நேற்றும் இன்றும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 139 
 
 

(உரையாடல் வடிவில் விரியும் கதை)

மயக்க நிலையில் இருந்த வாட்டசாட்டமான , தாடி முகம் கொண்ட இளைஞன் கதிரவன் கண் விழித்தான். கண் விழித்ததும் தான் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நாம் எங்கே இருக்கிறோம் என்று நினைத்தான். ஆனால் அதை கேள்வியாக கேட்கவில்லை. அவன் வேறு கேள்வி கேட்டான். .

கதிரவன் கேட்டான் – “யோவ் யாருய்யா நீங்க.. நேத்து , உள்ளத்தை அள்ளித் தா படத்தை யூட்யூப்ல பார்த்தீங்களா? என் தலைல கட்டையால அடிச்சு இங்க கடத்திட்டு வந்திருக்கீங்க?“

அருகில் மற்றொரு ஆசனத்தில் அமர்ந்து இருந்த கனமான தேகம் கொண்ட நடுத்தர வயது நபர் பேசினார் –

“தம்பி … அமைச்சர் வசந்தா கணேசன் ஒங்க அத்தை தானே?“

“ஆமாம் அதுக்கு என்ன?“

“நாளைக்கு ஒங்க அத்தை பொண்ணு ரஞ்சனிக்கும் கர்நாடகாவுல இருக்கிற தமிழ் கார எம்பியோட பையனுக்கும் நிச்சயதார்த்தம்.. நீ வந்து எந்த பிரச்சினையும் பண்ணக் கூடாதுன்னு உன்னை கடத்தி வைச்சுக்க சொல்லி எங்களுக்கு அசைன்மென்ட்… “

“எங்களுக்கு ன்றீங்க எத்தனை பேரு… நாலு பேரா.. இதோ.. தம் அடிக்கிறாரே.. இவர் தான் ஒங்க டீம் லீடரா…? “

“ஆமாம் அவர்தான் எங்க தலைவரு மணி அண்ணன்.. தலை நரைச்சிருக்குன்னு பார்க்காதே அவர் பெரிய ஆளு”

“பார்த்தாலே தெரியுது.. வணக்கம் சார்.. என்னை அடைச்சு வைக்க சொல்லி அசைன்மென்ட் கொடுத்தது யாரு..?.. அவர் பேச மாட்டாரா ? என்னை தம்பின்னு கூப்பிட்ட அண்ணா நீங்க சொல்லுங்க “

“கிளையன்ட் யாருன்னு எல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது “

“சரி இந்த இடம் எதுன்னு சொல்லுங்க.. ட்ரைன் போற சத்தம் கேட்குது … “

“செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேசன் கிட்ட ட்ராக்கை ஒட்டி இருக்கு .. சாரி மணி அண்ணே உளறிட்டேன்.. “

“அண்ணா என் பர்சையும் மொபைலையும் கொடுங்க … நான் பீச் ட்ரைன் பிடிச்சு சென்னைக்கு போய் சேர்றேன் … வீட்ல தேடுவாங்க ஆபீஸ்ல ஒரு நாள் சேலரியை பிடிச்சுடுவாங்க ஒங்களுக்கு புண்ணியமாகப் போகும் … “

“தம்பி நீ அமைச்சரோட அண்ணன் பையன் ட்ரைன்ல போறேன்ற .. “

“அண்ணா .. எங்க அத்தை பொண்ணு , அந்த எம்பி பையன பிடிச்சிருந்தா நிச்சயம் , கல்யாணத்தை பண்ணிக்க போறா … நான் என்ன பாட்ஷா மாணிக்கமா ? நிச்சய விசேஷதத்துல வந்து தூக்கறதுக்கு .. யாரு உங்களுக்கு வேலை கொடுத்தாங்க … “

“இவன் என்ன அண்ணே சினிமாவ பத்தியே பேசறான் .. எப்எம் ல பேசற மாதிரி பேச்சா பேசறய தம்பி. நாங்களே டென்சன்ல இருக்கோம்.. உன்னை கடத்த சொன்னவங்களுக்கு போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறாங்க … “

“என்ன அண்ணா நீங்க ஆளாளுக்கு கையில ஆன்ட்ராய்ட் போன் வெச்சு இருக்கீங்க .. அண்மை செய்தி தெரியாம இருக்கீங்க .. பொறாமையில பேசலை அந்த நிச்சயத்தாம்பூலம் நடக்காது .. “

“என்னப்பா சொல்றே “

“கட்சியை வலிமையாக்குவதற்காக கட்சி பணிக்காக எங்க அத்தைய மந்திரி பதவியிலிருந்து விடுவிச்சுட்டாங்க .. ன்னு பிரேக்கிங் நியுஸ் .. பெங்களூர்லேந்து சென்னை நோக்கி நிச்சயம் பண்ண வந்த கார் எல்லாம் திரும்பிப் போயிருக்கும் ஒங்க போன்ல நெட் எடுத்தா ஏதாவது நியுஸ் சேனல்ல பாருங்க … “

அந்த நபர் தன்னுடைய கைபேசியை ஆராய்கிறார் …

“மணி அண்ணே இவன் சொல்றது சரிதான்… அதான் நமக்கு வேலை கொடுத்த அமைச்சரோட பிஏ ரெண்டு பேரும் போன் எடு்க்க மாட்டேங்கறாங்க … “

மணி அவனை அனுப்பி வை என்று சைகையில் கூறுகிறார்.

அந்த நபர் , கதிரவனிடம் அவனுடைய கைபேசியையும் பர்சையும் ஒப்படைக்கிறார். கதிரவன் , தன்னுடைய கைபேசியைப் பார்த்தபடியே வாசலை நோக்கிச் செல்கிறான் ..

அந்த நபர் பேசினார் – ” தம்பி .. நீயாவது பெரிய மனசு பண்ணி நாங்க ஈவினிங் மருந்து சாப்பிட ஒரு மூவாயிரம் உன் கணக்குலேந்து அனுப்புப்பா .. நீயே ட்ரைன்ல போற ஒரு ரெண்டாயிரமாவது அனுப்புப்பா … “

“என்னை கடத்திகிட்டு வந்தத்துக்கு நானே தரணுமா ? வடிவேலு சார் படத்துல சொல்றா மாதிரி இது புதுசா இருக்கு அண்ணா .. சரி ஒங்க நம்பர சொல்லுங்க “

“இதான் நம்பர் … என்னப்பா போய்க்கிட்டே இருக்கே..”

“இல்லை அண்ணா இங்க நெட்ஒர்க் வரலை … வாசல்ல போய் பார்க்கறேன் “

வெளியே வந்த கதிரவன் , இருப்புப்பாதையைப் பார்த்தான் . அதன் வழியில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி வேகமாக நடை போட்டான்.

– அத்தை மடி மெத்தையடி, சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பு.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *