நிழல் அல்ல நிஜம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 54 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுனாமி சுருட்டி விழுங்கிய இடங்களில் ஒன்று கடலூர் கடற்கரை. 

இரண்டாயிரத்து நாலு டிசம்பர் இருபத்தாறு தென்கிழக்கு ஆசிய கடற்கரைப்பகுதிகளில் ஒரே அழுகையும் ஒப்பாரியுமாயிருந்தது. ஏன், நாடே அழுதது. பேரலைகளின் பேரழிவு பெருவாரியாக இருந்தது. 

ஆயிரமாயிரம் பேர் அநாதைகளாயினர். இலட்சக் கணக்கானோர் வீடிழந்தனர். கோடாகோடி மக்களின் உள்ளம் “நம் கதி என்ன ஆகுமோ?” என்று உடைந்து நொறுங்கின. 

அநேகர் அரசியல் வலை வீசினர். இன்னும் பலர் வாக்குச் சீட்டுக்காக வாயை விரிவாக்கினர். மேலும் பலர் மதச்சாயம் பூசி மானுட நேயம் பேசினர். நிவாரணப் பணிகளிலும் கரும்புள்ளிகள் விழுந்தன. 

இவர்களுக்கு மத்தியில் ஒரு சினிமா நடிகர் இருளை கிழித்துக் கிளம்பும் பகலோன் போல வீறிட்டு எழுந்தார். நிழல் உலகில் வாழ்ந்தவர் நிஜ உலகிற்கு கடலூர் தேவனாம் பட்டியை நோக்கி விரைந்தார். 

ஆங்கு உடைமைகளை இழந்து தவிப்போருக்கு ஊடே ஓர் தாயின் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. கணவனையும், பிள்ளைகளையும் இழந்து விட்ட அவளின் ஒப்பாரியை யாரும் கேட்கவில்லை. 

அந்தத் தாய் யார்? 

கணவனைப் பேரலை இழுத்துச்சென்று கொன்று விட்டது. பிள்ளைகளையும் கடல் கொள்ளை கொண்டது. தாங்க முடியாத வேதனை. அனைவரையும் மறந்தாலும் நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கினானே, அந்த வாலிப மகனை மறக்க முடியுமோ? 

தலையில் அடித்தாள், தரையில் உருண்டாள். தலைதெறிக்கக் கடலை சபித்து அலறினாள். 

‘என் மகனே, நீ என்னைக் காப்பாற்றுவாய் என்று எண்ணினேனே, நீ மட்டுமாவது பிழைத்திருக்கக் கூடாதா?’ 

“ஏ…. கடலே… என் மகனை உயிரோடு கக்கிவிடு, திரும்ப எனக்குத் தந்து விடு… இல்லாவிட்டால்… என்னை கொன்று விடு. 

அலறினாள், பெருமூச்சு விட்டாள். 

சினிமா உலகின் நட்சத்திரமாக விளங்கிய அவருக்கு அந்தத் தாயின் முழு மொழியும் தெரியாது. மழலைத் தமிழ் மட்டும் தெரியும். 

அந்தத் தாயின் சோகம் விளங்கியது; அவளின் தாகம் புரிந்தது. 

அந்த நடிகர் தாயின் பக்கம் தாவினார், கழுத்தைச் சுற்றி அரவணைத்தார். 

மழலைத் தமிழில் மொழிந்தார். 

“அம்மா, இன்று முதல் நான் உன் மகன்” என்று சொல்லி முதுமையான அந்தத் தாயின் கண்ணீரைத் துடைத்தார். 

அந்த இளைஞன் வானத்திலிருந்து விழுந்த தேவ தூதன் அல்ல. விவேக் ஒபராய் என்ற இந்தி நடிகன். 

அவனிடம் மத வெறி இல்லை, மனித நேயமிருந்தது. அரசியல் ஆதாயம் இல்லை; அன்பு மட்டுமே இருந்தது. 

நிவாரணப்பணிக்கும், நிலமைகளை ஆய்வு செய்வதற்கும் வந்தவர்கள் விழித்தார்கள், வியந்தார்கள், விக்கிப் போனார்கள். 

இது நிழல் அல்ல நிஜம்! 

அந்த அன்பு உன்னதமானது. 

அத்தகு அன்பே இன்று வேண்டியது. 

– மே-ஜுன் 2005 மனைமலர்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *