திருமண வீடு





ஒரு வீட்டிலே திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தட்டி ஒரமாக நின்ற வேலைக்காரனை அங்கு வந்த அவனது நண்பன் அழைத்தான். ‘இங்கே எப்படி உன் வேலை?’ என்று கேட்டான்.
அதற்கு வேலைக்காரன், “சாதாரண நாளிலேயே இந்த வீட்டு வேலை இழவு வீட்டு வேலை மாதிரி இருக்கும். இப்ப கலியாண வீட்டு வேலை. பேரிழலாய் இருப்பதற்குக் கேட்பானேன்” – என்றான்.
“திருமண வீட்டிலே இழவு, பேரிழவு என்று பேசலாமா” என்று நண்பன் கேட்டான்.
அதற்கு அவ் வேலையாள் –
“நேற்று சீர்வரிசை கொண்டு வரும்போது எல்லோரும், பழத்தட்டு, பாக்கு, கற்கண்டு, பூத்தட்டு தூக்கிக் கொண்டார்கள். என் தலையிலே தேங்காய்த் தட்டைத் தூக்கிவைத்து விட்டார்கள். நான் என்ன செய்வது! பிணத்தைத் தூக்குகிற மாதிரி, அவ்வளவு கனமாக இருந்தது. தூக்கித்தானே நடக்கணும்” – என்று சொன்னான்.
இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, வந்திருந்தவர்களிலே ஒரு பெரியவர்,
“என்னப்பா, தாலி கட்டப் போகிற சமயத்திலே இழவு, பேரிழவு, பிணம் – என்று பேசலாமா?’ – என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன் –
“போங்கையா – தாலி கட்டியதும் நீங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுங்க. என்பாடல்ல இங்கே தாலி அறுது” – என்று சொன்னான். அதற்கு ஒன்றும் பேசாமலே பெரியவர் எழுந்து போய்விட்டார்.
எதை, எங்கு, யார், எவரிடத்தில் –
எப்படிப் பேசுவது என்பதை இன்னும் பலர் புரிந்து கொள்ளவில்லை.
– என்பதற்கு இது ஒரு சான்று.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |