தெளிவும் முடிவும்
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 169
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்தக் கதை, வசனங்கள், ‘எக்ஸ்ட்ராக்கள்’ இவை மூன்றையுந் தவிர ஏழ்மைக்கும் நம்முடைய உலகத்துக்கும் எந்த விதத் தொடர்பும் இருப்பதில்லையே, லீலா!” என்றேன் நான்.
லீலா சிரித்தாள். ‘மேக்கப்’ சரியாகக் கலைக்கப்படாததால் அவள் முகம் வர்ணக் கலவை வைத்திருந்த தட்டைப்போலத் தோன்றியது. இழக்க மனமில்லாமல் அவள் இழுத்துப் பிடித் திருந்த இளமை, அவளுடைய இதழ்களிலும் விழிகளிலும் மட்டுமே குடியேறியிருந்தது. மற்றப் பகுதிகளைத்தான் இஷ்டம்போல் மாற்றிக் கொள்ளலாமே!
“எவரும் உங்களை ஏழையாக மாறச் சொல்லவில்லை,வாசு; நடிக்கத்தான் சொல்லுகிறார்கள்” என்றாள் லீலா.
“குமட்டலெடுப்பதை எடுத்துக்குடி என்பது……”
உடனே என்னை எரித்து விடுவதைப்போலப் பார்த்தாள் லீலா. நானும் அயர்ந்துபோனேன்.
“அந்தக் குமட்டலெடுப்பதுகள் கொடுக்கும் காசுதான். குளிர்ச்சியான வாழ்வை உங்களுக்குத் தந்திருக்கிறது, வாசு, வாடிக்கிடக்கும் அவர்களுக்கு வாழ்வுதேடிக் கொடுப்பது நாம் தெரிவிக்கும் நன்றியே தவிர வேறொன்றுமில்லை.”
பணக்கார உலகத்துக்கு ‘பாஷனை’க் கற்றுக்கொடுக்கும் அந்த நடிகையின் உள்ளத்தில், ஏழை உலகமும் இடம்பெற் றிருப்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. கனிந்த தக்காளிப் பழத்தைம்போலக் காட்சியளித்த அவளையே கூர்ந்து கவனித் தேன். எதிரே வட்டமிட்டு வசீகரிக்கும் புறாவைப் பார்ப்பதைப் போல, அவள் தன் இலட்சியத்தை வானவெளியில் உருவாக்கிப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் வாழ்வில் அடிக்கடி குறுக்கிடும் வல்லூறுகள், அந்தப் புறாவை எப்படி உயிரோடு விட்டுவைத்தன என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.
“விறுவிறுப்பான வசனங்களை வேகமாகப் பேசிவிடுவ தாலேயே ஏழைக்கு விமோசனம் கிடைத்துவிடுமா, லீலா !”
நரம்பு என்று நான் மீட்டிய இடம், துடிக்காத இரும்பு என்று நான் தெரிந்துகொள்ள நெடுநேரம் பிடிக்கவில்லை. அகநானூறு படித்து முடித்தவன் அ ஆல் ஆரம்பிப்பவனைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்தாள் லீலா.
“கலையின் நோக்கம் எதையும் தெளிவுபடுத்துவதே தவிர தீர்த்து வைப்பதல்ல.”
மையிருட்டு மண்டியிருந்த என் மனதில், மின்மினியாகத் தோன்றிக் கலங்கரை விளக்காகப் பதிந்தன லீலாவின் சொற்கள். அந்தரத்தில் தொத்த முயற்சிக்கும் தாரகைகள் துடித்துக்கொண் டிருந்தன. முன்பாதி அம்புலி ‘போக்கஸ்’ விளக்காக மாறி, லீலா வின் முகத்தில் மட்டும் ஒளியைப் படியவைத்திருந்தது. எதிரே ஓலமிட்டுக்கொண்டிருந்த அலைகடல்போல இருந்த என் உள்ளம் சற்று ஓய்ந்தது.
லீலா விடைபெற்றுச் சென்ற பிறகும் வெகுநேரம் அந்தக் கடற்கரையிலேயே நான் உட்கார்ந்திருந்தேன்.
‘வறுமையின் கொடுமை’ என்ற படத்தில் நான் நடிக்கவேண் டும் என்று கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். தொழில் துறையில் தேர்ந்த படமுதலாளிகள் எளிதில் தோல்வியா காணுவார்கள்? விடாது தொல்லைப்படுத்தி என் வெற்றியை விரட்டியடித்து விட்டார்கள். ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து நான் அனுபவித்த வேதனை……
‘வளமையின் வசீகரம்’ என்பது மட்டும் அந்தப் படத்தின் தலைப்பாக இருந்திருந்தால்……! வாரிப் பூ முடித்து வசீகரிக்கும் சிங்காரியே தேவை என்பவனுக்குச் சிக்கலெடுத்த கொண்டைக். காரியிடம் மனம் எப்படிச் செல்லும்? என்னைச் சிதைத்துச் சித்திரவதை செய்த ஏழ்மையின் சாயலுக்கே இடங்கொடுக்கக் கூடாது என்று நான் செய்திருந்த உறுதி என்னை உறுத்திற்று.
முகத்தைச் சுளித்தபிறகு யாருக்குத்தான் முத்தங்கொடுக்க மனம் வரும்? இந்த வறுமைக்கு என்னைவிட்டால் வேறு வழியே இல்லை போலிருக்கிறது; துளைக்காவிட்டாலும் தொத்திக்கொண்டாவது இருப்பேன் என்று என்னைத் துரத்தித் தொடருகிறது.
தொல்லையாகத் தொடங்கி முல்லையாக மலர்ந்த என் வாழ்வின் முதல் அத்தியாயத்தை என்னைக்கொண்டே புரட்டச் செய்வது… படிக்கக்கூடச் சொல்லவில்லை அவர்கள்; நடிக்கச் சொல்லி விட்டார்கள்.
நத்தை வயிற்றிலேதான் பிறந்தேன் நான்; சமுதாயம் கோர்த்து அணிந்துகொள்ளும்வரை நாதியற்றுத்தான் கிடந்தேன்- பாலுக்கழுதது… கூழுக்கலைந்தது…. பரிவைத் தேடித்துளாவி யது….. இவையெல்லாம் என் வாழ்வில் இறந்தகால வினைச் சொற்கள் ! இப்போது…? என்னைப் பார்த்தாலே போதும் என்று அலையும் பைத்தியக்காரர்களின் எண்ணிக்கை அளவுக்குமீறியே வளர்ந்திருந்தது. ஒப்பந்தப்படி பாதியும், ஒருவருக்குந் தெரியா மல் பாதியுமாகச் சேர்த்துக் குவித்த பணம் செல்வாக்கை எனக்குச் சேவகம் செய்ய வைத்திருந்தது.
ஒட்டுப்போட்ட கந்தல், பட்டுச் சட்டையாக ஆகும்போது ஆடை மட்டுமா மாறுகிறது? அந்தஸ்து மல்லவா உயர்ந்து விடுகிறது! எதிரிருக்கும் கதிரவனிடம் இதயத்தை இழந்துவிட்ட தாமரைக்குத் தனக்கு உருவளித்த சேற்றின்நினைவு உண்டாவதே இல்லை. நீரில் மூழ்கி நிலத்தைத் துளாவிப் பார்க்க அதற்கு நேரந் தான் ஏது? தப்பித் தவறி அந்தச் சேறு தன் பார்வையில் பட்டு விடுமோ என்ற பயத்தால்தானே, தனக்கும் தண்ணீருக்குமிடையே வட்டத்திரையை அமைத்திருக்கிறது அந்தத் தாமரை!
நாதியற்றவன் என்ற காரணத்தாலே நாடக உலகில் திணிக் கப்பட்டவர்களில் நானும் ஒருவன். தின்பதற்காக வாழ்வதா அல் லது வாழ்வதற்காகத் தின்பதா என்ற பிரச்னையில் தெளிவான முடிவு கண்டவர்கள் அந்தக்காலத்து நாடகக் கம்பெனி முதலாளி கள்தான். இவன் வாழ்ந்து தீரவேண்டிய தேவை நமக்கல்லவா ஏற்பட்டுவிட்டது என்ற பயம் காரணமாகத்தான் எங்களுக்குச் சோறு போடுவார்கள். எதுவும் கிடைக்காத நிலைமாறி, இதற் காவது வழி கிடைத்ததே என்ற எண்ணந்தான் எங்களையும் பொறுத்துப் போகச் செய்யும். பசி தணிந்தது என்றவுடன் ருசி தொடங்குவது இயற்கைதானே! என்னதான் நாடகக் கம்பெனி முதலாளிகள் எங்களைப் பட்டுப்பூச்சிகளாக ஆக்கமுயற்சித்தாலும், நாங்கள் காலப்போக்கில் வண்ணாத்திப் பூச்சிகளாகத்தான் மாறு வோம். ஒவ்வொரு கம்பெனியாக நாங்கள் உள்ளே நுழைவதும், அங்கேயிருக்கும் சிலந்திகளுக்குச் சிலர் பலியாவதும், பலர் தப்பி வெளியேறுவதும் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகள். பால வேடத்தில் தொடங்கி, தோழியாக மாறி, துணைவி வேஷம் வரை போடுபவர்கள், தொண்டை ‘உடைந்த’ பிறகு வில்லனாகிக் கதா நாயகனாக நடிப்பார்கள். அதற்குப் பிறகுதான் விசிறிகள்.. வெள்ளிக்கூஜாக்கள்… வெற்றிலைப் பாக்குப் பெட்டிகள்!
இந்தப் பலகட்ட நெருக்கடிகளைக் கடந்தான பிறகுதான் என் படவுலக வாழ்வு தொடங்கியது. மின்னாத தாரகைக்கு அந்தப் பொன்விளையும் பூமியில் இடமே இருப்பதில்லை. மெருகு தீட்டிக் கொண்டு மின்மினிகளாகவாவது தோற்றமளிப்பார்கள் அந்த உலகைச் சேர்ந்தவர்கள். நான் இப்போது ஒரு உண்மையான தாரகை… உருவாகிவரும் நிலவு! விண்ணில் மண்ணுக்கே இடமில் லாதபோது அதில் நெளியும் புழுக்களுக்கு வேலையேது? இந்த ஏழ்மைமட்டும் அங்கே எப்படிப் புகுந்தது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.
அந்த அரைப்பகுதி அம்புலியும் அடியோடு அழிந்துவிட்டது. வெகுதூரத்தில் எரிந்துகொண்டிருந்த மின்சார விளக்கு வரிசை கள், ஏதோ தங்களாலான சிறு ஒளியை அங்கிருந்து கடற் கரையில் தூவிக்கொண்டிருந்தன. குழம்பிக்கொண்டே அங்கே உட்கார்ந்திருக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை. எழுந்து மெல்ல நடந்தேன். எட்டிப் பாய்ந்துவந்து கரையில் மோதிய அலைகள் என் கால்களைத் தழுவித் தாழ்ந்ததால் ஏதோ ஒருவித இதமான உணர்வு உண்டாகியது. தொடர்ந்து கடலோரமாகவே இயங்க என் கால்களுக்கு இடங்கொடுத்தேன். எவ்வளவு தூரம் கடந்திருப்பேன் என்பது தெரியவில்லை. மிக அருகே நாய்கள் குரைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். இருளுக்கு நிழல் போல, அதைவிடக் கருமையாக சில குடிசைகள் காணப்பட்டன. எதையோ நினைத்துக்கொண்டு அந்தக் குடிசைகளை நோக்கி நடந்தேன்.
அந்த நாய்களைப்பற்றி நான் கவலை கொள்ளவே இல்லை. அவை குரைப்பதற்காகப் பழக்கப்பட்டவையே தவிர, கடிப்பதற் காக வளர்க்கப்பட்டவை அல்ல. புதிதாக யாராவது வந்தால் அந்தப் பொது எதிரியைப் பார்த்து எல்லாமே குரைக்கும்; வந் தவன் போனபிறகு ஒன்றையொன்று பார்த்து உறுமிக்கொள்ளும்.
சேறும் நீருமாக இருந்த அந்த ஒற்றையடிப்பாதையில் கால் வைக்கவே எனக்குப் பிடிக்கவில்லை. துர்நாற்றம் வேறு என் மூக் கைத்துளைத்தது. ஒழுங்கற்றுக்கிடக்கும் கற்பாறைகளைப்போலக் காணப்பட்ட அந்தக் குடிசைகளின் கதவுகள் எல்லாம் அடைக்கப் பட்டுக்கிடந்தன.
எங்கெங்கோயிருந்து ஓடிவந்து ஒன்றுகூடி குரைக்கத் தொடங்கிய நாய்கள் என்னிடம் நடுக்கத்தை உண்டாக்கின. யாராவது விழித்துக்கொண்டு என்னை ஒரு திருடன் என்று எண்ணி விட்டால்…? அருகிருந்த குடிசை ஒன்றின் கதவை லேசாகத் தட்டினேன்; திறந்துகொண்டது. உள்ளே நுழைந்து கதவை மூடித் தாள்போடத் துளவினேன். தாள் இருந்தாலல்லவா போட முடியும்!
“யார்?”
ஒலித்துத் தணிந்தது வீணை. தீப்பெட்டி எடுக்கும் ஓசை கேட்டது. பளிச்சென்று உண்டான வெளிச்சம் ஒருசில வினாடி களில் மறைந்தது. உருவாகி மறைந்த அந்த ஒளிபட்டு என் விழிகள் தடுமாறின. அவற்றின் நிலை தெளிந்தபோது, ஒளித்துண்டு ஒன்று தரையிலிருந்து அந்தரத்துக்கு உயர்வது தெரிந்தது. ஏந்திப் பிடிக்கப்பட்ட அந்தச் சிறு மண்ணெண்ணை விளக்கு எழிலை எனக்கு எடுத்துக் காட்டியது. குறுகிய அளவிலேயே அதன் ஒளிக்கு ஆதிக்கமிருந்ததால் முகம் மட்டுந்தான் எனக்குத் தெரிந் தது. பூமிக்கு மேலேயும் பொன்விளையும் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். சிரிப்பை இதழாக்கி, ஒளியை விழியாக்கி, எழிலை முகமாக்க எப்படித்தான் முடிந்ததோ தெரியவில்லை! அத் தனை அங்கங்களையும் அளந்தெடுத்து உருவாக்கி மெருகுதீட்டி அப்படியே இணைத்திருந்தார்கள். உயிரோடு எதிர்நின்ற அவளை, என் உள்ளத்தில் ஓவியமாகத் தீட்டி முடிக்க எனக்கு நெடுநேரம் பிடிக்கவில்லை.
”யார் அது?”
ஒரு ஆண் குரல்; வயோதிகத்தின் நடுக்கம் அதில் கலந்திருந்தது. சுவரோரமாக விரித்திருந்த பாயிலிருந்து எழுந்து நின்றார் அந்தக் கிழவர்.
என்னை ஒரு நடிகன் என்று எப்படிச் சொல்லிக்கொள்ளுவது? சொன்னால் இங்கேயிருக்கும் என் விசிறிகள் என்னைச் சுற்றி வளைத் துக்கொண்டால்…
“வெளியூர்க்காரன்; வழிதவறி வந்துவிட்டேன்; அந்த நாய்கள் என்னை விரட்டியதால் …”
அந்தப் பெண்ணின் கையில் இருந்த விளக்கை வாங்கி என் முகத்தை ஆழ்ந்து ஆராய்ந்தார் அவர்.
“நல்ல பிள்ளை போலிருக்கிறது இந்தப்பக்கமாக ஏன்வந்தாய், தம்பி? ஏதாவது இருந்தால் பிடுங்கிக்கொண்டு உதைத்து விரட்டி விடுவார்களே இங்கே இருப்பவர்கள்.’
“என்னிடந்தான் எதுவுமே இல்லையே!”
“இல்லாவிட்டாலும் தொல்லைதான். ஏன் கொண்டுவரவில்லை என்று உதைப்பார்கள்.”
சிரிப்பு – வெறுப்பு – பயம், இவை மூன்றும் சேர்ந்தால் எப்படி யிருக்கும் என்பது எனக்கு அதுவரையில் புரியாமலிருந்தது; அப் போதுதான் தெளிவானது.
“படுக்க ஏதாவது கொடு, அம்மா. விடிந்ததும் திரும்பிப் போகட்டும்” என்றார் அந்தக் கிழவர்.
மேடுபள்ளமான தரை-கிழித்து உடலைக் குத்திய பாய் கெட்டிப்பட்ட தலையணை – விளக்கை அணைத்துவிட்டதால் சூழ்ந்த இருள்! தூக்கமா வரும் எனக்கு? எழுந்து போய்விடலாமா என்று கூட நினைத்தேன். அந்தக் கிழவர்மட்டும் உதைக்கும் திருடர் களைப்பற்றிச் சொல்லியிருக்கா விட்டால்… திகில் என்னைத் திணறச் செய்தது!
“விளக்கு எரிந்தாலென்ன?” என்று கேட்டேன்.
“அதற்கு எண்ணெய் வேண்டுமே, தம்பி” என்றார் அந்தக் கிழவர்.
அவர் தூங்குவதற்கு முன்னதாக அவரைப்பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன். அந்த வட்டாரத்தில் பெட்டிக் கடை வைத்து அணாக்கள் அளவிலேயே ஆதாயம் காணுபவர் அவர். மணமாகி நாட்கள் பல கழிந்து இந்தப் பெண்ணை பெற்றுக் கொடுத்துவிட்டு ‘நல்லகதி’ அடைந்துவிட்டாள் அவர் மனைவி. இந்தப் பெண்ணும் ‘மேஜராகி’ ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. கையில் கொஞ்சம் காசு தங்கியிருந்தபோது எட்டாவதுவரையில் படிக்கவைத்தார். கை நொடித்தவுடன் அவள் படிப்பும் நொண்டி யாகிவிட்டது. ஒழுங்கான வாலிபனிடம் அவளை ஒப்படைக்க அவ ரிடம் பணமுமில்லை; ஒழுங்கற்ற உதிரிகளைத் தேர்ந்தெடுக்க அவ ருக்கு மனமுமில்லை!
எட்டிக் காயாகிக் கசந்த ஏழ்மை எப்படித்தான் கட்டிச் சர்க் கரை ஆனதோ, தெரியவில்லை. இமைகளைத் திறந்தால் இருளும், மூடினால் அவளுமாக என்னைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருந் தார்கள்!
“கண்டவுடன் காதலா?” என்றது என் உள்ளம், மெல்லக் கண் சிமிட்டிக்கொண்டே.
“அதுதானே நம்முடைய உலகத்தின் நியதி!” என்று அதன் வாயை அடைத்தேன்.
“காணாதபோது மறந்து விடுவதுந்தான்…!”
என் உள்ளத்தோடு சேர்ந்து சிரித்துவிட்டேன். இடை வேளை யாகச் சிறிது நேரங்கழிந்தது.
“ஒரே இரவுக்குத்தானே?” என்று அது தன் தொல்லையைத் தொடங்கியது:
‘“இல்லை, இல்லை. இறுதி இரவுவரை!’ என்று கோபமாகப் பதிலளித்தேன்.
அலுத்துப்போன என் உடல் ஓய்வுக்காக மன்றாடியது; பொல்லாத உள்ளமோ தன் போக்கிரித்தனத்தை எல்லைமீறி வளர்த்துக்கொண்டே போனது. எப்போது கண்ணயர்ந்தேன் என்பது தெரியவில்லை. விடிந்து வெகுநேரம் கழிந்த பிறகுதான், எனக்கு உணர்வு ஏற்பட்டது. விழிகளைத் திறக்கவே முடியவில்லை; உடல் அளவுக்குமீறிக் கொதித்ததால் நரம்புகள் உருகிக்கொண் டிருந்தன. இருக்கிறேனா அல்லது பறக்கிறேனா என்பது புரியாமல் தத்தளித்தேன்.
நடுங்கிய கரம் ஒன்று என் நெற்றியில் படர்ந்தது.
‘கொதிக்கிறதே, அம்மா.”
“அளவுக்கு மீறிய அவதிபோலிருக்கிறது அப்பா, உடல் நொந்துபோய்விட்டது”
“இவன் நல்லகாலம் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.”
நீண்ட அமைதி நிலவியது. கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்து பார்த்தேன். கழற்றிய மூக்குத்தியை அவர் கையில் கொடுத்துக்கொண்டிருந்தாள் அவள். அவர் அதை வாங்கிக் கொண்டு போனார். உள்ளங்காலில் தொடங்கி உச்சந்தலைவரை எழுந்தன உணர்வலைகள். நான் கொட்டிக் குவித்திருந்த பணம் எட்டாத தொலைவிலிருப்பது என் நினைவில் பட்டது. நெஞ்சு நெகிழ்ந்தது-பின் மகிழ்ந்தது-தொடர்ந்து நினைவற்றுப்போனது.
மறுபடியும் கண்விழித்தபோது கஞ்சிக்கலையத்துடன் என் எதிரே நின்றுகொண்டிருந்தாள் அவள்; அவரைக் காணோம்.
“வெகு நேரம் தூங்கிவிட்டேனோ?” கேட்டேன்.
“நேரமா…? இரண்டு நாட்களாகக் கண்ணையே திறக்க வில்லையே!”
லேசாக ஒன்றையொன்று விட்டுப் பிரிந்தன அவளுடைய இதழ்கள்; ஒளி என் பார்வையைப் பறித்தெடுத்தது. அவள் முகத் தில் படிந்திருந்த என் பார்வையை முழு உருவத்திலும் படரவிட் டேன். கைபிடித்து அழைத்துச்செல்ல இருப்பாளா? அல்லது கையெடுத்துக் கும்பிடவேண்டியவளா? எதையும் தெளிவுபடுத் திக்கொள்ள முடியாமல் என் மனம் திகைத்தது. திரைபோட்டு விழிகளை மறைத்த கண்ணீர்த்துளிகள் என் இமைபட்டு கன்னத் தில் வழிந்தன. கிழிந்திருந்த தன் சேலையின் முந்தானையால் அதைத் துடைத்துவிட்டாள் அவள்.
அதற்குப் பிறகு நான் விடைபெற்றுத் திரும்பும்வரை அவள் என் பார்வையில் படவே இல்லை. உள்ளே இருக்கிறாள் என்பதை மட்டும் உணருவேன்; உடனே தோன்றுவாள் என்று காத்துக் காத்து என் மனம் களைத்துத்தான் போகும்!
படப்பிடிப்புத் தொடங்கிவிட்டதால் எப்போதாவது இருட்டிய பிறகுதான் அந்தக் குடிசைக்குப் போவேன். அந்த சமயங்களில் என் மனதைத் திறந்து கொட்டும்போது அந்தக் கிழவர் கூறும் பதில்கள்……
“கல்யாணக்கவலையே இல்லை போலிருக்கிறது உங்களுக்கு?”
”இல்லையா…! கஞ்சி – கடன் – கவலை – கலியாணம்-கடவுள் விட்ட வழி-காய்ச்சல்! ஏழைகளின் அகராதி, ‘க’னாவில் ஆரம்பிக் கும் இந்தச் சொற்களோடு முடிந்துவிடுகிறது, தம்பி!”
எனக்கு என்னவோ போலிருக்கும் இந்தச் சொற்களில், பாதி கூட நாங்கள் பிடிக்கும் ‘வறுமையின் கொடுமை’யில் காணப்பட வில்லையே! ஏழ்மையை எல்லோரும் பார்க்கும்படியாக அதற்கு மெருகும் மினுமினுப்புமல்லவா உண்டாக்கிக்கொண்டிருந்தோம்
“இப்படியே தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தால்…”
“அதற்கு வேளை வர வேண்டாமா, தம்பி. ஜாதி, ஜாதகம் இரண்டும் வேறு ஒத்துப்போக வேண்டும்”
அதற்குமேல் பேச என்னால் எப்படி முடியும்? உரையாட லைத் துண்டித்துக் கொள்ளுவது என்னவோ முடியாத காரியமாக எனக்குத் தோன்றும்.
“வறுமையின் கொடுமை” என்று படம் பிடிக்கிறார்களே, உங்களுக்குத் தெரியுமா?”
அவர் சிரித்தார்; நான் சிதைந்தேன்.
“ஆமாம். வறுமை எங்களையெல்லாம் வாட்டி வதைக்கிறது; அவர்களுக்கு வருமானத்தை உண்டாக்குகிறது”
ஒன்றுபடுத்த முடியாமல் உடைந்து சிதறிப்போன என் உள்ளத்துக்காக உருகுவதைத் தவிர வேறு வழியே இல்லை. இருண்ட அடுப்பங்கரையில் விளக்காக இருக்கும் அவளை நினைத்து, என்னைச் சமாதானம் செய்துகொள்ளுவேன். எப்படியாவது அந்தத் தங்கக்கட்டியை என் இரும்புப் பெட்டியில் எடுத்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம், பூத்துக் காய்த்துப் பழுத்துப் பறிக்கப்பட வேண்டிய நிலையை அடைந்தது!
படம் முக்கால்வாசி முடிந்துவிட்டது. எடுத்த வரை பலருக் குப் போட்டுக் காண்பித்தார்கள். சிலர் பரவசமடைந்தார்கள் லாபத்தை எண்ணி; பலர் பரிதாபப்பட்டார்கள் ஏழையை நினைத்து! நான் நடித்த படங்களிலெல்லாம் தலைசிறந்தது இது வாகத்தானிருக்கும் என்று எல்லோருமே சொன்னார்கள்.
“ஏழையாகவே மாறிவிட்டீர்களே, வாசு” என்று எத்தனையோ தடவைகள் லீலா என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டாள். பத்திரிகை களின் பக்கங்கள் விளம்பரத்துக்காகக் குத்தகைக்கு எடுக்கப் பட்டன. வறுமையின் கொடுமையை வசீகரமான வர்ணங்களில் விளம்பரப்படுத்தி விட்டார்கள் ஓவியர்கள். பல இலட்சக்கணக் கான ரூபாய்கள் செலவில் தயாரான அந்த “வறுமையின் கொடுமை’யை எதிர்பார்த்து எத்தனையோ ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்!
ஆனால் இத்தனைக்கும் காரணமான அவள்..? அந்த ‘ஈசன்’ விட்டவழியில் இயங்கிக்கொண்டிருந்தாள். நிர்மலமான வானத் துக்குமேல் எங்கோ இருந்த அந்த ஏழை பங்காளனும் நீரைப் பொழியாமல் அவளுடைய வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருந் தான். நானும் அவளைப்பற்றி நினைத்தே நேரத்தைக் கழித்தேன். வெறும் கற்பனைகளையே கற்களாகக் குவித்தால் கட்டிடங்களும் கனவுகளாகத்தானே உருவாகும் எப்படியாவது அவளை என் மனைவியாக்கிக் கொள்ளுவது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். அப்போதுதான் எட்டியவரை கால்வைக்கும் எனக்கும் ஒரு எல்லை குறிக்கப்படும்.
அந்தக் குறிக்கோளோடுதான் அன்று அவர்கள் வீட்டுக்குப் போனேன். கடலில் கும்மாளம் போடும் அலைகள் கரையோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. இடையே புதராக வளர்ந் திருந்த புற்களின்மேல் களி நடனம் புரிந்துகொண்டிருந்தது காற்று. வெளிச்சம் இருளோடு ஒன்றுகலக்க வேகமாக விரைந்து கொண்டிருந்தது. விளிம்பில் தோன்றி உச்சிக்கு ஊர்ந்த வெண்ணிலா என் இதயம் முழுதும் வெளிச்சம் போட்டது.
அந்தக் குடிசைகளின் அருகே நெருங்கும்போது… தொடர்ந்து நடக்கமுடியாமல் செய்த சொற்கள் என் செவிகளில் விழுந்தன. குரலை அடக்கி யாரோ இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அந்தக் குட்டியை சந்தி சிரிக்க வைக்கணும், தம்பி”
”ஆமாம், அண்ணேன். குனிஞ்சதலை நிமிராத அந்தக் குமரி இப்ப கொஞ்சில்ல குலாவுறா! என்னைப் பார்த்து ‘தூ’ன்னு துப்பிட்டு எவனோ ஊரு பேரு தெரியாத பயலோடெ…”
எழுதக் கூசுகிற சொல்லால் கோடிட்ட இடத்தை நிரப் பினான் அந்த மனிதன். ஒரு குட்டிச்சுவருக்கு அப்பால் கீழே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அருகிலிருந்த மரத்தோடு நான் ஒட்டிக்கொண்டேன்.
“அப்படி எதுவும்னா நம்ப தெருவுக்குள்ளேயே வச்சுக்க வேணாம். வெளித் தெருக்காரப் பயல் இங்கே வந்து இதெல்லாம் பண்றது நமக்குல்ல அவமானம் ? ஊரே சிரிக்காது ?”
“ஊருக்கே நியாயம்பேசற அந்தக் கிழவன்கூடவா இதுக் கெல்லாம் எடங் குடுக்குறான்?”
“ஏதோ வருமானம் கிடைச்சிருக்கும். பார்த்தும் பார்க்காதது போல ஜாடையா அப்படி…”
“குட்டி என்னமோ ஷோக்காத்தான் இருக்கா, அண்ணேன். எனக்குங்கூடத்தான்…”
என் நெஞ்சு நெருப்புப்பற்றி எரியத் தொடங்கியது. புடைத் துக்கொண்ட நரம்புகளுக்குக் கீழே குருதி கொதித்துக் கொப்ப ளித்தது. வெறியாட்டம் போட்டுக்கொண்டிருந்த கடலலைகளும் தன் வலிவாலே புற்களைச் சாய்த்துத் தாழ்த்திய காற்றும் என்னைச் சுற்றி கோரநர்த்தனம் புரிந்தன. உடனே திரும்பி என் வீட்டை நோக்கி நடந்தேன்.
என்னைக் கொத்திக் கூறு போட்டுக்கொண்டிருந்தது அந்த இரவு. தெளிவைத் தேடிய என்மனம் தீய்ந்ததே தவிர தெளி வடையவில்லை. சூடேறிய பாத்திரத்தில் போடப்பட்ட என்னைப் போல என் நினைவுகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. பார்வைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போனதுபோல இரண்டும் வெவ்வேறு திசைகளில் இயங்கிக்கொண்டிருந்தன. ஓலமிடுகிற – ஊளையிடுகிற உயிரினங்களைத் தவிர மற்றவை அத்தனையும் அரவமற்றுக் கிடந்தன. கலங்கிப்போன குளத்து நீரைப்போலக் காணப்பட்டது வானம். அள்ளித் தூவப்பட்ட ஒளிப் புள்ளிகளினிடையே தன் உருவைக் காட்டியது வெள்ளி நிலா. செத்துப்போன உலகத்துக்குப் பால் தெளிப்பதைப்போல அது படரவிட்ட ஒளிக் கதிர்கள்…
நிமிர்த்திய பார்வையை அங்கேயே நிலைத்து நிறுத்தி வைக்க என்னால் இயலவில்லை ; தன்னாலே தாழ்ந்தது. எழுந்துயர வகை யில்லாமல் நிலத்திலேயே சுருண்டு கிடக்கும் அந்தக் கொடிகள்…. எட்டிப்-பிடிக்க சுற்றி வளைக்க -கட்டித் தழுவ எதுவுமே கிடைக்காவிட்டால் எல்லாமே இப்படித்தான் ஆகின்றன என்று நினைத்தபோது எனக்கு என்னவோ போலிருந்தது. புழுதியிலேயே’ பூத்துக் காய்த்துக் கருகிப்போகும் அந்தத் தாவர இனத்துக்கு மட்டும் இது ஏன் புரியவில்லை ? அடர்ந்து மண்டிக்கிடக்கும் அந்தக் கொடிகளுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருக்கும் விஷ ஐந்துக்கள்…
வேதனை தாங்காமல் வெள்ளியெழும் வரை வெந்துகொண் டிருந்தேன். காலையும் இடை வேளையும் கழிந்துவிட்டன. இனி எதையும் ஒத்திப்போட நான் தயாராக இல்லை அவளையே கேட்டு விட்டால்…?
மாலை பாதிதான் தொடுக்கப்பட்டிருந்தது. கடுமையைக் குறைத்துக்கொண்டு வெண்ணிறத்தை மஞ்சள் நிறத்துக்கு மாற்றிக் கொண்டான் கதிரவன். என் எண்ணங்கள் கயிறாகி இதயத்தை மத்தாக்கிக் கடையத் தொடங்கின. விட்டுப் பிடிக் கும்போது சுற்றி வளைத்துவிட்டு, பிடித்திழுக்கும்போது பேசாமல் திரும்பிவிடும் அந்தக் கயிறுகள்.
வானம் சிவந்தது. உலைக்களத்தில் உருக்கப்படும் இரும்புத் துண்டைப்போல ஒளிவிட்டான் கதிரவன். அவள் வீட்டை நோக்கி நடந்தேன்.
தட்டினேன் – கதவு திறந்தது-அழகு வெளியே எட்டிப் வார்த்தது!
“அப்பா இல்லை. சிறிது நேரம் கழித்து வாருங்கள்”
“இல்லை, உன்னிடம்தான் பேசவேண்டும்”
“என்னிடமா? இப்போதா…?”
மிரட்சி மின்னிற்று அவள் விழிகளில் மெல்லப் பின்னால் நகர்ந்தாள்;நானும் உள்ளே நுழைந்தேன். எப்படித் தொடங்கு வது என்பது புரியவில்லை எனக்கு
“சீக்கிரம் சொல்லுங்கன்; எனக்கு வேலை இருக்கிறது”
“வெகு நாட்களாகவே உன்னிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்…”
“இப்போதுதான் அதைச் சொல்லி விடுங்களேன்!”
எனக்குந்தான் ஆத்திரம் இருந்தது ; ஆனால் அவளைப்போல அவசரப்படவில்லை!
“நானே உன்னை என் மனைவியாக…”
அவள் உரத்துச் சிரித்தாள் ; ஒளிகள் உருண்டு ஓடின ! “தங்கை அண்ணனையா கல்யாணம் பண்ணிக்கொள்ளுவாள்? நாமென்ன ‘மாமன் மச்சான்’ கூட்டமா?”
ஆழந் தெரியாமல் குதித்துவிட்டதால் அடித்தளத்துக்கே போய்விட்டதை அப்போதுதான் உணர்ந்தேன். நீந்திப் பழக்க மில்லாததால் நிலை தடுமாறிக்கொண்டிருந்தேன்.
அந்த வீடு என் சொந்த வீடுபோலத் தோன்றியது எனக்கு. ஏதோ ஒருவித புதுமையை அவளிடம் அதுவரையில் எதிர்பார்த்த என் உள்ளம் புரிந்துகொண்டு ஆவலைத் தணித்துக்கொண்டது. விழிகளுக்கு இருந்த கூச்சம் விடைபெற்றுச் சென்றது. காதல், அன்பு என்ற நிலைக்கு மாறியபோது ‘அந்தத் தங்கை’ என் சொந்தத் தங்கையாகவே ஆகிவிட்டாள்.
“எத்தனை நாளாக இந்த நாடகம்?”
குரல் வெளியே இருந்து வந்தது. ஏழெட்டு பேர் வெளியே நின்றனர். நீண்ட தடிக்கம்புகள் சகிதமாக நின்ற அவர்களுடைய கண்களில் வெறுப்பும் பொறாமையும் கலந்து காணப்பட்டன.
“பத்தினித் தங்கம்.. பகல் நேரத்திலே!” ஒருவன்.
“வாட்டச்சாட்டமா ஆள் கிடைச்சா கற்புக்கரசிகூடக் கண்ணடிக்க ஆரம்பிப்பாள்”-இன்னொருவன்.
உள்ளே நுழைந்து எதுவும் செய்துவிடுவார்களோ என்ற பயத்தால், வாயிலை மறைத்துக்கொண்டு நின்றேன். ஒரு கல் என் உச்சந்தலையை உரசிச் சென்றது.
“வெளியே வாடி தடிச்சிறுக்கி. உன்னை வெட்டித் தீர்த்துடுறேன்”-வேறொருவன்.
“இரண்டு பேரையும் செங்கக் காளவாயிலே வச்சு வேக வைக்கணும்’- எவனோ ஒருவன்.
ஆத்திரமும் அவமானமும் என்னைப் பிடுங்கித்தின்றன. நானோ தனி மனிதன்…ஆனால் நான் ஒரு ஆண்! சூழ்நிலை தெரியாமல் சிக்கிக்கொண்டால் என்ன ஆவது என்ற அச்சமும் என்னை அடுத்து நின்றது.
என்னை இழுத்து உள்ளே தள்ளிவிட்டு, அவள் வெளியே வந்தாள். அத்தனை வாய்களும் அடைபட்டுப் போய்விட்டன. தாங்காத வேதனையால் தடுமாறிக்கொண்டே அவளருகில் வந்து நின்றேன்.
“என் இஷ்டம்; நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்; நீங்கள் யார் கேட்பதற்கு?”
குரல் குமுறியது -விழிகள் கண்ணீர்விட்டன-உடல் தடு மாறியது. ஆனாலும் துணிவைத் தளர்த்திக்கொள்ளாமல்தான் அவள் நின்றாள்.
“சரி, உனக்கு இவ்வளவு திமிரா? ராத்திரி பஞ்சாயத்திலே யார்த்துக்கலாம்; வாங்கடா போவோம்.”
அந்தக் கூட்டம் கலைந்து போனது, என் பக்கம் திரும்பினாள். “உடனே போய்விடுங்கள். நீங்கள் இங்கே இருந்தால் வம்பு அதிகமாகும்.”
“உன்னைத் தனியாக விட்டு விட்டா……?”
“உங்களுக்கு கோடி புண்ணியம்; கும்பிடுகிறேன்; போய் விடுங்கள்”.
வெளியே வந்தேன்; கதவு மூடியது; உள்ளிருந்து பொருமி யழும் குரல் கேட்டது. என் நினைவுகளே கணைகளாகி நெஞ்சைத் துளைத்தன. தள்ளாடி நடந்தேன்: “நடிகர் வாசு, டோய்” எவனோ ஒருவன் கத்தினான். அதற்குப் பிறகு வீட்டையடைந்து தான் திரும்பிப் பார்த்தேன்.
மறுநாள் முழுதும் நான் மரண வேதனையை அனுபவித்தேன். அடுத்த நாள் காலையில் பத்திரிக்கையில் வந்த செய்தி! “அவமானத்துக்கு அஞ்சி பருவப்பெண் தற்கொலை” என்ற கொட்டைஎழுத்துக்கள் என்னைக் கிட்ட அழைத்தன. அதே வட்டாரம்-அதே குடிசை – அவளேதான்…! அலறியே விட்டேன் !
சில நாட்கள் கழிந்தபிறகு இன்னொரு செய்தி வெளியிடப் பட்டது தினத்தாட்களில். என்னுடைய எல்லா சொத்துக்களையும் ஏழைகளின் உதவிக்கு எழுதி வைத்துவிட்டு, நான் பொதுவாழ்வில் புகுந்துவிட்டேன் என்பதை என் ரசிகர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள் செய்தித்தாள் நிருபர்கள்!
படவுலகம் பழுதுபட்டுவிட்டதே என்று பரிதாபப்பட்டார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் ; கலையுலகிற்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டனர் ரசிகர்கள் ; நான் நடித்த ‘வறுமை யின் கொடுமை’ என்னையே திருத்திவிட்டது என்று எழுதினர் விமர்சகர்கள்!
விசாரித்துவிட்டுப் போகிறவர்களில் ஒருத்தியாக, லீலா அனுதாபந் தெரிவிக்கும் வகையில் என்னோடு வந்தாள். பேசினாள்.
“கலைஞன் தன் கலை மூலமாகவே சமூகசேவை செய்யலாம், வாசு. கலைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது இரண்டு துறைகளுக் கும் ஏற்படும் நஷ்டம்.”
எண்ணெய் குறைந்த விளக்குகளைப்போல ஒளிவிட்ட அவள் விழிகளைப் பார்த்தேன். அவைகளின் இடையே ஒருமுழக் கயிற் றில் தொங்கிக்கொண்டிருந்த உடல் மட்டுந்தான் தெரிந்தது எனக்கு.
“ஆமாம். கல்லைக் கடவுள் என்று சொல்லும் பூசாரிகளைப் போலத்தான், நீங்களும் உங்கள் பிழைப்பைக் கலை என்று சொல்லி ஏமாற்றுகிறீர்கள். வசூலுக்காகச் செய்யப்படும் எதுவும் சமுதாயத்தின் வாட்டத்தைப் போக்கிவிடாது!”
அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்; நான் எங்கோ வெறித்துப் பார்த்தேன்!
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
இளையவேணி கிருஷ்ணா
October 9, 2026
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
