தேடுதல் வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2025
பார்வையிட்டோர்: 82 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராஜியினால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை. வெகு நேரமாகப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள். 

“என்னம்மா… ஏன் எழுந்து உட்கார்ந்திருக்கிறாய்?” தன் தூக்கத்தின் நடுவே விழித்துக்கொண்ட அவள் அத்தை ஆதரவாகக் கேட்டாள். 

“இப்பொழுது மணி என்ன இருக்கும் அத்தை? இரண்டிருக்குமா?” என ராஜி வினவும்பொழுதே கீழே ஹாலில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரம் ‘டாண்டாண்’ என இரண்டு தடவைகள் அடித்துவிட்டு ஓய்ந்தன. 

“இரண்டு மணியாச்சு” என்றாள் இளங்கோவின் தாயார். 

“லையிட்டைப் போடட்டுமா அத்தை?’ 

“ம்ஹும்… வேண்டாம் ராஜி… இரவு பகல் என்றில்லாமல் ராணுவம் சுத்திக்கிட்டிருக்கு… அவனுகள் பண்ணுகிற அட்டகாசத்தில் சாப்பிடும் சாப்பாடுகள்கூட உடலில் ஒட்டுதில்லை. நேற்றிரவும்… இங்கிருந்து இரண்டு வீதி தள்ளியிருக்கும் போஸ்ட்மாஸ்டர் சிவத்தின் வீட்டுக்குள்ள புகுந்து படித்துக்கொண்டிருந்த அவரது பதினைந்து வயது மகனை இழுத்துக்கொண்டு போயிருக்கிறானுகள்… நாம லையிட்டைத் தெரிந்து தெரியாமல் போட..பேசாமல் தூங்கம்மா..” அத்தையின் பேச்சைக் கேட்டபடியே அசதியுடன் படுக்கையில் சரிந்தாள் ராஜி. 

“இவ்வளவு நேரமாக வா நான் தூங்காமல் விழித்திருக்கிறேன்” தன்னைத்தானே கேட்டபடியே தலையணையில் முகம் புதைத்தபடி புரண்டு படுத்தாள் ராஜி. 

முதல்நாள் நினைவுகள் மீண்டும் அவளை அலைக்கழித்தன.  

“ராஜி… நீதான் எனக்கோர் உதவி பண்ணவேண்டும்.”  

திருக்கேதீஸ்வாத்தின் வெளிமண்டபத்தைச் சுற்றி வரும்பொழுது இளங்கோ மெதுவாக ராஜியிடம் இதனைக் கேட்டான். 

“உங்களுக்கு நான் உதவி பண்ணுவதா?” ஆச்சரியத் தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராஜி. 

“நீ நினைத்தால் இது சுலபமாக முடிந்து விடும்.” 

“புதிராகப் பேசி என்னை கலங்க வைக்காமல், நேரடி யாகவே கூறுங்கள் அத்தான்”.பாதி சிணுங்களும் அழுகை யுமாகக் குழைந்தாள் ராஜி. 

“மாமா இந்த ஜனவரியில் நம்ம கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் பண்ணுகிறார்போல் தெரிகிறதே….” 

“ஆமாம் அதற்கென்ன?” நிதானமாக நடந்து கொண்டிருந்த ராஜி தன் நடையைச் சற்று நிறுத்தி விட்டு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். 

”உன் அப்பாவிடம் கூறி கல்யாணத்தைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போட வேண்டியது உன்பொறுப்பு ராஜி” – ராஜியின் கைகளை அன்புடன் பற்றியபடி கேட்டான் இளங்கோ. 

“…”

“இப்படி நான் கூறுவதால் உன் மேல் நான் வைத்துள்ள அன்பைச் சந்தேகிக்காதே. அது சாசுவதமானது. என்றைக்கிருந்தாலும் என் மனைவியாகப் போகிறவள் நீதான். ஆனால் எனக்கென்று ஒரு வேலையோ, தொழிலோ இல்லாத சமயத்தில் அதுவும் நாளுக்கு நாள் நம்மினம் அழிந்து கொண்டிருக்கும் வேளையில் எந்த நேரம் என்ன நேருமோ எனத் தமிழர்கள் அச்சத்துடன் வாழும் சமயத் தில் நம் திருமணம் இப்பொழுது அவசியந்தானா ராஜி?” 

அவன் கூறுவதில் உள்ள சில நியாயங்கள் அவளுக்கும் புரியாமல் இல்லை. 

ராஜி எல்லாவற்றையும் மனதில் போட்டுக் குழப்பி ஒரு முடிவுக்கு வந்தாள். 

இளங்கோ கூறுவதுபோல் கல்யாணத்தை ஆறு மாதமோ ஒரு வருடமோ தள்ளிப் போடுவதில் ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது. ஆனால் அப்பாவை எப்படி சமாதானப் படுத்துவது? 

இன்று காலையில் பேசாலையிலிருந்து மன்னாரிலுள்ள தன் அத்தை வீட்டுக்கு அவள் புறப்படும் சமயம் தந்தை கந்தவனம் இடையில் குறுக்கிட்டார். 

”அத்தை வீட்டுக்குப் போவது சரி. இந்த ஜனவரியிலாவது என் எண்ணப்படி கல்யாணத்தை நடத்த இளங்கோவிடம் ஒப்புதல் வாங்கிக்கொண்டு வந்து விடு” என கண்டிப்பாகக் கூறியனுப்பியிருந்தார். 

நினைவுகளின் அலைக்கழிப்பால் ராஜி எப்பொழுது தூங்கிப் போனாளோ தெரியாது. யாரோ முதுகில் அவசரமாகத் தட்டவே திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள். 

முகத்தில் கலவரம் பொங்க எதிரே அவள் அத்தை, “ராஜி வீட்டைச் சோதனைப் போடவெனக்கூறிக் கொண்டு கீழே ராணுவம் வந்திருக்கிறது. இளங்கோவிடம் ஏதேதோ கேட்கிறானுகள். அவனுகள் கண்ணில் நீ படுவதே ஆபத்து” அவளது வயதான உடல் தட தடத்தது. கீழ்த் தாடை பயத்தில் பட படவென்று ஆடியது. 

“பயப்படாதீர்கள் அத்தை; பயப்படுவதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது?” தனக்குள் விளைந்த அச்சத்தை லெளியே காட்டாமல் அத்தைக்குத் தைரிய மூட்டினாள். 

கீழ் மாடியில் சர சரவென்று பொருட்கள் அங்கு மிங்குமாக இழுபடும் ஓசை. இடையிடையே சிங்களமும் தமிழும் கலந்த அதிகார மிரட்டல்கள். எல்லாவற்றை யும் காதில் துல்லியமாக வாங்கிக் கொண்டு மாடியறையில் இருட்டோடு இருட்டாக அத்தையின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி உட்கார்ந்திருந்தாள் ராஜி. 

சிலகண இடைவேளைக்குப்பின் மாடிப்படிகளில் பட் பட்டென்று இரும்புப் பூட்ஸுகள் ஏறி வரும் ஒலி. ராணுவம் மாடிக்கு வருவதை உணர்ந்தாள். 

இதற்குப்பின்னும் அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள நினைப்பது இல்லாத ஆபத்தையும் வரவழைத்து விடலாம் என்றெண்ணிய ராஜி, தைரியத்துடன் அத்தையையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். 

ராணுவத்தினரின் கழுகுக் கண்கள் அனைத்தும் அவளையே மொய்த்தன. 

“அவரவர்கள் அடையாள அட்டையுடன் கீழே போய் நிற்கவும்” ராணுவ வீரனொருவன் உத்தரவிட்டான். 

ராஜிக்கு ‘திக்’கென்றது. தன் கைப்பையை எடுத்துக் குடைந்தாள். ஐயோ… முந்தா நாள் போஸ்ட் ஆபீஸ் சுக்குப் போகும் பொழுது கையில் எடுத்துச் சென்றது, பின்னர் அதனைக் கைப்பைக்குள் வைக்க மறந்து போனாள். தன் பதட்டத்தை அத்தைக்குக் காட்டாமல் கீழே இறங்கிவந்து ஏற்கனவே வீட்டு முற்றத்தில் இரண்டு ராணுவ வீரர்களின் துப்பாக்கி முனைக்கு நடுவே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இளங்கோவோடும், அவன் தந்தை யோடும் சேர்ந்து கொண்டாள். 

மேலே தேடுதல் நடவடிக்கையை முடித்துக் கொண்டு கீழேயிறங்கிய அதிகாரி அவர்களை வெகுமிடுக்குடன் நெருங்கினான். 

“ம்… அடையாள அட்டைகளை… எடு…எ டு…” 

இளங்கோவின் தந்தையிடமிருந்த அடையாள அட்டையை வாங்கி முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்தான். 

இளங்கோ ராஜியைப் பார்த்தான். அவள் கைகளில் எதுவும் இல்லை. ‘அடையாள அட்டை எங்கே’ என கண் ஜாடையினால் வினவினான். 

ராஜிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. கண்கள் சலங்க அவனை ஏறிட்டு நோக்கினாள். 

“கார்’ட்டை எடு…” 

“எடுத்து வர மறந்து போனேன் சார்…” ராஜியின் இதழ்கள் நடுங்கின. ராணுவத்தினரின் பார்வைகள் அனைத்தும் அவளை நோக்கித் திரும்பின. 

“சார், அவள் என் மாமா பெண். அவள் வீடு பேசாலையில் இருக்கிறது” இளங்கோ பதட்டத்துடன் முன்னால் வந்தான். 

எதுவும் பேசக் கூடாதென அவனை எச்சரித்த ராணுவ வீரன் அவளை மட்டும் தனியாக நிறுத்தினான். 

இளங்கோவின் நாடி நரம்புகள் அனைத்திலும் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் ஆத்திரம் மூண்டது. 

இவனைப் போன்றே அவளும் இந்நாட்டுப் பிரஜை தான்… இந்த மண்ணில் தவழ்ந்து விளையாடியவள் தான்… 

“நீயொரு பெண் புலிதானே… இவன் உன் கூட்டாளி தானே…” ஆத்திரமூட்டும் வார்த்தைகளை அள்ளி வீசினான் அதிகாரி. 

“இல்லைங்க…ஐயா…! இவள் என் மருமகப் பொண்ணு…” இளங்கோவின் தந்தை ராணுவத்தினரை நோக்கிக் கைகளைக் கூப்பினார். 

“சார்… பிளீஸ்… என்னை நம்பு…ங்க… என் வீடு பேசாலையில் இருக்கிறது. இது என் அத்தை வீடு…” குரல் தழு தழுக்க மீண்டும் பேச எத்தனித்தாள் ராஜி. 

‘பொறுகியாண்ட எப்பா’ பொய்சொல்லக் கூடாது என துப்பாக்கி முனையினால் அவள் முகத்தில் இடித்தான் ராணுவ அதிகாரி.

அவளது சிவந்த மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது.  

ராஜியை ‘ஜீப்’புக்குள் இழுத்துப் போடும்படி அதிகாரி கட்டளையிட்டதும் இளங்கோவினால் அமைதியாக நிற்க முடியவில்லை. 

“பிளீஸ், சொல்வதைக் கேளுங்க சார். காலையில் அடையாள அட்டையுடன் ஸ்டேசனுக்கு அவளை அழைத்து வருகிறேன்…” -அவன் மேலே பேச முடியாதபடி கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. 

ராணுவ வீரனொருவன் ராஜியின் கைகளைப் பிடித்துத் தர தரவென இழுத்துச் செல்வது தெரிந்தது. 

“இது அநியாயம் சார்… அநியாயம் சார்… நீங்களும் மனிதர்கள். நாங்களும் மனிதர்கள்…” ஆவேசத்துடன் முன்னால் பாய்ந்த இளங்கோ, ஓர் அசுர பலத்துடன் ராணுவ வீரனின் கையில் அகப்பட்டுத் துடித்த ராஜியை விடுவிக்க எண்ணி வீரனின் நெஞ்சில் கையை வைக்கப் போனான். 

அதிகாரியின் துப்பாக்கி முனை அவனைக் குறி வைத்தது. அதனைக் கவனித்த ராஜி, 

“வேண்டாங்க… விட்டுடுங்க. இவனுகளைக் கடவுள் கேட்கட்டும். நீங்க விட்டுடுங்க” ராஜி அலறினான். 

“முடியாது, இது அநியாயம், நடு ஜாமத்தில் வீட்டுக்குள் புகுந்து குடும்பப் பெண்களை இழுத்துச் செல்வதா?” இளங்கோ குமுறினான். 

அதிகாரி துப்பாக்கியை அழுத்தினார். அடுத்தடுத்து நான்கைந்து புல்லெட்டுகள் சீறிக் கொண்டு பாய்ந்தன. 

எல்லோர் கணமுன்னாலேயும் இளங்கோ பிணமாக வீழ்ந்தான். 

“அத்தான்” கிறீச்சென அலறிய ராஜியின் பிடரியில் குண்டாந்தடியொன்று பலமாகத் தாக்கியது. 

அவள் நினைவிழந்தாள். 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *