நிலாவும் தாமரையும்!
கதையாசிரியர்: டி.கே.சீனிவாசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 2, 2026
பார்வையிட்டோர்: 275
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
-பாரதிதாசன்
வேதனையே உருவான இந்த வாழ்க்கை வர்ணனை…. ! என் வாழ்வில் துண்டு துண்டாக நடந்து முடிந்த சில பல நிகழ்ச்சிகள்- கவலைப்பட்ட காலங்களில் பிரதிபலித்த ஏக்கம் – கலங்கிய நேரங் களில் உதிர்த்த கண்ணீர்த் துளிகள்-வாய்விட்டழுதபோது குழம்பிய என் மனத்தின் குமுறல்-இவற்றின் சேர்க்கையே நான் சித்தரித்துள்ள இந்தச் சிந்தனை ஓவியம். புரிந்துகொள்ள முடிந் தவர்களுக்கு ஒருபோதனை – முடியாதவர்களுக்கு-? வெறும் பொழுதுபோக்கு !
இலையுதிர் காலத்தில் மொட்டையாகக் காணப்பட்ட மரங்கள் அத்தனையும் துளிர்க்கத் தொடங்கிய பருவம் அது. மென்காற் றின் மோதுதலினால் நெளிந்து வளைந்த தளிரிலைகளுக்கிடையே அரும்பிய மொக்குகள் ஒவ்வொன்றாகக் கண்திறந்தன. என் உடல் வளர்ச்சியும் உள்ளத்தின் வளர்ச்சியும் ஒன்று சேர்ந்து என்னையும் மலரச் செய்துவிட்டன. என் இதயம் பூத்ததால் எண்ணங்களில் எல்லாம் மணம்வீசிக் கொண்டிருந்ததை நான் உணர்ந்ததைப் போலவே என் பெற்றோர்களும் உணர்ந்திருப் பார்கள் போலிருக்கிறது ! வீதியில் சுற்றித்திரிந்தால் வீசுங்காற்றில் கலந்து என் மணம் எல்லாம் கரைந்துவிடுமோ எனப் பயந்து என்னை வீட்டுக்குள் பதுக்கி வைத்தனர். என் அப்பாவும் அம்மாவும்!
விரிந்த மலரை வேலியிட்டுக் காப்பதைவிட விலைக்கு விற்று: விடுவதேமேல் என்றுதான் என் பெற்றோருக்குத் தோன்றியிருக்க வேண்டும். என் வாழ்வுக்குத் துளிக்கூடத் தொடர்பில்லாத சில பல நிகழ்ச்சிகள் என் அனுமதியில்லாமலே நடக்கத் தொடங்கின, நான் பார்த்துப் பேசிப் பழகியிராத மனிதர்கள் என் வாழ்வைச் சுற்றி வளைத்தனர். எங்கோ வெகுதூரத்தில் வானத்தில் பொதிந்து கிடந்து போலி நிறங்காட்டும் கிரகங்களுக்கு என் வாழ்வின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.
ஒருநாள் என் எதிர்வீட்டுத் தோழி ஆனந்தியின் தகப்பனார் என் நெற்றியில் குங்குமத்தையிட்டு, அது துளிக்கூட உதிர்ந்து விடாமல் அழுத்திப் பதிந்து, ‘அம்மா சக்கு! சீதை சாவித்திரி போன்ற பதிவிரதா சிரோன்மணிகளால்தானம்மா இந்தப் பாரத நாடு பவித்திரமடைந்தது. அந்தப் பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்பதை எப்போதும் மறந்துவிடாதே !” என்றார்.
வேதத்தை ஓதி ஓதிப் புனிதமடைந்த அந்த வேதியரின் நாக்கிலிருந்து எழுந்த நல்வாக்கில் ஏதோ ஒரு மகத்தான உண்மை மறைந்திருப்பதை நான் உணர்ந்தேன். நானும் ஒரு கற்புக்கரசி ஆகி இருள் நிறைந்த வானத்தில் ஒளிவிட்ட அருந்ததிக்கு அருகேயிருந்து உலகத்தைப் பார்த்துக் கண்சிமிட்ட வேண்டும் என்ற ஆசை என்னையறியாமலே எனக்கேற்பட்டது !
அன்றுமாலை மணி ஐந்து இருக்கும். கோபம் தணிந்ததும் கம்பீரங்குறையாத கதிரவன் தன் ஒளியைப் பொன்னாக்கி வீசிக் கொண்டிருந்தான் எங்கள் வீட்டு மேல்மாடியில் நின்று கொண்டு என்னைக் கட்டுப்படுத்திக் கண்காட்சிசாலைப் பொம்மையாக்கி வைத்திருக்கும் இந்த உலகத்தைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெருக்கோடியில் மூர்த்தி வரும்போதே அவர் உருவத்தைக் கண்டுபிடித்து விட்டன என் விழிகள். ஓடி யாடி விளையாடும் பருவத்திலிருந்து உருவம் எதிரில் தோன்றிய தும் வெட்கத்தோடு ஓடியொளியும் வயது வரும்வரை என்னோடு ஒத்திருந்த அந்தத் தோழரைத் தாவணிக்கும் சேலைக்குமுள்ள தாரதம்மியங்கள் சேர்ந்து பழகாமல் தடுத்துவிட்டன இன்று-? கப்பலின் மேல்தளத்தில் நின்றுகொண்டிருக்கும் பிரயாணி, கப்பல் வரை தன்னை அழைத்துவந்து ஏற்றிவிட்ட தோழன் கரையின் நின்றுகொண்டிருப்பதைக் கவலையுடனும், கலக்கத்துடனும் கவ னிப்பதைப்போல நானும் அவரை-! வெறும் இரும்புத்துண்டாக இருந்தால்கூட அந்தக் காந்தக்கல்லைக் கண்டவுடன் தடைகளை யெல்லாம் உதறிவிட்டு ஓடித் தழுவிக்கொண்டிருப்பேன். ஆனால் நான் உணர்ச்சிகளாலேயே வளர்ந்து உணர்ச்சிகளுக்கே கட்டுப் படப்போகும் ஒருபெண்! எனக்கும் அவருக்கும் இடையிருந்த தூரங்குறையக் குறைய என் இதயத்துடிப்பு அதிகரித்து வீட்டுக் குள் அடைபட்ட பெண் என்பதை ஒருவினாடி மறந்து கூட்டில் பிடிபட்ட கிளிபோல என் தோழனைக் கூச்சலிட்டுக் கூப்பிட விரும்பினேன். ஆனால்-? முந்திக்கொண்டு முன்னால் ஓடிவர இரண்டு சொற்கள் இதயத்துக்குள் போராடின. “Hot (600) “1 மூர்த்தியின் கட்டான உடலும் கண்கவர் தோற்றமும் இந்தச் சொல் எழமுடியாமல் தடுத்துவிட்டன. “அத்தான் !” புதிதாக எங்கள் வீட்டில் புகுந்த அந்தஸ்தும் ஆச்சரியமும் என் உதடுகளை இழுத்துப் பொத்தின. வெட்கம் வேறு குறுக்கேயிருந்து வேடிக்கை செய்தது !
என்னைப்பற்றின சிந்தனைகளிலேயே நான் என்னை மறந்து விட்டேன் என்பதை மாடிப்படிகளில் எழுந்த காலடியோசைகள் கவனப்படுத்தின. வேகமாகக் கதவுப்பக்கம் திரும்பிய என்விழிகள் உடனே தரையை நோக்கத் தாமே தாழ்ந்தன. மூர்த்தியும் அவருடைய மோகன உருவமும் ! பாயும் பார்வையைத் தேக்கித் தடுத்துத் தன்னைச்சுற்றி மேயவிடும் அந்த அழகான முகத்தை நேருக்கு நேராக நிறுத்தி நிதானமாக ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கேற்படத்தான் செய்தது. ஆனால்…? தீவிர மாகவும் இல்லாத மந்தமாகவும் ஆகாத ஒருவித ஒளி என் விழிகளுக்குள் புகுந்துகொண்டு இமைகளைத் திறக்க முடியாமலும் மூடவிடாமலும் தடுத்துவிட்டது உள்ளத்துக்குக் குளிர்ச்சியையும் உடலுக்கு வெப்பத்தையும் தரக்கூடிய உணர்ச்சி என்னைத் தழுவித் தாலாட்டியது.
“சக்கு! அருமையான கனவென்று கருதி மறந்துவிட வேண் டியதுதானா நான் உன்னை?”
என் இதயத்தில் ஏற்றி வைத்திருந்த ஒளியைச் சுற்றிச் சூறைக்காற்றை யெழுப்பிச் சுழற்றிவிட்டன இந்தச் சொற்கள்.
”மூர்த்தி! எப்படியானாலும் என் இதயஓளி நீதான். அதை அணைத்துவிடாமல் தயவுசெய்து போய்விடு.”
“விழிகள் வேறொருவளுக்கு. ஆனால் ஒளிமட்டும் உனக்குத் தான் என்கிறாயா ? பைத்தியமே எதையும் திருட்டுத்தனமாகப் பெற்றிருக்க நான் ஒன்றும் மட்டரகம் அல்ல !”
அரம்போல என்மனதை அறுத்துத் தள்ளிய இந்தப் பேச்சு அந்தணர் – ஆனந்தியின் தந்தை-என் இதயத்தில் பதித்த அந்தக் கருத்தைக் குத்திக் கிளப்பிவிட்டது.
“மூர்த்தி ! சீதை சாவித்திரி போன்ற பதிவிரதா சிரோன் மணிகள் பரம்பரையில் உதித்தவர்கள் இந்நாட்டுப் பெண்கள் என்பதை மறந்துவிடாதே!”
“இவ்வளவுதானா உனக்குத் தெரிந்தது? சீதையும் சாவித்திரி யும் தங்கள் கருத்துக்கிசைந்த கணவர்களைப் பெற்றதால்தான் கற்புக்கரசிகளாக இருக்க முடிந்தது !”
என்னைத் திணற வைத்த இந்தப் பதில் திகைப்பைக் கொடுத் தது. கன்னித் தன்மையைக் காப்பாற்றவே தன்னந்தனியாக விடப்பட்ட என்னோடு அந்த நேரத்தில் ஒரு கட்டிளங்குமரன் இருப்பதை உலகம் பார்க்க நேர்ந்தால்……!
“மூர்த்தி! நீ போய்விடு. யாராவது பார்த்துவிட்டால் எங்கள் அந்தஸ்து ஆச்சாரம்”
”இவற்றிற்குப் பங்கம் வந்துவிடும் என்கிறாய்? வற்றாமல் வறளாமல் சோறு கிடைக்கும் வசதிமட்டும் ஏற்பட்டால் அந்தஸ் தும் ஆச்சாரமும் எளிதில் எவரிடமும் புகுந்துகொள்ளும் ஆனால் மாசில்லாத மனப்பண்புகள் உண்டாவதுதான் -”
வானத்தில் மேற்குக்கோடி விளிம்பில் யாரோ கல்லாலடித்துக் காயப்படுத்தி விட்டதால் குருதி கொட்டிக்கொண்டிருந்தது. குளத்தில் குவிந்துகிடந்த தாமரையின் இதழ்கள் லேசாக வாடியிருப்பதுபோல எனக்குத் தோன்றின.
”சக்கு! நீ அந்தஸ்தில் உயருவதைப்பற்றி எனக்கொன்றும் கவலையில்லை. ஆனால்-! நீ போய்விட்டால் என் இதயம் காலி யாகிவிடும். பிறகு-? வெறிச்சென்றிருக்கும் எதுவுமே வேதனை யைத்தானே கொடுக்கும்!”
அலுப்போடு, படுத்திருந்த பாயைச் சுருட்டுவதைப்போலச் சரிந்துவிழுந்த கதிரவன் மெல்லத் தன் கதிர்களை இழுத்து மறைப் பதையே கவனித்துக்கொண்டிருந்தேன். மூர்த்தி எப்போது அங்கிருந்து போனார் என்பது எனக்குத் தெரியாது. வெட்டி யெடுத்த தேங்காய் கீற்றை வானத்தில் வைத்துப் பதித்ததைப் போலத் தோன்றியது ஒடிந்து காணப்பட்ட அந்த வெண்ணிலா-.
2
பாதிவரை வளர்ந்துவிட்ட பரிதாபத்துக்குரிய என் கதையின் முன்னுரை வேடிக்கையாகவே தோன்றும். மண்குடிசையில் இருந்த நாங்கள் மாடிவீட்டில் குடியேறியவுடன் துடிக்கும் புழுக் களைப் பார்ப்பதுமாறி விண்ணிலிருந்து கண்சிமிட்டும் தாரகைகளைக் கண்டு காதலிக்கத் தொடங்கினோம். இளமை உடலில் குவிந்த வுடன் மெருகும் தன்னாலே படருவதைப்போல் அந்தஸ்தில் நாங்கள் உயர்ந்ததும் ஆச்சாரமும் எங்களிடம் புகுந்துகொண் டது. இந்த விஷயத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கள் என் எதிர்வீட்டுத் தோழி. ஆனந்தியின் பெற்றோர்தாம்! அவர்களுடைய குளிர்ந்த முகங்களும் குழைந்த பேச்சுக்களும் கோபமே உருவான நடவடிக்கைளும் எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. நளினமும் லாகவமும் கலந்த நல்ல பண்புதானே நாகரிகம் என்பது !
காப்பிப் பவுடரைவிடச் சிகரிப் பவுடர்தான் அதிகமான நுரையை உண்டாக்கும் என்ற உலகம் அறிந்த உண்மை அப்போது எங்கள் நினைவில் வராமல்போனது வீரன், மாடன், இருளன் போன்ற தாழ்ந்த ஜாதிக் கடவுள்களையெல்லாம் விரட்டி விட்டு முருகன், விஷ்ணு, சிவன் போன்ற உயர்ந்த ஜாதிக் கடவுள் களைக் கும்பிட ஆரம்பித்தோம். கொலு வைப்பது – கும்மியடிப் பது-கோபாலனை அழைப்பது-விரகந்தாங்காது. நாங்கள் படும் வேதனையை அவனிடம் பாடிக்காட்டுவது – இவைபோன்ற “பண் பாட்டில் தேர்ந்த பழக்கவழக்கங்கள்” ஒவ்வொன்றாக என்னிடம் யுகுந்து எங்கள் வீட்டிலும் இறக்குமதி செய்யப்பட்டன. ஆட்டுக் கறி சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கையை நன்றாகத் தேய்த்துக் கழுவிக்கொண்டு, “இன்று எங்கள் வீட்டில் கத்தரிக்காய் சாம் பார்” என்று பொய் சொல்லப் பழகிக்கொண்டோம்.
3
சுருக்கமான இடைவேளைக்குப் பிறகு தொடர்கிறது என் சோகக்கதை. மூர்த்தி வந்துபோன அன்றிரவு ஆனந்தியின் தகப் பனார் எங்கள் வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல நான் அவரை வரவேற்றேன்.
குறும்புங் கேலியும் கலந்த குரலில் “அம்மா சக்கு ! மல்லி கைக்கும் ரோஜாவுக்குமுள்ள வேற்றுமை என்ன தெரியுமா உனக்கு?” என்று அவர் கேட்டபோது எனக்குத் திகைப்பேற் பட்டது. நினைவுகளைப் பட்டுப்பூச்சிகளாக்கிப் பறக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கும் பருவத்தில் இருந்த எனக்கு அலர்ந்த ரோஜாவும் மலர்ந்த மல்லிகையும் அழகுச் சரக்குகள் என்பது மட்டுந்தான் தெரியும். ஒருவேளை ரோஜாவுக்கும் எனக்கு வர விருக்கும் ராஜாவுக்கும் எப்படி எப்படி ஒற்றுமை வேற்றுமைகள் அமையவேண்டும் என்று கேட்டிருந்தால் வெட்கத்தோடாவது சொல்லியிருப்பேன். ஆனால் சிந்தனைக்குரிய இந்த கேள்வி……?
“மல்லிகையின் இதழ்களைவிட ரோஜாவின் இதழ்கள் சற்று மெல்லியவை !” என்று எனக்குத் தெரிந்த அந்தப் பதிலைச் சொல்லி வைத்தேன்.
“ஆமம்மா! மெல்லிய இதழ்படைத்த ரோஜா எட்ட இருப்பவர்கள் பார்வையைப் பற்றிக் கிட்ட இழுக்கும். ஆனால் தடித்த இதழ் படைத்த மல்லிகையோ உள்ளத்துக்கு மதிப்பை உணர்த்தும்.
நிர்மலமான வானத்தில் திப்பித் திப்பியாக படிந்திருந்த மேகத் திரைகளில் என் விழிகள் அர்த்தமில்லாமல் பார்வையைப் பதித்தன.
“ஆண்கள் இதயங்களைக் கவ்வியிழுக்கும் விதம் பெண்கள் இருக்கக்கூடாது. ஒன்று சேர்ந்தே வளர்ந்திருந்தாலும் வாலிபம் ஒரு ஆபத்தான பருவம்” என்றார் அவர்.
புரிந்துகொண்டேன். மூர்த்தியும் நானும் தணித்திருந்த போது திறந்திருந்த எதிர்வீட்டு ஜன்னலை நான் கவனிக்க மறந்து போனது என் நினைவுக்கு வந்தது காதலியின் கண்களை அவளறியா மல் பொத்தி வேடிக்கைக் காட்டப் பூனைபோலப் பின்னால் நடந்து வரும் காதலன் அவளுக்கு நேரெதிரே நிலைக்கண்ணாடியிருப்ப தைக் கவனிக்க மறந்ததைப்போல நானும் அன்றுமாலை……
இதைத் தொடர்ந்து என் திருமண ஏற்பாடுகளைச் சுறுசுறும் பாகக் கவனிக்கத் தொடங்கினர் என் பெற்றோர். உடலை வளமாக வைத்துக் காப்பாற்றும் வகை தெரியாத ஒருவனிடம் என்னை அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து-அக்கினி வளர்த்து-அத்தனை கடவுள்களையும் சாட்சியாக வைத்து-உலகம் ஒப்படைத்தபோது பந்துமித்திர இஷ்டஜனங்கள் ஒருவர்கூட விட்டுப்போகாமல் வந்திருந்து தம்பதிகளாகிய எங்களை வாழ்த்தி அருளினார்கள். ஆனால் எனக்கு மாலையிட்டவனுடைய உடலுக்குள் எங்கோ ஒளிந்துகொண்டிருந்த உயிர் என்னைக்கண்டு பயந்தோ, பச்சா தாபப்பட்டோ உடனே ஓடிமறைந்தது. நான் விதவையானேன். எனக்காகச் சிலர் அழுதார்கள்—அவனுக்காகப் பலர் அழுதார் கள் – யாருக்காகவும் நான் அழுவதற்கு எனக்கு எந்தவிதமான கவலையோ கலக்கமோ அப்போது ஏற்படவில்லை !
மஞ்சளை அழித்து மங்களத்தை ஒழித்து மங்கையாக உலவ வேண்டிய என்னை மரக்கட்டையாக ஆக்கிய அன்று ஆனந்தியின் தகப்பனார் என்னிடம் சொன்ன் அந்தச் சொற்கள்…….
“அம்மா சக்கு! கயிறு கழுத்தில் ஏறுவதற்கு முன்னால் பெண்கள் பிற ஆண்களைப் பார்க்கமட்டும் செய்யலாம். கயிறு கட்டியான பிறகு பழகும் உரிமைகூடக் கொடுப்பார்கள் – பாதக மாக நடந்துகொண்டாலும் இல்லாவிட்டாலும் கட்டிய கயிறு அறுந்துபோனால் பார்ப்பதுகூடப் பாபம் !”
சொல்லும்போது அவரும் அழுதார்-கேட்டவுடன் நானும் அழுதேன்!
4
மாரிக்காலம் தொடங்கிவிட்டது. இருள் மேகங்கள் வானத்தை மூடிமறைத்து அதில் நடமாடும் சிறிய பெரிய நட்சத்திரங்கள் அத்தனைக்கும் முக்காடிட்டன. முண்டிக்கொண்டு முன்னால் ஓடிவர முயற்சிக்கும் மின்னல்கொடியாளைப் பின்னால் இழுத்துவிட்டு உலகத்தார் பார்க்க முடியாமல் ஒளித்து வைத்தன அந்தக் கருமேகங்கள். தன்னைச் சூழ்ந்துகொண்டு கதறிக் கர்ஜனை செய்யும் காட்டுமிருகங்களைக் கண்டுபயந்து பதறிய வானம் கண்ணீரைப் பொழிந்தது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து பெய்தமழை எங்கள்வீட்டுத் தோட்டத்தைப் பாழாக்கி விட்டது. புயலில் சிக்கிய பூக்களின் இதழ்கள் சிதறிச் சின்னா பின்னப்பட்டுவிட்டன. மகிழ மரமும் முறிந்துபோனதால் அதைச் சுற்றித் தழுவிக்கொண்டிருந்த முல்லைக்கொடி அறுந்து அழிந்தே போனது. என் இதயவேதனையைப் படமாகட்டும் பிடிக்க முடிந் தால் அது எப்படியிருக்கும் என்பதைப் பாழடைந்த அந்த மலர்த் தோட்டம் என் பார்வைக்கே எடுத்துக்காட்டியது !
காலம் முயலாக இருப்பதும் ஆமையாக மாறுவதும் சூழ்நிலை யைப் பொறுத்துத்தான். ஆனால் காலத்தைக் கவனித்து வாழ்வை நடத்தும் நிலையில் நான் இல்லை. ஒருநாள் மூர்த்தி என்னைத் தேடி வந்தார் அப்போது வீட்டில் எவருமே இல்லை. திகைப்பால் நான் தடுமாறிப் போனேன்.
“சக்கு! இவ்வளவுதானா உன் வாழ்வு?”
அழுதார் – அழுதேன்…… அழுதோம் !
“விதி !” என்று இரண்டே எழுத்துக்களில் என் வேதனையைச் சுருக்கினேன், பதிலாக.
இல்லை சக்கு, வீணர்களின் சதி என்றார் மூர்த்தி. அவருடைய கருத்து எனக்குப் பிடிக்காவிட்டாலும் அதில் கலந்திருந்த உருக் கம் என் மனப்புண்ணை ஆற்றியது போலியாக ஒரு விளிம்பைப் புலப்படுத்தும் வானத்தை எத்தனையோ தடவைகள் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் எத் தனையோ விதமான வினோதங்களையும் வேடிக்கைகளையும் மிதக்க விடுகிற வானத்துக்கு அவற்றால் ஏதாவது பலன் ‘உண்டா என்ற சந்தேகம் எழுந்து எனக்கு சஞ்சலத்தைக் கொடுத்ததில்லை.
“சக்கு! விழிகளிலிருந்தும் பார்க்காமலிருப்பது, செவிகளி -லிருந்தும் கேட்க மறுப்பது, இளமையிருந்தும் இன்பத்தை ஓதுக்கி வைப்பது இவை அத்தனையும் ஒரேவிதமான மடமைகள்தாம் என்றார் மூர்த்தி.
புனிதமே உருவான பெண்மையைச் சிதைத்துச் சித்திரவதை ‘செய்வதைப்போலத் தோன்றின அவருடைய அந்தச் சொற்கள்!
”மூர்த்தி! நான் ஒருபெண் என்றுதானே நாக்கில் கொஞ்சங் கூடக் கூச்சமில்லாமல் பேசுகிறாய் உலகின் வலிவற்ற தன்மை யைச் சாதகமாக்கிக்கொண்டு சூறையாடும் எவரையும் நான் வெறுக்கிறேன் என்று சொல்லும் நீயா என்னிடம் இப்படி…?”
“பைத்தியமே! உலகை உண்டாக்கி அதில் உன்னைப் படைத்த கடவுள் உலகுக்குப் பருவ வேறுபாடுகளையும் உனக்கு உணர்ச்சிகளையும் உண்டாக்கித்தானே வைத்திருக்கிறார். பாத் திரம் சூடேறும்போதும் குளிரும்போதும் அதற்குள்ளே இருக்கும் பால்மட்டும் மாறாமல் அப்படியே இருக்குமோ ? கோடையில் குளிர்ச்சியையும் மாரியில் கதகதப்பையும் எந்த உடலும் தேடத் தானே வேண்டும் !”
தடித்து மரத்துப்போன உடலும் உள்ளமும் படைத்த ஒரு வேசியிடம் பேசவேண்டிய பேச்சையா மூர்த்தி என்னிடம் பேசி யது…… !
பட்டுப்போயிருந்த என் உள்ளம் பற்றியெரியத் தொடங்குவதை உணர்ந்தேன்.
“மூர்த்தி ! வெறி உன்னை அலைக்கழிக்கிறது.’
“இல்லை சக்கு ! விவேகம் உன்னை கரையேற்றத் தூண்டுகிறது”
வீசியெறிந்த பந்து எதிலோ மோதித் திரும்பி வருவதைக போலான இந்தப் பேச்சுக்கள் எனக்கு ஆத்திரீத்தையும் அவ மானத்தையும் உண்டாக்கின.
“சீ ! போவெளியே ! வேலியில்லாத் தோட்டங்கள் எங்பே யிருக்கின்றன என்று தேடித்திரியும் வெறிபிடித்த ஆட்டுமந்தை யைச் சேர்ந்த உனக்கு இந்த வீட்டில் நுழையும் உரிமைகூடக் கிடையாது !”
உள்ளத்தில் கொழுந்துவிட்ட தீயிலிருந்து கிளம்பிய கனல் பொறிகள் என்னையும் அறியாமலே வெளியே தெறித்துவிழுந்தன. முகத்தை மூர்த்திக்கு எதிர்ப்பக்கம் திருப்பிக்கொண்டேன்.
“போகிறேன் சக்கு ! ஆனால் ஒன்றேயொன்றை உன்னிடம் சொல்லிவிட்டுப் போகிறேன்-நீ கேட்டாலும் கேட்காவிட்டாலும் சிறுவயதிலிருந்தே நாம் இருவரும் சேர்ந்தே வளர்ந்தோம். ஒத்துப் பழகினோம். உள்ளம்விட்டு உறவாடினோம். என்னுடைய தேவைகளை நான்கூட உணர்ந்ததில்லை. நீதான் தெரிந்துகொண்டாய் நீயில்லாத நான் நீரில்லாத ஓடை…… நானில்லாத நீ முட்களற்ற கடிகாரம்…….. நாம் இருவரும் ஒன்றுபடாத நம் வாழ்க்கை மகரந்தப்பொடியை இழந்த மலர் !”
இதை சொல்லிவிட்டுப் பதிலுக்காக வெகுநேரம் காத்திருங் தார் மூர்த்தி. என் இதயத்தில் சிலைகளாக இருந்த சீதையும் சாவித்திரியும் இந்த உருக்கமான பேச்சில் நான் தடுமாறிப் போகாமல் தடுத்தனர்.
“சரி சக்கு! நான் போகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் மறந்துவிடாதே! கட்டில்லாத பெண்களுக்கு இருக்கும் கட்டழகு அவர்களுடைய அழிவுக்குத் தூண்டில் முள்!”
இத்தோடு மூர்த்தி போய்விட்டார். ஆனால் அவர் சொல்லி விட்டுப்போன வார்த்தைகள் மட்டும் என்னைவிட்டுப் போக மறுத்தன.
சிதைந்துபோன அந்த மலர்த் தோட்டத்திலேயே என் சிந் தனைகளையெல்லாம் செலுத்தி வேறெந்த நினைவும் என் உள்ளத். தில் புகாமல் கவனித்துக்கொண்டேன். காலைக் கதிரவன் உதித்த வுடன் அருகிலிருந்த குளத்துக் கமலமும் மலர்ந்தது. இதழ் அத் தனையையும் ஒன்றுகூட விட்டுப்போகாமல் விரித்துத் தன் இதயத் தையே பகலவனுக்குத் திறந்து காட்டினாள் பத்மாவதி! அவள் உள்ளத்தை ஆண்ட கதிரவனுக்கு இந்த உலகத்தைக் கட்டியாளு வது கடினமாத் தோன்றவில்லை, உலகின் இளமை உணர்ச்சி களுக்கெல்லாம் உயிர்கொடுத்து எண்ணத்துக்குட்படாத அரும் பெரும் செயல்களைக்கூடச் செய்ய வைத்தான் ஆதவன். கடைசியில் அவனும் களைத்துப்போனான். உடனே ஒளியை அவனிட மிருந்து இரவல் வாங்கிக்கொண்டு ஓடோடி வந்தது வெண்ணிலா சொந்த ஒளியில்லாத அந்த மந்த மதியைக்கூடக் காதலிக்க ஒரு அல்லி காத்திருந்தது. சின்னஞ்சிறு மலரின் சிந்தையைக் கவர்ந்து சிரிக்கவைத்த சந்திரன் மனித இதயத்தின் மென்மையின் உணர்ச்சிகட்குப் போதையூட்டி இன்பத்துக்கு மெருகு தீட்டினான். குளத்து மலர்களான அல்லிக்கும் தாமரைக்கும் அந்தஸ்தைக் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் போட்டி போட்டுக்கொண்டு முனைந்தது. கரையில் வளர்ந்திருந்த ஒரு பவள மல்லிகைக்கு வேதனையைக் கொடுத்தது.
அது மலரும் நேரம் உலகம் அயரத் தொடங்கும் இராக் காலம். ரசனைக்குத் தேவையான பொறுமையோ நிம்மதியோ இல் லாத பாவநினைவுகள் ‘உலகத்தைப் படையெடுக்கும் அந்தக் காலத்தில் அனாதையாகப் பருவமடைந்த அந்த மலர்…! ஏக்கம் அந்த மலரின் இதயத்தை வெடிக்கச் செய்ததால் இரத்தங்கசிந்து, அதன் உடல் எல்லாம் உதிரச்சிவப்பாக உருமாறியது! ஆனால்… அதற்கு தோழியாக நானொருத்தி இருக்கிறேன் என்பதை ஏன் தான். அந்த மலர் மறந்து போனதோ தெரியவில்லை!
லேசாக வேதனை படர்ந்த வேட்கை என்னை உலகிலுள்ள அத்தனை பொருள்களையும் வெறிக்க வெறிக்கப் பார்க்கத் தூண் டியது. உரிமையோடு கவிழ்ந்திருக்கும் என் தலையைக் கன்னங் களின் விரல்கள் படும்படி முகவாய்க்கருகே பிடித்து நிமிர்த்த ஒரு கரம் – முகத்தைப் பதித்து என் காதுகள் வழியாக உள்ளே ஓடும் கடிகாரம் நிதானந்தவறாமல் ஓடுகிறதா என்று கவனிக்க ஒரு மார்பு – வெப்பத்தால் உலர்ந்து போகும் உதடுகளை உமிழ்நீரால் நனைத்துத் தண்மைப்படுத்த ஒரு ஜோடி உதடுகள்-அரவணைத்து ஆதரித்து வாழ்வின் அல்லல் தெரியாமல் என்னை காக்க ஓரு மனித இதயம்- இதுவரையில் எனக்குப் புரிந்திராத அந்தப்புதிரை உடல் உள்ளம் உயிர் ஒன்றும் நோகாமல் விளங்கவைக்க ஒரு …?’ என்னைச் சுற்றிப் படையெடுத்த பாவ நினைவுகள் எப்படியாவது என் இதயத்துக்குள் நுழைந்துவிட என்னென்னவோ முயற்சிகள் செய்தன!
5
கோடை கொப்பளித்தது, கண்களுக்கு முன்னால் கானலைக் காட்டிகருத்தை அலைக்கழிக்கும் கடும் வெய்யில், வெப்பத்தால் நீர்வறண்டு போனதால் உலகிலுள்ள அத்தனைப் பொருள்களும் நிறங்குன்றிக் காணப்பட்டன. தளிரிலைகள் கூடத் தணலால் தகிக்கப்பட்டுச் சருகுகளாயின. என் உடலை ஓவியமாக ஆக்கிக் காட்டிய அந்த அழகை அழிக்க நானும் கோடையை என்வாழ்வில் புகுத்தினேன். உபவாசம்-பூஜை ஓய்வில்லாத உழைப்பு! எண் ணெயைக் காணாமற் போனதால் என் தலைமயிர் இரத்தஞ்செத்து வெளுத்தது. ஆண்களுடைய பார்வையைப்பற்றி யிழுக்கும்படிப் பெண்கள் இருக்கக்கூடாது! “என்று ஆனந்தியின் தந்தை சொன்ன அந்தச் சொற்களை என் வாழ்வில் அமைத்தேன். என் உடல் ஒடியும் எலும்புக்கூடானது-உள்ளம் உணர்ச்சியற்ற கற் பாறையாக உறைந்தது! எங்கள் வீட்டில் மாட்டப்பட்டிருந்த காளிதேவியின் உருவத்துக்கும் கண்ணாடியில் தெரிந்த என்தோற் றத்துக்கும் வேற்றுமையே இல்லாமல் போனது. கொதிக்கும் கண்கள்-கோரைப்பற்கள்-குருதியைக் கொப்பளிக்கும் கொடு மையே உருவான நாக்கு! என் வாழ்வு அழிந்ததுபோலவே உலகில் உள்ள அத்தனை பேருடைய வாழ்வும் ஏன் அழிந்துபோகக் கூடாது என்ற எண்ணம் என் இதயத்தில் மெல்ல மெல்ல உரு வாகி. உயிர்பெற்றது!
அறிவுக்கும் அனுபவத்துக்கும் இடையிலிருந்த அந்தத் திரை கிழிந்த அந்தநாள்…!
நீண்ட இடை வேளைக்குப் பிறகு ஒருநாள் ஆனந்தியின் தந்தை என்னைத் தேடிவந்தார்.
“அம்மா சக்கு! அழுது பலன் என்ன? அவரவர் கொடுத்து வைத்தபடி தானே நடக்கும்”
தேடித்திரியும் கலங்கரை விளக்கு தென்படாமல் போகவே திகைத்து நிற்கும் கப்பல் மாலுமிபோலக் கலங்கி நிற்கும் எனக்கு ஆறுதல் எப்படி ஏற்பட முடியும்?
“இன்றைக்கு ஆண்டவன் திருப்பணிக்காக ஆட்டக்கச்சேரி வைத்திருக்கிறோம். நம்ம ஆனந்தி தான் ஆடப்போகிறாள் நீயும் ஒரு டிக்கட்…”
அதற்குமேல் என்னென்னவோ சொன்னார்-என் காதுகளில் விழவில்லை. ஆண்டவனுக்காக ஆனந்தி ஆடுகிறாள்! ஆண்டவ னுக்கு பணந்திரட்ட ஆட்டக்கச்சேரி ஏற்படுத்தவேண்டிய அள வுக்கா உலகின் அறிவு அஸ்தமித்துவிட்டது? மற்ற ஆண்கள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாலும் பத்தினித்தன்மை பறந்தோடி விடும் என்ற பாடத்தை எனக்குக் கற்பித்த அவர் தன் மகளைப் பல ஆண்களுக்கிடையில் உடலை நெளித்து வளைத்து…. சீச்சீச்சீ-… இதென்ன அவமானம்?
“ஆனந்தி ஆடப்போகிறாளா?”
“என்னம்மா இதில் ஆச்சரியம், ஆண்டவனே தில்லையில் ஆடவில்லையா?”
இதைச் சொன்னதோடு அவர் சும்மாயிருந்திருந்தால் ஏதும் நடந்திருக்காது. பைக்குள்ளிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்தார். அதில் அச்சிடப்பட்டிருந்த ஆனந்தியின் உருவத்தை!” புயல் – பூகம்பம் எரிமலை இவைகளே உருவான ஒரு பிரளயமே என்மனதில் உருவாகியது. கழுத்துக்கும் இடுப்புக்கும் இடையில் மறைப்பு ஏதுமில்லாத அந்தப் பாகத்தில் இறுக்கிக்கட்டப்பட் டிருந்த ஒரே சாண் அளவுள்ள கச்சை “குளோசப்” காட்சி போலத் தோன்றியது. இதைப் பார்த்தவுடன் என் உடல் வெட்கத் தால் குறுகிச் சிறுத்தது.
“இதென்ன அலங்கோலம்? பார்வையைப் பற்றியிழுக்கும் ரோஜாவைப்போலப் பெண்கள் இருக்கக்கூடாது என்று சொன்ன நீங்களா உங்கள் மகளை..?”
“என்னம்மா பைத்தியமாக இருக்கிறாய்? உடலைப்பார்த்து மயங்கும்படி இருந்தால்தானே ஓடோடி வந்து பார்க்க உலகமே முன்னுக்குவரும். கடவுள் கைங்கர்யத்துக்கும் பணம் சேரும்!”
“அதற்காக உம் மகளை உடலைத் திறந்துபோட்டுக் காட்டச் சொல்கிறீரா? விவஸ்தைகெட்ட ஜாதி என்று எனக்குத்தெரிந்திருந்தால் உம் முகத்தைக்கூடப் பார்க்க துணிந்திருக்கமாட்டேனே!”
“சீ! என்னடி இது குரங்குக் குட்டியாக ஆனால் தாய் தாண்டி னாலும் தடுமாறினாலும் அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும்! நாங்கள் சொல்வதைப் பின்பற்றுவதாயிருந் தால் எல்லாவற்றையுந்தான் கேட்கவேண்டும். ஒன்றுகசக்கிறது, மற்றொன்று இனிக்கிறது என்று சொல்லலாமோ?”
சுரீர் என்று தைத்த அந்தச் சொற்கள் என் உயிரையே சுருட்டின. திடீரெனக் கிடைத்த பணம்-பணத்தால் உயர்வைத் தேடிய நாங்கள் என் இதயத்தைக் கவர்ந்த மூர்த்தி – அறிவுக்குத் திரையிட்ட, அந்தஸ்து-வாழ்வுக்கு வேலியிட்ட ஆச்சாரங்கள்- வானத்திலிருந்து ஒளிவிட்ட அருந்ததி! உதிரும் தாரகை உடனே மறைந்து போவதைப்போல ஒவ்வொன்றாக உருவாகி அழிந்தன !
நீர் நிறைந்த விழிகளை வானத்துக்கு நேரே நிமிர்த்தினேன்! பால்வண்ணநிலா என்னைப் பார்த்துச் சிரித்தது. குளத்துத்தாமரை என்னைப்போலத் துவண்டுகிடந்தது. காலைக் கதிரவன் ஒளிகண்டு மலர்ந்திருந்த அந்தத் தாமரையிடமிருந்து ஒரு புன்சிரிப்பை வர வழைக்கப் போதுமான சக்திகூட இல்லை அந்தப்போலி நிலாவுக்கு.
என்னென்னவோ நினைவுகளால் படுக்கையில் படுத்துப்புரண் டேன். கசிந்த கண்ணீரால் நனைந்த அதைத் தலையணிகூடக் கற்பாறைபோலக் கடினமாக இருப்பதை உணர்ந்தேன். யாரோ ஆதரவோடு என் முதுகைத்தொட்டார்கள். திரும்பிப் பார்த்தேன் மூர்த்தி!
“கேள்விப்பட்டேன் சக்கு எல்லாவற்றையும்! அந்தக் கூட் டமே அப்படித்தான்! இரும்புப் பிடியாக எதையும் பற்றிக்கொண்டு நம்மைப்போலப் பாழாகமாட்டார்கள். அடுத்த சிகரட்டைப் பற்றவைத்துக்கொண்டு புகைத்து முடித்த சிகரட்டை வீசியெறி வதுபோலத்தான் அவர்களுடைய ஒவ்வொரு பண்பும், செயலும், வழக்க வழக்கமும்!”
“மூர்த்தி! அதனால் நான் வீணாகத்தான் போகவேண்டுமா?”
“சக்கு! புரிகிறது உன் பேச்சு. ஆனால் நான் எடுத்திருக்கும் அந்த வேலை…! இந்தச் சமுதாயம் இரண்டே ஜாதிகளைத்தான் உண்டாக்கியிருக்கிறது. ஒன்று மானத்தைப் பறிகொடுத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் ஜாதி- மற்றொன்று தேவைகளைத் தியாகம் செய்து மானத்தைக் காக்கும் ஜாதி! மானத்தையும் விடாமல் தேவைகளையும் பூர்த்திசெய்து எவராலும் புது ஜாதியை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த வேலை முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.”
இதைச் சொல்லிவிட்டு மூர்த்தி மேலே நடந்தார். அவர் என்னிடமிருந்து விலக விலக உளைச்சேற்றில் ஒவ்வொரு அங்குல மாக உயிரோடு என்னை யாரோ திணிப்பதைப்போலத் தெரிந்தது!
என் உள்ளத்திலிருந்து ஒரு குரல் அதை உடைத்துக் கொண்டோடி வர என்னென்னவோ முயற்சிகள் செய்தது. அதைத் தடுத்து நிறுத்திக்கொண்டேன்.
“இரு மூர்த்தி நானும் வருகிறேன். ஒத்து வளர்ந்த நாம் சேர்ந்து வாழாவிட்டாலும் தொண்டு செய்வதிலாவது ஒன்று படுவோம்!”
நான் வெளியில் சொல்லாத அந்தச்சொற்கள் வேதனையைத் தணித்தன. பிணமான மனிதன் எலும்புக்கூட்டைப் பக்குவப் படுத்திப் பள்ளிக்கூடத்தில் பாடங்கற்பிக்கப் பயன்படுத்துவதைப் போல நாலும் நலிந்துபோன என் வாழ்வை……!
– நிலவும் தாமரையும், முதற் பதிப்பு: 1961, கே.ஆர்.நாராயணன் வெளியீடு, சென்னை.
![]() |
தி.கோ.சீனிவாசன் (டி.கே. சீனிவாசன் - Tamil Wiki) தமிழ்நாட்டின் ஒரு முன்னணி அரசியல்வாதி, எழுத்தாளர், இதழாசிரியர் மற்றும் சிறந்த பேச்சாளர் ஆவார். திராவிட இயக்கத்தில் இவரது ஆழமான சிந்தனைகள் மற்றும் பங்களிப்பிற்காக இவர் "தத்துவ மேதை" என்றும், பேரறிஞர் அண்ணாவால் "சின்ன அண்ணா" என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். முக்கிய குறிப்புகள்: பிறப்பு: நவம்பர் 14, 1922 அன்று கோதண்டபாணி - அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அரசியல் பயணம்: தொடக்கத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அம்மாவின் பிறந்த நாள்
ரா.நீலமேகம்
October 9, 2026
மகிழம் பூக்கள்..!
ரகுராமன் சீனிவாசன்
October 9, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 9, 2026
