சிவந்த மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: September 28, 2025
பார்வையிட்டோர்: 135 
 
 

பழனி ரயில்வே நிலையத்தில் அங்கும் இங்கும் பார்த்தப்படி நின்று கொணடிருந்தான். இரவு எங்கும் இருட்டை அப்பி வைத்திருந்தது. ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்த விளக்குகள் இருட்டை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தன.

பனி விழுந்து தூரத்தில் நின்று கொண்டிருந்த மரங்களின் இலைகளில் நீர் முத்துக்கள் விளைவித்துக் கொண்டிருந்தன. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. தன்னையும் அந்த பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு நாயையும் தவிர அந்த ரயில்வே ஸ்டேஷனில் யாரும் தென்பட்டதாகத் தெரிய வில்லை பழனிக்கு.

கொஞ்சம் பனி அதிகமாக விழ ஆரம்பிக்க தன் பெட்டியைத் திறந்து மப்ளரையும், ஸ்வெட்டரையும் அவன் எடுத்துக் கொண்ட போது உள்ளே இருந்த சிறிய கைத் துப்பாக்கி பளப்பளத்தது. வேகமாக சூட்கேஸை மூடி விட்டு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு அருகேயிருந்த செமிண்ட் பெஞ்சில் அமர்ந்த போதுதான் அவர்கள் இருவரும் ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

பழனி எழுந்து பார்த்த போது ஒரு ஆணும் பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வருவது தெரிந்த்து. அருகில் வரும் போதுதான் தன் ஊரிலிருந்து தங்கபாலுவும் கோமதியும் வருகிறார்கள் என்று புரிந்தது.

பழனியை இரயில்வே நிலையத்தில் பார்த்ததும் இருவரும் திகைத்துப்போய் நிற்க பழனி எழுந்து வந்து தங்கபாலுவிடம் ‘‘அரசல் புரசலாக கேள்விப்பட்டேன். ஆனால் நீங்கள் ஓடிப்போகிற அளவிற்கு காதல் வளர்ந்து விட்டது என்று தெரியது. அது சரி எங்கே போகலாம் என்று உத்தேசம்’’ என்று கேட்டான்.

‘‘என்ன செய்யட்டும்? எங்க அப்பன் ஆத்தாவிற்கு நான் கோமதியைக் கல்யாணம் பண்ணிக்கணும்ணா பிடிக்கலை. அவளோட அண்ணனும் மூக்கனுக்குத்தான் கோமதியைக் கட்டி வைப்பேன்னு ஒத்தக்காலிலே நிற்கிறான். வேற வழியில்லை. ஆமா பழனி நீ எங்கே இந்த ராத்திரியிலே கிளம்பியிருக்கிறாய்?’’

‘‘மெட்ராஸிற்கு.’’

‘‘என்ன விசயம். அதுவும் உன் தங்கை இறந்து நாலு நாள் கூட ஆவல்ல. உங்க அம்மாவிற்கு ஆறுதல் சொல்ல வேற யாரு இருக்காங்க?’’

“கொஞ்சம் அவசரமாக ஒரு சொந்த வேலையை முடிக் கணும். அதுதான் அம்மா கிட்ட சொல்லாமல் கிளம்பிட்டேன்.’’ என்று பல்லைக் கடித்துக்கொண்டே சொன்னவன் தன் கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் ‘‘எங்கே போகிறாய். இனி கோமதியை கூட்டிக்கொண்டு போய் என்ன செய்யறதா உத்தேசம்?

‘‘வேற எங்க போறது. கழுதை தேஞ்சா கட்டெறும்புதான். மெட்ராஸில் நம்ம மச்சானுக, சகலபாடி கிருஷ்ணன் கொறுக்குப் பேட்டையிலே இருக்கான். போயி அவனப் புடிச்சு மொதல்ல ஏதாவது ஒரு கோயில்ல கோமதியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். கெட்டும் பட்டணம் போன்னு பெரியாட்கள் சொன்ன மாதிரி நம்மோட எஸ்.எஸ்.சி சர்டிபிகேட்டை வச்சிகிட்டு வேலை தேட வேண்டியது தான். நீ எங்கே தங்கப்போறே.’’

‘‘எனக்கு மெட்ராஸ்லே ஒருத்தரையும் தெரியாது. அதுதான் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.’’

‘‘நீ ஒண்ணு பண்ணு. எங்க கூட வந்துடு. அவன் வீடு கடல் மாதிரி கெடக்கு, உன் வேலை முடிஞ்சவுடனே நீ திரும்பிடு.

‘‘அதுவும் சரிதான்.’’

‘‘நாங்க எங்கே போயிருக்கோம். எங்க தங்கியிருக் கோம்ணுட்டு யார்ட்டேயும் சொல்லிடாதீங்கண்ணே.’’ என்றாள் கோமதி.

‘‘இரயில்லே வரக்கூடிய கண்டக்டரு கிட்ட தண்டம் கட்டி டிக்கட்டு எடுத்துக்க வேண்டியது தான்.’’ என்றான் தங்கபாலு.

இரயில் வந்து நிற்க, மூவரும் ஏறிக்கொண்டு உட்காருவதற்கு இடம் தேடி உட்கார்ந்தார்கள்.

‘‘செத்த இருங்க. முகம் கழுவிட்டு வாரேன்.’’ என்றவாறு எழுந்த தங்கலாலு, பழனி வார அவசரத்துல துண்டு எடுக்க மறந்துட்டோம். நீ கொணாந்திருந்தா கொஞ்சம்

குடேன்.’’ என்றான். பெட்டியை இழுத்து திறந்த பழனி டவலை எடுக்கவும் அழகாக உறங்கிக் கொண்டிருந்த பிஸ்டல் வெளியே தெரிய ‘‘என்ன பழனி துப்பாகியெல்லாம் வைச்சிருக்க?’’ என்று கேட்டான் தங்கபாலு.

‘‘அது சும்மா விளையாட்டு துப்பாக்கி. யாரிடமும் என்கிட்டே பிஸ்டலை பார்த்ததைச் சொல்லி விடாதே.’’ என்றான் பழனி.

‘‘எனக்கெதுக்கப்பா வம்பு.’’ என்றவாறு டவலை வாங்கிக் கொண்டு பாத்ரும் நோக்கி நடந்தான்.


கிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் குசலம் வீசாரித்து முடித்து ‘‘நான் உங்களுக்கு கல்யானம் பண்ணி வைக்கிறேன் மச்சான். நல்ல வேலையும் வாங்கித் தருகிறேன். அதுவரைக்கும் என் வீட்டிலேயே இருங்கள்.’’ என்று கிருஷ்ணன், தங்கபாலு கோமதி ஜோடிக்கு ஆறுதலாய் பேசிக்கொண்டிடுக்க, குளித்து முடித்து விட்டு உடுத்திக்கொண்டு கிளம்பினான் பழனி.

‘‘ஏற்கனவே மெட்ராஸ் வந்திருக்கிங்களா?’’ என்று கேட்டான் கிருஷ்ணன்.

‘‘இல்லை சார், இதுதான் முதல் தடவை.’’

‘‘யாரைத் தேடி கிளம்பிட்டீங்க?’’

‘‘ம்…. ஒரு ஆளைப் பார்க்கணும்.’’

‘‘எந்த இடத்திலே..’’

சட்டைப் பையிலிருந்து அந்த விளம்பரத்தை எடுத்துப் பார்த்தான்.

கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா.

மத்திய இணை அமைச்சர் உயர்திரு வலம்புரி மாதவன் அவர்கள் தலைமை தாங்குகிறார்கள்.

‘நாள் 14.03.1997. இடம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அருகில். எல்லோரும் அலை கடலென திரண்டு வந்து அமைச்சர் பெருமானின் சிறப்புரையை கேட்டு மகிழ்ந்திட வாரீர்.’ என்று எழுதி இருந்தது.

‘‘கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் போக வேண்டும்.’’

‘‘அங்கே யார் இருக்கிறார்கள். நான் வேண்டுமானால் உதவி செய்யட்டுமா?’’ என்று கிருஷ்ணன் கேட்டதும் பழனி தர்மசங் கடமாக உணர்ந்தான்.

“இல்லை சார் நானே கண்டுபிடித்துக் கொள்கிறேன். நீங்கள் அவர்களை கவனியுங்கள். என்னிடம் விலாசம் இருக்கிறது.’’ என்று கிளம்பினான்.

ஆட்டோவிலிருந்து இறங்கி அங்கும் இங்கும் நோட்ட மிட்டான். நாளைக் காலையில் வருகின்ற மத்திய இணை அமைச்சருக்காக இன்றே போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

நாளை அடிக்கல் நாட்ட வருகின்ற அமைச்சருக்கு வரவேற்பு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவனை அணுகி, ‘‘தலைவர் எத்தனை மணிக்கு சார் வருகிறார்.’’ என்று கேட்டான்.

மேலும் கீழும் பார்த்த நபரிடம் ‘‘சிகரெட் குடிக்கிறீர்களா.’’ என்று தன் பாக்கெட்டிலிருந்து வில்ஸ் பாக்கெட்டை எடுத்து நீட்ட, போஸ்டர் ஒட்டிய ஆள் சிகரெட்டு எடுத்துக்கொண்டு ‘‘அமைச்சரை பார்க்க வந்திருக்கியா?’’ என்றான்.

‘‘ஆமாண்ணே.’’

‘‘தலைவர் நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு கரெக்டா பங்சனுக்கு வந்துவிடுவார். தலைவரை பார்க்கணும்ணா அதோ கரை வேட்டி கட்டியிருக்காரே அவர் மாவட்டத் தலைவர். அவரைக் கேள் ஏற்பாடு பண்ணுவார்.’’ என்றான்.

‘‘ரொம்ப நன்றியண்ணே.’’ என்று அவன் தன் உதட்டில் வைத்திருந்த சிகரெட்டுக்கு தீ வைத்து விட்டு அடிக்கல் நாட்டு விழாவின் மேடை அருகே வந்தான்.

‘எங்கேயாவது ஒளிந்து நிற்கலாம் என்றால் முடியாது போலிருக்கிறதே. முன்னால் சவுண்ட் சிஸ்டம்ஸ் ஆட்களோடு கலந்து நிற்கலாம். ஆனால் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிக்க முடியாது. ‘லபக்’கென்று காக்கிச் சட்டை சூழ்ந்து அமுக்கிவிடும்.’ என்று யோசித்தவாறே நடந்து கொண்டிருந்த போது எதிரே தென்பட்ட புளிய மரத்தைப் பார்த்தான்.

இதில் ஏறி அமர்ந்து கொண்டால் கண்டிப்பாக ஒரு பெரிய கூட்டமே இந்த மரத்தில் ஏறி வேடிக்கை பார்க்கப்போகிறது. அவர்களோடு ஏறி அமர்ந்துக் கொண்டு அந்த இணை அமைச்சர் வலம்புரி மாதவன் பேச எழுந்ததும் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து விலகி கூட்டத்தோடு கலந்து விட வேண்டும்.

கூட்டத்திலிருந்து விலகவோ, ஓடவோ கூடாது. அப்படி ஓடினால்தான் சந்தேகம் வரும். அப்படி ஓடினால் சந்தேகம் வரும். அப்படிச் சந்தேகம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ‘மாதவா.. நாளையோடு உன் உலகப் பயணம் முடிகிறது.’ என்று மனதிற்குள் கொக்கரித்துக் கொண்டு மரத்திலிருந்து மேடைவரை கால்களால் அளந்து பார்த்தான். தூரம் சரியாக இருபது மீட்டர் இருந்தது.

குறி பார்த்துச் சுட்டால் மந்திரி பிணமாகப் போவது நிச்சயம் என்று கருதிக் கொண்டு கிளம்பினான்.


மறுநாள் சாயங்காலம் ஆட்கள் கூட்டம் சேரச் சேர கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து புளிய மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் பழனி. தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அலுமினிய பிஸ்டல் ‘நான் ரெடியாக இருக்கிறேன்’ என்றது.

மேடையில் சலசலப்பு ஏற்பட மத்திய இணை அமைச்சர் வந்து சேர்ந்தார். எல்லோரும் அமைச்சரைப் புகழ்ந்து பேசி பாமா லைகள் சூட்டி முடிக்க இறுதியில் எழுந்த வலம்புரி மாதவன் பேச ஆரம்பித்தார்.

‘‘என் இதயத்தில் ஓடுகின்ற நரம்பின் நரம்புகளே… இரத்தத் துளிகளே… ’’ என்று அவர் ஆரம்பித்த போது ‘டுமீல்’ என்று ஓசை வர கூட்டம் அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்தது.

பழனி சரியாக குறிபார்த்துச் சுட்ட போதிலும் அருகில் இருந்தவர் பையில் கைவிட்டு கர்ச்சீப் எடுக்க முயல அவனுடைய கையில் துப்பாக்கிப் பட்டு குறி தவறி பிஸ்டலிலிருந்த இரண்டு குண்டுகளும் சீறிப்பாய்ந்து மேடையிலிருந்த காலி நாற்காலியின் பஞ்சுகளை பிய்த்தெறிந்து விட்டு புகை விட்டன.

மத்திய இணை அமைச்சர் வலம்புரி மாதவனைச் சுற்றி கட்சித் தொண்டர்களும் போலீஸ் காரர்களும் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை காரில் ஏற்றி விட, மற்ற ஒரு போலீஸ் குழு துப்பாக்கிக் குண்டு வந்த பக்கம் நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது.

கையிலிருந்த துப்பாக்கியை அருகிலிருந்த கிளையில் வைத்த பழனி வேகமாக மரத்தை விட்டு இரங்கி கூட்டத்தில் கலந்து விட, மரத்திலிருந்த மற்றவர்களை போலீஸ் சூழ்ந்து கொண்டது.

எதிர்ப்பார்க்காமல் குறிதவறி விட்டதே சே! எவ்வளவு மடத்தனம். கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் பக்கத்தில் இருந்தவன் கை தட்டுப் படாமல் குண்டுகள் அமைச்சரின் மார்பில் பாய்ந்திருக்கும்.

பரவாயில்லை. இந்த மந்திரியை நான் கொல்லாமல் விடப் போவதில்லை. முதலில் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். ஓடலாமா என்று நினைத்தான் பழனி. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. ஜோ ஓடக்கூடாது. ஓடினால் கண்டிப்பாக சந்தேகம் வரும். கூட்டத்தோடு கூட்டமாக மெதுவாக முன்னேறி வெளியே போய் விடலாம் என்று எண்ணியவாறு எச்சரிக்கையாக கிளம்பினான்.


காலையில் ‘ஆதவன்’ தினசரியில் பெரிய எழுத்துகளில் ‘‘மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு வலம்புரி மாதவன் அவர்களை கொல்ல சதி. அதிர்ஷ்ட வசமாக தப்பி விட்டார். துப்பாக்கியால் சுட முயன்ற கொலையாளி தலைமறையு. போலீஸ்சார் கொலை செய்ய முயன்றவனை வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.’’ என்று சப்தமிட்டு வாசித்துக் கொண்டிருந்தான் தங்கபாலு.

தூக்கம் வராமல் இரவு முழுவதும் கண் விழித்தபடியே இருந்த பழனி, ‘‘தங்கபாலு நான் வந்த வேலை முடியாமல் போச்சு. நான் இன்றைக்கு சாயங்காலம் வீட்டிற்கு கிளம்புகிறேன்.’’ என்றான்.

‘‘நீ எங்கே வந்தேன்னாலும் சரி, எங்கே போறேன்னாலும் சரி ஒண்ணுமே சரியாக பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய். அது சரி. நீ ஊருக்குதானே போகிறாய். அங்கே போய் நாங்கள் இருப்பதை யார்கிட்டயும் சொல்லிறாத.’’ என்றான் தங்கபாலு.

அவன் போசுவதை சுவாரசியமாக கேட்ட பழனியின் கண்கள் தங்கபாலுவின் கையிலிருந்த பேப்பரில் கடைசி பக்க முழு விளம்பரத்தை வாசிக்க ஆரம்பித்தது.

தமிழ் மக்கள் வளர்ச்சி மன்றத்தின் முப்பெரும் விழா. மூன்றாமாண்டு துவக்கவிழா. தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா. புதியதாக மத்திய அமைச்சர் அவையில் பதவியேற்ற அன்பு அண்ணன் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு வலம்புரி மாதவனுக்குப் பாராட்டுவிழா.

நாள் 19.03.1997 நேரம் மாலை 8 மணி. இடம் காமராஜர் பள்ளி வளாகம், தாராவி மும்பை. என்று போட்டிருந்ததப் பார்த்ததும் ‘‘தங்கபாலு எனக்கு பம்பாயில் கொஞ்சம் வேலை இருக்கு. அது முடிச்ச பிறகுதான் ஊருக்குப் போவேன்.’’ என்ற பழனி தன் மனதிற்குள் இன்னும் நான்கு நாட்கள் தானிருக்கிறது. இன்றே பம்பாய்க்குக் கிளம்ப வேண்டும். என்று முடிவு செய்து கொண்டு தன் துணி மணிகளை எடுத்து சூட் கேஸில் வைக்க ஆரம்பித்தான்.

தங்கபாலு பேப்பர் வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்த கோமதி அவனருகில் வந்து தலைப்பு செய்தியை வாசித்து விட்டு ‘‘பழனி சூட்கேஸிலே துப்பாக்கி பார்த்தேன் என்று சொன்னீர்களே அவர் நேற்று கீழ்ப்பாக்கம் போவதாகத்தான் சொன்னார். ஒண்ணு கிடக்க ஒண்ணு அவர்தான் தப்புப் பண்ணிருப்பாரோ.’’ என்று கேட்டாள்.

தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள தங்கபாலு பழனியிடம் வந்து ‘‘எங்கே நீ வைத்திருந்த துப்பாக்கியை காட்டு.’’ என்றான்.

‘‘எதற்கு?’’

‘‘காட்டேன் அப்புறம் சொல்றேன்.’’ என்ற போது கூடவே கோமதியும் எட்டிப் பார்த்தாள்.

சூட்கேஸை திறந்த பழனி அதிலிருந்த பிஸ்டலை எடுத்துக் காட்டி விட்டு ‘‘என்ன தங்கபாலு திடீர் சந்தேகம்.’’ என்றான் கோமதியைப் பார்த்தவாறு.

‘‘ஒன்றுமில்லை.’’ என்று தங்கபாலுவும் கோமதியும் கிளம்ப, நல்ல வேளை இரண்டு பிஸ்டல் கொண்டு வந்தது இங்கேயும் நமக்கு உதவுகிறது என்று புறப்பட ஆயத்தமானான்.


மும்பை செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்ததும் அவனுக்கு தங்கை கவுசல்யா தான் மனத்திரையில் ஓடினாள். அண்ணா என்னை மகளிர் பிரிவு தலைவியாக்குவதாக கூறி விட்டு சென்னைக்கு அழைத்துப்போன இணை அமைச்சர் வலம்புரி மாதவன் பலமுறை என்னிடம் வாலாட்டினார்.

நான் அவரை நேரடியாக எச்சரிக்கை செய்யவே, அவருடைய ஆட்களை விட்டு என்னை தூக்கிக் கொண்டுபோய் அவருடைய பங்களாவிலே ஓடவிட்டு நிர்வாணமாக்கி என்னைக் கெடுத்தார்.

அவன் இனி உயிர்வாழக் கூடாது. நீ அவனை உயிரோடுக் கொழுத்த வேண்டும். நான் இறந்து போனாலும், என் ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால் நீ இந்தக் காரியத்தைக் கண்டிப்பாக முடிக்க வேண்டும். தூக்கில் தொங்கியவளின் கைகளில் கிடைத்த கடிதத்தை எடுத்தவன் உடனே மறைத்துக் கொண்டு போலீஸிற்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி, போஸ்ட் மார்ட்டம் ஆகி அவளை எரித்து விட்டு வந்தபோது மனதில் உறுதிப் பூண்டது ஞாபகம் வந்தது.

திரும்பவும் ஒருமுறை நினைவுப் படுத்திக் கொண்டான். அன்பு மாதவனே உன்னைக் கொலை செய்கிற வரைக்கும் எனக்கும் ஊன் உறக்கமில்லை. என் தங்கை ஆன்மா சாந்தியடையப் போவதுமில்லை.

எத்தனை அழகான புத்திசாலியான கவுசல்யா ஒரு மந்திரியின் சொல் கேட்டு சென்னை வரை சென்றவளே.. அவன் புத்தியைத் தெரிந்து கொண்டு தப்பித்து நீ ஊர் திரும்பியிருந்தால்… இனி எதையும் நினைத்து பிரயோனஜன மில்லை.

என் ஆருயிர் தங்கையைக் கொன்றவனை இந்த உலகில் விட்டு வைக்கக் கூடாது. இதுதான் இனி என் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.


மும்பையில் தாராவியில் தங்கியிருக்கும் நண்பனுக்கு போன் பண்ணிச் சொல்லியிருந்ததால் பழனியை தாதர் ஸ்டேசனில் வரவேற்க சிவா வந்திருந்தான்.

இருவரும் சிவாவின் இருப்பிடம் வந்து, பழனியின் தங்கை இறந்துபோன துக்கத்தைப் பகிர்ந்து கொண்டபோது இருட்டிப்போயிருந்தது.

‘‘காமராஜ் ஸ்கூல் எந்தப்பக்கம் இருக்கிறது சிவா?’’

‘‘என்ன விசயம்? ஸ்கூலே வேலைக்கு அப்ளிகேசன் எதுவும் போடப்போகிறாயா?’’

‘‘சொல்லேன்.’’

‘‘பக்கம்தான். என்ன விசயம்.’’

‘‘வரும்போது நோட்டீஸ் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். அமைச்சர் வலம்புரி மாதவன் ஏதோ முப்பெரும் விழாவில் கலந்துகொள்ளப் போகிறதாகவும் அந்த முப்பெரும்விழா காமராஜ் பள்ளி வளாகத்தில் நடக்கப் போவதாகவும் போட்டிருந்தார்கள்.’’

‘‘ஏன் உனக்கு வலம்புரி மாதவனை மிகவும் பிடிக்குமா?‘‘

‘‘ரொம்பப் பிடிக்கும் அதற்காகத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்.’’

‘‘என்ன சொல்கிறாய் பழனி…’’

‘‘ஏதோ ஞாபகத்திலே உளருகிறேன். ஆமா நீ என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்?’’

‘‘இங்கே ஒரு பிருண்டிங் பிரஸ்லே கம்போசிஸ்டரா வேலை செய்து கொண்டிருக்கிறேன்.’’

‘‘ம்… வர்றியா. அமைச்சர் வருவதற்கு ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்து விட்டு வரலாம்.’’

‘‘என்ன உனக்கு இவ்வளவு அக்கறை. நான் உன்னை ஸ்டேசனுக்கு கூப்பிட வந்ததே பெரிய களைப்பாகப் போய் விட்டது. இவ்வளவு தூரம் பயணம் செய்த உனக்கு டயர்டாக இல்லை.’’

‘‘சரி உனக்கு களைப்பாக இருந்தால் படுத்துக்கொள். நான் இங்கே யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு காமராஜ் ஸ்கூலுக்குப் பக்கத்திலே போய்விட்டி வருகிறேன்.’’

‘‘உன் விருப்பம்.’’ என்று சொல்லிய சிவா எழுந்து படுக்கையறைக்குச் செல்ல, பாண்ட் போட்டுக்கொண்டு கிளம்பினான் பழனி.

அடுத்த நாள் நடக்க வேண்டிய கூட்டத்திற்கு மேடை அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. தமிழ் மக்கள் வளர்ச்சி நற்பணி மன்றத்தினர் ஓடி ஆடி பணிகளை ஆற்றிக் கொண்டிருந்தனர்.

மன்றத்தின் அங்கத்தினர் ஒருவரை அணுகிய பழனி, ‘‘சார் உங்க பேரென்ன? உங்களை என்கேயோ பார்த்த மாதிரி இருக்கே… சிகரெட் எடுத்துக்கொள்ளுங்கள்.’’ என்றான்.

‘‘ரெம்ஜிஸ். ஆமா நீங்க யாரு. எனக்கு உங்களை அடையாளம் தெரியவில்லையே. நான்தான் நற்பணி மன்றத்தின் தலைவர்.’’ என்றார் ரெம்ஜிஸ்.

‘‘அப்படியா? அமைச்சர் மும்பைக்கு எப்போது வருகிறார்.’’

‘‘இன்றைக்கு ராத்திரி பத்து மணிக்கு வருகிறார்.’’

‘‘ஏன் இன்றைக்கே வருகிறார். நாளைக்குத்தானே மீட்டிங்.’’

‘‘யாருக்குத்தெரியும். எதாவது சொந்த வேலைகள் இருக்கும். அது சரி நீங்க பம்பாய்க்கு புதுசா?’’

‘‘ஆமா சார். நீங்கள் அமைச்சரை வரவேற்க ஏர்ப்போர்ட் போறீங்களா?’’

‘‘ஆமா இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்ப வாண்டியது தான்.’’ என்று பேசிக்கொண்டிருந்த போது தலைவரே நாளைக்கு அமைச்சருக்கு பரிசளிப்பதற்கு வீர சிவாஜி சிலை ஒன்று வாங்கி வந்திருக்கிறோம். கொஞ்சம் பார்த்து விடுகிறீர்களா?’’ என்று இன்னொரு அங்கத்தினர் வந்து சொல்ல ‘‘வர்றேன் சார்.’’ என்று ரெம்ஜிஸ் கிளம்ப வேகமாக பனிரெண்டு வெள்ளை அம்பாசிடர் கார்கள் மாறி மாரி வந்து காமராஜர் பள்ளி வளாகத்திற்கு வந்து நின்றது.

‘‘சொல்லு பழனி, எதற்காக மும்பை வந்தாய்?’’

எதாவது வேலை கிடைத்தால் வசதியாக இருக்கும். எத்தனை நாள்தான் தங்கை இறந்த சோகத்திலேயே சுற்றித் திரிவது. வாழ்க்கையில் இருந்த ஒரே சந்தோசம் அன்புத் தங்கை அவளே போய்விட்ட பிறகு என்ன வாழ்க்கை என்றுதான் முதலில் மனதில் எழுந்தது. அப்புறம்தான் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்று எதாவது சம்பாதிக்கலாம் என்று கெட்டும் பட்டணம் போ என்று பெரியவர்கள் சொன்னது போல மும்பையை நாடி வந்தேன்.’’

‘‘நீதான் நல்ல உழைப்பாளிதானே. ஊரிலே நல்ல வேலை செய்து கொண்டிருந்தவன்தானே. நான் ஊருக்கு வரும்போது கூட நீ மோட்டார் பைக்கில் சுற்றித்திரியும்போது, நீ உன் வயலில் வேலை செய்வதைப் பார்த்தே பொறாமைப் பட்டிருக்கிறேன். மும்பையில் வந்து என்ன வேலை செய்யலாம் என்கிற முடிவில் வந்தாய்?’’

ஊரிலே இருந்தால் திரும்பத் திரும்ப தங்கையின் நினைவுகளே வந்துகொண்டிருக்கும். மனதிற்குள் கோபமும் எரிச்சலும்தான் கொப்பளிக்கும். அதைவிட இடமாற்றம் இருந்தால் வசதியாக இருக்கும் என்று மும்பை வந்தேன். உனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் சொல்லு, நான் வேண்டுமானால் தங்குவதற்கு வேறு இடம் தேடிக்கொள்கிறேன்.’’

‘‘சே! ஏன் என்னை அப்படி பிரித்துப் பார்க்கிறாய். நீ வந்ததிலிருந்து மும்பையில் அதுவும் தாராவியில் உன் நடவடிக்கைகள் , நீ நடந்துகொள்ளும் விதங்கள், உன் போக்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிந்தது. அதனால்தான் கேட்டேன்.’’

‘‘என்ன பைத்தியக்காரன் மாதிரி நடந்து கொள்கிறேனா?’’

‘‘சே! எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமாகவே பேசுகிறாய். உன் கண்ணில் ஏதோ கோபமும் வெறியும் தெரிகிறது. தங்கை இறந்த துக்கத்திலிருப்பவன் மந்திரி வலம்புரி மாதவனின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ள தயாராகிப் போகிறாய். அதுதான் வித்தியாசமாகப் பட்டது.’’

‘‘அது ஒன்றுமில்லை பழனி. கொஞ்சம் மனமாற்றம் தேவைப்பட்டது. ஏதாவது திரைப்படம் பார்க்கப் போகலாம் என்றால், இந்தி புரியாது. ஓடுகிற தமிழ்ப் படங்களும் ஒன்றும் சரியில்லை. அதனால்தான் உன்னிடம் கேட்டுக்கொண்டு மந்திரியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.’’

‘‘அது சரி. வா…. போய் உன் நண்பனைப் பார்த்துவிட்டு டீ குடித்துவிட்டு வரலாம். அவன் எப்படியாவது உனக்கு வேலை வாங்கித் தருவான். ஆமாம், இனி மும்பையில் தங்கி விடுவதென்று முடிவு செய்து விட்டாயா?’’

‘‘எந்த முடிவும் இப்போது சரியாகப் படவில்லை. போகப் போக காலம்தான் முடிவு செய்யும். அது சரி உன் அலுவலகத்தில் ஏதாவது வேலை போட்டு தரமுடியுமா? ஒரு சிகரெட் தா…’’ என்று கேட்டான் பழனி.

சிகரெட் எடுத்து ஒன்றை பற்றவைத்துக் கொண்டு, இன்னொன்றை பழனியிடம் கொடுத்து, அவனுடைய சிகரெட்டையும் பற்ற வைத்துவிட்டு ‘‘என்னுடைய அலுவலகத்தில் இப்போது வேலை எதுவும் காலியில்லை. பார்க்கலாம், எப்படியும் உனக்கு கூடிய சீக்கிரம் வேலை கிடைத்துவிடும். ஆமாம், எப்போதும் ஏதோ வெறி பிடித்தவன் போல் கோபத்தோடு காணப்படுகிறாய்… சோகமாக இருக்க வேண்டியவன் இப்படி இருக்கிறாய் என்பதுதான் ஆச்சரியாமாக இருக்கிறது.’’ என்றான்.

‘‘என் முகமே அப்படித்தான்.’’ சிகரெட்டை ஆழமாக உறிஞ்சி மூக்கு வழியாக புகையை விட்டான்.


இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பழனியின் கனவில் அவனுடைய தங்கை வெள்ளை உடையுடன் வானத்திலிருந்து வந்து வந்துகொண்டிருந்தாள்.

முதலில் பழனியைப் பார்த்து சிரித்தவள், திடீரென்று கேலியாகச் சிளீத்தாள்.

‘‘ஏய்.. என்னைப் பார்த்து ஏன் கேலி செய்கிறாய்.’’ என்று கேட்டான்.

‘‘என்ன அண்ணா… பயந்து விட்டாயா? நான் தூக்குப் போட்டு இறந்து போனதற்கு காரணமானவன் அங்கே சுகமாக உலாவிக் கொண்டிருக்கிறான். நீ… இன்னும் அவனை விட்டு வைத்திருக்கிறாய்.’’

அவன் உயிரோடு இருக்கும்வரை என் ஆன்மா எப்படி சாந்தியடையும்? அவனைத் தீர்த்துக் கட்டி இந்த உலகத்திற்கு அனுப்பு.’’

“நான் உன்னைப் பிரிந்தால் அடையும் துயர் அவனுடைய மனைவி மக்களும் உணர வேண்டாமா?’’

‘‘ஏன் இன்னும் தயங்குகிறாய்? ஏன் பயமாக இருக்கிறதா? அவனை நீ கொலை செய்தால் நீ தூக்குத்தண்டனைக்குப் போக வேண்டும் என்று பயமாயிருக்கிறதா?

‘‘அவன் என்னைக் கதறக் கதற விரட்டும்போது எப்படி அலறி ஓடினேன். கண்டிப்பாக என் வேதனை உனக்குப் புரியும். நீயும் அவனைக் கதறக் கதற கொலை செய்ய வேண்டாமா?’’

‘‘அந்த மாதவன் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருக்கிறான். என்னைப்போல எத்தனை அப்பாவிப் பெண்கள் அவனால் அபலையாகி இறந்து போயிருப்பார்கள்.’’

‘‘அவர்களுடைய ஆன்மாக்களும் என் ஆன்மாவோடு சேர்ந்து சாந்தியடைய வேண்டாமா? எப்போது அந்த வலம்புரி மாதவனைக் கொல்லப் போகிறாய்?’’ என்று கர்ச்சித்தாள்.

‘‘கூடிய சீக்கிரம் அவன் உயிரைப் பறிக்கிறேன். அவனைக் கொல்லாமல் எனக்குத் தூக்கம் கிடையாது.’’ என்று கத்தினான்.

‘‘டேய்….. யாரைக் கொலை செய்யப் போகிறாய்?’’ என்று நண்பன் எழும்பினான்.

எழுந்த பழனி கொஞ்சம் குழம்பிப் போய் கண்ட கனவை நினைத்து, ‘‘ஒன்றுமில்லை நீ தூங்கு.’’ என்றான் நண்பனிடம்.

‘‘என்னடா, என்ன விசயம். யாரைக் கொல்லாமல் விடமாட்டேன் என்கிறாய்?’’

‘‘ஒன்றுமில்லை. வெறும் கனவு ஒன்று கண்டேன்.’’ கண்களைக் கசக்கிக் கொண்டன் பழனி.

‘‘மனதில் உள்ளவைகள்தான் கனவாக வெளிவரும். யாரை பழி தீர்க்கணும் என்று நினைத்தாலும் எல்லா வற்றையும் மறந்து விட்டு உன் வேலைக்கு முயற்சி செய்.’’ என்று சொல்லி விட்டு நண்பன் தூங்கப்போனான்.

எழுந்த பழனி, ‘‘இனி எப்படி இந்த வலம்புரி மாதவனை நெருங்கப் போகிறேம்?’’ என்று யோசித்தவாறு புரண்டு படுத்தான்.


இரயில்வே நிலையத்தில் முதல் வகுப்பு குளிர் வசதிப் பெட்டியின் வாயிலில் மந்திரி வலம்புரி மாதவன் நின்று கொண்டிருக்க வந்திருந்த கட்சித் தொண்டர்கள் மாலையிட்டு ‘‘மந்திரி வாழ்க’’ என்று கோசம் போட, வழியனுப்ப வந்திருந்த தமிழ் மன்ற உறுப்பினர் பூங்கொத்துக் கொடுத்து வழியனுப்பிக் கொண்டிருந்தனர்.

மந்திரி மாதவனிடம் கட்சியின் தலைவர் ஒருவர் ‘‘அண்ணே! பூனாவிலிருந்து மும்பைக்குத் திரும்பி வருவீர்களா? இல்லை அப்படியே சென்னைக்கு போகிறீர்களா?’’ என்று கேட்டார்.

‘‘பூனேயில் ஒரு பொதுக்கூட்டம் நம்முடைய பழைய தலைவி ஒருத்தி கம்பனி ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் கம்பனியின் ஆரம்ப விழா முடிந்து அநேகமாக மும்பை திரும்பி இங்கிருந்துதான் விமானத்தில் கிளம்புவேன்.’’

‘‘நீங்கள் மும்பை வரும்போது, தொடர்புகொண்டு தொலைபேசியில் சொன்னால் வந்து சந்திப்பதற்கு வசதியாக இருக்கும்.’’

‘‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பி விடலாம் என்றிருக்கிறேன். சென்னையிலும் மும்பையிலும் என் பொதுக்கூட்டங்களில் இப்படி அசம்பாவிதம் நடக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை. அதனால் இனி கொஞ்ச நாள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.’’ என்று மாதவன் சொல்லிக்கொண்டிருந்த போது, அடுத்து இருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த பழனி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான்.


இரயில் நிலையத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மூன்றாவது பிளாட்பாரத்தில் நிற்கும் இரயில் இன்னும் பத்து நிமிடத்தில் பூனா புறப்படும். இந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் கல்யாண், கர்ஜத், லோனாவாலா ஆகிய இரயில்வே நிலை யங்களில் மட்டும் நிற்கும். பயணிகள் தங்களுடைய உடைமைகளை சரிபார்த்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கோரப்படுகிறார்கள். என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

தொண்டர்கள் போட்டிருந்த மாலைகளைக் கழற்றி எதிரில் நின்ற கூட்டத்திடையே எறிந்து விட்டு தமிழ் மன்றத்தின் தலைவர் ரெம்ஜிஸ் கண்ணில் பட்டதும், அவரை அழைத்து ‘‘என்ன சார் அந்தப் பையனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?’’ என்று கேட்டார் வலம்புரி மாதவன்.

‘‘இல்லை சார்.’’

‘‘எனக்கென்னவோ அவன் என்னைத்தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது. எதற்கும் அவனைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக எனக்குத் தகவல் தெரிவியுங்கள்.’’ என்றார் மந்திரி.

‘‘கண்டிப்பாக சார். நாங்கள் நடத்திய நிகழ்ச்சியில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே எங்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. அந்தப் பையன் முகம் நன்றாக நினைவிருக்கிறது. கண்டிப்பாக அவனைப் பார்த்தால் உடனடியாக உங்களுக்கும் போலீஸுக்கும் தகவல் தெரிவிக்கிறேன்.’’ என்றார் ரெம்ஜிஸ்.

சிக்னல் பச்சை விளக்கிற்கு மாற, இரயில் எஞ்சின் சப்தம் எழுப்ப, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். அடுத்து எப்போது நிகழ்ச்சிகள் வைத்தாலும் அழைப்பு விடுங்கள், கண்டிப்பாகக் கலந்து கொள்கிறேன்.’’ என்றார் வலம்புரி மாதவன்.

‘‘மிக்க நன்றி சார்.’’ என்று ரெம்ஜிஸ் கையசைக்க இரயில் கிளம்பியது.

மந்திரி எல்லோருக்கும் கையசைக்க, இரயில் வேகமாக ஓட ஆரம்பித்தது. பழனி ஒரு கதவில் நின்று கொண்டிருப் பதை பார்த்து ரெம்ஜிஸ் ‘‘அதோ அந்தப் பையன் ரயிலில் போகிறான்.’’ என்று சப்தமிட்டார்.

அந்தக் கூட்டத்தில் யாரும் கவனிக்காததால் ரெம்ஜிஸ் என்ன செய்வதென்று யோசித்தவன் ‘ஒருவேளை பிரமையாக இருக்கும். அந்தப் பையனைப் போல இருந்தான் அந்தப் பயணி’. என்று நினைத்துக் கொண்டான்.

தன் இருக்கையில் வந்தமர்ந்த பழனி தலையில் கட்டியிருந்த ஏறக்குறைய முகத்தை மறைத்துக் கட்டியிருந்த கைக்குட்டையை எடுத்து விட்டு, டவலால் முகத்தை துடைத்துக் கொண்டான்.

மந்திரியை எப்போது சந்திக்க வேண்டும். கல்யாண், கர்ஜத் தாண்டி குகைக்குள் இரயில் ஓடும்போது போய்ப் பார்க்க வேண்டும். முதலில் அதிர்ச்சியடைந்து என்னைத் தாக்க வரலாம். அருகில் அமர்ந்திருப்பவர்கள் அவருக்கு உதவ வந்தால் பிரச்சனையாகி விடும்.

முதல் வகுப்புப் பெட்டியில் போய் கழிவறைக்கு அருகில் நின்று கொள்ள வேண்டும். மந்திரி அந்தப்பக்கம் வரும்போது கதவைத் திறந்து கீழே தள்ளி விட்டால் உடனடியாக பரலோகப் பதவிதான்.

‘இல்லையெனில் கழிவறைக்குள் சென்றதும் உள்ளே நுழைந்து கையை முறுக்கி கழுத்தை நெறித்தால்… முதலில் வலம்புரி மாதவன் அழிச்சாட்டியம் செய்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கழுத்தில் ஆதாம் எலும்பு ஒடிய அவனுடைய ஆவி பறந்து போய்விடும். என் தங்கையின் மனதும் சாந்தியடையும்.’ மனதில் பலவிதமாக எண்ணங்கள் ஓட அருகில் வந்த டீக்காரனிடம் ‘‘ஒரு சாய் கொடுப்பா’’ என்று சொல்லி காசு எடுத்து கொடுத்துவிட்டு டீ வாங்கிக்கொண்டான்.

‘‘என்னப்பா சாயா குடிக்கிறாயா? என்று மந்திரியின் குரல் கேட்க, ஒரு நிமிடம், அவயமெல்லாம் ஒடுங்கிப் போக, தலையை திருப்பி அவசரமாக முகத்தை மூடிக் கொண்டான்.

அருகில் இருந்த நபரிடம் வந்த மந்திரி ‘‘நான் அடுத்தாற்போல் உள்ள முதல் வகுப்பு குளிர் வசதிப் பெட்டியில் மூன்றாம் எண் படுக்கையில் தான் அமர்ந்திருக்கிறேன். ‘‘முரளி சாயா குடித்ததும் என்னை வந்து பார்.’’ என்று சொல்லி விட்டு மந்திரி திரும்பிப் போக அப்போதுதான் மூச்சு வந்தது பழனிக்கு.

இழுத்து மூச்சு விட்டுக்கொண்டான். அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த முரளியைப் பார்த்தான். மந்திரியின் தொண்டனாக இருக்கலாம். இனவைப் பார்க்க வந்த போது, என்னைத் திரும்பிப் பார்த்திருந்தால்.. பார்த்திருந்தால் என்னாகியிருக்கும்.

கோழிக்குஞ்சை அமுக்குவது போல என்னை மந்திரியும் அவருடைய தொண்டன் இந்த முரளியும் மற்றவர்களும் சேர்ந்து அமுக்கிப் பிடித்துக் கொண்டு இரயிலை நிறுத்தி

என்னைக் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள். அப்புறம் வாழ்நாள் முழுவதும் களி திண்றுகொண்டு ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

இனி மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த முரளி மந்திரியைப் பார்க்கப் போன பிறகுதான் மெதுவாக எழுந்து முதல் வகுப்பு ஏ.சி. கம்பார்ட் மெண்டுக்குப் போய் பாத்ரூம் அருகில் நிற்க வேண்டும்.

மந்திரி எழுந்து அந்தப்பக்கம் வரும் வரை ‘உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பது போல காத்து நிற்க வேண்டும்.

இந்தமுறை என் குறி தவறக்கூடாது. எந்த அடையாளமும் இல்லாமல் இவனை சிவலோகப் பதவியடைய வைத்து விட்டு அடுத்த இரயில் நிலையத்தில் இரயில் நின்றதும் இறங்கிப்போய்விட வேண்டும். யோசித்துக் கொண்டே உட்கார்ந் திருந்தவன், அவனை அறியாமல் தூங்கிப் போய்விட்டான்.


பழனி விழித்துப் பார்த்தபோது சுற்றுமுற்று இருளாக இருக்க மங்கலாக வெளிச்சம் தெரிந்தது. இரயில் கர்ஜத் இரயில் நிலையம் தாண்டி குகைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

எழுந்தவன் வேக வேகமாகப்போய் முகம் கழுவி துடைத்துக்கொண்டு முதல் வகுப்பு ஏ.சி. கம்பார்ட்மெண்ட் பாத்ரூம் அருகில் வந்து நின்றான்.

வெளியே கதவு வழியாக எட்டிப்பார்க்க, தூரத்தில் ஒரு நதியின் மேல் இரயில் பாலம் தெரிந்தது. இப்போது மந்திரி இந்தப் பக்கம் வந்தால் அவரைப் பிடித்து கீழே தள்ளினால் சரியாக அந்த நதியில் விழுவான். கண்டிப்பாக ஆள் காலி என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது பாத்ரூமிற்கு வந்த மந்திரி வலம்புரி மாதவனை நேருக்கு நேராக சந்தித்தான்.

‘‘என்ன அண்ணா அப்படிப் பார்க்கிறாய். இது மந்திரி வலம்புரி மாதவன் தந்த கட்சிக் கரை போட்ட சேலை. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஈரோடு மாநாட்டில் கட்சியின் மகளிரணித் தலைவியாக என்னை அறிவிக்கப்போகிறார். இதோபார், அவர்

கொடுத்த பூச்செண்டு. இது அவர் கொடுத்த செண்ட் பாட்டில். எவ்வளவு அழகான மனிதர். அவர் உடையில் தெரியும் மிடுக்கே மிகவும் பிரமாதமாக இருக்கும்.’’

‘‘பாரேன் இன்னும் கொஞ்ச நாளில் உன் தங்கை மிகப்பெரியாளகப் போகிறாள். தினமும் அவளைப் பற்றிய செய்திகள் பக்கத்திற்கு பக்கம் பத்திரிகைகளில் வரும்.’’ என்று ஆவலாகச் சொன்னாள் கவுசல்யா.

‘‘கவுசல்யா இந்த அரசியல் வாதிகளை எப்போதும் நம்பக்கூடாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்.’’

‘‘நீ திருமணமாகி இன்னொரு வீட்டிற்குப் போக வேண்டியவள். அதை மறந்து விடாதே.’’

‘‘போங்கண்ணா, உங்களுக்கு எப்போதும் சந்தேகம்தான். வலம்புரி மாதவன் எவ்வளவு கண்ணிய மான மனிதர். ஒருமுறை தெரியாமல் அவர் கை பட்டு விட்டதற்காக பத்து முறை மன்னிப்பு கேட்டார் தெரியுமா?’’

‘‘பெண்களைப் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறார். பெண்ணுரிமையை எவ்வளவு அழகாக முழங்குகிறார். அவர் பேசுவதை இன்று முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றாள் கவுசல்யா மகிழ்ச்சியோடு.’’

‘‘என் அன்புத் தங்கையே, எனக்கு நீ அரசியலில் அதுவும் பொது வாழ்க்கைக்கு வருவது எந்த விருப்பமும் கிடையாது. அம்மா எத்தனை முறை மறுத்த பிறகும் நாம் உன்னை பொது நிகழ்ச்சிக்கு அனுப்பியக் காரணம் உனக்குள்ளே இருந்த உத்வேகமும், ஆசையும் பேச்சுத் திறமையுந்தான்.’’

ஆனால் அவை ஒரு எல்லை வரைதான் செயல்பட வேண்டும். சிலர் உன்னைப் பற்றி தவறாக பேசி அடியும் வாங்கி விட்டார்கள். எல்லோரையும் அடிக்க முடியுமா? அல்லது ஊரார் வாயைத்தான் மூட முடியுமா? நீ இதை உணர்ந்து கவனமாக நடக்க வேண்டும்.’’ என்றான் பழனி.

‘‘அண்ணா, இந்த கவுசல்யா பழனியின் தங்கை. என்னை யாராவது தீண்ட நினைத்தால் எரித்து விடுவேன். பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் பலரும் பலவிதமாகத்தான் பேசுவார்கள். அதற்காக நம்முடைய முன்னேற்றங்களை நாம் தடை செய்து கொள்ள வேண்டுமா என்ன?’’ என்று சீறினாள் கவுசல்யா.

‘‘எனக்கு உன்னைப் பற்றி நன்றாகத் தெரியும் கவுசல்யா. அதனால்தான் நான் உன்னை இந்த அளவிற்கு பொதுக் கூட்டங்களுக்கு அனுமதித்ததோடு நானும் சலனமில்லாமலிருக்கிறேன். ஆனால் நீ பெண், அதை மனதில் வைத்துக்கொண்டு நடக்கவேண்டும். நான் சொல்லி உனக்குத் தெரிவ தில்லை. சேலை முள்ளின் மேல் விழுந்தாலும் முள் சேலை மேல் விழுந்தாலும் சேதம் சேலைக் குத்தான் என்பதை மறந்து விடாதே.’’

‘‘அய்யோ, அண்ணா உனக்கு என்னாயிற்று இன்றைக்கு ரொம்பவே அறிவுரை கொடுக்க ஆரம்பித்து விட்டாய். உனக்கு ஸ்வீட் தருகிறேன். இது கூட மந்திரி வலம்புரி மாதவன் தான் வாங்கிக் கொடுத்தார். மும்பை ஸ்வீட்ஸ்.’’ என்று ஒரு மிட்டாய் எடுத்து பழனிக்கு ஊட்டி விட்டாள்.

பழனிக்கு புரையேறி விட, அவன் தலையில் தட்டிய கவுசல்யா ஓடிப்போய் உள்ளேயிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள்.

தண்ணீர் குடித்து விட்டு ‘‘கவுசல்யா உன்னிடைய பொது நிகழ்ச்சிகள் போதும் என்றுதான் என் அடிமனது சொல்கிறது. இனி நீ கண்டிப்பாக மாநாட்டுக்கெல்லாம் செல்ல வேண்டுமா?’’ என்று கேட்டான்.

‘‘போ! இப்படித்தான் திடீரென்று ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்டு விடுகிறாய். எனக்கு கட்சியில் மாநில மகளிரணி தலைவி பதவி கிடைக்கிறதென்றால் எவ்வளவு பெரிய விசயம்.’’

‘‘நாளைக்கு தமிழகம் முழுவதும் என் பெயர் பிரபலமாகும் போது அதில் உனக்கும்தான் பங்கு உண்டல்லவா? என் அன்பு அண்ணனல்லவா. என்னைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். நான் தனியாகவா போகிறேன். நமதூரில் இருந்து நிறைய பெண்கள் ஈரோடு கட்சி மாநாட்டிற்கு வருகிறார்கள். அவர்களோடு போய்விட்டு வருகிறேன்.’’ என்று சொன்ன கவுசல்யாவை கடைசி முறையாக உயிரோடு பார்த்தது அன்றுதான்.

‘‘வாப்பா, உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். என்ன விசயமாக என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாய்.’’ என்று மந்திரி மாதவன் கேட்க, யாரும் எதிர்பாராதபோது மந்திரியின் மேல் பாய்ந்தான் பழனி.

எதிர்பாராமல் மந்திரியும் பழனியும் திறந்து கிடந்த கழிவறைக்குள் சரிந்து விழ, சுதாரித்துக் கொண்ட பழனி வேகமாக எழுந்து கதவை மூடிக்கொள்ள, மந்திரி ஓங்கி பழனியின் முதுகில் உதைத்தார்.

பழனி ஒதுங்கிக் கொள்ள, தவறிப்போய் வாஷ்பேசனில் மாதவன் விழ, உதடு கிழிந்து இரத்தன் வர ஆரம்பித்தது.

மறுபடியும் மந்திரி மாதவன் ஆக்ரோசமாக தாக்க, பழனி இந்தமுறை அவருடைய கையை முறுக்கிப் பின்னால் பிடித்துக்கொண்டு மந்திரி மாதவனின் கழுதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள முயற்சித்தான்.

மிகவும் பலமாக உதறிக்கொண்ட மந்திரி பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து பழனியை நோக்கி நீட்ட, இரயிலின் வேகத்தில் பழனி அவரைத் திரும்ப ஓங்கி அடிக்க, மந்திரி மாதவன் தடுமாறி வீழ்ந்தார். அவர் கையிலிருந்த துப்பாக்கி நழுவிக் கீழே போக ‘‘உதவி..உதவி…’’ என்று கத்தினார்.

பையிலிருந்து கர்ச்சீப் எடுத்து அவர் வாயில் வைத்து விட்டு ‘‘ராச்கல்… உன்னை இன்றைக்கு உயிரோடு விட மாட்டேன். உன்னைத் தொடர்ந்ததற்கும் உன்னைக் கொல்ல முயற்சித்ததற்கும் இன்றுதான் முடிவு கிடைத்திருக்கிறது.’’ என்று கத்திய வாறு அவர் கழுத்தை இறுக்கினான்.

வெளியேயிருந்து கதவு தட்டும் சத்தம் கேட்க, அவனையறியாமல் கைகள் தளர, வேகமாக முண்டியடித்துக் கொண்டு எழுந்த மந்திரி மாதவன் வேகமாக கதவைத் திறக்க, அவர் காலைத் த்ட்டிவிட்டான் பழனி.

கதவு திறக்க, வெளியே வந்து விழுந்த மந்திரி எழுந்து சுதாரித்து கொண்டு வாயிலிருந்த கர்ச்சிப்பை துப்பி விட்டு ஓட திரும்பவும் பழனி வந்து பிடித்துக்கொண்டான்.

ஒரு உதறலில் அவனைப் பிடித்து தள்ளி விட்டு, எழுந்து நின்ற மந்திரி ‘‘எழும்புப்பா, இப்பொழுது நான் வேகமாக விரலைச் சுடுக்கினால் போதும், என் உதவியாளர்களும் மெய்க்காப் பாளர்களும் குண்டினால் உன் உடலைச் சல்லடையாகத் துளைத்து விடுவார்கள். இனி விளையாடாதே. உன்னைக் காலிப் பண்ணுவதற்குள்எனக்குள் ஒரு சின்ன குறுகுறுப்பு அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள முதலில் முடிவு பண்ணிக்கொள்கிறேன்.

