நாடக உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 107 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இரண்டாவது வகுப்பு வண்டியில் போகிறவர்களிடந்தான் இந்த மாதிரிக் கெட்ட பழக்கம் உண்டு; எதிரே இருப்பது மனிதனா, மிருகமா என்றுகூடக் கவனிக்காமல் புஸ்தகத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்வார்கள். மூன்றாவது வகுப்பிலும்கூட இந்த வியாதி தொத்திக் கொண்டதா-ஸார், உங்களைத் தான்!” என்று ஆரம்பித்தார் எதிரேயிருந்த அந்தப் பிரயாணி. 

“இன்று இடம் கிடைக்கவில்லை; மற்றப்படி இவரும் இரண்டாவது வகுப்பு என்ற வியாதிக்கு உள்ளானவர் தான்” என்று சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எனக்கு ஒரு ‘டோஸ்’ கொடுத்தார் என் நண்பர் சீர்திருத்த வாதி. நம்முடைய ஒண்டு-பிரயாணி அவர்! 

கையிலே வைத்திருந்த ‘ரயில் வண்டிக்குள்’ என்ற நாடகப் புஸ்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, எதிரே யிருந்த நண்பரைப் பார்த்தேன். கிராப்புத் தலை. நேர் வகிடு. முடி வெட்டி மூன்று மாதமாவது ஆகியிருக்கும். நிலையில்லாமல் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு பரபரப்பு. அந்த விசாலமான பெரிய கண்களில்! தலையைத் தூக்கி நான் அவரைப் பார்த்ததும் அகலமான ஒரு சிரிப்புச் சிரித்தார். முன் வரிசைப் பற்களில் இரண்டு, தங்கம் கட்டி மினுமினுத்தன. 

“என்ன படிக்கிறீர்கள், இவ்வளவு முங்கி முழுங்கிப் போய்-எதிரேயிருக்கிற மனித சரீரமே தெரியாமல்?” 

“ஒரு நாடகம், ‘ரயில் வண்டிக்குள்’ என்று பெயர்— அழகான வாழ்க்கைச் சித்திரம்.” 

“சரிதான்! வாழ்க்கைச் சித்திரமா? அதனால்தான் நிஜ ரயில் வண்டிக்குள் நடக்கும் நிஜமான வாழ்க்கை நாடங்களை அலட்சியம் செய்துவிட்டீர்கள்” என்றார் அவர், கிறுதக்காக. கண்ணிலே வெளியான குறுகுறுப்பு சும்மாவா இருக்கும்! 

ஒண்டு-பிரயாணத்துக்கு எங்கே இடையூறு நேர்ந்து விடுமோ என்ற கவலையில், எனது சீர்திருத்த நண்பர் பேச்சை மாற்றினார். 

“தமிழில் நாடக நூல்கள் ரொம்பக் குறைவு. என்னைக் கேட்டால் இனிமேல் நம்முடைய எழுத் தாளர்கள் எல்லாம் கதைகளே எழுதக்கூடாது என்பேன். ‘எழுத்தாளன் என்று பேனாவில் மை போடுகிற ஒவ் வொரு நபரும், குறைந்தது ஒரு பத்து நாடகங்களாவது எழுதிவிட்டுத்தான் பிறகு கதை எழுதலாம்’ என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். இந்த ஒரு காரியம் செய்வதற்காகவாவது…” 

“அடுத்து வருகிற தேர்தலில் நீங்கள் நிற்க வேண்டு மாக்கும்!” என்று நண்பரின் வாக்கியத்தை முடித்தேன். 

எதிரே இருந்த நேர் வகிடு நண்பர் சீர்திருத்த வாதியை ரட்சிக்க முன் வந்தார். 

“வாஸ்தவந்தான்! தமிழில் நாடகம் ரொம்பக் குறைவு. அது மட்டுமில்லை; சிறந்த முறையில் நடிகர் களைப் பழக்குவதற்கும் ஒரு நடிப்புப் பயிற்சிசாலை ஏற்படுத்த வேண்டும்” என்றார் அவர். 

எதிர் பெஞ்சில் வெற்றிலை பாக்குக் குதப்பிக் கொண்டிருந்த இன்னொருவர் – நாடகப் பிரியர் போல் இருக்கிறது, வயது ஐம்பது இருக்கலாம்- எங்கள் பேச்சுக் குள் பக்குவமாக நுழைந்தார். 

“ஆமாம். இந்தக் காலத்தில் நாடகமே மங்கி விட்டது. முன்னால் எல்லாம், அடாடாடா…” 

“முன்னால் எல்லாம் என்று வார்த்தையை ரொம்ப தூரம் இழுக்காதீர்கள்!… ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னால்” என்று ஒரு திருத்தப் பிரேரேபணையைச் சொருகினார் சீர்திருத்தவாதி. 

“பதினைந்து வருஷத்துக்கு முன்புதானே? ஆமாம். சூரி, சூரி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ?” என்று கேட்டுக்கொண்டே, அடுத்த பக்கத்துப் பெஞ்சில் கூட்ட நெருக்கடியிலே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த பேர்வழி, என் அருகிலே வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். அவருக்கு வயது நாற்பத் தைந்து இருக்கும். குடுமிதான்; சட்டை கிடையாது. அங்கவஸ்திரத்தை உலைத்து உடம்பைப் போர்த்தி யிருந்தார். 

“சூரிதானே? சூரி. சூரியநாராயணன்! ஆமாம். கேள்விப்பட்டிருக்கிறேன். அடாடா!” என்றார் ஸ்ரீமான் வெற்றிலை பாக்கு. 

“அநியாயமாய்ப் போயிட்டான், சார்!” என்றார் அங்கவஸ்திரம், அங்கலாய்த்துக்கொண்டே. 

“என்ன, ஆசாமியே காலியா!” என்று திகைப் போடு கேட்டார், இதுவரை மௌனமாக இருந்த அந்த நேர் வகிடு நண்பர். 

“ஆமாம். அதே நாடகக் கம்பெனியில் யாரோ ஒரு பெண் நடிகையோடு காதல். இதனால் அவனுடைய மனைவியே அவனுக்கு விஷம் வைத்துவிட்டாள்” என்றார் அங்கவஸ்திரம். 

“என்ன அதியாயம் ஐயா இது! சூரி இறந்துவிட் டான் என்கிறீர்களே! இந்த உலகத்துக்குத்தான் நாக்கில் நரம்பு கிடையாதா?” என்றார் பெஞ்சின் ஓரத்தில் இதுவரை ஒதுங்கிக் கிடந்த ஒரு ஒட்டிலி. 

‘வெற்றிலை பாக்கு’ இப்பொழுது பேசினார்: “சூரி இறக்கவில்லை; இன்னும் உயிரோடுதான் இருக்கிறான். இருந்தும் என்ன பிரயோஜனம்? இறந்த மாதிரிதான்!” என்றார் ஒரு தீர்மானத்தோடு. 

“அப்படியென்றால்?” 

“அவனுக்குப் பக்ஷவாதம் வந்து கை கால் அசைக்க முடியாமல் போய்விட்டது.” 

பக்ஷவாதம் என்றதும் சீர்திருத்தவாதிக்குப் பிடி கிடைத்துவிட்டது. “பவாதந்தானே? இருக்கும், நிச்சயம் இருக்கும். இந்த நடிகர்களுக்கே எப்பொழுதும் நான் சொல்லுகிற புத்திமதி ஒன்று உண்டு: ‘தம்பிகளா! உடம்பை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு காலைக் கையை அடித்துக் கொள்ளாதீர்கள்’ என்று. நம்முடைய வார்த்தையை எவன் கேட்கிறான், ஸார்? இந்த ஒரு காரியத்துக்காகவாவது அடுத்து வருகிற தேர்தலில்…” 

நேர் வகிடு நண்பர் சிரித்தார். 

“என்ன சிரிக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா சூரியைப் பற்றி?” என்று கேட்டேன். 

“தெரியும். ஆனால் எனக்குத் தெரியாத விவரங்களை எல்லாம் இவர்கள் சொல்லுகிறார்கள். அதனால்தான் ஆவலோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.” 

“அப்படியானால் உங்களுக்குச் சில விவரம் தெரியுமோ?” 

“தெரியும். அதெல்லாம் அவனுடைய மரணத்துக்கு முன்பு நடந்தவை.” 

“அப்படியானால் சூரிக்கு அவன் மனைவி விஷமிட்டது உண்மைதானா?” என்று கேட்டேன். 

அவர் சொன்னார் : 

சோக நடிகர் சூரியின் வாழ்வே ஒரு சோக நாடகந்தான். ஆனால், உலகம் அவரைப்பற்றிச் சொல்லுகிற இந்த வதந்திகளைப் பார்த்தால் அது வெறும் சோகம் மட்டும் இல்லை; ஹாஸ்யமாகவும் இருக்கிறது. 

சோக நடிகர் சூரிக்குப் பிரமாதமான புகழ். அவர் நடிக்கிறார் என்றால், ஆயிரக்கணக்கான ஜனங்கள் அடிபிடி போட்டுக்கொண்டு கொட்டகையை நிரப்பி னார்கள். ‘சோக சிகரம்’ என்றும், ‘சோக மன்னன்’ என்றும், ‘சோக சக்கரவர்த்தி’ என்றும், அவர் நாடக வானிலே பற்பல பட்டங்களுடன் பறந்து கொண்டிருந் தார். ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கையில் மட்டும் ஒரு குறை. 

சோக நடிகர் சூரியைத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் நண்பர்களுக்கு ஒரு பெருமை. அவர் தங்களுக்கு உறவு என்று கொண்டாடுவதில் பந்துக் களுக்கு அலாதி இன்பம். ‘அவர் எங்கள் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்’ என்று விளம்பரப் படுத்திக் கொள்வதில் பெரிய மனிதர்களுக்கு ஒரு திருப்தி. ஆனால், அவர் சொந்த வாழ்க்கையில் மட்டும்…! 

அவர் பெயரை வைத்து ஆயிரக்கணக்கில் சம்பாதித் தார் நாடக முதலாளி. ஆயிரக்கணக்கான ரஸிகர்கள் அவர் நடிப்பை வியந்தார்கள். ஆயிரம் ஆயிரம் மக்கள் அவர் நடிப்பைக் காண நூற்றுக்கணக்கான மைல்கள் தாண்டி வந்தார்கள். ஆனால் அவருடைய சொந்த வாழ்க்கையில் மட்டும் அப்படி என்ன குறை அவருக்கு? 

அவருடைய நடிப்பைப் பார்த்து ஒரு நாள்கூட ரஸித்ததில்லை அவருடைய மனைவி! 

ஹரிச்சந்திர மயான காண்டத்தில் பிணத்தின் புகைக் குமைச்சலுக்கு மத்தியில் சந்திரமதி நின்று பிரலாபிப்பதையும், கடமை என்பதில் சொந்த மனைவியைக்கூட லட்சியம் செய்யாமல் கையிலே தடிக் கம்பு தாங்கி அவன் காவல் செய்து அமருகிறதையும் கண்டு களித்து, நடிப்பின் அந்த சோக எல்லையிலே நின்று, கூடை கூடையாகச் சூரியின் மேலே மலர்களைச் சொரிந்தது மனிதர் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்து ஒரு நாளாவது அவருடைய மனைவி அந்தப் பெருமையைக் கண்டு அனுபவித்து அறியாள்! 

அவருடைய வாழ்க்கையில் இது ஒரு பெரிய குறை என்று ‘உலகம்’ நினைத்தது. ஆனால் அவருக்கு என்னவோ அப்படிப் படவில்லை. என்றாலும், இந்த ‘உலகம்’ இருக்கிறதே, இது சும்மா இருக்குமா? 

நண்பர்கள் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார்கள். அவருடைய உறவினர்கள் எல்லாம் தூரம் தொலைவிலிருந்து வந்து, அவருடைய வீட்டிலே தங்கி, அவரோடு இருந்து சாப்பிட்டுவிட்டு நாடகத்துக்குப் புறப்படுவார்கள். அவளையும் அழைத்துப் போக அவர்கள் துடித்தார்கள். அவள் மட்டும் ஏன் இப்படி வீட்டில் அடைந்து கிடக்க வேண்டும்? 

“இது நீதியா? மனைவியை நடத்துகிற முறையா இது?” என்று கேட்டது ‘உலகம்!’ 

உலகம் என்ன? அவருடைய மனைவியே ஒரு நாள் அவரைக் கேட்டு விட்டாள்! 

சூரிக்கு ஒன்றும் ஓடவில்லை. என்னென்னவோ சொல்லி இதுவரை நாட்களைக் கடத்தி விட்டார். இனி மேல் தப்புவது முடியாது என்று ஆகிவிட்டது. அவள் பேசாமல் இருந்தாலும் இந்த மனித சமூகத்தினால் அப்படி இருக்க முடியவில்லை. தன் கணவனுடைய திறமையை அவள் பார்த்து வியக்க வேண்டும் என்பதில் உலகுக்கு அத்தனை அக்கறை! “உறவினம்” என்ற ஒன்று அதற்காகவே கச்சை கட்டி நின்றது. என்ன செய்வார், பாவம், சூரி? அவரால் தப்பிக்க முடியவில்லை. 

ஹரிச்சந்திரன் நாடகம் ஒரே ஆர்ப்பாட்டமாக நடந்தது. அந்தப் பெரிய கொட்டகையில் ஐயாயிரத் துக்கும் மேலான ஆடவர் பெண்டிர் குழந்தைகள் ‘ஜிவ்’ என்று மொய்த்து நின்று கை தட்டினார்கள். வந்தனோப சாரம் சொல்ல எழுந்த நகர மன்றத் தலைவர், அன்று சூரி அவர்களுக்குச் ‘சோக சிற்பி’ என்று ஒரு புதிய பட்டமே வழங்கிவிட்டார். 

நாடகம் முடிந்ததும், ஜனத் திரள் சூரியையும் அவருடைய மனைவியையும் சூழ்ந்து நின்றுகொண்டு, வெகு நேரம் வரை வீட்டுக்குப் போக முடியாமல் செய்தது. அந்த நெருக்கடியைச் சமாளித்துக்கொண்டு, ஒரு வகையாக அவர்கள் வீடு திரும்பியபோது மணி மூன்று. 

களைப்போடு வந்து படுத்தார் சூரி. காலையில் அவர் எழுந்தபோது மணி பத்து அடித்துவிட்டது! 

“லக்ஷ்மி!” என்று கூப்பிட்டார். வழக்கம் போல் காப்பி டம்ளருடன் அவரை எழுப்ப அன்று அவள் வரவில்லை. 

லக்ஷ்மி இன்னும் எழுந்திருக்கவில்லை. உள் கூடத்தில் படுத்திருந்தாள். ஆனால், உறக்கம் இல்லை. அவளுக்குக் கடுமையான ஜுரம்! 

சூரி எழுந்து வந்து பார்த்தார். லக்ஷ்மியின் உடம்பைத் தொட்டார். நெற்றியெல்லாம் நெருப்பாகக் கொதித்தது. 

“உடம்புக்கு என்ன லக்ஷ்மி?” என்று கேட்டார் சூரி.

“ஒன்றுமில்லை. நேற்று ராத்திரி நான் நாடகம் பார்க்க வந்திருக்கக் கூடாது.” 

லக்ஷ்மிக்குக் கண் கலங்கியது. சூரி திகைப்பிலே நினைவற்று நின்றார். 

“அந்த மயானத்தில், ஒட்டி உலர்ந்து போன பஞ்சைக் கோலத்தில், கந்தைத் துண்டு கட்டிய நிலையில் உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்கு எப்படியோ இருக்கிறது. உண்மையாகச் சொல்லுங்கள், நீங்கள் தினமும் இப்படித்தான் மேடையில் நிற்கிறீர்களா?” 

“ஆமாம், அதனால் என்ன?” 

“உங்களுடைய இந்த அலங்கோலத்தைப் பார்த்தா ஜனங்கள் இப்படிச் சந்தோஷப்படுகிறார்கள்? என்ன கேவலமான உலகம் அது!” 

“லக்ஷ்மி! அதெல்லாம் நாடகம்-கலை.” 

“கலையாவது, மண்ணாங்கட்டியாவது! ஆயிரம் பெண்கள் இருந்தார்களே அந்தக் கூட்டத்தில், ஒருத்திக் காவது மனசில் துளி ஈரம் இல்லையா? ஒருத்திக்காவது புருஷனுடைய அருமை தெரியாதா? கை தட்டுகிறார்களே கை…” என்று பொங்கினாள் லக்ஷ்மி. அவளுடைய கண் ‘சிவு சிவு’ என்றிருந்தது. ஜுரத்தின் வேகத்தில் உதடு படபடத்தது. 

“லக்ஷ்மி! குழந்தை மாதிரிப் பேசுகிறாயே! மேடை யில் நடப்பதெல்லாம் வெறும் கற்பனை…பொய்…” 

“பொய்தான். ஆனாலும் என்ன கொடூரமான பொய்! என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு என்னவோ செய்கிறது!” 

“லக்ஷ்மி! உனக்குக் கலையைப்பற்றி ஒன்றும் தெரியாது. இல்லாததை இருப்பதுபோலக் காட்டுவதுதான் கலை. அது ஒரு தன்னேமாற்றம். நடிப்பவன், பார்ப்பவன் இருவரும் ஒன்று சேர்ந்து செய்கிற ஒரு ரஸமான சதி-ஒரு இனிய மயக்கம். அது நிஜம் இல்லை.” 

லக்ஷ்மிக்குப் படபடப்பு அதிகரித்தது. 

“என்னென்னவோ சொல்கிறீர்களே, இது மேடையா? நீங்கள் பேசுவதையெல்லாம் ஈவிரக்கமில் லாமல் கேட்டுத் தானும் பொய்க் கண்ணீர் வடிக்க மேடையிலேதான் ஒரு சந்திரமதி உண்டு. இது, இது வீடு. நான் உங்களைக் கைப்பிடித்த மனைவி. நாடக மேடைச் சந்திரமதி இல்லை. இந்த வித்தியாசம் உங்க ளுக்கு எப்படிப் புரியும்? ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்க வேண்டும்; மனைவியாய் வாழ்ந்திருக்க வேண்டும்.” 

லக்ஷ்மிக்கு அப்படியே கண் சொருகியது. நினைவு மயங்கி வாழைத்தண்டு போல உடம்பெல்லாம் குளிர்ந் தது அவளுக்கு. மயக்கத்திலிருந்து மீண்டும் நினைவு திரும்புவதற்கு டாக்டர்தான் வரவேண்டியிருந்தது. 

“சூரி! இது நரம்புகள் சம்பந்தப்பட்ட வியாதி. மருந்துகள் அதிகம் வேண்டியதில்லை. உறங்குவதற்கு மட்டும் மாத்திரை கொடுத்திருக்கிறேன். சரியாகி விடும்!” என்று சொன்னார் டாக்டர். 

சூரிக்கு அன்று இரவும் ஸ்பெஷல் நாடகம். கலெக்டர் தலைமையில் ஹரிச்சந்திர நாடகம்! 

லக்ஷ்மி உறங்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது இரவு எட்டு மணி. “லக்ஷ்மி” என்று கூப்பிட்டார். 

“நிம்மதியாக உறங்குகிறாள். உங்களுக்கு நேரமாகிறது. நீங்கள் போங்கள். நான்தான் பக்கத்தில் இருக்கிறேனே!” என்றாள் லக்ஷ்மியின் தாயார். 

எல்லையற்ற சோகத்துடன் சூரி அன்று மேடைக்குச் சென்றார். அவருடைய நடிப்பு அபாரம் என்றும், சோகத்தின் ‘எவரெஸ்ட்’ உச்சியையே எட்டிவிட்டார் சூரி என்றும், உலகம் கொண்டாடிற்று. 

அதே நேரத்தில் இரவு பன்னிரண்டு மணிக்கு – வீட்டிலே லக்ஷ்மி கண் விழித்தாள். 

”அம்மா! அவர் எங்கே?” 

தாயார் அவளுடைய நெற்றியைத் தொட்டுக் கொண்டே பேசினாள். 

“என்னம்மா இது! இங்கேயே இருந்தால் தொழில் நடப்பது எப்படி? இன்று ‘ஸ்பெஷல்’ நாடகம். ஏகப்பட்ட கூட்டம். ஜில்லா கலெக்டர் தலைமையில்…” 

“ஸ்பெஷல் நாடகமா!” என்று கேட்டுக் கொண்டே மறுபடியும் மயக்கமானாள் லக்ஷ்மி. 

நாடகம் முடிந்து சூரி வீட்டுக்கு வந்தபோது லக்ஷ்மிக்கு ஜுரம் கொதியாகக் கொதித்துக்கொண் டிருந்தது. சுய நினைவு இல்லை. 

அத்தனை நேரத்திற்குப் பிறகு அந்த இரவில் டாக்டர் வரவேண்டியிருந்தது! 

“மிஸ்டர் சூரி! என்னை மன்னிக்க வேண்டும். நான் எதிர்பார்த்ததைவிட இது அதிகக் குழப்பமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பெரிய மன அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. என்னிடம் நிஜத்தைச் சொல்லுங்கள். நீங்கள் ஏதாவது காதல் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு விட்டீர்களா?” 

சூரிக்குக் கோபம் வந்தது. 

“நாடகக்காரன் என்று நினைத்து விட்டீர்கள். அப்படித்தானே? மனைவிக்கு வியாதி என்றால் புருஷன் எங்காவது காதலிலே சிக்கியிருக்க வேண்டும் – அப்படியா?” 

“கோபிக்காதீர்கள்! டாக்டரிடம் எதையும் மறைக்க வேண்டாம். அந்த மாதிரி இல்லையென்றால் உங்கள் மனைவிக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வருவானேன்?” 

மெய்யாகவே டாக்டருக்கு அது புரியவில்லை! “ஐஸ் வையுங்கள்; நாளை மறுபடி வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர். 

லக்ஷ்மிக்கு இரவு முழுதும் ஜன்னியின் வேகம்; ஏதேதோ புலப்பம். ‘மயானம்,’ ‘தீ,’ ‘அவரா’- இப்படி ஏதேதோ பிதற்றல். 

டாக்டர் காலையில் வந்தார். பரிசோதனைகள் நடத்தினார். ஒரு ஊசியைப் போட்டார். இரண்டு மாத்திரையைக் கொடுத்தார். போய் விட்டார். அவருக்கு வியாதி பிடிபடவேயில்லை. 

அன்று திங்கட்கிழமை. நாடக விடுமுறை நாள். சூரி எங்கும் போகவில்லை. மனைவியின் அருகிலேயே இருந்தார். அன்று இரவும் முன்னைப் போலவே பன்னிரண்டு மணிக்குக் கண்ணை விழித்தாள் அவள். 

“அம்மா, அவர் எங்கே?” என்று கேட்டாள். 

“இதோ இருக்கிறேனே பக்கத்தில்!” என்றார் சூரி. 

“எங்கே?” 

சூரி அவள் எதிரில் வந்தார். 

“இங்குதான் இருக்கிறீர்களா? அப்பா…கண் குளிர எப்படி இருக்கிறது இப்பொழுது! உங்களைக் கொண்டு அந்த மாதிரி அலங்கோலத்தில் நிறுத்தினார்களே. ஐயோ! அதை நினைத்தாலே…” 

லக்ஷ்மிக்கு மறுபடியும் மயக்கம் வந்துவிட்டது. டாக்டருக்கு ஆள் அனுப்பினார் சூரி. 

“டாக்டர்! உங்களுடைய வைத்திய சாஸ்திரம் எல்லாம் இவ்வளவுதானா?” என்று கேட்டார் சூரி. 

“வைத்தியத்தைக் குறை சொல்லாதீர்கள். உலகில் எத்தனையோ விந்தைகளைச் செய்திருக்கிறது நவீன வைத்திய முறை. நம்முடைய நாட்டிலும் சித்த வைத்தியம் என்றும் ஆயூர்வேதம் என்றும் உண்டு; யூனானி முறையும் பிரசித்தமானதுதான். ஆனால், எந்த வைத்திய முறையிலும் மன நோய்க்கு மருந்து கிடை யாது. யோசித்துப் பார்த்தால் மனம் என்பதும் ஒரு வகையான உடல்தான். அந்த நுட்பமான உடலுக்கு நாடி கிடையாது. அந்த நாடியைத் தெரிந்தவனும் வைத்திய உலகில் இல்லை. பாசம் என்பது இதயத்துக்கு இதயம் வேறுபடுகிறது. அதை எப்படி வகைப்படுத்தித் தெளிவது?” 

கம்முகிற குரலில் சூரி மனைவிக்கு ஜுரம் வந்த வரலாற்றைக் கூறினார். நீண்ட நேரம் யோசித்துவிட்டு டாக்டர் பேசினார் :- 

“சூரி, நீங்கள் நடிப்பதை விட்டுவிட வேண்டியது தான். நாடகம் என்று சொன்னதுமே ஏற்படுகிற இந்த அதிர்ச்சியை நீக்க வேறு வழியில்லை. நான் என்ன செய்யட்டும்? அளவு கடந்த அன்பு மனசைப் பஞ்சு போல் ஆக்கிவிடுகிறது. அந்தப் பஞ்சு பற்றி எரிவதற்கு சிறிய ஒரு தீப்பொறி போதும் அல்லவா! முதல் நாள் ஏற்பட்ட அனுபவம் அந்த மனசை அப்படிப் பாதித்து விட்டது. மனைவி வேண்டுமா செல்வம் வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.” 

சூரி சொல்லுவார் : “டாக்டர், செல்வத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏதோ இதுவரை சேர்த்தது போதும். ஆனால் கீர்த்தி? உங்களுக்கு உலகம் நாடக மேடையாகத் தெரிகிறது. எனக்கோ நாடக மேடையே உலகமாகத் தெரிகிறது. கலைஞனுக்கு ஒரு செருக்கு – மன்னிக்கக் கூடிய ஓர் ஆணவம் உண்டு டாக்டர். அதுதான் அவனுடைய மூலதனம். கேவலம் பணமில்லை. புகழ் என்றும் சாதனை என்றும் நாடுகிற அந்த ஆணவத்திலேதான் அவனுடைய வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.” 

“என்ன செய்வது! உங்கள் வாழ்க்கையில் கலைஞனுடைய அத்தகைய ஆணவத்துக்கு இனி இடமில்லையே!’” 

சோக நடிகர் சூரி நாடகத்திலிருந்து விலகினார். நாடக முதலாளி கண்ணீர் வடித்தார். ரஸிகர்கள் கண்ணீர் வடித்தார்கள். உலகமே கண்ணீர் வடித்தது. ஆனால் அவருடைய மனைவி மட்டும் முகம் மலர்ந்தாள்! 

“உலகமோ அவர் நடித்தபோதும் கண்ணீர் வடித்தது. நடிப்பை நிறுத்தியபோதும் கண்ணீர் வடித்தது. ஆனால், அவருடைய மனைவி “அப்படியா?” என்று கேட்டார் அந்த நேர் வகிடு நண்பர், கதையை முடித்துக்கொண்டே. இதுவரை அவருக்கு அருகே பெஞ்சின் கோடியில் மௌனமாக உட்கார்ந்திருந்த அவருடைய மனைவி இதைக் கேட்டதும் சிரித்தாள். 

“அவருடைய மரணத்துக்கு முன்பு நடந்த சம்பவம் என்றீர்களே. அவருடைய மரணத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே நீங்கள்!” என்றார் அந்த அங்கவஸ்திர நண்பர். 

“சரிதான், இத்தனையும் அவருடைய மரணக் கதை தானே! சோக நடிகர் சூரி மடிந்து விட்டார். அதோடு அவருடைய மனைவியின் சோகமும் மடிந்து விட்டது. இப்பொழுது உங்கள் எதிரே இருப்பவர் சோக நடிகர் சூரி இல்லை, வெறும் சூரிதான்!” 

ரயில் நின்று பெருமூச்சு விட்டது. போய்ச் சேர வேண்டிய ஸ்டேஷனோ இல்லையோ, அங்கவஸ்திர நண்பர் வேகமாக இறங்கிவிட்டார்! ஒரு நிமிஷ நேரத்தில் அவரைத் தொடர்ந்து பெஞ்சே காலியாகிவிட்டது. சோக நடிகர் சூரியிடம் சற்று முன்பு வரை உலகத்துக்கு இருந்த அபாரமான அக்கறை அந்த ஒரு நிமிஷ நேரத்தில் அப்படியே மாயமாய் மறைந்து போய்விட்டது! சூரியே எதிரே உட்கார்ந்திருக்கும்போது, இனி அவரைப் பற்றி வம்பளக்க இடமில்லை அல்லவா! 

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

– மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *