தப்புத் தாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 4,272 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

குகைகள் நிறைந்த பத்துமலைக் குமரக் கோட்டத்துக்கு அருகே அமைந்துள்ள “செலாயாங் பாரு” ஒரு பெரிய நகரமல்ல. 

என்றாலும், அது ஒரு சிற்றூரல்ல. அவ்வட்டாரத்தில் வாழ்கின்ற ஒரு சில தமிழர்க் குடும்பங்களைத் தவிர ஏனையோரெல்லாம் ஓரளவு ஏந்துக்கள் உடைய வாழ்வினரே. 

மிகவும் குறைந்த வாடகைக்கு தோட்டத்தோடு கூடிய நல்ல வீடுகள் அங்கே நிறைய இருக்கின்றன. அங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் சொந்த வீட்டுக்காரர்களே. 

அந்தச் செலாயாங் பாருவின் – பத்துமலையின் பின் அடிவாரத்தை ஒட்டிய சில பகுதியில் மட்டுமே பழைய தகரம் வேய்ந்த வீடுகளைக் காணலாம். அந்த இடம் ஒரு பழைய “கம்போங்” போலவே தோன்றும். 

இரவில் வீடுகளில் எரியும் விளக்கொளியைத் தவிர வேறு வெளிச்சமின்றி இருள் மூடிக் கிடக்கும் பகுதி அது. 

ஒருநாள், அன்றைய இரவின் இருளோடு தனது இல்லத்தை யும் இருளாக்கிவிட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. 

தூக்கத்திலே அவளுக்கொரு கனவு. 

அதைக் கனவு என்பதைவிட அவளது இதயத்தில் எந்நாளும் எண்ணியெண்ணி ஏங்கிக்கொண் டிருக்கும் நினைவுகளின் வெளிப்பாடு என்றே கூறலாம். 

அவளுக்கு அப்படியென்ன அளவிட முடியாத ஆசைகள் கொண்ட நினைப்பு? 

அது பொதுவாக எல்லாப் பெண்களிடமும் ஏற்படுகின்ற ஒன்றுதான். என்றாலும், மல்லிகா பேராசைக்காரி. தானிருக்கும் நிலைமையை மறந்த நினைப்பு அவளுடையது. 

நினைப்பே பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள் ஆனால், இன்றைய நடப்பினை உண்ணோட்டமாய் ஆராய்ந்து பார்த்தால் பலரின் நினைப்புக்கள் அவை நல்லவை என்றாலும் அல்லவை என்றாலும் அவற்றால் பணம் படைத்தவர்களாகவும், பரிசும் புகழும் பெற்றவர்களாகவும் உருவாகி இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா? 

அதனால், 

மல்லிகாவின் நினைப்பு அவள் நிலைமையை மறந்த நினைப்புதான் என்றாலும் அது நிறைவேறாது என்று எப்படிச் சொல்ல முடியும்? நினைப் பதெல்லாம் நடக்கலாம். அது தான் இன்றைய காலச்சூழ்நிலை. 

இப்படித்தான் வாழவேண்டுமென்று ஒழுக்கமும் கட்டுப் பாடும் கொண்டு வாழாமல், எப்படியும் வாழலாம் என்று துணிந்த வர்கள் தமது நினைப்புக்களை நிறைவேற்றிக்கொண்டவர்களாய் இன்றைய உலகிலே உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் மறைக்க முடியாத காட்சியும் ஆகும். 

இருப்பினும் அத்தகையவர்கள் நிலையாய் வாழ்கிறார்களா? அல்லது அழிவும் துன்பமும் அடைகிறார்களா? என்பதை வாசகர்கள் தெளிந்துகொள்க! 

நினைவின் நிழலோட்டமாக மல்லிகா கண்டு கொண்டிருந்த அந்த மாபெரும் கனவுதான் என்ன? அதனைக் கொஞ்சம் உங்களுக்கு விளக்கிச் சொல்லத்தான் வேண்டும். 

முள்ளலரி(ரோஜா)யும் ஆர்க்கெட்டும் மல்லிகையும் பூத்துக் குலுங்க, அருகம்புல் பரப்பமைந்த தோட்டம். அதன் நடுவே பளிங்குக் கற்கள் பதித்த வளமனை. 

அருகே வண்டிக் கொட்டகை யில் புதின அமைப்புகளும் ஏந்துக்களும் கொண்ட புதிய “புரோட் டன் சாகா” மகிழுந்து. வீட்டின் உள்ளே காணக் கண்கொள்ளாக் காட்சிப்பொருட்கள். கலைத்திறன் அமைந்த கண்ணாடிச் செண்டு விளக்குகள், 

ஆவியம் நுரை அமரும் இருக்கைகள், அவற்றைப்போல் படுக்கையறை மெத்தைகள். இன்னும் இப்படியான, எடுத்துரைத் தால் அலுப்புத் தரும் எண்ணற்ற ஏந்துகள் அந்த இல்லத்திலே. 

அவை யாவற்றையும் துய்த்துப் பார்க்கும் சொந்தக்காரி, அந்த வீட்டின் ஒரே பிறங்கடை (வாரிசு)யான இன்னும் திருமணமாகாத ஓர் இளங்கன்னி. 

அவளுக்கு அன்று பிறந்த நாள். தோழியர்களும் தோழர்களும் புடைசூழ அவர்களின் நடுவே அந்த நங்கை செவ்வரளிப்பூ நிறத்தில் சீனப்பட்டாடை அணிந்து; ஆடவரைக் கவ்விடும் கரிய விழிகளில் மைதீட்டி, 

எவ்வளவு பெறுமோ இதன் விலை? என ஒவ்வொருவரும் வியக்கும்படி நகையணிந்து ஒய்யாரமாய், இனிமையாகத் தனது தளிரிதழ் அசைய இப்படிப் பாடுகிறாள். 

வானத்தில் பறந்திடும் இளம்பறவை – நான்
தாளங்கள் இல்லாத புதுக் கவிதை
கானத்தில் இனித்திடும் சச்சச்சா – அந்தக்
காலத்து ஓவிய மோனோலீசா. 

பாடும் அந்தப் பாவை வேறு யாருமல்ல, மல்லிகாவேதான். பாடல் முடிகிறது. கனவும் கலை கிறது. ஆனால் அவள், உறக்கத்தில் தான் இருந்தாள். விழிக்கவில்லை. 


இருளில் மூழ்கியிருந்த அந்தப் பத்துமலை அடிவாரத்தின் பள்ளம் மேடு கொண்ட தரைப்பாதையில் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருக்கிறான் மாறப்பன். 

அவனது தள்ளாட்டத்திற்குக் காரணம் என்னவென்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. அது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். 

என்னதான் கள்ளச் சாராயத்தை யொழிக்கப் பேராயம் அமைத்தாலும் அதனை மறக்க நம்மவர்கள் அணியமாக மாட்டார்கள் என்பதற்கும் திருந்த மாட்டார்கள் என்பதற்கும் மாறப்பன் ஒரு சான்று. 

கள்ளச் (சம்சு) சாராயம் ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஒரு மாற்றுவழியை நமது தலைவர்கள் செய்ய வேண்டும். 

குடிப்பவர்களைக் குடிக்காதே, நிறுத்து என்று கூறுவது பயன்தராத முட்டாள்தனமானது என்பது எனது கருத்து. குறைந்த வருமான முடைய ஏழைப் பாட்டாளிகளுக்குக் கிடைக்கும் ஒரே இன்பத் துய்ப்பு குடிப்பது ஒன்றுதான். 

அதைத் தவிர அவர்களுக்கு நிம்மதி யும் சுகமும் தரக்கூடிய வேறு என்ன இருக்கிறது? எனவே அவர்கள் குடிக்க குறைந்த விலையில் தரமான சாராயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

அதே வேளை அளவு மீறாமல் இருக்க மட்டும் அவர்களுக்குப் போதிக்க வேண்டும். அப்பொழுது தான் கள்ளச் சாராயத்துக்குப் பலியாகாமல் நம்மவரை நாம் காப்பாற்ற முடியும். 

தள்ளாட்டம் போட்டுக்கொண்டே மாறப்பன், “என்னடா இது? ரோடு வீடெல்லாம் ஆடுது? இந்தப் பூமிகூட தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டுது போலிருக்கு அதான் தள்ளாடுது ! ம்… உன்னைச் சொல்லிக் குத்தமில்லே. காலம் கெட்டுப் போச்சு. அதிகமா குடிக்காதிங்கன்னு சொன்னா யாரு கேட்கிறா?” 

என்று ஏதேதோ உளறியபடியே வீடு வந்து சேர்ந்து கதவைத் தட்டுகிறான். தனை மறந்த தூக்கத்திலிருந்த மல்லிகா படபட வென்று கதவைத் தட்டும் ஒலி கேட்டு மருண்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள். 

“ஏய்! நான் எவ்வளவு நேரமா கதவைத் தட்டுறேன் உள்ளே என்ன பண்ணிக்கிட்டிருந்தே?” 

“தூங்கிக்கிட்டு இருந்தேன் மாமா.” 

“தூங்கிக்கிட்டு இருந்திங்களா? அல்லது கனவு ஏதாச்சும் கண்டுகிட்டிருந்திங்களா?” 

“ஆமா மாமா தூக்கத்திலே ஒரு நல்ல கனவு…” “ஓகோ அவ்வளவு தூரத்துக்கு ஆகிப்போச்சா? கனவுல வந்தது யாரோ? என்ன பேரோ?” 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மாமா, சும்மா என் தோழிங்க கூட ஆடிப்பாடுறதாத்தான்…” 

“அதானே பார்த்தேன். எங்க நான் வளர்த்த கிளியை வேறெந்த பூனையாச்சும் கவ்வப் பாத்துச் சோன்னு நினைச்சேன்.” 

“மாமா நீங்க எப்போதும் இப்படி அளவுக்குமீறிக் குடிச்சுட்டு வருகிறது நல்லா இருக்கா? இந்தக் குடியாலே உங்கப் பணம் பாழாப் போறதும் இல்லாமே உங்க உடம்பும் வீணாப் போகுதே.” 

“ஏய் மல்லிகா, நீ சின்னக்குட்டி. அதிலேயும் என் கன்னுக் குட்டி. இந்தப் புத்தி கித்தியெல்லாம் சொல்லாதடி என் வெல்லக் கட்டி,” 

என்று கூறியபடியே மல்லிகாவைக் கட்டியணைக் கிறான் மாறப்பன். அவனது அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அவள், 

“மாமா, பெற்றவங்களை இழந்து தனியா நின்ன என்னை சிங்கப்பூரிலே இருந்து அழைச்சுக்கிட்டு வந்து வளர்த்து ஆளாக்கி னீங்க. வளர்த்த என்னை ஒரு நல்ல இடத்திலே வாழ வைக்காமே எப்போதும் இப்படிக் குடிச்சிட்டு வந்து ஏசுறதும், கையப் பிடிச்சு இழுக்கிறதும் உங்களுக்கு நல்லதா இருக்கா மாமா?” 

“ஆமா நல்லாத்தான் இல்லே. அதனாலேதான் உன்னை வாழ வைக்கனுங்கிற முடிவோட திருமண ஏற்பாட்டோட இன்னைக்கு வந்திருக்கிறேன்.” 

மாறப்பன் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் தனது மகிழ்ச்சியை முகத்திரையில் காட்டினாள் மல்லிகா. பாவம் அவள்! அவளது மகிழ்ச்சி ஒரு நிமயம் கூட நிலைக்கவில்லை. 

அவள் நினைத்து மகிழ்ந்ததைப்போல் மாறப்பன் மல்லிகாவுக்கு வேறெந்த மணமகனையும் உறுதி செய்து வரவில்லை. அவளை அவனே மணம் முடித்துக் கொள்ள அதுவும் அன்றிரவே அந்த வீட்டுக்குள் ளேயே அண்டை அயலார்க்கும் தெரியாமல் தாலி கட்டி முதலிரவும் நடத்த வெறும் மஞ்சட் கயிற்றோடு வந்திருந்தான் அவன். 

நிலைமையைப் புரிந்துகொண்ட மல்லிகா அவனது கால் களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள், கதறினாள். ஆனால் மாறப்பனோ? 

“என்னடி கண்ணீர் வடிக்கிறே? உன்னைப் பத்து வயதிலே இருந்து பாதுகாத்து வளர்த்து வந்தது வேற ஒருத்தனோட பல்லக்கிலே அனுப்பி வைக்கவா? இல்லடி கண்ணு என்னோட பக்கத்திலே படுக்க வைக்கத்தான். இதுவரைக்கும் நீ என் அக்கா மக. இன்னைக்கு என் நிக்காப் பொண்ணு” என்று எதுகை மோனை இயைபுத் தொடையோடு பேசியவாறே தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் கயிற்றை மல்லிகா கழுத்தில் கட்ட முயன்றான் மாறப்பன். இருவருக்கும் பல மணி நேரம் போராட்டம் நடந்தது. 

மல்லிகா பலம் இருந்த மட்டும் கயிறு கழுத்தேறாமல் காத்து வந்தாள். அவனிடமிருந்து இன்று அவள் தப்பித்துக் கொள்வது எளிதான செயலாக அவளுக்குப் படவில்லை. கூக்குரலிட்டாலும் அக்கம் பக்கமுள்ள எவரும் வரவும் மாட்டார்கள். காரணம்? இது வாடிக்கையாய் நடக்கின்ற ஒன்றுதான் என்று எண்ணி அவரவரும் சும்மா இருந்துவிடுவார்கள். 

அவள் இப்போது நடுக்கடலில் மிதக்கின்ற பிணம்! சுடு மணலில் துடிக்கின்ற புழு! பாவம் என்ன செய்வாள்? தனது கடைசி முயற்சியாக மீண்டும் அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு; 

“மாமா உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்னை விட்டிருங்க. நான் எங்காவது போயி பிழைச்சுக்கிறேன்,” என்றாள். 

“ஓ சிறகு முளைச்சதும் பறக்க நினைக்குதோ குருவி? அதெல்லாம் நடக்காதடி தலைவி! இனிமே நான் குளிக்க நீதான் அருவி!” என்று கவிதை மழை பொழிந்தான் மாறப்பன். 

“அடப் பாசமில்லாத பன்னியே, என்னை வளர்த்து ஆளாக்கிய நன்றிக்காக பணிஞ்சு நடந்தா உன் குடிகாரப் புத்தி யைக் காட்டுறீயே நீ உருப்பிடுவியா?” 

“என்னடி மரியாதை தேயுது? ஏதோ அக்கா மகளாச்சே கிணத்துத தண்ணியை வெள்ளமா அடிச்சுகிட்டுப் போயிடும்? என்று இத்தனை நாளா பொறுத்திருந்தா என்னமோ துள்ளுறியே? பேசாமே ஒத்துக்க இல்லாட்டி நான் மனுசனா இருக்க மாட்டேன்.” 

“இப்ப மட்டும் நீ என்ன மனுசனாவா இருக்குறே? நீ ஒரு தெரு நாயி!” 

“என்னடி சொன்னே?” 

பளார்! 

ஆம், அறை விழுந்த ஒலிதான் அது. மல்லிகாவின் மெல்லிய கன்னத்திலே நான்கு தடங்கள் கொண்ட தார்ச்சாலை போடப்பட் டிருந்தது. அத்தோடு விட்டானா அவன்? தொடர்ந்து துச்சாதன னாகி விட்டான். மார்க் கச்சும் உள்பாவாடையும்தாம் மிச்சம். அந்தக் கோலத்தில் காவியம் புகழும் ஓவியச்சிலையாகக் காட்சி யளித்தாள் மல்லிகா. சும்மா விடுவானா மாறப்பன்? பாய்ந்தான் அவள் மீது. விரித்திருந்த பாய்க்குப் பிடித்திழுத்தான் அவளை…….? 

“ஆ… ஐயோ… அம்மா! 

அந்த அலறல் ஓலம் மாறப்பனுடையதுதான். அவன் சற்றும் எதிர்பாராத திருப்பம் கண்சிமிட்டும் நேரத்தில் நிகழ்ந்தது 

அங்கே. தன்னைக் கொடுக்க முயன்ற மாறப்பனை அங்குக் கிடந்த ஒரு தடியால் அடித்து மண்டையைப் பிளந்து விட்டாள் மல்லிகா. மலைமுகட்டிலிருந்து விழும் அருவி நீரைப்போல் மாறப்பனின் மண்டையிலிருந்து அரத்தம் ஒழுகி அவனது நெற்றிவழி வழிந்து கண்களை மறைத்தது. 

உறியப்பட்டுக் கிடந்த தனது உடைகளையும் தனக்கு வேண்டிய வேறு சிலவற்றையும் வாரிச் சுருட்டிக் கொண்டு வெளியே ஓடினாள் மல்லிகா. 

பின்னிரவு நேரம் மணி இரண்டே முக்காலைத் தாண்டிக் கொண்டிருந்தது. அந்த நேரம் பொதுவாக செலாயாங் பாருவை பொறுத்தமட்டில் இடுகாட்டு அமைதியுடைய நேரம். 

அந்த நேரத்தில் தங்கள் வீட்டுக் கதவு “டொக் டொக்”கென்று தட்டப் பட்டால் வீட்டிலுள்ளோர் நிலை எப்படி இருக்கும்? பால்கார பரமசிவத்துக்கும் அவருடைய இல்லத்தரசி உமையாளுக்கும் அதே நிலைதான். 

கறவை மாடுகளுக்குக் காலை முதல் இரவு வரை பணிசெய்து விட்டுக் களைத்துப்போய்க் கண்ணயர்ந் திருந்த அந்தப் பிள்ளைக் குட்டிகளில்லாத வாழ்விணையர் (தம்பதிகள்) அந்த நேரத்தில் கதவைத் தட்டும் ஒலி கேட்டு ஐயமும் பயமும் கொண்டே எழுந்தனர். 

“அக்கா அக்கா” என்று அழைத்த குரல் மல்லிகாவினுடையது என்பது உமையாளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் உடனே எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். 

“அக்கா அக்கா என்னைக் காப்பாத்துங்க அக்கா” அழாக் குறையாக வீட்டிற்குள் நுழைந்தபடியே கூறினாள் மல்லிகா. அவளது அலங்கோல நிலையைக் கண்ட உமையம்மை அவளை உள்ளே விட்டு பட்டென்று கதவைச் சாற்றினார். 

பரமசிவமும் படுக்கையை விட்டெழுந்து அங்கே வந்து விட்டார். 

“ஏம்மா மல்லிகா இந்த நேரத்திலே இந்தக் கோலத்திலே வந்திருக்குறீயே என்னம்மா நடந்துச்சு?” பரமசிவத்தின் இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள் மல்லிகா. 

பால்கார பரமசிவத்தின் வீடு அதே செலாயாங் பாருவில் மாறப்பன் வீட்டுக்கும் சற்றுத் தொலைவில் தான் உள்ளது. மாறப்ப னும் பரமசிவமும் உறவினர்கள். அந்த வகையில் அவர்களொடு சற்று நெருக்கமாக இருந்திருந்தாள் மல்லிகா. 

“சொல்லும்மா என்ன நடந்துச்சு?” மீண்டும் பரமசிவம் தனது கேள்வியைத் தொடர்ந்தார். மல்லிகா இப்பொழுது சற்றுத் தெளிந் திருந்தாலும் ஒடிக்கப்பட்ட கள்ளிச் செடியில் ஒழுகும் பாலைப் போல் அவளது கண்கள் நீரை உகுத்துக்கொண்டிருந்தன. 

அவள் அச்சம் ஒரு பக்கமும் அழுகை மறுபக்க முமாக நடந்தவற்றை அவர்களிடம் கூறி முடித்துத் தன்னை எப்படியாவது தனது மாமனுக்குத் தெரியாமல் சிங்கப்பூரிலே இருக்கும் தனது அத்தை வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டினாள். 

“சரிம்மா விடிஞ்சதும் உன்னைப் பாதுகாப்பா புடு ராயா பேருந்து நிலையத்துக்கு அழைச்சுப்போய் வண்டியேத்தி விடுறேன். நீ பயப்படாமல் இரு; ஆமா நீ சிங்கப்பூருக்குப் போக கடப்பிதழ் வேண்டுமே?” என்றார் பரமசிவம். 

“என்னிடம் இருக்கு அண்ணே. என் மாமனாலே எனக்கு எப்போதாவது இப்படியொரு நிலை வருமுன்னு எதிர்பார்த்தே அதுக்குத் தெரியாமலேயே நான் ஏற்பாடெல்லாம் முன்னாலேயே செய்துதான் வைச்சிருக்கேன்.” 

“கெட்டிக்கார பொண்ணுதான். சரி நீ சின்னப்பிள்ளையா இருக்கும்போது உன்னைக் கவனிக்காத உன் அத்தை இப்போ நீ போனா உன்னை ஏத்துக்குவாங்களா?” என்று உமையாள் கேட்ட கேள்வி மல்லிகாவைச் சற்றுக் கலங்கச் செய்தாலும், தான் இங்கிருப்பதைவிட சிங்கப்பூர் செல்வதே மாறப்பனிடமிருந்து தப்பச் சிறந்த ஒரே வழி என எடுத்துரைத்தாள் அவள். 


“வீட்டிலே எத்தனை ஆடம்பரப் பொருட்கள் குவித்து வைத் திருக்கிறோம் என்பதைவிட ஒரு புத்தகப் பேழை வைத்திருப்பது தான் மேலானது, சிறப்பு மிக்கது” 

இப்படிக் கூறியவர் சிங்கப்பூரின் தலைமை யமைச்சர் மாண்புமிகு லீ குவான் யூ அவர்கள். அவரது அந்தக் கருத்தை அப்படியே செயலாக்கமாய் ஒரு சிறிய நூல் நிலையமே தனது வீட்டில் உருவாக்கி வைத்திருந்தான் வேலன். 

வேலன் நடக்க முடியாத முடவன். சக்கரநாற்காலியே அவனது இன்றைய கால்கள். இந்த நிலை அவனுக்கு இயற்கையாய் அமைந்ததல்ல, இடையில் ஏற்பட்ட நேர்ச்சியே காரணம். 

வேலனின் இன்றைய முகாமையான பொழுதுபோக்கு புத்தகம் படிப்பதுதான். அவனுக்கு ஆங்கிலமும் மலாயும் எழுதப் படிக்கத் தெரிந்திருந் தாலும் தமிழ் மீதுதான் அவனுக்குக் காதல். 

தமிழ்ப் புத்தகங்களையே அவன் நிறைய சேர்த்திருந்தான். அந்தப் புத்தகங்களோடு அணைந்து கிடப்பதே அவனுக்கு இன்பமான நாளோட்டம். 

வேலனுக்கு செல்வி என்றொரு தங்கை. புகுமுகம் இரண்டாமாண்டு படிப்பவள். அவளும் சிங்கப்பூர் கல்வி விதிப்படி ஆங்கிலத்தை முதன் மொழியாகவும் தாய்மொழியை இரண்டாம் மொழியாகவும் படிப்பவள்தான் என்றாலும் தமிழ் அறிவிலும் தன் அண்ணனைவிட ஒருபடி உயர்ந்தே இருந்தாள். 

புத்தக அறைக்குள்ளிருந்த வேலனை “அண்ணா அண்ணா” என்று அழைத்தபடி உள்ளே நுழைந்தாள் செல்வி. 

“என்னம்மா செல்வி என்ன வேண்டும்?” 

“ஒன்றுமில்லே அண்ணா சும்மாதான் வந்தேன். ம்… நீ என்ன புத்தகம் படிக்கிறாய்?” 

“படித்துக்கொண்டிருப்பது “கணைகள்”. படிக்க எடுத்து வைத்திருப்பது “தீப்பொறி.” 

“ம்… படித்து முடித்தது?” 

“அலையோசை” எனும் அருந்தமிழ்க் கவிதைக் காப்பியம்.” 

“ஆமாம், வை வ யாவும் தமிழ்நாட்டுப் படைப்புக்களா?” 

இல்லே! மலேசியா நாட்டு மணியான எழுத்தோவியங்கள்.” 

“அப்படியென்றால் நீ நமது சிங்கப்பூர்ப் படைப்புகளைப் படிப்பதில்லையா?” 

“ஏனில்லை? அதோ அந்த மூன்றாவது புத்தக வரிசையைப் பார். அங்கே காணப்படுவதெல்லாம் நமது சிங்கப்பூர் வெளியீடுகள் தாம்.’ 

“அது சரி, எல்லாம் கவிதை நூல்களாகவே இருக்கின்றனவே. அத்தோடு அவையும் மரபுக்கவிதை நூல்களாகவே இருக்கின்றனவே இவற்றை இந்தக் காலத்தில் எவர் படிக்கின்றனர்?” 

“எவர் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? நீ படி. நான் படிக்கிறேன். உனக்கு வரப்போகிற கணவரையும் பிறக்கப் போகும் பிள்ளையையும் படிக்க வைப்போம். 

அதன்பிறகு பாரேன் படிக்கின்ற ஒரு குமுகாயம் தானாகவே உருவாகிவிடும்.” 

“அப்பாடா, உன்னிடம் பேச்சுக் கொடுத்தால் ஒரு பெரிய சொற்போரே உண்டாக்கி விடுகிறாயே? அண்ணே காலத்துக்கேற்ற வாறு சிலவற்றை மாற்றிக்கொள்வதில் என்ன தவறு?” 

“உண்மைதான். சிலவற்றை மாற்றிக்கொள்வதில் தவறு இல்லைதான். ஆனால் எல்லாவற்றையும் மாற்ற நினைப்பதும் அவ்வாறே மாறிவிடுவதும்தான் தவறு. கழுத்திலே போடும் நகை களை மாற்றிக்கொள்வது சரியானது. ஆனால் கழுத்தையே மாற்ற நினைப்பது அறிவற்ற செயலல்லவா? 

மாற்ற வேண்டிய எத்தனையோ மூடப் பழக்கங்கள், கண்மூடிச் செயல்கள் மண்டிக் கிடக்கும்போது மண்ணாங்கட்டிக்கு வண்ணம் பூச முனைவது தேவையான மாற்றமா? 

பாவம் பலர் இவற்றைத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக் கிறார்கள். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதும், பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைப்பதும் சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. 

காலம் என்று சொன்னாயே அந்தக் காலம் வானத்திலிருந்தா வருகிறது? அல்லது வைகுண்டத் திலிருந்து வருகின்றதா? காலத்தை உருவாக்கியவர் களும், காலத்திற்கொன்று உருவாக்குகின்றவர்களும் மனிதர்கள் அல்லவா? 

பத்துக் கிறுக்கர்கள் சேர்ந்தால் குடுமி. பத்து ஆண்டிகள் கூடினால் மொட்டை அதுதானே இன்றைய காலம்? உன்னைப் போன்ற இளவட்டங்கள் விரும்புகின்ற கோலம்! 

“ஆ…ஆ அந்தப் பட்டியலில் உன் தங்கையை இணைத்து விடாதே அண்ணா! நான் முன்னைப் பழமைக்கும் இன்னைப் புதுமைக்கும் இடைப்பட்டவள். ஒரு சிலரைப் போல் உடையதை விட்டு விட்டு, நடைகெட்டுப் போகிறவள் அல்ல. 

“ம்… சரி… சரி நீ படித்துக் கொண்டிரு. எனக்கும் தேர்வு நெருங்குகிறது. எனது பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கவேண்டும்” என்று சொல்லிக் கொண்டே புத்தக அறையை விட்டு வெளியே வந்தாள் செல்வி. 

அப்போது அழைப்புமணியோசை அவள் காதில் விழ விரைந்து சென்று கதவைத் திறந்தாள். 

வாசலில் ஒரு நெகிழிப்(பிலாஸ்டிக்பையொடு மல்லிகா எதிர்நின்றாள். அவளை யாரென்று அறியாத செல்வி, 

“நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இது பொன்னாத்தாள் வீடுதானே?” 

“ஆமாம்.” 

“நான் அவர்களின் உறவுப் பெண். என் பெயர் மல்லிகா.” 

“அப்படியா? உள்ளே வாங்க” 

என்று செல்வி அழைக்க “யாரம்மா அது?” என்ற கேள்வி யோடு செல்வியின் பெற்றோர்களான நல்லதம்பியும் பொன்னாத்தாளும் அங்கே வந்தனர். 

மல்லிகா தன்னுடைய அத்தையான பொன்னாத்தாளை அடையாளங் கண்டு கொண்டு “வணக்கம் அத்தே” என்றாள். “அத்தையா?” என்று வாயால் சொல்லாமல் தமது தடித்த புருவத்தை உயர்த்தினார் பொன்னாத்தாள். 

“என்ன அத்தே என்னைத் தெரியலேயா? நான் உங்க தம்பி மகள் மல்லிகா.” 

“யாரு மல்லிகாவா? வாம்மா வா. உன்னை சின்ன வயதிலே பார்த்தது. அதுதான் அடையாளந் தெரியலே. உட்காரும்மா” என்று பொன்னாத்தாள் சொல்லி முடிக்க வேலனும் அங்கே வந்தான். 

சக்கரவண்டி இருக்கையில் அமர்ந்திருந்த வேலனைப் பார்த்த மல்லிகா அவன் யாரென வியப்போடு பார்த்தாள். 

“என்னம்மா அப்படிப் பார்க்கிறே! அது வேற யாருமல்ல. உன் அத்தான் வேலன்தான்” என்றார் நல்லதம்பி. 

‘அத்தான் வேலனா? என்னோடு சின்ன வயதில் துள்ளி விளையாடிய வேலனா? அவருக்கு எப்படி… கால்….??’ என்று மனதிற்குள் எண்ணியவாறு தனது செவ்வரி கீறிய சின்ன விழிகளை அகல விரித்து அவனை நோக்கினாள். 

அவனும் அவளை இமை யசைக்க மனமின்றி எச்சிலூறப் பார்த்துக்கொண்டிருந்தான். 

3 

நல்லதம்பியார் வீட்டுத் தோட்டத்திலே மலர்ந்து அழகொளிரச் சிரித்துக்கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் மணத்தை அந்த மாலைத் தென்றல் தனது சில்லுப்போடு ஏந்தி பலகணி வழியாக மல்லிகாவை மயங்க வைத்துக் கொண்டிருந்தது. 

அந்த மாலை மயக்கத்திலே தன்னை மறந்த நிலையில் வேலனின் புகைப்படம் ஒன்றை இமை கொட்டாது பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தாள் அவள். 

பார்வைதான் படத்தின்மேல் இருந்ததேயன்றி அவளது நினைவில் திரைப்படங்களில் காட்டப் படுவது போன்ற காதல் களியாட்டம் நடந்து கொண்டிருந்தது. 

கருகருவென்று ஏறத்தாழ இரண்டடிக்கும் மேல் வளர்ந்திருந்த கூந்தலை தனது இருகைகளால் கோதிவிட்டு, மாவடு விழிகளை மலைத்துப் பார்ப்பதும் பின் அவளது தாமரை முகத்தைத் தனது இருகைகளுக்குள் அடக்கிப் பிடித்து, செம்பருத்திப் பூவிதழாய் அமைந்திருந்த அவளது உதடுகளிலே முத்தமழை பொழிந்தும், அவளை அள்ளியும் அணைத்தும் தூக்கியும் மடியிட்டும் அப்பப்பா ஒரு காதல் மாறனின் திருவிளையாடல்களே அங்கே நடந்துகொண்டிருந்தது. 

தான் ஆளான நாள் முதல் இருபத்தொரு அகவை வரை எண்ணியெண்ணி ஏங்கிக்கொண் டிருந்த அந்தப் பொற்காலம் புது வாழ்வு புத்தின்பம் இப்பொழுது அவளுக்குக் கிடைத்துக்கொண் டிருக்கிறது. 

அதனால் அந்த இன்பக் காட்சியின் நிழலோட்டத்தை நிறுத்த நெஞ்சமின்றி, அடித்த ஆணிபோல் அமர்ந்திருந்த அவளைப் பொன்னாத் தாளின் அழைப்புக்குரல் திரும்பிப் பார்க்கச் செய்தது. 

“என்னம்மா மல்லிகா என்ன சிந்தனை?’ 

“ஒன்றுமில்லை அத்தே. நான் எத்தனை நாளைக்கு உங்களுக்குச் சுமையா இங்கே சும்மா இருக்க முடியும்? அதனாலே ஏதாவதொரு வேலை செய்யலாமே என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.” 

“வேலையா? உனக்கு எதுக்கும்மா அந்தச் சிரமம் எல்லாம்! பேசாமே வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு இங்கே இருந்தால் போதும்.” 

“ஆமாம்மா நீ எங்க வீட்டோடேயே இருக்க வேண்டுமென்று உன் அத்தை ஆசைப்படுகிறாள்.” 

அறைக்குள் நுழைந்துகொண்டே நல்லதம்பியார் கூறியது அது. 

“என்னம்மா முகத்திலே கேள்விக்குறி? அதை உன்னிடம் எப்படிச் சொல்வது என்றுதான் பொன்னாத்தாள் தவிக்கிறாள்.” 

“மாமா நீங்க என்ன சொல்றீங்க?” 

“அது என்னவென்று நான் சொல்றேம்மா. சுற்றி வளைக்காமே சுருக்கமாச் சொல்லி விடுகிறேன். உன்னை வேலனுக்குக் கட்டி வைக்கலாம் என்று விரும்புகிறோம்…” 

பொன்னாத்தாள் முடிப்பதற்குள் நல்லதம்பியார் தொடர்கிறார்: 

“ஆமாம்மா உண்மையாகத்தான் சொல்லு கிறோம். எங்க மருமகளான உன்னை இந்த வீட்டுத் திருமகளாக ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறோம்.” 

திகைத்து நின்ற மல்லிகாவின் செவிகளிலே அவளது மறு உரு பேசியது விழுந்தது. 

“மல்லிகா பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் என்பார்களே, அது உன் வரைக்கும் உண்மையாகி உள்ளது. உன் ஆசைக் கனவுகள் நனவாகும் வாய்ப்பு உன்னைத் தேடி வந்துள்ளது. சிறப்பான அழகான பெரிய வீடு, நினைத்தபடி செலவு செய்ய பணம் இப்படி எத்தனையோ வசதிகள் இப்பொழுது உனது கைகளில். வாய்ப்பை நழுவ விடாதே.” 

அவளது சிந்தனையைக் கலைத்தனர் அவ்விருவரும். 

“என்னம்மா மலைப்பு? இதிலே உனக்கு விருப்பம் இல்லையா?” 

என்ற நல்லதம்பியின் கேள்விக்கு தயக்கம் எதுவுமின்றி உடனே பதில் கொடுத்தாள் மல்லிகா. 

“மாமா, கரும்புத் தின்னக் கூலியா கேட்கப்போகிறேன்? நானோ ஏதிலி (அநாதை). எனக்கு உங்களை விட்டால் வேறு யாரு இருக்கிறார்கள் ? உங்களின் எந்த முடிவுக்கும் எனது சம்மதம் உண்டு.” 

“மல்லிகா நீ நல்லா இருக்க வேண்டுமம்மா, கால்கள் நடக்க முடியாத எங்கள் மகனை நீ ஏற்றுக்கொள்வாயோ? மாட்டாயோ என்று பயந்திருந்தேன். எங்கள் வயிற்றிலே பால் வார்த்து விட்டாய்.” 

என்று கூறிய பொன்னாத்தாளின் கண்களில் நீர்த் திரை விழுந்தது. 

அண்ணனுக்குத் திருமணம் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதும் துள்ளிக் குதித்த கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட தங்கை செல்வி வருங்கால அண்ணியிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததோடு எந்த இளம் பெண்ணும் செய்ய முன்வராத, ஏன், எண்ணிக்கூடப் பார்க்காத ஈகத்தைப் பலவாறு பாராட்டினாள். அண்ணனிடம் ஓடோடிச் சென்று செய்தியைப் பரப்பினாள். 

செய்தி கேட்ட வேலன் உள்ளுக்குள் உவகையுற்றாலும் அவன் மனம் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை. சக்கரவண்டியை விரைந்து உருட்டிக் கொண்டு பெற்றோரின் அறைக்கு வந்தான் அவன். 

“அப்பா… அம்மா என்ன காரியம் செய்திருக்கிறீர்கள்?” 

“ஏனப்பா நல்லதுதானே செய்திருக்கிறோம்.” 

“எது அம்மா நல்ல காரியம்? அடைக்கலமா வந்த பெண்ணை அடிமையாக்க நினைப்பதா நல்ல காரியம்? பறந்து திரிய வேண்டிய குருவியைக் கூண்டிலே அடைத்துப் பார்ப்பதா நல்ல காரியம்? 

அம்மா… அப்பா உங்க மகனைப் பாருங்கள். நன்றாகப் பாருங்கள். இந்த நொண்டிக்கு ஒரு வெண்டாமரையா? தங்கச் சிலை போல இருக்கும் மல்லிகாவை இந்தச் செங்கல்லோடு சேர்க்க நினைத்து உள்ளீர்களே, அது உங்களுக்கே சரிதானா? நீங்களும் ஒரு பெண் தானே?” 

“அத்தான் நான் தங்கச் சிலையா இருக்கலாம். ஆனால் அது செங்கல்லாலே எழுப்பப்பட்ட கோயிலிலே இருந்தால்தானே தெய்வமா மதிக்கப்படும்? தெருவிலே இருந்தா அது காட்சிப் பொருள்தானே?” 

அங்கே வந்துகொண்டே மல்லிகா கூறிய மொழி வேலனை மலைக்கச் செய்தது. 

“மல்லிகா நீ என்ன சொல்லுகிறாய்?”

“உங்களை மனம் முழுதாக மணக்க ஒப்புதல் என்று சொல்லு கிறேன்.” 

“இதோ பார் மல்லிகா. கலியாணம் என்பது கடமைக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. அது ஒரு கட்டுப்பாடு கொண்ட தாகவும் இருக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக கருத்து ஒன்றிய கண்ணியம் உடையதாகவும் அது அமைய வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறந்து விளங்கும். விரைந்தெடுக்கும் முடிவால் உன் வாழ்வை வீணாக்கிக் கொள்ளாதே!” 

“அத்தான் எதையும் தாங்கும் இதயம் எனக்கு இருக்கின்றது. என் எண்ணப்படியே இது நடப்பதால் இதில் இனி எண்ணும்படி எதுவுமே இல்லை.” 

“பின்னே என்னப்பா மல்லிகாவே மனந்திறந்து தனது முடிவை சொல்லிவிட்டது, நீ ஏன் வீணாய் அலட்டிக்கொள் கிறாய்?” என்று வழக்காடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நல்ல தம்பி. 


கணினி வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்த செல்வி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த தனது தோழி தேவி நலம் உசாவி விட்டு “நீ வகுப்புக்கு வரவில்லையா?” என்று வினவினாள். 

“இல்லை செல்வி!” 

“ஏன் என்ன காரணம்?” 

“ஒன்றுமில்லை, தலைவலிப்பது போலிருக்கிறது. அதுதான் வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாமென்று நிற்கிறேன்.” 

“தேவி எல்லாம் எனக்குத் தெரியும். நீ வீட்டுக்குச் செல்ல நிற்கவில்லை. நீ உனது காதலருக்காக நிற்கிறாய் அப்படித்தானே?” 

“ஏய்… அது எப்படி உனக்கு?” 

“பாம்பின் கால் பாம்பறியும். அதுபோல ஒரு பெண்ணுடைய மனதும் நடப்பும் இன்னொரு பெண்ணுக்குத் தெரியாதா என்ன?” 

“செல்வி தயவு செய்து என் அப்பா அம்மாவிடம் சொல்லி விடாதே.” 

“ஓ… அந்த அளவுக்கு அச்சம் உள்ளதா? அப்படியென்றால் இந்தப் படிக்கின்ற காலத்தில் ஏன் காதலிக்கத் துணிந்தாய்? தேவி காதலிப்பது தவறில்லை. 

ஆனால் நாம் கற்பதை கற்க வேண்டியதில் கவனம் செலுத்த வேண்டும். காரணம் நமது எதிர்காலமே கல்வி யில்தான் இருக்கிறது. காதலிலே அல்ல. அதனால் கல்வி முன்; காதல் பின்.” 

“நீ சொல்வது ‘இன்’! வா வகுப்புக்குப் போகலாம். ஆமா உன் அண்ணனுக்குத் திருமணம் ஆகிவிட்ட தாமே, ஏன் என்னை யெல்லாம் அழைக் கவில்லை?” 

“உன்னை மட்டும் என்ன? நாங்கள் யாரையும் அழைக்க வில்லை. என் அண்ணனின் நிலைமைதான் உனக்குத் தெரியுமே. அதனாலே, பதிவுத் திருமணத் தோடு முடித்துக்கொண்டோம்.” 

ஓ அப்படியா? – 

தோழியர் இருவரும் கணினி கல்விக்கூடத்திற்குள் நுழைய தானிக் (ஆட்டோ) கதவு மூடிக் கொண்டது. 

4

வெடிகுண்டுத் திரியில் தீ வைத்தார்ப்போல் வேலன் மல்லிகா திருமணம் முடிந்து ஆண்டுகள் நான்கு ஓடி மறைந்தன. 

திருமணமான ஒருசில மாதங்கள் வரைதான் மல்லிகா நல்லதொரு குடும்பப் பெண்ணாக நடந்திருந்தாள். அதன்பிறகு அவள் முற்றிலும் மாறிவிட்டாள். தன் விருப்பப்படி ஊர் சுற்றுவதும் கண்டகண்ட பொருட்களை வாங்குவதும், இழிவான முறையில் ஆடையணி வதும் பொழுது போக்கு இடங்களுக்குச் செல்வதும் அவளுக்கு வாடிக் கையாகி விட்டது. 

அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்து விட்டோமே என்று நல்லதம்பியும் பொன்னாத் தாளும் மெல்லவும் முடியாமல் துப்பவும் இயலாமல் உள்ளுக்குள் வைத்துப் புழுங்கிக்கொண்டிருந்தார்கள். 

வேலனோ காலில்லாதவன். என்ன செய்வான்? தனக்கு நல்லது செய்ய நினைத்த பெற்றோர்களின் ஏமாற்றத்தை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

மல்லிகாவை வாயால் திட்டித் தீர்க்கவும் கண்டிக்கவும் முடிந்ததே தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அதேவேளை மானத்துக்கு அஞ்சியும் சில வேளை வாய்மூடிக் கிடந்தான். 

இதற்கிடையில் வேலனின் தங்கை செல்வி புகுமுக இறுதித் தேர்வில் தேர்ந்திருந்தாலும், பல்கலைக்கழகம் சென்று படிக்கும் தகுதியை இழந்திருந்தாள். காரணம்? அவள் கணக்குப் பாடத்திலும், ஆங்கிலம் பொதுத்தாள் தேர்விலும் மிகவும் குறைந்த மதிப்பெண் களே பெற்றிருந்தாள். 

நம் நாட்டில் பெரும்பாலும் நமது தமிழ் மாணவர்களின் கல்வி நிலை இப்பொழுது இப்படித்தான் முடிகிறது. 

அந்தக் காலத்திலே கணக்குத் துறையில் வல்லவர்களாக கோலோச்சி வந்தவர்கள் நாம். ஆனால் இன்றோ? கணக்கென்றால் கசப்பு மருந்தாக நினைக் கின்றனர் நமது பிள்ளைகள். 

சிலர் ஆர்வத் தோடு பயின்றாலும் பெரும்பாலும் தோல்வியே காணுகின்றனர். இதற்கொரு நல்ல தீர்வு காணாவிட்டால் எதிர்காலத்தில் பட்டதாரிகளை நமது இனத்தில் விரல்விட்டுக்கூட எண்ண வேண்டிய தில்லை. 

படிப்பை முடித்துக்கொண்ட செல்வி, சிங்கப்பூர் வான்படைத் துறையில் வேலைக்குச் சேர்ந்து கொண்டதோடு மணமும் முடிந்து தன்னுடைய கணவரோடு தனிக்குடித்தனமும் போய்விட்டாள். 

மல்லிகாவின் நடத்தையினால் மனமொடிந்து கிடந்தான் வேலன். அவர்கள் இருவரிடையே கணவன் மனைவி என்ற உறவோ, கட்டிலறைப் பங்கீடோ எதுவும் இல்லாது வாழ்ந்து வந்தனர். 

வேலனின் கால் முடமான நேர்ச்சியால் கிடைத்திருந்த இழப்பீட்டுத் தொகையும், காப்புறுதித் தொகையும் பொருளகத்திலே குறைந்துகொண்டே வந்தது. 

என்றும்போல் அன்றும் மல்லிகா எங்கோ சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினாள். சின முற்றிருந்த வேலன் அன்று சற்றுக் கடுமையாகவும், இழிவாகவும் அவளைத் திட்டினான். 

அவளை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு ஆணையிட்டான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வெளிநடந்தாள். 


நள்ளிரவு நேரத்தில் ஒரு குடும்பப்பெண் துணிச்சலோடு வீட்டைவிட்டு வெளியேகிறாள் என்றால் அடைக்கலம் கொடுக்கக் கூடிய எவரேனும் அவளுக்கு இருக்கவேண்டுமல்லவா? 

ஆம், மல்லிகாவுக்கு இப்பொழுது அப்படி ஒரு உறவு இருந்தது. அந்த உறவு சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட உறவு தான். 

செல்வம். 

மல்லிகாவின் புதிய உறவின் பெயர் அது. 

மல்லிகா கடைத்தொகுதிகளுக்கு வரும்போ தெல்லாம் அவளது கண்களிலும் கவனத்திலும் தென்பட்டு இப்பொழுது அவன் அவளின் நெருக்கமான உருவாக மாறியிருந்தான். 

செல்வம். கணவனின் உறவு இல்லாமல் பிரிந்த நிலையில் வாழ்ந்திருந்த மல்லிகாவின் சூழ்நிலையை அவன் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான். 

மல்லிகாவும் அவனது இனிப்புப் பேச்சிலும், காதல் சரசங்களிலும் தன்னைப் பறிகொடுத்திருந் தாள். வீட்டைவிட்டு வெளியேறிய அவள் நேராகப் போய்ச் சேர்ந்த இடம் அவன் வீடு தான். அவ்வீடு வீடமைப்புப் கழகத்துக்குச் சொந்தமான ஓரறை வாடகை வீடு. வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமில்லை. 

அந்த நட்டநடு இராவில் தட்டப்பட்டதும் திறக்கப்பட்டது அந்த வீட்டின் கதவு. அவள் வீட்டிற்குள் புகுந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு இப்படியொரு உரையாடல்: 

“மல்லிகா நீ சூடப்பட்ட மலரென்றாலும் வாடிய மலரல்ல! கடிக்கப்பட்ட கனியென்றாலும் சுவைத்து முடிக்கப்பட்ட சுளை யல்ல! உலைக்களத்திலே கொதிக்கின்ற இரும்பு நிறம் மேனி! அழகால் ஆடவரை மயங்கவைக்கும் நீயோர் எழில் நிறை வாணி! நரை கண்டோரையும் வரையின்றிப் பேசவைக்கும் உனது இரு விழிகள் ஓர் இலக்கிய மேடை! இங்கே திரையில்லை உறவாட என்று அவை என்னிடம் காட்டுகின்றன சாடை!” 

“அடேயப்பா நீங்கள் என்ன கவிஞரா?” 

“ஆமாம், கடைக்கண் பார்வையைக் காதலியர் காட்டி விட்டால் கல்லாரும் கவிபாடும் வல்லவராய் மாறிவிடுவது கால காலமாய் நடந்துவரும் காட்சி! நான் மட்டும் என்ன அதில் தாழ்ச்சி!” 

“அன்பே, நான் இதுவரையும் கேட்காத இனிய மொழிகள் உங்களது பேச்சு! என்றாலும் நான் விடுவதெல்லாம் பயமென்னும் மூச்சு.” 

“தனிமையில் இணைந்துவிட்டோம்! தலைக்குமேல் வெள்ளம் இதில் இனி ஏன் வெறும் வீச்சு!” 

“உங்களை நம்பலாமா?” 

“நம்பினோர்க் கைவிடப்படுவதில்லை என்று நல்லோர்கள் நல்லவர்களுக்குச் சொல்லி வைத்திருக் கிறார்களே.” 

“செல்வம் எப்போது நாம் தனிவாழ்வு காண்பது?” 

“இப்போதே தொடங்கிவிடுவோம்.” 

சுவையான இந்த உரையாடலைத் தொடர்ந்து சாமந்தித் தோட்டத்து வாய்க்கால் நீர் சாக்கடையிலே கலந்துகொண் டிருந்தது. 

விடிந்தது பொழுது! 

ஆனால், மல்லிகாவுக்கு இன்னும் விடியவில்லை! 

அவளுக்கு இனிமேல் ஏது விடிவு? 

அவள் கண்விழிக்கும்போது காலை மணி பதினொன்றாகி இருந்தது. பக்கத்தில் படுத்திருந்த செல்வத்தைக் காணோம். அத்தோடு அவள் அணிந்துகொண்டிருந்த ஆடை அணிகலன் பணம் யாவும் மறைந்திருந்தன. 

படி தாண்டிய பத்தினி 

வேலி தாண்டிய வெள்ளாடு 

தப்புத்தாளம் – என்றெல்லாம் அடைமொழி யிட்டு அழைக்கக் கூடிய நிலைக்கு ஆளாகிவிட்ட மல்லிகாவுக்கு தனிமையாக அழுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? 

நிலைமைக்கு மீறிய நினைப்பில் நீந்தியதாலும், கிடைத்த நல் வாழ்வை கீழ்மைப்படுத்தியதாலும் அவளுக்குக் கிடைத்திருப்பது தண்டனையல்ல, பாடம். 

அவளது மனத்திரையில் மாறப்பன், பால்கார பரமசிம், அவரது மனைவி உமையாள், அத்தை பொன் னாத்தாள், மாமா நல்லதம்பியார், கால் ஊனமுற்ற கணவன் வேலன், நாத்தனாள் செல்வி என ஒவ்வொருவரும் மாறிமாறி வந்து அவளை இழித்தும் பழித்தும் கூறி காரித்துப்பிக் கொண்டிருந்தனர். 

முன்னிரவு மூடப்பட்ட அந்த அடுக்குமாடி வீட்டின் பனிரெண்டாவது அடுக்கிலிருந்த அந்த ஓரறை வீட்டின் கதவு மீண்டும் திறக்கப்பட்டது. 

…..?! 

கீழ்த்தளத்தில் திடீரென கூக்குரலோடு கூட்டம் கூடியது. அரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அந்தத் தப்புத்தாளம். 

– இந்தக் கதை 1989ல் எழுதப் பெற்றது.

– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.

பாத்தேறல் இளமாறன் (தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *