கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 1,323 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

றிஸ்மி அன்றும் வழமைபோல பாடசாலைக்குப் புறப் படும் நேரத்திலேயே புறப்பட்டுக் கொண்டான். ஆனால், வீட்டு முற்றத்துக்கு வந்த அவனோ இயந்திரக் கோளாறு காரணமாக இடைநடுவே நின்றுவிடும் ‘கார்’ போலஅப்படியே நின்றுவிட்டான். 

ஏழு வயதை எட்டிக்கொண்டிருந்த அவன் முதலாம் வகுப்பிலே கல்வி பயின்று கொண்டிருந்தான். அளவான உயரம், அதற்கேற்ற உடல் வாகு,வட்ட முகம், வடிவான இரு விழிகள், சுருண்ட கேசம் ஆகியன அமையப் பெற்றவன். இளம் நீல வண்ண கட்டைக் காற்சட்டை, வெள்ளை நிற அரைக்கை சேர்ட், கறுப்பு வண்ணச் சப்பாத்து ஆகியன அணிந்திருந்தான். தோளிலே புத்தகப்பை ஒன்றும் தொங் கிக் கொண்டிருந்தது. 

மொத்தத்தில் அவன் வெகு கவர்ச்சியாகக் காணப் பட்டான். ஆனால், அவனின் வதனமோ, வெயிலிலே கிள்ளி யெறிந்த மலர் போல வாட்டமுற்றிருந்தது. அவன் தன் பக்கத்திலே நின்றிருந்த ஒரு தெம்பிலித் தென்னையின் உறுப்புகளைத் தொட்டும், தடவியும், இழுத்தும் விட்டுக் கொண்டதோடு, நெளிந்தும், வளைந்தும், கால்களால் நிலத்திலே சித்திரம் வரைந்தும் நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தான். மணி ஏழரையை எட்டியிருந்தும்கூட பாடசாலைக்குச் செல்வதற்கான எதுவித அறிகுறியுமே அவனிலே தென்படவில்லை. இது அவன் தாய் அனீஸா வுக்கு மிக்க ஆச்சரியத்தை ஊட்டியது. 

அவன் முதலாம் வகுப்பிலே கல்வி பயின்று கொண் டிருந்தாலும், பாடசாலைக்குச் செல்வதில் மெத்தவே ஆர்வம் காட்டுவான். அதன் காரணமாய் காலை எட்டு மணிக்கெல்லாம் ஆரம்பமாகிவிடுகின்ற அந்தப் பாடசாலை பத்து நிமிடங்களிலே சென்று சேர்ந்துவிடக்கூடிய தொலைவிலே அமைந்திருந்தும் கூட வழமையாய் காலை ஏழு மணிக்கே புறப்பட்டுப் போய்விடுவான். அப்படியான அவன் அன்று நடந்துகொண்ட விதம் யாருக்குத்தான் ஆச்சரி யத்தை ஏற்படுத்தாது? 

இழைத்துக் கொண்டிருந்த பாயை அரை குறையில் அப்படியே அநாதரவாய் விட்டுவிட்டு ‘விசுக்’ கென்று எழுந்தாள் அனீஸா. 

”சோறும் திண்டிட்டிங்கதானே…வேற என்ன…?” என்றவாறு அவனின் அருகே பறந்து போனாள். அவனோ பக்கத்திலே வந்து நின்ற தன் தாயை நோக்கி, “ஒண்டு மில்லம்மா…” என்றவாறு இழுத்தான். 

“ஒண்டு மில்லாட்டி வேற என்னத்துக்கு வின்ன நிக்கிங்க? விஷயத்தச் சொல்லுங்க.” அவசரப்படுத்தினாள் அனீஸா. 

“சிபானா டீச்சர்ர மகன் பெறோஸ் எனக்கு நேத்து பள்ளிக்கொடத்துக்கவச்சி செருப்பால அடிச்சுப்போட்டான். அவன் இண்டைக்கும் அடிப்பாண்டு … பயமாரிக்கி…. அது தான்.” விஷயத்தைச் சுருக்கிச் சொன்னான். 

அவன் வதனத்தில் சோகம் நிழல் பரப்பியிருந்தது.

”என்ன…செருப்பால அடிச்சானா… அவகட ஆட்சிதான் நடக்குதோ” 

அனீஸாவின் நெஞ்சில் ஆத்திரம் பகீரென்று பற்றியெழுந்தது. 

அவர்கள் வாழ்க்கையில் மலர்ந்த இரு மலர்களிலே ஒன்று இளமையிலேயே மடிந்துபோக எஞ்சிய ஒன்றுதான் அந்த றிஸ்மி. ஒன்று என்பதால் அவன்மேல் உயிரையே வைத்திருந்தனர். அதன் காரணமாய் யாராவது அவனைச் சற்றுக் கடிந்து பேசிவிட்டாற்கூட அவர்களால் அதனைப் பொறுத்துக் கொள்ளவே இயலாது. அப்படியாக வைத்தி ருந்த அவனைச் செருப்பால் அடித்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? அவளது கண்கள் இரண்டுமே செம்பகத்தின் கண்களாகின. 

சில நிமிடங்களில், தன்னை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அனீஸா, தன் மகனுக்குப் பாடசாலையில் நடந்த சம்பவத்தை விபரமாக அறிய விரும்பினாள். 

“மகன், அந்தப் பொடியன் என்னத்துக்காக உங்களை அடிச்சான்.நீங்க ஒண்டும் செய்யல்லியா?” என்று ஒரு வினாவைப்போட்டாள். அதில் மாட்டிக் கொண்ட றிஸ்மி அப்படியே விடயத்தைப் பிட்டு வைத்தான். 

“இல்லம்மா… நேத்து எங்கட வகுப்புக் கலையக்க அவன்ட சிபானா டீச்சர்ர மகன் பெறோஸிட புத்தகம் அவன்ட கையிலரிந்து கீழ விழுந்திச்சி. அவன் அத எடுத்துத்தரச் சொன்னான். நான் அத எடுத்துக் குடுக்கல்ல. நான்தான் அவருக்கு ஒரேயே வேல செய்து குடுக்கணும், நான் வேணு மிண்டுதான் அதச் செய்து குடுக்காம இருந்த, அதனால், அவன் என்ன ஏசினான். நானும் அவனை ஏசினேன். பொறகு அவன் பள்ளிக் கொடத்து வளவுக்கயே என்னத் தெரெத்தி வந்து செருப்பால அடிச்சுப் போட்டான்.” 

“அப்படியா விஷயம்…ம்…இண்டைக்கும் அவர் அடிக்கிற சமத்தப் பாப்பம்… இப்ப நேரமும் எட்டுக்கிட்ட வந்திருக்கும்… நீங்க இப்ப பள்ளிக்கொடத்துக்குப் போங்க. வயலுக்கருந்து வாப்பாவும் இன்னும் கொஞ்ச நேத்தை யால வந்திருவாரு. வந்ததும், எல்லா விஷயங்களையும் விபரமாச் சொல்லி உடனேயே நான் அவர அங்க அனுப்பிறன்.” 

“சரிம்மா” 

றிஸ்மியின் முகத்தில் முற்றுகையிட்டிருந்த சோர்வு நீங்கிச் சுறுசுறுப்பு சுடர் விட்டது. விசுக்கென்று திரும்பிப் பாடசாலையை நோக்கி விரைந்தான். 


காலை ஒன்பது ஒன்பதரை மணியிருக்கலாம். வயலி லிருந்து வீடு திரும்பிய தன் கணவன் நிஜாமுத்தீனுக்கு அவசர அவசரமாய் காலை உணவு பரிமாறினாள் அனீஸா. 

உணவு அருந்தி முடிந்த மறுகணமே தன் கணவனிடம்  அவள், நேற்றுப் பாடசாலையில் தமது புதல்வன றிஸ்மிக்கு நடந்த சம்பவத்தையும், அதன் பிரதிபலிப்பாய் அவன் இன்று பாடசாலைக்குப் போக மறுத்து நின்றதை யும்,தான் ஒருவாறு அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததையும் விபரமாக எடுத்துக் கூறியதோடு, பாடசா லைக்குச் சென்று நேற்று நடந்த சம்பவத்திற்குத் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருமாறும் வேண்டிக் கொண்டாள். 

அனைத்தையும் செவிமடுத்த நிஜாமுத்தீன் பதறிப் போனான். விழிகள் குளமாகியே விட்டன. எழுந்து பாடசாலையை நோக்கிப் பறந்தான். 

அவன் கேற்றைத் திறந்து கொண்டு பாடசாலை வளவில் எட்டி அடி வைத்ததுதான் தாமதம், றிஸ்மி வகுப்பி லிருந்து எப்படித்தான் வந்தானோ தெரியவில்லை. வில்லி லிருந்து விடுபட்ட கணை போல தன் தந்தையிடம் வந்து சேர்ந்தான்.நிஜாமுத்தீனைச் சுற்றி இரண்டு மூன்று மாண வர்களும் மொய்த்துக் கொண்டனர். 

நிஜாமுத்தீன் அவர்களைக் கடந்து தன் பார்வையை அப்பால் செலுத்தினான். 

எதிரே அமைந்திருந்த பாடசாலையின் ‘ஹோல்’ களிலிருந்து மாணவர்கள் படிக்கும் சப்தம் பொங்கி வந்தது. ஆசிரியர்களையோ, ஆசிரியைகளையோ எங்குமே காணவில்லை. அவர்களுக்குப் பதிலாக வளர்ந்த மாணவர்கள் கையில் பிரம்போடு வகுப்புகளிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தனர், அவர்களின் அதிகாரமோ கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. என்றாலும் மாணவர்களின் சில அத்துமீறல்களும் அங்கு நடைபெறவே செய்தன. 

திடீரென்று அங்கு தன்னைச் சூழ நின்றவர்களின் நினைவு தட்டவே, தன் பார்வையைப் பக்கத்தே இழுத்து விட்டுக் கொண்டான் நிஜாமுத்தீன். 

”சிபானா டீச்சர்ர மகன், உங்கிட மகனைச் செருப் பால ரெண்டு மூண்டு அடி முகத்திலயும் முதுகிலயும் அடிச்சுப்போட்டான்” என்றான் பக்கத்தில் நின்ற ஒரு மாணவன். ஐந்தாம் வகுப்பிலோ, நான்காம் வகுப்பிலோ கல்வி கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அவன் மெல்லிய பச்சை நிறத்திலான கட்டைக் காற்சட்டையும், வெள்ளை நிறத்தி ஸான அரைக்கைச் சேர்ட்டும் அணிந்திருந்தான். தலை ஒரு பக்கமாக வாரி விடப்பட்டிருந்தது. வட்டமான முகத்திலே சற்றுப் பெரிய இரு விழிகள் படபடத்துக் கொண்டிருந்தன. 

அம்மாணவனின் பேச்சைக் கேட்ட நிஜாமுத்தீன் நற நற வென்று பற்களைக் கடித்துக்கொண்டான். சினம் பற்க ளுக்கிடையில் நொறுங்கிப் போயிற்று. 

‘தன் மகன் சண்டை சச்சரவுக்குப் போக மாட்டான். மிகவும் அமைதியான சுபாவம் உள்ளவன். என்ன நடந்திருக்கும்…’ சிந்திக்கத் தொடங்கினான் நிஜாமுத்தீன். 

“இஞ்சப்பாருங்க… நானும் உங்கட மகனோடதான் படிக்கிற …நேத்து இந்த விஷயம் எல்லாத்தையும் நான் பாத்துக்கொண்டுதானிருந்த உங்கட மகன் அவனை ஒண் டுமே செய்யல்ல… அவன்தான் சும்மா அநியாயமா அடிச்சுப் போட்டான். பாவம்!” என்றான் இன்னொரு மாணவன். மிகவும் வாயாடி போல் காணப்பட்டான். றிஸ்மியின் உயரந்தான் இருப்பான். இவன் அணிந்திருந்த கட்டைக் காற்சட்டையும், சேர்ட்டும் சந்தனக்கலரிலே தைக்கப்பட் டிருந்தன. தலைமயிர் கட்டையாக வெட்டிவிடப்பட்டிருந் தது. சற்று நீளமான மூக்கின் நுனியில், கசக்கி விட்டது போல் செம்மை படர்ந்திருந்தது. 

இம்மாணவனின் வார்த்தைகள் நிஜாமுத்தீனின் எண்ணத்தை உறுதிப்படுத்தின. அதனால் நிஜாமுத்தீன் ஆரம்பத்திலேயே தன் மகனிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி தானாகவே மறைந்துகொண்டது. என்றாலும் அவ் விடயம் தொடர்பான வேறு சில தகவல்களை அறிவதற் காக அவனோடு உரையாடினான். 

“சிபானா டீச்சர்தானே உங்களுக்குப் படிச்சித்தாற உங்கட வகுப்பெங்கரிக்கி?” என்று உரையாடலை ஆரம்பித்தான் நிஜாமுத்தீன். 

“சிபானா டீச்சர்தான் படிச்சித்தாற. அன்னாரிக்கி எங்கட வகுப்பு.” எதிரே அமைந்திருந்த ஹோலுக்குப் பின்னால் தெரிந்த இன்னுமொரு ஹோலைச் சுட்டிக்காட் டினான் றிஸ்மி. 

நிஜாமுத்தீனோ, தன் மகனைக் கையில் பிடித்த வண்ணம் அந்த ஹோலை நோக்கி நடக்கத் தொடங்கி னான். சுற்றி நின்றவர்களும் அவனுடன் இழுபட்டுச் சென் றனர். 

“அப்படின்டா, இந்த விஷயத்த உங்கட டீச்சருக்கிட்டச் சொல்லல்லியா?” தன் மகனை நோக்கிக் கேட் டான். 

“எங்கட வகுப்பு கலையக்கதான் இது நடந்த. அதனால். நான் சொல்லல்ல. அப்படியே வீட்ட வந்திட்டன்.” 

“ம்…இப்ப அவ எங்க? வகுப்புக்க இருக்காவா?” இப்போது முன் ஹோலின் அருகே வந்துவிட்ட நிஜாமுத்தீன் இவ்வாறு வினவினான். 

“இல்ல வாப்பா, பெரிய சேர்ர அறைக்க போனா.’ மைந்தன் தனது சேர்ட்டை கீழ் நோக்கி இழுத்துவிட்டுக் கொண்டான். 

“பெரிய சோர அறைக்க சேர்மார்ர கூட்டம் நடக் கிது. அவவும் அங்கதான் இருப்பா.” கூடவந்த வளர்ந்த மாணவனொருவன் கூறினான். 

“ம்…” நிஜாமுத்தீன் டக்கென்று திரும்பி அதிபரின் அறையை நோக்கி அடி வைத்தான். 

நிஜாமுத்தீன் அதிபரின் அறையில் நுழையும் போது அங்கே அப்பாடசாலை ஆசிரியர் சங்கக் கூட்டம் சிறிது சூடு கண்ட நிலையிலே நிகழ்ந்து கொண்டிருந்தது. அறையில் நுழைந்த அவனோ, சுவரின் ஓரமாய் மெல்ல ஒதுங்கி நின்று பார்வையை உள்ளே சுழல விட்டான். சற்று விஸ்தீரணமான அந்த அறையிலே கிழக்குப் புறமாகவும், மேற்குப் புறமாக வும் சுவரோடு ஒட்டியவாறு அலுமாரிகள் இடப்பட்டி ருந்தன. சற்றுத் தள்ளி வடக்குப் புறமாக அமைந்திருந்த ஜன்னலின் முன்னே ஒரு பெரிய மேசை போடப்பட்டிருந் தது. பச்சை வண்ணச் சீலை விரிக்கப்பட்டிருந்த அம்மேசை யிலே வரவு இடாப்புகள், பைல்கள், வெவ்வேறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘லொக்புக்’கும் ஒரு புறமாக வைச் கப்பட்டிருந்தது. ஜன்னலின் வழியாக, உள்ளே குபுகுபு வென்று வீசிய காற்றினால் அம்மேசை சடசடத்துக்கொண் டிருந்தது. அம்மேசையின் பின்னே தெற்கே நோக்கியபடி இடப்பட்டிருந்த கைக் கதிரையிலே அதிபர் வெகு கம்பீர மாக அமர்ந்திருந்தார். அவரின் தலைக்கு மேல் சுவரிலே. ஜனாதிபதி, பிரதம மந்திரி, கல்வி மந்திரி ஆகியவர்களின் படங்கள் சிரித்துக் கொண்டிருந்தன. வலது பக்கச் சுவரிலே கண்ணாடி பிறேம் செய்யப்பட்ட கால அட்டவணை தொங் கிக் கொண்டிருந்தது. அதற்குச் சற்றுத் தள்ளி ஆசிரியர்க ளின் லீவுவிபர அட்டை சுவரோடு பொருத்தப்பட்டிருந்தது. இடது பக்கச் சுவரிலே சிறிது தொலைவில் மாதக் கலண்டர் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. 

எங்குமே ஒரு தனிக் கவர்ச்சி இழையோடிக்கிடந்த அந்த அறையிலே இரு மருங்கிலும் ஆசிரியர்களும்,ஆசிரி யைகளும் வீற்றிருக்க அதிபரின் தலைமையிலே கூட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இப்போது நிஜாமுத்தீன், அறை யிலே துழாவிய தன் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொண்ட வனாய் மிகவும் மரியாதையோடு நின்றான். 

அவனைப் பார்த்ததும் அனைவரது பேச்சும் அப்படியே தடைப்பட்டுப்போக பார்வைகள் அவனிலே பாய்ந்து கொண்டன. கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த அதிபர் அனைத்து நிகழ்ச்சிகளையும் மறந்து அவனை ஒரு முறை முற்றாக நோட்டமிட்டுக் கொண்டார். 

“தம்பி என்ன?” 

நிஜாமுத்தீன் பின்னால் நின்ற தன் புதல்வனை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டான். 

“சேர்.. நேத்து சிபானா டீச்சர்ர மகன் என்ட மகன் றிஸ்மியைச் செருப்பால அடிச்சுப் போட்டாராம், அதனால் என்ட மகன் இண்டைக்குப் பள்ளிக்கு வர ஒண்ணாண்டிட்டு வீட்டில் நிண்டிருக்காரு. அவர்ர உம்மாதான் அவரத் தெண்டிச்சி இண்டைக்குப் பள்ளிக்கு அனுப்பியிருக்கா நானும் இப்ப ரெண்டு மூணு நாளா வீட்டில இல்ல, சாளம் பைக்க சூட்டிக்கம். அங்கருந்து,நானும் இப்பதான் வந்த. எல்லா விஷயமும் எனக்கு இப்பதான் தெரியும், இது என்னண்டு கேப்பம் எண்டு போட்டுத்தான் நான் இஞ்ச வந்த…”

றிஸ்மியை சிபானா ரீச்சரின் மகன் செருப்பாலடித்த விஷயம் அதிபருக்குத் தெரியாமலில்லை. நேற்றுப் பாட சாலை கலைந்து சற்று நேரத்தில், அவரது நம்பிக்கைக்குரிய ஒரு மாணவனின் வாயிலாக அதனை அறிந்து வைத்திருந்தார். என்றாலும் அவர் அதனை வெளியிலே காட்டிக் கொள்ளவில்லை. 

நிஜாமுத்தீன் தன் புதல்வனின் அச்செய்தியை வெளி யிலே பிட்டு வைத்தும்கூட அதிபர் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. 

“அப்படியா விஷயம். எனக்குத் தெரியாதே. அவர் அடிச்ச உடனேயே இங்க சொல்லல்லியா? எந்த வகுப்பு உங்கட மகன்?”

அதிபரின் வதனத்தில் எவ்விதச் சலனமும் அலை  மோதவில்லை 

“முதலாம் வகுப்பு சிபானா டீச்சர் தானாம் படிப்பிக்கிற. வகுப்புக் கலையக்கதான் அடிச்சதாம். அதுவுமில் லாம அவரும் ஓடிட்டாராம். அதுதான் சொல்லல்லியாம். தலையைச் சொறிந்து கொண்டான் நிஜாமுத்தீன். 

அதிபர் தனக்கு எதிரே இரு மருங்கிலும் கூட்டத் திற்காக வந்து குழுமியிருந்த ஆசிரியர் ஆசிரியைகளிலே தன் பார்வையை விரித்துவிட்டார். அனைவரும் விசாரணையில் ஆழ்ந்திருப்பது தெரிந்தது. 

நிஜாமுத்தீன் பகர்ந்தவற்றைச் செவிமடுத்துக் கொண் டிருந்த சிபரனா ரீச்சர். அதற்கென்ன இயம்புகிறாள் என்பதை அறிவதற்காக வலது பக்கமாகவிருந்த வரிசையில் நான்காவதாகவிருந்த அவளிலே தன் பார்வையைச் சற்று நிறுத்தினார் அதிபர். 

தன் மகன் பெறோஸ், றிஸ்மியை அடித்ததையும், அதில் பிழை தன் மகனிலேதான் என்பதையும் சிபானா நேற்றே அறிந்து வைத்திருந்தாள். என்றாலும் அதனை அவள் அவ்வளவு பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மறு கணமே அதனை மறந்து போயுமிருந்தாள். திடீரென்று அவ் விடயம் இவ்வாறு அம்பலத்திற்கு வந்ததும் அதிர்ந்து போனாள். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் அதிபரின் அந்தப் பார்வை சிபானாவில் விழுந்தது. அப்பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டாலும், எதுவுமே பேசாது பல்லைக்  கடிப்பதும், மெல்ல நகைப்பதுமாய் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளின் பார்வையோ என்னிடம் எதுவும் கேட்காமல் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவிடுங்கள் என்பதுபோல் கெஞ்சின. 

சிபானா ரீச்சரின் நிலையும்,தோற்றமும்,பார்வை யும் அவள் விடயத்தை அறிந்து வைத்திருக்கிறாள் என்பதையும், அவ்விடயம் அவளுக்குச் சாதகமாய் இல்லை என்பதையும் உணரவைத்தன. 

அவசரப்பட்டு விடயத்தைக் கெடுத்துவிட விரும்ப வில்லை அதியர். சிபானாவில் நிலைத்திருந்த தன் பார். வையை மெல்ல இழுத்து மீண்டும் அங்கு வந்திருந்த நிஜாமுத்தீனின் பக்கமாய்ச் செலுத்தினார். பக்கத்தில் நின்ற அவனின் மகனைச் சுட்டிக்காட்டி அவனிடம் மிகக் கனிவாகப் பேசினார். 

“றிஸ்மி… என்ன விஷயம் நடந்த, உண்மையைச் சொல்லு.” 

பேசத் தொடங்கிய காலம் முதலே உண்மையே பேசப் பழக்கப்பட்டவன் றிஸ்மி. அதன் காரணமாய் அவன் எச் சந்தர்ப்பத்திலும் உண்மையே பேசுவான். அப்படியான அவன் அதிபர் வினவியவுடனே நடந்த விடயங்களை அப்படியே அப்பட்டமாய் வெளிப்படுத்தினான். சம்பவம் நடந்த போது கூடநின்ற அவனது வகுப்பு மாணவனும் அங்கு அதனை உறுதிப்படுத்தினான். 

ஏற்கனவே அதிபர் தன் நம்பிக்கைக்குரிய மாணவ னின் வாயிலாய் அறிந்து கொண்ட விடயமும் அதே போலவே அமைந்திருந்தது 

சிபானா ரீச்சரின் புதல்வனிலேதான் பிழை என்ப தைத் தெளிவாய் உணர்ந்து கொண்ட அதிபர், இப்போது, வேகமாய்ச் சிந்திக்கத் தொடங்கினார். கூட்டத்தில் வீற்றி அதிபர் எவ்வாறு தீர்ப்பு ருந்த அனைவரது கவனமும், வழங்கப் போகின்றார் என்பதிலேயே இலயித்துப்போயிருந் தது. ஆசிரியை சிபானாவின் கவனமும் அதிபர் எவ்வாறு நடந்துகொள்ளப் போகின்றார் என்பதிலேயே ஆழ்ந்திருந் தது. அதிபர் தன் முன்னே இரு வரிசைகளிலும் வீற்றிருந்த வர்களை அவதானித்துவிட்டு சிபானாவையும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கிக் கொண்டார். 

‘சிபானா தனக்குக் கீழ் படிப்பிக்கின்ற ஆசிரியை மட்டுமல்ல நெருங்கிய உறவினளும்கூட, அதேவேளை வந்திருந்த நிஜாமுத்தீனையும் சமாளிக்கவேண்டும். இதற்கிடையில் சிபானா ரீச்சரின் மகன் பெறோஸும் பாடசாலைக்கு வந்திருக்கிறான். அவனை அழைத்து வினவினாலும் விஷயம் பிழைத்துவிடும். ஆகையினால் அவனையும் அழைக்காமலே சமாளிக்கவும் வேண்டும். எவ்வாறு நடந்து கொள்ளலாம்’ என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அப்போது ஒரு மாணவன் நிஜாமுத்தீனின் பக்கமாய் நின்றவாறு எட்டிப்பார்த்தான். 

”பெரிய சேர்… டீச்சர்ர மகன் இவரத் தெரத்திவரக்க நாலாம் வகுப்புப் படிக்கிற ஜெஸீல்தான் இவரப் பிடிச்சுக் கொடுத்த’ என்றான் அம்மாணவன். 

நீருக்குள் மூழ்கிவிடப்போன ஒருவருக்குப் பிடித்துக் கொள்வதற்கு ஒரு பெரிய மரக்கட்டையே கிடைத்தது போல இருந்தது அதிபருக்கு. ‘ரியூப்லைட்’ போட்ட மாதிரி பக்கென்று அவர் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. ஆனால், திடீரென்று ஒரு சந்தேகமும் உள்ளே புகுந்து கொண்டு வண்டு போல் அறுக்கத் தொடங்கியது. உடனே அதிபர். “இதச் சொல்லல்லியே… மெய்தானா” என்று அச்சந்தேகத்தை வெளிப்படுத்தினார். நிஜாமுத்தீனோ தன் மகனைப் பார்க்க, மகனோ அதிபரைப் பார்த்து பின்வருமாறு பகர்ந்தான். 

“மெய்தான் சேர்… அது எப்படிண்டா… டீச்சர்ர மகன் பெறோஸ் செருப்பக் கழத்திக் கையிலெடுத்துக்கிட்டு என்னத் தொரத்தி வந்தான். நான் அவனுக்கிட்ட எம் படாம ஓடி வந்தன். அப்படி ஓடி வரக்க எதுக்க நிண்ட ஜெஸில் என்ன மறிச்சி அப்படியே பிடிச்சுக் கொடுத்திட்டான். ஆனா…அவன் எனக்கு வேறொண்டும் செய்யல்ல. அதனால நான் அதச் சொல்லல்ல. 

இப்போது அதிபரின் உள்ளம் தெளிவடைந்து சதைப்பிடிப்பான முன்னைய நிலைக்கு மீண்டது. கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டு சொன்னார். 

“நீங்க ஜெஸீல் பிடிச்சுக் கொடுத்தத்த சின்ன விஷயம் என்டு நினச்சிக்கிட்டிருக்கிங்க… அது சின்ன விஷய மில்ல.. பெரிய விஷயம்.” 

தந்தையும் மைந்தனும் மெளனமாகிப் போயினர். 

மறுகணம் அதிபர் முதலில் அச்செய்தியைச் சொன்ன அம்மாணவனை “இஞ்சே வா” என்று முன்னே அழைத்தார். 

நிஜாமுத்தீனின் பின்னால் மறைந்து கொண்டு நின்ற அம்மாணவனோ எட்டி அடி வைத்து முன்னே குதித்தான். 

“ஜெஸில் எங்கே? இன்டைக்கு பள்ளிக்கு வந்திருக்கானா?” அதுபர் அம்மாணவனிடம் வினவினார். 

“ஓம் சேர் “

“ஓடிப் போய் பெரிய சேர் வரட்டாம் என்டு கெதி யாகக் கூட்டிக்கிட்டு வா” 

வேகமாய் விரைந்தான் அம்மாணவன். சில நிமிடங் களிலே ஜெஸீலோடு அதிபரின் அறையை அடைந்தான். ஜெஸில் தன்னை அழைத்து வந்த மாணவனின் பின்னால் ஒதுங்கி நின்று கொண்டான். அவனை முன்னால் இழுத்து ன்னாரிக்கான் சேர்…’ என்றான் விட்டுக்கொண்டு, அழைத்து வந்த மாணவன். 

”இவன் அனிபாட மகனல்லவா?’ என்றார் அதிபர் தன் முன்னே வீற்றிருந்த ஆசிரியர்களை நோக்கி. 

“ஓம்”. அதனை உறுதிப்படுத்தினார் இடது புற வரிசையிலிருந்த ஓர் ஆசிரியர். 

தான் எண்ணியவர்தான் அவர் என்று இப்போது அதிபருக்குத் தெளிவாயிற்று. அதற்கு அடையாளமாக “இம்” என்று கொண்டார். 

ஜெஸீலின் தந்தையைப்பற்றியும், அவரது குடும்பத் தைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்ததுபோல, றிஸ்மியின் தந்தையைப்பற்றியும், அவரது குடும்பத்தைப்பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார் அதிபர். இவ்விருசாராரும் சமூகத்திலே மற்றவர்களோடு சண்டை சச்சரவுக்குப் போகாமல் ஒதுங்கிக்கொண்டு தாங்களும் தங்கள் பணியும் என்று வாழ்பவர்கள். அவர்கள் தனக்கு எதிராக எச்சந் தர்ப்பத்திலும் கிளம்பமாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். 

பொதுவாக அவ்விரு சாராரது நிலைமைகளும் சிபானா ரீச்சரது மகனின் விடயத்தைச் சமாளிக்க அதிப ருக்கு மேலும் வாய்ப்பாக அமைந்தன. 

மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேசையிலே வைத்து விட்டு, பக்கத்திலே வைக்கப்பட்டிருந்த தன் சுட்டுவிரல் அளவு பருமனையுடைய பிரம்பை எடுத்துக்கொண்டு விசுக் கென்று கிளம்பி ஜெஸீலை நோக்கிப் பாய்ந்தார் அதிபர். 

மின்னல் வேகத்தில் தன் அருகே வந்துவிட்ட அதிபரின் தோற்றம் அவனைப் பயம் கொள்ளச் செய்தது. உடம்பெல் லாம் குளிரில் நடுங்குவதைப் போல வெடவெடவென நடுங்கத் தொடங்கியது. விழிகள் மிரண்டன. சோகம் அவனது வதனத்தில் உறைந்து கொண்டது. 

“மாட்டுப்பண்டி! உன்னாலதாண்டா இவன் அடி பட்ட. இவன் நல்ல ஒசாராரிக்கான். நீ இவனப் பிடிச்சிருக் காட்டி இவன் எப்படியோ தப்பியிருப்பான். இது ஒண்டும் நடந்திருக்கா. நீட்டிடா கைய…” 

அதிபர் பிரம்பை நீட்டியவாறு ஆவேசமாக நின்று கொண்டிருந்தார். கையை நீட்டாமலும் இருக்க முடியாது. பயமாகவுமிருந்தது ஜெஸீலுக்கு. என்ன செய்வது, கையை மெல்ல நீட்டினான். ஓங்கி, கள் சுள் என இரண்டு அடிகள் கொடுத்தார். அவ்விடங்களில் இரு இரத்தக் கோடுகள் தலை காட்டின. 

“நோகுது சேர் … அடிக்காதிங்க சேர்.இனிமேல் செய்யமாட்டன்…” ஜெஸீல் கையைப் பின்னே இழுத்துக் கொண்டான். 

“நீட்டிடா கையை.” 

ஜெஸில் கையை நீட்ட நினைத்தான். கை அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தது.நீட்ட முயன்றவாறு “இல்ல சேர்…இல்ல சேர்…” என்று நெளிந்தான். 

“என்னடா.. நான் சொல்றன்” அதிபரின் கண்கள் தீயைக் கக்கின. பாய்ந்தார் வேங்கைபோல். அவரின் கையி லிருந்த பிரம்பு ஜெஸீலின் முதுகையும், தொடையையும் நான்கு ஐந்து முறைகள் பதம் பார்த்து மீண்டது. 

“இனிமேல் கவனம் றாஸ்கல். போ வகுப்புக்கு” இது அதிபர். 

“இம்..ஊ…இம்..ஊ…” என்று அவன் வலிதாங்காது  அழுதவாறு அதிபரின் அறையைவிட்டு வெளியேறி னான். அவன் விழிகளிலிருந்து நீர்ப்பழங்கள் பொலு பொலு வென உதிர்ந்து கொண்டேயிருந்தன. அறையை விட்டுச் சென்றும் அவனது அழுகுரல் வெளியிலிருந்து இலேசாய்க் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

அதிபர் தன் பார்வையை நிஜாமுத்தீன் மேல் திருப்பினார்.  

“தம்பி, நீங்க போங்க… கூட்டம் முடிந்ததும் டீச்சர்ர மகனையும் நான் இங்க எடுத்து அவருக்கும் ரெண்டு மூண்டு அடி கொடுக்கணும் அவகட வகுப்புக் கலைய இன்னும் நேரம் இருக்கி… மகன, விட்டிட்டுப் போங்க. இனிமேல் எதுவும் நடக்காம நாங்க பாத்துக்கிறம்.” 

அதிபரின் இவ் வார்த்தைகளைச் செவிமடுத்த நிஜாமுத்தீன் சினமும், சோகமும் கலைந்து சாதாரண நிலையை எய்தினான். என்றாலும் சிபானா ரீச்சரின் புதல் வனைத் தண்டிக்காமல் விட்டது அவனுக்குப் பெருங்குறையாகவே பட்டது. 

உமிழ் நீரோடு அதனையும் விழுங்கிக் கொண்டான். 

அதிபரைக் கனிவாக நோக்கி, “நான் வாறன் சேர்” என்று விட்டு அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களிடமும் புன் சிரிப்பால் விடை பெற்றுக் கொண்டு தன் மகனோடு அறையை விட்டு வெளியேறினான். 

ஆசனத்தில் வந்தமர்ந்த அதிபர் ஆசிரியர்களை நோக்கிப் புன் சிரிப்பை உதிர்த்து விட்டுக் கொண்டார். 

“என்ன செய்யிற… நமக்குள்ள வந்து கிடக்கு” என்றார். அங்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைவருமே எதுவுமே பேசாது அமைதியில் ஆழ்ந்திருந்தனர். இப்போது அதிபர் தன் பார்வையை ஆசிரியை சிபானாவை நோக்கிப் படர விட்டார். 

“ஆள் கொஞ்சம் துண்டாக்காரன் போலரிக்கி…உறுக்கிக் கொஞ்சம் பயமுழுத்தாட்டி வையுங்க.”அதிபர், சிபானாவை நோக்கி மெல்லியதாய்ப் புன்முறுவல் ஒன்றையும் சிந்திக் கொண்டார். 

சிபானா ரீச்சரோ, அதிபரை நோக்கி. சரி என்பதற்கு அடையாளமாக நகைத்தவாறு மெல்லத் தலையை அசைத்துக் கொண்டாள். 

அவளின் பார்வையோ, இக்கட்டான நிலையில் உதவிய அதிபருக்கு நன்றி செலுத்துவது போலத் தோன்றியது. அதிபரும் இதனை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். அவரின் வதனம் மகிழ்ச்சியில் மலர்ந்து போய்க் காணப்பட்டது. ஆனால், அங்கிருந்த ஏனையவர்களின் வதனங்களோ, அதிபரின் செயலால் உலர்ந்துபோய்த் தோன்றின. அதே வேளை அவர்களின் இதயங்களோ, றிஸ்மியின் சம்பவத்திற்குப் பிரதான காரணியாக விளங்கிய சிபானாவின் புதல்வன் பெறோஸ் முற்றாகவே தண்டிக்கப்படாமல் விட்டதையும், அச்சம்பவத்திற்கு துணைக் காரணியாய்த் திகழ்ந்த ஜெஸீல் மட்டும் பிரதான காரணி போல் பெரிதாகத் தண்டிக்கப்பட்டதையும் நினைத்துக் குமைந்து கொண்டுமிருந்தன. 

– தினகரன் வாரமஞ்சரி 1986 ஜூன் 01.

– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.

யூ.எல்.ஆதம்பாவா உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *