துரோகிகள்

கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் – உடல்கள், கந்தலாகித் தொங்கும் சட்டைகளோடு, ஜின்னா நகர் தெருவில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்களான அந்த ஐந்து பேரும் விந்தியும், நொண்டியும் நடந்தனர். முழங்கால் மூட்டுகள் பெயர்ந்துவிடுகிற அளவுக்கும், உள்ளங்கால் தோல் பிய்ந்துபோகிற அளவுக்கும் போலீஸ் பாடம் புகட்டியிருந்தது. ஒவ்வொரு அடிவைப்பிலும் வலி உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை தெறித்தது. அவர்களின் கால்கள், ராஞ்சிக்கும் தன்பாத்துக்கும் மத்தியிலுள்ள நிலக்கரி நகரான ஹசாரிபாக்கின் பழக்கப்பட்ட தெருக்களில் ஊன்றி நடக்க சிரமப்பட்டன.
மக்களுக்குக் காட்சிப்படுத்தி அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸார் அவர்களை ஊர்வலமாகத் தெருவில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். காஃபிர் குடியிருப்புவாசிகளின் கூட்டம் ஆவலோடு பக்கவாட்டுகளிலும் பின்னாலும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நடந்தும் வாகனங்களிலும் செல்கிற வழிப்போக்கர்களும் நின்று வேடிக்கை பார்த்து, என்ன குற்றம் எனக் கேட்டறிந்து, “குண்டர் தடுப்பு சட்டத்துல அடைக்கணும்”, “என்கௌண்டர் பண்ணணும்”, “ஓட ஓட பாகிஸ்தானுக்கே அடிச்சு விரட்டணும்” என ஆவேசமாகச் சொல்லிவிட்டுச் சென்றனர்.
சுற்றியிருந்தவர்கள் – இந்துக்களும், சீக்கியர்களும், ஏன் சில முஸ்லிம்களும் கூட – இவர்களை வெறுப்புடன் பார்த்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொதுவாக இந்து – முஸ்லிம் சமூகங்களிடையே நல்லிணக்கமே நிலவுகிறது. இருப்பினும் சில சமயங்களில், குறிப்பாக பண்டிகை ஊர்வலங்களின்போது அல்லது அரசியல் ரீதியாகத் தூண்டப்படும்போது, மத மோதல்கள் எழுகின்றன. சமீப காலங்களில் ராம நவமி, ஹனுமான் ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது மத ஊர்வலங்கள் மசூதிகளுக்கு அருகிலோ, முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளிலோ செல்லும்போது பதற்றம் ஏற்படுகிறது.
இந்து – முஸ்லீம் கலவரம் என்கிற விஷயத்தில் இந்த மாநிலத்துக்கும் சில வரலாற்றுப் பெருமைகள் இருக்கவே செய்கின்றன. 1967 ராஞ்சி – ஹாடியா கலவரத்தில், உருதுக்கு எதிரான மாணவர் ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. 184 பேர் கொல்லப்பட்டனர், இதில் 164 முஸ்லிம்களும், 19 இந்துக்களும் அடங்குவர். 195 கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. அதுதான் மாநிலத்தின் மாபெரும் கலவரம். அப்போது இந்த வீரர்களின் தந்தையர்களில் ஓரிருவர் குழந்தைகள்; மற்றவர்கள் பிறந்திருக்கவில்லை.
2022 ராஞ்சி வன்முறை, இவர்கள் நன்கு அறிந்தது. அதன் காரண காரியமோ, இவர்களின் ரத்தத்தை அமிலமாகக் கொதிக்கச் செய்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே ஊரில் மகா சிவராத்திரி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை நிறுவுவது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. கற்கள் வீசப்பட்டு வாகனங்கள் எரிக்கப்பட்டன. அதில் இவர்களில் கைசர், ஜவாஹிருல்லா, தாரிக் மூன்று பேருக்கும் பங்கு உண்டு.
அப்படிப்பட்ட நிலையில், பெஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்.
அதன் எதிர்வினையாக இந்தியா பாகிஸ்தான் மீது மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகள், பாகிஸ்தானிலும் காஷ்மீரிலும் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டை, பாகிஸ்தான் தொடர்ந்து செய்துவந்த அத்துமீறல் தாக்குதல்கள் யாவும் இந்தியாவில் உணர்ச்சிக் கொந்தளிப்பான அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியல், சமூகம், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பலத்த பரபரப்பு.
போர் நடந்த நாட்களில் இந்து மக்கள் இரவு முழுக்க விழித்திருந்து யூ ட்யூபில் செய்திகளும், நேரலை செய்திகளும் பார்த்து, பாகிஸ்தானுக்கு எதிராகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசுக்கு ஆதரவாகவும் கமென்ட் இட்டுக்கொண்டிருந்தனர். முஸ்லீம்கள் ஒருவர் கூட கருத்துத் தெரிவிக்கவில்லை. இது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது. இஸ்லாமியர்களின் தேசப் பற்றின்மை, தேசப் பற்றாளர்களான இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த ஜின்னா நகரில் சில இந்துக்கள், “இஸ்லாமியர்களுக்கு மதப்பற்றும் மதவெறியும்தான் இருக்கும். தேசப் பற்று இருக்காது. முஸ்லீம் நாடா இருந்தா மட்டும்தான் தேசப்பற்று இருக்கும்” எனப் பேசியது இவர்களுக்குத் தெரியவந்தது.
பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியர்களான இந்த ஐவரும் டீக்கடை, சலூன், மற்றும் தெருவோரப் பகுதிகளில் இருந்தபடி பொதுவெளியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் இடுவது ஆகியவற்றைச் செய்யலாயினர். யாரோ போலீஸுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து லாடம் கட்டி, முட்டி உடைத்து, உடலெங்கும் லத்தி ஒத்தடம் கொடுத்துவிட்டனர்.
ஐந்து பேரில் குண்டானவனும், மூத்தவனுமான கைசர், வலியால் முனகியபடியே சொன்னான். “எந்தக் காஃபிர் பன்னிக போலீஸுக்குப் புகார் சொல்லுச்சுன்னு தெரியல. நாம திரும்பி வந்ததும் அவனுகள சும்மா விடக்கூடாது!”
தாரிக், குரலைத் தணித்துக்கொண்டு சொன்னான். “இந்துக்கள் யாருமல்ல, பாய்; இப்ப நம்ம கூடவே வேடிக்கை பாத்துட்டு வந்துட்டிருக்கற நம்ம ஆளுகதான்!”
ஜவாஹிருல்லாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. “அப்படியா? எதிரிகளைக் கூட மன்னிக்கலாம். துரோகிகளை உயிரோடவே விடக்கூடாது!” என்றான் கொலைவெறியோடு.
– நடுகல் இணைய இதழ, 2025 ஜூன்.
22-04-25 அன்று காஷ்மீரில் நிகழ்ந்த இஸ்லாமிய மத பயங்கர்வாதத் தாக்குதல் மற்றும் அதன் எதிர்வினையாக நிகழ்ட்தப்பட்ட ஆப்பரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் அடிப்படையில், பெஹல்காம் பயங்கரவாதக் குறுங்கதைகள் என்ற தலைப்பில், நடுகல் இதழில் நான் எழுதிய நான்கு குறுங்கதைகளில் ஒன்று இது.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 118
