கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் தினபூமி
கதைப்பதிவு: November 4, 2026
பார்வையிட்டோர்: 154 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

டைரக்டர் பிரதாப் குமாரின் வீட்டில் எங்கும் நிசப்தமும் டென்ஷனும் நிரம்பி வழிந்தது. பிரதாப் குமார் என்ன செய்வது என்று புரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். 

வேகமாக உள்ளே வந்த அஸிஸ்டென்ட் டைரக்டர் மனோஜ் “சார் உங்கப் பையன் பாரதி வண்ணன் சம்பந்தப் படாத காட்சிகளா நாம் படமாக்கி வைத்து விட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்று நமது குழுவினர் அபிப்பிராயப் படுகிறார்கள்” என்றார் பவ்யமாக. 

அலைந்து கொண்டிருந்த பிரதாப் குமார் கோபமாக மனோஜைப் பார்த்து “அறிவிருக்கிறதாயா உங்களுக்கு எம் பையனை போட்டு நம்ம படம் ‘காதல் சின்னம்’ ஏறக்குறைய பாதி முடிஞ்ச நிலையிலே எங்கேயோ காணமற் போயிட்டான். இந்தப் பாரதி வண்ணன் எங்கே போனான் என்று தேடாமல் அபிப்பிராயம் சொல்ல வந்து விட்டார்கள். போங்கய்யா. போய் முதலிலே பாரதி வண்ணனைத் தேடுங்கள்” என்று கத்தினார். 

மனோஜ் திரும்பவும் பவ்யமாக, “போலீஸில் சொன்னால் ஒரே நாளிலே தேடிக் கண்டு பிடித்து விடுவார்கள் சார்” என்றார். 

“ஆனால் என் மானம் கப்பலேறி போய் விடுமே. போலீஸிலே கம்ப்ளெய்ன்ட் கொடுத்த மறுநிமிடமே, எல்லாப் பத்திரிகைகளும் காணவில்லை என்று சித்தரிக்குமே. கோடம்பாக்கமே என்னைப் பார்த்துச் சிரிக்காதா? 

சும்மாவே சொந்தப் பையனைப் போட்டு பிரமாண்டச் செலவிலே படம் எடுக்கிறான். இவ்வளவு நாளும் லோ பட்ஜெட்டிலே படம் எடுத்தவனுக்கு இப்போது பையனைப் பெரியாளாக்கணும் என்றவுடனே பிரமாதமாக தயாரிக்க ஆரம்பித்து விட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இதிலே வேறே நான் ‘காதல் சின்னம்’ படம் எடுக்கிற நேரத்திலே அவனைக் காணவில்லை என்று தெரிந்தால் அவ்வளவுதான். என்னை நாறடித்து விடுவார்கள் போய்யா போ” என்று கத்தினார் பிரதாப்குமார். 

“சரி சார்” என்று கிளம்பிய மனோஜை “மனோஜ், நம் குழுவில் எல்லோருக்கும் விஷயம் தெரியாது. நான் ஒரு தடவை படம் எடுத்தால் ஷெட்யூல் முடியும் வரை நிறுத்த மாட்டேன் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது, என் பையனைக் காணவில்லை. என்று தெரியாதவர்கள், ஏன் டைரக்டர் சார் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார் என்று சந்தேகம் வரவேண்டாம். நீ ஒண்ணு பண்ணு, ஒரு வாரத்திற்கு எல்லோருக்கும் லீவு கொடுத்து விடு” என்றார்.

“என்ன காரணம் சொல்லட்டும் சார்?” 

“டைரக்டர் பிரதாப் குமாருக்கு உடல் நலம் சரியில்லை. ஒரு வாரத்திற்கு டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறார். என்று சொல்லுய்யா” என்று எரிந்து விழுந்தார். 

டைரக்டர் படுக்கையிலிருந்து சிகரெட் குடித்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்த போது, உள்ள வந்த அவர் மனைவி கோமதி அம்மாள் “என்னங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு வந்து படுங்க. சும்மாவே படுத்தீங்கண்ணா உடம்பிற்கு என்னாகும்” என்றார்.  

“எனக்குச் சோறும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம், என்னைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுகிறாயா?” எரிச்சல்பட்டார் பிரதாப் குமார். 

“ஏன் என் மேல் கோபப்படுகிறீர்கள். வீணாக வயிற்றைக் காயப் போடாதீர்கள், ஏற்கனவே உங்களுக்கு அல்சர் பிரச்சனை வேறு. வேண்டுமானால் கொஞ்சம் தோசை யாவது வார்த்துத் தருகிறேன்” 

“என்னைத் தனியாக இருக்க விடு கிறாயா?பாரதிக்குச் செல்லம் கொடுத்து வளர்க்கும் போதே சொன்னேன். ஒரு பையன் தானே என்று சொல்லி அளவிற்கதிகமாக செல்லமாக வளர்த்தாய், பார் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான் எத்தனை கோடி ரூபாய் நட்டம் தெரியுமா? போட்ட செட்டுக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சத்திற்கு மேல் வட்டிக் கொடுக்க வேண்டியதிருக்கிறது. தெரியுமா? நான் சொன்னமாதிரி தட்டிக்கொட்டி வளர்த்திருந்தால் இப்போது இந்தப் பிரச்சினை வந்திருக்குமா?” 

“ஏன் என்னை மட்டும் தனியாக குத்திக் காட்டுகிறீர்கள். இவன் கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்தீர்கள். இப்போது அவனும் தான் தோன்றித் தனமாக ஓடி விட்டான்”, 

“சரி சரி நமக்குள்ளே சண்டைப் போட்டு என்ன பிரயோஜனம். அந்த |மொபைல் போனை எடு” 

டீப்பாயிலிருந்து போனை எடுத்துக் கொடுத்தாள் கோமதி. 

எண்களை அழுத்தி “ஹலோ” என்றார். 

“ஹலோ நான் ராகவி பேசறேன் சார். ஒரு வாரம் ஷூட்டிங்கை கேன்சல் பண்ணி விட்டீர்களாமே?” என்றது எதிர்முனை. 

“ஆமாம்மா பாரதி வண்ணன் காணாமல் போனதிலிருந்து மனதே சரியில்லை. அது, சரி மும்பைக்கு போன் பண்ணி உங்கள் வீட்டிலே கேட்கச் சொன்னேனே என்ன பேசினாயா?” 

“ஆமாம் சார். அதிலே ஒரு வருத்தம் என்னவென்றால் என் தங்கை ஜோதிகாவையும் மூன்று நாளாய் காணவில்லையாம். ஒரு தகவலும் இல்லை. போனும் வரவில்லை போலீஸூக்குப் போகலாமா என்று அப்பா யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்” 

“என்னது” அதிர்ந்தார் பிரதாப்குமார். 

“ஆமாம் சார். என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். சார் நீங்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் வந்த சான்ஸையெல்லாம் உதறி விட்டு உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தேன் அடுத்த வாரம் பாலச்சந்தர் சார் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். ஸாரி, நீங்கள் இருக்கும் மன நிலையில் நான் சொல்வது தவறு தான் ஆனால் என் நிலைமையை உங்களிடம் சொல்லி விட வேண்டும் என்று தான்…” முடிக்காமல் சொன்னாள் ராகவி.  

“நான் என்ன செய்யட்டும். பாரதி வண்ணன், என் மகன் நான் சொல்வதை ஒழுங்காக கேட்டுக் கொண்டிருந்தவன் இப்படிக் காலை வாரி விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது என்னால் ஷூட்டிங் தொடர முடியாது ராகவி. நீ வேண்டுமானால் பாலச்சந்தர் சார் படத்திற்கு போ. நீ எப்போது கால்ஷீட் இல்லாமல் இருக்கிறாயோ அப்போது. போன் பண்ணு” 

“என் மேலே கோபமா சார்” 

“என் – நேரம் வேறு. ஒன்று மில்லை” என்று போனை எறிந்தார் பிரதாப் குமார். 

 ஒரு வாரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய பாரதி வண்ணன் வீட்டில் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்று பயந்து கொண்டே இருந்தான். அம்மா கோமதி தான் “எங்கேடா ராஜா போயிட்ட நான் எவ்வளவு துடித்துப் போய் விட்டேன் தெரியுமா? போ! போய்க் குளித்து விட்டுவா” என்று சொல்ல அப்போது தான் தற்செயலாக அந்தப் பக்கம் வந்த பிரதாப் குமார் “எங்கேடா போயிருந்தே” என்று வெடித்தார். 

ஒரு கணம் வெல வெலத்துப் போன பாரதி “அது- வந்து- பிரண்டோட மும்பை போயிருந்தேன்ப்பா” என்றான் நடுங்கிக் கொண்டே 

“இங்கே உன்னை ஹீரோவாப் போட்டு கோடிக்கணக்கிலே பணம் செலவழித்துப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நீ எங்கோ ஓடிப் போய்விட்டாய். மும்பையில் எங்கே தங்கியிருந்தாய்”. 

“நம்ம ஹரோயின் ராகவி வீட்டிலேதான் அப்பா” 

“என்னடா சொல்கிறாய்? நான் அவளிடம் கேட்டதற்கு நீ அங்கே வரவில்லை. என்றும் ஜோதிகாவைக்க காணவில்லை என்றும் சொன்னாள்” 

“நான் இங்கேயிருந்து மும்பைக்குப் போனதே ஜோதிகா கூடத் தானே. என்னை மன்னித்து விடுங்கள். ஏதோ ஒரு வேகத்தில் அவள் அழைத்தாள் என்று மும்பைக்கு அவளோடு ஓடினேன்.” 

“அப்படியானால் ராகவி என்னிடம் ஏன் பொய் சொன்னாள்?” 

“தெரியாது. முதலில் ஜோதிகாவிற்கு என்மேல் மிதமிஞ்சிய அன்பிருக்கிறது என்று நினைத்து தான் கிளம்பினேன். உங்களுடைய அளவிற்கதிகமான கட்டுப்பாடு, என்னை இங்கிருந்து விடுவித்துக் கொண்டால் போதும் இந்தத் தங்கக் கூண்டிலிருந்து சுதந்திரம் கிடைத்தால் போதும் என்று அவசரத்தில் பறந்தேன் டாடி. 

ஆனால் எல்லோரும் பணத்திற்கு ஆசைப்பட்டு, தனக்குக் கட்டி வைத்தால் அவர்களுக்கு நான் பணம் நிறைய தரவேண்டும் என்று ஜோதிகாவின் பெற்றோர் சொன்ன பிறகு தான் எனக்குப் புரிந்தது. அவளிடம் எனக்கு அன்பு இல்லை என் பணத்தைப் பறிக்க போட்ட நாடகம் என்று. 

ஏதோ தங்கக் கூண்டுக்கிளியாக என்னை அடைத்து வைத்திருக்கிறீர்கள் என் மீது உங்களுக்குப் பாசமும் அன்பும் கிடையாது. என்னை ஒரு மிருகமாக நடத்துகிறீர்கள். எனக்கு ஜோதிகாவிடம் தான் அன்பு கிடைக்கும் என்று ஓடினேன். 

இப்போதுதான் டாடி, அன்பும் பாசமும். அப்பா அம்மாவிடம் இருந்து கிடைப்பது போல் வேறு எங்கும் கிடைக்காது என்று தெரிந்து கொண்டேன். ஐ யாம் வெரி ஸாரி டாடி” என்று பிரதாப் குமாரின் கைகளைப் பிடித்துக் கொண்டான் பாரதிவண்ணன். 

தன் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கோமதி அம்மாள். 

– 9.11.2003, தினபூமி – ஞாயிறுபூமி.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *