கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 444 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அகல்யாவை அவள் புகுந்த வீடு ‘ஓஹோ’ எனக் கொண்டாடியது. அவள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பாராட்டி சிலாகித்தார்கள். அகல்யா பூரித்துப் போனாள். 

அவளது தாய் வீட்டிலும் முக்கால்வாசி வேலைகளை முத்த பெண்ணான அவள்தாள் செய்வாள். வீட்டைச்சுத்தமாகப் பேணி, எளிய பதார்த்தமானாலும் ருசியாகச் சமைத்து, விருந்து வரும் போது பரபரவென்று சுழல- 

“என் வலது கை அகல்யா பொண்ணுதான். நான் நினைக்கறதைச் செய்தே முடிச்சிடுவா. மீதி நாலும் படிப்பு. விளையாட்டுன்னு அதுங்க போக்கிலே போவுதுங்க. வீட்டு மேல்வேலைக்குக் கூட ஆள் வச்சுக்கலை நான்” என்று அம்மா வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லுவாள். 

அம்மாவின் சொற்களில், பிறரின் வியப்பில் அகல்யா கர்வம் தலைதூக்க வீட்டில் ஒரு ராணி போல வலம் வந்தாள். ஆளும் பார்வையாயிருக்க, அவளின் சுறுசுறுப்பே அவளுக்கு விரைவில் ஒரு நல்ல புருஷனைத் தேடிக் கொணர்ந்தது. 

மாமியார் வசதியான ‘மிராசு’ குடும்பத்தில் பிறந்து, தற்போது ஆபீசர் பதவியிலிருப்பவர். 

பெண் பார்க்க வந்தவர், அகல்யாவின் சுரங்களைப் பாசத்துடன் வருடியபடி பேசினார். 

ஒரு ரசம் லைக்க, இன்னும் நான் சமையல் புத்தகத்தைத் தான் புரட்டறேன். சமையல்கார நாயுடு படுத்துட்டா, ஹோட்டல் சாப்பாடுதான். வேலைக்காரர்கள் தயவிலேயே எங்க காலம் ஓடிடுச்சு. ஆனா பசங்க மூணு பேரும் சதா என்னைக் கேலியும் கிண்டலும்தான். எங்க நிலத்திலேர்ந்து வேண்டிய பகுப்பு, புளி, தேங்காய் வரும். மூத்தவன் தனிக்குடித்தனத்துக்கு இவர் ஃபிளாட் கூட வாங்கிட்டார். பிறகென்ன? பொண்ணு வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நறுவிசா குடும்பம் நடத்தின போதும்ங்கறது எங்க எல்லார் அபிப்ராயமும். அதுதால் அகல்யாவைப் பற்றி கேள்விப்பட்டு…” 

திருமணம் நல்லபடி நடந்தது. புக்ககத்தாருடன் ஒரு மாதம் கழித்த பின் தம்பதிகள் தனி வீட்டிற்கு வந்தனர். அனைத்து வேலைகளையும் மீறி, தோழிகள், படிப்பு என இல்லாது போக அகல்யாவிற்கு நேரம் எதேஷ்டமாய் மிஞ்சிக் கிடந்தது. கணவனின் அணைப்பு அன்பு இவற்றையும் மீறி தாய் வீட்டின் நினைப்பு, ஏக்கமாகத் திரண்டு கொண்டிருந்தது. 

வெள்ளிக்கிழமை காலை தனக்கு மட்டுமாய் சுரண்டி எண்ணெயைக் காய்ச்சுகையில் தங்கைகள் குளிக்கச் செய்யும் ஆர்ப்பாட்டம் நினைவிலாடியது. 

‘அக்கா… மதியம் பயங்கரமாய் பசிக்கும். காரசாரமா ஏதானும் செய்’ என்று அதட்டுவார்கள். 

இவளும் அம்மாவுமாய் சமையலில் திணற, ரேடியோவோடு சேர்ந்து பாடியபடி முடியாற்றுவார்கள் – தங்கைகள் விஜியும் விமலாவும்! 

அம்மாவுக்குச் சிரமந்தான். சின்னதுங்க இத்தனை நாளில் ஒரு வேலையையும் கூராக் கத்துக்கலையே. தம்பி, கடைக்குட்டித் தங்கை இதுங்ககிட்ட என்ன எதிர்பார்க்க? 

திருச்சியில் பஸ் ஏறினால் மூன்றாம் மணி நேரம் அவள் பிறந்த ஊர்சேர்ந்து விடலாம். ஒரு ஜோடி இறக்கைகள் இருந்தால் அவள் ‘ஜிவ்’வென்று பறந்து போய் அம்மாவிற்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்து விட்டு, டிபன் தயாரிச்சு தன் வளைக்குத் திரும்பி விடலாம்! 

கற்பனைகள் ஏக்கத்தை நோவாக்க, மறுமாதம் கணவரோடு ஒரு வாரம் தங்குகிறாற்போல தாய் வீடு கிளம்பி விட்டாள் அகல்யா. 

அம்மா, தங்கைகளைக் கட்டிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் சிரிப்பும் பேச்சும் ஆனபின், அவள் கண்கள் வீட்டைச் சுற்றி வந்தன. பல மாறுதல்கள் தெரிந்தன! அவற்றில் வீடு மேலும் மெருகேறித்தான் தெரிந்தது. விஜி தாவரவியல் என்பதாலோ என்னவோ வீடு முழுக்க விதவிதமாகச் செடி கொடிகள் 

‘பச்’சென்று நின்றிருந்தன. 

”எது இது புது தினுசு தொட்டிங்க?” ஆர்வமாய் கேட்டாள். 

“நானே டிஸைன் போட்டுக் கொடுத்து செய்ய வைத்ததுக்கா. பெயிண்ட் செய்தது நல்லாயிருக்கா? உனக்கும் கூட நாலு தொட்டி செய்து வைத்திருக்கேன்,” 

“ஹால் ஃபோட்டோவெல்லாம் எங்கே?” 

“நம்பெல்லாம் ஜட்டி ஸ்டேஜிலேர்ந்து, சடங்கு வரையிருந்த படங்கதானே? சிலதைப் பிரிச்சு ஆல்பத்திலே ஒட்டியாச்சு, மீதி மாடி ரூமிலே மாட்டியிருக்கா”. 

அகல்யாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அவர்கள் குடும்பப் புகைப்படம் மட்டும் பெரிதாக்கப்பட்டு, வெள்ளிச் சட்டத்திற்குள் பளபளத்தது. 

ஒன்றிரண்டு இயற்கை ஓவியங்கள், புதிய சிறு ருஷன்கள், அவற்றில் அமர்க்களமாய் பூவேலை என்று வீடு பொலிலாய் மாறியிருந்தது. 

“நம்ப வீடு மாதிரியேயில்லை.” 

”உன் பெட்டியெல்லாம் மேல் ரூமிலே வைச்சாச்சுக்கா!” 

மாடி அறையும் நேர்த்தியாக ஒதுங்க வைக்கப்பட்டிருந்தது. தான் சுத்தமாக வீட்டை வைத்திருந்தது உண்மையென்றாலும் இத்தனை ரசனையுடன் ஜோராய்…? நினைத்தபடி குளித்து உடை மாற்றியவள் கீழே வர, விருந்து சுடச்சுட பரிமாறப்பட்டது. 

“ஏங்க நீங்க குளிக்கலை?” 

“சீட்டு விளையாட உட்கார்ந்திட்டேன். இத்தனை பேரோடு சேர்ந்து ‘கழுதை’ விளையாட ஒரு ரவுண்ட் கூட வரலை போ – சரமாரியா வெட்டுத்தான்”” ரஞ்சல் சிரித்தாள். 

‘கழுதைங்க அத்தானோட சீட்டு விளையாடுச்சுள்ளா, சமையல் யார்… எப்படி?’ மனதுள் ஆரம்பித்த முனகல், கணவனது உற்சாகத்தில் மறைந்தது. 

“அட! சிக்கன் மக்ரோனியா? எனக்குப் பிடிச்ச சைனீஸ் டிஷ். நீ இத்தனை நாள் இது சமைக்கவேயில்லையே அகில்?” 

“போன மாசம்தான் நானே கத்துக்கிட்டேன். தான் ரெஸிப்பி தரேன்கா” 

விமலாவும் விஜியும் வளையவந்து பரிமாறி, கடைசியாக வறுத்த தேங்காய்ப்பூ தூவி பீடா கூட சுருட்டி நீட்டினார்கள்! 

அகல்யாவிற்கு மூச்சடைத்தது!. 

“நீங்களும் சாப்பிடுங்க விம்மி. கழுவி கவிழ்க்க நானும் வரேன்” என்றாள். 

“சாயங்காலமா ஒரு பொண்ணு வந்து கழுவி, துவைச்சுத் தந்திடுவாக்கா. நீ நல்லா ஒரு தூக்கம் போடு!” என்று தங்கைகள் கண்சிமிட்டி சிரித்தனர். 

அம்மாவைக் கட்டியபடி படுத்தாள். 

”உன் கொழுந்தன்மாருக்கு தினம் உள் வீட்டுக்கு வராம தீராதுன்னு எழுதியிருந்தியேடீ” அம்மா சிரித்தார்கள். 

“ம். டிபனோ, டின்னரோ எங்க கூடத்தான். அத்தை மாமாவுக்குக் காரியரில் வச்சுக் கொடுத்தனுப்புவேன்.” 

“இனி மூணு வேளையும் அங்க நாயுடு சமையல்தான்.”

“சீக்கிரமா வந்திடுங்கண்ணின்னு நூறு தரம் சொல்லித்தான் அனுப்பி வைச்சாங்க” சொல்கையிலேயே அவள் மனம் பொங்கி நெகிழ்ந்தது. 

மாலை டிபனுக்கு சீஸ் பக்கோடா, சாஸுடன் பரிமாறப்பட்டது. 

‘அகல்யா வந்திருக்காப்போல?’ என்று எதிர், பக்கத்து வீட்டுப் பெண்கள் எட்டிப்பார்க்க, வந்து சாவகாசமாய்ப் பேசினர். 

“சரி சுனகம். உம் மாப்பிள்ளை வந்திருக்கற நேரம். தலைக்கு மேல வேலையிருக்கும். கிளம்பறோம்” என்று அவர்கள் எழுகையில், அம்மா தடுத்தார்கள். 

“இதோ விம்மி உங்களுக்கெல்லாம் காப்பி கொண்டு வரா. இருங்க. எனக்கென்ன வேலை? விஜியும் விம்மியும் எனக்குக் கையும் கண்ணுமா இருந்து சகலமும் பார்த்துக்குதுங்களே.” 

அகல்யாவினுள் ஏதோ ‘சப்’பென்று அடங்கியது. அவள் அம்மாவை எண்ணி மருகியதற்கு மாறாய், இந்த நான்கு குழந்தைகளுள்ள வீட்டில், அவளில்லாமல் வீடு முள்ளையும் விட அம்சமாய் -நேர்த்தியாய் இயங்கிக் கொண்டிருந்தது. 

அப்பாகூட இளைய பெண்கள் நீட்டிய டிபன் தட்டுகளை, “ம்.., இன்னைக்கு என்ன புதுசா?” என்று அலுப்பது போல ஆவலாய் வாங்கி ருசித்துச் சாப்பிட்டார்! 

”டேய், உன் வேலையை நீதான் செய்யணும்’ என்ற விஜியின் அதட்டலில் தம்பி அவன் மட்டை, அழுக்குத் துணிகள், பை, ஷுரு அனைத்தையும் அதனதன் இடத்தில் இட்டான். காய்கறி, பால் அனைத்தையும் ‘டாண்’ணென்று வீட்டில் இறக்கினான். சின்ன தங்கை, பாட்டு கேட்டவாறு குவித்திருந்த துணிகளை இஸ்திரி செய்து அடுக்கினாள். 

”அத்தைக்குப் பிள்ளைகளை எப்படி வளர்க்கணும்ங்கறது தெரிஞ்சிருக்கு” ரஞ்சன் சிலாகித்தான். 

குடும்பம் ஸ்தம்பிக்காது. மேலும் தடபுடல் படுவது கண்டு அகல்யாதான் ஸ்தம்பித்து நின்றாள். 

அன்றிரவு கணவனைக் கட்டிக் கொண்டு அவன் கழுத்துக்குள் முனங்கினாள் அவள். 

“நல்லவேளை உங்களுக்கு நான் ஒரே பொண்டாட்டி” என்று!

– மங்கையர் மலர் 1992 – தீபாவளி இதழ்.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *