ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 151 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முடியாது! முடியாது! முடியாது!” – ஒரு தடவைக்கு மூன்று தடவை யாக முழங்கி தன் விருப்பமின்மையை அழுத்தமாகத் தெரிவித்தான் ஜுபைர்.

“இதோ பாரு, ஜுபைர். அழகும் பணமுமுள்ள பெண்களை நீ மனைவியா அடையறதிலே எங்களுக்கு எந்தவிதமான விருப்பு வெறுப்புமில்லே. நாங்க இன்னைக்கோ நாளைக்கோ எங்க கடமையை முடிச்சுக்கிட்டு போய்டுவோம். வர்றவளோட வாழப்போறது நீதான். உன் வாழ்க்கை சிறப்பா அமையணு மென்றுதான் நாங்க ஆசைப்படறோம்” என்று அமைதியாகப் பேசினாள் ஆமினா.

ஜுபைரின் சீற்றம் இன்னும் கடுமையாயிற்று. ”அதுக்காக கண் தெரிஞ்சு கிணத்துலே விழச் சொல்றீங்களாம்மா?”

“டேய் ஜூபைர்! ஏதோ எங்க பங்குக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டோம். இனிமே உன்னிஷ்டம்.” குறுக்கிட்ட அப்துல்லா ஆமினாவிடம் கூறினார்: ”ஆமினா, பொண்ணு பிடிக்கலேன்னு மதார்பா வாக்குச் சொல்லியனுப்பிடு!”

ஜுபைரின் தங்கை சலீமா தன் அண்ணனின் தோளைக் கனிவோடு வருடியவாறே கேட்டாள்: “ஏண்ணே! எப்பவாவது லேசான மயக்கம் வரும்ங்கிறதினாலே பார்த்துப் பேசி முடிவு செஞ்ச ஒரு பெண்ணை வேண்டாம்னு சொல்லிட்டா அது எவ்வளவு வேதனையை அவங்களுக்குக் கொடுக்கும்ணு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கண்ணே!”

“நீ மகரமனுஷி? உனக்கு எல்லாம் தெரியும் பாரு!” என்று சலீமாவுக்கு ஒரு பதிலடி கொடுத்து விட்டுத் திரும்பிய ஜூபைர், ”ஏழைக் குடும்பத்துப் பெண்ணுன்னு சொன்னீங்க, சம்மதிச்சேன. கட்டிக கொடுக்க வசதியில்லாத நிலைன்னு சொன்னீங்க, இரக்கப்பட்டேன இப்போ எப்போதாவது லேசான மயக்கம் வரும் ங்கிறீங்க! நாளைக்கு வலிப்பே வந்தாலும் ஆசசரியப்படற திக்கில்லையே!” என்று அனைவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டு வெளியேறிய ஜுபைருக்கு அஸ்தஃபிருல்லாஹ் என்ற ஆமினாவின் குரல் காதில விழத்தான் செய்தது. ஆனாலும் அவனுக்கு அதைப் பற்றி என்ன கவலை?


தையல் மெஷீனின் கைப்பிடியை இடக்கையால் சுழற்றியபடி தீவிரமான சிந்தனையோடு சலீமாவுக்கு ஒரு ரவிக்கை தைத்துக் கொண்டிருந்தாள் ஆமினா. ஆயினும் மனம் என்னவோ, அந்த மதார் பாவாவின் மகள் சபியாவையே நினைத்து உருகிக் கொண்டிருந்தது.

பத்து நாட்களுக்கு முன்பு மதார் பாவாவின் மகளொருத்தி சடங்காகி பல வருடங்களாகியும் திருமணச் சந்தைக்கு வரத்தவறி வீட்டுக்குள் வளையவரும் செய்தி ஆமினாவுக்குக் கிடைத்தது. அவளுக்குத் தெரியும், ஒரு குமரின் வாழ்வு பூரணமடைவதற்குள் எத்தனை துயரங்களை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது என்ற உண்மை. செய்தியறிந்த ஆமினாவின் இதயம் நெக்குவிட்டு உருகியதின் விளைவாக மறுநாளே பெண்பார்க்கும் படலம் நிகழ்ந்தது. பெண்ணின் அடக்கமும் அளவோடிருந்த அழகும் ஆமினாவின் இதயத்தில் இவள் தான் நமக்கு மருமகள் என்ற எண்ணத்தை உறுதியாக்கி விட்டது. அவள் அந்த உறுதியின் காரணமாக கூறிவிட்டு வந்த வார்த்தைகள் அந்த வீட்டுக்கே விளக்கேற்றி வைத்து விட்டது!

செய்தியறிந்த அப்துல்லா மனைவியின் புனிதமான நோக்கத்தைக் கண்டு மனம் மகிழ்ந்ததோடு மதார் பாவாவிடமும் ‘கவலையை விடுங்கள், சபியாவுக்கு வழி செய்ய நானாயிற்று’ என்று கூறிவிட்டார். இதன் விளைவாக மதார் பாவாவின் குடும்பம் புதுக்களை பெற்றுவிட்டது என்றால் அதுமிகையே அல்ல.

ஜுபைரும் மறுக்கவில்லை. பணம் இல்லை என்ற ஒரே குறையைத் தவிர வேறெதுவும் இல்லாதவரை சரி என்று கூறிவிட்டான். சலீமாவுக்கும் பூரிப்புதான், தனக்கு அண்ணியாக வருபவள் அடக்கமுடையவள் என்கிற வகையில். எல்லா விஷயத்திலுமே எரிந்து விழுகிற முன் கோபக்கார மகனே எந்த விதமான ஆட்சேபணையுமின்றி சம்மதித்து விட்ட வகையில் ஆமினாவுக்கும் அப்துல்லாவுக்கும் சொல்லி மாளாத பூரிப்பு தான். ஆனால் –

திருமணத்துக்கு நாள் குறிப்பதற்காக அங்கே போயிருந்த ஆமினாவின் கண்ணெதிரிலேயே சபியா மூர்ச்சித்து விழுந்தாள். ஆமினாவைத் தவிர அங்கே யாரும் பெரிதும் அதிர்ச்சியடையவில்லை. “என்ன படித் திடீரென்று?” என வினவிய ஆமினாவுக்கு.. “நாங்கள் அன்றைக்கே சொன்னோமே இப்படி அடிக்கடி. லேசான மயக்கம் வரும் என்று” என பதிலிறுத்தார்கள் மற்றவர்கள். ஆமினாவுக்கும் அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. ‘பரவாயில்லை, டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்ற முத்தாய்ப்புடன் திருமணத்துக்கு நாள் பார்த்து விட்டு வீடு திரும்பினாள்

பிறகுதான் நிகழ்ந்தது பிரளயம்! சபியாவின் வீட்டுக்கும் பெண் பிடிக்கவில்லை என்ற செய்தி போய்விட்டது. அங்கேயும் நிகழ்ந்திருக்கும் ஒரு சூறாவளி ஆனால், அனைவரின் இதயத்திலும் எழுந்திருந்த கற்பனைக் கோட்டைகளைத் தன் ஒரே ஒரு வார்த்தையால் இடித் தெறிந்துவிட்ட ஜுபைரின இதயத்தில் மாத்திரம் எந்தச் சலனமுமில்லை. மாறாக. அது எதிர்கால மனைவியாய் ஓர் எழிலுருவத்தைக் கற்பனை செய்து கொண்டிருந்தது.


அடுத்த மூன்றாம் நாள் ரங்கூன் ராவுத்தர் என்ற அடைமொழிப் பெயருடன் ஊரில் பிரபலமாகியிருந்த ஒரு பெருந்தனக்காரரின் வீட்டிலிருந்து ஜுபைருக்குப் பெண் பேசி வந்ததுதான், வந்தது! ஜூபைர் குதி குதியென்று குதித்துவிட்டான.

“உங்கள் பேச்சைக்கேட்டு அந்த சீக்காளிப் பெண்ணைக் கட்டியிருந்தால் என் வாழ்க்கையே நாசமாகியிருக்கும்” என்று அனைவரையும் குற்றம் சாட்டிய தோடு, பெரிய இடத்துப் பெண், உட்கார்ந்து சாப்பிட்டாலும் இரண்டு தலைமுறைக்கு வரும் சொத்து இதைவிட்டு விட்டு உட்கார்ந்திருக்க நான் ஒன்றும் மடையனல்ல” என்று கூறி ஆமினாவையும் அங்கே அனுப்பி வைத்தான்.

ரங்கூன் ராவுத்தரின் வீட்டுக் குப் போய் விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பிய ஆமினா, “நீ விரும்பிய மாதிரி நல்ல அழகி தான், ஜூபைர்!” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டாள்.

அப்புறமென்ன? வீட்டில் ஜுபைரின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய மூன்றாம் நாளே கல்யாண ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. அதே சமயம் அழுது வடிந்து கொண்டிருந்த மதார் பாவா வீட்டில் சபியாவின் இதயம் புலம்பித் தவித்ததை யாரும் அறிய மாட்டார்கள் தான்!


எந்த விஷயமுமே தொடக்கமின்றி இருந்து விடும் போது அதன் விளைவுகள் யாரையும் எதுவும் செய்து விடுவதில்லை. தொடங்கி விட்டு தோல்வியுறும் போது அதனால் ஒரு சாரர் பாதிக்கப்படுவதிலும் ஐயமில்லை. இதே போலத்தான சபியாவின் நிலையும், நினைப்பின் சுகத்தில் நீந்திக் கொண்டிருந்த அவளின் இதயம் பேரிடியொன்றால் துவண்டு விட்டிருந்தது, பாவம்!

கணவனின் அற்ப சொற்ப வருமானத்தைச் சேமித்து வைத்து ஒரு தையல் மெஷீன் வாங்கி வாழ்க்கையைத் தொடங்கியவள் தான ஆமினா. இருக்கிற இடமே தெரியாமல் நசித்துக் கிடந்த குடும்பம் வெளியே தலைகாட்டத் தொடங்கியது, ஜுபைரின் கல்லூரிப் பிரவேசத்துக்குப் பிறகுதான். கண்ணியமான ஒரு வேலையுடன் அவனும் சம்பாதிக்கத் தொடங்கி விட்ட பின்பு குடிக்கிற கூழுக்குக் கொஞ்சம் நிலமும், இருக்கிற இடத்துக்கு ஒரு வீடும் சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக ஜுபைரின் இதயத்தில் தன்னையும் மீறி வளர்ந்திருந்த ஓர் ஆணவம் தான், உயர் குடும்பத்துச் சம்பந்தத்தை நாடிற்று.

ஜுபைரின் விருப்படியே திருமணமும் நிகழ்ந்தேறிவிட்டது அப்துல்லாவுக்கா, ஆமினாவுக்கோ, சலீமாவுக்கோ விருப்புமில்லாத வெறுப்புமில்லாத ஒரு மன நிலை. எப்படியோ காரியங்கள் சிறப்பாக முடிந்து விட்டன.


முதலிரவு.

காற்றில் இழை பிரிந்து மணம் வீசும் பத்திகளின் வாடையும், புத்தாடைகளின் ஒரு புதுவித மான மணமும், சரசரக்கும் ஆடைகளும், கண்ணைப்பறிக்கும் உள்ளலங்காரமும் அது ஒருமண வீட்டின் தனியறை என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தன.

நெஞ்சுகொள்ளாத ஆசையும் ஆவலும் கால்களைப் பின்ன உள்ளே நுழைந்த ஜுபைருக்கு, சுற்றுச் சூழலின் புதுமையும் அழகும் ஒரு சுகானுபவத்தைத் தந்தன. தன்னுடைய எண்ணங்கள் எல்லாம் எவ்விதமான தடையுமின்றி நிகழ்ந்து முடிந்துவிட்டதில் அவனுக்குப் பரம் திருப்திதான். மணமகள் துவண்டிருந்த பந்தற்கட்டிலை நெருங்கினான்,மெல்ல.

வீட்டின் உள்ஹாலில் திருமண சந்தடிகள் சற்றே அடங்கிய நிலையில் ஒரு தலையணையை தலைக்கு வைத்துக் கொண்டு கண்ணயர்ந்திருந்தாள் ஆமினா. திடீரென எழுந்த கூச்சலும் சப்தமும் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. ஒரே அமளிதுமளி என்ன வென்றே தெரியாத ஒரு குழப்பம்.

‘மாப்பிள்ளையின் தாயார் எங்கே?’ என்றொரு குரல். ஆமினா விழுந்தடித்துக் கொண்டு ஓடி னாள் மாடிக்கு. அங்கே ஜுபைர் கோபத்தால் கொதிப்பேறிய நிலையில் நின்று கொண்டு “கேட்டீங்களாம்மா? நம்மை ஏமாத்திட்டாங்க இவங்க! மோசம் பண்ணிட்டாங்கம்மா!” என்று கத்தினான். ‘என்னடா விஷயம்?’ என்று ஆமினா கேட்டதும் உட்புறம் கையைக் காட்டினான் ஜுபைர்!

அங்கே மணமகள் ஒரு நாற்காலியில் கிடந்தாள்.வாயில் சறறே நுரை பொங்கி, முகம் விகாரமாக வலித்திருந்தது. கையும் காலும் இலேசாக உதறிக் கொண்டிருந்தது. திடுக்கிட்டாள் ஆமினா.

“இப்ப என்ன ஆய்டுச்சுன்னு இப்படிக் கத்தறீங்க? லேசா எப்பவாவது வலிப்பு வந்தா என்ன? மனுஷருக்கு நோய் நொடியே கிடையாதா? ஏன் சொல்லலேன்னு கேட்கறிங்க? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, சொல்லிக்கிட்டிருக்க? சொல்றதாயிருந்தா உங்களை ஏன் மாப்பிள்ளை பார்க்குறோம். லட்சாதிபதியைப் பார்த்திருப்போமே?” என்று சத்தம் போட்டு அனைவரையும் கலைத்தவர் ரங்கூன் ராவுத்தர் தான்.

ஜுபைர் எதுவும் பேசவில்லை. ஆமினாவை நிமிர்ந்து பார்த்தான். அவளோ தலைகுனிந்து மௌனமாக நின்றாள். மூர்ச்சித்திருந்த மணமகள் மெல்ல கண்விழித்தாள்.

சபியாவை உதறியெறிந்தது போல அவனால் இவளையும் உதற முடியாது. திருமணம் என்கிற பந்தம் இருவரையும் சுற்றி உருவில்லாமல் படர்ந்திருக்கிறதே!

நினைவின் மயக்கத்தில் இதுவரை சிக்குண்டிருந்த ஜுபைருக்கு இப்போதுதான் ஞானோதயம் பிறந்தது. என்ன செய்வது? அதுகாலம் கடந்த ஞானமாகி விட்டதே!

– முஸ்லீம் முரசு, ஆகஸ்ட் 1996.

தூயவன் தூயவன் — ஓர் அறிமுகம் : நாகூர் ரூமி வரலாற்றுச் சுவடுகள் — திரைப்பட வரலாறு 725 ( தினந்தந்தி 10 & 13 – 08 – 2007) எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன் 84 படங்களுக்கு வசனம் எழுதி, பட அதிபராக உயர்ந்தார் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். வைதேகி காத்திருந்தாள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *