நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!
ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போய், இறுதியில் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தார்.
மகாவிஷ்ணு நாரதரிடம், ”பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீயும் எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். சரி, உன் துயர் நீங்குவதற்கு ரிஷிகேசம் என்ற தலத்துக்குச் செல். துக்கத்தில் இருந்து நீ மீள்வாய்” என்று அறிவுரை கூறினார்.
அவ்வாறே நாரதரும் ரிஷிகேசத்துக்குப் புறப்பட்டார். வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. அந்த மீனிடம், ”என்ன மீனே, நலமா?” என்று கேட்டார்.
”நாரத பகவானே! தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்” என்றது மீன் சோகமாக.
இதைக் கேட்ட நாரதர், ”என்ன உளறுகிறாய், முட்டாள் மீனே! தண்ணீரில் இருந்து கொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா?” என்றார்.
”ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்து கொண்டு தாங்கள் துன்பப்படுவதைவிட இது ஒன்றும் வியப்பில்லையே!” என்றது மீன்.
பகவானின் ஸாந்நித்தியத்தை தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன், மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது.
தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான பகவானின் தரிசனத்தால் நாரதர் துக்கத்தில் இருந்து விடுபட்டார்; மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்.
-ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி (ஏப்ரல் 2009)
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,469