல்லாம் வசீகரித்துக் கொண்ட திரு உயிரொலி உமாபதி அவர்கள்”.

இதைகேட்டு எதோ சிலர் கரவொலி எழுப்ப அதனோடு சேர்ந்து போனால் போகட்டும் கரவொலிதானே என்பதுபோல கரகோஷம் எழுப்பினார்கள். அடுத்த வினாடி சபையில் ஒரு சலசலப்பு. யார்? யாரது? யாராக இருக்கும்? இந்த வினாக்கள் சூழ எல்லோரின் கண்களும் அலைமோதிய அந்த தருணத்தின் அமிர்தவர்ஷினி ஆசனத்தில் இருந்த தாத்தாவை எழுப்பி மெல்ல கைத்தாங்கலாக மேடைக்கு அழைத்துச் சென்றாள்.

தாத்தாவுக்கு என்பதைத் தாண்டிய வயது. பின்தலையில் மாத்திரம் கொஞ்சம் நரைமுடி ஒட்டிக்கொண்டு தலையை அடையாளபடுத்தியிருந்தது. கையில் ஊன்றுகோலுடன் நடந்தாலும் பார்வையில் குறையில்லை. மேடைப் படிகளில் ஏறுவதற்கு சிரமப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் தூக்கிச் சென்று அவருக்கான ஆசனத்தில் அமரவைத்தார்கள். பக்கத்தில் அமிர்தவர்ஷினியும் அமர்ந்துகொண்டாள்.

தாத்தாவின் இயற்பெயர் காளிமுத்து. தாத்தா இளம்வயது தொட்டே வானொலியின் அபிமானியாக இருந்தார். தாத்தாவின் காலகட்டத்தில் வானொலி என்பது வசதிபடைத்தவர்களின் கௌரவத்திற்கான ஒரு ஆடம்பர பொருளாகத்தான் இருந்தது. ஒரு கிராமத்தில் வானொலிப் பெட்டி வைத்திருப்பவர் என்றால் அவர் அந்த ஊரில் பெரிய பணக்காரர் என்று அர்த்தம். ஆனால் தாத்தா ஒன்றும் அவர் வாழ்ந்த ஊரின் பணக்காரர் ஒன்றும் அல்ல. பணக்காரர் ஒருவரின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரரான அதிர்ஷ்டசாலி. தாத்தாவின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களின் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும் பாடல்கள் காற்றுவாக்கில் இவரது காதில் விழக்கேட்டு வானொலிக்கு ரசிகராகிப்போனவர் என்றால் மிகையில்லை. எப்போதும் அடுத்தவீட்டுக்காரர் வானொலியில் ஒலிபரப்பாவதை எப்போதாவது கேட்பதிலும் பார்க்க அதுவே தன்னுடைய சொந்த வானொலியாக இருந்து விரும்புகின்ற நேரத்தில் கேட்பது நல்லது என்றுத் தாத்தாவுக்கு தோன்றியது. ஆனால் வானொலி ஒன்றை சொந்தமாக வாங்கும் நிலையில் தாத்தா இல்லை. கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் வெறும் ஏழாம் வகுப்புவரையுமே படித்திருந்த தாத்தாவுக்கு நிரந்தர உத்தியோகம் என்று ஒன்று இல்லை.தந்தைக்கு உதவியா விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எப்படியாவது வானொலிப்பெட்டி ஒன்று வாங்க வேண்டும் என்ற கனவு நாளுக்கு நாள் மேலோங்கிய வண்ணமே இருந்தது.

“இப்போது எங்கள் வானொலியின் பழமை வாய்ந்த அபிமானியும் விமர்சகரும் எழுத்தாளருமான ஐயா உயிரொலி உமாபதி அவர்களைப் பற்றி அவருடைய காலத்தில் ஒலிபரப்பாளராக கடமையாற்றிய புகழ்பூத்த அறிவிப்பாளர் மதிப்புக்குரிய திரு திருஞானம் அவர்களை மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம்” நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் விடுத்த அறிவிப்புக்கு செவி சாய்த்து மேடை ஏறினார் அவர். வழமையான மேடை மரியாதைகளுடன் பேச்சை ஆரம்பித்தவர் தாத்தா உயிரொலி உமாபதியைப் பற்றி பேசத்தொடங்கினார்.

“நேயர்களே.. உலகில் வானொலி நிலையங்கள் இன்று நிறைய வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. காசிருந்தால் யார் வேண்டுமானாலும் அனுமதியைப் பெற்று ஒரு வானொலி நிலையத்தைத் தொடக்கி நடத்தலாம் என்ற நிலை இன்றுக்கிறது, ஆனால் அன்று அப்படியல்ல. அன்று எமது முன்னோர்கள் வானொலியில் ஒரு செய்தியையோ நாடகத்தையோ கேட்க மிகவும் சிரமப்பட்டிருக்கின்றார்கள் என்பது இங்கிருக்கும் இளைய சமுதாயத்துக்குத் தெரியாது. இப்போதுபோல் இருபத்திநாலு மணித்தியாலமும் வானொலிகள் அன்றைய கால கட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. காலையில் அல்லது மாலையில் ஒரு சில மணி நேரங்கள் ஒலிபரப்புவார்கள். அதையும்கூட எல்லோரும் கேட்டு ரசிப்பதில்லை காரணம் இன்றுபோல் அன்று வானொலிபெட்டிகள் எல்லோரிடமும் இருக்கவில்லை. பெரும்பாலும் வசதிபடைத்தவர்கள் கைகளின் ஆடம்பரப் பொருளாகவே இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வானொலிப்பெட்டி வாங்கவேண்டும் என்னும் தீராத வேட்கையில் தான் வியர்வை சிந்திய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து அந்நாளிலே கிராமத்தில் இருந்து கொழும்புக்கு வந்து வானொலிப்பெட்டி வாங்கியவர் என்றால் அது எமது உயிரொலி உமாபதி அவர்கள் என்பது உங்களில் எவருக்கும் தெரிந்திருக்க ஞாயமில்லை. என்னடா ஒரு வானொலிப்பெட்டி வாங்கியதை இவ்வளவு பெரியதாய் பேசுகிறானே என்று நீங்கள் சலித்துக் கொள்வது எனக்கு விளங்குகிறது. நாடு அந்நியர் ஆதிக்கத்திற்குட்பட்டு மக்கள் அடிமைகள்போல் வாழ்ந்த காலம் அது. சுதந்திர வேட்கையால் விடுதலை நீர்த்தேடி போராடிய கோடைகாலம் அந்தக் கொடிய காலம். அப்படிப்பட்டக் காலத்தில் சாதாரண கிராமவாசி ஒருவர் வானொலிப்பெட்டி வாங்குவதென்பது ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதற்கு சமனாகும். அந்த வகையில் அன்று இந்த அரிய சாதனையை நிலைநாட்டிய திரு உயிரொலி உமாபதி என்றோ பாராட்டப்பட வேண்டியவர். அப்படிப்பட்டவரை இன்றைய நாளில் நமது வானொலி தேர்ந்தெடுத்து பாராட்ட முன்வந்திருப்பது எமது வானொலிக்குக் கிடைத்த பெருமை என்பதை கூறிக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’

அவரின் பேச்சுக்கு சபை நிறைந்த கரகோஷம். அதன் பின்னர் சில கலை நிகழ்ச்சிகளும் பேச்சுக்களும் என மிகவும் கலகலப்பான அந்த மேடை தாத்தாவின் புகழ்பாடி தாத்தாவை உச்சத்தில் வைத்தது. வானொலி கேட்பதன் மூலம் அந்நாளிலேயே தன்னை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒருத்தராகவும் மாற்றிக்கொண்ட தாத்தா கேட்கும் நிகழ்ச்சிகளுக்கு முதலில் விமர்சனம் எழுதத் தொடங்கினார். தாத்தாவின் வானொலி நிகழ்ச்சிகளுக்கான விமர்சனம் அந்நாளில் மிகவும் பிரசித்தமானது. அக்காலத்தில வானொலி அறிவிப்பாளர்கள் நல்ல குரல்வளம் மிக்கவர்களாகவும் சொல்வளம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வானொலி நிலையத்தின் பக்கமே நுழைய முடியாது. மீறியும் வந்தால் தாத்தா போன்றோரின் விமர்சனம் அவர்களை ஓடவைத்துவிடும் அன்றுள்ளவர்கள் தமிழை தமிழாக உச்சரித்து சமூகத்தில் தமிழை வளர்த்தார்கள்.

தமிழ் வானொலி என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தை வளர்க்கும் நிலை அன்றைய வானொலியில் இல்லை. அதே போன்று தமது செல்வாக்கைக் கொண்டு அல்லது எவருடைய காலைப் பிடித்து அறிவிப்பாளர் ஆகி தமிழை தமிலாக்கியவர்கள் என்று எவரும் இருந்ததில்லை. திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு வசந்த காலத்து வானொலி நேயராக இருந்த தாத்தாவின் பொற்காலம் மீண்டும் வராது.

வானொலி நிகழ்ச்சிகளின் வாயிலாக கிடைத்த அனுபவத்தைக் கொண்டு படிப்படியாக கதை, நாடகம் என்று எல்லாம் எழுதத் தொடங்கிய தாத்தாவுக்கு அந்த காலத்திலேயே ரசிகர்களும் இருந்தார்கள். வானொலி ரசிகனாக இருந்த தாத்தாவையும் ஒருத்தி ரசிக்கத் தொடங்கி வாழ்நாள் ரசிகையாகவும் மாறிய சம்பவத்தால் வெறும் காளிமுத்து என்றிருந்த தாத்தா வானொலியை உயிராய் நேசித்தக் காரணத்தால் கிடைத்தக் காதல் மனைவியின் பெயரையும் சேர்த்து உயிரொலி உமாபதியாக பெயர்மாற்றம் கொண்டு வானொலி நிகழ்ச்சிகளில் கொடிகட்டினார்.

காலத்தின் சோதனை முதல் பிரசவத்தில் ஆணும் பெண்ணும் என இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டு காலனின் கோட்டைக்குள் நுழைந்து கொண்டாள் மனைவி. மனைவியின் பிரிவால் நொடிந்து போன தாத்தா மறுமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய போதும் வானொலி கேட்பதை நிறுத்தவில்லை. தாத்தா வாழ்வின் இன்பதுன்பம் எல்லாவற்றிலுமே வானொலி நிறையவே ஆறுதலாக இருந்திருக்கின்றது.

’இப்போது விழாவையொட்டி நடத்தப்பட்ட இயல் இசை நாடகப் போட்டிகளில் பங்குபற்றி வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு’ என்ற தொகுப்பாளரின் அறிவிப்பின் பின் முக்கிய பிரமுகர்களின் கைகளால் பரிசளிப்பு நிகழ்ந்து கொண்டிருக்க..அந்த சந்தர்ப்பத்தில் பொதுவாய் வேலை என்று ஒன்று இல்லாவிட்டாலும் தாமதமாய் வந்து போவதில் அவசரம் காட்டும் பிரதம அதிதி வருகை தரவே நிகழ்வு இடை நிறுத்தப்பட்டு அதிதியினை வரவேற்பு செய்வதில் விழாக் குழுவினர் பரபரப்பானார்கள். மேடைக்கு வந்த அதிதிக்கு பூமாலையும் பொன்னாடையும் போர்த்தி கெளரவம் செய்ததும் வழமைபோல் இரண்டு வார்த்தை பேசும்படி ஒலிவாங்கி கையளிக்கப்பட்டது.

“பேரன்புமிக்க பெரியோர்களே.. தாய்மார்களே ஊடகத்துறையின் தாய்வீடாய் விளங்கும் வானொலி குடும்பத்துக் குயில்களே.. வானொலியை வழிநடத்திச் செல்லும் அறிவு ஜீவிகளே.. கலைஞர்களே.. இளைஞர்களே.. ரசிக பெருமக்களே..தொழில்நுட்பவியலாளர்களே .. உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கம். நூற்றாண்டு விழா என்பது … என்று பேச்சைத் தொடர்ந்தவர் வானொலியின் வரலாறுகளை அறியாதவர் எதோ தனது உதவியாளர் எழுதிக் கொடுத்ததை வைத்து எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல் பேச்சில் மும்முரமானார்.

பேச்சின் நடுவே “அன்பர்களே.. இன்றைய இந்த நூற்றாண்டு விழாவில் நமது வானொலியின் பழமை வாய்ந்த நேயரும் எழுத்தாளருமான திரு உயிரொலி உமாபதி அவர்களை கௌரவிக்கும் மாபெரும் பொறுப்பை என்னிடம் இந்த விழாவின் பொறுப்பாளர்கள் கொடுத்தபோது என்னால் அதை மறுக்க முடியவில்லை. காரணம் அந்த நாள் தொட்டே நான் அவரின் ரசிகன் என்பது உங்களில் எவருக்கும் தெரிந்திருக்க முடியாது. எனது பால்ய காலம் தொட்டு நான் அவரின் எழுத்துக்கு அடிமை. நான் இந்த அளவு இந்த மேடையில் பேசுகிறேன் என்றால் அது நான் அவரின் எழுத்தை நேசித்து பெற்ற அனுபவம் என்றால் அது மிகை இல்லை…. (“கருமம் எவன் எவனை எல்லாமோ போற்ற வேண்டிக் கிடக்கு என்று அவரின் மனது பேசுவதை இப்போதைக்கு நாம் கேட்கவேண்டாம்”) ஒலிவாங்கியை விடாமல் தாத்தாவின் புகழாரம் பாடியவர் பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தபோது சபை நிறைந்த கரகோஷம். அது அப்பாடா இப்போதாவது முடித்தானே என்ற மன ஆதங்கத்தை சபை கரகோஷமாய்க் கொட்டித் தீர்த்தது என்று அதிதிக்குத் தெரியாது.

இப்போது மறுபடியும் ஒலிவாங்கிக்கு வந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அறிவிப்பாளர். பிரதம அதிதிக்கு நன்றிக் கூறிவிட்டு “அன்பர்களே.. நமது இந்த விழாவிற்காய் தன்னுடைய எல்லா அலுவல்களையும் நிறுத்திவிட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும் நமது பிரதம அதிதி இப்போது அவசரமாக இன்னொரு நிகழ்வு ஒன்றிலும் பங்கெடுக்க வேண்டி இருப்பதால் விழாவில் தற்போது எமது வானொலியின் பழம்பெரும் அபிமானி ஐயா திரு உயிரொலி உமாபதி அவர்களை நமது ஐயா கௌரவிக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் தொடரும்” என்று கூறிவிட்டு தாத்தாவை நாற்காலியிலிருந்து எழுப்பி மேடையில் சற்று முன்பாகக் கொண்டு வந்தார்கள்.

தடியை ஊன்றிக் கொண்டு நிற்பதற்கு சிரமப்பட்ட தாத்தா வீழ்ந்துவிடாமல் அமிர்தவர்ஷினி பிடித்துக்கொள்ள, பத்திரிகையாளர்கள் வானொலி தொலைகாட்சி ஒலி/ ஒளிப்பதிவாளர்கள் தங்கள் கடமையை செய்யத் தயாரான நிலையில் பிரதம அதிதி தாத்தாவுக்கு பொன்னாடை போர்த்த மண்டபம் மகிழ்ச்சியை மறுபடியும் கரகோசமாய் பொழிந்தது. அதைத் தொடர்ந்து பொற்கிழியும் விழாவுக்கான நினைவுக் கேடயமும் வழங்கப்பட்டது. தாத்தாவிடமிருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்ட அமிர்தவர்ஷினி நிற்பதற்கு மிகவும் சிரமப்பட்டத் தாத்தாவை மறுபடியும் நாற்காலியில் அமரவைத்தாள். அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் அமிர்தவர்ஷினிக்கு கண்களில் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது, வயது காரணமாய் நிற்க முடியாத தாத்தாவின் அருகே ஒலிவாங்கியைக் கொண்டு சென்று ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னபோது..

“அவரால் நீங்கள் சொன்னதை புரிந்து கொள்ளமுடியாது அவர் சார்பாக நான் சற்று பேசலாமா” என்று அனுமதிக் கேட்டு ஒலிவாங்கியை வாங்கினாள்.

“அனைவருக்கும் வணக்கம்.. எனக்கு மேடையில் பேசிப் பழக்கமில்லை. இருந்தும் எனது தாத்தாவின் சார்பாக என்னை இங்கு பேச அனுமதித்தமைக்கு முதலில் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். வயோதிகம் காரணமாக எனது தாத்தாவால் உங்கள் முன் பேசமுடியவில்லை. அதற்காக எனது தாத்தாவின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இத்தனை வருடம் கழிந்தும் என்னுடைய தாத்தாவை நினைவில் வைத்து இந்த வானொலிக்காக அவர் கடந்த பல தசாப்தங்களில் ஒரு நேயராக ஆற்றிய பங்களிப்புக்காக இன்று இந்த மேடையில் அவரை கௌரவப் படுத்தியதற்காக எமது வானொலிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை யுத்தகாலத்தில் தன்னுடைய மகனையும், வீட்டையும், வாழ்நாளில் தனது பொக்கிஷமாய் காத்துவந்த தான் முதன்முதல் வாங்கிய வானொலிப் பெட்டியையும் இழந்து திசை மாறி என்றோ வானொலியுடனான தொடர்பை நிறுத்திக் கொண்ட தாத்தாவின் விலாசத்தைக் கண்டு பிடித்து அழைப்பு விடுத்த விழா குழுமத்திற்கு எனது மேலான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்னுடைய தாத்தா தன்னுடைய காலத்தில் தன்னையே வானொலிக்காக அர்ப்பணித்த அருமை பெருமைகளை எல்லாம் புகழ்ந்து பாராட்டி இத்தனை கௌரவங்களையும் அளித்து அவரது உளங்குளிர செய்தமையை பார்க்கின்ற இந்த பொன்னான நாளில் என் கண்ணில் இன்று கண்ணீர்தான் வருகிறது. அது ஆனந்தத்தால் அல்ல. நீங்கள் எல்லாம் என் தாத்தாவின் புகழை இன்று இந்த உலகமே கேட்கும்வகையில் பேசிய பேச்சுக்களை எல்லாம் சம்பந்தப்பட்ட அவர் கேட்கவில்லையே என்னும்போது என்னால் அழுவதைத்தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை.”

பேசிக்கொண்டே விசும்பிய அமிர்தவர்ஷினியை எல்லோரும் வியப்போடு நோக்க அழுகையினூடே மேலும் தொடர்ந்தாள் “ஆம் அன்று எங்கள் நாட்டில் நடந்த கொடிய யுத்தத்தின்போது எங்கோ சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த என் தாத்தா வீட்டை அண்மித்த அந்த வினாடி எங்கிருந்தோ வந்து வீட்டின் கூரையில் வீழ்ந்த வான்குண்டால் குடும்பத்தையே இழந்துவிட்டபோது கூடவே குண்டுச்சத்தம் என் தாத்தாவின் கேட்கும் சக்தியையும் பிடுங்கிக்கொண்டது. அன்று அதிர்ஷ்டவசமாய் உயிர்தப்பிய என் தாத்தா இன்றுவரை ஒரு நடைப்பிணம்போல் வாழ்கிறார். அவரின் மகள்வயிற்றுப் பேத்தியான எங்கள் குடும்பம் வேறு ஊரில் மட்டும் இருந்திராவிட்டால் இன்று என் தாத்தா ஒரு அனாதையாகவே ஆகியிருப்பார்” என்றபோது மண்டபம் ஒருகணம் நிசப்தத்தில் உறைந்துவிட்டது.

மறுகணம் அதுவரை தாத்தா மனது குளிர வேண்டும் என்பதற்காக தாத்தாவைப் போற்றிப் பேசியவர்களெல்லாம் தமது பேச்செல்லாம் விழலுக்கு இறைத்த நீராகியதில் விழி பிதுங்கி நிற்க, மேலும் தனது பேச்சைத் தொடர்ந்தாள் அமிர்தவர்ஷினி. அவளின் பேச்சை செவிமடுத்துக் கொண்டிருந்த பிரதம அதிதி “ச்சே.. போயும் போயும் ஒரு செவிடனைப் போற்றிப் பேசி நேரத்தை வீணடித்துவிட்டேனே” மனதுக்குள் புகைந்ததை வெளியில் காட்டாமல் அடுத்த நிகழ்வுக்கு போகவேண்டும் என்று அவசரப்படவே ‘கலைஞர்கள் வாழும்போதே பாராட்டப் படவேண்டியவர்கள். வாழும்போது மட்டமல்ல அவர்கள் எந்தத்துறையில் பிரகாசிக்கிரார்களோ அதில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பாராட்டப்பட வேண்டியது மிகவும் முக்கியம். காலம் தாழ்த்திய பாராட்டு என்பது காட்டில் எரிந்த நிலவாக, கடலில் பெய்த மழையாகப் போய்விடும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன’ என்று முடித்தபோது கரகோஷம் வானைப் பிளந்தது.

அதற்குள் பிரதம அதிதியை அனுப்பிவைப்பதில் மும்முரமாகி அதிதியோடு ஏற்பாட்டாளர்கள் சிலரும் போய்விட அடுத்த நிகழ்விற்காக மேடை தயாராகவேண்டிய கட்டாயத்தில் தாத்தாவைக் கைத்தாங்கலாய் மேடையில் இருந்து இறக்கினாள் அமிர்தவர்ஷினி.

மெய்யன் நடராஜ் என்னுரை - காதலியின் கல்யாணம், 2022. சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே எனது இரண்டாவது குழந்தைக்கு சற்று பெரிய இடைவெளி விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. “காதலியின் கல்யாணம்” . இது வெறும் காதலை மட்டும் கருவாகக் கொண்டு உருவானதல்ல.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *