கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 131 
 
 

(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

செல்லக்காள் ஏனோ சில நாளாக ராமாயி வீட்டுப் பக்கம் வருவது இல்லை. முன்பெல்லாம் இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல் வராமல் இருக்க மாட்டாள். இங்கே வந்து எங்கெங்கே என்ன நடக்கிறதோ அதையெல்லாம் விஸ்தாரமாகப் பேசுவாள். அவள் ரொம்பவும் ராமாயிக்கு நம்பிக்கையுள்ளவள். இங்கே பேசுவதை வேறு எங்கும் சொல்ல மாட்டாள். அதனால் இவர்களுக்குள் எப்பொழுதும் மனஸ்தாபம் வருவதற்கிடமில்லை. ராமாயிக்குச் சில சமயம் ஆறுதல் சொல்லவே இங்கு வருவாள். அதோடு சில விசேஷ நாட்களில் ராமாயி பண்ணும் பலகாரங்களை ருசி பார்க்கவும், சாதாரண நாட்களிலும் குழம்பு, பொரியல் தினுசுகளுக்கு உப்பு, காரம் சொல்லவும் வரத் தவற மாட்டாள். செல்லக்காள் வீடு தென்புறம் அடுத்ததுதான். ஒரே ஒரு சுவர். அதுவும் கொஞ்சம் இடிந்த குட்டிச் சுவர் தான் இவர்களிருவருக்கும் மத்திய பாலம். அநேகமாக அந்த மதில் ஓரத்தில் நின்று கொண்டு தான் இருவரும் பேசுவார்கள். பக்கத்து நடைக் கதவைத் திறந்து கொண்டு அந்தப்புறம் போவதில் சலிப்பு ஏற்படும் போது ராமாயி இந்த முறையைக் கையாள்வாள். செல்லக்காளும் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டே ‘உனக்குப் பல ஜோலியிருக்கும், வரமுடியாது. எனக்கும் வேலை தலைக்கு மேலிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே மணிக்கணக்காகப் பேசுவாள். இப்படிப்பட்ட அருமையான சிநேகிதையைக் காணாவிட்டால் யாராயிருந்தாலும் என்ன சங்கதி என்று தெரிய முயற்சி செய்வார்களல்லவா? 

ஒரு நாள் ராமாயி இலை கொண்டு வந்து போடும் ஆண்டி பையனைக் கேட்டுப் பார்த்தாள். 

அவன், “என்னமோ தெரியலீங்க. ஆனா, அவுங்க மகள் ஊரிலிருந்து வந்திருக்காங்க. மகளுக்குத்தான் ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு உ உடம்புக்கு வந்திருமே! உங்களுக்குத் தெரிஞ்சதுதானே” என்றான். 

இந்தப் பேச்சிலிருந்து செல்லக்காள் ஏன் வரவில்லையென்று சுத்தமாகத் தெரியாவிட்டாலும், மகள் நோயுற்றிருக்கிறாள் என்றால் தாயார் வேண்டிய சிசுருஷை செய்து கொண்டிருப்பாளல்லவா? அதனால் வர நேரமில்லை என்ற அர்த்தம் கலந்திருந்தது. இதையெல்லாம் யோசித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர்களுக்கு இது ரொம்ப சுலபம். இன்னும் சொன்னாலும் தெரிந்து கொள்வார்கள். ஊரில் உள்ள பண்டாரங்கள் மாத்திரம் அல்ல; மற்ற சாதிகளும் எதிலும் கவுண்டர்களிடம் பிடி கொடுத்து விடுகிற மாதிரி பேசிச் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்காது அவர்கள் பேச்சு. ரொம்ப ரொம்ப சாதுரியமாகப் பதில் சொல்லுவதிலும், தளுக்காக நடந்து கொள்வதிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் கூடிக் கொட்டம் அடிக்கும் போது பார்க்க வேண்டும் அந்த வேடிக்கையை! 

ராமாயி ஒரு நாள் மதில் புறம் போய் எட்டிப் பார்த்தாள். அங்கு பின்புறத்தில் ஒரு கட்டில் போடப்பட்டு பாயும் விரித்திருந்தது. தலையணை காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்று இன்னும் ஒன்று எச்சாக இருப்பதிலிருந்து செல்லக்காளின் மகளே தன் படுக்கையையும் ஊரிலிருந்து தயாராகக் கொண்டு வந்து விட்டாளென்பது விளங்கிற்று. அதே சமயம் செல்லக்காள் தன் மகளை உள்ளேயிருந்து கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். “ஏக்கா, உடம்புக்கு எப்படியிருக்குது? எனக்கு இத்தனை நாளாத் தெரியாது போ” என்றாள் ராமாயி. 

செல்லக்காள் தலையை நிமிர்ந்து பார்த்து, “ஐயோ, நீயா ஆயா! ஆரோன்னு இருந்தேன்; ஆமாத்தா, இந்த பாழு முண்டைக் காச்சல் தான் ருபது நாளா கனலாக் காயுது” என்று வாய்மேல் கையை வைத்தாள். 

“உம்! என்னத்தைப் பண்ணிப் போடுது? எதாச்சும் மருந்து கொடுக்கறீங்களா?” என்றாள் ராமாயி. 

“ஆமாம், கொடுத்துக்கிட்டுத்தான் வருது. என்ன பண்றது? இதை விட்டுவரத் துளி கூட நேரமில்லெ. இங்கேயே காத்துக்கிட்டுக் கிடக்கிறேன். அதுதான் உங்க வளவுப் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியலெ.” 

“அதனாலே என்ன. இது நல்லானாப் போதும்” என்று அங்கலாய்த்தாள் ராமாயி. 

ஆனால் அவள் மனதிற்குள், ‘ஐயோ பாவம், இது எங்கே நன்றாகப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள். 

செல்லக்காள் மகளுடைய சமாச்சாரம் குழந்தையிலிருந்தே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. சதா நோய்வாய் படுவதே அவள் தொழிலாய் விட்டது. அவள் ரத்தத்திலே அணு அணுவாய் நோய்க் கிருமிகள் கலந்து தேகம் பூராவும் வியாபித்து விட்டதால் கஷாயமும், பத்தியமும், அதுவும், இதுவும், எதுவுமே அவளைக் குணப்படுத்து வதாய்க் காணோம். அவள் கலியாணம் செய்து கொண்டு ஒரு சுகத்தையும் காணவில்லை! ஒரு காடு, தோட்டம், பருத்தி பம்பலுக்குப் போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால் தன் கட்டினவனுக்கும் சந்தோஷமா யிருக்கும். புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். இந்த நோக்காட்டுச் சீவனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும்? அதற்குத் தான் பத்திலே, பதினைஞ்சிலே தாய் வீட்டிற்கே வந்துவிடுவது. 

செல்லக்காள் சொல்வது போல, “அவள் தலையிலே இதையெல்லாம் காண எழுதியிருக்கிறதாக்கும்.” 

“கால் வலிக்குமே, என்னேரம் நின்னபடியிருப்பாய்? எனக்குத் தான் வர முடியல்லெ. போகுது. இதென்ன ராமாயி ஊருக்குள்ளே ‘கசமுச’ன்னு பேசிக்கிறாங்களே, நிசம்தானா?” 

“என்ன அது?” 

“அது என்னன்னு சொல்றது போ, அந்த மானங்கெட்ட பேச்சை!” என்று செல்லக்காள் நிறுத்தினாள். 

ராமாயிக்கு உள்ளுக்குள் வருத்தமும், கோபமும் பொங்கிக் கொண்டு வந்ததானாலும், “என்ன அக்கா வாயை உட்டுச் சொன்னாத் தெரியுமா? சொல்லாது போனால்தான் போ” என்று அந்தப் பேச்சை அப்படியே மறைக்கப் பார்த்தாள். 

“நாம் இருந்திடலாம்; ஆனா உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா?” என்று இவள் உள் கருத்தை அறிந்தவள் போலச் செல்லக்காள் பேசினாள். 

“என்னம்மோ நீ பேசறது மூடு மந்திரமாயிருக்குது. சரி, நேரமாச்சு மாட்டுக்குத் தண்ணி வைக்கோணும்” என்று கிளம்பினாள். 

“என்ன இருந்தாலும் நாகம்மாள் இப்படியா கெட்டுத் திரிவா!” என்று செல்லக்காள் பேசி முடிப்பதற்குள், “எம் பேச்சை ஆராச்சும் எடுத்தால் கையிலிருப்பது தான் கிடைக்கும்” என்று நாகம்மாள் சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த ராமாயி நடுங்கிப் போனாள். அப்போது நாகம்மாளுடைய கையில் விளக்குமாறு வைத்திருந்தாளாகையால் அந்தப் பேச்சு அப்படியே அடங்கிவிட்டதென்பதையும், செல்லக்காள் இழுக்குப் பொடுக்கெனப் பேசவில்லையென்பதையும் தெரிவிப்பதே போதுமானது. 

அத்தியாயம் – 11

இந்தச் சம்பவம் நடந்த சில தினங்கள் வரை குடும்பம் எவ்வித ஆட்ட அசைவுமின்றிச் சென்று கொண்டிருந்தது. சில சில சமயங்களில் புயல் கிளம்புவதற்கு அறிகுறி தோன்றும். ஆனால் அதற்குக் காரணபூதமான சந்தமாருதமே நிறுத்திக் கொள்ளும். நாகம்மாளின் இந்த வேகத்தணிவைக் கண்ட சின்னப்பன், ‘ஒரு வேளை நல்ல புத்தி வந்து விட்டதாக்கும்’ என்று ஆறுதலடைந்தான். 

இதற்கிடையில் சோளக்காடு அறுவடை வந்து சேரவே ஊரிலும் இப்பேச்சு சற்று மட்டுப்பட்டது. காலையில் எழுந்திருந்ததும் எழுந்திராததுமாய் காக்கை, குருவி போல் தோட்டங்காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது, வீண் பேச்சுப் பேச நேரம் ஏது. தவிர, கதிர் கொய்யும் போது நான் முந்தி, நீ முந்தி என்று அவளவள் காரியமாயிருக்கையில் இந்த அத்துவானச் சங்கதியிலா பொழுதைப் போக்குவார்கள்? 

நல்லவேளையாக சின்னப்பன் காரியத்தில் கண்ணாயிருந்ததால் சோளக்காடு ஊருக்கு முந்தி போரடித்து தவசம் கூட மூட்டை ஏறிவிட்டது. இனி பருத்தி வெடிதான் பாக்கி. 

ஒரு நாள் காலை ராமாயி அடுப்படியிலே வேலை ரொம்ப முசுவாகச் செய்த வண்ணமிருந்தாள். நாகம்மாள் தயிரைக் கடைந்து, மத்து, சட்டி பானைகளையெல்லாம் சீராகக் கழுவி வைத்துவிட்டு அடுக்குச் சந்தில் துணிமணிகளைப் புரட்டிக் கொண்டிருந்தாள். கூடையைத் தூக்கி வைப்பதையும், குண்டாவை நகர்த்துவதையும், உறிச்சட்டியை துளாவுவதையும் பார்த்தால் அன்றைக்கு வேலைகள் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருப்பது தெரியும். “முத்து, கடுகை எடுத்துத் தரச் சொல்லி வாங்கியா, கண்ணு” என்று ராமாயி சொன்னாள். நாகம்மாள் தானே கடுகுச் சொம்பை எடுத்துக் கொண்டு எண்ணெயும் மொண்டு போனாள். “கத்திரிக்காய் இன்னும் அரியலையா?” என்று நாகம்மாள் கேட்டாள். 

“இல்லையக்கா. இதோ அரிந்து வைக்கிறேன்.” 

“இல்லை ஆயா; இந்தா, நீ கொஞ்சம் சாணியைப் போட்டு அந்த சின்ன வீட்டை மாத்திரம் வழிச்சிரு. இன்னைக்கு வெள்ளிக் கிழமையல்ல; நான் பூரா பாத்துக்கிறேன்” என்றாள் நாகம்மாள். அப்புறம் “சும்மா ரண்டு சொம்பு தண்ணியாலேயே மெழுகிவிட்டு கண்மூடி விழிப்பதற்குள்ளே வாயா. பருத்திக் காட்டுக்கு முன்னாலேயே போயிடலாம். தோட்டம் போகிறபோது சொல்லிட்டுப் போனாங்க” என்றாள். 

ராமாயிக்கு ஒரு புறம் சந்தோஷம். இந்த மாதிரி தன்னிடம் சந்தோஷமாக நாகம்மாள் பேசி எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டன. கலியாணமான பத்தடியில் எவ்வளவோ கொஞ்சிக் குலாவி அன்பாக ஆதரவாகப் பேசியிருக்கிறாள். அதற்குப் பிறகு, அதுவும் சமீப காலத்தில் வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவும்தான். பழையபடி இன்று அந்த சிரித்த முகத்துடன், மிருது வசனத்தைக் கேட்க அவளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. இதிலிருந்து நாகம்மாள் எப்போதும் கடுகடுத்தவளாக இருக்கவில்லையென்பதும், விதரணை தெரிந்தவள் தான் என்பதும் விளங்கும். பொதுவாக எல்லோர் உள்ளத்திலும் இனிமையும், இளக்கமும், கனிவும், காதலும் பொங்கித்தான் நிற்கிறது. சந்தர்ப்ப பேதங்களினால் சிலர் வேண்டுமென்றே ஹிருதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு விடுகிறார்கள். 

இன்று நாகம்மாள் காட்டும் நயப் பெருக்கு வேறொரு காரணத்தைப் பற்றியது. அது பின்னால் தெரியும். பாம்புக் குட்டி புரண்டு விழுந்து விளையாட வந்தாலும், கொத்துவதைத் தவிர வேறு எதற்காக இருக்க முடியும்? 

நாகம்மாளும் ராமாயியும் பருத்திக் காட்டிற்கு வந்து சேர்ந்த போது மற்ற பெண்களும் தயாராகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களில் முக்கால் வாசிக்கு மேல் இளவயதுடையவர்கள் தான். அவர்கள் புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பைச் சுற்றி மடி கூட்டியிருந்தார்கள். கரண்டைக் காலுக்கு மேல் தூக்கி, கொசுவம் வைத்திருந்த கொரநாட்டு சேலையுடன் நடுநெற்றியில் வாகு எடுத்துச் சிலர் கொண்டை போட்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஈரக்கூந்தலை உலர்த்துவதற்காக கோடாலி முடிச்சுப் போட்டிருந்தார்கள். அவர்களது மினுமினுப்பான உடம்பையும், கரங்களின் உறுதியையும் பார்க்கப் பார்க்க இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். இளமை பூத்து நிற்கும் அங்க வனப்பை, அள்ளி எறிவதைப் போல, சும்மா ஒரு குலுங்குக் குலுங்கி குனிந்து பருத்தி எடுக்கும் போதும், நிமிர்ந்து கம்பீரமாக ஒருவரையொருவர் பார்க்கும் போதும், கலகலவென்று அவர்கள் பேசும் போதும், சிரிக்கும் போதும், திரும்பும் போதும், கால் மிஞ்சிகள் ஒலிக்க நடக்கும் போதும், செடிகளை ஒதுக்கிவிட்டு அவர்கள் முன்னோக்கிச் செல்லும் போதும், அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும், மனதை மகிழ்விக்கும் மாயம் ததும்பி நின்றது. இவர்களெல்லாம் சின்னப்பன் காட்டிற்கு மாற்றுக்கு மாற்று – அதாவது இன்று இவர்கள் காட்டிற்கு வந்தால், நாளைக்கு அவர்கள் காட்டிற்கு இவர்கள் போவது இந்தக் கணக்கில் வந்திருந்தாலும் சொந்த விஷயம் போல அவ்வளவு கண்ணும் கருத்துமாய் காரியத்தில் கவனம் செலுத்தினர். பத்துப் பேர் முன்னுக்குப் பாத்தி தாண்டிப் போகும் போது, ஒருத்தி தளுங்கி விட்டால் சிரிக்க மாட்டார்களா? ‘இவ்வளவுதானே’ என்று கேலிக்கு இடமாகிவிடுமே! எந்த ரோசக்காரிதான் ‘அத்துவானம்’ என்ற பட்டத்தைச் சுமக்கச் சம்மதிப்பாள்? 

இப்படி இளமான்கள் போல் அவர்கள் செடிகளுக்கிடையே துரிசாகப் போய்க் கொண்டிருக்கையில் நாகம்மாள் என்ன செய்கிறாள் என்பதைக் கவனிப்போம். அவள் இரண்டு பத்தி எல்லோருடனும் சரியாகப் போவாள். பின்பு பின் தங்கிக் கொள்வாள். அப்புறம் பருத்தி எடுக்க ஆரம்பிப்பாள். ரொம்ப களைப்படைந்தவள் போல் உட்கார்ந்து கொள்வாள். இவளது தளர்வைக் கண்டு பக்கத்தில் வருவோர் சலித்துப் போய் விட்டாளென்று நினைக்கவில்லை. ஏனென்றால் நாகம்மாளை மிஞ்சி யாரும் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. இதுமட்டுமல்ல, எந்த வேலையிலும் கெட்டிக்காரிதான். ஆனால் இன்று என்ன வந்துவிட்டது? 

“என்ன நாகம்மா? காலில் ஏதாவது கட்டை பட்டுவிட்டதா?” என்றாள் கூட நின்ற பெரியவள். 

ஒருத்தி, “அக்கா, அக்கா இந்த துணியை நனச்சுச் சுத்து” என்று சிகிச்சைக்கு உதவ முன் வந்தாள். க்ஷண நேரத்தில் காடே இவள் பக்கம் வந்துவிட்டது. “நாகம்மாளுக்கு என்ன? நாகம்மாளுக்கு என்ன?” என்ற குரல்களுக்கு எதிரொலிக்கு எதிரொலி கிளம்பியது. இதற்குள் ராமாயி ஓட்ட ஓட்டமாக ஓடிவந்து, “என்ன அக்கா எப்படி இருக்குது? தண்ணி குடிக்கிறயா?” என்று பதற்றத்துடன் கேட்டாள். 

நாகம்மாள் ஒன்றையும் கவனியாதவள் போல, “எப்படியோ வெடுவெடுப்பாய் வருது” என்றாள். காட்டு வேலை செய்கிறவர்களுக் கெல்லாம் சாதாரணமாக ‘வெடுவெடுப்பு’ தான் வருவது வழக்கம். அப்படிச் சொன்னால்தான் உடனே பக்கத்திலிருப்பவர்கள், “அப்படியானால் ஏறுவெயிலில் நிற்கக் கூடாது. நிழலுக்குப் போய் உட்கார்ந்து கொள்” என்பார்கள். இந்த வெடுவெடுப்பிலே, மயக்கம் – தலைச்சுற்றல் வாந்தி – கண்ணடைப்பு எல்லாம் அடங்கியிருக்கிற தென்றால் அவ்வியாதியைப் பற்றி நாம் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை. இதற்குள் ஒரு பெண் ஒரு சொம்பு தண்ணீருடன் ஓடி வந்தாள். ராமாயி அதை வாங்கிக் குடித்தாள். “இந்தாக்கா குடி. வாந்தி வாராப் போலருக்குதா?” என்றாள் துக்கமாக. 

இன்னும் பல குரல்கள் அதே கேள்வியை அதே தொனியில் சற்று ஏற்றியும் இறக்கியும் கேட்டார்கல். நாகம்மாளின் பதில் மௌனம் என்பதைச் சொல்லாமல் விட்டுவிடுவதே மேல். ஆனால் இந்த நடிப்புக்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும் பார்ப்போம். 

நாகம்மாள் ஒரு வாய் தண்ணீரைக் குடித்துவிட்டு, “போதும், போதும், சற்று தேவலாம். நீயே சகலத்தையும் பார்த்துக் கொண்டு வந்து சேரு. முத்தாயா செடி கொடிகளுக்குள்ளே போகப் போறாள் கவனமாகப் பாத்துக்க. நான் ஊட்டுக்குப் போறேன்” என்று ராமாயிடம் கூறிவிட்டுக் கிளம்பினாள். தோட்டத்தைத் தாண்டி அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும், நாகம்மாளுக்கு இந்த ஓட்ட நடை எங்கிருந்து வந்ததென்று கேட்காதீர்கள்! 

அத்தியாயம் – 12

நாகம்மாள் நேராக வீட்டிற்கு வந்ததும் தாவாரத்தில் சொருகியிருந்த சாவியை எடுத்து மளமளவென்று பூட்டைத் திறந்து உள்ளே போனாள். உடனே அடுக்குச் சந்தருகே எதையோ எடுக்கப் போனவள் அருகிலிருந்த கண்ணாடிச் சுவற்றின் மேல் கை வைத்தாள். அவள் கை பட்ட வேகத்தில் அங்கிருந்த மயிர்கோதி சொத்தென ஒரு மண்பானை மேல் விழுந்தது. அந்தப் பானை உடைந்ததா, தூர் விட்டதா என்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு பானைக்குள் கையைவிட்டு என்னவோ துணியில் சுற்றியிருந்த முடிச்சை எடுத்துக் கொண்டு கதவைக் கூடச் சரியாகச் சாத்தாமல் ஆற்றங்கரைப் பக்கம் நடந்தாள். கீழே மண் வெகுவேகமாகச் சூடேறிக் கொண்டிருந்தது. சுற்றுப்புறமெங்கும் ஒரே மௌனம், நிசப்தம். ஒரு வீட்டிலும் துளி கூடச் சத்தம் கிடையாது. திண்ணையில் படுத்திருக்கும் இரண்டொரு கிழவர்கள் இருமுவதுதான் லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நேரம் தப்பிக் கூவும் சேவல்களைத் தவிர அப்போது அரவம் செய்ய யாருமில்லை. சின்னஞ் சிறுசுகளும் தங்கள் தாயாரின் பின்னாலேயே காடுகளுக்கு ஓடிப் போயிருந்தன. நாகம்மாள் ஆற்றுக்குப் போகும் பாதையை விட்டு மேட்டில் ஏறி நடந்தாள். காலில் செருப்பில்லாததால் அவ்வப்போது முட்கள் குத்தும் போது நிற்க வேண்டியிருந்தது. இச்சிறு தாமத்தையும் பொறுக்காது அவள் முகத்தைச் சுளிப்பதிலிருந்தும், மேலெல்லாம் வியர்வை வழிவதிலிருந்தும், அவளுடைய பாய்ச்சல் நடையிலிருந்தும், ஏதோ முக்கியமான காரியமாகத்தான் போகிறாளென்பது விளங்கும். ஆனால் பருத்திக் காட்டில் ‘வெடுவெடுப்’பென்று வேஷம் போடுவானேன்? இப்போது எங்கே போகிறாள்? வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதென்ன? என்ற கேள்விகளுக்கு ஒரேயடியாகப் பதில் சொல்லுவதென்பது சிரமம். ஆனால் உச்சிவேளையில் ‘மடுவுத் தோப்பு’க்குப் போகிறாள் என்பதையும் தெரிவித்து விடுகிறோம். 

மடுவுத் தோப்பு என்ற பெயரைக் கேட்டவுடனே அந்தப் பக்கத்திலுள்ள பெரியவர்களும் ‘அப்பாடா’ என்று வாய்மேல் கை வைப்பார்கள். வாசக நேயர்களுக்காக அந்த இடத்தைப் பற்றிச் சிறிது வர்ணிக்க வேண்டியிருக்கிறது. 

ஆற்றுக்கப்பாலே வெங்கக்கற் காடு; வெகு தூரத்துக்குப் பயிர், பச்சை சாகுபடிக்கே லாயக்கற்று நீண்டு கிடக்கிறது. அதற்கப்புறம் ஊசிப் புல் என்ற ஒருவகைப் புல் படர்ந்திருக்கிறது. சாதாரணமாக அங்கெல்லாம் மழைக் காலத்தில் புல் இன்னும் அடர்த்தியாக தளிர்த்து நிற்கும். அப்புற் காட்டிலே மாடு கன்றுகளை மேயவிடுவது வழக்கம். அக்காட்டிற்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் ஒரு அடர்ந்த சோலை. பல ஜாதி மரங்கள் ஒன்றோடொன்று இணைந்து நீண்டு வளர்ந்திருக்கும். அந்த இடம் சதா இருண்டிருக்கும். ஒரு புறம் ஆறு, மறுபுறத்தில் விஸ்தாரமான மேட்டங்காடு. எதிராக பின் இருபுறங்களிலும் சிறு சிறு குன்றுகள். இப்படியாக அந்த மடுவுத் தோப்பு மனிதப் போக்குவரத்துக்கே அதிகம் உபயோகப்படாத நிர்மானுஷ்யமான பூமியாக இருந்து வந்தது. யாராவது தப்பித் தவறி பண்டம் பாடிகளை விட்ட சிறுவர்கள் கூட உள்ளே செல்ல அஞ்சுவார்கள். இல்லாத பொல்லாத மிருகங்களெல்லாம் அங்கு உலாவுவதாக கதைகள் உண்டு. இன்னொரு முக்கியமான பயம் அங்கு என்னவென்றால் கரைக்கு எதிர்ப்புறத்திலுள்ள சுடுகாட்டுப் பேய்களெல்லாம் வாசம் செய்வது அந்த இடத்தில் தான் என்று. ஆனால், கெட்டியப்பன் போன்றவர்கள் இதையெல்லாம் தூசி போல ஊதி விட்டு ‘நெறு, நெறு’ என்று உள்ளே நுழைவார்கள். அப்படித் தைரியமாக நுழையாவிட்டால் அந்த இருண்ட பிரதேசத்தில் அவ்வளவு அடுப்புக் கற்களும் சட்டிகளும் எலும்புகளும் ஏது? ஒரு பட்டியிலே ஆடு திருட்டுப் போய்விட்டதென்றாலோ, வீட்டிலிருந்து கோழி களவு போய்விட்டதென்றாலோ, இன்னும் அரசாணிக்காய், வாழைக்காய், அது இது எல்லாம் காணாமல் போன அடுத்த நாள் நிச்சயம் இந்த இடத்தில் ஏதாவது அடையாளம் இல்லாமல் போகாது. 

நாகம்மாள் அங்கு தான் இப்போது முக்காட்டை எடுக்காமல் மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தாள். காட்டு யானையே எதிரில் வந்திருந்தாலும் நிறுத்த முடியாத அவளைப் பக்கத்தூர் உபாத்தியாயர் நிறுத்தி விட்டதுதான் ஆச்சரியம். ஆனால் பலத்தில் யானையை தோற்கடிக்க முடியாவிட்டாலும், அப்புலவர் பெருமான் இரண்டு யானைக்கு ஒரே சமயத்தில் குழி வெட்டக்கூடிய அவ்வளவு சமர்த்தர். “வாத்தியாரே அவசரமாகப் போறேன்” என்று நாகம்மாள் நகர்ந்தாள். 

“ரொம்ப அவசரமா?” 

“ஆமாம், ஆமாம்” என்று கூறிக் கொண்டே நிற்காது போனாள். 

“ஒரு பேச்சு” என்று கெஞ்சும் குரலில் பின் தொடர்ந்தார். 

“இல்லை வாத்தியாரே, வெகு அவசரம்.” 

“நானும் ரண்டு வார்த்தையில் முடித்துடறேன். ஒரு நாலு வள்ளம் கம்பு வேணும். ஆனால் யாரிருந்தாலும் நம்ம வளவிலே சொல்லணுமா? அதென்னமோ நான் புறப்பட்ட வேளை, கும்பிடப் போன சாமி குறுக்கே வந்தது போல” என்று அடுக்கிக் கொண்டே ஓடி வந்தார் புலவனார். 

அந்தச் சமயத்தில் நாலு வள்ளமல்ல, நாற்பது வள்ளம் கேட்டிருந்தால் கூட நாகம்மாள் கொடுப்பதாக வாக்களித்திருப்பாள். ஏனென்றால் அவ்வளவு அவசரத்திலிருந்தாள் அவள். 

“அதற்கென்ன காலையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அவரை வழியனுப்பினாள். பின்னர் மேட்டிலிருந்து இறங்கி ஆற்று மணலில் அடி எடுத்து வைத்தாள்.

– தொடரும்…

– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *