கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 7, 2026
பார்வையிட்டோர்: 5,158 
 
 
பெரும் செல்வந்தரான நீலகேசவ ராகவ மார்த்தாண்டம் பெரும் பொருட்செலவில் சகல வசதிகளுடன் கூடிய மாட மாளிகையை ஊருக்கு வெளிப்புறத்தில் சுற்றிலும் அகழியமைத்து அரண்மனை போன்ற வடிவில் கட்டியிருந்தார்.
தான் மன்னனாக இல்லாவிட்டாலும் யானைகள், குதிரைகள், பல்லக்கு என அரசருக்குரிய அனைத்து பரிவாரங்களையும் உருவாக்கி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அவருக்கு மகள் ஒருவள் மந்தாகினி எனும் பெயரோடு இளவரசியைப்போல பல பணிப்பெண்கள் புடைசூழ கொள்ளை அழகை அள்ளிப்பருகியவளாக வலம் வந்தாள்.
“மகளே மந்தாகினி. இப்படி அருகே வா. நமது குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தால் தேவலோக ரம்பையே வந்து எனக்கு மகளாகப்பிறந்துள்ளதாகக்கருதுகிறேன். உனதழகுக்கு இணையாக நமது நாட்டில் யாருமில்லை என பலரும் பேசிக்கொள்வதாக நான் வெளியில் நியமித்திருக்கும் ஒற்றர்கள் என்னிடம் கூறியது அளவற்ற மகிழ்ச்சியை எனக்கு தருகிறது. அதே சமயம் தீராத அச்சத்தையும் தருகிறது…” சொன்ன தந்தையை நன்றாக உற்று நோக்கினாள் மந்தாகினி. அவர் முகத்திலிருந்து வியர்வைத்துளிகள் தெறித்து விழுந்தன.
“யாராவது என்னை அபகரித்துச்சென்று விடுவார்களோ என நினைத்ததில் அச்சம் கொண்டுள்ளீர்கள் என்பது மட்டும் எனக்கு நன்றாகப்புரிகிறது. கவலைப்படாதீர்கள். உங்களுக்குத்தெரியாமல் எதுவும் நடக்காது…..”
“அப்படியென்றால் எனக்குத்தெரிந்து, எனது விருப்பத்துக்கு மாறாக எதுவும் நடந்து விடுமோ….?”
“தந்தையே…. எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியது தங்களது கடமையே தவிர விருப்பத்திற்கு இங்கு வேலையில்லை. விருப்பம் என்னுடையதாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாத ஒருவரை நீங்கள் விரும்புவதால் என்னால் மணக்க இயலாது…” என மகள் உறுதியாகக்கூறியதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் நீலகேசவ ராகவ மார்த்தாண்டம்.
தற்போது எதிர்த்துப்பேசுவதால் மகளின் மனநிலை பாதிக்கும் என கருதியதால் “எல்லாம் குல தெய்வத்தின் சித்தம்” என கூறி விட்டு மகளின் அறையிலிருந்து வெளியேறினார்.
பஞ்சு மெத்தையில் படுத்தும் உறக்கம் வராமல் தவித்தார். ‘மகளை, மாளிகையை விட்டு வெளியே விடாமல் வளர்த்தும், இதுவரை வெகுளியாக இருந்தவள் தற்போது பிடிவாதமாக உறுதியுடன் பேசுவதற்கு யாராவது பயிற்ச்சி கொடுத்திருக்க வேண்டும். பயிற்ச்சி கொடுத்தது அவளது மனம் கவரும் வகையில் இருக்கக்கூடிய புத்திசாலி இளைஞனாகத்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை மாளிகையில் நுழையக்கூட அனுமதிக்காத போது இந்த மனமாற்றம் எவ்வாறு சாத்தியம்?’ யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.
மொழியையும், வாழும் வழியையும் கற்றுக்கொண்டால் தான் வாழ முடியும். அதற்கு பாடசாலைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு செல்வதால் அழகிய மகளின் மீது பலரது கண்களும் படும் என நினைத்து தனது மாளிகைக்கே பண்டிதர்களை வரவழைக்க முடிவு செய்து, அதுவும் பெண் பண்டிதர்கள்தான் வர வேண்டும், தம்மைத்தவிர ஆண்களின் நிழல்கூட மாளிகைக்குள் விழக்கூடாது என யோசித்து பெண்ணையே நியமிக்க தனது மனைவி மயோகியிடம் உத்தரவிட்டிருந்த படிதான் மகளுக்கு ஐந்து வயது முதல் கடந்த பதினைந்து வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பியவர் இன்று முதலாக சந்தேகித்தார்.
யாராக இருந்தாலும் திரைக்கு மறுபக்கம் இருந்து தான் சொல்லித்தர வேண்டும் என்பது தான் முக்கிய நிபர்ந்தனை. மாடத்திலிருந்து பாடம் நடக்கும் அறையை நோட்டமிட்டார்.
திரை அசைந்ததும் திகைத்துப்போனார். சேலை கட்டிய பெண் தான். அடிக்கடி ஓலைச்சுவடியில் பாடம் சொல்லிக்கொடுப்பதோடு மகளது தேகத்தை தொட்டுப்பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பணிப்பெண்களை அழைத்து சோதிக்கச்சொன்ன போது, சோதித்த ஒரு பெண்ணிடமிருந்து அலறல் சத்தம் கேட்டு புரிந்து கொண்டவராய் உடனே தானே அறைக்குள் சென்ற போது பெண்ணுருவில் வேடமிட்டு வந்த இளைஞன் என தெரிந்ததும் கோபத்தில் அடிக்க கை ஓங்கியவர், திடீரென ஓங்கிய கைகளால் இளைஞரது கால்களைப்பற்றினார்.
தான் வாழும் வேதாந்த நாட்டின் மன்னர் மாறவர்மனின் ஒரே மகன், பட்டத்து இளவரசர் சேரவர்மன் தான் தனது மகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பெண் வேடமிட்டு வந்து காதலில் விழவைத்தவர் என்பதைத்தெரிந்ததும், துணிந்து அவரது தோள்களை அடிக்கப்பார்த்தவர் பணிந்து அவரது கால்களைப்பிடித்தார்.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *