கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2026
பார்வையிட்டோர்: 3,702 
 
 

(1953ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

7. ராமகிருஷ்ண பிள்ளை

இன்னும் கொஞ்ச நாளில் அவனுக்குப் பைத் தியமே பிடித்து விடும்… ஆமாம்….வேண்டியதுதான் அவனுக்கு….? என் மகனைக் கெடுத்து விட்டானே… பாபி….அவனுக்கு நன்றாக வேண்டும்…! உம்….அவனை இத்தோடு விட்டுவிட்டேனா….? அப்படி விட்டு விட் டால் என் பெயர் ராமகிருஷ்ண பிள்ளையாக இருக் காது…! பாலு கெட்டிக்காரன். சொன்ன காரியத் தைச் சரியாகச் செய்து முடித்துவிட்டான். இன்னும் என் வேலைதான் பாக்கியாக இருக்கிறது. அதுவும் முடிந்துவிடும்….அப்புறம் பிள்ளைவாள்…உங்கள் ஜென்ம வைரி மாணிக்கமுதலி பைத்தியம் பிடித்து அலைவதை உன் கண்ணால் பார்த்துச் சிரிக்கலாம். ஆமாம் கண்டிப்பாக. அப்புறம் ரகுவும் அவளை விட்டு விட்டு ஓடி வந்துவிடும்படி செய்வது ரொம்ப சுலபம்…! பாலுவால் அதுவும் செய்துவிட முடியும்….! என் குடும்பத்தை நாசமாக்கிவிட நினைத்த முதலி யாரும் அவன் குடும்பமும் அடியோடு நாசமாகி விடும். அஹஹா….என்னிடமா நடக்கும் ? ராமகிருஷ்ண பிள்ளை இருக்கிறானே….அவன் கால சர்ப்பம். ஆத் திரப்பட்டுத் தன் எதிரியைக் கண்டவுடனே பாய்ந்து காரியத்தைக் கெடுத்துக் கொள்கிற அறிவிலி அல்ல அவன். வேளை அறிந்து உயிரை வாங்குகிற வஞ்சகன் ஆமாம் வஞ்சகன் தான். என்னை வஞ்சிக்க நினைப் பவர்களுக்கு….?

மாணிக்க முதலியாரே….என்னென்ன மனக்கோட்டை கட்டினாய். பிள்ளைவாளின் மகன் நன்றாகப் படித்தவன். நிறையச்சம்பாதிப்பான். தவிர பிள்ளைக்கு ஒரே மகன் ஆனதால் எப்படி ஆனாலும் அவர் சொத் தும் அவனுக்குத்தான் வந்து சேரும். நாம் குபேரன் ஆகிவிடலாம் என்றெல்லாம் நீ திட்டம் போட்டிருப் பாய்…? இப்பொழுது என்ன ஆயிற்று….? என்ன தான் ஆயிற்று என்று கேட்கிறேன்….? உம்.. கெடு வான் கேடு நினைப்பான்….? நீ எனக்குக் கேடு நினைத் தாய்….நான் உனக்கு நினைத்ததில் என்ன தப்பு ? மாணிக்கமுதலியார் பிறருக்குக் கேடு நினைக்கமாட் டான் என்று சொல்வார்கள். ஆனால் அவன் எனக் குச் செய்தது என்ன என்பதை நான் எடுத்துக் காட்ட லாம் அல்லவா…?

இந்தக் காலத்தில் நல்லதும் கெட்டதும் பார்க்கக் கூடாது! மாணிக்க முதலியார் நல்லது கெட்டது பார்ப்பவனாக இருந்தால் என் மகனை என்னிடமிருந்து பிரித்துத் தன்னிடம் சேர்த்துக் கொண்டிருப்பானா….?

அவன் செய்ததை நாம் ஏன் செய்யக்கூடாது என்கிறேன்? பாபமாவது புண்ணியமாவது ? பிள்ளைவாள் நீர் புத்திசாலி…. உம்மிடம் பாபத்தின் பாச்சா பலிக் காது. உம்மை அதனால் அசைக்க முடியாது…. பணம் உள்ளவரை… உம்… தைரியமாக முன்னேறும்! உன் வழியில் செல்லு.. நீயும் ஒரு தலைவன். நீயும் ஒரு பேச்சாளன். நீயும் ஒரு பெரிய மனிதன். உலகம் புகழும் கனவான் … ஊருக்குள்ளே உனக்கு நிகர் நீதான். உன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசுவார். இருக்கக் கூடாது… உம் முன்னேறு….! பாலு உலகம் தெரிந்தவன் அவனை வழிகாட்டியாக வைத்துக்கொள் ஆஹா…

இன்று என் மனதில் அளவற்ற சந்தோஷம் குடி. கொண்டிருக்கிறது. இந்நேரம் மாணிக்க முதலியின் வயிறுபற்றி எரிந்து கொண்டிருக்கும். எரியட்டும்! நன் றாக எரியட்டும் ! பாலு இவ்வளவு நன்றாகக் காரியத் தைச் செய்து முடிப்பான் என்று நான் எதிர்பார்க் கவே இல்லை. வீட்டிலுள்ள நகை நட்டு, பாத்திரம் பண்டம் பணம் கிணம் எல்லாம் வைத்தவன் எடுத்தது போல் அடித்துக்கொண்டு வந்து விட்டான். அட் பாலு….இத்தனை திருட்டுச் சொத்தையும் என்னாப்பா செய்கிறது என்றால் நீங்கள் கவலைப்படாதீர்கள். மதறா ஸில் எனக்குப் பெரிய பாங்க் ஏஜெண்ட் ஒருவரைத் தெரியும் அவர் மூலமாக ரொம்ப சுலபமாக ஒழித் துக் கட்டிவிடலாம். நீங்கள் உலகம் தெரியாதவர் பயப் படுகிறீர்….உலகம் என் பாக்கெட்டுக்குள்ளே இருக் கிறது எனக்குப் பயம் இல்லை…! என்கிறான். எனக் கென்னவோ இன்னும் கூட உள்ளுறப் பயம் தான் !, எதற்கும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். அதனால் தான் திருட்டுச் சொத்துக்களை எல்லாம் நம்ம வீட் டுப் பக்கத்தில் வைக்கவே நான் சம்மதிக்கவில்லை.

உம். இப்படிப் பயப்பட்டால் எதிரியை வெல்ல முடியுமா? பாலு சொல்வதைப்போல் இந்த உலகத் தில் துணிவுள்ளவ னாலேயே பிழைக்க முடியும். கோழை நடுங்கிச் சாகவேண்டியதுதான். அவனுக்கு இந்த உலகத்திலே இடம் கிடையாது. மாணிக்கமுதலி யிடம் கந்தப்ப கவுண்டன் பணம் கொடுத்து வைத் திருந்தான். அவனைப் பார்க்கவேண்டும். சூட்டோடு சூடாக அவன் வீடு வாசல் நிலபுலம் எல்லாம் பிடுங்கிக் கொண்டு தெருவில் துரத்தினால்தான் என் மனம் நிம் மதியாகும். அப்பொழுதுதான் என் வயிறு குளிரும்!

பாலுவைச் சீக்கிரம் பட்டணத்திற்கு அனுப்பி யாக வேண்டும். திருட்டுச் சொத்துக்களை இனிமேலும் இங்கே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. உம் புறப் படுகிறேன். நம்ம காரியங்கள் இனித் துரிதத்தில் நடக்க வேண்டும்.

8. பாலு 

உலகம் நம்மைப் பார்த்து மிரள மிரள விழிக்க ஆரம்பித்திருக்கிறது. இனி அது பாலு என்ன செய்து விடுவானோ என்று பயந்து சாகவேண்டி வரும். உல கத்தை அவ்வளவு கஷ்டப்பட விட்டு விடக் கூடாது நாம் சீக்கிரத்தில் ஸ்விட்சர்லாந்துக்குப் போயாக வேண்டும். அப்புறம்….

உயர மலைகளின் மேலே பனிப் பாறைகள் தனிலே… உல்லாச மேல் நாட்டு லேடிகளோடே.. !கை யோடு கைசேர்த்து நாம் ஸ்கிப்பிங் விளையாடலாம்…! ஆஹா….பாலுவின் கனவுகள் நனவாகும் காலம் என்று?…. ஸ்விட்ஸர்லாந்துகூட பிரயோஜனம் இல்லை நம்மைப் போன்ற ஆள்களுக்கெல்லாம் அமெரிக்கா தான் லாயக்கு….! பியூட்டிகளோடே ரொமான்ஸும் பார்ச்சூன் ஹன்டர்களோடே…. முகமூடி, துப்பாக்கி… டுமீல்டுப்…. அந்தப் பக்கத்திலே ஒரு ஆள் பிணம் இந் தப் பக்கத்திலே நம்கை நிறையப் பணம்….டாலர் ஐயா டாலர் அமெரிக்கா ஈஸ் ஆன் அட்வென்சரஸ் கண்ட்ரீ…’ அங்கே போயாக வேண்டும் சீக்கிரம்….!

நம்ம சாகஸம் இருக்கிறதே யாருக்கு வரும்? நான் தான் எல்லோருக்கும் நல்லவன் பாலு ! ஒன்றும் அறி யாதவன் ! வெள்ளை உள்ளம் படைத்தவன். வழவழா என்று பேசித் திரிகிறவன்…. சபாஷ் பாலு….நீ இப் படியே இரு….அதுதான் உனக்கு நல்லது!

பட்டணத்தில் வந்து இறங்கியவுடன் முதலாவ தாக நம் உடைகளை மாற்றிக்கொண்டேன். ஸில்க் ஜிப்பாவும் அங்கவஸ்திரமும் குங்குமப் பொட்டும், வெற்றிலை பாக்கும் பட்டிக்காட்டுச்குச்சரி. பட்டணத் திற்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? உலகம் பாஷனில் அல்லவா அடித்துக்கொண்டு போகிறது ! இங்கே ஒரு ஸூட்டும் ஹேட்டும் சிகரெட்டும் இருந் தால், நம்மைப்போன்ற விஷயம் தெரிந்த ஆள் ஊரையே விலைக்கு வாங்கி விடலாம்.

வந்ததும் முதலாக என்மனம் கொஞ்சம் குஷி யாக இருக்க விரும்பியது. ப்ரதிபா பிக்சர்ஸுக்குப் போயிருந்தேன், அங்கே என்ன….பாலு அண்ணா வந்துட்டார். பாலு அண்ணா வந்துட்டாருன்னு ஒரே தடபுடல் தான்….ஐயா காட்சி அளித்து விட்டார் என்றால் அக்கம் பக்கத்திலுள்ள எக்ஸ்ட்ராக்களெல் லாம் நம்ப காலைப் பிடித்துக்கொண்டுதானே தொங்கு கிறார்கள் ? அவ்வளவென்ன அந்த நாட்டிய சகோதரி கள் நளினா வனஜா…பிரபல நட்சத்திர நடிகை சாந்த குமாரி. சாந்த குமாரியுடன் அவளுடைய ப்யூக் காரிலே உல்லாசமாக ஊர் சுற்றி வந்த காட்சியும் அவள் வீட்டிலே உண்ட விருந்தும் நாட்டியக் கச்சேரி யும், அதன் பின் சொகுசாகக் கழித்த இரவும்… அட டா…ஒரு நாள் இருந்தால்தான் என்ன…ஸ்வர்க்கம். ஸ்வர்க்கம்தான்…?

பாலு எப்பொழுதும் காரியவாதி….! சொர்க்கத் திலேயே ஆனாலும் அந்த அளவு குறிப்பிட்ட ‘டைமுக்கு மேல் இருக்கமாட்டார். மறுநாள் பொழுது விடிந்ததுமே புறப்பட்டுவிட்டேன். நம்ம நண்பர் சந் திர சேகரைப் பார்ப்பதற்கு ஆசாமி வீட்டில் இல்லை. அவருக்கென்ன மனைவியை எமலோகத்திற்கு அனுப் பியாயிற்று….! பணத்தின் மேல் தான் புழக்கம் எல் லாம். மனிதனுக்கு எவ்வளவு சம்பாதித்தும் ஆசை தீர்வதாக இல்லை. குறைந்தது ஒரு கோடீஸ்வரனாவது அவருடைய லட்சியமாக இருக்கும் என்று நினைக் கிறேன். நம்முடைய நண்பர் என்றால் வேறு வித மாகவா இருக்கப் போகிறார்?…. சிகரெட், குடி…ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. ஏனென்றால் அவை எல் லாம் சிலவுக்கு வழி அல்லவா….?

வீட்டில் இல்லாவிட்டால் ஆள் பாங்கில் இருப்பார் என்று நினைத்து அங்கே போனேன். ஆசாமி பணத் தைப் புரட்டிக்கொண்டிருந்தார்.

ஆளுக்கு உயிர் போவதானால் கூட பணத்தை எண் ணிக்கொண்டிருக்கும் பொழுதுதான் போகும் என்று நினைத்துக்கொண்டு “ஹலோ சந்திரசேகர் குட்மார் னிங்….” என்றேன். ஆசாமி என்னைப்பார்த்ததும் திகைத்துப்போய் விட்டார். நான் காரியம் இல்லாமல் அங்கு வரமாட்டேன் என்பது அவருக்குத் தெரியும்.

இருவரும் தனியாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் ‘ பிஸினஸ்’ பேசிக்கொண்டிருந்தோம். ஆள் எமகாத கன். லாபம் இல்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டான். நம்மிடமே 50-சதம் கமிஷன் கேட்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நகைகளைப் பார்த்துக் கொண்டே அக்கௌண்டென்டைக் கூப்பிடச்சொன் னார். உள்ளே வந்த ஆளைப்பார்த்ததும் நான் திகைத் துப்போய் விட்டேன். ஏன் வேறு யார்….? அந்த நகைகளுக்குச் சொந்தக்காரனேதான். மிஸ்டர் ரகு.

” ஹலோ…..ரகு….. சௌக்கியமா….” என்று கேட்டுக்கொண்டே அவன் தோளின் மேல் கையைப் போட்டு இந்தப் பக்கமாகத் திருப்பிக்கொண்டு யோக சேமங்களைப்பேச ஆரம்பித்தேன். வேறு ஒரு ஆளா னால் அந்தச் சமயத்தில் கைகால் நடுங்கி உளறிப் போயிருப்பான். பாலுவைத் தவிர வேறு எப்படிப் பட்ட வில்லனாயிருந்தாலும் சமாளித்துக்கொண்டிருக்க முடியாது. ஆனால், மிஸ்டர் பாலு…. புலி அல்லவா ? அதே சமயத்தில் சந்திர சேகருக்கும் சந்தேகம் ஏற் படாமல் இருக்க வேண்டுமே….?

ஒரு தினுசாக சந்திரசேகர் ரகுவை அனுப்பி வைத்ததும், “இவனை எங்கே இருந்து பிடித்தீர்கள் P” என்று மெதுவாக ஒரு கேள்வியைப் போட்டுவைத் தேன்? “என்ன…….. நீங்கள் பேசிக்கொண்டதைப் பார்த்தால் உயிருக்குயிர் சிநேகிதர்களைப்போல் தோன் றிற்று….?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் சேகர். “நன்றாகச் சொன்னீர்கள். சிநேகிதமாய்…? இவனிடமா…ஐயோ…. நல்ல பாம்பிடம் சிநேகம் வைத் தாலும் நய வஞ்சகனிடம் வைக்காதே என்பார்கள். கொல்லும் புலியை நண்பனாகக் கொண்டாலும் கூடிக் கழுத்தறுக்கும் கொலைபாதகர்கள் கிட்டவும் நெருங் காதே என்பார்கள். இருந்திருந்தும் நான் இவனிடமா சிநேகிதம் வைப்பேன்?

“அவ்வளவு அயோக்யனா இவன் ?”

“பின் என்ன ஐயா….? நம்ம ஊரிலே…. நல்ல உத்தமமான குடும்பம் ஒன்றிலிருந்து…அவர்கள் நல்ல வன் என்று நம்பிப் பழக்கம் வைத்துக கொண்ட தோஷத்திற்காக….ஒரு பெண்ணை அடித்துக்கொண்டு வந்து விட்டானய்யா….? அவமானத்தினால் அவர்கள் அன்று முதல் வீட்டை விட்டு வெளியிலேயே இறங்கு வதில்லை. பின் என்ன….? நல்லவனைப் பகைத்துக் கொண்டாலும் கெட்டவனைப் பகைத்துக் கொள்ளாதே என்ற பழமொழிக் கிணங்க….அவனைப் பகைத்துக் கொள்ளக்கூடாதே என்பதற்காகத்தான் இப்படி அந் யோன்யமாகப் பேசிக் கொள்வதெல்லாம்….என்றேன்.

சந்திரசேகர் யோசனையுடன் தாடையை நீவிக் கொண்டு “எனக்கு முன்பே தெரியாமற் போயிற்று. அதனால் பரவா யில்லை. இன்னும் அவன் செக்யூரிடி கட்டவில்லை என்றார்.” சரி அதை இப்பொழுதே . வைத்துக் கொள்ளாதீர்கள்… சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவன் என்மேல் ஏதாவது சந்தேகப் பட்டுவிடப்போகிறான்….என்றேன். பாலுக்கு இடைஞ் சலாக யாரும் எங்கும் தோன்றி விடக்கூடாது. தோன்றுவதாக இருந்தால் அவன் தோன்றும் முன்பே ஒழிந்து விடுவான். ஏனென்றால் உலகம் அவன் கைக்குள் இருக்கிறது பாருங்கள்….

9. மாணிக்க முதலியார் 

துன்பம் ஒரு முறை காலடி எடுத்து வைத்துவிட் டால், தனக்குப் பழக்கமான வீட்டிற்கு ஓடி ஓடிவரும் குழந்தைபோல் திரும்பத்திரும்ப வந்து கொண்டே. இருக்கும் போலும்….யாரை நொந்து கொள்வது? எனக்கு புரியவில்லை. விதி என்பதா…வல்லவர் செய் யும் சதி என்பதா….எதைச் சொல்வது என்று தெரிய வில்லை. நம்மை மீறித் துன்பங்கள் வந்து துளைக்கிற போது… வேறு வகை தெரியாமல் விழிக்க நேரிடுகிற போது, விதியையும் ஆண்டவனையும் தான் துணைக் கழைக்க வேண்டியிருக்கிறது. எல்லாம் செய்ய வல்ல மனிதனே தன் அறியாமையால் தன் சகோதர மனித னுக்கு உதவ மறுத்துவிட்டபோது ஆண்டவன் தானா. வந்து துணை புரிந்துவிடப் போகிறார்?

ஆயிரக் கணக்கான ரூபாய்பெறுமான சொத்துக் கள் சம்பாதித்து வைத்திருந்தேன். யாரையும் வஞ்சித் துச் சம்பாதித்ததல்ல. ஒன்றுக்கு இரண்டு வட்டி வாங்கியோ, ஓராயிரத்திற்கு இரண்டாயிரத்திற்கு எழுதி வாங்கி ஏமாற்றியோ, யாருமற்றவர் சொத்தை அபகரித்தோ சம்பாதித்ததல்ல என் சொத்துக்கள். பெரியவர்கள் வைத்துவிட்டுப் போன நிலத்திலே அல் லும் பகலும் பாடுபட்டு….என்னோடு உழைத்தவர்களுக் குச் சமபங்களித்தது போக மிகுத்ததில் வந்த சொத் துத்தான் அத்தனையும். என்னால் எத்தனையோ பேர் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களே தவிர யாருமே கெட்டுப் போகவில்லை. ஏன் இந்த ராமகிருஷ்ண பிள் ளைக்குக் கூட ஆயிரமும் இரண்டாயிரமுமாக எத்தனை யோ இக்கட்டான நிலைமைகளில் கடன் கொடுத்து உதவியிருக்கின்றேன். ஆனால்….

நான் யாரையும் வஞ்சிக்காமலிருந்தும் என்னுடைய சொத்துக்கள் வஞ்சகரால் கவரப் பட்டு விட் டதே….! அதுமட்டுமா…. இத்தனை காலமும் என் கண் ணின் மணியாய்க் காத்துவந்த என்னுடைய நிலபுலன் களின்மேலும் ஜப்தி….! அதுவும் எவ்வளவு அக்ரமமாக….!

கந்தப்ப கவுண்டர் என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுத்து வைத்திருந்தார். சில்லறை சில்லறையாகக் கொடுத்துச் சேர்த்த பணம் அது. பாவம் அவர் ஏழை…. நல்லவரும்கூட…! என் னிடம் இருக்கும் பணம் இரும்புப் பெட்டியில் இருப்பதைப் போல….என்று அவரே அடிக்கடி சொல்வது வழக்கம் திருட்டுப் போய்விட்ட அன்று கூட அவர் வந்திருந் தார். என்னுடைய சொத்தெல்லாம் போய்விட்டது கொடுத்து வைத்திருந்தவர்கள் பணம் பூராவும் போய் விட்டது என்று நான் கூறியபோது அவர் ரொம்பவும் வருத்தப்பட்டார். ஆயினும் மனிதத் தன்மையோடு, நாம் என்ன செய்யலாம். இப்படி எல்லாம் வரும் என்று நாம் எதிர் பார்த்தோமா…போகட்டும் உங்க ளால் முடிகிறபோது கொஞ்சம் கொஞ்சமாகத் திருப் பிக் கொடுங்கள். அதுவும் உங்களுக்குக் கஷ்டம் இல் லாமல் இருந்தால் சரி….” என்று கூறினார். நம் நாட்டு மக்களின் எளிமையான கருணை நிறைந்த பண்பின் பிரதிலிப்பு இது……..?

ஆனால் அதே மனிதர் பத்து நாட்களுக்குள்ளாக, ‘என் பணம் பூராவும் கொடுத்து விடுங்கள். இல்லா விட்டால் நான் ஊரிலேயே இருக்க முடியாது. ஜாதிக் கட்டுப்பாடு செய்யபட்டிருக்கும் போது உங்களிடம் வரவு செலவு வைத்துக்கொண்டால் என்னையும் அவர் கள் சும்மாவிட மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு வருவதென்றால் ? நான் கூடிய சீக்கிரம் இந்த அறுவடையிலேயே அவர் பணத்தைக்கொடுத்து விடுவதாகக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டேன். ‘ஏனுங்க முதலிலே கொஞ்சம் யோசனை பண்ணிச் செஞ்சி ருந்தா இப்படி எல்லாம் வருங்களா? ஜாதி விட்டு ஜாதி பெண்ணைக் கொடுக்கலாமா? இது தெய்வத்துக்கு அடுக்குங்களா ?” என்று அடுக்கிக் கொண்டே போனார் மனிதர். “இந்தாங்க கவுண்டரே இந்த விஷயம் எல்லாம் உங்களுக்குப் புரியாது. அதைப் பற்றி எல்லாம் ஏன் பேசறீங்க. உங்க காரியத்தைப் பாருங்க….” என்று கொஞ்சம் கடினமாகவே கூறி விட்டேன். மனிதர் முனகிக்கொண்டே போனார். ஆனால்….என்னிடம் எவ்வளவு விரோதம் இருந்தாலும் அவராக இப்படிச் செய்திருக்க மாட்டார். அந்தக் கொடியவர்கள்….

கமலாவுக்குப் பிரசவ மாதம். என்னுடைய அன்பு மகள் தன்னுடைய அன்புக்கொழுந்தை ஈன்றெடுக்கப் போகிறாள். வாழ்க்கை அதில் வேறென்ன தான் இருக்கிறது? அன்பு என்கின்ற செழுமையான பொருள் ஒன்றுமட்டும் இல்லாவிட்டால் அதன்பிறகு உயிர்ப் பிராணிகளுக்கும் உயிர் இல்லாதனவற்றிற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல போய்விடும். மனிதர்களும் கல் மண் போன்ற உயிரில்லாப் பொருள்கள் ஆகிவிடுவார்கள்…….அன்பு…! மனித வாழ்க்கையின் சத்தான பொருள் அது. அன்பு செய்யப் பிறந்த மனிதர் ஏன் தான் வெறுப்பை வளர்த்துக் கொள்கின் றனர். மனித இதயத்திலே எப்படித்தான் வஞ்சனை, சூது, பொய், கபடு, துவேஷம் முதலானவற்றை வைத் துக் கொள்ள முடிகிறது? வாழ்க்கையின் உண்மை யான அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள்! உண்மையான பயனை உணர்ந்து கொண்டவர்கள் ஒருக்காலும் அத்தகைய தீயஉணர்ச்சிகளுக்குத் தங்கள் உள்ளத்திலே இடம் கொடுக்கமுடியாது. நான் இப்படி நினைக்கிறேன். ஆனால்… ராம கிருஷ்ணபிள்ளைக்கு எனக்குத் தீங்கு செய்வதிலே ஏன் தான் அத்தனை மகிழ்ச்சி ! அப்பப்பா….

நான் இல்லாத சமயத்திலே கந்தப்பகவுண்டரைத் தூண்டிவிட்டு என் நிலபுலன்களை ஜப்திக்குக்கொண்டு வந்து விட்டனர். மகளையும் குழந்தையையும் கண் குளிரப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்தேன். வந்ததும் வராததுமாக விளைந்து நிற்கும் என் நிலங் களைப் பார்க்கப் போனேன். கரும்பும் நெல்லும் பருத்தியும் நன்றாக விளைந்து கொழுகொழு வென்று நிற்கின்றன. இந்த வருஷம் நல்ல அறுவடை கிடைக் கும். கடன்களை எல்லாம் கட்டி விடலாம் என்று மன மகிழ்ந்து நின்றேன். அதே சமயத்தில் அமீனாவும் கணக்குப் பிள்ளை மணியக்காரரும் கவுண்டரும் பிள்ளை யும் வந்து சேர்ந்தார்கள். நான் இல்லாத சமயத்திலே என் சொத்தை அபகரிக்க எல்லோரும் கூடிச் சதி செய்து விட்டார்கள் ஐயோ. நினைக்கும் பொழுது எனக்கு உளமெலாம் பற்றி எரிகிறது. நான் என்ன செய்வேன். ஊரெல்லாம் பகை ! இல்லாவிட்டால் எப்படியாவது சமாளித்துக் கொண்டிருப்பேன். இதே மாதிரிக் கடன் காரர் ஜப்திக்கு வந்துவிட்ட காலத் திலல்லவா நான் பிள்ளைக்கு உதவி செய்தேன். அதற்கு அவன் செய்யும் கைமாறு இதுதான்போனும்.

சட்டபூர்வமாக ஏதாவது செய்ய முடியுமா என்று. பார்க்க வக்கீலைத் தேடிச் சென்றேன். காலம் கடந்து போய்விட்டது. இருந்தாலும் முயற்சி செய்து பார்க் கலாம் என்றார். என் உள்ளம் இடிந்து போகிறது… எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை…… இனி என்ன செய்தாவது எங்காவது வேறு ஊருக்கும் போய்விட வேண்டும். அரைக்கணம் கூட இங்கே தாமதிக்கக் கூடாது என்று தோன்றுகிறது. நான் எங்கு செல்வேன்! என்ன செய்வேன்……?

– தொடரும்…

– திருமணம் (நாவல்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1953, சத்தி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *