சுனாமி… சுவாமி…
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுனாமி! என்றொரு புதுச்சொல் தமிழ் அகராதியினுள் புகுந்து விட்டது. அந்தச்சொல் ஒரு சிம்மசொப்பனம் போல் ஆகிவிட்டது.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி முடித்து, உண்டு களித்து உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சுனாமி எனும் பூதம் சீறியது.
26.12.2004 அதிகாலை 6.15 மணிக்கு சுமத்ரா தீவின் ஆழ்கடலில் உருவெடுத்த கடல் கொந்தளிப்பு ஆவேசமாகத் தாக்கியது. அலைகள் மலைபோல் எழுந்து மக்களை நிலைகுலையச் செய்தது.
இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, அந்தமான் ஆகிய கடலோரப் பகுதிகளில் முட்டி மோதி வெடித்த பேரலைகள் இலட்சத்திற்கும் அதிகமான மக்களை விழுங்கிச் சுருட்டின.
‘பிள்ளைப் பேற்றை தடுக்காவிட்டால் நாடு இடங்கொள்ளாமல் போய்விடும்’ என்று ஒப்பாரி வைத்த சில அறிவாளிகள் வெட்கி நாணினார்கள். அந்தமான் பக்கமுள்ள எட்டு குட்டித் தீவுகள் கடலில் மூழ்கின. இன்னும் ஆபத்துகள் தொடர்கின்றன.
குமரிக்குத் தெற்கே கடற்கோளினால் லெமோரியாக் கண்டம் அழிந்துவிட்டது என்பதைப் பலர் இப்பொழுதுதான் நம்பினர். கடற்கரை கிராமங்களில் தப்பியோடியவர்கள் உணவில்லாமல், உடையில்லாமல் உறைவிடமில்லாமல்… ஐயோ அந்தக் காட்சி நெஞ்சைப் பிளந்தது.
கடற்கரை கிராமங்களில் தோண்டத் தோண்டப் பிணங்கள்… நினைக்கும் போதே இதயத்தைப் பிழிந்தது. அந்தமான், நிக்கோபார் மக்கள் அதிர்ச்சியில் துடித்தனர்.
நிவாரண உதவிகள் நிறைந்தன.
நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
வீண் பேச்சுகளுக்குக் குறைவில்லை. வாய்கிழியப் பேசினர்.
ஒரு பெரியவர் ‘கடைசிக் காலம், அழிவுக்காலம்’ என்று அங்கலாய்த்தார். ‘பூமி. அதிர்ச்சிகள் பல இடங்களில் உண்டாகும்’ என்று மத்தேயு நற்செய்தியாளர் சொல்கிறார் என்றார் அடுத்த ஒருவர்.
கடல் கொந்தளிப்பு சம்பந்தமான வேத வசனங்களை பைபிளிலிருந்து பாராமல் சொன்னார்கள்.
மரணம் நிச்சயம், மறுமை அதைவிட நிச்சயம் என்று பிறிதொருவர் தத்துவம் பேசினார். ‘உலகம் மாறும், ஒழியும்; ஆனால் கடவுள் மட்டும் மாறாதவர்’ என்று இன்னொருவர் வேத உபதேசம் சொன்னார்.
தப்பிப்பிழைத்தவர்களில் சிலர் ‘அவனையன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று தங்களுக்குத் தாங்களே வேதாந்தம் பேசினர்.
‘பூமி தன் அச்சிலிருந்து விலகி விட்டதாம். இனி அடிக்கடி துன்பம்தான்’, என்று ஒருவர் அடித்துப்பேசினார்.
இதற்குப் பரிகாரம்தான் என்ன?
‘பேரழிவை அறிவிக்கும் கருவி வருகிறதாம்’ என்றார் ஒருவர் குதூகலமாக. ‘கடலோரத் தடுப்புச் சுவர் கட்டப்போகிறார்களாம்’ என்றார் அரசியல்வாதி ஒருவர்.
இவைகளுக்கு மத்தியில் ஒரு செய்தி என் உள்ளத்தை நெருடியது.
நாகப்பட்டிணம் கடற் கரைக்கு ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் நீண்ட குச்சிக்கம்போடு வந்தான்.
‘சுவாமி… எங்கப்பாவைக் கொண்டுவா’ என்று சொல்லி கடல் தண்ணீரை ஓங்கி ஓங்கி அடித்தான். கதறி அழுதான். அப்பா… வா.. என்று சொல்லி கேவி கேவி அழுது ஏங்கினான்.
சுனாமி என்று சொல்லத் தெரியாமல் சுவாமி… சுவாமி என்று கூவியிருக்கிறான்.
பார்த்தவர்கள் பரிதாபமாகக் கண் கலங்கினர்.
என்னதான் நிவாரணங்கள் செய்தாலும், தந்தையைப் பறிகொடுத்த அந்தச் சிறுவனுக்கு யார் என்ன பதில் சொல்ல முடியும்?
உடைமை இழந்தவர்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கலாம். உயிரை இழந்து தவிப்பவர்களுக்கு யார் உத்தரவாதம் அளிப்பர்.
அப்பா, அம்மா என்று அழும் சின்னஞ்சிறு மழலைகளின் குரல் உள்ளத்தை உடைக்கிறது.
சிறுவன் கூவிக் கதறினானே ‘சுவாமி’ என்று… அவர்தான் பரிகாரியாகிய கடவுள். கடலுக்கு அரண் கடவுள்தான்.
மனிதநேயம் பேண விழைவோருக்கு மானுட இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள உறுதுணையாக நிற்போருக்கு, சுவாமியும் நின்று உதவுவார். சுனாமியும் விலகிப்போம்.
சுனாமி… சுவாமி…
– மனைதீபம் 2005.
– ஆர்.எஸ்.ஜேக்கப் சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 2, 2026
பார்வையிட்டோர்: 54