‘‘சொல்லு யார் நீ? உன் பெயர் என்ன? என்னை ஏன் கொலை செய்ய தொடர்ந்து வருகிறாய்.’’ அவன் ஓடி விடாமல் குறுக்கே நின்று கொண்டார்.

இரயில் குகைக்குள் ஓடிக் கொண்டிருக்க ப், இருளம் வெளிச்சமும் மாறி மாறி இரயிலுக்குள் சிதறிக்கொண்டிருக்க, டியூப் வெளிச்சம் கண்ணைக் கூசிக் கொண்டிருந்தது.

இவரிடம் உண்ண்மையைச் சொல்லலாமா? தப்பிக்க முடியுமா இல்லை என்றால் எப்படியும் நாம் காலியாவது உறுதி. அதற்கு முன்னால் வலம்புரி மாதவனை எமலோகத்திற்கு அனுப்பி விட்டு நாமும் அவரோடு போவோமா? எதிர் பாராமல் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே…. இவனைக் கொன்று விட்டு, அந்த அடையாளமே தெரியாமல் ஊருக்குப் போய் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று எவ்வளவு திட்டங்கள் தீட்டிக்கொண்டு வந்தேன். எல்லாமே தோல்வியாகி விட்டது. என்ன செய்யலாம்? பின்னாலே கதவு திறந்து கிடக்கிறது.

‘வேகமாக மோதி மந்திரி மாதவனை இரயிலிலிருந்து கீழே விளத்தட்டி விட்டால் அவனுடைய எலும்புகள் கூட மிச்சம் கிடைக்காது.’ யோசித்துக் கொண்டிருக்கும் போதே ‘‘என்னப்பா ரொம்பா யோசித்துக் கொண்டிருக்கிறாய்? இனி எதுவும் செய்ய முடியாது. சொல்லு, என்ன விசயமாக என்னைக் கொலை செய்ய வந்தாய்? எதிர்கட்சியினர் யாராவது உனக்குப் பணம் தந்து என்னைக் கொலை செய்யச் சொன்னார்களா?

இனியும் நீ யோசிக்க ஆரம்பித்தால், என்னைக் கொல்ல இன்னும் உன் மனதில் வேகமாக முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

அவைகளை விட்டு விடு. கமான் யார் சொல்லு. ஓங்கி பழனியின் கன்னத்தில் அறைந்தார் மந்திரி. கீழே விழுந்தவனை திரும்பி தூக்கி விட்டார். இரயிலின் வேகத்தில் இருவரும் கீழே விழ, பழனியோடு திரும்பவும் எழுந்தவர், மறுபடியும் பழனியின் கன்னத்தில் அறைய, பழனிக்கு மணடைக்குள் இடி மின்னல் எழுந்தது. கன்னத்தில் வலி சுள்ளென்று உறைத்தது.

‘‘சொல் யார் நீ?’’ என்று திரும்பவும் மந்திரி மாதவன் கையை ஓங்க, தடுத்தவன்….

‘‘என் பெயர் பழனி.’’ என்றான்.

‘‘ஏன் என்னைக் கொலை செய்ய தொடர்ந்து வந்தாய்?’’ மாதவன் கோபமாகக் கேட்டார்.

‘‘என் தங்கை தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக.’’ வலியை உணர்ந்தவன் உதட்டை துடைத்துக் கொண்டே சொன்னான்.

‘‘உன் தங்கை தற்கொலை செய்து கொண்டதற்கு நான் என்னப்பா செய்தேன்.’’ ஏளனமாகக் கேட்டார் மாதவன்.

‘‘உனக்கு கவுசல்யாவை தெரியுமா?’’

‘‘ஓ அந்தக் கொண்டபுரத்து கவுசல்யாவா? அவளுக்கு யார் நீ? காதலனா?’’ என்று கேலியாகக் கேட்டார்.

மனதிற்குள் எழுந்த கோபத்தை ஒன்று திரட்டி, பலத்தையெல்லாம் கூட்டிக்கொண்டு வேகமாக ‘‘நான் கவிசல்யாவின் அண்ணண்டா. உனக்கு எமனாக வந்திருக்கிறேன். உன்னைக் கொன்றால் தான் என் தங்கையின் ஆன்மா

சாந்தியடையும்.’’ என்று அக்ரோசமாகக் கத்திக்கொண்டு மந்திரியின் மேல் வேகமாகப் பாய்ந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மந்திரி ஒதுங்கிக் கொள்ள, இரயில் தடக்..தடக்கென்று நதியின் மேல் ஓடிக்கொண்டிடுக்க கதவு வழியாக வெளியே விழுந்த பழனி தொபுக்கென்று நதியில் விழுந்தான்.

மந்திரி கண்ணாடியில் முகம் பார்த்து, இரத்தத்தை எல்லாம் கழுவிக் கொண்டு இருக்கைக்குத் திரும்பி வந்தார் பெருமூச்சு விட்டவாறு. முகத்தை டவலை எடுத்து துடைத்தவாறு.

உதவியாளர்கள் எல்லோரும் ஓடி வந்து ‘‘என்ன சார்.. என்னாச்சு?’’ என்று கேட்க ‘‘ஒன்றுமில்லை.’’ என்று திரும்ப ஜன்னல் கம்பியில் பழனியின் முகம் தெரிய ‘‘நீயா? என்று கத்தினார்.


தான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசில் கீழே இறங்கி இருந்த காவல் அமைப்பை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு மேலே வந்த போது ‘‘என்ன தலைவரே, இன்னும் பயம் போகலையா?’’ என்று கேட்டார் வட்டத் தலைவர் மணவாளன்.

‘‘உனக்கென்னையா? ஊரிலேயிருந்து நேரே பூனாவிற்கு வந்ததாலே நடந்தது எதுவும் நேரடியாகப் புரியலே. உயிர் பயம் எப்படி என்பதை நான் நேரிலே அனுபவிச்சவன். எதற்கும் ஒருமுறை சரிபார்த்துக்கலாம்னு தான் கீழே வந்தேன். அவன் எமகாத பய…எனக்கென்னவோ ரயில்லேயிருந்து கீழே விழுந்தாலும் அவன் செத்திருப்பான்னு தோணலை. ரயில்லே அவன் முகம் மாதரி ஜன்னலில் பார்த்ததும் அப்படியே ஒருமுறை ஆடிப்போயிட்டேன். அப்புறம்தான் பிரமை என்று தெரிந்து நானே என்னை சிதாரிச்சுக்கிட்டேன். என்ன நம்ம அயிட்டமெல்லாம் கூட்டியாந்திருக்கியா?’’ என்றார் மந்திரி வலம்புரி மாதவன்.

தலையை சொறிந்துகொண்டிருந்த மணவாளனைப் பார்த்து ‘‘என்னையா பதில் சொல்லாமல் முழிக்கிறே. புவனா எங்கே? திரும்பவும் கத்தினார்.

‘‘சார்… புவனாவிற்கு உடம்பு சரியில்லே, இங்கேயே …’’ என்று மணவாளம் இழுக்க…

‘‘போய்யா… உன்னை யார் பூனாவிற்கு கூப்பிட்டது. புவனாவிற்கு துணை வேண்டுமே என்றுதான் உன்னையே வரச் சொன்னேன். சரி, எப்படியும்போ. குடிக்கிறதுக்கு தயார் பண்ணு. குளிச்சிட்டு வருகிறேன்.’’ என்று குளியலறைக்குள் நுழைந்தார் மந்திரி.

மணவாளன் கீழே தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னவெல்லாம் தேவை என்று சொல்லி கொண்டுவரச்சொல்லி விட்டு, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து வெளிநாட்டுப் புட்டியை எடுத்து இரண்டு கப்களில் நிரப்பி சோடா விட்டு, கடிப்பதற்கு வேண்டிய கொல்லாங்கொட்டை பருப்பு, பதாம் எல்லாம் தயார் செய்துகொண்டிருந்தார்.

காவல் மிகவும் கடுமையாக இருப்பதை உணர்ந்த பழனி, பின் சுவரில் மெதுவாக பல்லி மாதிரி ஊர்ந்து மேலே வந்து காம்பாவுண்ட் சுவரில் குத்தியிருந்த ஆணி, கம்பி, கண்ணாடித்துண்டுகளில் எங்கும் படாதபடி பார்த்துக் கொண்டு உள்ளே குதித்தான்.

பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டபோது , அந்த அலுமினிய துப்பாக்கி ‘‘நான் அமைதியாக இருக்கிறேன். எப்போது உபயோகிக்கப் போகிறாய்?’’என்று கேட்டது.

ஆற்று நீரில் நனைந்த பிறகும் விசுவாசமாக உதவி புரிய துணை வந்த துப்பாக்கியை இன்னொரு முறை எடுத்து துடைத்துக் கொண்டபோது, அவனை நோக்கி வெளிச்சம் சிதற ஓடிப்போய் அருகிலிருந்த மரத்தில் ஒளிந்துகொண்டான்.

டார்ச் எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்க வந்த காவலாளி எல்லாப் பக்கமும் வெளிச்சத்தைச் சிதற விட்டு பதுகாப்பு சரியாக இருப்பதை பார்த்து பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்த போது, பழனியின்

நிழல் தெரிய வேகமாக அந்த மரத்தை நோக்கி ஓடி வந்தான். டார்ச் மூலம் வெளிச்சத்தை சிதற விட்டபடி …

மரத்திற்குப் பின்னால் வந்து சுற்றிப் பார்த்து விட்டு யாரும் தென்படாமல் போக, திரும்பவும் ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டு சிகரெட்டை உள்ளெ இழுத்து ஆழ உறிஞ்சு புகையை விட்டு விட்டு மெதுவாக வாசலை நோக்கி நடந்தான்.

மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து போன பழனி, மெதுவாக மரத்திலிருந்து கீழே இறங்கி கெஸ்ட் ஹவுசின் பின்னாலுள்ள குழாயில் தொற்றிக்கொண்டு ஏறினான்.

படுக்கையறையில் மேஜையில் புட்டியைச் சரித்து மதுவை பரிமாறிக் கொண்டிருந்த மணவாளனைப் பார்த்ததும் கோபம் உச்சிக்கு ஏறி கரைபுரண்டோடியது. ‘இவன் என் தங்கையை இந்த மந்திரிக்கு அறிமுகப் படுத்தியவன். இந்தக் காட்டுவாசிதான் இரக்கமில்லாமல் என் தங்கையை வலம்புரி மாதவன் கெடுப்பதற்கு முழுக்க முழுக்க உதவி செய்தவன்.’ வேகமாக துப்பாக்கியை எடுத்து செயல்பட மணவாளன் எதிர்பாராமல் முதுகில் பாய்ந்த அமைதியான புல்லெட்டினால் இரத்தம் கொப்புளிக்க ‘‘அய்யோ’’ என்று பிடித்துக் கொண்டு சரிந்தான்.

‘‘என்னாச்சி மணவாளன்..?’’ என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்த மந்திரி, இரத்த வெள்ளத்தில் சித்றிக்கிடந்த மணவாளனையும், தாழ்வாரத்தில் தென்பட்ட பழனியையும் பார்த்து உடனே கிரகித்துக் கொண்டு மேஜைக்குப் பாய, ‘‘மந்திரி இனி உன் தந்திர வேலைகள் எல்லாம் எடுபடாது. கையைத் தூக்கு, இல்லையெனில் மணவாளனின் கதைக்கு அடுத்த அத்தியாயம் நீதான்.’’ என்று கத்தினான்.

அவன் சப்தம் இரைச்சலாகக் கேட்க இழே இருந்து காவலர்கள் ஓடி வந்தார்கள். பழனி அமையாக்கப்பட்ட துப்பாக்கியால் குறி பார்க்க மந்திரி படுக்கையின் கீழே பாய்ந்து கொள்ள, குண்டுகள் சுவரில் துளைப்போட்டுக் கொண்டிருந்தன.

‘‘கமான் காட்ச் ஹிம்’’ என்று காவல் படை தலைவன் சப்தமிட, வேகமாகக் கீழே குதித்த பழனி பாய்ந்து ஓட, காவலாளி குறிபார்த்த குண்டு கால்முட்டில் துளைத்து இரத்தம் சொட்ட, வேகமாக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குத்திக் கிழித்த கண்ணாடுத் துண்டுகளையும் பொருட்படுத்தாமல் பிடித்து தம்கட்டிக் கொண்டு அடுத்தப் பக்கத்தில் விழுந்தவன், எதிரில் வந்த லாரியில் நின்று, லாரி நின்றதும் பின்னால் ஏறிக்கொள்ள, ஓடி

வந்தக் காவலாளிகள் சுவர்களிலும் சுற்றி இருந்த சாக்கடை, மரங்கள் எல்லாவற்றிலும் பழனியைத் தேடிக்கொண்டிருந்தனர்.


கண்விழித்துப் பார்த்தப் போது சொர்க்கத்தில் இருக்கின்றோமோ.. சொகுசான மெத்தை வெள்ளையுடை தரித்த தேவதைகள் நடமாடுகிறர்களே என்று தான் யோசித்தான்.

காலில் கொஞ்சம் கொஞ்சமாக வலி ஏற ஆரம்பிக்க மந்திரியின் கெஸ்ட் ஹவுசிற்கு சென்று மணாளனைக் கொன்று விட்டு மந்திரியை வீழ்த்துவதற்குள் காவலாளிகள் ஓடி வந்து விட தப்பிக்கும் போது ஏதோ ஒரு கூர்க்கா சுட்டதில் காலில் சிராய்த்துக்கொண்டு போன நினைவு வந்தது.

வலி கடுமையாகத் தெரிந்த போது அந்தக் கன்னியாஸ்திரி பெண்மணி தும்பைப்பூ வெண்ணுடை தரித்து ‘‘ஹவ் டூ யூ ஃபீல் யங் மேன்.’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் ’’நான் நன்றாக இருக்கிறேன். எப்படி இங்கே வந்தேன். என்னால் வலி தாங்க முடியவில்லை.’’ என்றான். வலியின் மிகுதியில் அவனை அறியாமல் கண்ணிர் பொங்கி வந்தது.

அழாதே மகனே கர்த்தர் உன்னைக் காப்பாற்றுவார். நல்லவேளை குண்டு சிராய்த்துக் கொண்டு போய்விட்டது. உள்ளே போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய். உனக்கு ஏன் இந்த நிலமை? ஏன் இப்படி அடிப்பட்டாய்? உன்னை யார் துப்பாக்கியால் சுட்டார்கள்? என்ற எந்த விபரமும் நீயாக விரும்பினால் மட்டும் சொன்னால் போதும்.

தேவன் வல்லவர். அவரிடம் வேண்டிக் கேள். உன் மனக்கவலைகளையும் உடல் வலியையும் போக்குவார். வலிக்கிறதா? என்று அவன் தலையைக் கோதியப்படிக் கேட்டார்.

ரொம்ப வலிக்றது என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான். காலில் குண்டு பட்ட வலியை விட மனதில் வலி மிகவும் அதிகமாக இருந்தது. சிஸ்டர் சில்வியா இவருக்கு தூக்க மாத்திரை கொடுங்கள். இன்னும் நிறைய ஓய்வெடுக்கட்டும். என்று அந்த சிஸ்டர் ஆணையிட இன்னொரு வெண்ணாடை தரித்த கன்னியாஸ்திரி வந்து ஊசி போட, ஏதோ எங்கோ எறும்பு கடித்த மாதிரி உணர்வு வரத் தூங்கிப் போனான்.

அண்ணே இப்படி பண்ணி விட்டாயே… என் ஆன்மா சாந்தி அடைய வேண்டாமா? இப்படி படுக்கையில் விழுந்து கிடக்கிறாயே…அந்தப் பாவியைக் கொல்லாமல் என்னிடம் வந்து விடப் போகிறாயா?

எழும்பு அண்ணா… கவுசல்யா என்று பாசமாகச் சுற்றிச் சுற்றி வந்து அன்போடு வளர்த்த உன் தங்கையின் நிலைமையைக் கவனித்துப் பார், என் ஆத்மா சாந்தி அடைய அந்தப் படுபாவியை இந்தப் பூமியிலிருந்து நீ உடனடியாக பரலோகத்திற்கு டிக்கெட் வாங்கி அனுப்ப வேண்டாமா?

என்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய அந்த மந்திரி உன்னையும் இப்படி படுக்க வைத்து விட்டானே… வா… அண்ணா… அவன் மட்டும் நம் குடும்பத்தை சீரழித்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கலாமா…..

கொஞ்சம் யோசித்துப் பார். நீயும் மஞ்சுளாவும் எத்தனை மகிழ்ச்சியில் ஊரில் தரிசுக்காட்டிலும் வயல் வரப்புகளிலும், வலம் வந்தீர்கள். பார்…. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி உன்னை எனக்காக இப்படி அலைய வைத்து… சே! எவ்வளவு கொடூரமான விசயம். எழுந்து போ அண்ணா… அவனை இந்த உலகத்திற்கு அனுப்பு… நான் அவனை இந்த உலகத்திலும் நிம்மதி இல்லாமல் அலைய வைக்கிறேன்.

கால் வலிக்கிறதா? வலிக்கட்டுமே…. மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த வலியின் கடுமையை கணக்கிடும் போது… இந்தக் கால்வலியெல்லாம் எம்மாத்திரம்…

கவுசல்யா தலைவிரி கோலத்துடன் கைகளை விரித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்க, கனவு கலைந்து எழுந்தான். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. பையில் வைத்திருந்த அந்த முகவரியை எடுத்து வாசித்தான். எங்கே இருக்கும்? இந்தக் கால் வலியோடு போகமுடியுமா? நெஞ்சுக் கூட்டுக்குள் தெம்பிருக்கும் வரை என்னால் எங்கே

வாண்டுமானாலும் போக முடியும். யோசித்துக் கொண்டிருந்தவன் அந்த வழியாக போன கம்பவுண்டரைக் கூப்பிட்டு இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது என்று கேட்டான்.

அவனுடைய ஆங்கிலம் புரியாவிட்டாலும் அவன் என்ன கேட்கிறான் என்பதப் புரிந்து கொண்ட கம்பவுண்டர் இதோ மருத்துவ மனைக்கு அடுத்தாற்போல தான் இருக்கிறது. அங்கே ஏதோ விசேசம் என்று நினைக்கிறேன். தோரணங்கள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். நிறைய ஆட்கள் கூடியிருக்கிறார்கள். யாரோ வி.ஐ.பி. வருகிறார் போல இருக்கிறது. உனக்கு குடிப்பதற்கு சூடாக ஏதாவது தரச் சொல்லவா? என்று கேட்டான் ஆங்கிலத்திலும் மராத்தியிலும்.

சூடான ஒரு தேநீர் அருந்தினால் கொஞ்சம் தேவலாம் போலத்தோன்றியது. ஒரு டீ கொடுக்கச் சொல்லேன் என்றான் பழனி. கொஞ்ச நேரத்தில் ஒரு பணிப்பெண் சூடாக தேநீர் கொண்டுவர, அவன் குடித்து முடித்ததும் கப்பை வாங்கிக் கொண்டான். என்னை கொஞ்சன் கழிவறை வரை கொண்டு போக முடியுமா? என்ற அவன் வார்த்தைகளையும் செய்கைகளையும் புருந்து கொண்ட பெண் அவனை கைத்தாங்கலாக கழிவறைக்குக் கூட்டி வந்தாள்.

பின்பகுதி பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்ட பழனி வேகமாக அவ்ளைத் தள்ளி விட்டு கிழே இறங்க அவள் ஏய் அங்கே எல்லாம் போகக்கூடிய நிலைமையில் நீ இல்லை என்று அவள் சொல்வதற்குள் அந்தக் கட்டிடத்தை விட்டு தாண்டியிரிந்தான் பழனி.


அந்த அரங்கு முகவும் களைகட்டியிருந்தது. அருகிலிருந்த கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு அரங்கின் அமைப்பை கவனித்தான். ‘‘என்ன பார்க்கிறே மினிஸ்டர் வரப்போகிறார்.’’ என்று மரத்தடியில் சொன்னான் கடைக்காரன். அரங்கத்தின் அருகிலுள்ள கடையின் வாசலில் ரிப்பன் கட்டப்பட்டு இரண்டு இளமங்கைகள் கையில் டிரேயுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

தமிழகத்தின் விடிவிளக்கே! அன்பு அண்ணனே வருங்காலப் பிரதமர் மாண்புமிகு மந்திரி வலம்புரி மாதவன் அவர்களே வருக! வருக! என்று பெரிதாக எழுதி கட்டியிருந்தார்கள். அரங்கத்திற்குள் வருகின்ற தமிழ் முகங்கள் யாராவது

தெரிந்தவர்களாக இருந்தால் பிரச்சினையாகி விடும் என்று புரிந்து கொண்டு ஒதுங்கி நின்று சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.

அரங்கத்திற்குள்ளே மேடையில் யாரோ ஒருவர் வலம்புரி மாதவன் செய்த சாதனைகளைப் பட்டியல் போட்டு இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு வந்தால்தான் வடக்கே தமிழினம் தலை தூக்கி நிற்க முடிகிறது. அதனடிப்படையில் நாம் நம் அண்ணன் வலம்புரி மாதவன் அவர்களை பிரதமராக்கினால் தமிழ்நாட்டிலே தேனும் பாலும் ஓடும். சிங்காரத் தமிழ்நாடு உருவாகும். தெற்கு மேலோங்கி நிற்கும் இந்தியா முழுவதும் தமிழ் மொழியின் தீந்தென்றல் வீசும் எனப் பேசிக்கொண்டிருந்தான். பலர் மந்திரியைப் பார்த்து விட்டு உடனடியக கிளம்பி விட கைகளில் மாலைகளுடன் வெள்ளை சால்வைகளுடன் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சலசலப்பு ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்ற கற்பனை கலைந்து போக, வந்த போலீஸ் கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனான் பழனி. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு வாங்கிய சால்வையை விரித்து கீழே துப்ப்பாக்கியை மறைத்துக் கொண்டு எல்லோருடனும் வரிசையில் நின்று கொண்டான்.

மந்திரி வந்து கொண்டிருக்கிறார் என்ற பரபரப்பு எல்லோரையும் தொற்றிக் கொள்ள போலீசார் ஒவ்வொருவரையும் தொட்டுப் பார்த்து எந்த வித உபகரணங்களும் இருக்கிறதா என்று செக் பண்ணி உள்ளே விட்டுக் கொண்டிருந்தனர். பழனியின் கையில் சால்வைக்குக் கீழே அமைதியாக துப்பாக்கி தூங்கிக் கொண்டிருக்க அவனைச் செக் பண்ணிய அதிகாரி அவனை அரங்கிற்குள் அனுமதித்து விட்டு அடுத்தவனைச் செக் பண்ண ஆரம்பித்தார்.

வாசலைத் தாண்டியதும் மந்திரியின் கார் வந்து விட திரும்பிப் பார்த்தான். பெரிய வட்டமாக போலிஸ் சூழ்ந்து கொள்ள நான்கு புறமும் கருப்புப் பூனைப் படையினர் ஆயுதமேந்தி கூட்டத்தை பூதக் கண்ணாடிப் போட்டு சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தக் காவல் படையினர் ஏற்கெனவே பழனியைப் பார்த்திருப்பதால் பழனி கைக்குட்டையை எடுத்து விரித்து முகம் துடைக்கும் பாணியில் முகத்தை மறைத்துக் கொண்டான். கூட்டத்தில் நின்றவர்கள் வாசலிலேயே அவருக்கு மாலையணிவிக்கவும் சால்வைப் போடவும் மந்திரி வலம்புரி மாதவன் வாழ்க என்று காசம் போடவும் ஆரம்பித்தனர்.

மந்திரியை நெருங்கி வந்து முன்னால் நின்று முன்னால் மாலைபோடுபவர் மாலை அணிவித் தவுடன் அருகில் போய் சத்தமில்லாமல் மந்திரியின் இதயத்தை தோட்டாவால் துளைத்து விட வேண்டியதுதான் என்ன? இந்த பூனா ஜெயிலில் களி

தின்ன வேண்டியிருக்கும். மிஞ்சிப் போனால் பன்னிரெண்டு வருடம் ஜெயில் வாசம் கவுசல்யா…உனக்காக நான்…ஜெயிலுக்குப் போகவும் தயங்கவில்லை.ஆனால் இந்தக் கழிசடையைக் கொன்று விட்டு நான் ஏன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டுமென்று தான் வருத்தமாக இருக்கிறது. பரவாயில்லை… என் அன்புத் தங்கைக்காக இனி துணிவே துணையோடு இறங்கி விட வேண்டியதுதான் என்று அருகில் செல்ல மந்திரி மாவதன் முகத்தில் சலனத்தைக் கவனித்தான் பழனி.

ஒரு வேளை என்னைக் கண்டு கொண்டானோ…. இப்போது இவன் கைவிரல் அசைத்தால் போதும்…நான் சட்னி…ம்…கூம்…தயங்கக் கூடாது. இனி இவன் ஐயப்படுவதற்குள் நான் செயல்பட்டு விட வேண்டியதுதான். இனி பொறுமையாக செயல்படுவதற்கு நேரமில்லை என்று அவசரமாக மந்திரியை நெருங்கும் போது தலைவரே! ராகு காலம் நெருங்குவதற்குள் கடையைத் திறந்து வச்சிட்டீங்கண்ணா மற்றபடி மெதுவாக தொண்டர்களிடம் மாலை மரியாதை எல்லாம் செய்யச் சொல்லலாம். அதன் பிறகு நம் பொதுகூட்டத்திற்கு போகலாம். என்று அவரை அழைத்தாள் ஒரு தலைவி.

சரி ஒரு நிமிடம் என்று ஒதுங்கிக் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்த மந்திரி வலம்புரி மாதவன் ஒரு காவலாளியைக் கூப்பிட்டு ‘‘அதோ அங்கே முகத்திலே கர்ச்சீப்பை வைத்து துடைத்துக் கொண்டிருக்கிறானே அவனை அலாக்காகத் தூக்கிக் கொண்டு நம்முடைய கெஸ்ட் ஹவுசிலே அடைத்து வையுங்கள். எனக்கு அவன் மேல் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.’’ என்று கைக் காட்டி சைகை செய்ய கூட்டத்திற்குள்ளிருந்து நழுவி சிகரெட் கடையின் பின்புறமுள்ள சந்தில் ஒதுங்கி நின்று கொள்ள செக்யூரிட்டிகள் அவனைத் தேட ஆரம்பித்தார்கள். எல்லோரும் கைதட்ட கடையைத் திறந்து வைத்து ரிப்பன் வெட்டி கேக் எடுத்துச் சாப்பிட்டு கொண்டே திரும்பி செக்ரியூட்டியிடம் சைகையில் கேட்டார். அவன் காணவில்லை என்று சைகை செய்ய… ‘‘தே… பசங்களா அவனைப் பிடித்து கொண்டு வரலில்லை என்றால் உங்களைத் தொலைத்து விடுவேன்.’’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு சைகை செய்ய என்ன தலைவரே என்று கேட்டாள் அந்தப் பெண்மணி. ‘‘ஒன்றுமில்லை புழுக்கமாக இருக்கிறது.’’ என்று கக்குட்டை எடுத்து துடைத்துக் கொண்டான்.

மூச்சிறைக்க திரும்பவும் மருத்துவ மனைக்கு வந்த படுக்கையில் படுத்த போது மூச்சிறைத்தது. நன்றாக மூச்சை வாங்கிக்கொண்டு அருகில் உள்ள சூடு தண்ணீரை உறிஞ்சிக் குடித்தான். அந்த வழியாக வந்த பணிப்பெண் ‘‘ஏய்… எங்கே ஓடினாய்?

இங்கிருந்து வெளியே போனவர்கள் திரும்ப அனுமதிக்கப் படமாட்டார்கள்.’’ என்றாள் ஸ்…ஸ்… என்று சைகை செய்தவள் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் கொடுக்க அவள் வாயை மூடிக்கொண்டு சென்றாள்.

கீழே எட்டிப் பார்த்தப் போது மந்திரியின் செக்யூரிட்டிகள் வேகமாக மருத்துவ மனைக்குள் வந்து கொண்டிருக்க வேகமாக பக்கத்தில் கிடந்த வெள்ளைத் துணியை எடுத்து முகத்தில் கைகளில் எல்லா இடங்களிலும் காயத்திற்குப் போட்ட கட்டுகள் போல கட்டுப் போட்டுக்கொண்டான். வந்து ஒவ்வொரு படுக்கையாக பரிசோதித்த காவலாளிகள் இறங்கிச் செல்ல, மைடியர் சன் நீ ஏதோ தவறான காரியத்தில் இறங்கித் தப்பி வந்திருக்கிறாய். மனம் வருந்தி பாவத்தை வெளியிடுபவர்கள் இரட்சிக்கப் படுவார்கள் என்று தேவன் சொல்லியிருக்கிறார். வருந்திப் பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாற்றித் தருவேன். என்று சொல்லியிருக்கிறார். என்ற வாறு அருகில் அமர்ந்து அவனுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார் சிஸ்டர்.

மஞ்சளா வேகமாக சோளக்காட்டிற்குள் ஓடு வந்தாள். கதிர் கொய்து கொண்டிருந்த பழனி ‘‘என்ன மாமன் மகளே… இந்தப் பக்கம் வந்திருக்கிறே.’’ என்று நக்கலாகக் கேட்டான். ‘‘என் வீட்டிலே என்னைப் பொண்ணு பார்க்க பக்கத்து டவிணிலேயிருந்து படிச்ச மாப்பிள்ளை வந்திருக்கு.’’ ‘‘அட நல்ல விசயம்தானே எப்போது கல்யாணம் உள்ளே வந்த திகைப்பைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே கேட்டான். ‘‘உங்களுக்குக் கோபம் வரலியா மச்சான்.’’ அழுது விடுபவள் போல் கேட்டாள் மஞ்சுளா. எனக்கு ஏண்டியம்மா கோபம் வரப்போகுது. நீ கல்லாணம் பண்ண வேண்டிய வயசிலே இருக்கிறே. உன் அப்பன் ஆத்தா… அதான் எங்க மாமா, மாமி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சி நல்ல முறையில் குடும்பம் நடத்த வசதியாக ஒரு டவுண் மாப்பிள்ளையை கூட்டியாந்திருக்காக இதிலே நான் கோபப்பட என்ன இருக்கு.

‘‘சரி அப்போ நான் அந்த டவுண் மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கிறேன். அவள் அழுது கொண்டே திரும்ப நடக்க, அந்தப்பக்கம் வந்தப் பழனியின் அம்மா ஏன்டா அவ அழுதுகிட்டுப் போறா. நீ ஏதாவது சொன்னியா?‘‘ என்று கேட்டாள். ‘‘நான் ஒன்றுமே சொல்ல வில்லையம்மா.’’ என்றான். பவ்யமாக உன் வாய் சும்மா இருக்காது. மஞ்சுளாவை ஏதாவது சொல்லி அழ வைத்திருப்பாய். போடாபோய் அவளைச் சமதானப்படுத்து என்றாள். பழனியின் அம்மா. கதி கொய்து கொண்டிருந்த அரிவாளை கடவாய்ப் பெட்டிக்குள் போட்டுவிட்டு வேகமாக வரப்பிற்கு வந்து

மஞ்சுளாவை வழி மறித்தான். ‘‘என்னைப் போக விடுங்க…’’ சிணுங்கினாள் மஞ்சுளா. சும்மா எதுக்கெடுத்தாலும் அழப் படிச்சிருக்கே இதுக்குத்தான் அப்பவே மாமா கிட்ட பொண்ணு கேட்டு வர்றேண்ணேன். நீதான் உலகத்திலே யாருமே படிக்காத மாதிரியும் நீ மட்டுந்தான் காலேஜிக்குப் போய் படிக்கிற மாதிரியும் நான் படிச்சு முடிக்கிற வரைக்கும் நீங்க எதுவும் பேச வேண்டாம் என்று சொன்னாய்… இப்ப என்ன செய்யச் சொல்கிறாய்.’’

‘‘ஆமா என்ன செய்கிறதென்று என்னைக் கேளு மடை மச்சான். மச மசன்னு என்னைத் தூக்கிட்டுப் போய் தாலிய கட்டுவியா; அதை விட்டு விட்டு சோளக்கொல்லை பொம்மை மாதிரி பார்த்து கிட்டு நிக்கிறியே….’’

‘‘அதானே பார்த்தேன் என் வேலையைக் கெடுக்கிறதுக்கு என்றே எடுத்துக் கட்டிக் கொண்டு நீ தோட்டத்துக்கு வந்திருக்கே போய் ஒழுங்காக படிக்கிர வழியைப் பாரு.’’ ‘‘ஏய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசனா. ஒரு பொண்ணு உன்னை ஓரங்கட்டுகிறாள் அதைத் தெரிஞ்சிக்காமல் எங்கேயோ சோளக்கதி அறுக்கிறதுக்கு ஓடிறியே. நீ சொல்றதும் சரிதானென்று மஞ்சாளாவின் அருகில் வந்து முத்தமிட முயல யோவ் உங்கம்மா பார்த்துகிட்டிருக்காங்க.’’என்று அனவைத் தள்ளினாள்.

‘‘அப்போ வா… அந்த மிசின் கிணற்றுப் பக்கம் ஒதுங்கி நின்னுக்கலாம். முகம் சிவக்க அவனோடு கிணறுவரை நடந்தாள் மஞ்சுளா. இம்புட்டு ஆசை வச்சிகிட்டு தான் படிச்சு முடி அப்புறம் பொண்ணு கேக்க வர்றேன்னு சொன்னீகளாக்கும். ஏதோ பொண்டாட்டியா வரப் போறவ படிக்க ஆசைப் படுறா நம்ம தான் பள்ளிக்கூடம் தாண்டிப் படிக்கப் போவல. வர்றவளாவது நாலெழுத்து படிச்சிட்டு வரட்டுமேன்னு தான்…’’ அவள் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான் பழனி.

கையை உதறிக் கொண்டவள் ‘‘என்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க என்று சொன்னப்ப கொஞ்சம் கூட பதறாமல் நின்னீங்களே இப்ப இதெல்லாம் வேணுமா?’’

‘‘சீ…ஏந்… தப்புக் கணக்குப் போடுகிறாய். நான் ஆம்பிள்ளைச் சிங்கமடி உள்ளுக்குள் பதற்றமாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ள முடியுமா? ’’ என்று அருகில் வந்து அணைத்துக் கொள்ள முயற்சிக்க இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் மாமோய்.:: என்று அவனைத் தள்ளி விட்டு ஓடினாள்.


ஆட்டோவிலிருந்து இறங்கி சில்லறை கொடுத்து விட்டு பூனா ஏர் போர்ட்டிர்குள் நுழைந்தான். கொஞ்சம் சுற்றும் பார்த்துக் கொண்டு யாரும் தெரிந்தவர்கள் இல்லையென்று தெரிந்து கொண்டு முகத்தில் போட்டிருந்த துணியை எடுத்துக் கொண்டு ‘‘ஒன் டிக்கெட் டு மும்பை.’’ என்றான் டிக்கெட் கவுண்ட்டருக்கு வந்து.

விமான நிலையம் வந்து விட்டது. ‘‘நாளைக்குத் தான் போகமுடியும்.’’ என்றாள் டிக்கெட் பெண்மணி.

ஓர் சகாராவில் அவசர டிக்கெடுகள் எளிதாக கிடைக்கும் என்றார்கள். ‘‘கொஞ்சம் முயற்சி செய்யுங்களேன்.’’ என்றான் பழனி.

‘‘கொஞ்சம் இருங்கள் பிஸினஸ் கிளாசில் ஒரு டிக்கெட் காலியாக இருக்கிறது. யாரோ தமிழ் நாட்டு மந்திரி போவதாக இருந்து கான்சல் செய்யப்பட்டிருக்கிறது.’’

‘‘என்னது… மந்திரி இந்த விமானத்தில் போகவில்லையா? சரியாகப் பாருங்கள். அதோ மந்திரியின் கார் விமான நிலையத்திற்குள் நுழைகிறதே.’’ என்றான் பழனி. தூரத்தில் மந்திரி வலம்புரி மாதவன் இறங்கியதைப் பார்த்துவிட்டு, ‘‘ஸாரி…ஸாரி.. மந்திரியின் உதவியாளரின் டிக்கெட் ரத்து செய்யப் பட்டுள்ளது. நீங்கள் பிசினஸ் கிளாஸ் டிட்கெட் வாங்கிக் கொள்கிறீர்களா?’’ என்று கேட்டாள்.

‘‘சரி மேடம்.’’ என்று பர்சைத் திறந்து கிரெடிட் கார்டு எடுத்தபோது பர்சில் இருந்த போட்டோவில் ‘ஏய்..மச்சான் …எப்போது வரப்போகிறாய்?’ என்று கேட்டாள்.

ஸாரி மஞ்சு என்னை னன்னித்து விடு. அடுத்தப் பிறவியில் சந்திப்போம் என்று கண்களைத் துடைத்து விட்டு கிரெடிட்கார்டு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டான்.

காலில் பட்ட அடியில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பேண்டில் தெரிந்த்து. உடனடியாக பாத்ரூம் போய் பட்டிப் போட்டுக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த்த

முஸ்லீம் பெண்களின் குர்தாவைப் போட்டு முழுவதுமாக மூடிக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

காலில் செருப்புக்கு அடியில் ஒளிந்திருந்த துப்பாக்கியை எப்படி உள்ளே கொண்டுப் போகப் போகிறோம், வீணாக அளவுக்கதிகமாக ரிக்ஸ் எடுக்கிறமோ. மந்திரியை மும்பையில் போய்ச் சந்தித் திருக்கலாம் என்று யோசித்தபோது, அண்ணா சீக்கிரம் போ, மந்திரி விமான நிலையத்திற்குள் நுழைந்து விட்டான். விடாதே அவன் விமானத்திலிருந்து இறங்கும் போது பிணமாகத்தான் இறங்க வேண்டும். என்றாள் கவுசல்யா அவன் காதுக்கள்.

டிக்கெட் செக்கப்பிற்கு போனபோது கொஞ்சம் கைகால் உதறலெடுத்தது. மனம் கொஞ்சம் பொறுமையிழந்து வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

நல்ல வேளை, அந்தப் பெண் பரிசோதகி, தோழியிடம் பேசிக்கொண்டே குர்தா அணிந்திருந்த பழனியை பரிசோதித்து விட்டு அனுப்பி வைத்தாள்.

காத்திருக்கும் அறையில் மந்திரி ஓரமாக உட்கார்ந்து செல்போனில் பொம்மை வொளையாட்டு விளையாடி கொண்டிருந்தார். வேண்டுமென்றே அருகில் போய் பெண் குரலில் ‘‘எக்ஸ்க்யூஸ்மீ… வாட் இஸ்த டைம் நவ்..’’ எனக் கேட்டான் பழனி குர்தாவை நகர்த்தாமல்.

நேரம் பதினொன்றாகிறது என்றவர் தொடர்ந்து பொம்மை விளையாட்டில் ஈடுபட்டார்.

எலோரையும் விமானதளத்திற்குள் அழைப்பதற்காக அறிவிப்புகள் வர ஒவ்வொருவராக விமானத்தில் ஏறினர்.

மந்திரி அமர்ந்திருந்த இருக்கைக்கு அடுத்தப் படியாக இருந்த இருக்கையில் இடம் கிடைத்திருக்க ‘ஒண்டர்புல் ஆஃப்பர்.’ என்று மகிழ்வான குரலில் சொல்லிக்கொண்டு உட்கார என்னது? என்று மந்திரி சந்தேகமாக கேட்க உங்கள் அருகில் அமர எவ்வளவு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது பாருங்கள். நான் உண்ணையிலே அதி பாக்கிய சாலி பெண்தான்.’’ என்றான் பழனி பெண்குரலில்.

அதானே பார்த்தேன் என்று சந்தேகம் தீர்ந்தவாறு ஆங்கில நாளிதழை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார் மந்திரி.

விமானம் பறந்து சீரான நிலையில் நிற்க மந்திரி ‘‘இது என்ன தெரியுமா?’’ என்று கேட்டான். ஏதோ தெரிந்த குரலாக உணர இடுப்பை உறுத்திய துப்பாக்கியை பார்த்தவர் கத்த முனைந்தார்.

‘‘வீனாகக் கத்தாதே. சப்தம் வெளியே வருவதற்குள் உன் உயிர் பரலோகம் தொட்டுவிடும்.’’

‘‘நீ! நீ….நீ…..’’ கண்கள் அகலத் திரும்பக் கூர்மையாகப் பார்த்தார்.

‘‘ஆம்… நான்… நானே தான். பழனி. வீணாக சப்தம் எழுப்பினால் நீ இறந்துபோவாய். நான் ஜெயிலுக்குப் போவேன். அவ்வளவுதான்.’’ மெதுவாக பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

ஆமாம் எப்படி விமானத்திற்குள் துப்பக்கிக் கொண்டு வந்தாய். எப்படி உன்னை அனுமதித்தார்கள்.

அது ஒரு தனிக்கலை. அந்த மந்திர மாயமெல்லாம் எனக்கு மட்டுமே தெரியும்.

‘‘சரி…..என்னைக் கொன்று விடாதே. என்ன வேண்டும் சொல்.’’

‘‘உன் உயிர்.’’

‘‘தம்பி… உன் பெயரென்ன?’’

‘‘எதற்கு? இறங்கிய பிறகு என் பெயர் கொண்ட அனைவரையும் தேடுவதற்காகவா. இருளப்பன் என்று வைத்துக் கொள்.’’என்றான் பழனி.

விமானப் பணிப்பெண் ‘‘எல்லோரும் இன்னும் சற்று நேரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்க இருக்கிறோம்.’’ என்று அறிவித்தாள்.


விமானம் கீழே இறங்க ஆரம்பித்த போது ‘‘வலம்புரி மாதவனே நான் சொல்வதைக் கவனமாக கேள்.’’ என்றான் இடுப்பில் துப்பாக்கியை அழுத்தியவாறு.

‘‘என்ன சொன்னாலும் கேட்கிறேன். இந்தத் துப்பாக்கியை கொஞ்சம் நகர்த்தி வைக்கிறாயா?’’

‘‘நான் துப்பாக்கியை நகர்த்தியதும், என்னைத் தள்ளி விட்டு தப்பித்துக் கொள்ளவா? இனி அது நடக்காது. ரயிலில் நடந்த அசம்பாவிதம் இனியும் நடக்கக்கூடாது.’’

‘‘சரி சொல்லு.’’

‘‘நாம் இறங்கியதும், ஏறக்குறைய கைமேல் கை போட்டுக் கொண்டு தான் நடப்போம். அப்போதும் துப்பாக்கி உன் இடுப்பை குறிபார்த்துக் கொண்டுதானிருக்கும். வீணாக டென்சன் அடைந்தால் பரலோக ராஜ்ஜியம் நிச்சயம்.’’

‘‘அப்படியெல்லாம் நடக்காது.’’

‘‘நல்ல பையனா நடந்தால் பொழைச்சுக்க சான்ஸ் இருக்கு. நீ பெட்டியை எடுத்துக் கொண்டதும் வெளியே உனக்காக காவல் இருப்பவர்களிடம் நீங்கள் வீட்டுக்கு போங்கள், நன் சாயங்காலக் கூட்டத்திற்கு நேரடியாக கலந்து விடுவேன்.’’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைக்க வேண்டும்.

‘‘உன் கார் டிரைவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு அவனையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உனக்கு கார் நல்ல ஓட்டத்தெரியும்தானே?’’

‘‘ஆமாம்.’’ என்றார் மந்திரி. அதிகமாக பொங்கிய வியர்வையைத் துடைத்துக் கொண்டு.

‘‘மற்றவைகளை நாம் காரில் பயணிக்கும் போது சொல்கிறேன்.’’ என்ற போது ‘‘என்னை அழைப்பதற்கு அரசாங்க கார் வரும். அதை நான் ஓட்டுவது நன்றாக இருக்காது.’’ என்றார் மந்திரி.

மந்திரி என்ற மமதை போகவில்லை பாறேன். இன்றைக்கொருநாளும் அந்தக் கார் டிரைவருக்கு விடுகுறை கொடுத்து விட்டு வா. அவன் இன்று மட்டுமேனும் சந்தோசமாக இருக்கட்டும். ஏனென்றால் நீ சாகப்போகிற நாளல்லவா? ஏன் பயமாக ல்ருக்கிறதா? என் தங்கை கவுசல்யா இறந்து போனதற்காக மிகவும் சந்தோசப்பட்டாயாமே…’’

‘‘எனக்கு எப்படித்தெரியும் என்கிறாயா? என் பாசமலர் என்று உயிர் துறந்ததோ அன்றிலிருந்து உன்னைப் பற்றி… உன்னை உலகத்தை விட்டு அனுப்புவதற்கு வழி செய்ய, வழி தேட ஆரம்பித்தேன்.’’

விமானம் இறங்கப் போகிறது. வீணாக ஏதாவது எடக்கு மடக்காக செய்ய ஆரம்பித்தாயானால் ஒன்று கிடக்க ஒன்றாகி விடும். என்னைப் பிடித்துக் கொடுக்க நீ எந்த முயற்சி செய்தாலும் அடுத்த நிமிடமே உனக்கு சாவு மணி அடித்து விடும். இறங்கி நடந்து போகும்போது கூட நாம் ஒருவருக் கொருவர் கைமேல் கைபோட்டுக் கொண்டு நான் நடப்போம்.’’

‘‘என் குர்தாவின் ஒருபுறம் கைத் துப்பாக்கியோடு உன் இடுப்பில் உராய்ந்து கொண்டே தானிருக்கும் புரிகிறதா?’’ என்று சொல்லும் கைக்குட்டை எடுத்துக் கொள்ள மந்திரி பையில் கைவிட்டார்.

‘‘இதோ! புது டவல்… முகம் துடைத்துக் கொள். அதிகமாக வேர்க்கிறது.’’ என்று இடது கையால் டவலைக் கொடுத்தான். முகம் துடைத்துக் கொண்ட வலம்புரி மாதவன் ‘‘பழனி இறந்தவள் கதையை மறந்து விட்டு புது வாழ்க்கைத் தொடங்குவதற்கு உனக்கு பத்து பதினைந்து ஏக்கரா கரும்பு சாகுபடி நிலமும் ஒரு பங்களாவும் ஒரு புத்தம் புதிய குவாலிஸ் காரும் தர்றேன்.’’

‘‘கொஞ்சம் யோசித்துப் பார். என்னைக் கொன்றால் உன்னை சிறையில் போடுவார்கள். ஆயுசு காலம் முழுவதும் நீ சிறையிலே கிடந்து சாகணும்.’’

‘‘சரிதான். நான் ஏத்துக் கொள்கிறேன். தப்பு நடந்துபோய் உன் தங்கை…. அவள் பேரென்ன… அ…ஆங்…கவுசல்யா இறந்து போய்விட்டது…. அதற்காக நீ என்னைக் கொலை செய்து வீணாக நீயும் மாட்டிக் கொண்டு…. என்ன சொல்கிறாய்.’’ என்றார் மிடுக்கா.

‘‘பாத்தியா… இதுதானே வேண்டாம் என்பது சாத்தான் வேதம் ஓதிய கதையாக இருக்கிறது…. எனக்கு நீ நிலமும் பங்களாவும் காரும் வாங்கித் தந்து சுகமாக இருக்க விடுவாய்…யார் காதுமேல காது குத்துகிறாய்.’’ விமானம் இறங்கி விட்டது.

விமானத்தில் படியில் இறங்கும் போதும் விமான நிலையத்திற்கு வரும் பஸ்ஸிலும் உள்ளே வந்த பிறகும் இணை பிரியாத காதலர்கள் போல மந்திரி வலம்புரி மாதவனை ஓட்டிக்கொண்டே வந்தான் பழனி.

மந்திரியின் கைப் பையையும் பழனி தோளில் போட்டுக்கொள்ள வெளியே வந்த போது கூடியிருந்தவர்களிடம் நான் நேரே விருந்தினர் மாளிகைக்கு வருகிறேன். என் நண்பனுக்கு ஏதோ பிரச்சனையாம். அவருடைய மனைவியோடு வேகமாக போய்க்கொண்டிருக்கிறேன். என்று சொன்ன மந்திரி அரசாங்க காரில் ஏறி ‘‘டிரைவர் நீயும் வீட்டுக்குப் போய்விட்டு விருந்தினர் மாளிகைக்கு வந்து விடு.’’ என்று காரை ஓட்டினார்.

‘‘எங்கே போகிறோம். சொல்லு பழனி.’’

‘‘எமலோகத்திற்கு… சும்மா வண்டியை ஓட்டிக்கொண்டிரு…. நான் வலது இடது சொல்லிக் கொண்டே வருகிறேன்.’’

‘‘நான் சொன்னதை யோசித்துப் பார்த்தாயா?’’

‘‘வாய்ப்பில்லை. என் தங்கை கவுசல்யாவின் ஆன்ம சாந்தியடைய வேண்டியதுதான் முக்கியம்.’’

‘‘அதற்கு வேண்டுமானால் ஆயிரம் கோயில்களில் அன்னதானம் ஏற்பாடு செய்து விடலாம். அதுவும் அரசாங்க செலவிலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்.’’

‘‘மந்திரி, அவள் உயிரைப் பலியாகக் கேட்கிறாளே… நீ இறந்தால் தான் அவள் ஆன்மா சாந்தியடையும் என்கிறாள்.’’

‘‘பழனி, வேண்டுமெனில் என்னிடம் இருப்பதில் பாதிச் சொத்தை தந்து விடுகிறேன்.இந்தக் கொலை…சாவு மணியெல்லாம் கொஞ்சம் மாற்றுகிறாயா?’’

‘‘வாய்ப்பேயில்லை…. ஆமாம் உனக்கு நீச்சல் தெரியுமா?’’

இல்லேப்பா…’

மந்திரி காரை நிறுத்தியதும் ‘‘என் துப்பாக்கிக்கிக் கூட வேலை கொடுக்க வேண்டிய தேவையில்லாமல் போய் விட்டது.’’ என்று கீழே இறங்கினான்.

மந்திரி வலம்புரி மாதவனும் இறங்கிக் கொண்டு ‘‘என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்டார்.

‘‘இப்படி வா.’’ என்று நதியின் கரையை நோக்கி நடந்தான்.

‘‘நான் வரவில்லை…. நதியில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.’’

‘‘வாப்பா…. வா.’’ என்று துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தான். பயந்துபோன மந்திரி மெதுவாக பழனியின் அருகில் வந்தார்.

‘‘என்ன வலம்புரி மாதவனே…. இவ்வளவு நாளும் செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள். போகிற இடத்திலாவது சொர்க்க, கிடைக்கும்.’’

நீ என்ன செய்யப் போகிறாய் என்று புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. பழனி கடைசியாகச் சொல்கிறேன். நான் நாளைகே மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு என் சொத்துக்கள் அனைத்தையும் உனக்கு எழுதித் தந்து விடுகிறேன். எனக்கு உயிர்ப்பிச்சை கொடு.’’ என்றார் மாதவன்.

‘‘பார்… உயிர்ப்பயம் எப்படி இருக்கிறது? இறந்துபோன என் தங்கை கயிற்றில் தொங்கும் போது எவ்வளவு திடித்திருப்பாள். சரி… நதிக்குள் குதித்து விடு.’’ என்றான் துப்பாக்கியை எடுத்து மந்திரியின் நெற்றியில் குறிபார்த்துக் கொண்டு.

‘‘வேண்டாம் பழனி. நான் இவ்வளவு சொன்ன பிறகும் கேட்க மறுக்கிறாயே.’’ என்று குனிந்த மாதவன் வேகமாக பழனியின் காலை பிடித்து இழுக்க இருவரும் எதிர்பாராமல் நதிக்குள் விழுந்து விட, மந்திரியின் கைகள் பழனியின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மேலே வர முயற்சித்தார் மாதவன்.

வேகமாக பழனி உதைத்துவிட மந்திரி கைகளை உதறிக்கொண்டு நீந்த முடியாமல் திணறிக் கொண்டு தத்தளிக்க, பழனி எதிர்க்கரையை நோக்கி வேகமாக நீந்திக் கொண்டிருந்தான்.

செக்யூரிட்டி வண்டி சப்தமெழுப்பிக் கொண்டு வேகமாக மந்திரியின் காரை வளைத்துக் கொள்ள கையில் ஏ.கே.47 ஏந்திய அத்தனை காவலர்களும் உள்ளே யாரையும் காணாது அருகிலிருந்த தடயங்களைத் தேடி கொண்டிருந்தனர்.

மந்திரி வலம்புரி மாதவன் மூச்சுத் திணறி நதிநீரின் ஓட்டத்தோடு வேகமாக அமுங்கிப்போக , கரையேறிக் கொண்டிருந்தான் பழனி.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *