நீர் குற்றவாளியா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 987 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீர் குற்றவாளியா அல்லவா?’ என்று அழுத்தந் திருத்தமாக அவன் என்னைக் கேட்டான். அப்போது எனக்கு ஆண்டுகள் ஐம்பது நிறைந்திருந்தன. அவனோ இருபதுக்கு மேல் ஒன்றிரண்டு கடந்த இளைஞன். 

நான் சட்டப் புத்தகங்களை யெல்லாம் கரைத்து குடித்திருந்தேன். அவனோ எழுத்தறியாதவன். நான் செல்வத்தில் திளைத்திருத்தேன். அவன் வறுமையில் முளைத்திருந்தான். 

நான் குற்றம் விசாரித்துத் தண்டிக்கும் நீதிபதியாக வீற்றிருந்தேன். அவனோ குற்றஞ்சாட்டப்பட்டு என் முன் கைதிக்கூண்டில் நின்றிருந்தான். 

அவன் சாமான்யக் குடியானவன். அவனை நான் கண்டபின் ஆண்டுகள் இருபது பறந்தோடிவிட்டன. ஆனால் அவன் என் மனக்கண் முன் இன்றும் காட்சி யளித்த வண்ணமாய் நிற்கிறான். அவன் கடாவிய சொற்கள் என்னிரு செவிகளை ன்றும் குடைந்து கொண்டிருக்கின்றன. 

நான் முப்பதாண்டுகள் நீதிபதியின் இடத்தை அலங் கரித்திருக்கிறேன். மூவாயிரம் வழக்குகளை விசாரித்து நீதி செலுத்தியிருக்கிறேன். முப்பதினாயிரம் குற்றவாளிகள் என்முன் கைகட்டி, வாய் பொத்தி நின்றிருக்கின்றார் கள். நீ குற்றவாளியா? நீ குற்றவாளி தானே? என்று அத்தனை பேர்களையும் நான் கேட்டதுண்டு. பலர் இல்லை என்பார்கள். சிலர் ஆம் என்பார்கள். அவனைத் தவிர வேறெவனும் என்மீது குற்றஞ்சாட்டி “நீர் குற்ற வாளியா – அல்லவா” என்று என்னைக் கேட்டதில்லை. உலகில் என்போன்று லட்சக்கணக்கான நீதிபதிகள் இருந் திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். கோடிக்கணக் கான குற்றவாளிகளை அவர்கள் விசாரித்திருப்பார்கள். ஆனால் எனக்கேற்பட்ட அநுபவம் அவர்களில் ஒருவருக் கேனும் ஏற்பட்டிராது. 

நீண்டு கருத்த முடியை அவன் வாரிக்கட்டியிருந்தான். சுட்டிலடங்காத சில ரோமங்கள் காற்றில் அசைந்து கொண்டிருந்தன. ஆனால் அவன் அசையாது நின்றிருந் தான். அவன் நெற்றி அகன்றிருந்தது. புருவங்கள் அடர்ந் திருந்தன. ஒளி நிறைந்த இரு கண்களால் அவன் இமை கொட்டாது என் முகத்தைப் பார்த்தான். அவனுடைய உயர்ந்த தோள்களையும் அகன்ற மார்பையும் என்னால் மறக்கமுடியவில்லை. அவன் உடலில் சட்டை அணியாம லிருந்தான். அவன் மனதிலும், அவன் என்னையோ அன்று கச்சேரி முழுதும் குழுமியிருந்த ஜனத்திரளையோ சட்டைசெய்ததாகத் தெரியவில்லை. 

302 வது பிரிவின்படி நீ கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாய். நீ குற்றவாளியா அல்லவா என்று நான் கேட்டேன். 

நான் கேட்டதுதான் தாமதம். அவன் தோளை அசைத்து, மார்பை உயர்த்தி, விரிந்த கண்களோடு என்னைப் பார்த்தான். அவனது மீசைகளிரண்டும் துள்ளிக் கூத்தாடின. 

அவன் கூறியதைக் கேளுங்கள் : 

“நான் கருப்பகவுண்டனைக் கொலை செய்தேன் என்பது உண்மைதான். ஆனால் நான் குற்றவாளியாக மாட்டேன். பத்துப் படிகாட்டை நான் எருவிட்டு உழுது, விதைத்து, கவலை இறைத்து, களைகளைப் பிடுங்கிக் காத்து, வளர்த்து, அறுத்து அடித்துச் சேர்த்துக் குவித்தவுடன் கருப்பகவுண்டன் எம கிங்கரன்போல் வந்து நிற்பான். ஆண்டுதோறும் அவனுக்கு நான் ஐநூறு ரூபாய் கொடுத்தாகவேண்டும். நான் உழுதுவந்த காடு அவனுக்குச் சொந்தமாம். எனக்கு முன் என் தந்தை அக் காட்டை உழுது வந்தான். என் தந்தைக்கு முன் என் பாட்டன் முப்பாட்டன் ஆகியோர் அதை உழுதுவந்திருக் கிறார்கள். எனவே தலைமுறை தலைமுறையாக நானும் என் மூதாதையரும் உழைத்து உழைத்து கருப்பக் கவுண்டனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் ஐநூறு செலுத்தி வந்திருக்கிறோம்.” 

என் தந்தை எனக்கு வைத்துவிட்டுப்போன சொத்து எனது உடலும், கருப்பக் கவுண்டன் சொந்தங்கொண் டாடும் பத்துப்படி காடும்தான். என் தந்தை இறந்த மறு தினமே அவர் வைத்துழைத்த எருதுகளிரண்டும் எமபுரம் சேர்ந்தன. நான் சுருப்ப கவுண்டரை அணுகிக் காளை கள் இரண்டு தந்துதவுமாறு கேட்டேன். அவன் கடுங் கோபத்தோடு என்னைப்பார்த்தான். “காட்டைக் காலி செய்து விட்டுப்போடா” என்று அடைமொழிகள் பலவோடு அலங்கரித்துக் கூறினான். 

கிணறுவெட்டப் பூதம் புறப்பட்ட கதை போலான தென்று நான் மௌனமாக என் மனைவியிடம் சென்று தெரிவித்தேன். அவள் பத்தினி. தன் கழுத்திலிருந்த மாங்கல்யச்சரடு நீங்கலாக, மற்ற நகைகளையெல்லாம் கழட்டி என் கையில் கொடுத்தாள். அவளுக்கு நான் என் முகநகை தவிர வேறு எந்நகையும் பூட்டியதில்லை. எல்லாம் அவளுடைய அப்பன் பூட்டியவை. அவ்வணி களை வாங்க என் மனம் மறுத்தது. கைகள் கூசின. ஆனால் அவள் அவற்றை வற்புறுத்திக் கொடுத்தாள். அவற்றை விற்று இரண்டு காளைகள் வாங்கினேன். 

சென்ற ஆண்டு வானம் பொய்த்தது. கிணற்றில் தண்ணீர் வற்றிப் போய்விட்டது. என்னால் இயன்ற அளவு சுரண்டிச் சுரண்டிப் பாய்ச்சியும், பயிர்கள் பிழைக்கவில்லை. எல்லாம் கரிந்துபோயின. என் அருமைக் காளைகட்கும் தீவனம் தட்டிற்று. 

இந்நிலையில் கருப்பக் கவுண்டர் வந்தார். காட்டுக் குத்தகை கேட்டார். அடுத்தபோகம் விளையட்டும், தரு கிறேன் என்றேன். அவர் இணங்கவில்லை. கடுகடுத்துக் கண்டபடி பேசினார். என் மனைவி மானமுள்ளவள். தன் கழுத்திலிருந்த தாலிச் சரட்டைக் கழட்டி என் கையில் வைத்தாள், அது தங்கச் சரடு. 

இதை விற்று, இவர் கடனை முதலில் கட்டுங்கள் என்றாள். கடைக்காரச் செட்டி அதனை எடையிட்டு மதித்து இருநூறு ரூபாய்கள் கொடுத்தான் அப்பணத்தை அப்படியே கருப்பகவுண்டனிடம் சேர்ப்பித்தேன். 

பணத்தை எண்ணி எடுத்துக்கொண்டு பாக்கிப்பணம் எங்கே என்றான். பொறுத்துக்கொள்ளுங்கள் விளைந்தவுடன் தருகிறேன் என்றேன். 

“விளையாவிட்டாலோ” என்று வேட்டு எழுப்பி னான். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். 

“யாரடா அங்கே” என்று அதட்டினான். அவனுடைய கையாள் ஒருவன் வந்தான். இவன் காளைகளைச் சென்று பிடித்துவா என்று கட்டளையிட்டான். என் காளைகளிரண்டும் பிடித்துவரப்பட்டன. 

“அவற்றை அங்கே மைதானத்தில் கட்டடா” என்று கர்ஜித்தான் கவுண்டன். ஐயோ பாவம், வெய்யில் மண்டை வெடிக்கிறது. மரத்தடியிலாவது கட்டச் சொல்லுங்கள் என்றேன். 

“முடியாது காளைகள்மீது கருசணையிருந்தால் (கருணையிருந்தால்) என் கடனைக் கொடுத்துவிட்டு, உன் காளைகளைப் பிடித்துப்போ'” என்று பதில் கூறினான். 

காளைகள் கட்டப்பட்ட இடத்திலேயே நான் அன்று மாலைவரை நின்றிருந்தேன். அன்று என் மனைவி பிரசவித்த ஏழாம் நாள் என் வயிறு கடித்தது. காளைகள் வயிறும் குழிந்தது. 

அவற்றிற்கேனும் கொஞ்சம் புல்லும் தண்ணீரும் கொண்டுவரச் சென்றேன். கொண்டும் வந்தேன். புல்லை உதறிப்போட்டுத் தண்ணீரையும் அருகில் வைத்தேன். 

கருப்பக்கவுண்டன் ஓடோடியும் வந்தான். தண்ணீரைக் கீழே கவிழ்த்தான். புல்லை வாரித் தூரத்தில் எறிந்தான். உன் காளைமேல் உனக்குள்ள “கருணை” என் பணத்தின் மேல் உனக்கு இல்லையல்லவா என்று என் முகத்தைப் பார்த்துக் கூறினான். 

நீங்கள் செய்வது நீதியல்லவே. வாயற்றவனை வதைப்பது நேர்மையல்லவே; என்று அவனோடு வாதாடி னேன். அவன் என்னை வைதான். தன் வலது காலால் என் வயிற்றின்மேல் எட்டி உதைத்தான். 

நீதி இல்லையா- என்று என் ஆவி துடிக்கக் கூவினேன் கண்ணீர்விட்டு சுதறினேன் கைகள் கூப்பிக் கெஞ்சினேன் கல்நெஞ்சம் படைத்த கருப்பன் இரங்கவில்லை. அவனை இரங்கச் செய்ய மற்றெவரும் அங்கு அணுகவில்லை. 

அதிகாரிகள் இருப்பிடந்தேடி ஓடினேன். அஞ்சலி செய்து வணங்கினேன். அழுதேன். விழுந்தேன். புரண் டேன். புலம்பினேன் என் குறையை அவர்கள் தீர்க்க வில்லை. 

மீண்டும் என் காளைகள் இருக்குமிடம் ஓடினேன் அவைகளின் கட்டை அவிழ்த்தேன். கருப்பக்கவுண்டன் ஓடிவந்து தடுத்தான். அப்புறம் நடந்ததை ஒரே வார்த்தை யில் முடித்துவிடுகிறேன். அவள் பிணமாக வீழ்ந்தான். தான் கம்பீரத்தோடு என் காளைகளைப் பிடித்துக் கொண்டு என் குடிசைக்கு வந்தேன். 

ஆண்டவன் படைத்தது இவ்வுலகம்; நான் உழுதுவந்த பத்துப்படி காடும் ஆண்டவனால் படைக்கப்பட்டது. அதில் உழைப்போனாகிய எனக்கில்லாத சொந்தம் கருப்பக்கவுண்டனுக் கெப்படி வந்தது? 

என் உழைப்பை அவன் திருடினான். நீங்கள் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கவில்லை. என்னையும் என் மூதாதையர்களையும் அவனும் அவனது மூதாதை யரும் இம்சித்து, வஞ்சித்துப் பணம் பிடுங்கி வந்தனர். நீங்கள் அதனைத்தடுத்து நிறுத்தவில்லை. இறுதியில் நான் அவனைக் கொலை செய்யும் நிலைமை ஏற்பட்டதற்கு நீங்களும், உங்கள் பொய்யான சட்டமும் அதிகாரமும் காரணங்களாய் நின்றன. 

இந்நிலையில் நீங்களதான் குற்றவாளியென நான் உங்கள்மீது குற்றம் சாட்டுகிறேன். நீங்கள் குற்றவாளியா அல்லவா, சொல்லுங்கள்! 

அவன் கூறிய காரணங்களையும், என்மீது சாட்டிய குற்றத்தையும் என்னால் மறுக்கமுடியவில்லை. எல்லோரும் உழைத்து உண்ணவேண்டும் என்பதே ஆண்டவனின் சட்டம். ஆனால் அச்சட்டத்தை நிறைவேற்ற நான் நீதிபதியாய் அமர்ந்திருக்கவில்லையே. 

மாட்சிமை தங்கிய மன்னனின் சட்டப்படி நான் அவனைக் கழுவிலேற்றிக் கொல்லும்படி தீர்ப்புக் கூறினேன். 

தீர்ப்பெழுதிய பேனாவைத் தீயிலிட்டுக் கொளுத்தினேன். அதைத் தொட்டெழுதிய என் விரல்களைத் தண்ணீர் விட்டுக் கழுவினேன். 

ஆனால் என் மனதைக் கழுவ என்னால் முடியவில்லை. அவன் என் மீது சாட்டிய குற்றம் உண்மையே என்று என்மனம் கூறுகிறது.

– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *