நீண்ட நகங்கள்
கதையாசிரியர்: ஆர்.சூடாமணி
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 3,948
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திலகமிட்டுத் திருத்திய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்ட போது அது கனவு உருவமாக மங்கியிருந்தது. அலங்காரம் செய்துகொள்ளும் லயிப்பில் பொழுது இருட்டிக்கொண்டு வந்ததைக் கூடவா உணரவில்லை? அவளுக்கே சட்டென்று வெட்கமாகிவிட்டது. கூடவே, ஒரு சுகமான பெருமிதம். லயிக்கத் தக்க அழகு அல்லவா அவளுடையது?
எழுந்து விளக்கை ஏற்றினாள். நீண்ட குழல் விளக்கு இரண்டு தரம் கண் சிமிட்டிவிட்டுப் பொருந்தி ஒளிரலாயிற்று. வெளிச்சத்தில் அறை முழுவதும் உருவம் பெற்றுவிட்டது.
மஞ்சு மீண்டும் கண்ணாடியின்முன் அமர்ந்து கூந்தலின் பூப்பிறை யைக் கைகளால் தொட்டுக்கொண்டு தலையை லேசாக இருபுறமும் திருப்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். நீளமாக வளர்ந்திருந்த விரல் நகங்கள் ‘பாலிஷ் கொண்டு பள பளத்தன.
கண்ணாடி தேர்வு கொடுத்துவிட்டது.
எழுந்தபோது தான் ஜன்னலைக் கவனித்தாள். முன்மாலைப் பொழு தில் காற்றுக்காகச் சீலையை ஒருபுறமாய்த் தள்ளியிருந்தது இன்னமும் அப்படியே இருக்கிறதே! இப்போது, இருட்டியபின் வெளிச்சம் போட்ட அறை இருட்கடலிடையே ஒரு தீவாக, அருகிலுள்ள வீடுகளிலிருந்தும். மேன்மாடங்களிலிருந்தும் தெரிந்துவிடுமே! சீலையை அவள் இழுத்து மூடினாள். விரல்கள் கம்பிகளில் உராய்ந்தபோது ஆள்காட்டி விரலின் நகம் நுனியில் லேசாகப் பிளந்துகொண்டது. விரல்களில் புழுதி ஒட்டியது.
புழுதி ஜன்னல் கம்பிகளைத் துடைத்து நாலைந்து நாள் ஆகவில்லையா? வேலைக்காரி இரண்டு வாரம் முன்பு திடீரென்று நின்று விட்டாள். வீடு பெருக்கிப் பாத்திரங்கள் துலக்குவதுபோன்ற மற்றப் பணிகளும் அவளைச் சேர்ந்துகொண்ட மும்முரத்தில் சில சமயம். ஜன்னலைத் துடைக்க நேரம் இல்லாமல்தான் போய்விடுகிறது.
ஆனால் இனிக் கவலை இல்லை. நாளைக் காலையிலிருந்து புதிய. வேலைக்காரி வந்துவிடுவாள். நான்கு நாள் முன்னதாக நிச்சயமாயிற்று. அவள் தோழி சுமி அனுப்பிவைக்கிறாள். சுமியின் வீட்டில் பணிபுரியும் ஆயாவின் மகள். காளியாத்தா என்று பெயர். பெண். ஓடியாடிச் சுறுசுறுப்பாக வேலை செய்வாள்.
மஞ்சு விரல்களைப் பழைய துண்டில் துடைத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தாள். ஹாலில் இருந்த அண்ணாமலை அவளைக் கண்டதும் தன் வலது மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தைக் குறும்பாகக் குனிந்து பார்த்தான்.
“இன்னும் ரெண்டரை நிமிஷம் கழிச்சு வந்திருந்தாயானால் அலங் காரத்துக்குச் சரியாய் முக்கால் மணி யாகியிருக்கும்.”
“இந்தக் கணக்கைப் பண்ணிக்கிட்டிருந்த நேரத்தில் நீங்க ஏதா வது புஸ்தகம் படிச்சிருந்தாலும் உருப்பட்டிருக்கலாமே!”
“நவீன சிந்தாமணியா?”
அவள் சிரித்துக்கொண்டே வாசலுக்கு வந்தாள். அங்கே –
இளமை விஞ்சும் ஒயில்மிக்க மாநிற மேனி. சீராக டுத்திய சுத்தமான நூல் சேலை. ரவிக்கை. பின்னிய சடையின் முடியில் ஒற்றைச் செவ்வந்தி. முகத்தில் மென்னகையின் அளவுக்கான காந்தம். ஒருகணம் மஞ்சுவுக்கு அடையாளமே புரியவில்லை. கூர்ந்து வினவிய கண்கள் பிறகு அகன்றன.
“அட! காளியாத்தாவா?”
“கும்பிடறேம்மா.”
“எங்கே வந்தே?”
“நாளைக் காலையிலேருந்து தானே வேலைக்கு வரணும்? அதை இன்னொருவாட்டி கேட்டு நிச்சயப்படுத்திக்கலாம்னுதான் வந்தேன்.”
அழகு கண்முன் இளநகை புரிந்தபோது மஞ்சுவின் குரல் அவசிய மில்லாமலே கடுகடுத்தது;
“இதிலே நிச்சயப்படுத்திக்க என்ன இருக்கிறது? அன்னிக்கே தீர்மானமாய்ச் சொல்லிட்டு வந்தேனில்ல? ரெண்டு வாரமாய் ஆள் இல்லாமல் திண்டாடறப்ப வேலைக்கு வான்னு உன்னை விளையாட்டுக்காக் கூப்பிடறேன்?”
”அப்ப நாளைக்குக் கருக்கலோடு வந்திடறேம்மா?”
”உம். அப்புறம் இன்னொரு விஷயம் காளியாத்தா. சம்பளத்தை உன்கிட்டயே கொடுக்கவா, இல்லே உன் ஆயாகிட்டே தரணுமா?”
“யார்கிட்டே வேணும்னாலும் கொடுங்கம்மா. என்னை எல்லாரும் காளின்னுதான் கூப்பிடறாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க.”
அவள் போனபின் மஞ்சு காரில் ஏறிக்கொள்ள இருந்தவள் பின்னால் கணவன் வராமையைக் கண்டு மறுபடியும் ஹாலுக்குள் நுழைந்தாள். அங்கும் அண்ணாமலையைக் காணவில்லை. பிறகு உள் அறையில் அவனைக் கண்டுபிடித்தாள்.
“எங்கே, உள்ளே வந்துவிட்டீங்க? கச்சேரிக்குக் கிளம்ப நேரமாகலே?”
”உன்னைப் பார்க்க யாரோ சிநேகிதி வந்திருக்கவே நான் இந்தப் பக்கம் வந்துட்டேன். அதுக்குள் போய்ட்டாளா?”
“சிநேகிதியாவது! ரொம்ப அழகுதான். அவள்தான் நாளையிலேருந்து நம்ம வீட்டில் வேலை செய்யப் போகிற வேலைக்காரி”
“என்ன, வேலைக்காரியா? அவளா?'”
அந்த நேர்த்தியான ஆடைகள். அந்தச் சீரான தோற்றம்: அவள் உதட்டை மடித்தாள். “ஏன், அவளைப் பார்த்தால் வேலைக்காரி மாதிரி தெரியாம மகாராணி போலவா இருக்குது?”
“அதுக்குச் சொல்லலே மஞ்சு: சாதாரணமாய் வேலைக்காரின்னா. நம்ம பழைய வீராயி இல்லையா? கொஞ்சம் வயசு சென்றவ, அந்த வர்க்கக் கட்டாய் உடுத்திய அழுக்குச் சேலை. எண்ணெய்ச் சிக்குப் பிடிச்ச சொக்காய். பறட்டைத் தலை….”
“நீங்க பெரிய ‘ஸ்னாப். அவனை அப்படி ஏதோ ஒரு காரணம் யற்றிக் கண்டிப்பதில் இது என்ன திடீர் வேகம்?”
”என் சிநேகிதியாம்! நல்லாச் சொன்னீங்க ஒரு பேச்சு.”
“இப்ப ஸ்னாப் நீயா, நானா?
“சரி சரி, வாங்க. இப்படியே தாமதிச்சுக்கிட்டிருந்தால் நாம் சரியாய், பாகவதர் மங்களம் பாடற நேரத்துக்குத்தான் போக முடியும்.
அவள் வேகமாக நடந்தாள். அவனும் தொடர்ந்தான்:
“ஒரு விஷயம் மஞ்சு. மூணாம் வீட்டு நடேசனில்லே? அவனும் இதே கச்சேரிக்குத்தான் போறதாச் சொன்னான். அவனையும் நம் மோடு காரில் கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லியிருந்தேன்; உனக்கு ஒண்ணும் தடை இல்லையே?”
“எப்படியும் அந்தக் கேள்விக்கு இப்போ காலம் கடந்துபோச்சு. இல்லையா?”
நடேசன் வந்தான். அண்ணாமலை அவனுக்காக மோட்டாரின் முன்புறக் கதவைத் திறந்து ஒதுங்கி நின்றுகொண்டான்.
ஏதோ அசைந்தது. பட்டாடையும் பிறை மலரும் கீற்றிட மஞ்சு முன்புற இருக்கையில் அமர்ந்தாள்.
நடேசனுக்கு அசடு தட்டிவிட்டது. கையைக் கடித்துக்கொண்டு பின்னுக்கு நகர்ந்தபோது அவனால் நிமிர்ந்து அண்ணாமலையைப் பார்க்க இயலவில்லை.
அலையாக எழுந்த எரிச்சலை அண்ணாமலை உதடுகளுள் அடக்கிக் கொண்டான். கதவை அறைந்து மூடிய வேகத்தில் மட்டுமே அந்த எரிச்சலின் சாயை. எதற்கோ ஈடு செய்வதுபோல் அதிக அக்கறை யுடன் பின்புறக் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டான், நடேசன் ஏறி உட்கார.
இயக்கச் சக்கரத்தைப் பற்றி அவன் காரோட்டத் தொடங்கிய போது மஞ்சு எவ்விதச் சங்கடமுமின்றிச் சாய்ந்து உட்கார்ந்து தலையைப் பின்புறம் திருப்பிப் புன்னகையுடன், “என்ன நடேசன், இந்தப் பாடகரைப்பற்றி உங்க கருத்து என்ன?” என்றாள். நட்போ சுற்றமோ, உடன் வருவது யாராக இருப்பினும் சரி. அண்ணாமலையின் பக்கத்திலுள்ள அந்த இருக்கையில் எப்போதும் அவள்தான் அமர்வாள்; அது அவள் இடம்.
***
காளி வளைந்து நின்று தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தாள்.
குனிந்த நிலையினால் பின்னே மேலேறியிருந்த சேலை விளிம்பின் கீழே வடிவாய் அமைந்த மெல்லிய கணுக்கால்கள் தெரிந்தன. அதில் லேசான பழுப்பு நிற ரோ மங்கள் சூரிய ஒளிப் பதிவில் பொற்கோடாக மின்னி அந்த இளங்கால்களின் பொலிவுக்கு மெருகு பூசின.
மஞ்சு பார்த்துக்கொண்டே இருந்தாள். இப்படியும் ஒரு வனப்பா? கணுக்கால்கள் மட்டுமா? அவை ஒரு சிறிய அளவுகோல். ஆதார சுருதியினின்றும் வடிவத்தில் ஒல்வொரு பகுதியுமே எழிலின் எழும் சுரத் தெறிப்புகள்.
அழகு மட்டுந்தானா? அவள் வேலை? அதுவும் நேர்த்திதான். தரையில் முகம் பார்த்துக்கொள்ளலாமே! வீராயி இருந்தபோது பீரோ அடியிலும் மேஜைக் கால்களிடையேயும், சுவர் மூலைகளிலும் தேளும் பாம்பும் இருந்தால்கூட ஆச்சரியப்பட முடியாது. ப்போதோ? முனங்கில் ஒரே சுத்தம், ஒரே அழகு. வயது இருபது இருக்கலாம் அவளுக்கு. இன்னும் மணமாகாத பெண்.
“அடி காளியாத்தா. எத்தனை நல்லா இருக்குதடி உன் வேலை!” பொய்யற்ற ரசனையில் ஒருகணம் பாராட்டுத் ததும்பிவிட்டது.
காளி அதை ஏற்கும் பாவனையில் நிமிர்ந்து நின்று புன்முறுவல் பூத்தாள். அழகின் செந்தளிர்போல, நாணத்தில் சிவந்த முறுவல்.
சட்டென்று மஞ்சுவினுள் ஏதோ எரிச்சல். அந்த அழகு, பார்வை யில் இடறியது. அவள் கண்களை விலக்கிக்கொண்டாள்.
“உங்களுக்கு ஆபீசுக்கு நேரமாகலையா?” வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனைக் கவனிக்க அவள் சென்றாள்:
“எல்லாம் ரெடிதான். கைக்குட்டையைத்தான் எங்கேயோ வச்சிட்டுத் தேடறேன். உள்ளேயிருந்து எடுத்துக் கொடு மஞ்சு. எனக்கு நேரமாகுது.”
“எங்கே தேடறீங்க நீங்க? ஆகாசத்திலேயா? இடுப்பு வளையா தாக்கும்! இதோ இங்கே மூலையில் விழுந்து கிடக்குது பாருங்க”. கல கலத்த சிரிப்புடன் அவள் அந்தக் கைச்சீலையை எடுத்துச் சொடுக்கி மடித்து அவன் சட்டைப் பையில் செருகினாள்.
“தாங்க்ஸ் மஞ்சு: பழைய வேலைக்காரி இருந்திருந்தால் இப்படிக் கீழே விழுந்த குட்டையை நேரடியாய் உபயோகத்துக்கு எடுத்துக்க முடியுமா? இதுக்குள் கசமாகியிருக்குமே! இந்தப் பொண் சுத்தமாய்ப் பெருக்கறா? தரையில் அழுக்கு இல்லே!”
அவன் சென்றபின் அவள் சிறிது நேரம் அப்படியே தலை குனிந்து நீன்றிருந்தாள். வெறித்த பார்வை விரிந்தது. மூலையில் கிடந்த சின்னஞ் சிறு பொருள். அதற்காகவே தேடினால்கூடக் கிடைத்திருக்காது. அக்கறையாய்ச் சென்று அதைப் பொறுக்கி எடுத்தாள்.
‘காளியாத்தா!”
“வந்தேம்மா.”
ஓடிவந்து நின்றவளை அவள் விழித்து நோக்கினாள்.
“இதோ பாத்தியா? ஊகா முள். வீடெல்லாம் இறைஞ்சு கிடக் குது? புதுத் துடைப்பம் வாங்கினால் முதல்லே நல்லாத் தட்டி உதறுகிற தில்லையா? இப்படி ஒரு சுத்தமில்லாத வேலையா? சே! சே!” அவள் கோபமாக அங்கிருந்து சென்றாள்.
***
அவள் முகம் கழுவிக்கொண் டிருந்தாள். அண்டாவில் சேமித்து வைத்திருந்த நீரைக் கைகளினால் அள்ளி முகத்தில் அறைந்துகொண்ட போது நிலத்தில் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் உடைந்த கண்ணடித் துண்டுகள்போல மின்னின.
அறைக்குத் திரும்பியபோது அங்கு அண்ணமலை தன் நிஜார்ப் பையிலிருந்து பர்சை எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
“எதுக்கு இப்போ பர்ஸ்?”
“வாசலில் ஏழெட்டுப் பேர் வந்து நிக்கறாங்க, மஞ்சு. ஏதோ நெசவாலையிலே வேலை பார்த்தவங்களாம். லாக் அவுட் ஆகி இப்ப வேலை ல்லாமல் சோத்துக்குத் திண்டாடறாங்களாம். மொத்தம் பதினொரு டும்பமாம். இப்படி வீடு வீடாய்க் கையேந்தி நிக்கற நிலைமை இப்போ, பாவம்!”
“எத்தனை தரப்போறீங்க?”
“ஏதோ முடிஞ்சது.”
“நான் தெரிஞ்சுக்கக்கூடாதா?” குரலில் கத்தி முனை.
“பத்து ரூபாய்,”
“அதிகந்தான்: பரவாயில்லை. கொடுங்க.”
அநுமதியா? தன் உரிமையை நினைவுறுத்தினாற் போன்ற ஒரு மனத் தோற்றமா?
***
பூத்துவாலையால் முகத்தையும் பின்கழுத்தில் நனைந்திருந்த கூந்தல் கொக்கிகளையும் ஒற்றி ஒற்றித் துடைத்துக்கொண்டவாறே சாளரத்தின் அருகில் சென்று நின்றபோது வீட்டிலிருந்து அந்த ஏழெட்டுப் பேர் திரும்பிச் சென்றது தெரிந்தது. வேட்டிகளின் இடையே மின்னலிட் டுக்கொண்டுபோகும் இரண்டு சேலைகள்.
“ஓ! இப்போ புரியறது எனக்கு உங்க தாராளம்?” என்று கோணலாகச் சிரித்தாள்.
அவனுக்குத்தான், பாவம், புரியவில்லை!
வேறொரு நாள். இருவருமாகத் திருமண வரவேற்புக்குச் சென்று மீளும்போது வாடகைக் கார் கிடைக்கவில்லை. மௌண்ட் ரோடில் சாலையைக் கடக்க ஒரு முனையின் நிலவறைப் பாதை வழியே இறங்கி னார்கள். உடன் வந்துகொண் டிருந்தவர்களில் ஓர் இளமங்கை. அக்குளின் கீழே நீண்ட கட்டைகள். படி இறங்கும் போது கட்டை தடுக்கிவிட்டதா? அல்லது தவறாகக் காலை எட்டி வைத்துவிட்டாளா? கணநேரம் கடந்திருந்தால் படிகளில் உருண்டிருப்பாள். அண்ணாமலை சட்டென்று பிடித்துக்கொண்டான். பெண் என்றும் இடை என்றும் பார்க்கிற நேரமா அது? கருணையின் நேரம். கருணைக்குப் பால்பிரிவு ஏது? மெய்ப்பொருளைப்போல் அது ஆணுமல்ல. பெண்ணுமல்ல. அலியுமல்ல.
ஆனால் மஞ்சுவின் முகம்? அது பெண் முகம்.
“தாங்க்ஸ், ஸார்!”
“பரவாயில்லை..”
மேல்பாதைக்கு இருவருமாக வந்துவிட்ட பிறகுகூட அவள் கண் களில் வேண்டுமென்றே மிகைப்படுத்திக்கொண்ட ஒரு கலகலப்பு:
“பாவம் அந்தப் பொண்ணு! இல்லே?”
‘ஆமாம். விழுந்திருப்பா.”
“நீங்கதான் விழவிடாமப் பிடிச்சுட்டீங்களே!”
“நல்ல வேளை, இல்லே மஞ்சு?”
“இல்லாமே பின்ன என்ன? நீங்க அப்படி ஆபத்பாந்தவராய்ப் பக்கத்திலே வந்துக்கிட்டிருந்தது எத்தனை நல்லதாய்ப் போச்சு!”
“பாவம், உலகத்திலே என்னவெல்லாம் இருக்குது பார்.”
“கூடவே உங்கள்மாதிரி கருணை வள்ளல்களும் இருக்கிறாங்க ளில்ல? பின்னே என்ன கவலை? சட்டுனு லாகவமாய்த் தாவிப் பிடிச்சீங்களே. ரொம்ப அநுபவப்பட்டாப்பலே!”
“இல்லேன்னா விழுந்து மண்டையை உடைச்சுக்கிட்டிருப்பாள்.”
”பாவம்! அதுவும் அவ்வளவு அழகான மண்டை! இல்லேங்க? இளம் பெண்ணா, சும்மாவா? எத்தனை நாசுக்காய் நன்றி சொன்னாள் உங்களுக்கு?”
“ரொம்ப அலண்டுபோயிட்டாள்.”
”அட! அதையெல்லாங்கூடக் கவனிச்சீங்களா? தேவலையே! ரொம்ப அழகான பொண்ணு இல்லே? ஏங்க என்னைவிட இன்னும் அழகுதானே அவள்?”
அவனுக்கூடப் புரிந்துவிட்டதா? ஒரு தரம் மனைவியைக் கூர்ந்து பார்த்துவிட்டு அவன் மெளனமாக மேலே நோக்கினான். உயரத்தில் ஒளி எழுத்துக்களில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.
“என்ன பேசாம இருக்கீங்க?
“நியூஸ் ப்ளாஷ் பார்க்கறேன், தெரியலே?”
“ஒருவேளை அந்த வெளிச்சத்தில் வேறே ஏதானும் அழகான காட்சி கூடத் தெரியுதோ?”
இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள்.
***
காலையில் காபியுடன் அவள் கணவனின் அறையை நெருங்கிய போது உள்ளே அவன் குரல் கேட்டது.
“இந்தா காளி, ஜன்னலின் நீளப் படுதாவை ஒதுக்கி வளையத்தில் மாட்டி வை? நேத்து அனல் தாங்காம இழுத்து மூடினேன். அப்படியே இருக்கு இன்னும்.”
அவள் நுழைந்தபோது அண்ணாமலை மேஜையருகில் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண் டிருந்தான். அவள் காபியை மேஜைமேல் வைத்தாள். காளி ஜன்னலோரம் நின்று, விலக்கிச் சுருக்கிய படுதாக் கொசுவங்களை ஒரு கையில் பற்றி இன்னொரு கையால் அவற்றுக்கு வளையமாக ஒரு கண்ணாடி வளையை ஏற்றிக்கொண் டிருந்தாள்.
காலையொளி கடலாகப் பெருகி வந்த ஜன்னலின் அருகில் அந்தக் கடலில் எழும் அமுத கலசம்போல் அந்தப் பெண் நின்றிருந்த தோற் றம்! சீராக அணிந்த உடைகளிலும், சீவிப் பளபளக்கும் முடியிலும், ஏன், திரும்பியிருந்த சதைப்பற்றான முதுகுப் பகுதிக்கு மேலாகப் பச்சை ரவிக்கையின் சிறு கிழிசலில் கூட எதிலும் தனிக் கவர்ச்சிதான். அந்த முகத்திலும் முறுவலிலும் ஆயிரம் கவிதைகளைப் படித்துக்கொள்ள லாமே! அழகின் வயது இருபதா?
அந்த முதல் நாள் அவன் சொன்னது மஞ்சுவுக்கு நினைவு வந்தது: வேலைக்காரி என்றால் பறட்டைத் தலை, அந்த வர்க்கக் கட்டு, எண்ணெய்ச் சிக்கு இறங்கிய சொக்காய், கொஞ்சம் வயது சென்றவளாக.. வயது சென்றவளாக…
அப்படியே ஏன் இருக்கவில்லை புது வேலைக்காரியும்?
“டீ காளியாத்தா. வீட்டு வேலையெல்லாம் அப்படியே கிடக்குது., இன்னும் பெருக்கணும், மெழுகணும். இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லே? எல்லாத்தையும் விட்டுட்டு இந்த ரூம்லே என்ன வேலை உனக்கு? இந்தப் படுதாவுக்கு வளையம் மாட்டத்தானா இப்பத் தலை போகிற அவசரம்?”
காளி திரும்பி முகத்தை உயர்த்தினாள். கண்களை அப்படி அகற்றிப் பார்க்கும் சைகையில்தான் என்ன காந்தம்! குழந்தைத்தனமான விழிப்பு குழந்தைத்தனமாவது? எல்லாம் வேண்டுமென்றே செய்கிறதுதான்.
அவளை முந்திக்கொண்டு அவன் தலை நிமிர்த்திப் பேசினான்: “இல்லே மஞ்சு. நான் தான் காளிகிட்டச் சொன்னேன். அறை ரொம்ப இருட்டாப் போயிடறது பார், ஸ்க்ரீனை ஒதுக்கலேன்னா.”
“எல்லாம் தெரியும் எனக்கு. நீங்க பரிஞ்சுக்கிட்டு வரவே நாம். உள்ளே அவளுக்குக் கொள்ளை வேலை குவிஞ்சிருக்கு. அதுக்குத்தான் சொல்றேன். காளியாத்தா, ஐயா சொன்னார் பாரு, நேத்து மூடிவச்ச படுதா இன்னும் அப்படியே இருக்குன்னு.நீ வேலை செய்யறது அத்தனை லட்சணமாய் இருக்கு. அப்படி ஒரு அலட்சியமா? முன்னாலேயே ஸ்க்ரீ னைச் சரியாய்த் தள்ளி வைக்கிறதுக்கென்ன?”
“அடடா, மஞ்சு, நான் அந்த அர்த்தத்தில் சொல்லல்லே.”
“சரி சரி, போதும் காளியாத்தா. நீ போய் மத்த வேலைகளைப் பார்.”
காளி தலை குனிந்து சென்றாள். அவள் விட்ட வேலையை மஞ்சு தொடர்ந்து செய்யலானாள்.
“இந்த ஸ்க்ரீனைத் தள்ளி வளையத்தை மாட்ட அவள்தான் வரணுமா? நான் செய்யமாட்டேனாக்கும்!”
கண்ணாடி வளையல் பட்டென்று உடைந்தது. அவள் சிரித்தாள். ”பார்த்தியா? நீ முரட்டுத்தனமாய் வளையை அமுக்கினே ; விட்டுப் போச்சு. காளி நாசுக்காய்ச் செய்யறா.”
“ஆமாம். அவள் செய்தால் எது ஒண்ணும் நாசுக்காய்த்தான் தெரியும்.”
அந்த நொடிப்பை அறியாமல் அவன் பேசிக்கொண்டிருந்தான்.
“இவ்வளவு நாசுக்கான பொண்ணுக்குக் காளி என்ற பயங்கரமான பெயர் கொஞ்சங்கூடப் பொருந்தலே.”
“மாத்திச் சுகுமாரின்னு வச்சிடலாமா? நீங்க ஒண்ணு. அது போகட்டும். காளி என்ன காளி,பெத்துப் பெயர் வச்சமாதிரி? நானே காளியாத்தான்னுதான் கூப்பிடறேன்.”
அவன் பதில் பேசாமல் காபித் தம்ளரை எடுத்துக்கொண்டான். அவள் வெளியே வந்தாள். நடையில் உள்ளம் அழுத்தியது.
எதிரே நெருங்கி வரும் அந்த உருவம்.உருண்டு நீண்ட கரங்கள் ஒன்றில் முறமும் வாருகோலும். மற்றதில் மருந்து நீர் நெடி வீசும் வாளி.
“சுருணை எங்கே? இல்லேன்னா சேலைத் தலைப்பாலேயா மெழுகப் போறே?”
“இல்லேம்மா. சுருணை வாளியிலேயே இருக்குது. இதோ பாருங்க”.
”சரி சரி. எனக்கு ஒண்ணும் பார்க்கவேணாம்: நீ பொய் சொல் றேன்னா நான் சொன்னேன்? அப்படியெல்லாம் எனக்குப் பேர் கட்டிடா தேடியம்மா! இந்த வீட்டிலே எனக்குப் பரிஞ்சுக்கிட்டு வரவங்கதான் யாரும் இல்லையே!”
காளி ஒன்றும் புரியாமல் ஏறிட்டுப் பார்த்தாள். ”என்னம்மா சொல்றீங்க?”
“பச்சைக் குழந்தைதான். பல்லைத் தட்டித் தொட்டிலில் தான் போடணும். மினுக்கல் குலுக்கலிலே மட்டும் குறைச்சல் இல்லே.உடம்பில் துளிக் கூச்சம் இருக்காதோ, பொண்ணாகப் பிறந்தவளுக்கு? எஜமானன் என்ற மரியாதையும் இல்லை. ஆம்புளைன்னு பயமும் இல்லை. அங்கே என்ன வேலை? என்ன பேச்சு?”
“எங்கேம்மா?’
‘சரி சரி, நீ போ.”
“இப்ப இந்த ரூமையெல்லாம் பெருக்கி மெழுகணுமே. அம்மா?”
“அதுக்கு இப்ப என்ன முகூர்த்தம்? எல்லாம் அப்புறம் செய்யலாம்: பின்கட்டுக்குப் போய் ஏதானும் வேலை இருந்தால் பார்”
“நீங்கதானம்மா பெருக்கச் சொன்னீங்க?”
“தெரியும்டி. மார்க்கெட்டுக்குப் போய் முதல்லே கறிகாய் வாங்கி வா. வீட்டு வேலை ஓடியா போயிடுது?”
“நேத்துச் சாயங்காலமே பதார்த்தம் வாங்கியாத்துட்டேனம்மா?”
“மத்ததெல்லாம் வாங்கி என்ன உபயோகம்? உருளைக்கிழங்கில்லே வேணும் அவசரமாய், மத்தியான்னம் டிபனுக்கு? வா, சில்லறை தர்ரேன்.”
கறிகாய்க் கடை. மாவு அரைக்கும் மில். வாசகசாலையிலிருந்து வந்த புத்தசங்கள் தூசுறாவண்ணம் அட்டை போடக் கண்ணாடிக் காகிதம் வாங்கிவரும் பொருட்டு இன்னொரு நடை. காளியை ஏவி அனுப்ப வெளி வேலைகள் நிறைய இருந்தன.
அண்ணாமலை அலுவலகம் சென்றுவிட்டான்.
“அடி காளியாத்தா. இப்ப வந்து ஐயா ரூம், மத்த இடங்கள்.. எல்லாம் பெருக்கி மெழுகு, வா.”
***
மாலை நேரம்: மேற்குக் கரையில் வெயில் ஒதுங்கியது.
”சினிமாவுக்குப் போவோமா?” என்றான் அவன்.
“என்ன திடீர்னு?”
“ப்ளூ டயமண்டில் ஒரு படம் இன்னிக்கு ரிலீஸாயிருக்கு.. பிரமாதமா இருக்கும்னு தோணுது. வா போகலாம்.”
அவனறியாமல் செய்தித்தாளைப் புரட்டிப் பார்த்தாள்: “ப்ளு டயமண்டில் என்ன படம்? யார் யார் நடிக்கிறார்கள்? அப்பாடா? கவர்ச்சி மங்கை என்று புகழ் பெற்ற எந்த நடிகையும் இல்லை.
“போகலாம். எனக்கும் ஆசையாய்த்தான் இருக்கு. சினிமாப் பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு, இல்லேங்க?”
கண்ணாடியின் பாராட்டுக்காக மோடாவில் அமர்ந்து அணி செய்து கொண்ட நேரம் இனிமையில் இழைந்தது.
“தயாரா மஞ்சு?”
அவள் முகத்தைப் பார்த்து அவன் சிரித்துவிட்டான்.
“என்ன வேடிக்கையைக் கண்டுட்டீங்க?” அவள் சிணுங்கிய பான்மையில் கோபமே பூவாகி உதிர்ந்தது.
“பவுடர் போட்டுக்கிட்டால் முகத்துக்கு மட்டுந்தான போடணும்? அந்தக் கழுத்தும் உன்னுதுதானே?”
அவனே வந்து டப்பாவின் நறுமண வெண்தூற்றலில் அவள் கழுத்தை நனைத்தபோது அவள் சிரித்தவாறே கைக்குட்டையால் சரியாகத் துடைத்துக்கொண்டாள். கண்ணாடி இரண்டு முகங்களின் இன்பத்தைச் சட்டமிட்டுக் காட்டியது. எதிர்ப் பிம்பத்தில் அவள் கை விரல்களை அவன் கவனித்தான்.
“எத்தனை நீளமாய் நகம் வளர்த்துக்கிட்டிருக்கே, மஞ்சு?”
“நல்லாயில்லையா?”
“நீ எதைச் செய்துக்கிட்டால் தான் நல்லாயிருக்காது? ஆனால் இந்த நகங்களைப் பார்த்தால் எனக்கு என்ன தோணுது தெரியுமா?”
“என்னவாம்?’
கடிகாரம் ஒரு முறை அடித்தது:
“அடடே! மணி ஆறரை. உடனே கிளம்பு. அப்புறம் லேட்டாயிடும்”
“ப்ளு டயமண்ட்தானே? திருப்பித் திருப்பிப் படத்தைத் தொடர்ந்து காட்டிக்கிட்டே இருப்பாங்களே! பாதியில் நுழைஞ்சால் கூட நேரத்தை வீ குக்காமல் முதல் பாதியை அடுத்த காட்சியில் பார்த்துடலாம். என்ன?” அவள் பூஞ்சிதறலாய்ச் சிரித்தாள்.
“பெண்கள் டிரெஸ் செய்துக்க மணிக்கணக்காய்ச் செலவழிச்சிட்டுப் படத்துக்கு லேட்டாய் வருவாங்களேன்னுதான் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்காங்க போலிருக்கு!”
“பெண்களைப்பத்தி அவ்வளவு நல்லாத் தெரியுமா உங்களுக்கு?” புகையும் சிரிப்புடன் அவள் காரில் சாரதியின் இடத்துக்கு அடுத்துள்ள முன்பக்க இருக்கையில் தன் உரிமைப் பீடத்தில் அமர்ந்துகொண்டாள்.
இரவு வீடு திரும்பியபோது இனிய தென்றல், இன்ப உரையாடல். சினிமாப் பார்த்த சுவட்டில் தொடர்ந்த உல்லாசக் கிளர்ச்சி.
***
வாசலில் நின்றிருந்த காளி கைவளையல்கள் குலுங்க வண்டிக் கதவைத் திறக்க ஓடிவந்தாள். சிவப்புச் சேலை, கண்ணைப் பறிக்கும் மஞ்சளில் ரவிக்கை. சிற்ப வடிவழகும் செவ்விய மலர்முகமும் பிழிந்து தந்த சாரமாக அந்தப் புன்முறுவல். தலை நிறையப் பூ. பளிச்சென்று துலங்கிய முகத்தில் அந்தச் சாந்துப் பொட்டு, எழிற் காவியத்தின் தலைப்பு.
மஞ்சுவின் பார்வை பிடி நழுலி ஒருதரம் கணவனின் பக்கம் தாவி மீண்டது. காளிக்கு முன்பாகத் தானே கதவைத் திறந்துகொண்டு இறங்கியவாறே, “உள்ளே போ,காளியாத்தா. எப்பப் பார்த்தாலும் வாசலில் என்ன வேலை?” என்றாள்.
“தெருப்பக்கம் யாரும் இல்லையேன்னு காவலுக்காக இருந்தேம்மா.”
”சரி சரி, நாங்க வந்தாயிட்டுதில்ல? நீ போ”
மெல்லடிகள் மிதந்து மறைந்தன. மஞ்சுவுக்கு ஏதோ சொல் லொணத் தவிப்பு. சினிமாப் பார்த்துவந்த மகிழ்ச்சியெல்லாம் போன இடம் தெரியவில்லை.
“சே சேசே ! ஆனாலும் இப்படியா ஒரு பொண்ணு? அவ நிக்கறதும் நடக்கறதும் பார்க்கறதும் சிங்காரிச்சுக்கறதும்…. நம்முடையது மாதிரி வீடுகளில் வேலை செஞ்சா அவளுக்கு ஒண்ணும் சுவாரஸ்யப் படாதுங்க? அவ ஏதானும் ஒரு சினிமா நடிகை வீட்டில் இருக்கணும்.”
அண்ணாமலை சிரித்தான்: “எந்தச் சினிமா நடிகை நம்ம காளியைத் தன் வீட்டில் சேர்ப்பாளாம்? இவளுக்கு முன்னாலே அவள் மவுசு அப்புறம் எடுபடுமா?” அடுத்த கணமே தான் சொன்னதை மறந்து அவன் சாவதானமாக வண்டியை அதன் கொட்டகைக்கு ஓட்டிச் சென்றான்.
மஞ்சு நெடுநேரம் அசையவில்லை. பிறகு அவள் கொல்லைப்புறம் சென்றாள்.
‘காளியாத்தா!”
”அம்மா!” காளி ஓடிவந்தாள்.
“நீ.. நீ வர முதல் தேதியோடு வேலையை விட்டு நின்னுக்க:”
”அம்மா!” அதிர்ச்சி நீங்கியபின் கேள்வி வந்தது. “ஏம்மா? ஏன்?”
“நான் அப்பலே சொல்லலே? ஐயாவுக்கு உன் வேலை திருப்தியாய் இல்லையாம். நான் என்ன செய்யலாம், சொல்லு.”
இரவு கணவனிடம் அவள் கூறினாள். ”என்னங்க, விஷயம் தெரியுமா? நம்ம காளியாத்தா வர முதல் தேதியோடு வேலையை விட்டு நின்னுடறாளாம்.”
“அப்படியா? ஏன்?”
“அடேயப்பா! அக்கறையைப் பார்க்கல்லே!'” சிரிப்பின் வடிவத்தில் வேறென்னவோ தான் பீறி வந்தது. “அவளுக்கு உங்களைக் கண்டால் பயமாயிருக்காம். அதுதான் காரணம்.”
“இது என்ன அபாண்டம்?”
அவள் கூந்தலில் சூடியிருந்த மலரைக் கலைத்து மேஜைமேல் வைத்தாள். விரல்களில் பார்வை விழுந்தது. நீண்ட நகங்கள். சட்டென்று திரும்பி அவன் தோள்மீது கைகளைக் கோத்தவாறு, “ஏங்க, அப்போ சொல்ல ஆரம்பிச்சீங்களே. என் நகங்களைப் பார்த்தால் என்னமோ தோணுதுன்னு. என்ன தோணுது?” என்றாள். கைப்பிடி தோளில் விலங்காக அழுந்தியது.
“ஒண்ணுமில்லே. இவ்வளவு நீளமான நகங்களைப் பார்க்கிற போது. மிருகங்களின் நகம் இருக்குது பாரு. அது நினைவுக்கு வருதுன்னு சொல்லவந்தேன்.” அவன் அந்தக் கைகளின் அழகை ரசிப்பதில் ஈடுபட்டான்.
– ஆகஸ்ட் 1969.
– கலைமகள் பொன்விழாக் கதம்பம் (1932-1961), பொன்விழா வெளியீடு, முதல் பதிப்பு: ஏப்ரல் 1982, கலைமகள் காரியாலயம், சென்னை.