திடீர் திருப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 84 
 
 

இலேசாக தூறல் பொழிந்து கொண்டிருந்த மாலை நேரத்தில் அழகான , ஒடிசலான உடல்வாகு கொண்ட, சேலை அணிந்த இளம்பெண் கமலா, நனைந்தபடியே பணியிடத்திலிருந்து நடந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாள். கமலாவின் அண்ணன் ஏதோ சிக்கலில் தலைமறைவானவன் வீடு திரும்பவில்லை. அவளுடைய தந்தையார் மறைந்த போதும் அவன் வரவில்லை. குடும்ப பாரத்தை அவள் சுமந்தாள். அவளுடைய நோயுற்ற அம்மாவையும் பதின்பருவ தம்பி தங்கையையும் பார்த்துக் கொண்டு குடும்பத்தைப் போஷிக்க வேலைக்கும் போய் வருகிறாள் கமலா. அவள் குடும்பத்திற்கு என்று உள்ள ஒரே சொத்து அவளுடைய தாத்தா கொடுத்து விட்டுப் போன வீடு மட்டும் தான்.

இருட்டுவதறகுள் வீடு வந்து சேர்ந்தாள் கமலா. வீட்டுக்குள் நுழைந்ததும் அவளைப் பார்த்து ஓடி வரும் தம்பி ராஜாவும் தங்கை மீனாவும் கூடத்தில் ஓர் ஓரத்தில் மர ஸ்டூல்களில் அமர்ந்திருந்தார்கள். சிறிய கட்டிலில் படுத்திருந்த தாய் பார்வதியின் அருகில் சென்றாள்.

“என்னம்மா பள்ளிக்கூடத்திலேந்து வந்த மீனா உனக்கு கஞ்சி வெச்சு கொடுத்தாளா இல்லையா?“

“ரெண்டு பேரும் ஒரு மணி நேரமா அங்கேயே உக்காந்துகிட்டு இருக்குங்க எனக்கு கஞ்சி வெந்நீர் எதுவும் தரலை ஒன் தங்கச்சி.. ..வெளியே விளையாடவும் போகலை ரெண்டு பேரும் …. “

“ ஏன் என்ன வந்துச்சு ரெண்டு பேருக்கும் ? நான் உள்ளே நுழைஞ்ச உடனே என்ன வாங்கிட்டு வந்தே அக்கான்னு கேட்பாங்க…இன்னிக்கு மூஞ்சிய தூக்கி வெச்சிகிட்டு இருக்குங்க … “

“… உன்னையே சுத்தி சுத்தி வந்தானே உங்க அத்தான் பாஸ்கருக்கும் பெரிய இடத்துப் பொண்ணுக்கும் நாளைக்கு நிச்சயதாம்பூலமாம் … தகவல் கேட்டதுலேந்து ஒன் தம்பி தங்கச்சி இப்படி…”

“ நல்லதா போச்சு அதனால நமக்கு என்ன இதுங்களுக்கு என்ன ? “

“ என்னடி இப்படி சொல்றே அவனுக்கும் ஒனக்கும் கல்யாணம் ஆகும்னு ஏகத்துக்கும் நெனச்சுதுங்க … நானும்தான் அப்படி ஆசைப்பட்டேன் … “

“ நம்ம கிட்ட என்ன இருக்குன்னு என்னை ஏத்துப்பான் அத்தை பையன் ? அழகா இருக்கேன்னு சுத்தி சுத்தி வந்தான். கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு தந்தான். அப்புறம் அழகு மட்டும் போதாதுன்னு விட்டிருப்பான். நான் கல்யாணம் கட்டி போயிருந்தா நோவா கிடக்கிற உன்னை கவனிக்கிறது யாரு இதுங்கள கரை சேர்க்கறது யாரு .. “

என்றபடியே தம்பி தங்கை அருகே வந்தாள் . “இதுக்கு இடிச்சபுளி மாதிரி உட்கார்ந்து இருக்கணுமா … போய் படிக்கிற வேலையை பாருங்க … எழுந்திருங்க ரெண்டு பேரும்…”

இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.


சில ஆண்டுகள் கழித்து…

ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம் . வீட்டின் கூடத்தில் மர பெஞ்சில் அமர்ந்து இருந்த கமலா , கையில் டிரான்சிஸ்டர் ரேடியோவை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள். திறந்து இருந்த வாசற் கதவு அருகே அவளுடைய பக்கத்து வீட்டுப் பேரிளம் பெண்மணி கீதா நின்று கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு பெண்மணியும்

இளம் பெண்ணும் இருந்தனர். எழுந்து நின்ற கமலா, ரேடியோவை நிறுத்தி ஷெல்பில் வைத்து விட்டு வரவேற்றார்.

“வாங்க அம்மா…”

“வரேன் கமலா” கீதா பெஞ்சில் அமர்ந்தார். உடன் வந்த பெண்மணியும் அமர்ந்தார். இளம்பெண் நின்று கொண்டிருந்தாள்.

கமலா அருகில் இருந்த மர ஸ்டூலில் அமர்ந்தாள்.

கீதா , உடன் வந்த பெண்மணியிடம் பேசினாள் –

“வசந்தி, கமலா , போராடும் பெண்மணி போராடி வெற்றி கண்ட பெண்மணி.. குடும்ப படகு விழுந்து மூழ்காம காப்பாத்தின பொறுப்பான பெண்மணி”

வசந்தி பேச வேண்டும் என்பதற்காக “பார்த்தாலே தெரியுதே ” என்றார்.

கமலா, “அம்மா , எனக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தது போதும் என்ன விஷயம்ன்னு சொல்லுங்க”

“எல்லாம் நல்ல விஷயம்தான். உன் கிட்ட எப்படி பேசறதுன்னு இவங்களுக்கு ரொம்ப தயக்கம் கூச்சம் அதான் நான் இறங்கினேன். … என்னோட சிநேகிதி வசந்தி இது அவங்க பொண்ணு லதா … உன் தம்பி ராஜாவுக்கும் லதாவுக்கும் மனசு ஒத்துப் போச்சு…. உனக்கு கல்யாணம் ஆகலியேன்னு உன் தம்பி யோசிக்கறான் போல….

“என்ன அம்மா.. நான் திருமணம் முடிக்காமல் என் தங்கை மீனாவுக்கு திருமணம் முடிச்சு அனுப்பலையா இதுல யோசிக்க என்ன இருக்கு அவங்க ரெண்டு பேர் வாழ்க்கை….எங்க தாத்தா கொடுத்த பெரிய வீடு இது மாடியிலயும் ரெண்டு பெரிய ரூம் இருக்கு….மீனா,,, புகுந்த வீட்டுக்கு போய்ட்டா ராஜா அப்படி கிடையாது …இங்கதான் இருப்பான் என்ன என்னை பேக் பண்ணிடக் கூடாது இவங்க ரெண்டு பேரும்….சொந்த வீட்ல இருந்துட்டு வாடகை வீட்ல போய் நான் இருக்க முடியாது அதுவும் தவிர ஒத்தை பொம்பளைக்கு யாரும் வீடு தர மாட்டாங்க…”

“ஏன் அவ்வளவு யோசிக்கற? நீதான் இந்த குடும்பத் தலைவி அதை மாத்த முடியுமா? இந்தப் பொண்ணு லதா சாதுவான பொண்ணு சூதுவாது இல்லாத பொண்ணு”

“நான் முன் எச்சரிக்கையா சொல்லி வைச்சேன். ஊர்ல இருக்கிற பெரிய மனுஷாள் வீட்டு குழந்தைங்கள பராமரிக்கற வேலையை பார்த்துதான் இவங்கள எல்லாம் ஆளாக்கினேன். இப்ப இவங்க குழந்தையையும் நான் பராமரிக்கிறேன். நாளைக்கே இந்த அக்கா வீட்டுக்கு போய் முறையா பேசிடலாம் . நீங்களும் வாங்க”

கீதாவும் வசந்தியும் முகம் மலர எழுந்து நின்றனர். அவர்களுக்கும் லதாவுக்கும் கமலா குங்குமம் கொடுத்தாள்.


மேலும் சில ஆண்டுகள் கழித்து ….

புதன் கிழமை நாள் ஒன்று . மாலை நேரம் . வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. வாட்டசாட்டமான உடல்வாகு கொண்ட உயரமான, வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா அணிந்த நடுத்தர வயது பெரிய மீசை நபர் பாஸ்கர், கையில் விலை உயர்ந்த சிகரெட் பெட்டியுடன் தமது வீட்டு முதல் மாடியில் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தார். அவர் அந்தப் பகுதியின் பெரிய புள்ளி . ஏதோ யோசனையில் கண் மூடிய அவர், கண்ணைத் திறந்த போது ஊஞ்சலின் எதிரே மர நாற்காலியில் இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியான, வேட்டி சட்டை அணிந்திருந்த இளைஞன் அமர்ந்து இருந்திருந்தான்.

“யாருடா நீ இத்தனை கட்டுக்காவலை மீறி என் வீட்டுக்குள்ள வந்து ஜம்பமா என் முன்னாடி உட்கார்ந்து இருக்க…”

“ஒங்களுக்கு சொந்தம் தான் சார் …. ஒங்க சொந்த முறைப் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க குடும்பத்தையும் பார்த்துக்கறேன்னு வாக்கு கொடுத்துட்டு வேற ஒருத்தங்கள கல்யாணம் பண்ணிகிட்டிங்களே … ஒங்க நெஞ்சுல அது முள்ளா இல்லையா”

பாஸ்கர் , ஜிப்பாவை நீக்கி தமது மார்பைக் காண்பித்து “…தான் இருக்கு … கமலாவை கை விட்டது பத்தி இத்தனை வருசம் கழிச்சு எனக்கு உறுத்தல் இருக்கான்னு கேட்கறியே.. நீ யார்னு அறிமுகப்படுத்திக்கலியே….” என்றார்.

“ஐயா, அவங்க என்னோட அத்தை . என் பேரு தினேஷ், கமலாவோட தம்பி ராஜாவோட மகன் நான்…”

“ஒங்க அப்பா ஜாடை இப்ப தெரியுது. ஒங்க அத்தை பேரழகி தான். சாமர்த்தியம் அறிவு உள்ளவதான். படிப்பாளிதான் அதுக்காக அண்ணன் ஓடிப் போனதால அப்பா மேல போனதால … அவ தலைல விழுந்த பாரத்தை நான் சுமக்க முடியுமா ? ஏதோ காதல் மயக்கத்துல வாக்கு கொடுக்கறதுதான் அப்படியே வார்த்தையை காப்பாத்த முடியுமா…சொல்றேன் கேளு… இந்த ஏரியால சந்திரன்னு பெரிய புள்ளி இருந்தாரு … அவருக்கு இருந்த மதிப்பு செல்வாக்கு பார்த்து எனக்கு அவரை மாதிரி ஆகணும் னு வெறியான ஆசை அவருக்கு பையன் இல்ல ஒரே மகள் தான் … புரோக்கர் மூலமா காய் நகர்த்தி அவளை நான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அப்புறம் என்னென்னவோ செஞ்சு அந்த பெரிய மனுசன் உலகத்தை விட்டுப் போனதுக்கப்புறம் நான் அவர் இடத்தைப் பிடிச்சுட்டேன்… இதெல்லாம் ஒங்க அத்தை கமலாவை கைப்பிடிச்சிருந்தா எனக்கு கிடைக்குமா என் மனைவி அன்னம் அழகுல சுமார் தான் உலக அறிவு கிடையாது படிப்பாளி இல்ல சாமர்த்தியம் கிடையாது எதுவும் தெரியாது ஆனா அவளை கல்யாணம் பண்ணதால எனக்கு கிடைச்ச இடம் நான் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன். என் மாமனோட பேரன் கமலாவோட மருமகன்றதால சொல்றேன்…நீ பெரியவங்கள பத்தி யோசிக்காதே அத்தை வாழ்க்கை ஏன் இப்படி ஆச்சு பெரியப்பா என்ன ஆனாருன்னு மனசை போட்டு அலட்டிக்காம மண்டைய போட்டு குழப்பிக்காம உன் வாழ்க்கையில முன்னேறுவதற்கான கதையைப் பாரு வயசானவங்கள பத்தி நெனச்சு உனக்கு ஒரு பயனும் இல்ல”

பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென ஊஞ்சலிலிருந்து சத்ததுடன் கீழே விழுந்தார். தினேஷ் எழுந்து நின்று பார்த்தான்.

விழுந்த அவர், “யாருடா மறைஞ்சு இருந்து என்னை தள்ளி விட்டது ? மாணிக்கம் . காளி , முத்து, சோமு” என்று கூவினார்.

அவரால் அழைக்கப்பட்ட வாட்டசாட்டமான அடியாட்கள் ஓடி வந்தனர். அவர் அருகில் அவர்கள் செல்ல முற்பட்ட போது, அங்கு வந்து நின்ற பருமனான உடல்வாகு கொண்ட எளிய நீலநிற சேலை ரவிக்கை அணிந்த நடுத்தர வயது பெண்மணி, அவர்களை சைகை காட்டி தடுத்து நிறுத்தினார். பாஸ்கர் அவராகவே கஷ்டப்பட்டு எழுந்து நின்றார்.

அந்தப் பெண்மணி இப்பொழுது ஊஞ்சலில் தோரணையுடன் அமர்ந்திருந்தார். அவர் பேசினார் –

“மாணிக்கம் , காளி , முத்து , சோமு … இன்னிக்கு திடீர் திருப்பம் … இன்னிலேந்து நான்தான் உங்களுக்கு பாஸ் … இனிமேல் நம்ம கிட்ட வர்றவங்க முதல்ல ஒங்கள பார்க்கணும்..அப்புறம்…”

“ஒங்கள பார்க்கணும் அக்கா…” என்றார் மாணிக்கம் .

“காளி இனிமே இந்த ஆளை இரண்டாவது மாடில இருக்கிற ரூம்ல வெச்சு பார்த்துக்க வேண்டியது ஒன் பொறுப்பு . உணவு உடை எல்லாம் நீயே கொடுத்துக்க இரண்டாவது மாடிய தவிர வேற உலகம் இவருக்கு இருக்க கூடாது.. “

“சரிங்க அக்கா” என்றார் காளி. காளி, பாஸ்கரை அழைத்துக் கொண்டு மாடிப்படிகளை நோக்கிச் சென்றார்.

அன்னம் , தினேஷைப் பார்த்துப் பேசினார் –

“தம்பி உனக்கு நல்ல மனசு அந்த ஆளைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கறா மாதிரி கேள்வி கேட்கணும்னு எங்க வீட்டுக்குள்ள வந்துட்டு ரொம்ப அமைதியா பேசிட்டே … இது வரைக்கும் இவர் உண்மையானவர்ன்னு நெனச்சு மூடிக் கிடந்த என் கண்ணு திறக்கறதுக்கு நீ காரணமா இருந்திருக்கே … உனக்கு என்ன உதவி வேணாம்னாலும் கேளு சோமு அண்ணன் கிட்ட நம்பர் வாங்கிக்க ஒங்க அப்பா அம்மாவையும் அத்தையையும் தங்கச்சியையும் நல்லா பாரத்துக்கோ …. ஒங்க பெரியப்பா என்ன ஆனார்னு துப்பறிஞ்சு உனக்கு தகவல் சொல்றோம். மாணிக்கம் , தம்பிய நம்ம வண்டில அவங்க வீட்ல விட்டுட்டு வாங்க”

அன்னத்தைப் பார்த்து தேங்க்ஸ் மேம் என்று கைகூப்பிய தினேஷ், மாணிக்கத்துடன் அங்கிருந்து சென்றான்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *