துறவியின் டைரிகள்





சில்மிஷம் செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போல அமைதியாக இருந்தது அந்தக் காடு. காற்றில் ஈரமான பைன் ஊசிகளின் நறுமணம் கலந்திருந்தது. காலையில் ஒரு தோள் பையுடன் ஹைக்கிங் செய்வதற்காக கிளம்பிய அந்த மூவரும் வழி தவறி மேற்கொண்டு எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
“இங்கே ஒரு பாதை கூட இல்லையே! இனி மேல் எங்கே போவது?” என்றாள் ஸ்ரேயா.
“செல் சிக்னல் துளிக் கூட இல்லை. நடுக்காட்டில் நன்றாக மாட்டிக் கொண்டோம்,” என்றாள் பாவ்யா. அவள் குரலில் லேசான நடுக்கம்.

மாலைக் காற்றில் மரக் கிளைகள் லேசாக முன்னும் பின்னும் அசைய, “அதோ, அங்கே ஒரு குடில் தெரிகிறது!” என்று உற்சாகத்துடன் கூவினான் சேகர்.
“அங்கே யாராவது இருந்தால் அவர்களைக் கேட்போம்,” என்று நடக்க ஆரம்பித்தாள் பாவ்யா. மற்ற இருவரும் அவளை பின் தொடர்ந்தனர்.
குடிலை நெருங்கியதும் அவர்கள் உற்சாகத்தில் மண் விழுந்தது. பாழடைந்த அந்தக் குடில் புயலில் அடிபட்டது போல இருந்தது. கூரையில் ஆங்காங்கே பெரும் ஓட்டைகள். ஜன்னல் மரக் கம்பிகள் உடைந்தும் நெளிந்தும் இருந்தன. வாசல் கதவிற்கு முன்னே செடிகொடிகள் அடர்த்தியாக படர்ந்திருந்தன. மருந்துக்குக் கூட அங்கே மனித வாடை இல்லை.
திரும்ப வேண்டியது தான் என்பது போல் உதட்டைப் பிதுக்கினாள் பாவ்யா. அதற்குள் சேகர் குடிலின் வாசல் கதவைத் தள்ளி திறந்து விட்டான். முன்னே இருந்த செடிகொடிகளைத் தள்ளி விட்டு தயக்கம் கலந்த ஆர்வத்துடன் மூவரும் உள்ளே நுழைந்தனர்.
கூரையின் ஓட்டைகள் வழியே உள்ளே பாய்ந்த சூரிய ஒளி குடிலுக்குள் இருந்த பொருட்களை பட்டியலிட்டது: ஒரு கிழிந்த கட்டில், கரி பிடித்த அடுப்பு, காலுடைந்த மேசை, அதன் மேல் ரசம் போன கண்ணாடி.
“ஒரு துறவி இங்கு வாழ்ந்தது போல் தெரிகிறது,” என்றான் சேகர் மேசையிலிருந்த தூசியில் ஒரு நீண்ட கோட்டை இழுத்துக் கொண்டே.
“வெறும் துறவி மட்டுமல்ல, புத்தகம் படிக்கும் துறவி,” என்றாள் ஸ்ரேயா மூலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை சுட்டிக் காட்டியபடி.
ஒரு புத்தகத்தை எடுத்த பாவ்யா அட்டையிலிருந்த தலைப்பைப் படித்தாள். “2020” பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தவள் நிமிர்ந்து பார்த்தாள். “இது ஒரு டைரி.”
“ஓ, டைரி எழுதும் துறவியா? எழுதுவதற்கு அவருடைய வாழ்க்கையில் சுவாரஸ்யமாக ஏதாவது நடந்ததா என்ன?” என்றான் சேகர் நக்கலாக.
“அவருடைய வாழ்க்கையில் நடந்தது எதுவும் இந்த டைரியில் இல்லை. 2020ம் ஆண்டு உலகில் நடந்த முக்கியமான விஷயங்கள் இதில் இருக்கின்றன. அமெரிக்க தேர்தல், கோவிட் நோய், அறிவியல் சாதனைகள்…”
ஸ்ரேயா ஆர்வத்துடன் இன்னொரு டைரியைக் கையிலெடுத்தாள். “2023” என்ற தலைப்பைப் படித்தவள் மேற்கொண்டு, “AIன் ஏற்றம், இஸ்ரேல் மீதான தாக்குதல், சந்திரயன்-3, ஒரு நாள் கிரிக்கட் உலகக் கோப்பை முடிவு என்று 2023ல் நடந்த முக்கியமான விஷயங்கள் இங்கே இருக்கின்றன! நடுக்காட்டில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் எப்படி எழுதினார்?” என்றாள் ஆச்சரியத்துடன்.
“ரொம்ப சிம்பிள்,” என்றான் சேகர் கீழே கிடந்த பாதி கிழிந்த Maggi நூடுல்ஸ் கவரைக் கையிலெடுத்தபடி. “நம்முடைய துறவி நண்பருக்கு வெளி
உலகத்துடன் தொடர்பு இருந்திருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்.”
“கூடவே அவர் ஒரு வரலாற்று ஆர்வலராக இருந்திருக்கலாம். பொழுது போகாமல் வரலாற்றை பதிவு செய்யலாம் என்று புக் புக்காக எழுதி தள்ளியிருக்கிறார்.”
குடிலுக்குள் இப்போது சூரிய ஒளி குறைந்து இருள் பரவ ஆரம்பித்திருந்தது. பாவ்யா தயக்கத்துடன், “எனக்கென்னவோ இந்த இடம் ஒரு மாதிரியான உணர்வைக் கொடுக்கிறது. நாம் கிளம்பலாமா?” என்றாள்.
ஸ்ரேயா 2023 டைரியைக் கீழே வைக்க முற்பட்ட போது, அதன் பின்னால் இன்னொரு டைரி ஒட்டியிருப்பதைக் கவனித்தாள். கவனமாக அதைப் பிரித்து அதன் அட்டையை பார்த்தாள்.
அதன் தலைப்பு ‘2057’ என்று இருந்தது.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |