கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 345 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குயில் அழகாகப் பாடிக்கொண்டிருந்தது. 

அந்தக் கோலக் குரலில் ஓர் இளங் காகம் தன்னுடைய மனத்தினைப் பறிகொடுத்தது. கீதத்தின் ரஸனை. வேலையை மறந்தது; சுயத்தை மறந்தது. 

“என்ன, இப்படி ஒரேயடியாக உட்கார்ந்து விட்டாய்? கூடு கட்டுவதற்கு அழகான சுள்ளிகள் கிடைக்கின்றன. குடும்பச் சுமையைத் தாங்கு உழைப்புப் போவதற்கு உழைப்பு. வா…வா…” என்று அதனை அதன் சுற்றமாங் காகங்கள் அழைத்தன. 

அவற்றின் அழைப்பு அதற்குச் சினத்தை மூட்டியது. 

“உங்களுடைய உழைப்பும், வாழ்க்கையும்… நான் காகமாகப் பிறந்ததற்காக ஏங்கி ஏங்கிச் சாகின்றேன்… அதோ, பாருங்கள். அந்தக் குயிலும் நானும் ஒரே நிறந்தான். நான் கரைகின்றேன்; அது கூவுகின்றது. அதன் குரலைப் பிரதி பண்ணிப் பாட மனிதன் ஆண்டாண்டு காலமாகப் பாடுபட்டு வருகின்றான்…” 

”அதற்குக் குடும்பமா? பொறுப்பா? தனக்காக மட்டுமே வாழுஞ் சுயநலச் சிறுக்கி.” 

“உங்களுடைய விளக்கம் எனக்குத் தேவையில்லை. நான் அந்தக் குயிலிடஞ் சங்கீதங் கற்று வரப் போகின்றேன். கரைந்து, எத்தித் திரியும் நமது இனத்திற்கு ஏற்பட்டுள்ள கறையை எனது இசை வெள்ளத்தாற் போக்குவேன்.’ 

“பைத்தியக்காரத்தனம்”. 

சுற்றத்தவரின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்க்காது அஃது எங்கேயோ பறந்து சென்றது. 


எவ்வளவோ முயன்றும் காகத்திற்குச் சங்கீதம் வரவில்லை. 

அதைக் கண்டவுடனேயே குயில்கள் தமது குரல் இனிமையின் இரகசியத்தைச் சொல்லாது பறந்து சென்றன. 

ஏகலைவன் பாணியில் வித்தை கற்றும் பயனில்லை. 

முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கை பாழாகியது. 

தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்தது. 

வழியில், ஒரு வேப்பமரத்தின் கீழ் ஒரு குயிற் குஞ்சு குற்றுயிராக இருப்பதைக் கண்டது. 

அதற்குச் சமீபமாகச் சென்றது. 

”உன்னைக் கும்பிட்டேன். என்னை ஒன்றுஞ் செய்யாதே. என் தாய் செய்த குற்றத்திற்காக என்னைப் பழி வாங்கவேண்டாம்” என்று அழாக் குறையாகச் சொல்லிற்று. 

“நீ ஏன் அழவேண்டும்; என்னைக் கும்பிட வேண்டும்? நான் ஒரு தீங்குஞ் செய்யமாட்டேன்… நாங்களிருவருஞ் சகோதரர்களாக வாழ்வோம். நீ அழகாகப் பாடுவாயே… அந்தக் கலையை எனக்குங் கற்றுத்தா” என விநயமுடன் கேட்டது. 

“நாங்கள் பாடுகின்றோமா? நாங்கள் பாடுகின்றோம் என்பது சிலருடைய வீண் கற்பனை”. 

“நீ குஞ்சாக இருப்பதனால் விஷயந் தெரியாது சொல்லுகின்றாய் போலும்… நீ சங்கீதங் கற்பதற்கு யாரிடஞ் சிட்சை பெறுவதாக இருக்கின்றாய்?” 

“குஞ்சாக இருப்பதனாலேதான் உண்மையைச் சொல்லுகின்றேன்…. நான் ஏன் குயிலாகப் பிறந்தேன் என்று வாழ் நாளெல்லாம் அழுது கொண்டேயிருப்பேன்… எங்கள் வர்க்கத்தாருக்குக் கூடு கட்டத் தெரியாது. திருட்டுத்தனமாக உங்கள் வர்க்கத்தாருடைய கூடுகளில் முட்டை இடுகின்றனர். ஆகையினால், குயிற் குஞ்சுகளில் பல செத்து ஒரு சிலவே தப்புகின்றன. தப்புங் குஞ்சுகளும் என்னைப்போல கொத்து வாங்கி, என்னைப்போல குற்றுயிராகவே பிழைக்கின்றன. இந்நிகழ்ச்சியினால் ஏற்படுத் தாழ்வுச் சிக்கலிலிருந்து நாங்கள் என்றுமே மீளுவதில்லை… இதனை நினைந்து நினைந்து வாழ்நாள் பூராகவும் அழுது கொண்டேயிருக்கின்றோம்… தனிமையின் அழுகுரலைச் சங்கீதம் – இனிமை என்று மற்றவர்கள் நினைத்து விடுகின்றார்கள்… உண்மையைச் சொன்னால், உங்கள் வர்க்கத்தாரைப் போன்று இனம் பெருக்கி வாழத்தெரியாத பாவி நான்…” 

வேதனைப் பொருமல். 

இதனைச் சொல்லிக் கொண்டிருப்பதற் கிடையில் ஒரு காகம் பறந்து வந்து அந்தக் குயிலைக் கொத்தத் தொடங்கிற்று.

“அது குஞ்சு. அதன் உயிரை ஏன் பறிக்கின்றாய்?… தாய் செய்த குற்றத்திற்கு இதற்கா தண்டனை?” 

“ஓகோ. நீதான் சங்கீதப் பைத்தியங் கொண்டலையுங் காகமா? எனது கூட்டில் வாழ்ந்து என் கணப்பினை இது சுகித்துள்ளது. நான் அரும்பாடு பட்டு என் குஞ்சுகளுக்காகச் சேகரித்த உணவுகளை இது பகிர்ந்துள்ளது. இஃது உயிர் வாழ்வதால், என் சந்ததியின் வருங்காலத் தாய் மார்கள் ஏமாறுவார்கள்; மேலும், வருங்காலக் குஞ்சுகளின் உணவு வஞ்சிக்கப்படும்…” என்று அவேசமாகக் கூறி, ஆத்திரந் தீரும் வரை அக்குயிற் குஞ்சைக் கொத்திச் சென்றது. 


“அதோ, அதுகூட எனது அம்மாவாக இருக்கலாம். பெற்ற தாயையே அறியாது வாழும் அநாதைகள் நாங்கள்” என்று ஈனக் குரலில், உயிர் பிரிந்தும் பிரியாத நிலையிற் குஞ்சு சொல்லிற்று. 

“நீ இங்கே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றாய்… உன் அம்மா, எங்கேயோ இருந்து பாடிக் கொண்டிருக்கின்றாளா?… என் வர்க்கம் எவ்வளவோ மேல்…” 

“கா… கா… கா…” என்று கரைந்தபடி தனது சுற்றத்தைத் தேடி அந்தக் காகம் பறந்தது. 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *