கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,126 
 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம் 3 – பரிசு

தந்தை இறந்துவிட்டாரென்ற துக்க செய்தியாலும், அவரைத் தனது தமையனே கொன்று விட்டானென்று குலபதி உணர்த்திய விவரம் தந்த அதிர்ச்சியாலும், சில வினாடிகள் அசையாமல் நின்றுவிட்ட வீரபாண்டியன், தன் வாளைக் கீழே எறிந்து விடும்படி, தமையனின் மெய்க்காவலர் தலைவன் குலபதி உத்தரவிட்டதும் உள்ளே கொதித்தெழுந்த உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்துத் தனது இடது கையிலிருந்த போர்வையைச் சரேலென்று கழற்றி அதைக் குலபதியின் முகத்தில் விட்டெறிந்தான். அதே வேகத்தில் மிகத் திறமையுடன் தன் முன்பிருந்த வீரனொருவன் கை வாளையும் தட்டிவிட்டு அவன் நெஞ்சிலும் தன் வாளைப் பாய்ச்சினான். இப்படி இரு வீரர்கள் போய் விட்டதாலும் தங்கள் தலைவன் முகத்தில் வீசப்பட்ட போர்வையை அவன் ஒதுக்கித் தள்ளும் சமயத்தில் அவனை நோக்கி அசுர வேகத்தில் பாய்ந்த வீரபாண்டியன், அவன் ஊட்டியைத் தன் வாளால் தடவிக்கொண்டு.

“டேய்! இருவரும் வாட்களைக் கீழே எறிந்துவிடுங்கள். இல்லையேல் உங்கள் தலைவன் இப்பொழுதே பிணமாகி விடுவான்” என்று உத்தரவிட்டாலும், மற்ற இரு வீரர்களும் ஒரு விநாடி மலைத்தாலும் மறுவிநாடி வாட்களைக் கீழே எறியவே செய்தார்கள். அதே சமயத்தில் குலபதியின் வாளையும் உறையிலிருந்து உருவிக்கொண்ட இளைய பாண்டியன், அந்த இரு வீரர்களையும் வாட்களிருந்த இடத்திலிருந்து எட்டத் தள்ளி நிற்கும்படியும் உத்தரவிட்டான். அந்த உத்தரவையும் அவர்கள் வேறு வழியின்றி நிறைவேற்றியதும் குலபதியை நோக்கிய வீரபாண்டியன், “கொலைகாரனின் மெய்க்காவலரே! சற்று முன்பு ஜமாலுதீன் கட்டப்பட்டிருந்த தூணுக்குச் சென்று அதன்மீது சாய்ந்து நின்று கொள்ளும்…” என்று கூறினான். குலபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கவே அந்த நிலை குரலிலும் ஒலிக்க, “மன்னர் உத்தரவை மீறுகிறீர்கள்” என்று எச்சரித்தான் மெய்க்காவலர் தலைவன்.

“ஆம்! இன்னும் கொஞ்சநாள் உயிருடனிருக்க உத்தேசம்” என்ற வீரபாண்டியன், “சரி, நேரமில்லை எனக்கு, உன்னுடன் வாதாட. சென்று அந்தத் தூணிடம் நில்,” என்று கடுமையுடன் கூறினான்.

“நான் மறுத்தால்…?” குலபதியின் கேள்வி உக்கிரத்துடன் எழுந்தது.

“என் உத்தேசத்துக்கும் உன் உத்தேசத்துக்கும் மாறுபாடு இருக்கும்.”

“என்ன மாறுபாடு?”

“இன்னும் சில நாட்கள் நான் உயிருடனிருக்க உத்தேசமென்று சொல்லவில்லை?”

“சொன்னீர்கள்.”

“தூணுக்குச் செல்ல இஷ்டமில்லாவிட்டால் உன் உத்தேசம் வேறு என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.’

“அப்படியானால் கொன்று விடுவீர்களா?”

“அந்த உத்தேசமிருந்தால் நீ இப்பொழுது என்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டாய். முன்னமே விஷயம் முடிந்திருக்கும்.” இதைச் சொன்ன வீரபாண்டியன் தூணுக்கு அருகில் செல்லுமாறு இரு கையிலுமிருந்த வாட்களில் ஒன்றால் சைகை காட்டினான் குலபதிக்கு.

சைகைகளில் சந்தேகமேதுமில்லாதிருந்ததாலும், அந்தச் சைகையிலிருந்த உத்தரவு நிறைவேற்றப் படாவிட்டால் பயன் என்ன என்பதை வீரபாண்டியன் ஈட்டிக்கண்கள் சந்தேகமற நிரூபித்ததாலும், ஜமாலுதீன் கட்டப்பட்டிருந்த தூணை நோக்கி மெள்ள நடந்து சென்றான் குலபதி. அப்படி நடந்து சென்றபோது, எதிரே நின்றிருந்த தனது வீரர்கள் இருவரையும் நோக்கி, “ஏன் மரம்போல் நிற்கிறீர்கள்?” என்று எரிந்தும் விழுந்தான்.

ஆனால் அந்த இரு வீரர்களும் அசையவில்லை. மந்திரத்தால் கட்டப்பட்ட பதுமைகள் போல் நின்றிருந்தார்கள். தூணை நோக்கிச் சென்று கொண்டே மீண்டும் கேட்டான் குலபதி, “உங்கள் வாய் அடைந்து விட்டதா?” என்று.

இருவரும் பதிலுக்குத் தலைகளை அசைத்துப் பின்புறம் சைகை செய்தார்கள். அப்பொழுதுதான் நிலைமை புரிந்தது குலபதிக்கு. அந்த வீரர்களுக்குச் சற்றுப் பின்னால் இரு குறுவாட்களைக் குறி வைத்துக்கொண்டு ஜமாலுதீனும் அரபு நாட்டு அழகியும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை அப்பொழுதுதான் இளைய பாண்டியனும் நோக்கினானாகையால் அவன் முகத்திலும் வியப்பின் குறி லேசாகப் படர்ந்தது. “ஜமாலுதீன்…!” என்று ஏதோ – சொல்ல முயன்ற வீரபாண்டியனை இடைமறித்த அராபியன்,

“நண்பர்களைக் கொலைகாரர்களிடம் விட்டுச் செல்லும் பண்பு அராபியர்களுக்குக் கிடையாது,” என்று கூறினான் லேசாக நகைத்து.

“ஆனால் இந்தப் பெண்” என்று வினவினான் இளைய பாண்டியன்.

“வீரர்கள் மரபில் பிறந்தவள். அவள் குறுவாளும் குறி தப்புவதில்லை. வேண்டுமானால் அதோ அவனை, அவன் பெயரென்ன குலபதியா… அவனைத் தீர்த்து விடச் சொல்லட்டுமா?” என்று – வினவினான் ஜமாலுதீன் சர்வ சாதாரணமாக.

“வேண்டாம்! இவனைப் பிடித்து அந்தத் தூணில் கட்டிவிடு. நீ இருந்த நிலையில் இவனிருக்கட்டும்” என்று உத்தரவிட்ட வீரபாண்டியன், மற்ற இரு வீரர்களையும் ஒன்றாக நிற்கும்படி. வாளால் சைகை காட்டினான்.

அடுத்த சில விநாடிகளில் குலபதி அந்தப் பெரிய தூணில் நன்றாகப் பிணைக்கப்பட்டான். மற்ற இரு வீரர்களும்

கைகால்கள் கட்டப்பட்டு அவன் காலடியில் உருட்டப்பட்டார்கள். அந்தக் காட்சியை விளக்கு வெளிச்சத்தில் கண்ட வீரபாண்டியன், “குலபதி! ஜமாலுதீன் காலடியில் ஒரு பெண் தான் கிடந்தாள்; உன் காலடியில் இரு வீரர்கள் கிடக்கிறார்கள். நல்ல துணையுடனேயே விட்டுச் செல்கிறேன். வீட்டு வாயிற் கதவும் திறந்திருக்கும். சற்று அதிகக் கூக்குரலிட்டால் தெருவில் கேட்கும். நாளைக் காலையில் உங்களை யாராவது விடுவிப்பார்கள். விடுவித்ததும் மதுரைக்குச் சென்று சொல் மன்னரிடம், அவர் கிரீடம் அவர் தலையில் இன்னும் திடமாக அமரவில்லையென்று” எனக் கூறிவிட்டு, “ஜமாலுதீன்” என்று ஜமாலுதீனை அழைத்துக் கொண்டு, கொல்லைப்புற வழியை நோக்கிச் சென்றான். அரபுநாட்டு அழகியும் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

கொல்லைப்புறத்தில் நல்ல இருட்டடித்திருந்தாலும் அங்கு நாலைந்து ஜாதிப் புரவிகள் கொட்டடியில் கட்டப்பட்டிருப்பதை வீரபாண்டியன் கவனித்தான். அந்தப் புரவிகள் நான்கும் ஜமாலுதீனைக் கண்டு கனைத்ததைப் பார்த்ததும் அவை நன்றாக பழக்கப்பட்ட புரவிகளே என்பதையும், ஏதோ காரணமாகவே அந்தப் புரவிகளை ஜமாலுதீன் அங்கு கட்டி வைத்திருக்கிறா னென்பதையும் அந்த முகப்பு வீட்டைக் கூட அவன் முன்கூட்டியே வாடகைக்கு அமர்த்தியிருக்கிறா னென்பதையும், புரிந்து கொண்ட வீரபாண்டியன் தனக்குத் தெரியாத ஏதோ மர்மம் ஜமாலுதீனுக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டானானாலும், அதைப் பற்றியும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜமாலுதீன் அவிழ்த்துக் கொணர்ந்த ஒரு புரவிமீது ஏறிக் கொண்டான். மற்றும் இரு புரவிகளில் ஜமாலுதீனும் அராபிய அழகியும் ஏறிக்கொள்ள, வீரபாண்டியன் பின்புற வழியாகவே அரண்மனையை நோக்கித் தனது புரவியைச் செலுத்தினான். அவனுக்குப் பின்னால் அராபிய அழகியும், அவளுக்குப் பின்னால் ஜமாலுதீனும், தொடர, மூவரும் அடுத்த சில நிமிஷங்களில் காயல்பட்டணத்தின் அரண்மனையின் பின்புறத்தை அணுகினர். அங்கிருந்த வீரர்கள் இளவரசனைக் கண்டதும் தலைதாழ்த்திப் புரவியைப் பிடித்துக் கொள்ளக் கீழே குதித்த வீரபாண்டியன், மற்ற இருவரையும் கீழே இறங்கச் சொல்லித் திட்டி வாசல் வழியாக அரண்மனைக்குள் அவர்களை அழைத்துச் சென்றான். இரவு நன்றாக ஏறியிருந்துங்கூட அரண்மனை மாடியின் பெரும் தாழ்வரைகளில் ஆங்காங்கு ஒவ்வொரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு தாழ்வரையிலும் பூரண ஆயுதந்தரித்த ஒரு காவல் வீரன் உலாவிக் கொண்டிருந்தான். இரு தாழ்வரைகளைச் சுற்றிக் கிழக்குப்புறத் தாழ்வரைக்கு வந்த வீரபாண்டியன், சிறிது நேரம் அங்கிருந்த வண்ணம் காயல் பட்டணக் கடலோரத்தின் மீது கண்களை ஓட்டினான். மகோன்னதக் காட்சி அவன் கண்கள் முன்பு விரிந்தது. விளக்குகளுடன் கடலில் ஆடி நின்ற மரக்கலங்களும், ஜமாலுதீன் கொண்டு வந்திருந்த புரவிக் கூட்டத்தில் தனித்தனியாகக் குதிரைகள் தெரியாவிட்டாலும் ஏதோ பெரும் கருப்புச் சந்தை அசைவதைப்போல் தெரிந்த அழகும், அரண்மனை வரையில் எட்டிக் கொண்டிருந்தது. அந்தக் குதிரைகளின் கனைப்பொலிகளும், வீரபாண்டியன் கண்களையும் இதயத்தையும், ஒருங்கே பறித்ததால் பல விநாடிகள் அவன் மெய்மறந்து நின்று கொண்டிருந்தான். அவன் கண்ட காட்சியை அராபியனான ஜமாலுதீனும் கண்டாலும், கடலோரத்தை ரசிக்க நேரம் அதிகமில்லை என்ற காரணத்தால் இளவரசன் தோளைத் தொட்டு, “இதயத்தைக் கடலிடம் கொடுத்துவிடாதீர்கள். சிறிது இந்த மா நிலத்துக்கும் திருப்புங்கள்,” என்று மிக மெதுவாகக் கூறினான். அந்த மெதுவான சொற்கள் கூட, அவன் கரகரத்த ஒலியின் காரணமாக இளவரசன் காதில் நாராசமாக ஒலிக்கவே, அவன், அராபியனைத் திரும்பிப் பார்த்து, “ஜமாலுதீன், சொர்க்கத்தை அனுபவிக்கிறேன். சற்றுப் பொறு” என்று பதில் கூறினான் குழைந்த குரலில்.

ஜமாலுதீன் இகழ்ச்சி ததும்ப நகைத்தான்.

“சற்று முன்பு அதைத்தான் தங்களுக்கு குலபதி அளிக்க விரும்பினான்.” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே. இளவரசன் புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்துவிட்டுத் தனது அறையை நோக்கி நடந்தான். அறைக்குள் நுழைந்ததும் ஜமாலுதீனையும் அராபிய அழகியையும் ஒருமுறை நோக்கினான். கிழிக்கப்பட்டிருந்த அவள் முகத்திரையின் விளைவாகப் பாதிக் காட்சியளித்த அவள் முகம், அந்த அறையின் வெளிச்சத்தில் இன்னும் எத்தனையோ அழகு, கிழிக்கப்படாத முகத்திரைப் பகுதியில் மறைந்து கிடப்பதை உணர்த்தியது.

அந்தப் பாதி முகத்திலும் ஒரு கண்ணிலுமே மயங்கிய இளவரசன் காதுகளில் ஜமாலுதீனின் அடுத்த சொற்கள் கம்பீரமாக ஒலித்தன. “இனி முகத்திரையும் இந்த வேடமும் தேவையில்லை. ஆடையைக் களைந்து விடு,” என்றான் ஜமாலுதீன் அரபு நாட்டழகி அடுத்த விநாடி முகத்திரையைக் கிழித்து எறிந்தாள். பிறகு மற்ற ஆடைகளையும் களையலானாள்.

இளவரசன் இதயம் திக்கு திக்கென்று அடித்துக் கொண்டது. “ஜமாலுதீன்!” என்று கோபத்துடன் சொல்லை உதிர்த்தான் இளவரசன்.

“சற்றுப் பொறுங்கள்,” என்றான் ஜமாலுதீன்.

“எதற்கு?”

“இவள் ஆடையை முழுதும் களையட்டும்.”

“சே… சே… என்ன இது!”

“பயப்படாதீர்கள்.”

ஜமாலுதீனின் கடைசிச் சொல் இளவரசனை ஒரு உலுக்கு உலுக்கிவிடவே, அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் எந்தவிதச் சந்தேகமுமின்றி உடைகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அதைக் காண இஷ்டப்படாத இளவரசன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

“பரிசைக் காண இஷ்டமில்லையா?” என்று வினவினான். ஜமாலுதீன்.

“பரிசா…” மறுபுறம் பார்த்துக் கொண்டே கேட்டான் இளவரசன்.

“ஆம். உங்களுக்கு நான் பரிசு கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவில்லையா?”

“ஆம்.”

“இவள் தான் அந்தப் பரிசு!”

இதைக் கேட்ட இளவரசன் திக்பிரமை பிடித்து நின்றான்: “இந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?” என்று சீறினான் வீரபாண்டியன்.

ஜமாலுதீன் நகைத்தான். “என்ன அசந்தர்ப்பமான கேள்வி!” என்று கூறவும் செய்தான் சிரிப்புக்கிடையே.

அத்தியாயம் 4 – ஊர் பெயர் தெரியாதவன்

ஜமாலுதீன் தனக்குக் கொண்டு வந்த பரிசு அந்த அரபு நாட்டு அழகிதான் என்பதை உணர்ந்து கொண்ட வீரபாண்டியன், அதனாலேயே வியப்பின் வசப்பட்டானானாலும், அவள் ஆடைகளைத் தன் முன்பே களைந்துவிட அந்தப் புரவி வணிகன் உத்தரவிட்டதைக் கேட்டதும் அவன் வியப்பு உச்ச நிலைக்குச் சென்றதென்றால், அந்தப் பெண்ணும் வெட்கமின்றி ஆடைகளை இரு ஆடவர்களுக்கு முன்னால் அவிழ்க்க முற்பட்டது விவரணத்துக்கு அப்பாற்பட்ட பிரமிப்பையும், சங்கடத்தையும் விளைவித்தது. இளையபாண்டியனுக்கு. அந்தச் சங்கட நிலை காரணமாக அவன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள முயன்ற போது, அரபு நாட்டழகி வாய்விட்டு கலகலவென்று நகைக்கவே செய்தாள்.

“இளவரசர் மிகவும் கோழை போலிருக்கிறதே” என்று கூறவும் செய்தாள் நகைப்புக்கிடையே.

இதயத்தையே பரவசப்படுத்தும் விதத்தில் உதிர்ந்த அந்தக் கலகலப்புச் சிரிப்பாலும் இடையே அவள் உதிர்த்த கேலிச் சொற்களாலும் சிறிது சினத்தின் வசப்பட்ட வீரபாண்டியன், `இத்தனைக்கும் துணியும் இவள் ஒருவேளை வேசியாக இருப்பாளோ?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். ‘அப்படியானால் இந்த வெட்கங்கெட்டவளைப் பார்த்தால்தானென்ன?’ என்று நினைத்து மீண்டும் கண்களை அவள் மீதே ஓட்டினான், எதையும் அறுக்கும் சக்தி வாய்ந்த சினம் அவன் பண்பையும் அறுத்துவிட்டதால், ஆனால் அடுத்து நிகழ்ந்தவை அவன் உள்ளத்தில் அளவிட முடியாத உவகையையே அளித்தன. அரபு நாட்டு அழகி முகத்திரையை முழுவதும் களைந்து, தலையை மூடியிருந்த முக்காட்டையும் விலக்கி, அதில் வளைத்துச் சுற்றப்பட்டிருந்த தனது குழலையும் வெகு லாவகமாக அவிழ்த்து விட்டாள். பிறகு கழுத்துக்குக், கீழேயிருந்த சட்டையின் நாடா முடிப்புகளையும் அவிழ்த்து சட்டையைக் களைந்து இடுப்பிலிருந்த கச்சையை அவிழ்த்துக் குறுவாளுடன், சராயைக் கீழே நழுவவிட்டுச் சிறிது விலகி நின்றாள். அவள் சட்டைக்குள்ளும் சராய்க்குள்ளும் அதுவரை உள்ளடங்கிச் சுருண்டு திணிந்து கிடந்த மெல்லிய பட்டுச் சீலை மெல்ல விடுதலையடைந்தது. அடுத்தபடி அவள் அந்தச் சீலையின் மேற்புறத்தை நன்றாக இழுத்துக் கழுத்தைச் சுற்றி வளைத்து மிகுந்த அடக்கத்துடன் சீலையைக் கீழ்ப்புறமும் சீர்படுத்திக் கொண்டு அரபு வணிகனை நோக்கி, “ஜமாலுதீன்! இனி இளவரசர் பயப்படமாட்டாரல்லவா?” என்று வினவி, இளநகை கொண்டாள்.

“நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்ற ஜமாலுதீனும் தன் பெரு உதடுகளையும் மீசையையும் அசைத்து விஷம நகை காட்டினான்.

இளவரசன் ஒரு விநாடி அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். கடைசியில் அவன் விழிகள் எதிரே நின்ற ஆரணங்கை ஆராயத் தொடங்கின. அவள் முகம் முழுவதும் திறந்ததுமே அவள் அரபு நாட்டவளல்ல, பாரத நாட்டுப் பெண்தான், என்பதை உணர்ந்து கொண்ட இளையபாண்டியன், அந்த முகத்தில் இருந்த இரு வண்டு விழிகளில் சதா காணப்பட்ட ஒரு கள்ளச் சிரிப்பில், தைரியமும் வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவிழ்த்து விடப்பட்டிருந்த கூந்தலின் கருமையிலிருந்தும் பின்புறம் அவள் பெரும் அழகுத் தட்டுகளையும் மூடிக் கீழேயும் இறங்கும் அளவுக்கும் நீண்டு விரிந்து கிடந்ததையும், அவள் அழகு நுதலின் விசாலத்திலேயே ஒரு தனிப்பட்ட கவர்ச்சியிருந்ததையும், பவள உதடுகளின் நெருக்கமும், சில வேளைகளில் அவை உட்புறம் மடிந்தபோது இழுபட்ட கன்னக் கதுப்புகளின் திண்மையிலும் இனிமை இருந்ததையும், சங்குக் கழுத்தில் ஒட்டிக் கிடந்த வைர அட்டிகை கழுத்தின் வெளுப்பின் காரணமாக சிறிது ஒளி மங்கியிருப்பதையும், அது மங்கியதைச் சரிப்படுத்த எழுந்த மார்பகம் சிறிதாயிருந்தாலும் அவற்றின் நிலை அவள் உள்ளத் திமிருக்குச் சான்று காட்டியதையும் கண்ட வீரபாண்டியன், அவள் அழகுக்கு இணையான ஒருத்தியைப் பாண்டிய நாட்டில் காண முடியாதென்பதைப் புரிந்து கொண்டான். அவள் இடை சிறியதாயிருந்தாலும், அவள் கால்கள் அதிக சதைப் பிடிப்பில்லாதிருந்ததாலும் எல்லாவற்றிலும் ஒரு வசீகரமும் திடமுமிருந்ததை உணர்ந்து கொண்ட வீரபாண்டியன், சில விநாடிகள் அவள் அழகைப் பருகியே நின்றான். அவள் அராபிய வேடம் போட்டதன் காரணமாக, அவள் கைகளில் வளையலோ கால்களில் சிலம்புகளோ நெற்றியில் திலகமோ இல்லாத குறைகளைத் தவிர, வேறு குறையேதுமில்லையென்பதை அறிந்துகொண்டான்.

இப்படிப் பல விநாடிகள் ஆராய்ந்த பிறகு, “ஜமாலுதீன்! இவள் யார்? எதற்காக என்னிடம் அழைத்து வந்தாய்?” என்று வினவினான் பாண்டி இளவரசன்.

ஜமாலுதீன் விஷமமாகக் கண்களைச் சிமிட்டி விட்டுச் சொன்னான் “ஆண்டுதோறும் தங்களுக்கு ஒரு பரிசு கொண்டு வருவது வழக்கமல்லவா?” என்று.

“ஆம்” என்ற இளவரசன் பதிலில் ஆச்சரியமிருந்தது.

“என்ன பரிசு கொண்டு வருவேன்?”

“புரவியொன்று கொண்டு வருவாய்.”

“ஒரே மாதிரி பரிசைக் கொண்டு வருவது உங்களுக்கும் சலிப்பை அளிக்குமல்லவா?”

“அதற்காக இந்த ஆண்டு பெண்ணைக் கொண்டு வந்திருக்கிறாயோ?”

“ஆமாம்.”

இதைக் கேட்டதும் சற்று நிதானத்தை இழந்த இளவரசன், “ஜமாலுதீன்! விளையாடுகிறாயா என்னுடன்” என்று கேட்டான் சீற்றத்துடன்.

ஜமாலுதீன் வருத்தச்சாயையை முகத்தில் படர் விட்டுக்கொண்டு, கண்களிலும் அது விரிய, வீர பாண்டியனை நோக்கி, “ஏன் இந்தப் பெண் அழகாயில்லையா?” என்று கேட்டான், சர்வ சாதாரணமாக.

வீரபாண்டியன் சினம் இன்னும் அதிகமாயிற்று.

“இருக்கிறாள், ஜமாலுதீன் இருக்கிறாள். ஆனால் இவளால் எனக்கு என்ன உபயோகம்?” என்று வினவினான்.

“போங்கள் எஜமான்! என்ன கேள்வி இது?” என்று அலுத்துக்கொண்டே. “புரவியைவிட இவள் அதிக உபயோகம் உங்களுக்கு. இவள் குறுவாளெறிவாள் குறி தவறாமல். குதிரை குறுவாளெறியுமா?” என்று வினவினான் ஜமாலுதீன்.

“குறுவாளெறிய எனக்கே தெரியும். அதற்கு இவள் தேவையில்லை,” என்றான் இளவரசன் கடுப்புடன்.

“ஒருவர் துணை உங்களுக்கு இப்பொழுது அவசியம் தேவையாயிருக்கிறது. நானோ பாண்டிய நாட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது” என்று விளக்கினான் ஜமாலுதீன். இதைச் சொன்னபோது அவன் குரலில் விஷமம் ஏதுமில்லை. தீவிரமான கவலையே படர்ந்து கிடந்தது.

அவன் கவலையைக் காணவே செய்தான் வீரபாண்டியன். `அப்படியென்ன ஆபத்து. பாண்டிய நாட்டில், அதுவும் காயல்பட்டணத்தில் எனக்கு நேரிட முடியும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ‘தவிர அப்படியே ஆபத்திருந்தாலும் இந்தப்பெண் என்ன அபாரமான உதவியைச் செய்து விட முடியும்?’ என்று எண்ணிப் பார்த்தான். இருப்பினும் அந்தக் கேள்விகளையும் எண்ணங்களையும் விலக்கி விட்டு முதலில் அவள் யார் என்பதை அறிய பிரியப்பட்டு, “ஜமாலுதீன்! இவள் யார்? உன்னிடம் எப்படி வந்து சேர்ந்தாள்?” என்று வினவினான்.

ஜமாலுதீன் அளித்த பதில் இளவரசனுக்குப் பேரதிர்ச்சியை அளித்ததால், அவன் பல விநாடிகள் பேசாமல் நின்றான்.

இத்தனைக்கும் ஜமாலுதீன், “இவள் யாரென்பது எனக்குத் தெரியாது” என்று சர்வ சாதாரணமாகத்தான் சொன்னான். இருப்பினும் அந்தப் பதில் அதிர்ச்சியை மட்டுமின்றிக் குழப்பத்தையும் அளிக்கவே, “இவளை உனக்குத் தெரியாதா?” என்று வாய் விட்டு உரக்கக் கேட்கவும் செய்தான் வீரபாண்டியன்.

“தெரியாது.” திட்டமாக வந்தது ஜமாலுதீனின் பதில்.

“நீ இவளை எனக்குப் பரிசாகக் கொண்டு வந்ததாகச் சொன்னாயே?”

“இவள் சொல்லச் சொன்னாள் அப்படி.” “உன்னை இவளுக்கு முன்பே தெரியுமா?” “தெரிந்துதான் இருக்க வேண்டும்.”

“அப்படியென்றால்?”

“இவளை எனக்குத் தெரியாது. ஆனால் இவள் என்னைத் தெரிந்து கொண்டிருக்கிறாள்.”

“எப்பொழுது தெரிந்து கொண்டாள்?”

“அது தெரியாது. ஆனால் வழக்கமாகத் தங்குகிற மாளிகைக்கு நேற்றிரவு வந்தாள். தனக்கு அராபிய உடை வேண்டுமென்றும், தன்னை உங்களுக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னாள்.”

இதைக் கேட்ட இளவரசன் இதயத்தில் பல சந்தேகங்கள் உலாவின. ஆனாலும் அவை எதையும் வெளிக்குக் காட்டாமல், “சரி சரி! நீ உடனே ஒப்புக் கொண்டாய் இல்லையா?” என்று இழுத்தான் வெறுப்புடன் வீரபாண்டியன்.

ஜமாலுதீன் கண்களில் ஒரு விநாடி சீற்றம் தெரிந்து மறைந்தது. பிறகு நிதானமான குரலிலேயே பேசினான்.

“இளவரசருக்குப் பல ஆண்டுகளாக இந்த ஜமாலுதீனைத் தெரியும். அவன் எடுப்பார் கைப்பிள்ளையல்ல வென்பதும் இளவரசருக்குப் புரியாத விஷயமல்ல. இவள் சொன்னதை உடனடியாக நான் ஏற்கவில்லை; இவளை யாரென்று விசாரித்தேன். இவள் அதைச் சொல்லவும் மறுத்தாள். பெயரைக்கூடச் சொல்லவில்லை. ஒன்று மட்டும் சொன்னாள்; என்னை அவள் சொல்படி ஆட்டி வைக்க மறுநாளிரவு, அதாவது இன்றிரவு உங்கள் உயிர் ஆபத்திலிருக்கிறது என்று கூறினாள். உங்களைத் தப்புவிக்க வேண்டுமானால் தான் சொன்னபடி செய்ய வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தாள். என்ன ஆபத்து, யாரால் ஆபத்து, என்றும் விசாரித்தேன். எதையும் சொல்ல மறுத்தாள்! ஆனால்…”

இந்த இடத்தில் பேச்சை நிறுத்திய ஜமாலுதீன் இளவரசனை உற்று நோக்கினான்.

“சொல் ஜாமலுதீன்” என இளவரசன் ஊக்கவே அரபு வணிகன். மேலும் பேச்சைத் தொடங்கி, “ஆனால் இவள் விழிகளில் உண்மை இருந்தது. ஆகையால் அவள் சொன்னபடி செய்ய ஒப்புக் கொண்டேன். அதற்கு முன்பு கேட்டேன்-இவளை ‘காயலில் இளவரசனைக் காப்பாற்றக் கூடியவர் வேறு யாருமில்லையா?’ என்று. இல்லையென்றாள் இவள், பதிலுக்கு உங்களுக்கு ஆபத்திருப்பதாகத் தெரிந்தாலோ அல்லது யாராவது உங்களை எச்சரிப்பதாகத் தெரிந்தாலோ கூட அவர்களும் கொல்லப்படுவார்கள் என்றும் அறிவித்தாள். அதற்குப் பின்பு நான் சந்தேகப்படவில்லை. இவள் கூறியபடி செய்தேன். விலைமகளிர் வீட்டுக்கு நான் போனதும் இவள் யோசனையின்மேல்தான். உங்களுக்குப் பரிசு கொண்டு வந்திருப்பதாகக் கூறி அங்கு அழைத்துவரச் சொன்னதும் இவள் தான். பிறகு நடந்தது உங்களுக்கே தெரியும்,” என்றான். இளவரசன் ஆழ்ந்த சிந்தனையுடன் தலை குனிந்த வண்ணம் சில விநாடிகள் அறையில் இப்படியும் அப்படியும் அலைந்தான்.

‘இவளே ஒருவேளை தனது அண்ணன் கையாளாயிருந்தால்? இவளே குலபதியையும் அவன் ஆட்களையும் வரவழைத்திருந்தால்? பேருக்குத் தன்னைக் கட்டிப் போடச் சொல்லி என்னை அங்கு இழுத்திருந்தால்?’ இப்படியாகப் பல கேள்விகள் அவன் உள்ளத்தே எழுந்ததால், திடீரெனத் தலை நிமிர்த்தி ஜமாலுதீனை நோக்கி, “ஜமாலுதீன்! குலபதியிடம் நம்மைப் பிடித்துக் கொடுக்க இவள் ஏன் சூழ்ச்சி செய்திருக்கக் கூடாது?” என்று வினவினான் சந்தேகம் பூர்ணமாக ஒலித்த குரலில்.

“ஒருக்காலும் செய்யவில்லை” என்றான் ஜமாலுதீன் திடமாக. “அத்தனை நம்பிக்கையா – ஊர் பேர் தெரியாத இவளிடம் உனக்கு?”

“ஆம்,”

“நம்பிக்கைக்கு அத்தாட்சி?”

“கண்களைச் சொன்னேனே!”

“அதைத் தவிர…?”

இதை வீரபாண்டியன் கேட்ட விநாடியில் அத்தாட்சி அவனுக்கே நிதரிசனமாகத் தெரிந்தது. அந்த அழகி இளைய பாண்டியனை நோக்கிப் பாய்ந்து அவனைக் கீழே தள்ளி, தானும் அவன் மீது உருண்டாள். வெளியில் திடீரென ஒருவன் பெரிதாக அலறினான். அந்த அலறல் மரணக் கூச்சல்.

– தொடரும்…

– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *