கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 1,071 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘நீ பிறந்ததிலிருந்து வாழ்க்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்து கொண்டிருக்கிறாய்… சாவை நோக்கிச் செய்யும் பயணந்தான் வாழ்க்கை!’

அகாம வினையாக தெருவிளக்கை நோக்கி ஒருவன் நடந்து கொண்டிருந்தான். இருள் எவ்வளவு தூரம் தன்னைப் பிரிந்து செல்கின்றது என்பதை அளவிடும் எண்ணம் உதித்தது. அப்பொழுது, ஓர் இருள் உருவம் தன்னைக் கெட்டியாகப் பின் தொடர்வதை உணரலானான். விளக்கை நெருங்க நெருங்க அவ்வுருவம் சிறுத்து வருவதையும் அவதானித்தான். 

விளக்கின் பூரண வெளிச்சத்தின் கீழ் நின்று திரும்பிப் பார்க்கிறான். உருசிறுத்துப் பின்தொடர்ந்த அந்த உருவத்தைக் காணவில்லை. மனப்பிராந்தியோ என்ற மலைப்பு முகங்காட்டி மறைய…….. 

பயணம் தொடர்ந்தது. இப்பொழுது தெருவிளக்கை முதுகிட்டு நடக்கும் பயணம். 

பின்னாலே துரத்தி வந்த உருவம் முன்னால் நீளத் தொடங்கியது. 

பயணத்தின் நிழல் மனத்திலே சாய்ந்தது. அதனைப் போக்க, அந்த உருவத்துடன் பேச்சுக் கொடுக்க விழைந் தான். 

‘நீ யார்?’ 

‘நான் நீயே தான்.’ 

‘அஃது எவ்வாறு?’ 

‘நான் உன் நிழல்!’ 

‘ஓகோ, நான் என்ற அசலின் போலியா நீ ? அப்படி யானால், நீ ஏன் என்னைச் சுற்றி அலைகின்றாய்?’ 

‘நான் போலியா ? இன்னொரு விதத்திற் பார்த்தால் நான் அசலும், நீ போலியும் எனக் கூறுவது கூடப் பொருத்த மாக இருக்கும். நீ பிறந்த வேளையிலேதான் நானும் பிறந்தேன். நித்திய தத்துவம் ஒன்றின் விளக்கமாக அரன் என்னை உன்னுடன் படைத்தனன். அந்த அளவில் நானும் அசலே!’ 

‘பிதற்றுகின்றாய். நீ அசத்து. நானும் ஒளியும் இல்லா மல் நீ எவ்வாறு தோன்றினாய்?’ எனத் தனது அறிவு வாதத்தால் அதன் கூற்றை மடக்கப் பார்த்தான். 

‘நீ தூல வடிவங்கள் பற்றிப் பேசுகின்றாய்…. சூக்கும மாகிய மாயையினின்றும், தூலமாகிய கலாதியும், அவற்றின் தூலமாகிய மூலப்பகுதியும், அதனினுந் தூலங்களாகிய குணதத்துவம் முதலாயினவும் தோன்றுமெனவும் சிலர் கருதுவர்-இதோ பார்! நீ பிறந்ததிலிருந்து வாழ்க்கை கிடைத்துவிட்டது என மகிழ்ந்து கொண்டிருக்கின்றாய். உண்மை என்னவென்றால், சாவை நோக்கிச் செய்யும் பயணந்தான் வாழ்க்கை, பிறப்பு என்பது சாவின் நுழை வாயில். அரன் என்னும் ஒளியுடன் நீ கலக்கும்பொழுது நீயும் நானும் ஒன்றேயாகி அவனே யாவோம். சம்சார சக்கரங்களைக் கடந்த நித்திய நிலையும் அதுவே….அந்த ஒளியிலிருந்து நீ விலகி ஓடினால், சாவை நினைத்துப் பார்க் கும்படி எச்சரிக்கின்றேன். ஒளியை நாடி முன்னேறும் பொழுது உன்னுடன் அரனிற் கலக்கும் ஆசையில் அடி யொற்றி நடக்கிறேன். அதுவே நான் அதுவே நான் உன்னைச் சுற்றி அலைவதிலுள்ள தத்துவம்’ என்றது நிழல்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *