நாயகர் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: முகப்பு
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 96 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

ஒரு மாதத்திற்கு முன்பு, தனியார் கல்லூரி ஒன்றில் விலங்கியல் பேராசிரியராக இருக்கும் மூர்த்தி, ஈரோட்டில் நடைபெற்ற மாபெரும் வேளாண்மைக் கண்காட்சிக்கு தனது நண்பர் கரந்தை ஜெயக்குமாருடன் சென்றிருந்தார். அங்கே அரங்கத்தில் பேராசிரியர் மூர்த்தியும், அவரது நண்பரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது மேடையில் பேராசிரியர் சிங்கப்பூர் திருநாவுக்கரசு “விவசாயிகள் எதிர்கொள்ளும் எலித் தொல்லைகள்” என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

“பொதுவாக வீட்டு எலிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று முரட்டுத்தனமான பெருச்சாளி எனும் வகை. இரண்டாவது சுண்டெலி எனப்படும் நடுத்தர வகை. மூன்றாவது மூஞ்சூறு எனப்படும் சாதுவான வகை. இந்த வகை எலிகள் மனிதர்களுக்கு அதிகம் சிரமம் கொடுப்பதில்லை. வயலெலிகள் வயலில் உள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. நெல் வயலில் விளைந்த தானியங்களைச் சேதப்படுத்துகின்றன. அவை சாப்பிடுவது ஒரு பங்கு என்றால் அவை வீணாக்கும் தானியங்கள் ஒன்பது மடங்கு இருக்கும். வீட்டு எலிகள் வீட்டில் இருக்கும் காய்கறிகள், பழங்கள் இவற்றை கடித்துக்குதறி நாசப்படுத்துகின்றன. சில வேளைகளில் நாம் படுத்திருக்கும் போது நம்மையும் கடித்து விடுகின்றன. வயல் எலிகள் வயலை நாசம்செய்து விவசாயிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த எலிகளை நாம் அவசியம் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதை அரசாங்கம் மட்டுமே செய்து விட முடியாது. பொதுமக்கள் எல்லோரும், கிராமங்கள் தோறும் ஒன்று கூடி, கோடை காலத்தில் இந்தப் பணியை ஒரே நேரத்தில் செய்ய வேண்டும். அனைத்து வயல் வரப்புகளில் உள்ள எலி வலைகளை இடித்து, எலிகள் அங்கே தங்காவண்ணம் செய்துவிட வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இந்த எலிகளின் பெருக்கத்தையும், அதன் பெருத்த சேதத்தையும் நாம் தடுக்கமுடியும். அதன் மூலம் நாம் விவசாயிகளின் பொருளாதாரத்தை நன்கு மேம்படுத்த முடியும். எலிகளைக் கட்டுப்படுத்து வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பெரும்பாலான விவசாயிகள் இன்றும் கடைப்பிடித்து வரும் கிட்டிவைத்து எலிகளைப் பிடிப்பது ஆகும். ஆரம்பத்தில் வேளாண் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் வயல் எலிகளைக் கட்டுப்படுத்த அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை, சிங்சல்பேட் போன்ற அதிக நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கொல்லிகள் மூலம் எலிகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் அப்படி அவர்கள் வலியுறுத்துவது இல்லை. காரணம், அதனால் வேறு சில பிரச்சனைகள் வருவதுதான். இரண்டு எலிகளை நாம் அப்படியே விட்டுவைத்தால் அவை ஓராண்டில் சுமார் 800 எலிகளாக மாறும் என்று அறிவியலாளர்கள் கூறு கின்றனர். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் எலிகள் அந்த அளவிற்குப் பெருகுவதற்கு சில உயிரினங்கள். , அதாவது பாம்புகளும் சில வகை பறவைகளும், முக்கியத் தடையாக இருக்கின்றன. இவை அவ்வப்போது எலிகளை உணவிற்காக வேட்டையாடும்போது எலிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விடுகின்றன.” இப்படியாக சிங்கப்பூர் பேராசிரியர் கருத்துரை இனிதே நிறைவு பெற்றது.

இரு வாரங்களுக்கு முன்பு மதுரை வேளாண்கல்லூரி உழவர் தின விழாவில், ஏடகம் மணிமாறன் அவர்கள் “எலிகளை விரட்டும் இனிய வழிகள்” என்பது பற்றிச் சிறப்பாகப் பேசினார்.

“எலிகளும் நம்மைப் போல உலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத் தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளது? என்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். வயல் வரப்புகளில் நாம் அதிக அளவில் எருக்குச் செடிகளை வளர்க்க வேண்டும். அவற்றின் இலைகளை வரப் போரங்களில் தூவிவிட்டால், அதன் வாடைக்குப் பயந்து அந்தப் பக்கம் எலிகள் வரவே வராது. எலிகளைப் பிடிப்பதற்கான வழிகளைத் தேடாமல், அவற்றை நம் வீட்டுப் பக்கமோ, வயல்வெளிப் பக்கமோ வராமல் விரட்டியடிக்கும் வித்தைகளை நாம் அவசியம் தெரிந்து கொண்டால் போதும். அப்படி அவற்றை நாம் விரட்டிவிட்டால், பாம்புகளும் சில பறவை இனங்களும் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். அவை பாம்புகள் மற்றும் சில பறவைகளின் உணவுத் தேவைகள் பூர்த்தியடைவ தற்கு உதவுகின்றன. பொதுவாக நெல் வயல்களில் நாம் வரிசை நடவு முறையை பின்பற்றினால் எலிகளினால் ஏற்படும் சேதத்தைப் பெரும் அளவு கட்டுப்படுத்தலாம். வயல்களில் பயிர்கள் தூர்கட்டும்வரை எலிகள் தொந்தரவு அதிகம் இருக்காது. அதன் பிறகு தான் எலிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். நாம் அத்தகைய நேரங்களில் வயல்களில் இரண்டு அங்குல அளவிற்குக் குறையாமல் தண்ணீரைத் தேக்கிவைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எலிகளின் தொல்லைகள் அதிகம் இருக்காது. ஆனால் இந்த முறை எல்லா இடங்களுக்கும் சாத்தியப்படாது. எலிகளை இன்னொரு முறையிலும் விரட்டி விடலாம். அதாவது சூரிய மின் தகடுகளை வயல்களில் பொருத்தி அதன் மூலம் இரவில் வயலின் வரப்புரங்களில் மின் அழுத்தம் குறைவான தானியங்கி மின் விளக்குகளை எரியவிட்டால் எலிகளின் நடமாட்டம் முற்றிலும் குறைந்து விடும். அடுத்து, அரிசி மாவு இரண்டு பங்கு, மிளகாய்த்தூள் இரண்டு பங்கு, நாட்டுச் சர்க்கரை ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து சிறிது தண்ணீரைச் சேர்த்து, அப்படியே சிறு சிறு உருண்டைகளாக்கி, வயலில் ஐந்து முதல் பத்து இடங்களில் வைத்தால், எலிகள்

அவற்றை உடனே சாப்பிட்டு விடும். அந்த எலிகள் இறக்காது. ஆனால் அவற்றின் குடலில் ஒருவித நமச்சலை மட்டும் அது ஏற்படுத்தும். அதன் பின் வயல் பக்கம் அவை வரவே வராது.” இப்படியாக மணிமாறன் தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.

பத்து நாட்களுக்கு முன்பு, திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்ற பாரதி கலை மாமன்ற விழாவில், அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள், “எலிகளின் மதிநுட்பமும் அதிநுட்பமும்” என்பது பற்றியும் அவற்றைக் கொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் உரையாற்றினார்.

“எலிகள் மனிதர்களை விட அதிக நுட்பமானவை. மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடித்த பின்னர், ஆய்வாளர்கள் முதலில் அவற்றை எலிகளுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பார்கள். அதனால் எலிகளின் எண்ணிக்கையில் பெருத்த மாற்றம் எதுவும் ஏற்படாது. எலிகளுக்கு அதிக வெளிச்சமும், அதிக சத்தமும், அதிக அதிர்வுகளுடன் கூடிய இசையும் ஆகாது. அவற்றைக் கேட்டால் உடனே அவை ஓடிவிடும். நாம் நம் வீடுகளில், இரவு நேரங்களில் அதிக அதிர்வுடன் கூடிய இசையை, குறிப்பாக மேளச் சத்தத்தை ஒலிக்கச் செய்தும் எலிகளை விரட்டியடிக்கலாம். எலிகளுக்குப் பிடித்தமானது மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதிகள்தான். நாம் வீட்டைச் சுத்தமாகவும், வெளிச்சம் உள்ளதாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆனாலும் எலிகளைக் கொல்லுவது எந்த வகையிலும் ஏற்புடையது அன்று. முன்பெல்லாம் வீடுகளில் எலிக்கட்டைகள் மற்றும் எலிப்பொறி வைத்து அப்பொறிகளில் எலிகளுக்கு பிடித்தமான தேங்காய் பத்தைகள் அல்லது தக்காளி போன்றவற்றை வைத்து எலிகளைப் பிடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது எல்லா வீடுகளிலும், எலிமிட்டாயை வாங்கி வந்து வீட்டில் வைத்து எலிகளைக் கொல்லும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்படி விஷம் கலந்த உணவை சாப்பிடும் எலிகள், சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இறந்து விடும். மறுநாள் அப்படி இறந்த எலிகளை நாம் வெளியில் வீசி எறியும்போது அவற்றைச் சாப்பிடும் பறவைகள் அதன் நச்சுத்தன்மையின் தாக்கத்தினால் அவையும் இறக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் எலிகளை மட்டுமல்ல நம்மைச் சார்ந்து வாழும் சில பறவையினங்களின் அழிவிற்கும் காரணமான வர்கள் ஆகிவிடுகின்றோம். இந்த உண்மையை நாம் அவசியம் உணர்ந்துகொள்ள வேண்டும். பாரதி எல்லா உயிர்களையும் நேசித்தான். நாம் அனைவரும் பாரதியை நேசிப்பதும் அவனை வாசிப்பதும் உண்மை யானால், அவனது உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற ஒரு கொள்கையையாவது நாம் நம் வாழ்வில் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” இப்படியாக ஒரு அன்பான வேண்டுகோளோடு பேராசிரியர் அன்பழகன் தனது உரையை உன்னதமாக்கிக் கொண்டார்.

அடுத்த மாதம் பதினோராம் தேதி சிகாகோ பல்கலைக் கழகத்தில் “இந்திய மண்ணில் எலிகள்” எனும் தலைப்பில் ஒரு பேருரையை நிகழ்த்த வேண்டும் என சிகாகோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் மூர்த்தியின் நண்பர் வின்சென்ட் ஞான திரவியம் கடந்த மாதம் அவரிடம் கேட்டுக் கொண்டார். அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டும் வகையில்தான் இதுவரை அவர் பல ஊர்களுக்கும் சென்று, பல விழாக்களில் கலந்து கொண்டு வந்துள்ளார். இதுவரை தகவல்கள் ஓரளவு திரட்டப்பட்டு விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இது போதும் என அவர் மனம் சொல்ல, அவரது வெளியூர் பயணங்களை தற்சமயம் அவர் நிறுத்திக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை காலை உணவை முடித்துவிட்டு, பேராசிரியர் மூர்த்தி அவரது வீட்டின் திண்ணைப் பகுதிக்கு வந்து, சாய்வு நாற்காலியில் சாய்வாக அமர்ந்தார். திண்ணையில் கிடந்த அன்றைய தினமணியை எடுத்து அதில் உள்ள செய்திகளை கொஞ்சம் சத்தமாக வாய் விட்டு வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் நாவுக்கரசும், பக்கத்து வீட்டுப் பையன் மாரிமுத்துவும் அருகில் அமர்ந்து பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்று விடுமுறை.

“ நேற்று இரவு எலி கடித்து இருவர் கவலைக்கிடம்; மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதி” இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த நாவுக்கரசு தனது தந்தையிடம் கேட்டான்,

“அப்பா எலி விநாயகரோட வாகனம்தானே! பின்ன ஏன் அது நம்மளக் கடிச்சி வைக்குது?” என்று கேட்டான்.

“அது விநாயகரோட தப்பும் இல்ல; எலியோடத் தப்பும் இல்ல; நம்மளோடத் தப்பு. நாம வீட்டைச் சுத்தமா வச்சிருந்தா எலிகள் வராது. அது நம்மளவிடப் புத்திசாலி. நாம வீட்ட நித்தமும் இரண்டு வேலையும் கூட்டிச் சுத்தமா வச்சுக்கணும். அப்புறம், வீட்ல எந்த அடைசலும் இல்லாமப் பாத்துக்கணும். வீட்ல தேவையில்லாத பொருள்களைக் கண்ணா பின்னான்னு வாங்கிப் போட்டு வீட்டைக் குப்பக்கூடமா வச்சுக்கிட்டா எலிகள் தாராளமா வந்துகிட்டுத்தான் இருக்கும்.

நாம வாரத்துக்கு மூணு நாளைக்காவது தூபக்கால்ல சாம்பிராணியப்போட்டு வீடு முழுக்கக் காட்டணும். அந்த வாடைக்கு எலிகள் வராது. அப்புறம் வீட்ல பழங்கள், காய்கறிகளைப் பத்திரமா கூண்டுகளில் வைக்கணும். முன்னாடி எல்லாம் நம்ம வீடுகள்ல, உரின்னு ஒன்னு இருக்கும் அதுல மோர், தயிர்லாம் வச்சிருப்பாங்க. அதுமாதிரி நாம காய்கறி களையும் கூண்டுகள்ல வச்சு உறி மாதிரி தொங்க விடணும்”

“சரிப்பா! ஏன் விநாயகர் போயும் போயும், எலியத் தன்னோட வாகனமா வச்சிருக்கார். நம்மள மாதிரி புல்லட் மாதிரியான கம்பீரமான வாகனத்தை அவர் ஏன் வச்சுக்கல?”

“விநாயகர், உலகம் முழுதும் சுத்துறவரு. புல்லட்ல அவரு சுத்துனா பெட்ரோலுக்கு அவர் எங்க போவாரு? யார்ட்ட போயி கொள்ளை அடிக்க முடியும்? . அது மட்டுமில்ல புல்லட்ல போனா சுற்றுப்புறம் நச்சுத்தன்மை ஆயிடும். எலினா அந்தத் தொல்லை எல்லாம் வராது. மேலும் எலின்னா அவர் சொன்னதக் கேட்டுக்கிட்டு எங்க நாளும் அவரை இழுத்துக்கிட்டுப் போகும். செலவும் மிச்சமாகும். இந்தப் பூமியில இருக்கிறவங்க எல்லாம் நச்சுக் காற்று பாதிப்பு இல்லாம நல்லா இருப்பாங்க.”

“சரிப்பா விநாயகர் அவ்வளவு பெரிய உருவம். ஆனால் எலி ரொம்பச் சின்ன உருவம். அந்த எலி எப்படி அவ்ளோ பெரிய உருவத்தைச் சுமந்துக் கிட்டுப் போக முடியும்? இது சுத்த அபத்தமா இல்லையா?”

“நாவுக்கரசு நீ ராமானுஜரோட அத்வைதக் கொள்கையை கேள்விப்பட்டிருக்கியா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா”

“இறைவனும் ஆன்மாவும் ஒன்னுதான் அப்படிங்கறது தான் அத்வைதம்.”

“எனக்குப் புரியலப்பா. கொஞ்சம் புரியும்படியாச் சொல்லுங்க!.”

“அதாவது நம்ம உயிர் மாதிரி தான் இந்த ஆன்மாவும். ஆனா அது உயிரைவிடப் பெருசு. அதிக சக்தி வாய்ந்தது. நம்ம உயிர் நம்ம உடம்புக்கு உள்ளே இருந்து நம்மள இயக்குது. ஆன்மா நம்மள வெளியிலிருந்தும் இயக்கும். அப்பப்ப உள்ளுக்குள்ள நுழைஞ்சும் நம்மள இயக்கம்.”

“நம்ம உயிரை விட ஆன்மா பெருசு. சக்தி வாய்ந்தது என்று சொல்றீங்க. ஆனா அது நம்ம உடம்புக்குள்ள எப்படி நுழைய முடியுது?”

“நாம உயிர் வாழ நமக்கு உயிர்க்காற்று ( ஆக்சிஜன் ) முக்கியம் இல்லையா? அது இல்லன்னா, நாம உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்க் காற்று

ஒவ்வொரு நொடியும் நம்ம உடம்புக்குள்ள போயிட்டு வந்துட்டு தானே இருக்கு. அது மாதிரிதான் இந்த ஆன்மாவும் காத்து மாதிரி போயிட்டு வந்துட்டு இருக்கு. அத நாமப் பொறுமையா இருந்து கவனிச்சாதான் புரியும். அந்த ஆன்மாவும் காத்து மாதிரி லேசானது என்கிறது உனக்குப் புரியுதா அரசு?”

“இல்லப்பா நான் கேட்ட கேள்விய விட்டுட்டு நீங்க எங்கேயோ வேறப் பக்கம் போற மாதிரி தெரியுது. ஆன்மா லேசா இருந்தா என்ன கனமா இருந்தா என்ன? நான் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க? இவ்வளவு சின்ன எலி, அவ்ளோ பெரிய வயிறு பெருத்த விநாயகர எப்படி இழுத்துகிட்டோ, சுமந்துகிட்டோ போக முடியும்? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க?”

“ நாவுக்கரசு நான் ஒன்னும் வேற பக்கம் போகல. உனக்குப் புரியணும் என்பதற்காக சில விஷயங்களைச் சொல்ல வேண்டியதாக இருக்கு. ராமானுஜரின் அத்வைதக் கொள்கைப்படி ஆன்மாவும் இறைவனும் ஒன்னுதானே? விநாயகர் யாரு கடவுள்; அதாவது இறைவன்; அப்ப அவரும் ஆன்மாவும் ஒன்னு தானே? ஆன்மா லேசானது என்றால் இறைவனான விநாயகரும் லேசாத்தானே இருக்க முடியும்! அப்படி லேசா இருக்கிற ஆன்மாவை, இறைவனை, விநாயகரை இந்த எலி இழுத்துக்கிட்டு போக முடியும்தானே?”

“எனக்கு மயக்கம் வர மாதிரி இருக்குப்பா. நான் உள்ள போறேன்.” என்று சொல்லிவிட்டு நாவுக்கரசு பல்லாங்குழிப் பலகையை கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய, மாரிமுத்து அவனது வீட்டுப் பக்கம் சென்றான். பேராசிரியர் மூர்த்தி அருகில் கிடந்த தினமணி செய்தித்தாளில், அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் ‘கலா ரசிகனை’ வாசிக்க ஆரம்பித்தார்.

மறுநாள் காலையில் தினமணி செய்தித்தாளை பேராசிரியர் வசித்துக் கொண்டிருந்தபோது அவரது மகன் வந்தான்.

“அப்பா எலிக்கெல்லாம் கோயிலா இருக்கு?”என்று சந்தேகம் கலந்த வியப்புடன் கேட்டான்

“ ஆமாண்டா அரசு”

“எங்கேப்பா அந்தக் கோயில் இருக்கு?”

“அந்தக் கோயில் ராஜஸ்தான்ல, பிர்காணிக்கு பக்கத்துல தேஷ்நக் என்ற இடத்துல இருக்கு. அது உண்மையிலேயே கர்னி மாதாக் கோயில். அங்க ஆயிரக்கணக்கான எலிகள் சுதந்திரமாகவும், சந்தோஷ மாகவும் சுத்திக்கிட்டு இருக்கும். அந்த எலிகள் அந்தக் கோயிலை விட்டு வேற எங்கேயும் வெளில போகாது.”

“அது எப்படிப்பா வெளியில் போகாம இருக்கும்? அதுங்கல என்ன கூண்டுலயா வச்சிருக்காங்க? திறந்து கிடக்கிற கோயில்ல தானே அதுங்க இருக்கு. அப்ப எப்படி வெளியில வராம இருக்க முடியும்? ”

“அந்த எலிகள் வெளியில போக வேண்டிய அவசியம் இருந்தால் தானே போகும்.? பொதுவா எலிகள் நம்ம வீட்டுக்குப் பெரும்பாலும் ஏன் வருது தெரியுமா? தண்ணீர் எங்காவது இருக்குதான்னு பாக்கத்தான் அது வரும். அதுக்கு சாப்பாடு எல்லாம் ரொம்பத் தேவை இல்லை. தண்ணிதான் அதிகம் தேவைப்படும். அதனால அந்தக் கோவில்ல ரெண்டு மூணு இடத்தில நம்ம ஊரு இருப்புச் சட்டி மாதிரி பெரிய குழிவான பாத்திரத்துல தண்ணிய வச்சிருக்காங்க. அது தாகம் எடுக்கும் போதெல்லாம் சந்தோசமா வந்து தண்ணியக் குடிச்சிட்டு போயிடும்.”

“நீங்க சொல்றது வேடிக்கையால்ல இருக்கு. சரி, அந்த எலிகள் பசிச்சா என்ன பண்ணும்? சாப்பாட்டுக்கு கோவில் நிர்வாகம் என்ன பண்ணி இருக்காங்க, சொல்லுங்க?”

“அந்த எலிகளுக்குத் தேவையான பால், தண்ணி எல்லாம் கோவில் உள்ளேயே ரெண்டு மூணு இடத்தில வச்சிருக்காங்க. அந்த எலிகள் அந்த பால் இருக்கிற அகலமான பாத்திரத்தின் மேல வரிசையா நின்னுக்கிட்டு, உடம்பைச் சாச்சு வச்சுக்கிட்டு, பொறுமையா பாலக் குடிச்சிட்டுப் போயிடும். அந்தக் காட்சி காணக் கிடைக்காத அருமையான காட்சி. ஒவ்வொரு எலியும் கருப்பா, நல்ல பளபளப்பா இருக்கும்.”

“சரிப்பா அந்த எலிகள் அங்க வர்றவங்களக் கடிக்காதா?”

“அந்த எலிகள் அங்க வர்றவங்க யாரையும் கடிக்காது. ஏன்னா அந்த எலிகளுக்கு வைக்கிற பால் சுத்தமான பால். நாம இங்க பயன்படுத்துற வீணாப்போன நெகிழிப்பை பால் மாதிரி கிடையாது. தண்ணியும் சுத்தமானத் தண்ணி. நாம பயன்படுத்துற சுத்திகரிக்கப்பட்ட தண்ணி மாதிரி ஒரு பைசாவுக்குக் கூடப் பிரயோஜனப்படாத வெத்துத் தண்ணி கிடையாது. சுத்தமானப் பாலைக் குடிச்சிட்டு வளரதுனால, அந்த எலிகளும், பசுமாடு மாதிரி பதவுசா, அமைதியா, சாந்தமா இருக்குது. அந்த எலிகளுக்கு அவங்க நெகிழிப்பைப் பால ஊத்தி வச்சிருந்தாங்கன்னா, இந்நேரம் எல்லா எலிகளும் சுத்தமா செத்து சின்னாபின்ன மாயிப் போயிருக்கும்.”

“ சரிப்பா அந்தக் கோயிலுக்கு போறவங்க அந்த எலிகள அடிக்க மாட்டாங்களா?”

“அந்த எலிகள யாரும் அடிக்க மாட்டாங்க. அந்த எலிகள, அவங்களோட முன்னோர் கள்னு நினைக்கிறாங்க. அந்த எலிகளத் தெய்வமாக வணங்குறாங்க. அந்த எலிகள் போறவங்கள எல்லாம் ஏதோ சொந்தக்காரங்க மாதிரி நினைக்கும் போல. அதனால அவங்க யாரையும் கடிக்கிறது இல்லை. நம்ம ஊர்ல, நம்ம முன்னோர்களை நாம குலதெய்வமா நினைச்சு கும்பிடுவோமில்ல, அது மாதிரிதான்.”

“சரிப்பா நம்ம ஊர்ல இருக்கிற எலிகள் எல்லாம் நம்மள அடிக்கடி கடிச்சு வைக் குது. அங்கங்க மின்சார கம்பிகளை எல்லாம் கடிச்சு வைக்குது. நம்ம மூட்ட முடிச்சுகளை எல்லாம் கடிச்சுக் கொதறி வைக்குது. நிம்மதியா தூங்க முடியல. ராத்திரியில பருட்டு பருட்டுனு எதையாவது கடிச்சுக்கிட்டே இருக்குது. இது ஏம்பா?”

“நாம அவங்களுக்கு கோவிலை கட்டி கும்பிடலைன்னு கோவமா இருக்கலாம்”

“ ஆமாம்பா அப்படியும் இருக்கும்.”


பேராசிரியர் மூர்த்தியின் சிகாகோ உரை சார்பாக தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் காமராசு அவர்களிடம் தெரிவித்த போது, அவர் மூர்த்தியிடம் ஒரு நூலைக் கொடுத்தார். அந்த நூல் பேராசிரியர் மூர்த்திக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தது. மேலும் திருச்சி வானொலி நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு துகிலி சி சுப்பிரமணியம் மற்றும் வான்மதி கண்ணன் போன்றவர்கள் நடத்திய நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் பற்றிய அவரது பழைய குறிப்புகளைத் தேடிப்பார்த்து அவற்றிலிருந்தும் சில தகவல்களை சேகரித்துக் கொண்டார். இனி சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பேசுவதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதில், அவரது மனம் நிறைவை நோக்கி நகர்ந்தது. பல மாதங்களாக நீடித்த அவரது பெரும் முயற்சி, இப்போது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்க நீண்ட நாட்களுக்குப் பின் பேராசிரியர் நிம்மதியாக தூங்கச் சென்றார்.

காலையில் பேராசிரியர் மூர்த்தி வழக்கத்தை விட சற்று தாமதித்துதான் எழுந்தார். காலை நான்கரை மணி அளவில் எப்போதும் எழுகின்ற அவர் அன்று ஏழு மணிக்குத்தான் எழுந்தார். வீட்டில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த ஒரு மண் பானை, இரண்டு கண்ணாடி போத்தல்கள், ரப்பர் வாளி ஒன்று, அலுமினிய குண்டான் ஒன்று, ஆறடி உயரம் உள்ள மூங்கில் தடிக் குச்சி என பல பண்டங்கள் எல்லாம் உடைந்து உருக்குலைந்து இருந்தன.

பேராசிரியரின் பையனுக்கு கணுக்காலில் பலத்த அடி. அவரது மனைவிக்கு கையில் மணிக்கட்டுப் பகுதிக்கு அருகாமையில் நல்ல அடி. எல்லாம் நள்ளிரவு ஒரு மணிக்கு பேராசிரியர் வீட்டில் நடந்த எலி ஒழிப்பு ஆர்ப்பாட்டம்தான். இதற்கு தலைமை ஏற்று வழிநடத்திச் சென்றது பேராசிரியர்தான். அந்த நள்ளிரவில் பேராசிரியர், அவரது மனைவி, மகன் மூவரும் வீட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு முரட்டு எலிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஏதோ கண்ணாமூச்சி விளையாடுவது போல் விளையாடி, பேராசிரியர் மூர்த்தியை வெறுப்பேற்ற, அவர் மூங்கில் தடிக்குச்சி கொண்டு அதனை துரத்தித் துரத்தி அடிக்க, முடிவு இப்படியாக முடிந்து விட்டது. கடைசியில் மூங்கில் தடிக்குச்சியும் இரண்டாக உடைந்து விட்டது.

எலிகளைப்பற்றி என்னதான் படித்திருந்தாலும், கரைத்தே குடித்திருந்தாலும், மதி நுட்பத்தோடும் அதிநுட்பத்தோடும் அவற்றை அணுகி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும், நாம் எலிகளிடம் தோற்றுத்தான் போக வேண்டி உள்ளது. நடைமுறை சிக்கல் என்றால் இதுதான். இப்படித்தான்.

குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 11ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 

முத்தமிழ்ப்பித்தன் எழுத்தாளர் பற்றிய  குறிப்புகள்:  பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன்  இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்:  1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள்  (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *